Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 14

சாம்பவியும், செல்வாவும் நிச்சயதார்த்தத்திலிருந்து புறப்பட்டு நேராக மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்திருந்தனர். செல்வா பவியை காரிலேயே இருக்கச் சொல்லி விட்டு சற்று தூரமாக சென்று சபாபதிக்கு கால் செய்து அவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு போய் வந்ததையும், அங்கு யாரும் பவியைக் கண்டுகொள்ளவேயில்லை எனவும் சொல்லி விட்டு, அவள் சற்றே கவலையாக தெரிந்ததால்
அவளை பீச்சுக்கு அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக வீட்டுக்கு கூட்டிச் சென்று விடுவதாக அவரிடம் ரிப்போர்ட் செய்தான்.

சபாபதி ஒரு செருமலுடன் அவனிடம், "ரொம்ப ஊரு சுத்திட்டு இருக்காம பவிம்மாவ சீக்கிரத்துல வீட்டுக்கு கூட்டிட்டுப் போடா..... இல்ல சப்போஸ் அவ பீச்ல ரொம்ப நேரம் விளையாடணும்னு ஆசைப்பட்டான்னா, நாளைக்கு ஒரு நாள் ஹாஃப் அ டே லீவ் போட்டுக்க சொல்லு!" என்று சொன்னதும் வந்தது அவனுக்கு அப்படி ஒரு கோபம்.

"யோவ்.... இன்னா ஆளுய்யா நீ? பெத்த புள்ள மனசுக்குள்ள என்னா நென்ச்சுக்குது; ஏது நென்ச்சுக்குதுன்னு கூட தெரியாத அப்டி இன்னத்த தான்யா வேலைய செஞ்சு கிழிச்சுனு இருக்க! ஒருநா அதுக்கு ஒடம்பு அனலா கொதிச்சுனு இருக்கு; அப்பக்கூட மாத்தரய முழுங்கினு எனக்கென்னனு இஸ்கூலுக்கு கெளம்பி போயினே இருக்கு! இஸ்கூல் விட்டு வந்தப்புறம் ஏன்டா கண்ணு லீவு எடுத்துக்கலன்னு அதாண்ட கேட்டா அட்டென்டென்ஸ் புல்லா இருந்தா, அதுக்கொரு சர்ட்டிபிகேட் குடுப்பாங்க செல்வாங்குது! நீ என்னடான்னா சொம்மா ஊரு சுத்திப் பாக்க போனதுக்கோசரம் நாளைக்கு லீவு வேணா போட்டுக்க சொல்லுன்னு பெரிய அக்கற .......ப் பேசுற! ........ நீயெல்லாம் அந்த புள்ளைக்கு ஒரு அப்பன்! ச்சைய்.........!" என்று செல்வா வெறுப்பாக பேச பேச சபாபதிக்கு அவனது பேச்சில் கோபம் வராமல் மிகவும் குற்ற உணர்ச்சியாக தான் இருந்தது.

முழு அட்டென்டென்ஸூக்கும் மகளின் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான கவனிப்பு இருக்கும் என்று நிஜமாகவே அவருக்குத் தெரியாது. வருடாவருடம் அவள் மெடல்கள், கோப்பைகளுடன் வரும்பொழுது அதை அவர் பெரிதாக கண்டுகொண்டதும் கிடையாது. எண்ணிக்கை மூன்றா, நாலா என்று மட்டும் அரைக்கண்ணில் பார்த்து விட்டு அவளுக்கு கடமைக்காக ஒரு கங்க்ட்ராஸ் சொல்லி விட்டு நகர்வதோடு சரி!

இப்போது தன்னை திட்டுபவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் "நீங்க வீட்டுக்குப் போனவுடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணு!" என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டார்.

"பண்றாங்க ஒன்க்கு இன்பாமு! கேக்குற ஒத்த கேள்விக்காச்சு பதில் சொல்றானா பாரு! நம்மளாண்ட தான் சொம்மா ரூல்ஸ காட்டிக்கினு திரியறது! லூசுக்கம்முனாட்டி!" என்று அவரை திட்டியபடி தனது அலைபேசியை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு காரை நோக்கி வந்தான்.

சாம்பவி கார் பார்க்கிங்கில் நின்ற காரில் இருந்து இறங்கி வேகமாக
தனது ஹீல்ஸை கழற்றி காருக்குள்ளேயே போட்டவள் தான்..... அதற்குப் பின் குதிரைக்குட்டி போல் துள்ளி துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டாள்.

"இன்னாம்மே..... ரொம்ப குஜாலாக்கீற போல்ருக்கு?" என்று சிரிப்புடன் கேட்டவனின் கையைப் பற்றிக் கொண்டவள்,

"அஆங்பா!" என்று அவனைப் போலவே அவனிடம் பதிலுரைத்தாள்.

"டேய் டாம்பாய்; நான் நைட் டைம்ல பீச்சுக்கு வர்றது இதுதான் பர்ஸ்ட் டைம் தெரியுமா? நான் இன்னிக்கு இங்க என்ன சேட்ட பண்ணுனாலும், நீ அத ரூல்ஸ் கிட்ட போட்டுக் குடுக்கக்கூடாது. ப்ராமிஸ் பண்ணு!" என்று கேட்டவளிடம்,

"இது வேறயா?" என்று கேட்டு சிரித்துக் கொண்டவன் அவளது உள்ளங்கையில் கிள்ளி ஒரு அடியைப் போட்டான். கடனே என்று ஒருவருக்கொருவர் இப்படி உள்ளங்கையில் கிள்ளி ஒரு தட்டு தட்டிக் கொள்வது தான் அவர்களைப் பொறுத்தவரை சத்தியம்!

"கண்ணு.... ஒநைனாவாண்ட நான் எத்தையும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கியிருக்க! அதுனால நீ இன்னிக்காச்சு செல்வா சொல்ற பேச்ச கேக்கணும். தண்ணியில
ரொம்ப ஆட்டம் போடக்கூடாது! நான் எப்பக் கூப்டுறனோ, அப்ப விறுவிறுன்னு எம்பின்னால நீ வந்துனே இருக்கணும் தெர்தா?" என்று அதட்டலாக கட்டளைக் குரலில் அவளிடம் கேட்டவனிடம்,

"ம்ஹூம்......! நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது! போடா!" என்று சொல்லி அவனுக்கு அழகு காட்டினாள் சாம்பவி.

"ம்ம்ம்..... மிஸ்டர் வாகை செல்வன்!
நீங்க மெரினாவுக்கு புதுசா இல்ல பழக்கப்பட்டவர் தானா? உங்களுக்கு மெரினாவோட ஸ்பெஷாலிட்டிஸ்ல ஏதாவது தெரியுமா?" என்று கேட்டபடி அவனுடன் நடந்தவளிடம்,

"ஆங்..... நாங்க மெரினாவுக்கு புத்செல்லாம் இல்ல; அவளோட அக்கா பசங்கதே! கேக்குற கேள்வியப் பாரு; அரடிக்கட்டு......!
பொறந்ததுல இருந்து இந்த பீச்ச பார்த்துனு இருக்கோம்! இத்தோட
ஸ்பெஷல் டீ, சாதா டீ அல்லாம்
தெரியாம இருப்பமா? இங்க துன்றதுக்கு எக்கச்சக்க ஐயிட்டம் கெடைக்கும் தெரியுமா ஒன்க்கு? கடல்ல ஒரு ஆட்டம் போட்டுக்கினு வந்து மொளகா பஜ்ஜி, சோளம், சுண்டலு, கேன் டீ, கைமுறுக்கு, பஞ்சுமுட்டாயி, மாங்காபத்த, கரும்புச்சாறு, மீனு கோழி வறுவலு,
ஐஸ்க்ரீமு, பாப்கானு இப்டி ஒண்ணு மாத்தி ஒண்ண வாங்கி முழுங்கிக்க வேண்டியதுதான் நம்ம வேல! இங்க
வர்ற ஜனங்க கூட்டத்த நம்பி அம்மாம்பேரோட பொழப்பு இருக்குது தெர்தா.....!
தவுலத்தா இருக்குறவன் குதிர மேல சவாரி போலாம்; பலூன சுடலாம்..... இல்ல அத்தெலாம் நம்மள மாதிரி ஆளுக்கு செட்டாவாதுன்னு சொல்ற சொங்கி மங்கியெல்லாம் நம்ம ஸ்டாருங்க கூட நின்னு போட்டோ எடுத்துக்கலாம்; எனக்கு ஒரு மைமா அம்புட்டவுடனே நாங்கூட அத்தோட ஜோடியா நின்னு நம்ப தல கூட போட்டோ புடிச்சிக்கனும் நென்ச்சு வச்சுருக்கேன்! அப்பால இங்க இந்த காவிச்சாமி விவேகானந்தரு இல்ல..... அவரோட வூடு பக்காத்தால தான்கீது! அப்டிக்கா லெப்ட்ல கன்னிமாரா லைப்ரரிகீது! ஒன்னையல்லாம் அங்க உட்டுனு வந்தா நாபூரா ஒக்காந்துனுருப்ப! அப்பால நம்ம வள்ளுவரு கோட்டம், காமராஜர் செல, வரிசையா சமாதிங்க, ஜார்ஜூ கோட்ட இப்டி அல்லாங்கீது! ஒவ்வொன்னா பார்த்துனே போலாம்!" என்று சொன்னவனுடன் இணைந்து நடக்காமல் அப்படியே நின்று ஒரு முறைப்பான பார்வை பார்த்து வைத்தாள் சாம்பவி.

திடீரென அவள் நிற்கவும், அவளது முகத்தைப் பார்த்த செல்வா அவளிடம் உச்சுக்கொட்டிய படி,

"சும்மா ஒனக்கு தான் முட்டக் கண்ணுருக்குன்னுட்டு என்னாண்ட எப்பவும் மொறச்சுனே இருப்பியா நீ? இப்ப இன்னாத்துக்கு என்னைய மொறச்சுனு இருக்க?" என்று கேட்டான்.

"மெரீனா பீச் உலகத்தோட இரண்டாவது நீளமான பீச்; இதோட நீளமே 13 கி.மீ. இண்டியாவோட ஈஸ்ட் கோஸ்ட் ஏரியாவுல இருக்குற மெரீனா, சென்னையோட கடல்
எல்லையை ட்ராப்ட் பண்ற மாதிரி அமைஞ்சிருக்கு. இது தான் இண்டியாவுல மிக நீளமான நகர்ப்புற கடற்கரை. மும்பை ஜுகு பீச் மாதிரி பாறைங்களா இல்லாம, மெரீனா மணற்பாங்காக உள்ளது. 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு இங்க பெர்மிஷன் இல்லாம போராட்டம் நடத்துறதுக்கு சென்னை சிட்டி போலீஸ் அலவ் பண்றதில்ல! பாரு,
நான் ஆறு பாயிண்ட் சொல்லியிருக்கேன்! நொச நொசன்னு பேசுனாலும் நீயும் ஆறு பாயிண்ட் சொல்லியிருந்தாலும், அது எதுவுமே இன்ஃபர்மேட்டிவா இல்லாத பஜ்ஜி, பாப்கார்ன், பலூன் ஷுட்டிங், ஹார்ஸ் ரைடிங் மாதிரியான விஷயம் தான்! மெரினாவோட ஸ்பெஷாலிட்டிஸ்னு நீ சொன்ன ஆன்ஸருக்கு நான் உனக்கு குடுக்குற மார்க் ஸீரோ! சரி..... மைமான்னா என்ன?" என்று கேட்டவளிடம் நரநரவென கோபத்தில் பல்லைக் கடித்தவன்,

"அத்த ஏன் என்னாண்ட கேட்டுனு இருக்க? அத்தையும் ஒன்னோட பள்ளிக்கூட சிலபஸூல தேடிக் கண்டுபிடி..... பே!" என்று சொல்லி விட்டு அவள் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டு அவளுக்கு இரண்டடி முன்னால் வேகமாக நடந்தான்.

"டேய்..... பாப்பாவ தனியா உட்டுட்டு நீ எங்கடா வேகமா போற? நான் எங்கயாவது தொலஞ்சு போயிருவேன்டா; கையப்புடிச்சு என்னைக் கூட்டிட்டுப் போ!" என்று அவன் பின்னே ஓட்டமாக ஓடிக் கொண்டே சொன்ன சாம்பவி திடீரென்று அவன் நிற்கவும் அதை எதிர்பாராமல் அவனது பரந்த முதுகில் முட்டிக் கொண்டு அவளும் நின்றாள்.

"இந்தா.... நம்ம லிமிட்டுக்குள்ள வந்துக்குனோம்! எங்கூட்டாளிங்க எப்ப வேணும்னாலும் நம்மள கண்டுக்குட வந்துடுனுவாங்க. அவனுங்கள முன்னால வச்சிக்கின்னு என்னைய நீ ஏதாச்சு கலாய்ச்ச..... வீட்டுக்குப் போனதுக்கப்புறம் உன்னய கும்மிருவேன் பாத்துக்க!" என்று சொல்லிக் கொண்டிருந்தவனை,

"டேய் ஒலக்க.....!" என்று பெரிதாக கத்திய படி செல்வாவின் வயதொத்த நான்கு பையன்கள் மூச்சிரைக்க அவனருகில் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டனர்.

"டேய்........ போனி, தவல, குண்டான்,
சம்படம்! நல்லாயிருக்கீங்களாடா? ஒங்க அல்லாரையும் கண்டுக்கினு எம்மா நாளாச்சுடா?" என்று நால்வர் அணிக்கு நடுவில் நின்று கொண்டிருந்த செல்வா சொல்லி அழைத்த அவர்களுடைய பெயர்களை கேட்டு சாம்பவிக்கு மிகவும் சிரிப்பு வந்தது. இவனுடைய நிக்நேம் உலக்கை போலிருக்கிறது.

"திருட்டுப்பய...... இத்தன நாள் இதையும் நம்ம கிட்ட சொல்லாம ஹைட் பண்ணி வச்சுருக்கான்!" என்று நினைத்து சிரித்த முகமாக அவனருகில் நின்று கொண்டிருந்தாள். எப்போது வேண்டுமானாலும் செல்வா அவர்களிடம் அவளைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கலாம் அல்லவா? அதற்காக தயாராக காத்திருந்தாள்.

ஒருவரை ஒருவர் தோளில் கைபோட்டு அணைத்தபடியே ஒரு வட்டத்தை உருவாக்கி மகிழ்ச்சிப் பெருக்கில் பாடி குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

"டேய்..... நானும் வர்றேன்! என்னையும் சேர்த்துக்கோங்கடா!" என்று அவர்களைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த சாம்பவி செல்வாவின் இடதுகையை அவனது நண்பனின் தோளில் இருந்து பிரித்தெடுத்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து தானும் குதிக்க ஆரம்பித்து விட்டாள்.

"ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்......
ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்......
எங்கள பார்த்த தமன்னா
மயங்கி விழுந்துரும்
ஆம்! உண்மையிங்க
நயன்தாராவும் கூட விழுந்துரும்
இப்போ புது நடிகை
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்......!"  என்று பாடிக் கொண்டிருந்தவர்கள் திடீரென செல்வாவை உடல்பகுதியில் இருவர், கால் பகுதியில் இருவரென தூக்கிக் கொண்டு கடல் நீரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

"ஹே..... சென்ஸ்லெஸ் கைய்ஸ்! செல்வாவ விடுங்கடா; அவன என்னடா பண்ணப் போறீங்க?" என்று கேட்டபடி அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அவன் இடுப்பில் தொற்றிக் கொண்டு பாதி தொங்கியும், பாதி நடந்தும் என அவ்வப்போது கால்களை தரையில் இழுத்தபடி வந்தாள் சாம்பவி.

"ஐய..... கண்ணு; இவனுங்க என்னை தூக்கினு போறது கூட ஒன்னியும் ஆவல; நீதாம்மே என்ன கிச்சுலிக்கா காமிச்சுனு இருக்க! போம்மே அந்தாண்ட!" என்று உடலை ஒருவாறாக நெளித்தபடி அவளிடம் சொன்னவனிடம் கோபமாக,

"போடா பன்னி! உன் ப்ரெண்ட்சோடவே போய் மண்ணுல உருளு போ!" என்று சொல்லி தன்னுடைய பிடியை தளர்த்தி விட்டு அவனிடமிருந்து விலகி ஓரமாக நின்றாள் சாம்பவி.

கால்மணி நேரம் நண்பர்கள் ஐவரும் மண்ணில் புரண்டு, 
பின் தண்ணீரில் மூழ்கி எழுந்து, விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தவாறு லேசான ஈர மண்ணில் அமர்ந்து தன்னுடைய பெயரை விதவிதமான டிஸைனில் எழுதி எழுதிப் பார்த்து விட்டு பின் அதை அழித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

"மச்சி..... ஒன்னிய மட்டும் தனியா உட்டுனு எங்க நாலு பேருக்கும் கைஒடஞ்ச ஃபீலிங்குடா! அந்த பேமானிப்பய வேலையில இருந்து வெரட்டி உட்டுக்குன்னா வூட்டுக்கு எப்டி காசு குடுக்குறதுன்னு யோசிச்சுனு தான்டா ஒன்னைய அந்த ஜெய்லர் வூட்டாண்ட பாக்க வர்ல! நல்லாயிருக்குறல்ல? ப்ரச்சன ஒன்னியும் இல்லயே?" என்று கேட்டவர்களிடம்,

"அதெல்லாம் ஒன்னியும் இல்லங்கடா! என்னைய மாதிரி நீங்கலா என்ன ஒண்டிக்கட்டயா? அவஅவனுக்கு ஒரு குடும்பங்கீது! ஏதோ கைக்கும், வாய்க்கும் இழுத்துப் புடிக்கும்னாலும் சம்பள துட்டு இல்லாத மாசப் பொழப்ப ஓட்ட முடியுமா நம்பளால? அதுனால பல்லக் கடிச்சிக்கினு அவனாண்டயே வேல செய்ங்கோ! கொஞ்ச நாள்ல நாம ஒண்ணா சேர்றதுக்கு எத்தாவது வழி கெடக்குதான்னு யோசிப்போம்!" என்று சொன்னவனிடம்,

"சர்தான் தோஸ்து!" என்று ஒரே குரலில் அனைவரும் சொன்னார்கள்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro