Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 26

சாம்பவி அவனிடம் பேசியதில் இருந்து செல்வா மொபைல் சாஃப்ட்வேர் போல் வேறோரு புதிய வெர்ஷனுக்கு அப்டேட் ஆகி இருந்தான். எப்போதுமே அவனிடம் துள்ளலுக்கும், உற்சாகத்திற்கும் குறைவே இருக்காது என்றாலும், இந்த ஆறு நாட்களில் அவனது துள்ளல் இன்னும் அதிகமாகியிருந்தது அப்பட்டமாகவே தெரிந்தது அவளுக்கு!

காலை 6 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு வருபவன், அவளுடனே சுற்றிக் கொண்டு மாடியிலிருந்து அவளது புத்தகப்பையை கீழே இறக்கிக் கொண்டு வருவது, அவளது வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் இவற்றை மதிய உணவுடன் சேர்த்து பேக் செய்து வைப்பது,
அயர்ன் செய்த சீருடை செட்டை கட்டிலில் தயாராக எடுத்து வைப்பது, சைக்கிளை துடைத்து வைப்பது, வாஷிங்மெஷினில் அவள் துவைத்து வைக்கும் துணிகளை காய வைப்பது போன்ற வேலைகளை அவனது களைப்பையும் மீறி அவளுக்காக செய்து கொண்டிருந்தான்.

"இங்க பாரு செல்வா! தேர் இஸ் அ லிமிட் ஃபார் எவ்ரிதிங்க்! என் திங்க்ஸ இன்னொருத்தர் தொடுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது! அதுவும் நீ என்னோட யூனிஃபார்ம் எல்லாம் ட்ரையர்ல போடுறேன்னு சொல்லிட்டு..... அதையெல்லாம் தொடுறது, எனக்கு சுத்தமாப் பிடிக்கல; இனிமே இப்டி செய்யாத! எனக்கு கோபம் வரும்!" என்று சிலநேரங்களில் அவன் செய்த வேலைக்காக சாம்பவியிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருந்தான்.

சாம்பவியைப் பொறுத்தமட்டிலும் அவளது இப்போதைய மனநிலையை அவனிடம் தெளிவாக எடுத்துரைத்தாகி விட்டது; இனி வருபவற்றை காலம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே யோசனையுடன் செல்வாவின் விஷயத்தை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு அவள் பாட்டில் படித்தாள், போனாள், வந்தாள்.

செல்வாவோ சாம்பவிக்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இருந்தான். அவள் அன்று பேசிய வார்த்தைகள் அவனுக்கு சிம்ஃபொனி இசையாக கேட்டது. அவள் இப்போதெல்லாம் அவனை திட்டும் வசவுகள் அவனுக்கு சுப்ரபாதமாக கேட்டது. இனி தீபக் போல யாராவது ஒருவர் சாம்பவியின் பக்கம் திரும்பி அவளை லேசாக சைட் அடித்தாலும், அந்த பசங்களுக்கு செமத்தியான கவனிப்பு கிடைக்கும் என்ற அளவில் சாம்பவியின் மேல் உரிமை உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு மட்டும் டைம் ட்ராவல் செய்யும் சக்தி கிடைத்திருந்தால், இப்போதே ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப்போகும் காலத்திற்குள் சென்று சாம்பவி அவனிடம் சொல்லப்போகும் முடிவையும், அவளுடனான தன் எதிர்காலத்தைப் பற்றியும் பார்த்துக் கொண்டு வந்திருப்பான். அப்படி ஒரு சக்தி இல்லாததால் சற்றே அமைதியாக இருந்தான்.  சாம்பவியை கூடிய சீக்கிரத்தில் பிரிய வேண்டுமே என்பது தான் இப்போது அவனுக்கு உள்ள ஒரே கவலை.....

இன்று இரவு எட்டு மணிக்கு பூக்காரப் பாட்டி வீட்டிற்கு வருவதற்குள் அவளுக்காக மூன்று, நான்கு சாப்பிடும் ஐயிட்டங்களை செய்து விட வேண்டும் என்று நினைத்த படி விரைவாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அன்று எட்டரை மணியளவில் சபாபதி சாம்பவிக்கு அழைத்திருந்தார். அவளறையில் இருந்த சாம்பவி அவரிடம், "சொல்லுங்க டாடி! நாளைக்கு இங்க வருவீங்கல்ல..... வேல ஒண்ணும் இல்லயே! நான் என் க்ளாஸ் வொர்க்ஸ், அசைன்மெண்ட்ஸ், நெக்ஸ்ட் வீக் ஷெட்யூல் எல்லாத்தையும் இன்னிக்கே ஒக்காந்து மாங்கு மாங்குன்னு செஞ்சு முடிச்சுட்டேன். நாளைக்கு காலையில ஆயில்பாத் எடுக்குறத தவிர முக்கியமான வேல வேற எதுவுமே இல்ல! நாம நாளைக்கு ஒரு சினிமா போயிட்டு, குட்டி ஷாப்பிங் பண்ணிட்டு வரலாமா டாடி?" என்று கேட்டவளை ஓரக்கண்ணால் பார்த்து முறைத்தவன்,

"ஐய.... நைனாவாண்ட போயி அத்த செய்ணும், இத்த செய்ணும்னு கேட்டு கெஞ்சினுருக்குது பாரு! ஏ இத்த எங்களாண்ட கேட்டா நாங்க இட்டுனு போமாட்டமாக்கும்? என்னாண்ட கேக்கசொல இப்டி கெஞ்ச கூட தேவல்ல!" என்று அவள் காதில் விழும்படியாக சற்று தெளிவாக முணுமுணுத்தவனை ஒரு வறண்ட பார்வை பார்த்தாள் சாம்பவி.

"தோடா...! என்ன இப்டி லுக்கு உடுறா? ரூல்ஸ் வர்ற வரைக்கும் இவ உள்ள உட்டு கும்முனாலும், ஒன்னிய காப்பாத்த அஞ்சலயெல்லாம் வராதுடா செல்வா! அதுனால கொஞ்ச உஷாரா பொத்துனாப்ல இருந்துக்க கண்ணு!" என்று அவனது உள்மனம் அவனுக்கு எச்சரிக்கை கொடுக்க அவனுடைய வாலை சற்று நன்றாக சுருட்டி, அதை வெளியே வர விடாமல் அதன் மேலேயே அமர்ந்து கொண்டான் வாகை செல்வன்.

பின்னே அவளிடமிருந்து ஒரு மறக்க முடியாத நினைவுப் பரிசை தொடையில் அல்லவா வாங்கி வைத்திருக்கிறான்? அது அவ்வளவு எளிதாக மறக்கக்கூடிய தடமா? இல்லை இடமா? இரண்டும் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தவனிடம் தன்னுடைய அலைபேசியை நீட்டினாள் சாம்பவி.

"இன்னாவாம் ஒநைனாவுக்கு?" என்று கேட்டவனிடம்,

"உங்கிட்ட டாடி ஏதோ பேசணுமாம்!" என்று அவள் சொல்ல அவன் சபாபதியிடம் பேசினான்.

"ஐயய.... என்னாலலா அந்தவூட்டு வாசல்ல கால எடுத்து வக்க முடியாது வாத்யாரே..... மாப்ள நீ போ! இல்ல அந்த பெரிசுங்களோட பேத்திய அனுப்பு! அத உட்டுட்டு எப்போபாரு ஒன்னத்துக்கும் ஆகாத வேலைக்குன்னே என்னிய தள்ளி உடுறது! ஒரே பேஜாராக்கீது நமக்கு.....!" என்று சபாபதியிடம் அசட்டையாக பேசியவன் மொபைலை அவள் கையில் திணித்து விட்டு சென்றான்.

"டேய்.... டாடி உங்கிட்ட அம்மம்மா, தாத்தாவ அவங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வரச் சொல்றாங்களா? போன்னு சொன்னா போக வேண்டியதுதான? முடியாதுன்னு சொல்லி ரொம்ப தான் பிகு பண்ணிக்குற?" என்று சாம்பவி அவனிடம் கேட்க அவன் அவளை கோபமாக முறைத்தான்.

"நீயி, ஒன்நைனாலா எப்டினு எனக்குத் தெரியாது கண்ணு; நம்ப கொஞ்சம் வேறமேரி..... நம்மளாண்ட நீ ஒரு துளி பாசத்தக் குடு; அத்த திருப்பி நூறு மடங்கா ஒன்னாண்ட ரிட்டன் பண்ணினு இருப்பம்; அதே நம்மளாண்ட நக்கல் உடுறது, நான் எம்மாம்பெரிய ஆளு தெரியுமான்னு தொகுர்றது இப்டி வேலல்லாம் வச்சுக்கினா போடா....... ன்னு சொல்லினு போயிக்கினே இருப்பம்! இத்தன வருசமா அதுங்க ரெண்டுக்கும் போட்ட சோத்துல இருந்து, அதுங்க ஒநைனாவாண்ட ஆட்டயப் போட்ட துட்டு மொத்தத்துக்கும் அந்த ஆளு கணக்கு கேட்டுனு இருந்தா, பெரிசுங்க ரெண்டும் அதுங்க மூஞ்சிய கொண்டு போயி எங்க வச்சினு இருக்குங்க...... ஒங்க புள்ளய எங்களால முடிஞ்சவர வளர்த்துனு வந்துட்டோம்! இனிமே நாங்க எங்க வழியப் பார்த்துனு போறோம்னு அதுங்க ஒநைனாவாண்ட ஒருவார்த்த சொல்லியிருந்தா கூட அவரு மனசு செத்த ஆறியிருப்பாரு கண்ணு! அத உட்டுட்டு போற கடசி நாளு வரிக்கும் அதுங்க கொடச்சல குடுத்துனு தான் போயிருக்குதுங்க! அதுங்க எப்டி இருக்குதுங்கன்னு இப்ப எவன் போயி பார்த்து என்ன ஆகப்போவுது? மனுச ஜெனுமங்கன்னா கொஞ்சமாச்சு நன்றி, பாசம், விசுவாசம் இதெல்லாம் வோணும். எத்துமே இல்லாம மொத்தமும் சுயநலம்னா எப்டி பவிம்மா?" என்று கேட்டவனிடம் ஒரு நெடிய பெருமூச்சுடன்,

"போதும் செல்வா! பாட்டிக்கு டின்னர் குடுத்துட்டு, நீயும் சாப்டு! எனக்கு பசிக்கல; நான் தூங்கப் போறேன்!" என்று சொன்னவளின் கரத்தைப் பற்றியிருந்தான் செல்வா.

"அந்த பொரம்போக்குகளுக்காக நீ எதுக்குமே சாப்டாம கெடக்கணும்?  உனக்குப் புட்ச்சதா பாத்து பாத்து செஞ்சு வச்சுருக்கேன். மரியாதயா சாப்ட வா!" என்றவனிடம்,

"சரி! கைய விடு; பேஷ் வாஸ் பண்ணிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு அவளது வாஷ்ரூமிற்குள் சென்றாள் சாம்பவி.

"ஆனானப்பட்ட என் வார்டனம்மாவ இப்டி வருத்தப்பட வச்ச ஒங்க மூஞ்சிகளெல்லாம் செல்வா பாக்க வேற வரணுமா? .........., ........!" என்று இரண்டு டாஷ் போடும் வார்த்தைகளை வேறு பேசி விட்டு வேகமாக தன்னுடைய வாயை மூடிக் கொண்டான் செல்வா. பேச்சுவாக்கில் சற்று நேரத்திற்கு முன்பாக வேறு ஒரு வார்த்தையை சொல்லித் தொலைத்தான்; ஆனால் இன்று ஏனோ அவனது தவறை சுட்டிக்காட்டும் மனநிலையில் சாம்பவி இல்லை போலும் என நினைத்துக் கொண்டவன் ஒரு சலித்த பெருமூச்சுடன் கீழிறங்கி வந்தான்.

"பவிப்பாப்பா எங்க கண்ணு? அத்த நீ சாப்ட இட்டாரலயா?" என்று கேட்ட அஞ்சலைப் பாட்டியிடம்,

"அது இப்ப வந்துக்குரும் ஆயா! நீ மொதல்ல துன்றதுக்கு வா! சாப்ட்டு சட்டுபுட்டுன்னு படுக்குறத பாரு; காலையில நேரத்துக்கே மார்க்கெட்டாண்ட போயி வேற நிப்ப! இப்ப நேரத்துக்கு படுத்துக்கினா தான காலையில வெள்ளன கடயப் போட்டு நீ நாஸ்தா துன்ற துட்டு போக முந்நூறு நானூற கைல பாக்க முடியும்?" என்று அவரிடம் கேட்டுக் கொண்டே அவரை டைனிங் டேபிளில் வந்து அமரும் படி அழைத்து விட்டு சமையலறை நோக்கி சென்றான் செல்வா.

சற்று நேரத்தில் பவியும் கீழே இறங்கி வர மூவரும் இரவை உணவை சாப்பிட்டு ஒதுக்கி விட்டு அவரவர் இடத்தில் படுத்து உறங்க சென்று விட்டனர்.

ஞாயிறு காலையில் பத்து மணியளவில் சபாபதி தன்னுடைய இரண்டு கையிலும் இரண்டு ஸுட்கேஸ்களுடன் ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கினார்.

"டாடி.....!" என்று வெளிவாசலுக்கே சென்று அவரை ஆசையாக அழைத்த சாம்பவி, தன்னுடைய தந்தையின் கையிலிருந்த பெட்டிகளை பார்த்து விட்டு புருவம் சுருக்கியபடி நின்றாள்.

"என்ன டாடி கையில லக்கேஜ்லாம்?
உங்க பைக் எங்க? எதுக்கு ஆட்டோல வந்துருக்கீங்க?" என்று கேட்டு அவர் கையிலிருந்த ஒரு பெட்டியை வாங்க கையை நீட்டியவளிடம் புன்னகைத்தவர்,

"அதான் உனக்கு துணைக்கு ஒருத்தர கூட்டிட்டு வரப் போறேன்னு டாடி உங்கிட்ட முன்னாடியே சொன்னேன்லடா?
அவங்கள கூட்டிட்டு வந்துட்டேன்.
அதுனால தான் ரெண்டு பேருமா ஆட்டோவுல வந்துட்டோம்!" என்று சொல்லி விட்டு ஆட்டோவில் அமர்ந்திருந்த ரேணுகாவை அழைத்து வந்து பவியின் அருகே நிறுத்தினார் சபாபதி. அவர்கள் மூவரும் அருகருகே நிற்க செல்வா சபாபதியை குர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தான்.

"யோவ் ரூல்ஸூ! என்னைய வூட்ட விட்டு வெரட்டி உடுறதுல உனக்கின்னய்யா அம்மாஞ்சந்தோஷம்? கொஞ்சம் பொறிமையாதே ஆள இட்டார்றது; போன வாரம் சொல்லி, இந்த வாரத்துல ஆளப் புடிச்சாந்துட்டான் பாரு.....!" என்று முணங்கிய படி ரேணுகாவை எடை போடும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சும்மா என்றால் அந்த பெண்மணியைப் பற்றி செல்வாவிற்கு பெரிதாக அக்கறை பிறந்திருக்காது; ஆனால் இனி அவருடைய பாதுகாப்பில் தானே பவி இருக்கப்போகிறாள் என்ற எண்ணத்தில் அந்தப் பெண்மணியை சற்று ஊன்றியே கவனித்தான்.

அவருக்கும் கிட்டத்தட்ட சபாபதியின் வயது இருக்கும். வெளிர் பச்சை நிற காட்டன் புடவையில் நீளக்கூந்தலுடன், சபாபதியின் தோளுக்கு சற்றே குறைவான உயரத்தில் இருந்தார். அந்தப் பெண்மணியின் பார்வையில் ஒரு கண்ணியம் தெரிந்தது. செல்வா அவர்களைப் பார்த்த முதல் பார்வையிலேயே
இந்த வகைப் பெண்மணிகளில் ஒருவர் சாம்பவிக்கு அம்மாவாக கிடைத்திருக்கலாம் என்று யோசித்தான். அவன் ஏன் அப்படி யோசித்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

பவிக்கு ஹாய் சொல்லி புன்னகைத்த ரேணுகாவின் புறம் திரும்பி அவரிடம் சபாபதி, "உள்ள வா ரேணு....." என்று சொன்ன படி அந்த பெண்மணியை வீட்டிற்கு உள்ளே அழைத்து வந்தார்.

"ஹலோ.... மிஸ் சாம்பவி! ஐ'ம் ரேணுகா; நைஸ் ட்டூ மீட் யூ; நான் உங்களோட ஹெல்பரா இருக்குறதுக்கு உங்க அப்பா
அப்பாயிண்ட் பண்ணியிருக்குற லேடி; பட் நீங்க அப்ரூவல் குடுத்தா தான் என்னால இந்த வொர்க்ல கன்டினியூ பண்ண முடியும்!" என்று சொன்ன ரேணுகாவின் பேச்சு சாம்பவிக்கு சற்றுப் பிடித்துத் தான் போய் விட்டது.

"டாடி..... எனக்கு இந்த ஆன்ட்டிய பிடிச்சிருக்கு. இவங்க இங்கயே இருக்கட்டும் என்று சொன்ன தன் மகளிடம் புன்னகையுடன்,

"இவ உனக்கு ஆன்ட்டி இல்லடா பவிம்மா! அம்மா......!" என்று சொல்ல அங்கிருந்த மற்ற மூவருமே அதிர்ச்சியில் பேச்சிழந்து போய் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro