💚 இணை 23
"இவன் வேணும்ட்டே இப்டி பண்றான்டா பவி! நீ வா; நம்ம கடைக்கே போய்ட்டு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வருவோம்!" என்று மகளிடம் சொன்ன சபாபதி செல்வாவை முறைத்துக் கொண்டிருந்தார்.
"பைக் பஞ்சராயி நிக்குது! காருல பெட்ரோல் இல்ல! மெயின் ரோடு வர நடந்து போயி சாமானுகள வாங்கிட்டு வரணும்னு நென்ச்சுனுருக்குறவங்க தாராளமா போயினு வர்லாம்!" என்று சொன்னவனின் அருகில் வேகமாக சென்று அவனது சட்டையைப் பற்றிய சபாபதி,
"மறுபடியும் பைக்க எடுத்துட்டு வெளிய சுத்துனியா? நேத்து நான் ஓட்டிட்டு வந்தப்ப பைக் நல்லா தானடா இருந்தது! இப்ப எப்டி பஞ்சர் ஆச்சு?" என்று கேட்க அவன் அவரிடம் லேசான ஆத்திரத்துடன்,
"இப்ப ஏஞ்சொக்காய புடிச்சு இழுக்குறப்போல ஏதோ முள்ளுலயோ, ஆணியிலவோ ஏத்தின்னு அம்மாந்தூரம் தரதரன்னு இழுத்துனே வந்துருக்கய்யா! வண்டி ஒருமேரி லாந்துரறது கூடவா தெரியாது ஒனக்கு.......? உள்ள ட்யூப்பு மொத்தமும் பேஜாரா போயினுருக்கும். கடைல குடுத்து பஞ்சர் ஒட்டுறத நீயே போயி பாரு! நேத்து வண்டிய எடுத்துக்கினு
ஜாலியா ஒரு ரவுண்ட்ஸ் போயினு வந்துருப்பேன்! அதுல மண்ண அள்ளிப் போட்டுக்கினு பேசுது பாரு
பேச்சு; இன்னா பிரச்சனனாலும் நம்ம சொக்காய புடிச்சிக்கினு புளியாமரத்த உலுக்குறாப்ல உலுக்க வேண்டியது..... கைய எடுய்யா!" என்று சொன்னவன், அவர் உச்சுக்கொட்டிய படி அவனை விடுவித்தவுடன் சாம்பவியின் பக்கத்தில் வந்து அவள் கழுவி வைத்த கடாயை எடுத்துக் கொண்டு அடுப்பிற்கு சென்றான்.
"நாளைக்கு மார்னிங் நான் ட்யூட்டிக்கு போகணுமேடா? நைட் பைக் பஞ்சர்னு பாத்தவன் காலையில அத சர்வீஸுக்காவது விட்ருக்க வேண்டியதுதான? கேட்டா தான் எல்லாத்தையும் சொல்லுவியா? யூஸ்லெஸ் ஃபெல்லோ! தள்ளு அங்கிட்டு!" என்றவர் சாம்பவியிடம்,
"பவிம்மா..... டாடி பைக்க பஞ்சர் பாக்க ஷாப்ல விட்டுட்டு, அப்டியே உங்க ப்ரெண்ட்ஸ்க்கு வேணுங்குறத வாங்கிட்டு வந்துர்றேன்டா செல்லம்! பை!" என்று அவளிடம் சொல்லி விட்டு செல்வாவை ரௌத்திரமாக பார்த்து விட்டுப் போக அவன் அதையும் கண்டுகொள்ளாமல் சிக்கனை குழம்பாக்குவதில் முனைந்திருந்தான்.
"ஏய் இப்ப நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா மாட்டியாடா?" என்று அவனிடம் கேட்டவளை ஏற இறங்கப் பார்த்தவன்,
"டேய்.... உன்னால தான்டா எங்க அம்மம்மாவும், தாத்தாவும் இந்த வீட்ட விட்டு போனாங்க! இனிமே உங்கூட பேசுனன்னா எம்பேரு சாம்பவி இல்லடான்னு ஏதோ ஒரு கஸ்மாலம் முந்தாநேத்து இந்நேரம் ஸூனப் போட்டுக்கினு இன்னிக்கு இந்நேரம் வந்து எனக்கு எல்ப்பூ பண்ணுவியான்னு ஒன்னாண்ட கேட்டுக்கினு இருக்கு! இந்த சின்னப் பாப்பா பேசுன பேச்சையெல்லாம் மன்ச்சு இப்ப இத்து சொல்ற வேலைய செய்லாங்குறியா இல்ல வோணாங்குறியா செல்வா?" என்று தன்னைத் தானே கேட்டபடி தாடையில் கைவைத்து யோசித்தபடி நின்றான்.
"சரிடாயப்பா... ஸாரி! அம்மம்மா கிளம்புனப்போ ஏதோ கோபத்துல உங்கிட்ட ரொம்ப பேசிட்டேன். நாந்தான் உங்கிட்ட சண்ட போட்டன்னாலும், நீ அதையே புடிச்சுட்டு தொங்கிட்டு இருப்பியா? நீயா வந்து எங்கிட்ட பேச வேண்டியது தான?" என்று அவனைப் பார்த்துக் கேட்டவளிடம்,
"தோடா! நான் உங்கிட்ட வந்து கண்ணு துன்றதுக்கு சிக்கன் வோணுமா, மட்டன் எடுக்கவான்னு கேட்டுனு வரல? நீ நம்மளாண்ட சண்ட போட்டுக்குனாலும் செல்வா அவேவேலையில கரீட்டா தாம்மே இருக்கான்!" என்று சொன்ன செல்வாவிடம்,
"அப்பாடா! அப்போ உனக்கு எம்மேல கோபம் இல்லல்ல.... ஸோ திவ்ஸ்க்கும் ஸ்நாக்ஸ் செஞ்சு தருவல்லடா ஒலக்க?" என்று கேட்டாள் சாம்பவி.
"ஒலக்க கெழக்கன்ன; மண்டைய பொளந்துருவேன் பாத்துக்க!" என்று அவளிடம் கோபப்பட்டவனிடம் உதடுபிதுக்கியவாறு,
"சரி போ! நீ இன்னும் எம்மேல கோபமா தான் இருக்க; நான் கேட்டத ஒண்ணும் நீ செஞ்சு தர வேண்டாம்! நான் என் ரூமுக்குப் போறேன்!" என்று முனைத்துக் கொண்டு அங்கிருந்து நகரப் போனவளை,
"நில்லும்மே..... செல்வாக்கு நீ ஒரூமுக்குள்ளார எப்பவும் பாடினே இருக்குற பூனைக்குட்டி பாட்ட பாடிக் காமி! நான் உனக்குப் பாயாசமும், போண்டாவும் பண்ணித்தாரேன்!" என்று அவளிடம் கேட்டவன் உருளைக்கிழங்குகளை கழுவி அதை பாதியாக நறுக்கி குக்கரில் போட்டு வேக வைக்க ஆயத்தமானான்.
செல்வாவின் டீலை கேட்ட சாம்பவி ஐயோ என்று சொன்ன படி தலையில் அடித்துக் கொண்டாள். பின்னே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி தினம் படுக்கைக்குப் போகும் போது த்ரீ லிட்டில் கிட்டன்ஸ் ரைமை பத்து, இருபது முறையாவது கேட்பது சற்று விநோதமான செயல் என்றால், அந்த பாடலை அவள் வாயால் பாடச் சொல்லும் படி ஒருவன் அவளிடம் கேட்பது இன்னும் விநோதமாகப் பட்டது அவளுக்கு.
பப்ஜி அடிக்ஷன் கேஸ்கள் ஒரு பிரிவினரும் கொரியன், ஜப்பனீஸ், தாய் சீரிஸின் அடிக்ஷன் கேஸ்கள் ஒரு பிரிவினரும் பள்ளியில் அதைப் பற்றிப் பேசி சுற்றிக் கொண்டிருக்க நமது வார்டனம்மா இந்த த்ரீ லிட்டில் கிட்டன்ஸ் ரைம்ஸ்க்கு தான் அடிமை என்பதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொண்டு, நீங்கள் சொன்ன எந்த சீரிஸையும் பார்க்க, பப்ஜி விளையாட எனக்கு நேரமே கிடைப்பதில்லை என்று கையை விரித்து விட்டுப் போய் விடுவாள்.
படிப்பில் கெட்டியாக இருந்தது மட்டுமல்லாமல், ஸ்கூலின் ரீடிங் க்ளப்பிலும் அவள் இன்சார்ஜ் ஆக இருப்பதால் இவளுக்கு ஏது அதற்கெல்லாம் நேரம் என்று பேசிக் கொள்ளும் அவளது வகுப்பு தோழிகளும் இவள் ஒரே ஒரு மழலையர் பாடலுக்கு மயங்கியவள் என்பதை கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் வீட்டிற்குள்ளே உலவுபவன், அதிலும் அரவச்செவியன் இவனுக்கு அந்த ரைம்ஸ் கேட்டிருக்கும் என்று தான் எதிர்பார்த்திருக்க வேண்டுமோ என்று சங்கடமாக உணர்ந்த படி நின்று கொண்டிருந்தாள் சாம்பவி.
"என்னோட எல்லா ரகசியமும் இவனுக்கு ஒன்னொன்னா தெரிஞ்சிடும் போலிருக்கே!" என்று நினைத்த படி தலைகவிழ்ந்து நின்றவளிடம்,
"பூனைக்குட்டின்னா ஒனக்கு அவ்ளோ புடிக்குமாடா பாப்பா?" என்று சூப்பர் சாஃப்ட் குரலில் கேட்டான் செல்வா.
"ஆமா! பிடிக்கும்; அதுக்கு ஏன் நீ இப்டி மெல்டிங்கான வாய்ஸ்ல பேசி பயமுறுத்துற?" என்று பவி கேட்க,
"ஒண்ணுல்ல! நீ பாடு! செல்வா உன்னைய கிண்டல்லா பண்ண மாட்டேன். யாராண்டயும் இத சொல்லிக்கவும் மாட்டேன். இங்கிலீசு தெரியாத ஒம்மூஞ்சிக்கெல்லாம் இப்டி பாட்டு ஒண்ணுதா கேடான்னு நீ ஒண்டி தான் நம்மளாண்ட கேக்க மாட்ட;
அதான் அந்த பாட்ட செல்வா ஒன்னாண்ட பாடச் சொல்லி கேட்டேன்! நீ ஒன்னியும் தப்பா எடுத்துக்காத......!" என்றவன் அவள் யோசனையுடன் தயங்கி நிற்பதைப் பார்த்து விட்டு ஜவ்வரிசியை நனைத்து ஊற வைக்க பவி செல்வாவிடம் மெதுவான குரலில்,
"டாம் பாய்..... உனக்காக நான் ரைம்ஸ் பாடி காட்டுறேன். ஆனா நீ அத பார்த்துட்டு சிரிக்கக்கூடாது!" என்று அவனிடம் ஒரு கண்டிஷனைப் போட்டு விட்டு அவன் பார்ப்பதற்காக த்ரீ லிட்டில் கிட்டின்ஸ் ரைம்ஸை பாட ஆரம்பித்தாள்.
அவள் பாடிய அந்த ரைமின் பாடல்வரிகளோ, கருத்தோ அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை. ஆனால் அந்தப் பாடலை பாடிய போது சாம்பவியின் உடல் மொழியும், அவளது கண்ணில் தெரிந்த சந்தோஷமும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. வானத்தில் மிதந்து கொண்டிருந்த ஒரு தேவதை அப்படியே கீழிறங்கி இந்த வீட்டின் சமையல்கட்டுக்குள் நின்று விரல்களையும், இதழ்களையும் அசைத்து பாடிக் கொண்டிருந்ததைப் போல் தோன்றியது.
பெண்களை பூவாக, தீயாக, நதியாக பாடல்களில் வர்ணித்துப் பாடுவதைக் கேட்டு, "டப்பு நெறய்ய கெடக்குதுங்கறதுக்குகோசரம் எந்தப் பன்னாடடா இத்தமேரி பாட்டெல்லாம் எழுதினுருக்குறது?" என்று கேட்கும் இயல்பினன் இன்று சாம்பவியின் உடல் அசைவை பார்த்த பின் தேவதையென்றால் இவளைப் போலத்தான் இருப்பாளோ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
"ஓய்.... ரைம்ஸ் உனக்குப் பிடிச்சதான்னு சொல்லவேயில்ல? முதல்ல கொஞ்சமாவது புரிஞ்சதா ஒனக்கு?" என்று கேட்டவளிடம் தலையை முதலில் ஆமென ஆட்டியவன், பின் மறுப்பாக தலை ஆட்டினான்.
"என்னடா எல்லாப் பக்கமும் தலைய சுத்துற?" என்று கேட்டவளிடம்,
"சும்மா நொய்யி நொய்யிங்காம நீ மேல போம்மே! நா வேல செய்ய தேவல்ல? நீ பாடுன பாட்ட கேக்கசொல ஒன்னியும் பிரியல; ஆனா பாக்க ரொம்ப நல்லாருந்சு! போ..... போயி ஒந்தோஸ்துங்க எங்க வந்துனு இருக்காங்கன்னு கேளு!" என்றவனிடம்,
"உனக்கு சரியா பாராட்டவே தெரியல; நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா பாராட்ட ட்ரை பண்ணு!" என்று அவனிடம் சொல்லி விட்டு மேலே ஓடினாள் சாம்பவி.
அடுத்த அரைமணி நேரத்தில் தீபக், திவ்யா, சாம்பவி, சபாபதி அனைவரும் சபாபதியின் வீட்டு ஹாலில் அரட்டையடித்த படி போண்டாவையும், பாயாஸத்தையும் ருசித்துக் கொண்டிருந்தனர்.
"நீ என்னவா ஆகலாம்னு ப்ளான் பண்ணி வச்சிருக்க தீபக்?" என்று கேட்ட சபாபதியிடம்,
"கவர்மெண்ட் சீட்டோ இல்ல மேனேஜ்மெண்ட் சீட்டோ எப்டினாலும் எம்பிபிஎஸ் தான் அங்கிள் என்னோட சாய்ஸ்! மாஸ்டர்ஸூம் முடிச்சு, முடிஞ்சா ஏதாவது பாரின் டிகிரியும் பண்ணுவேன். ஸோ என் லைஃப்ல இன்னும் ஏழெட்டு வருசத்த ஸ்டடீஸ்க்காக தான் டெடிகேட் பண்ணப் போறேன்!" என்று சொன்னவனிடம் தான் எண்ணியதை நிச்சயமாக அடைந்தே தீருவேன் என்ற வைராக்யம் தெரிந்தது.
"எங்க ஹோமுக்கு ஒருநாள் ஸ்பெஷல் கெஸ்டா வர்றியா தீபக்?" என்று கேட்டவரிடம் திகைப்புடன்,
"நானா அங்கிள்?" என்று பதிலுக்கு கேட்டான் தீபக்.
"யெஸ்..... ஐ மீன் இட்! அங்க இருக்குற பசங்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட உங்க ஏஜ் தான் தீபக்!
மோஸ்ட் ஆஃப் த ஸ்ட்டூடெண்ஸ்,
ரொம்ப ஏனோதானோன்னு, அரகெண்ட் பிஹேவியரோட, ஒரு டிடர்மினேஷனே இல்லாம தான் இருப்பாங்க...... ரொம்ப சேட்ட பண்ற அனிமல்ஸ் கூட குச்சிய வச்சிட்டே ட்ரைனர்ஸ் போவாங்கல்ல; அந்த மாதிரி தான் நாங்களும் அவங்கள அதட்டி, உருட்டிட்டே இருக்கணும். இதுல உன்னை மாதிரி ஒரு சின்னப்பையன்லாம் அவங்கள பாக்க வந்து ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுத்தா பெட்டரா இருக்கும்.
ஒரு நாலு பேராவது உன்னை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டான்னா, உருப்பட்டுருவான் பாரு அதுக்குத்தான்; நான் பவியக்கூட இந்த மாதிரி கூட்டிட்டுப் போயிருக்கலாம். ஆனா இந்த வாலு சரியான பயந்தாங்கோழி! பசங்க நம்ம கண்ணுல பயத்தப் பார்த்துட்டாங்க.....? அப்புறம் நம்ம பேச்ச கொஞ்சங்கூட கேர் பண்ணிக்க மாட்டாங்க! அதான்..... இந்த ஃபேவர உங்கிட்ட கேட்டேன். நீ வீட்ல கேட்டுட்டு ஓகேன்னா எங்கிட்ட சொல்லு!" என்றவரிடம் தீபக்,
"ஷ்யூர் அங்கிள்! இட்ஸ் அ ஹானர் ஃபார் மீ!" என்று சொல்ல பவி அவனிடம்,
"ஒருத்தர ஹானர் பண்றது சரிதான்; பட் இன்னொருத்தர டேமேஜ் பண்ணாம அத பண்ணச் சொல்லு!" என்றாள் தன் தந்தையை முறைத்தபடி.
நால்வரும் ஒருவரை ஒருவர் வாரிய படி சாப்பாடு சாப்பிட்டு முடித்த போதும் செல்வா அறையில் இருந்து வெளியே வரவில்லை.
"நம்ம மேல போகலாம் தீபக்!" என்று சொன்ன சாம்பவி சீக்கிரத்தில் அவனையும், திவ்யாவையும் மாடிக்கு அழைத்துச் சென்றாள். அப்போது தான் செல்வா சீக்கிரமாக சாப்பிட முடியும் என்ற எண்ணத்தில்!
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro