💚 இணை 10
"ஹே.... திவ்ஸ்! யாரோ அழறாங்கன்னு சத்தம் கேட்டு எழுந்திரிச்சு வந்தா பர்த்டே பேபி நீ தானா இங்க அழுதுட்டு இருக்க? என்னாச்சுடா?" என்று அந்த குட்டிப் பெண்ணிடம் கேட்ட சாம்பவியின் கேள்வி தன் காதிலேயே விழாதது போல் தலை கவிழ்ந்து தன்னுடைய அன்னையின் மடியில் படுத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் திவ்யா.
"தீபக் என்ன ஆச்சு உங்க சிஸ்டருக்கு? ஏன் திடீர்னு அழுறா?" என்று தன் தங்கையின் பக்கத்தில் நின்று அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த தீபக்கிடம் கேள்வி கேட்டாள் சாம்பவி.
தீபக் சாம்பவியிடம் ஏதோ பேச முயலும் முன் அவனுக்கு முந்திக் கொண்ட செல்வா பவியிடம்,
"இந்தாதான் ரூம சுத்தியும் வட்ட வட்டமா ஒக்காந்துக்கினு மெதுவா பேசினு இருக்கானுவளே?
அவனுங்க பேசுறது ஒங்காதுல உழலயாம்மே? இந்த பாப்பா வெட்டப்போற கேக்கு ஒடஞ்சி போச்சாம்! அத்தினி பெர்சா கேக்க வாங்கினு வரச்சொல அத வச்சுனு இருக்குற டேபிளு ஒழுங்கா நிக்குதா நிக்கலயான்னு பாக்க தேவல்ல? பொத்துன்னு உழுந்து கேக்கு நாஸ்தாயிடுச்சு!" என்று அவளுக்கு விளக்கும் பாவத்தோடு செல்வா பேசிக் கொண்டிருக்க தீபக் அவன் பேசியதைக் கேட்டு கடுப்பாகி அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.
"ஷ்ஷ்.... வாய மூடு செல்வா! உங்கிட்ட நான் ஏதாவது கேட்டனா? அமைதியா போயி சேர்ல உக்காரு போ!" என்று சொல்லி அவன் வாயை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் சாம்பவி.
"ஐய..... நீ சொம்மா அல்லாத்துக்கும் என்னயே திட்டு வார்டனம்மா! கையில வச்சுனு இருக்குறத இப்டிக் கொண்டா நம்மளாண்ட!" என்று கேட்டவாறு அவள் கையில் வைத்திருந்த கிப்ட் பார்சலை வெடுக்கென பறித்தவன் திவ்யாவின் அருகில் சென்று,
"பாப்பா.... எல்லாரும் ஒனக்கு ஆப்பி பர்த்துடே சொன்னதுக்கு அப்பால தான அவங்க கையில வச்சுனுருக்குற கிப்ட்ட குடுப்பாங்க! ஆனா ஒம்ப்ரெண்டு அக்கா ஒனக்கு முதல்லயே கிப்ட்ட குடுக்கறதா நென்ச்சுக்க! இந்தா இத்த வாங்கினு இந்த கிப்ட்டு உனக்கு புட்சுருக்கான்னு பாரு!" என்று சொன்னான்.
தன் மடியில் சாய்ந்து அழுது கொண்டிருந்த மகள் கிஃப்ட் என்றதும் லேசாக தலையை உயர்த்தி தன்னிடம் யார் பேசியது என்று ஓரக்கண்ணால் பார்க்க, இப்போது அவளை சமாதானப்படுத்துவது அவளுடைய தாய்க்கு மிகவும் எளிதான வேலையாகிப் போனது.
"எந்திரிடா செல்லம்..... அண்ணா
சாம் சிஸ்ஸிமாவோட கிப்ட்ட உங்கிட்ட தர்றாங்க பாரு! செக் திஸ் அவுட் அண்ட் கிப்ட் எப்டியிருக்குன்னு சாம் சிஸ்ஸிமாட்ட சொல்லு! கம் ஆன்.... கெட் அப்!" என்று சொல்லி திவ்யாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவர், தன் மகனிடம் இன்னொரு கேக் இப்போதைக்கு கிடைத்து விடுமா என்று தந்தையிடம் கேள் என்று சொல்லி தீபக்கை மாடிக்கு அனுப்பினார்.
செல்வா நீட்டிய கிப்ட்டை வாங்கி தன்னுடைய மகளிடம் கொடுத்தவர்,
"தேங்க்யூ தம்பி! எப்டி இவள சமாதானப்படுத்துறதுன்னே தெரியாம ரொம்ப டென்ஷன்ல உட்கார்ந்துருந்தேன். அப்பக்கூட இப்டி ஒரு ஐடியா எனக்கு ஸ்ட்ரைக் ஆகல..... நீ சாம்க்கு என்ன ரிலேஷன்ப்பா?" என்று கேட்டவரிடம் செல்வா வேகமாக சாம்பவியின் பக்கம் கை காட்டினான்.
அவனே அந்த அம்மாவிடம் பேசி இருக்கலாம் தான்! ஆனால் அதற்கும் பக்கத்தில் இருப்பவள் திட்டுகிறாளோ என்னவோ என்ற பயத்தில் அந்தக் குழந்தையின் அருகில் சென்று குனிந்து அவள் முகத்தருகே அமர்ந்து கொண்டான்.
"ஹாய்...... சாம்பவி நீ தானம்மா? எங்க சாம் சிஸ்ஸி அப்டி, இப்டின்னு இந்த வாலு நிறைய உன்னைப் பத்தி பேசியிருக்கா. நைஸ் ட்டூ மீட் யூ! தீபக்கோட க்ளாஸ்மேட் தான நீ? பை த வே இந்தப் பையன் வந்ததுல இருந்து ஒருநிமிஷம் சும்மாயில்லாம பேசிட்டே இருக்கான்? தனியா திவ்யாவ கம்பர்ட் வேற பண்றான்? இவன் யாரு உனக்கு?" என்று சாம்பவியைப் பார்த்து அவளிடம் திவ்யாவின் தாய் கேட்டார்.
"ஹலோ ஆன்ட்டி! ப்ளீஸ் ட்டூ மீட் யூ.... நான் சாம்பவி தான் ஆன்ட்டி; தீபக்கும் நானும் ஸேம் க்ளாஸ்ல தான் படிக்கிறோம்; இவன் என்னோட கஸின்; பேர் செல்வா
எங்க வீட்டுக்கு வந்துருந்தான்; ஸோ இந்த பங்ஷனுக்கு கூட்டிட்டு வந்தேன். கொஞ்சம் மேனர்லெஸ்ஸா பிஹேவ் பண்ணுவான்; நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி!" என்று மன்னிப்பை வேண்டும் பாவத்தில் பேசியவளிடம் சிரிப்புடன்,
"ஏன் சாம்பவி... இந்த ஹால்ல இப்போ மொத்தம் நூறு பேர் இருப்பாங்க! வெல் மேனர்டு பீப்பிள்னு அடையாளம் காட்டக்கூடிய எல்லாருமே ஐயோ பர்த்டே கேக் உடைஞ்சிடுச்சாம்; இப்டி ஆகியிருக்கக் கூடாதுன்னு பேசி உச்சுக்கொட்டிக்கிட்டு தான் உட்கார்ந்துருக்காங்க. அதுக்காக நான் யாரையும் தப்பா சொல்லல. பட் இவ்ளோ பேர் இருக்குற கூட்டத்துல உங்கையில நீ வச்சுருந்த கிப்ட்டை பறிச்சு திவ்யாவுக்கு குடுக்கணும்னு தோணுனது இந்த பையன் ஒருத்தனுக்கு தான்..... தீபக் கூட நின்னு வேடிக்கை பார்த்துட்டு தான் இருந்தான்; நீ தான் பாத்தியே..... திவ்யா ஆர் யூ ஹேப்பி பேபி? சாம் அக்காவுக்கும், இந்த அண்ணாவுக்கும் தேங்க்யூ சொல்லுடா!" என்று சாம்பவியிடம் ஆரம்பித்து தன் மகளிடம் வந்து முடித்தார் தீபக்கின் அன்னை.
"அம்மா..... இங்க பாருங்க! சாம் அக்கா எனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்துருக்காங்கன்னு;
LED குஷன் அம்மா! என் போட்டோ போட்டது; ரொம்ப அழகா இருக்குல்லம்மா; நான் இனிமே டெய்லி இதக் கட்டிப்புடிச்சுட்டு தான் படுத்துக்குவேன்!" என்று ஆர்ப்பரித்த அந்த குழந்தையை கன்னத்தில் கைகளை தாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.
"எக்ஸைட்மெண்ட் எல்லாம் நல்லா தான் இருக்கு! ஸே தேங்க்யூ கேர்ள்!" என்று தன் அன்னை நியாபகப்படுத்த திவ்யா சாம்பவியிடமும், செல்வாவிடமும்,
"அண்ணா தேங்க்யூ! சாம் அக்கா தேங்க்யூ!" என்று சொல்லி விட்டு எழுந்து வந்து சாம்பவியை அணைத்துக் கொண்டாள்.
"இப்டி சட்டுன்னு உடைஞ்சு அழக்கூடாது லிட்டில் கேர்ள்! நீ உன் பர்த்டேல போயி ஙேன்னு அழுதத நெக்ஸ்ட் இயர் பர்த்டே வரைக்கும் நியாபகம் வச்சு யாராவது சொல்லிட்டே இருப்பாங்க. ஸோ ஆல்வேஸ் ஸ்டே ஸ்ட்ராங்க்! ஓகே!" என்று திவ்யாவுக்கு அறிவுரை சொன்னாள் சாம்பவி.
"ஜெயா..... ஒருவழியா குட்டிம்மா அழுகைய நிறுத்திட்டாளா? அப்பாடா; கேக் வருதா இல்லையான்னு தீபக்கோட அப்பாட்ட கேளும்மா! கேக் கட்டிங் இல்லன்னா எல்லாரையும் சாப்ட போக சொல்லலாம்!" என்று திவ்யாவின் பாட்டி பொறுமையிழந்த குரலில் சொல்ல அனைவரும் தாங்கள் வாங்கி வந்த கிப்ட்டை எப்போது தருவது என்று பேசிக் கொண்டிருந்தனர்.
"அம்மா.... நானும் இந்த பாப்பாவுக்கு ஒரு பொறந்த நாள் பரிசு கொண்டு வந்தேன்! உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா அத இப்ப நான் இந்த பாப்பாவுக்கு குடுக்கலாமா?" என்று ஜெயா என்று அழைக்கப்பட்ட அந்த பெண்மணியிடம் கேட்டான் செல்வா.
"ஓ.... தேங்க்யூ சோ மச் தம்பி! எதுக்குப்பா கிப்ட் குடுக்குறதுக்கு எல்லாம் இவ்ளோ ஃபார்மலா பெர்மிஷன் கேட்டுக்கிட்டு? உங்கிஃப்ட திவ்யாட்ட குடு!" என்று சொன்னவரிடம்,
"ஒரு தட்டு குடுங்கம்மா!" என்று கேட்டான் செல்வா.
இவன் எதற்காக இப்போது தட்டு கேட்கிறான் என்று தெரியா விட்டாலும் ஒரு ப்ளேட்டை எடுத்து வந்து அவன் கையில் தந்து விட்டு உறவினர்களிடம் சென்றார் ஜெயா.
"பவி.... உன்னாண்ட செல்வா ஒரு டப்பா குடுத்தேன்ல? அத எங்கமே?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டிய சாம்பவி தன்னுடைய ஹேண்ட்பேகில் இருந்து அவன் கொடுத்த எவர்சில்வர் சம்படத்தை அவன் கையில் கொடுத்தாள்.
"பாப்பா.... இங்க வந்து இத்த புடி!" என்று சொன்னவன் திவ்யாவின் கையில் தட்டைக் கொடுத்து விட்டு அவனுடைய டிஃபன் பாக்ஸை திறந்து அதில் அவன் செய்து வைத்திருந்த பால் பேடாக்களை ஒவ்வொன்றாக அடுக்கினான்.
"இது ஒனக்கு ரொம்ப புடிக்கும்னு இந்த சிச்சிம்மா சொல்லி நானே எங்கையால உனக்காக செஞ்சது பாப்பா! இந்த பேடா ஒன்னொன்னுக்கும் நடுவால ஒரு மெழுகுவர்த்திய சொருவிக்க! இந்த பொறந்த நாளுக்கு இதேன் நீ வெட்டப்போற இனிப்பு! நல்லாயிருக்குதா?" என்று கேட்டவனிடம் அரைகுறையாக தலையாட்டிய திவ்யா,
"தேங்க்யூ அண்ணா.....!" என்று சொல்லி விட்டு தன்னுடைய அன்னையின் அருகே சென்றாள்.
"டேய்.... உன்னைய யாரு இப்போ இப்டி ஷோ காட்டச் சொன்னாங்க? என்ன திவ்ஸ இம்ப்ரெஸ் பண்ண பாக்குறியா நீ?" என்று கேட்டவளிடம் அவளைக் குத்துபவன் போல் நாக்கை மடக்கிக் கொண்டு செய்கை செய்தவன்,
"சொம்மா இந்த வூட்ல வந்து சோத்த அமுக்கினு போவ சொல்றியா? அந்த பாப்பாவுக்கு கிப்ட்டு ஒன்னியும் வாங்கிட்டு வர தேவல்ல? அதான் நம்ம மூணாவது வீட்டு மாலினி அக்காவாண்ட வத்தக்குழம்பு செஞ்சு குடுத்து இந்த பேடாவ எப்டி செய்யறதுன்னு கத்துக்குனேன்......! ஷோ காட்றாங்களாம்; மூஞ்சி மேலயே
ஒண்ணு வுடப் போறேன் பாரு;
அந்த சம்படமும் நான் காசு போட்டு புத்சா வாங்குனது தான் தெர்தா? நீ ஒஞ்சத்துக்கு கிப்ட் குடுத்தா, நா எஞ்சத்துக்கு கிப்ட் குடுத்துனு போறேன் சிச்சிம்மா!" என்றவனிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு அவனருகில் நின்றாள் சாம்பவி.
புதன்கிழமை ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்வோம் என்று அவனிடம் சொன்னாள் தான்! பேச்சுவாக்கில் அந்தப் பாப்பாக்கு இன்னா சுவீட்டு பிடிக்கும் என்று அவனும் கேட்டான் தான்! ஆனால் அந்த ஸ்வீட்டை மாலினி ஆன்ட்டியிடம் வத்தக்குழம்பை பண்டமாற்று செய்து கற்றுக் கொண்டு அதை செய்து வைத்திருப்பான் என்றோ, இந்த டிஃபன் பாக்ஸை பிறந்த நாள் விழாவின் போது அவனது பரிசாக தருவான் என்றோ சாம்பவிக்கு எள்ளளவு கூட ஐடியா இல்லை.
ஒரு கடை கண்ணி இல்லாத காம் ரெஸிடென்ஷியல் ஏரியா அவர்களுடையது! கேக் வருவதற்கு இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் என்று சொன்ன தீபக்கின் தந்தையிடமும், தீபக்கிடமும் அது வரும்போது வரட்டும் இப்போது நீங்கள் இருவரும் கீழே வாருங்கள் என்று அவர்களை கூப்பிட்டார்கள்.
சாம்பவி மெதுவாக ஒவ்வொரு பால் பேடாவின் நடுவிலும் மெழுகுவர்த்தியை சொருகி வைக்க அனைவரும் மகிழ்ச்சியாக திவ்யாவிற்கு பெரிதாக பிறந்தநாள் வாழ்த்து பாட திவ்யா அந்த பால் பேடாவை வெட்டி தன்னுடைய பதினைந்தாவது பிறந்த நாளை கொண்டாடினாள்.
"ஜெயா..... திடீர்னு எப்டிமா இந்த மில்க் பேடா ஐடியா வந்தது? எங்கருந்து கிடைச்சது..... வர்ற கெஸ்ட்க்கு குடுக்க வீட்ல வாங்கி வச்சிருந்தியாமா?" என்று கேட்ட தன் கணவரிடம்,
"ஸ்பெஷல் தேங்க்ஸ் ட்டூ ஹிம்! இந்த ஸ்வீட்ட வாங்கிட்டு வந்ததும் நம்ம தீபக் க்ளாஸ்மேட் சாம்பவியோட கஸின் தான்! உங்க பொண்ணோட அழுகைய நிறுத்துனதும் அவன் தான்!" என்று சொல்லி தன் கணவரிடம் சாம்பவி மற்றும் செல்வாவை அறிமுகம் செய்து வைத்தார் ஜெயா.
தீபக், திவ்யா, அவர்களுடைய பெற்றோர் இருவர் மொத்தமாக நால்வரும் சேர்ந்து சாம்பவிக்கும், செல்வாவுக்கும் நன்றி சொல்லி விட்டு அனைவருக்கும் கேட்டரிங் மெனுவில் இருந்த ஃப்ரூட் கேசரியை பிறந்த நாள் இனிப்பாக வழங்கினர். அதன் பின்னர் அனைவரும் வரிசையாக திவ்யாவிற்கு கிப்ட் கொடுக்க ஆரம்பிக்க அந்த விழா அதற்கு மேல் சிறப்பாக நடைபெற்றது.
"அண்த்த.....! ஒன்னையத்தான் அண்த்த; என்ன அங்கிட்டும் இங்கிட்டும் பராக்கு பாத்துனு இருக்க!" என்று சொன்ன செல்வாவின் அருகில் வந்து நின்ற தீபக்,
"என்னை தான் கூப்டியா நீ? எதுக்கு கூப்ட?" என்று கேட்டான்.
"எங்க பவிப்பாப்பாவ நான் வூட்ல நல்லா பார்த்துக்குவேன். ஆனா இஸ்கூலாண்ட நீ கொஞ்சம் கவனிச்சுக்குறியா? அது பஸ்ட் மார்க்கு எடுக்கணும்னு நென்ச்சதுன்னா சொம்மா அதுவே எடுத்துட்டுனு போவட்டும்னு உட்ரு! கப்பல் கணக்கட்டா வூடு இருக்குது; ஓநைனாவும், அம்மாவும் நல்ல வலுவான வேலையில வேற இருக்காங்களாம். இதுல நீ தனியா பஸ்ட் ராங்க் வாங்கி இன்னா ஆவப்போவது சொல்லு பாப்போம்! அப்பால வந்தவுங்க அல்லாரும் ஊட்டுக்கு கெளம்பிட்ட பிறகு அந்த உடஞ்ச கேக்க குப்பையில தூக்கி கடாசிடாதீங்க..... சின்ன சின்னதா துண்டு போட்டா நூறு நாயி சாப்டலாம்! ஒங்க ஏரியா தெருநாயெல்லாம் இன்னிக்கு ஒங்க தங்கச்சி பாப்பா பேரச்சொல்லி கேக்கு துன்னுட்டுப் போவட்டுமே...... நான் கரீட்டா தான பேசுறேன்?" என்று தீபக்கிடம் கேட்டான் செல்வா.
அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த தீபக் அவன் எதிரில் வந்து நின்று அவனிடம்,
"ஆக்சுவலி நீ யாரு.....? பவிய பத்தி நீ எதுக்கு இவ்ளோ கேர் பண்ணனும்? நான் எதுக்கு நீ சொல்ற இன்ஸ்ட்ரக்ஷன எல்லாம் கேக்கணும்?" என்று இடக்காக கேட்டபடி செல்வா வாங்கி வந்திருந்த எவர்சில்வர் டிஃபன் பாக்ஸை கையில் எடுத்து அப்படியும் இப்படியுமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro