பூக்களின் சுகந்தத்தில்
இளவேனில் மாலையில்
யாருமற்ற சாலையில்
மோனப் பயனமளிக்கும்
மோகன இன்பத்தில்...
ஆடைகடந்து அதிகாரமாய்
ஆவித் தொட்டுப் போகும்
தென்றலின் ஸ்பரிசத்தில்...
தொட்டிச் செடியழகில்
தொலைந்துக் கொண்டிருக்கையில்
இறைத்த நீர் உரிஞ்சுவதாய்
வேர் பாடும் ராகத்தில்...
மண்ணைத் தொடுமுன்னே
மடியில் விழுந்து
உயிர்த்தொட்டு வழியும்
கள்ளத் துளியின்
செல்லத் தீண்டலில்...
நட்சத்திர நயனங்கள்
இமையாது பார்ப்பதனால்
வெட்கத்தில் முகம் மறைக்கும்
வெள்ளிநிலவின் பேரழகில்...
அலைகள் அரங்கேற்றும்
ஆனந்த நர்த்தனத்தில்...
கரையில் மலர்ந்திருக்கும்
நுரைப் பூவின் பொன்சிரிப்பில்...
காணாத தூரத்தின்
கருங்குயிலின் கானத்தில்..
கிள்ளும்போதும் சிரிக்கின்ற
பூக்களின் சுகந்தத்தில்...
இன்னும் இன்னுமாய்
இயற்கைத் தந்த அதிசயங்களில்
இடம்பெயர்ந்து போகின்றது
இதயம் கொண்ட வலிகளெல்லாம்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro