நிலாப் பொழுதுகள்
நிலவில்
ஒரு மாளிகை உண்டு
அங்கு
நான் வாழ்ந்ததுண்டு..
போன யுகத்தில்
என் விரல் கலைத்த மணல்கள்
இன்னும் நிலவில் , சுவடுகளாய்...
நேற்று
நிலவில் நான் தூவிய விதைகள்
இந்நேரம்
நட்சத்திரங்களாய் முளைத்திருக்கும்...
வெள்ளை நுரையாடை
தேவதையொருத்தி
என்னோடு விளையாட வருவாள்
முழுமதி நாட்களில்...
புதுநிலவு நாளில் மட்டும்
தோன்றி மறையும் நீரோடையில்
யாருக்கும் தெரியாமல் நான்
பூமிக்கும் சூரியனுக்கும்
சென்று வந்ததுண்டு...
நட்சத்திரம் உதிரும் பொழுதுகளில்
யாழ் மீட்டும்
என் மாளிகைப் புறாக்கள்,
எங்கிருந்தோ சில
மரகதக் கற்களைச்
சேமித்து வைத்திருக்கின்றன
என் அலங்காரத்திற்காய்...
பறவைகள் பூக்கும் மரத்தில்
இரண்டு மஞ்சள் நிற
வண்ணத்துப் பூச்சிகளைக்
கொய்து வைத்திருந்தேன்
நான் விளையாட...
என் பாதங்களடியில்
வானவில் பூக்கும்
நாட்களில் மட்டும்
அமிர்தம் சுரக்கும்
கிணறொன்று உண்டு
என் மாளிகைத் தோட்டத்தில்...
நிலவு சிவந்துவிடும்
பொழுதுகளில் மட்டும்
என் வெண் புரவியோடு
நிலவின் மேடுகளேறி
நான்
ஒளிந்து கொள்வதுண்டு...
கிரகங்களை வீழ்த்திய என்னவன்
என் விரல் பிடித்து
என்னை
இங்கேயே காத்திருக்கும்படி
சொல்லிச் சென்றிருக்கிறான்...
குளிர் பொழியும் காலங்களில்
கிழக்கு நோக்கிச்
செல்லும் பறவையொன்று
என்னவனின் வருகையைச்
சொல்லிச் சென்றது...
பிறையுடுத்திய நாட்களில்
உள்ளங்கைகளில்
விண்மீன்கள் ஏந்திக் காத்திருக்கிறேன்
மீண்டுமொரு முழுமதிக்காய்...
முன்பொருநாளில்
நிலவில்
ஓர் மாளிகை இருந்ததுண்டு
அங்கு
நான் வாழ்ந்ததுண்டு
நிலவின் ராணியாய்...!!!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro