💚 இணை 15
ஜெயராஜ், மனோகரன், எழிலரசன்,
வினோத்குமார், வாகை செல்வன் ஆகிய ஐந்து பேரும் எப்போதிருந்து
ஒன்றாக சேர்ந்தார்களோ தெரியாது. ஆனால் ஐந்து பேரும் ஹோட்டலில் வேலை செய்யும் பொழுது நல்ல கோஆர்டினேஷனில் வேலை செய்பவர்கள்; ஒருவன் புரோட்டாவுக்கு மாவு பிசைந்தான் என்றால், அடுத்தவன் குட்டி உருண்டைகளை உருட்ட தயாராகியிருப்பான். இரவில் ஒருவன் கடைக்கு மாப் போட்டுக் கொண்டிருந்தான் என்றால் மற்றவர்கள் சேரை டேபிளின் மேல் அழகாக நிற்க வைத்து விட்டு ஐவரும் உறங்கும் நேரத்தை சற்று துரிதமாக்கி விடுவார்கள். அந்த உணவகத்தில் மிகவும் கடினமான உடல் உழைப்பும் நண்பர்கள் சிரித்து, அரட்டையடித்துக் கொண்டே செய்வதில் ரொம்பவும் கடினமான வேலையாக தெரியாமல் போய் விடும் அவர்களுக்கு! அதிலும் செல்வா தன்னுடைய மற்ற நான்கு நண்பர்களையும் கண்காணித்து கொண்டே இருப்பதில் மோப்பநாயைப் போன்றவன்! தார்க்குச்சியை வைத்துக் கொண்டு பின்னால் குத்திக் கொண்டே இருக்கவில்லை என்றால், தன் போக்கில் போகும் இயல்புடையவர்கள் அவனது நண்பர்கள்!
மனோ, ராஜு இருவரும் திருட்டு தம்மிற்காக எங்காவது பதுங்கினார்கள் என்றால் அவர்களை கிடுக்கிப்பிடியிட்டு பிடித்து நைத்து உறித்து விடுவான். தன் நண்பர்கள் மேல் எந்த அளவிற்கு பாசக்காரனோ, அந்த அளவிற்கு உரிமையும் எடுத்துக் கொண்டு வெளுத்து விடுவான். முதலாளி தன்னுடைய பைக்கை வீட்டில் கொண்டு போய் விடு என்று அவனிடம் சொல்லி விட்டு வெளியூருக்கு சென்றார் என்றால் அந்நேரம் மட்டும் தனியாக பைக்கில் சுற்றித் திரிந்த குற்றத்துக்காக இப்போது போல் நால்வராலும் சேர்ந்து ஏதாவது ஒரு எண்ணெய் டின்னை நோக்கி தூக்கி வீசப்படுவான்! மொத்தத்தில் அவர்கள் ஐவருக்குள்ளும் வந்த முதல் பிரிவு செல்வா ஹோமுக்கு சென்ற போது ஏற்பட்ட பிரிவு தான்! சபாபதியின் வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்டிருந்தது இரண்டாவது தடவையாக ஏற்பட்ட பிரிவு!
"மாமூ..... பதினெட்டு முடிஞ்சவுடனே மொத வேலையா லைசென்ஸ் எடுத்துக்கினு, பாஸ்போட்டும் வாங்குறோம்டா! ஏதாவது ஒரு அரபு நாட்டுல போயி சொகமா குளுகுளுன்னு ஏசி கார ஓட்டணும்டா! ஏசி வீடு, ஏசி காரு, ஏசி குளிப்புரூம்புன்னு அப்டியே அங்க இருக்குற ஷேக்குங்க மாதிரியே நாமளும் வாழணும்! நீ இன்னா சொல்ற ஒலக்க?" என்று தன் திட்டத்தை சொல்லி நண்பனின் அபிப்ராயம் கேட்ட எழிலிடம் புன்னகைத்த செல்வா,
"வாய அம்மாநீளமா பொளக்காதீங்கடா; நா தங்குறதுக்கு ஒரு வூடே இல்லயாம்!
இந்த லச்சணத்துல நா பாஸ்போட்டுக்கு எங்க போறது? தகரத்த வச்சு நாலு பக்கமும் மரிச்சு வச்சுனு இருக்குற என்னோட ஜாக உங்களுக்கெல்லாம் மறந்து போயிருச்சாக்கும்? அடுத்தவணாண்டலா வேணா மாமூ; நம்ம நாட்டுல நமக்கு தெரிஞ்ச ஜனத்துகிட்ட டாக்சி ஓட்டி சம்பாதிக்கணும்! ஆனா ஒரு தொழில் பண்றதுக்கோசரம் நெறய்ய துட்டு வேணும்! அத்த மொதல்ல சம்பாதிக்கணும். அதுக்கப்புறம் வாங்கலாம் ஏசியில கக்கூஸூ! ஆளுகளையும், மூஞ்சியையும் பாரு!" என்று சொன்ன செல்வாவின் பேச்சைக் கேட்ட சாம்பவி கைதட்டிக் கொண்டிருந்தாள்.
அவனது பதினேழு வயதிற்கு அவன் மிகவும் பொறுப்பானவன் தான்; இப்போதும் தன் நண்பர்களிடம் பொறுப்புணர்வோடு பேசிக் கொண்டிருந்தான் தான்; ஆனால் இப்போது சாம்பவிக்கு செல்வாவின் பேச்சு பெரிதாகப் படாமல் அவனுடைய தோற்றம் பெரிதாக தெரிந்தது. அவனை இப்போது தான் முதன்முதலாக பார்ப்பவள் போல் அவனது கண்கள், கைகள், உயரம், முடி என ஒவ்வொரு உடல் பாகத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
"ஓ மைகாட்; இதுக்குப் பேரு சைட் அடிக்கிறது இல்ல? நீ என்ன பண்ணிட்டு இருக்க சாம்பவி?" என்று நினைத்துக் கொண்டவள் தன் தலையை உலுக்கிக் கொண்டு நின்றாள்.
"பாருங்கடா...... எவ்ளோ அறிவா பேசுறேன்னுட்டு எங்க ஓனரம்மா கூட எனக்காக கைதட்டுது. பவி இங்க வாம்மே!" என்று நண்பர்களிடம் தன்னைப் பற்றி மெச்சிய படியே, அவளை தன்னருகில் வரச் சொன்னான் செல்வா.
"இவன் வினோத்து, இது ராஜு, இவன் மனோ, இந்தப் பையன் எழிலு, நான் செல்வா.....!" என்று தன்னையும் சேர்த்து ஒருமுறை அவளிடம் அறிமுகம் செய்தவன் அவளைப் பற்றி தன் நண்பர்களிடம் ஐந்து நிமிடங்கள் பேசி அறிமுகம் செய்து விட்டுத் தான் ஓய்ந்தான்.
"ஹாய் ப்ரெண்ட்ஸ் உங்க நிக் நேம்ஸ் போனி, தவல, குண்டான்,
சம்படம்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு. பட் யார் யாரு என்னென்ன கேரக்டர்னு சொன்னீங்கன்னா நான் கரெக்டா நியாபகம் வச்சுக்குவேன்!" என்று சொல்லி புன்னகைத்தவளை விட்டு விட்டு நால்வரும் செல்வாவை பார்வையால் கொன்று விடுபவர்கள் போல் முறைத்தனர்.
"அது வந்து ஒரு ஆர்வக்கோளாறுல.... வாயில இருந்து வேகமா!" என்று தயங்கிய படி அவர்களிடம் விளக்கம் சொன்னவனிடம்,
"அட விடு உலக்க! இதெல்லாம் இப்ப ஒரு பெரிய விஷயமா?" என்று சாம்பவி அவனைப் பார்த்து புன்னகைத்த படி கேட்க செல்வாவைத் தவிர அனைவரும் கை கொட்டி சிரித்தனர்.
"ஏய்..... எங்க பட்டப்பேர சொல்லி நீ எங்கள கூப்டக்கூடாதும்மே!" என்று சொன்னவனிடம்,
"அந்த பிரச்சனைய அப்புறமா பார்த்துக்கலாம். இங்க யாரோ துபாய்ல போயி எல்லாம் ஏஸி மயம்னு பேசிட்டு இருந்தாரே? யார் அந்த அறிவாளி?" என்று கேட்டவளிடம் "நாந்தாம்மே அது!" என்று கூறி அவள் முன்னால் ஜங்கென்று குதித்தான் எழிலரசன்.
"இவ கொடயுற கொடாயில இன்னிக்கு செத்தான்டா சேகரு!" என்று முணுமுணுத்தபடி குறுஞ்சிரிப்புடன் கைகட்டிக் கொண்டு அவர்களுடைய உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான் செல்வா.
"உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா ஸார்?" என்று கேட்டவளிடம் ஸ்டைலாக தோள்குலுக்கியவன்,
"அழகுக்கே நாந்தாமே ராஜா! அதாச்சு எழிலரசன்!" என்று சொன்னவனிடம்,
"ம்ப்ச்.... வாட்எவர் மிஸ்டர் எலி! துபாயோட கரன்ஸி நேம் தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்டாள் சாம்பவி.
"வார்டனம்மா ஆரம்பிச்சுட்டா! இனிமே நம்ம போனிய அந்த சாமி தான்டா காப்பாத்தணும். வாங்க நாம போயி துன்றதுக்கு ஏதாச்சு வாங்கினு வருவோம்!" என்று மெதுவான குரலில் சொல்லி அங்கிருந்து கழண்டு கொண்ட செல்வாவின் பின்னால் ஒவ்வொருவராக நகர ஆரம்பித்தனர்.
"ஏங்க.... என்னைய உட்டுனு அந்த நாதாரிங்க எங்கயோ பொறுக்கினு வர கெளம்புதுங்க பாருங்க! நானும் போறேன்!" என்று கேட்டவனை பார்த்து ஒருவிரல் நீட்டியவள்,
"உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்; அதுக்குப் பதில் சொல்லிட்டு நீங்க அவங்க கூட ஜாய்ன் பண்ணிக்கலாம்!" என்றாள் ஏதோ இந்த கணக்கை முடித்தால் தான் நீ மதிய உணவு இடைவேளைக்கு செல்ல முடியும் என்று மாணவனிடம் சொல்லும் கணக்கு டீச்சர் போன்ற தோற்றத்துடன்!
"நா ஒன்னியும் துபாய்ல இல்லீங்களே.... இங்க தான இருக்கேன்? எனக்கு எப்டி அந்த ஊரு துட்டோட பேரெல்லாம் தெரியும்ங்க?" என்று கேட்டவனிடம்,
"அந்த கன்ட்ரியோட கரன்ஸி பேரே தெரியாது. ஆனா அப்டி இருக்கணும், இப்டி இருக்கணும்னு
ஆன்னு வாய தொறந்து வச்சுட்டு கனவு மட்டும் கண்டுட்டு இருப்பீங்களா நீங்க? துபாய் கரன்ஸி பேரு திராம்ஸ்! ஒரு ட்ரைவருக்கு எல்லாம் அங்க ஆவரேஜா இரண்டு ஆயிரத்துலருந்து நாலாயிரம் திராம்ஸ் தான் சம்பளம் இருக்கும்! அதுல நீங்க கேக்குற மாதிரி சுகபோகமா வாழ முடியாது மிஸ்டர் எலி! மோர்ஓவர் இப்ப நம்ம ஊருலயே நிறைய கேப் சர்வீஸஸ் இருக்கு. ஸோ நீங்க அஞ்சு பேரும் சேர்ந்து டாக்ஸி ட்ரைவர்ஸ் ஆகுறதோ இல்ல ஃபாரினுக்கு போய் டிரைவர் ஆகுறதோ உங்க ப்யூச்சருக்கான நல்ல ஐடியா இல்ல! வேற ஏதாவது ப்ளான் யோசிங்க!" என்று அவனிடம் சொல்லி விட்டு தன் கையிலிருந்த மண்ணைத் தட்டிக் கொண்டிருந்தாள் சாம்பவி.
"ஏங்க..... என்னங்க பொசுக்குன்னு எங்க இத்தன வருசத்து கனவ ஊத்தி மூடின்னு போயிட்டீங்க.....? அப்ப நாங்க உள்ளூர்லயே ஒக்காந்துக்கினு புரோட்டாவுக்கு மாவு பிசைஞ்சுனே இருக்க வேண்டிது தானா?" என்று அலுப்பான குரலில் கேட்டவனிடம்,
"ம்ஹூம்! அதுவும் வேண்டாம்! இப்பல்லாம் ஒரு தெருவுக்கு பத்து ஹோட்டல்ஸ் வந்துடுச்சு! இது போக ஸ்ட்ரீட் சேட் ஷாப்ஸ் வேற; ஸோ ஹோட்டல் பிஸினஸூம் உங்களுக்கான சரியான வழியா இருக்காது!" என்று சொன்னவளிடம் கோபத்துடன்,
"எந்திரிம்மே மொதல்ல..... இந்த எடத்த காலி பண்ணு! கொஞ்சம் காத்து வரட்டும்; சும்மா அத்து சரியில்ல, இத்து சரியில்லன்னா நாங்க என்ன எங்க முனிசுபாலிட்டிக்கு கவுன்சிலராவா ஆவ முடியும்? எங்கள்ல எவனும் எட்டாங்க்ளாச தாண்டல; அத்த செய்யாத, இத்த செய்யாதன்னு நீ சொல்லிக்கினே இருந்தன்னா நாங்க எத்த தான் செஞ்சு ஒரு நல்ல நெலமக்கு வர்றது? நாங்களும் லைப்ல செட்டிலாக தேவல்ல? இன்னும் அஞ்சாறு வருஷத்துல ஒரு சோக்கு கடைய போட்டுக்குன்னு ஒக்காந்தா தான் பின்னால அத்த நல்லா வளுவா டெவலப்பு பண்ண முடியும்? நீ எங்க ஒலக்கய விட அறிவான பாப்பாவா இருக்க..... நாங்க என்னதா செய்றதுன்னு யோசிச்சுனு நீ எங்களாண்ட ஏதாச்சு ஒரு நல்ல ஐடியா குடும்மே!" என்று கேட்டான் எழிலரசன்.
"டோண்ட் வொர்ரி எழில்! நாம நிறைய டிஸ்கஸ் பண்ணலாம்; நாம தான் இப்போ ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்ல?" என்று சொல்லி அவன் தோளைத் தட்டினாள் சாம்பவி.
"நாம எப்பமே ப்ரெண்ட்ஸ் ஆயிக்குனோம்?" என்று ஆச்சரியமாக கேட்டவனின் பின் மண்டையில் நொட்டென்று ஒரு அடி வைத்தவள்,
"அதான் கேங்கா நின்னுட்டு ஸாங் பாடுனோம்லடா? அப்போலேர்ந்து நாம ப்ரெண்ட்ஸ்! வா போவோம்!" என்று சொல்லி அவன் கையைப் பிடித்துக் கொண்டு செல்வாவின் அலைபேசிக்கு அழைத்து அவன் எங்கிருக்கிறான் என்று கேட்ட சாம்பவி எழிலரசனிடம் மற்ற நண்பர்கள் இருக்கும் கடையின் பெயரைச் சொல்ல எழில் சாம்பவியுடன் அங்கு நடந்தான்.
நண்பர்களிடம் விடைபெற்று செல்வாவுடன் சாம்பவி காரில் ஏறிய போது மணி ஒன்பதரை ஆகி விட்டது. வீட்டிற்கு செல்வதற்கு இன்னும் அரை மணிநேரம் ஆகும்; அதற்குள் சாம்பவி வயிறு நிறைய உண்டு விட்டு அரை உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
"நீ பின்னால படுத்துக்க பாப்பா! நா முன்னால ட்ரைவர் சீட்டாண்ட ஒக்காந்துனு வர்றேன்!" என்று சொன்னவனிடம்,
"ம்ப்ச்! நீயும் என் பக்கத்துலயே உட்காருடா!" என்று சொல்லி விட்டு அவன் அருகில் அமர்ந்திருந்தவள் ஐந்து நிமிடத்தில் அவன் தோளைப் பற்றிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.
"வர வர நா ஒரு ஆம்பளப்பையங்குற நெனப்பே இல்லாம நீ என்னைய ரொம்ப டார்ச்சரு பண்ணீனு இருக்க பாப்பா! அன்னிக்கு கல்லு மாதிரி நென்ச்சுக்கன்னு ஒங்கிட்ட ஒரு பேச்சுக்கு சொன்னா நா எந்நேரமும் கல்லாவே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டியா? தோசைக்கல்லு சூடாகுறப்ல இப்ப எஓடம்பு சூடாகுதே பாப்பா..... நான் என்ன செய்ய?" என்று நினைத்த படி அவளுடைய கன்னத்தில் படர்ந்திருந்த முடியை விலக்கி விட்ட செல்வா சாம்பவியை தன்னிடமிருந்து பிரித்து சீட்டில் சாய்த்து வைக்க முயன்று கொண்டிருந்தான்.
அவன் அவளை சற்று நகர்த்தியதும் தூக்கத்தில் அவன் உடலைச் சுற்றி கைகளை கட்டி அணைத்துக் கொண்டவள், அவளது மூக்கை அவனது நடுமார்பில் நாலு தேய் தேய்த்து விட்டு இன்னும் வாகாக அவன் மார்பில் ஒண்டிக் கொண்டு தூங்கினாள்.
"அடியேய்.... நான் என்ன உன் ரூம்ல கெடக்குற தலகாணியா? இப்டி மேல விழுந்து அமுக்கினு
இந்த ஒரசு ஒரசுறாளே...... முருகா பத்திரமா என்னைய வீட்டுக்கு கூட்டினு போயி சேர்த்துருய்யா! நாளைக்கு மொத வேலையா குளிச்சுனு ஒங்கோயிலுக்கு வர்றேன்!" என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தவன், காரில் ஓடிக் கொண்டிருந்த "தூங்காத விழிகள் ரெண்டு..... உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று!" என்ற பாட்டைக் கேட்டு கடுப்பாகி,
"ணா..... இந்த பாட்ட நிறுத்திட்டு வேற ஏதுனா சாமி பாட்டு போட்டு உடுணா!" என்று அந்த காரின் ஓட்டுநரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro