Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 16

இரவு பத்து மணியளவில் சபாபதி தன்னுடைய ட்யூட்டி முடித்து ஹோமிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அடுத்த இரு நாட்களுக்கு சிக் லீவ் போட்டிருந்தார்! செல்வா கேட்ட கேள்வியில் அவரது குற்ற உணர்வு தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. தகிக்கும் அவரது மூளைக்கு ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டும்; அது எங்கு கிடைக்கும் என்றும் அவருக்கு நன்றாக தெரியும்! தன்னுடைய பைக்கை அடுத்துக் கொண்டு கிளம்பியவர் போரூர் ஏரியாவிலிருந்த சுபகிரி நகர் பகுதியை நோக்கி தன்னுடைய வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்.

தான் தேடி வந்த வீட்டை நெருங்க நெருங்க சபாபதிக்குள் "இந்தா வந்துட்டோம்! இனிமே எல்லாம் சரியாகிடும்!" என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது.

சந்துக்குள் நுழைந்து பைக்கை செலுத்தியவர், ஒரு வீட்டின் முன்னால் சென்று அழைப்பு மணியை அழுத்தினார்.

இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்த பெண்மணி சபாபதியை பார்த்ததும் முகம் மலர்ந்து அவரை அணைத்துக் கொண்டார்.

"இந்த வாரம் நீங்க இங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன் சபா! இன்னிக்கு தான உங்க அண்ணனோட பையனுக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லிட்டு இருந்தீங்க? அங்க போயிட்டு வந்தீங்களா? பவி எப்டி இருக்கா? இஸ் ஷீ ஹேப்பி நௌ?" என்று ஒவ்வொரு கேள்வியாக அவரிடம் கேட்டபடியே அவருக்கான தண்ணீர் மற்றும் இரவு உடையை எடுத்துக் கொடுத்து விட்டு அவரது சிறிய பேகை பெட்ரூமுக்குள் சென்று வைத்து விட்டு வந்தார்.

தனது கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் சபாபதி இறுகி அமர்ந்திருந்ததை பார்த்து விட்டு அவரருகில் சென்று அமர்ந்து கொண்டவர் அவரிடம்,

"என்னாச்சு! இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?" என்று கேட்டார்.

"நோ ரேணு..... நத்திங் இஸ் ரைட் இன் மை ஃபேட்! வாழ்க்க பூரா நான் இப்டி கில்ட்டி கான்ஸியென்ஸ்லயே கெடந்து செத்துப் போயிடுவேன் போலிருக்கு! அப்போ வித்யா என்னோட வொய்ப் தான? ஸோ அவள நான் லவ் பண்ணுனதுல எந்தத் தப்பும் இல்லையே? அவளுக்கு என்னைப் பிடிக்காம வீட்ல இருந்து கெளம்பிப் போனப்ப கூட இவர் கூட வாழப் பிடிக்கல, ஜீவனாம்சமா எதுவும் வேண்டாங்குறது உட்பட
தெளிவா எல்லாத்தையும் எழுதி வச்சுட்டுத் தான போயிருந்தா! நமக்கு இவ்ளோ அசிங்கத்த குடுத்துட்டு போயிட்டாளே ஒருத்தின்னு நெனச்சு நெனச்சு நாலஞ்சு வருஷம் ரோபோ மாதிரி வேலைய மட்டும் பார்த்துட்டு அலைஞ்சது என்னோட தப்பா? இல்ல.... அவளோட அப்பாவும், அம்மாவும் என்னமோ தப்பு முழுசும் அவமேல தான்னு சொல்லி எங்கால்ல விழுந்து அழுதப்ப அவங்களுக்காக பரிதாபப்பட்டு பவிய அவங்க கையில குடுத்து வளக்க சொன்னது தான் தப்பா? பாட்டி, தாத்தான்னா பாசமா இருப்பாங்க; எங்குழந்தைக்கு அவங்களோட பாசமாவது கெடக்கட்டும்னு நினைச்சேன். பட் ஐ'ம் ராங்! எனக்கு வித்யாவை பத்தியோ, அவளோட பேரெண்ட்ஸ பத்தியோ, இல்ல என்னோட பொண்ணப் பத்தியோ ஒண்ணுமே தெரியல...... ஐ'ம் அ கம்ப்ளீட் லூஸர் ரேணு!" என்று கலங்கிய விழிகளுடன் தன் முகத்தைப் பார்த்துப் பேசியவரின் தலையை தன் தோளில் சாய்த்து அவருடைய கைகளை வருடிக் கொண்டிருந்தார் ரேணுகா.

"ஏதாவது பேசேன்! இப்டியே நான் பொலம்புறத கேட்டுட்டு கம்முன்னு ஒக்காந்துருந்தன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டவரிடம்,

"இப்ப எதையும் பேச வேண்டாம்! காலையில எல்லாத்தையும் பேசிக்கலாம்னு அர்த்தம்! நாளைக்கு மார்னிங் இங்க இருப்பீங்கல்ல? இல்ல ட்யூட்டி இருக்கா?" என்று அவரது வினாவிற்கு பதிலாக வினாக்கள் வினவினார் ரேணுகா.

"ரெண்டு நாள் லீவ் போட்ருக்கேன். ஒரு நாள் இங்க; ஒரு நாள் அங்க!" என்று சொன்னவரிடம் புன்னகைத்த ரேணுகா,

"எப்டியிருக்காரு நீங்க ஆறு மாசமா வெயிட் பண்ணி பவிக்காக
பொறுக்கி எடுத்த மிஸ்டர் நல்ல பொறுக்கி?" என்று கேட்டார்.

"ம்ப்ச்.... சும்மாவே நான் மண்ட காஞ்சு போய் வந்துருக்கேம்மா! நீ வேற இப்ப எதுக்கு அவனப் பத்தி   பேசிட்டு இருக்க? காரெக்டர் வைஸ் அவன் ரொம்ப நல்லவன்; பவிக்கு கிட்டத்தட்ட ஒரு பாடிகார்ட் மாதிரி தான் வொர்க் பண்றான்! பட் டிஸிப்லின் வைஸ் ரொம்ப வொர்ஸ்ட்! அவன் என்ன செய்யணும்னு நினைக்கிறானோ, அத மட்டுந்தான் செய்றான். நான் சொல்றத கூட கேக்குறதில்ல தெரியுமா? பட் பவிக்கு எல்லா சிச்சுவேஷன்லயும் ஒரு ப்ரொடக்டிவ் ஷீல்டு மாதிரி இருக்கான். பவியோட ஃபேஸ்ல இப்ப கொஞ்சம் தெளிவு தெரியுது. உற்சாகமாக இருக்கா! அதுக்காக தான் அவன கூட்டிட்டு வந்தோம்ங்குறதுனால நானும் அவனோட ஆக்டீவிட்டீஸ்ல ரொம்ப இன்டர்ஃபியர் ஆகுறதில்ல! வைத்தி என்கேஜ்மெண்ட்டுக்கு நான் போகல. ரிலேட்டிவ்ஸ் யாரு முகத்த பாக்கவும் எனக்குப் பிடிக்கல; பவியும் அங்க போய்ட்டு கொஞ்சம் அப்செட் மூடுல இருக்கா போலிருக்கு; வீட்டுக்குப் போயி அவகிட்ட அங்க என்ன ப்ராப்ளம்னு கேக்கணும்!" என்றார் சபாபதி.

"வீட்டுக்குப் போயி அங்க என்ன ப்ராப்ளம்னு கேக்குறதெல்லாம் இருக்கட்டும் சபா...... நீங்க செல்வாங்குற ஒரு பையன அங்க கொண்டு போய் விட்டதே ஒரு ப்ராப்ளம் தான்; அது தெரியுதா உங்களுக்கு? நீங்க அவன வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு வேடிக்கை பாக்குறது Hand grenade அ கையில வச்சுக்கிட்டு அது வெடிக்குதா, வெடிக்கலையான்னு டெஸ்ட் பண்ணி விளையாடிப் பாக்குறேன்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு......? அதுங்க ரெண்டு பேரும் டீன்ஏஜர்ஸ் சபா! அவங்கள கண்ட்ரோல் பண்றதுக்கும், ப்ராப்பரா கைய்ட் பண்றதுக்கும் நம்ம ரெண்டு பேரும் கூட அங்க இல்ல! நான் எதுக்காக பயப்படுறேன்னு உங்களுக்குப் புரியுதா? புரியலயா?" என்று தயங்கிய குரலில் கேட்ட ரேணுவிடம் தீர்க்கமான குரலில்,

"அவங்க ரெண்டு பேரையும் ஒரே வீட்ல விட்டதுனால என்ன ஆகிடுணும்னு நீ யோசிக்குற ரேணு? அவங்க ப்ரெண்ட்ஷிப் எக்ஸ்ட்ரீமா டெவலப் ஆகி லவ்ங்குற ஸ்டேஜுக்கு போய்டும்னா? இல்ல அதையும் தாண்டி பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல முடிஞ்சுடும்னா? டோண்ட் வொர்ரி டார்லிங்....... இந்த கால யங்ஸ்டர்ஸ் கெட்டுப் போகணும்னு நெனச்சாங்கன்னா அவங்க கையில இருக்குற மொபல்லயே அதுக்கான எல்லா வழியும் இருக்கு!
நாம ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் நம்ம பவி கூடவே கையப் புடிச்சுட்டு போயிட்டு இருக்க முடியாது. அவள பாதுகாத்துக்குற கவசமா அவளோட சுயஒழுக்கமும், கட்டுப்பாடும் எப்பவுமே அவகிட்ட அலர்டா இருக்கணும். இருக்கும்! ஒரு அம்மாவா நம்ம குழந்தைய பத்தின உன்னோட பயம் நியாயமானது தான்! ஆனா இந்த பயத்துக்கு அவசியமேயில்ல! என் மகளும், என்னோட சூப்பர்விஷன்ல கொஞ்ச நாள் இருந்த பையனும் எந்த காலத்துலயும் தப்பானது எதையும் யோசிக்கக்கூட மாட்டாங்க! இந்த செல்வா ஒரு Hand grenade அளவுக்கு பயங்கரமானவன்லாம் இல்ல! நம்ம பொண்ணுக்கு சந்தோஷத்த குடுக்குறதுக்காக வந்த கம்பி மத்தாப்பு டைப் தான்.....
இத நீ சீக்கிரத்துல புரிஞ்சுப்ப பாரு!" என்று சொன்னார் சபாபதி.

தன்னுடைய கணவரின் வாதம் தன்னை அவ்வளவாக சமாதானம் செய்யவில்லை என்றாலும் இதற்கு மேல் சபாபதியிடம் தன் மனதின் பயத்தைப் பற்றிப் பேசி அவரை சஞ்சலப்படுத்த விரும்பாத ரேணு அவரிடம் குறுஞ்சிரிப்புடன்,

"ரிலேட்டிவ்ஸ் யாரையும் பாக்க பிடிக்கலன்னு சொல்லிட்டு வொய்ப் வீட்ல வந்து உட்கார்ந்துருக்கீங்க? நான் உங்க கண்ணுக்கு ரிலேட்டிவா தெரியலையா?" என்று  தலையைச் சரித்தபடி கேள்வி கேட்க தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவர்,

"நீ என்னோட ரிலேட்டிவ்லாம் இல்ல! என்னோட லைஃப்! நீ இல்லன்னா இத்தன வருஷத்துல ஒண்ணு எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கும். இல்ல டிப்ரஷன் தாங்காம ஹார்ட் வெடிச்சு செத்துப் போயிருப்பேன்!" என்று சொன்ன வார்த்தைகளின் தீவிரம் உணர்ந்து அழுத்தமான குரலில் சொன்னார்.

"என்ன இப்டியெல்லாம் பேசிட்டு? உதை வாங்குவீங்க! சரி......
எப்ப பவிட்ட நம்ம விஷயத்தப் பத்தி சொல்லப்போறீங்க சபா? அவளுக்கு இந்த விஷயம் ரொம்ப ஷாக்கிங்கா இருக்குமே...... பட் இதுக்கு மேல என்னை வெயிட் பண்ண சொல்லாதீங்க! நான் வெயிட் பண்ண ஆரம்பிச்சு
ஆல்ரெடி பத்து வருஷம் ஆச்சு!" என்று சொன்ன ரேணுவை ஆச்சரியமாக பார்த்த சபாபதி,

"நம்ம கல்யாணம் முடிஞ்சு பத்து வருஷமா ஆயிடுச்சு ரேணு.....? அப்ப உனக்காகவும் நான் இன்னுங்கொஞ்சம் அழணும் போலிருக்கேமா?" என்று சொல்லியவர் மறுபடியும் தன் முகம் சுணங்க,

"ம்ப்ச்! எதையாவது நெனச்சு புலம்பிட்டே இருக்குறது தான் ஒங்க வேலையா? இது நல்ல ஹேபிட் இல்ல ஸார்! எனக்கு தூக்கம் வருது; நீங்க சாப்டீங்களா இல்ல ரெண்டு தோச போடட்டுமா?" என்று கேட்ட ரேணுவிடம்,

"பத்தரை மணி ஆச்சு! இன்னுமா சாப்டாம இங்க வருவேன்? நீ சாப்டியாமா?" என்று கேட்டவரிடம் பதில் கூறாமல் ரேணுகா படுக்கையறைக்குள் கால் எடுத்து வைக்க அவரை பின்புறமிருந்து அணைத்து நிறுத்தினார் சபாபதி.

"தியானத்துல ஒக்காந்து கந்த குரு கவசம் சொல்றப்ப எவ்ளோ மனநிம்மதி கிடைக்குதோ, அதே அளவு மனநிம்மதி உன்னை கட்டிப் பிடிச்சுக்கும் போதும் எனக்கு கிடைக்குது ரேணு! என்னோட லேடி க்வீன் சாப்டாச்சான்னு அவங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். இன்னும் நான் கேட்ட கேள்விக்கு அங்கருந்து பதிலே வரலயே?" என்று கேட்டவரின் முகம் பார்த்து திரும்பிய ரேணுகா,

"உங்கட்ட இருந்து தப்பிச்சு ஓடுனா தான நீங்க என்னைப் பிடிச்சு நிறுத்தி ஹக் பண்ணிப்பீங்க..... அதான் உங்க கேள்விக்குப் பதில் சொல்லல. நானும் டின்னர் முடிச்சாச்சு! தூங்கப் போலாமா?" என்று கேட்க தன் மனைவியின் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு அவரைக் கூட்டிக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றார் சபாபதி.

கல்லூரியில் இருவரும் ஒன்றாகப் படிக்கும்போதே தயங்கி தயங்கி வந்து சபாபதியிடம் தன் காதலை மூன்று நான்கு முறை சொன்னவர் ரேணுகா. அப்போதெல்லாம் ரேணுவிடம் சபாபதி உனக்கு அறிவில்லையா என திட்டியிருக்கிறார்; பிரின்ஸ்பாலிடம் கம்ப்ளையிண்ட் செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்; படிக்க வந்த இடத்துல அத மட்டும் சரியாப் பண்ணும்மா என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்! திரும்ப திரும்ப தொந்தரவு செய்ததால் கோபம் தாளாமல் ஒருநாள் ரேணுவை அறைந்தும் இருக்கிறார்!
அதுதான் அவர் அவளை கல்லூரியில் சந்தித்த கடைசி தினம்! அதற்குப் பின் பத்து வருடங்களுக்கு முன்பாக எதேச்சையாக ஒருநாள் தனது வீட்டருகில் உள்ள பார்க்கில் ரேணுவை சந்தித்தார்.

ரேணு தான் அப்போதும் அவரிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் எப்படி இருக்கிறார் என்று அக்கறையாக விசாரித்தார். சபாபதிக்கு நல்ல வேளையாக ரேணுவின் பெயர் மறக்கவில்லை. அவரை துரத்தி துரத்தி தன் காதலை சொன்னவள் ஆயிற்றே.....

நீண்ட நேரமாக அவளைப் பற்றி அவரும், அவரைப் பற்றி அவளும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு இருவரும் கிளம்பும் போது ரேணுகா அவரிடம்,

"இப்பவாவது என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா சபா?" என்று கேட்க அவள் மேல் வடிந்திருந்த கோபம் இப்போது மறுபடியும் திரும்பியது சபாபதிக்கு.

"எங்கூட வா.... நீ! உங்க அப்பா, அம்மா கிட்ட போவோம். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு; ஏழு வயசுல ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லிட்டு இருக்கேன். அத காதுலயே போட்டுக்காம கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேக்குற..... கெளம்பு! உங்க வீட்டுக்கு!" என்று உறுதியான குரலில் சொன்னவரைப் பார்த்து லேசாக புன்னகைத்த படி அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் ரேணுகா.

அவளுடைய தந்தை என்று அவள் அறிமுகப்படுத்திய பெரியவர் கட்டிலில் தொய்ந்து ஒளிமங்கிய கண்களுடன் சக்தியற்றுப் போய் படுத்திருந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் இயல்பாக மூச்சு விட முடியாது என்ற நிலையில் இருந்தார்.

"அப்பாக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ் இருக்கு சபா! நீங்க அவர் பக்கத்துல வராம ஒரு ஸேஃப் லெவல் ஆஃப் டிஸ்டென்ஸ் மெயின்டைன் பண்ணுங்க. சரியா?" என்று சொன்னவள் தன்னுடைய மூக்கு, வாய் இவற்றை கவர் செய்து கொண்டு தன் தந்தையின் அருகில் சென்றாள்.

"அப்பா..... இவர் தான்ப்பா நான் உங்க கிட்ட சொன்ன மிஸ்டர் சபாபதி! உங்கள பாக்கலாம்னு வந்துருக்காரு!" என்று சொன்ன தன் மகளை ஒரு பார்வை பார்த்தவர், தன்னைக் கும்பிட்ட சபாபதியை நன்றாக ஒரு ஆராயும் பார்வை பார்த்து விட்டு தன் மகளிடம் நீயும், அவரும் வெளியே சென்று பேசுங்கள் என்று சைகை காட்டினார்.

"உங்கப்பாவுக்கு என்ன ப்ராப்ளம் ரேணு? அவரோட கண்டிஷன் க்ரிட்டிக்கலா இருக்கும் போலிருக்கே? வாட்ஸ் ஹிஸ் பொஸிஷன் நௌ? ஏன் ஹாஸ்பிட்டல்ல வச்சு ட்ரீட் பண்ணாம இப்டி போச்சு வச்சுருக்க?" என்று கேட்டார் சபாபதி.

"அப்பா ஒரு செயின் ஸ்மோக்கர் சபா..... லங்க் ட்யூபர்க்ளோஸிஸோட போராடிட்டு இருக்காரு. லிட்டரலி
ஹீ இஸ் கவுண்ட்டிங் ஹிஸ் டேஸ்!  பட் உங்கள இங்க கூட்டிட்டு வந்து காட்டுனதுனால இனிமே போகும் போது நிம்மதியா போவாருன்னு நினைக்கிறேன்!" என்று சொன்ன ரேணுகாவிடம் முதன்முறையாக ஒரு பரிவு ஏற்பட்டது சபாபதிக்கு.

"நீ பேசுறதுக்கு என்ன அர்த்தம்னு புரிஞ்சு தான் பேசுறியா ரேணு?" என்று கேட்டவரிடம் ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள் ரேணுகா.

"அப்பா சம்பந்தமா உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் ஹெசிடேட் பண்ணாம என்னை கூப்டு ரேணு!" என்று சொன்னவரிடம் புன்னகைக்க முயன்று,

"சுத்தி இருக்கிற உறவுக்காரங்க எல்லாம் எங்கள ரொம்ப அவாய்ட் பண்றாங்க; இல்ல ஹெல்ப் பண்ண வர்றேன்னு சொன்னாலும் அப்பாவோட அக்கவுண்ட்ல எவ்ளோ பணம் இருக்குன்னு தான் கேள்வி கேக்குறாங்க. எங்கப்பா ஹாஸ்பிட்டல் பெட்ல போகாம, வீட்டுக்கு வந்து நிம்மதியா அமைதியா போகணும்னு நினைச்சார். இதுக்கு மேல அவர ட்ரீட் பண்றதுக்கு ஒத்துக்கவும் இல்ல வேற! அதான் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. வீட்லயே வச்சு முடிஞ்ச அளவுக்கு ஜாக்கிரதையா அவர பார்த்துட்டு இருக்கேன்! உங்கள பார்த்தா நீங்க இப்டித்தான் சொல்வீங்கன்னு தெரியும். இதுக்காக தான் கஷ்டப்பட்டு உங்கள தேடி கண்டுபிடிச்சு உங்க கிட்ட வந்தேன் சபா!" என்று சொன்ன ரேணுவின் கையைப் பற்றினார் சபாபதி.

"எங்கிட்ட வரணும்னு ஏன் யோசிச்ச? மறுபடியும் ஒருதடவ
நல்லா யோசிச்சு சொல்லு ரேணு..... நான் எலிஜிபிள் பேச்சுலரா எனக்கு உன்னோட ப்ரோப்போஸல பார்த்து எரிச்சலா வந்தது. பட் இப்போ எம்மனசு உன்னைப் புரிஞ்சிக்கிட்டு, உங்கூட வாழறதுக்கு இவ தான் சரியான pair னு சுயநலமா யோசிக்குது.
நான் இப்போ கைல குழந்தையோட நிக்குற ஒரு ஆள்! டிஸர்விங்க் சிங்கிள் இல்ல; உனக்கு வேற ஆப்ஷன் இல்லன்னு நினைச்சு என்னைய சூஸ் பண்ணாத!" என்று சொன்னவளிடம் கண்ணில் தோன்றிய சில கண்ணீர்த்துளிகளுடன் "ஐ ஸ்டில் லவ் யூ சபா!" என்று சொன்னாள் ரேணுகா.

அவள் அப்படி சொன்னதற்கு அடுத்து நான்காவது நாள் ரேணுகாவின் தந்தையின் சம்மததத்துடன் அவர் முன்னால் மாலை மாற்றி அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து ரேணுகாவை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார் சபாபதி.

அவளது தந்தை இறந்தபின் அவளது சொத்துக்கள், அவளுக்கு வர வேண்டிய தொகை அனைத்தையும் முறையாக செட்டில் செய்து கொடுத்தவர், ஆறு மாதத்திற்குள் அவளை பதிவுத் திருமணமும் செய்து கொண்டார். வித்யா எழுதிக் கொடுத்து விட்டு சென்றிருந்த பத்திரம் அவரது இரண்டாவது திருமண வாழ்க்கையை முறையாக தொடங்குவதற்கு அவருக்கு உதவியாக இருந்தது.

முதலில் ஒருவருக்கொருவர் தோழமையையும், அனுசரணையும் கொடுத்து வந்த தம்பதியர் நாளாக நாளாக தங்களுடைய காதலையும், நேசத்தையும் முழுமையாக பரிமாறிக் கொண்டனர்.

தான் ரேணுகாவை திருமணம் செய்து கொண்டது தவறென்று சபாபதி ஒருபோதும் எண்ணவில்லை. ஆனால் அதை எப்படி சாம்பவியிடம் சொல்வது என்று தான் மிகவும் யோசித்துக் கொண்டு இருந்தார். ஏற்கனவே அவளிடம் சுமூகமான ஒரு உறவு இல்லை! இதில் உனக்கு ஒரு சித்தி வேறு இருக்கிறாள் என்று சொன்னால் எனக்கு நீயும் வேண்டாம், என் சித்தியும் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்று மிகு‌ந்த பயம் அவருக்கு! அவளது 7 வயதிலிருந்து இந்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என்று முயற்சித்தவர், இன்று வரை ரேணுகா சம்பந்தப்பட்ட விஷயத்தை சொல்வதற்கு முயற்சித்து தான் கொண்டிருக்கிறார்.

வாரம் ஒருமுறை ஏதோ கெஸ்ட் மாதிரி தன்னுடைய கணவன், வீட்டிற்கு வந்து விட்டு செல்வதும், ஊருக்குத் தெரியாமல் இப்படி ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்வதற்கும் ரேணுவுக்கு எவ்வளவு மனவருத்தமாக இருக்கும் என்று புரிந்தாலும், சபாபதியால் இந்த விஷயத்தில் எந்த ஒரு தீர்க்கமான முடிவும் எடுக்க முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண அவர் யோசித்த ஏற்பாடு தான் முதலில் தன் மகளுக்கு நம்பிக்கையான ஒரு நட்பை ஏற்படுத்திக் கொடுக்கும் யோசனை.... இந்த யோசனையின் மூலமாக தனது மாமனார், மாமியார் அவளைக் குழப்பி விடுவதும் சற்றே தடுக்கப்படும் என்று நினைத்து தான் வாகை செல்வனை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

"இதுக்கு மேல என்னை வெயிட் பண்ண சொல்லாதீங்க! நான் வெயிட் பண்ண ஆரம்பிச்சு
ஆல்ரெடி பத்து வருஷம் ஆச்சு!" என்று வாய்விட்டே தன்னுடைய மனைவி கேட்டு விட்டாள். இதற்கு மேல் என்ன வந்தாலும் பரவாயில்லை. சாம்பவியிடம் ரேணுவைப் பற்றி கூடிய சீக்கிரத்தில் அறிவித்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் தான் அன்றைய இரவில் உறக்கத்திற்கு சென்றார் சபாபதி.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro