அத்தியாயம் - 28
சதுரங்க ஆட்டத்தின் முன்னாள் அமர்ந்திருந்த உதயின் எதற்கும் அலட்டாத தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஈஸ்வரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், வளமை மாறாமல் மனதில் குரூர எண்ணங்கள் பல தோன்றி மறைந்தன என்பது அலைபாயும் அவர் கண்களிலே தெரிந்தது.
"என்ன உதய் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல. ஆபீஸ்ல பேசிருக்கலாமே எதுக்கு இவ்ளோ தூரம் நீ அலையனும்?" அக்கறையுள்ள மாமனாய் மருமகனிடம் வினவியபடியே அவனுக்கு எதிரில் வந்து தானும் அமர்ந்தார்.
"இங்க தான் கொஞ்சம் வேலை இருக்கு... ஆபீஸ்ல பேசுற விசயமும் அது இல்லையே" - உதய்
"அப்டி என்ன உதய் நீ பேசணும்...?"
"இருபத்தி அஞ்சு வருசமா அம்மா அப்பா காசுல கொஞ்சம் கூட கூசாம சாப்டுட்டு இருந்தவனை தன்னோட பொண்டாட்டிக்காக ஒருத்தர் மதிச்சு வேலை குடுத்தா... அந்த பிச்சைக்கார பயன், சோறு போட்ட வீட்டுக்கே துரோகம் பன்றான்... இவன் எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறானுகளா இல்ல வேற எதையாவது கரைச்சு குடிக்கிறானுகலானு தெரியல"
நக்கல் வலிந்து ஓட ஓட பேசியவனைத் தீயாய் முறைத்தவர், "உதய்..." பற்களைக் கடித்து அடக்க முயன்றார்.
"இருங்க இருங்க இன்னும் முடிக்கல நான்" மேலும் தொடர்ந்தான், "சரி ஆயிரம் லட்சம்-னு அடிச்சதோட நிறுத்துச்சா அந்த அன்னக்காவடி? இல்ல... அந்த எச்சைக்கு போரா போரா மாதிரி குளு குளு-னு தீவு வேணுமாம்"
மருமகனின் வார்த்தை நீண்டு கொண்டே செல்ல கழுத்தோடு ஒட்டியிருந்த சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்தார்... மூச்சு முட்டும் எண்ணம் அவருக்கு.
"அது தான் உங்களுக்கு ஏதாவது தீவு விலைக்கு வருமான்னு கேக்க வந்தேன்"
"என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா உதய்?" கடுகும் எண்ணெய்யுமாய் வெடித்தது அவர் முகம்.
"ஏன் தெரியாம? சாப்பிட்ட சாப்பாடை எப்படி செரிக்கிறதுன்னு தெரியாம அடுத்தவன் குடிய கெடுக்குறதுக்கு வித விதமா யோசிக்கிற ஒரு திருட்டு காபோதி முன்னாடி கால் மேல கால் போட்டு தெளிவா... நிதானமா... தைரியமா பேசிட்டு இருக்கேன்"
சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவர், "என்ன டா வரம்புக்கு மீறி பேசுற? இப்ப நினைச்சா கூட உன்ன அஞ்சே நிமிசத்துல தூக்க முடியும்" சீற்றம் அடங்க மாட்டாமல் அலையாய் பொங்கியது அவர் மனம்.
தவற்றை மறைக்க கோவம் கொண்டு திரையிட முயன்றார் அந்த பெரிய மனிதர். "யோவ் எதுக்கு யா இந்த வயசான காலத்துல விபரீத ஆசையெல்லாம் உனக்கு வருது வந்து ஒக்காரு" இருந்த கொஞ்ச மரியாதையும் வாசல் வழியே பறந்து சென்றது.
"வெளிய போ டா. உன் அப்பாகிட்ட நான் பேசுகிறேன்... என்னமோ நீ உன் காச எனக்கு குடுத்த மாதிரி இந்த ஆடு ஆடுற?" - ஈஸ்வரன்
"என் அப்பாகிட்ட என்ன என் அம்மாகிட்டயே பேசு... ஆனா யார் பேச்சையும் கேக்குற மூட்ல நான் சுத்தமா இல்ல. வாயேன் ஜெயில்கு போறதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடிறலாம்"
சதுரங்கத்தைக் காட்டி அன்று நிகழ்ந்த அத்தனையும் உனக்குத் தான் என்று நினைவூட்டினான் உதய் மாதவன். அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது, எத்தனை நாட்களாய் நான் அவனை ஏமாற்றவில்லை, இவன் தான் தன்னை ஏமாற்றியுள்ளான் என்று.
"என்ன பத்தி தெரியாம என்கிட்டே மோதுற உதய்... வேணாம். நீ நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு என்னால உன்ன அடிக்க முடியும், தொழிலா இருந்தாலும் சரி சொந்த வாழ்க்கையா இருந்தாலும் சரி" அவர் எச்சரிக்கை வார்த்தைகள் சிரிப்பூட்டியது உதய்க்கு.
"நெருப்பு கூட விளையாடுறதுன்னு தெரிஞ்சு தீ காயத்துக்கு பயந்துட்டு இருக்க முடியுமா? நீ உன் கேம தாராளமா ஜெயில்ல இருந்து ஆடு மாமா. நான் வெளிய நின்னு சோக்கா உனக்கு கை தட்றேன்" அந்த எள்ளல் பார்வையும், திமிரான பேச்சிற்கும் தானே தன்னையே அவன் முதல் எதிரியாய் மாற்றி நின்றார், இப்பொழுதும் அவர் வார்த்தைகள் அவன் மேல் முடிவில்லா வன்மத்தை ஆழமாய் வேரூன்றி வைத்தது.
"நீ இங்க தான் இருக்கியா?" வாசலிலிருந்தே கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தான் விஷ்ணு, "உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு தேவையில்லாம மாமா மேல பலியை போடுற?"
வீட்டில் நடந்தவற்றைத் தந்தை மூல கேள்வியுற்றவன் வேகமாக மாமனைப் பார்த்து சமாதான புறாவைப் பறக்க விட ஈஸ்வரன் வீட்டிற்கு வந்த பொழுது வாகாய் சகோதரனையும் பார்த்துவிட்டான். அவன் பின்னால் ஹரி தயக்கத்தோடு உள்ளே வர, உதயைப் பார்த்ததும் கூச்சம் விலகி திண்ணக்கமாய் உள்ளே நுழைந்தான்.
"வாடா உத்தம புத்திரா... உன் மாமா-கு சொம்பு தூக்க ஆள் இல்லையே-னு இப்ப தான் நினைச்சிட்டு இருந்தேன்... சரியா வந்துட்ட" சகோதரனையும் விடவில்லை உதய்... என்னை நம்பாமல் வெறுப்பவர்களை நானும் அதே இடத்தில் தான் நிறுத்துவேன் என்ற சவடால் தான் அது.
"உன்ன மாதிரி ஒருத்தனுக்கு பக்கத்துல நிக்கிறதுக்கு, இவருக்கு சொம்பு தூக்கலாம்" - விஷ்ணு
"சரியான பாயிண்ட்" இளக்காரமாக வந்தது உதயின் ஆர்வமில்லா பேச்சு.
"அப்டி என்ன தான் பணத்தை மட்டுமே வச்சு வாழ போற? சொந்தம் வேணாமா? உன் தம்பி வேணாம், தாய் மாமா வேணாம், அப்பா வேணாம்... எதுக்கு இப்டி அலையிற?" எரிச்சல் மண்டி கிடந்தது விஷ்ணுவின் குரலில்.
"பேச நேரம் இல்ல தம்பி சார்... உன் மாமாவைத் தாராளமா போய் கொஞ்சி முத்தம் குடுத்துகோங்க... இன்னும் சரியா ஒரே நிமிசத்துல அந்த சந்தர்ப்பம் கிடைக்காம போய்டும்" சட்டமாய் இந்த இல்லத்திற்கே தான் தான் உரிமையாளன் போல் அமர்ந்து மாமனையும் சகோதரனையும் பார்த்தான்.
அவன் பேசுவது புரியாமல் உதயை முறைத்து ஈஸ்வரன் அருகில் சென்ற விஷ்ணு, "என்ன மாமா அப்பா என்ன என்னமோ சொல்றாங்க..."
"எல்லாமே பொய் மாப்பிள்ளை, நான் கொஞ்சம் அடிச்சேன் தான் இல்லனு பொய் சொல்ல மாட்டேன்... அதுவும் முன்னாடி தான். எல்லாமே இவன் பண்றது, தேவையில்லாதது எல்லாம் என் மேல தூக்கி போடுறான்" உதய்யை கை காட்டினார் ஈஸ்வரன்.
விஷ்ணுவும் திரும்பி உதய்யை பார்த்து முறைக்க, அருகிலிருந்த சொம்பை எடுத்துக் காட்டி வேண்டுமா என்றான் நிதானமாக. ஏதோ உதய் மேல் இருந்த மரியாதை நிமித்தமாக விஷ்ணு அமைதியாக இருந்தான் இல்லையெனில் இப்பொழுதிருக்கும் கோவத்திற்கு ஒரு குத்துச்சண்டையே நிகழ்ந்திருக்கும்.
"யாருக்கு மாமா தெரியும் அவன் மேல இருக்க தப்ப மறைக்க உங்க மேல பலியை போடுறான் போல"
விஷ்ணுவின் வார்த்தை உள்ளுக்குள் மனதை உடைத்தாலும் வெளியில் எதையும் காட்டாமல் நிர்மலமாக முகத்துடன் ஒரு அறைக் கதவில் நின்று கண்ணீருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனின் மனைவியை பார்த்தான் உதய். மாமன் எப்படியோ, ஆனால் அத்தை உண்மையான பாசமுடையவர்.
"உண்மையா ண்ணா எல்லாம்?" அருகில் வந்து நின்று கேட்டான் ஹரி.
சகோதரனின் குரலை கேட்டு அத்தையிடம் கண்களை எடுக்காமல், "ஒருத்தர் செய்ற தப்பு மொத்த குடும்பத்தையும் பாதிக்கிது பாத்தியா?" வருத்தமாய் கூறினான். ஹரி யோசிக்காமல் ஈஸ்வரன் மனைவி இருந்த இடத்திற்கு சென்றான்.
"எதுவும் யோசிக்காதிங்க அத்தை..." - ஹரி
"எனக்கு யோசிக்க எல்லாம் எதுவும் இல்ல ப்பா, அவர் பண்ண தப்பு அப்டி. எனக்கு கவலை எல்லாம் என் பொண்ணோட வாழ்க்கைய பத்தி தான்... உதய் கண்டிப்பா இனி எங்கள ஏத்துக்க மாட்டான். அவன் பேச்ச தானே உங்க வீட்டுலையும் எல்லாரும் கேப்பாங்க?" தாயின் கவலை பெரிதாக இருந்தது.
"நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம் உங்க பொண்ணு விஷ்ணுவ லவ் பண்ணல, அவ வேற ஒரு பையன லவ் பான்றா... விஷ்ணு-கு உங்க பொண்ணு மேல ஆர்வம் எதுவும் இல்ல. அவ சந்தோசத்தை மாமா ஆசைக்காக கெடுத்துடாதீங்க"
மகளை பற்றிய அதிர்ச்சியிலிருந்து அவர் மீண்டு வரும் முன்னே பரபரப்பாக பத்து பதினைந்து பேர் வீட்டிற்குள் நுழைந்தார். வந்த உடனே வீட்டில் இருந்த அனைவரையும் வரவேற்பறையில் அமரவைத்து வீட்டையே புரட்டி போட்டு சோதனையில் ஈடுபட்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
"நீ தான் இதுக்கு எல்லாம் காரணமா?" பற்களை கடித்து கோவமாக கேள்வி எழுப்பினான் விஷ்ணு சகோதரனை முறைத்துக்கொண்டு.
அவன் அருகில் அமர்ந்திருந்த ஈஸ்வரனுக்கு தெரியுமே, கண்டிப்பாக இவனை தவிர வேறு எவரும் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள் என்று, ஆனால் சகோதரர்கள் வார்த்தை போரை கேட்கும் நிலையில் அவர் இல்லை... மனம், சிந்தனை அத்தனையும் எவ்வளவு சொத்துகள் தேறும் என்ற கணக்கில் பிரண்டுகொண்டிருந்தது, அவருடைய பங்கு, சம்பளம் என்று வைத்து பார்த்தால் தன்னிடம் இருக்கும் சொத்துகளில் கால் வாசி தானே மிஞ்சும்.
நல்லவேளை ஜெர்மனில் வாங்கிப்போட்ட சொத்துகளின் பத்தரங்கள் ஜெர்மனிலே வைத்து வந்தது கூட ஒரு விதத்தில் நல்லது தான் என்ற சிறு தெம்பும் வந்தது, அதோடு சில கணக்குகள் அவருடைய இரண்டாம் வீட்டில்(சின்ன வீடு) உள்ளது. ஆனால் அடுத்த கவலை, இனி இவனுடைய அலுவலகத்தினுள் செல்ல முடியுமா? சென்றாலும் இவனை மீறி இனி ஒரு ரூபாய் கூட கை வைக்க முடியாதே... இப்படி வரிசைகட்டி கவலைகள் செல்ல, முகத்தில் அதன் தாக்கம் தெரிந்தது.
"சந்தேகமே வேணாம்" உதய் அலட்டாமல் பதில் கூறினான்.
"உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? இப்படியா ஒரு மனுஷன் மேல அபாண்டமான பலி போடுவ? உன் மேல கொஞ்சம் கொஞ்சம் மரியாதை இருந்ததும் இப்ப சுத்தமா போச்சு... சரியான சாடிஸ்ட். அடுத்தவங்களை காயப்படுத்தி பாக்குறதுல உனக்கு ஏன் தான் இவ்ளோ சந்தோஷமோ தெரியல"
விஷ்ணு மீது உரிமையாய் கோவம் வந்தாலும் ஈஸ்வரன் மீது தான் அதீத ஆத்திரம் உண்டானது. தன்னுடைய சகோதரன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கூட உதய் முகத்தை பார்த்து ஆசையாய் சிரிப்பதும், எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்பதும் என விஷ்ணு விஷ்ணுவாக இருந்தான்.
அதன் பிறகு விடுமுறை நாட்களில் மாமன் அழைப்பை ஏற்று ஜெர்மனி சென்று வந்த பொழுது எல்லாமே தலைகீழாய் மாறியது. என்ன கூறினார், எதை காட்டி உடன் பிறந்தவனை வெறுக்க வைத்தார் என்றெல்லாம் தெரியாமல் குழம்பினான் உதய், அதன் பிறகு ஹரி, பல்லவி, திவ்யா என மொத்தமாய் அவனிடமிருந்து விலகினர்.
"உன்னோட ஸ்பீச்ச கேக்குறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல" - உதய்
"அதான உனக்கு எப்படி நாங்க பேசுறது எல்லாம் கேக்க நேரம் இருக்கும்? பணத்துக்கு பின்னாடியே அலையிறவன் மனுசங்க பேச்ச கேக்க மாட்டியே"
விருட்டென எழுந்து விஷ்ணு அந்த வரவேற்பறையில் அமைத்திருந்த மாடிப்படியில் அமர்ந்துகொண்டான், கோவத்தில் எதையாவது எக்குத்தப்பாக பேசிவிடுவோமோ என்ற பயத்தில். மற்றொரு பக்கம் வருவாய்த்துறை அதிகாரிகள் சிட்டாய் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் பல பத்திரங்களை புரட்டி எடுத்து அவர் முன் வரிசையாய் அடுக்கினர்.
"கார்ல செக் பண்ணுங்க"
உதய் தான் இவர்களை வரவழைத்தது என்று தெரிந்த விடயம், அதில் அவன் இவ்வளவு நேரம் அவன் அமைதியாக இருப்பது தான் அவமானப்படுவதை பார்க்க தான் என்று எண்ணியிருந்தார் ஈஸ்வரன்.
ஆனால் இப்பொழுது அவனே அவருடைய வாகனத்தில் சோதனை செய்ய கூறியதும் துணுக்குற்றவாறாய், "நீ வரம்பு மீறி போற டா" உதய் நோக்கி பாய்ந்தவரை ஜெயன் ஒரே பிடியில் அந்த இடத்திலே நிறுத்தி வைத்தான்.
"இல்ல மிஸ்டர் ஈஸ்வரன், இப்ப தான் சரியா போறேன். இத்தனை நாள் அமைதியா இருந்து தப்பு பண்ணிட்டேன்" அவருக்கும் சகோதரர்களுக்கும் கேட்குமாறு மட்டும் வினவியவன் மீண்டும் சாய்வில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
ஈஸ்வரன் முன் மேலும் பல ஆவணங்களை அடுக்கிய அந்த வருவாய்த்துறை அதிகாரிகளில் முதன்மை அதிகாரி, "இதுக்கு எல்லாம் என்ன கணக்கு சொல்றிங்க மிஸ்டர் ஈஸ்வரன்?"
"எல்லாம் இவன் பண்ண வேலை தான். எதுக்குயா என்கிட்ட கேக்குறீங்க?" கர்ஜித்தார் ஈஸ்வரன்.
"அதெல்லாம் எங்களுக்கு தெறியாது மிஸ்டர் ஈஸ்வரன், அவர் மேல சந்தேகம் இருந்தா ஏதாவது ஆதாரம் இருக்கா?" - அதிகாரி
"இல்லையா எதுவும் இல்ல" - ஈஸ்வரன்
அந்த அதிகாரி வேறு சில பாத்திரங்களை காட்டி, "ஜெர்மன்ல இருக்குற உங்க சில அபார்ட்மெண்ட்ஸ், ஷேர்ஸ், அப்றம் போரா போரா பக்கத்துல ஒரு தீவு வாங்கிருக்கிங்க, இது இல்லாம உங்க கிண்டி வீட்டுல..."
அந்த அதிகாரியை இடைமறித்து, "ஏன் சார் கிண்டி வீடுன்னு சொல்றிங்க தெளிவா சின்ன வீடுன்னு சொன்னா தானே எல்லாருக்கும் புரியும்" அவருடைய மற்றொரு ரகசியத்தையும் உதய் அந்த இடத்தில் உடைத்திருந்தான்.
"தொழில்ல மாமாவ முடக்குனது மட்டும் இல்லாம இப்ப குடும்பத்துலையும் குழப்பத்தை உண்டுபண்ண ட்ரை பண்றியா? ச்சை அசிங்கமா இல்ல ஒருத்தர் மேல இப்டி பலி போட?" உணர்ச்சிவசப்பட்டு விஷ்ணு எரிந்து விழுந்தான் சகோதரனிடம்.
"விஷ்ணு லிமிட் மீறி நீ தான் டா போற... ஏன் உன் மாமாகிட்ட கேக்க வேண்டியது தான? அமைதியா இருக்குராறுல அப்பயே தெரிய வேணாம் யார் மேல தப்புனு?" - ஹரி
"இவனுக மூஞ்சில அடிக்கிற மாதிரி உண்மைய சொல்லுங்க மாமா" - விஷ்ணு
"அதிதி மேல சத்தியம் பண்ண சொல்லு டா" - ஹரி
"பண்ணுவாரு... நீ சும்மா இரு" - விஷ்ணு
இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தனர் தவிர அமைதியாய் இருந்த ஈஸ்வரனை கவனிக்க தவறினர்.
'ஐயோ இதுவும் போய்விட்டதா? இதாவது ஜெர்மனில் இருப்பதால் தப்பிக்கும்' என்று எண்ணியவர் எண்ணத்தில் ஒரு ஆற்றில் இருக்கும் மண் மொத்தத்தையும் கொட்டியது போல் இருந்தது. ஆனால் அது தான் பத்து நாட்களுக்கு முன்னரே சக்தி மூலம் உதய் கைக்கு வந்து சேர்ந்ததே... யாருக்கும் தான் இதை பற்றி தெரியாதே என்ற அலட்சியத்தில் விட்டு வந்ததை சக்தி அழகாய் பயன்படுத்திக்கொண்டான்.
"சார் உங்க குடும்ப பிரச்சனை எல்லாம் அப்றம் பாத்துக்கலாம். நாங்க இப்ப இவரை கஸ்டடில எடுக்குறோம்"
உடல் வெடவெடக்க எழுந்த ஈஸ்வரன் உதய் நோக்கி வந்து, "என்ன உதய், என்ன அரெஸ்ட் பண்ண போறேன்னு சொல்றாங்க நீ அமைதியா இருக்குற? என்ன அரெஸ்ட் பண்ணா நம்ம கம்பெனி-கு கெட்ட பேர் இல்லையா?"
இருக்கையிலிருந்து எழுந்தவன், "திருத்தம், அது நம்ம கம்பெனி இல்ல, எங்க கம்பெனி. உன்ன கம்பெனி பொறுப்புல இருந்து தூக்கி ஆறு மணி நேரம் ஆச்சு. நான் பாசமா இருக்குறவங்கள என்கிட்டே இருந்து பிரிச்சா உதய் காணாம போய்டுவான்னு யார் உன்ட்ட சொன்னது ஈஸ்வர்?"
கையில் கூர்மையான பொருள் இருந்தால் நிச்சயம் உதய் குடலை உருவி எடுத்திருப்பார், அவ்வளவு கோவம் ஈஸ்வரன் கண்ணில்.
"புயல் அடிச்சாலும் ஒத்த ஆலமரமா அசராம நிப்பேன்... நாலு காக்கா ஏறி ஒக்காந்தா சாஞ்சுடுவேன்னு அசுர நம்பிக்கை இருந்தா ஏமாற்றத்துக்கு நான் பொறுப்பில்லை"
அந்த அதிகாரி பக்கம் திரும்பிய உதய், "தேங்க்ஸ் சார்... இவ்ளோ ஷார்ட் நோட்டீஸ்ல ரைட் வந்ததுக்கு. இதுல நெறையா கம்பெனி அக்கௌன்ட்ல வர வேண்டி இருக்கு... அதோட டீடெயில்ஸ் எல்லாம் நாளைக்கு உங்க ஆபீஸ்ல வந்து அபீஷியலா நான் சப்மிட் பண்றேன்"
அவருடன் கை குலுக்கி புன்னகைத்தான், "நாட் எ ப்ராப்லம் மிஸ்டர் மாதவன். பேமிலி-னு பாக்காம உண்மையா இருந்ததுக்கு ஐ ஷுட் அப்ரிஷியேட் யூ"
ஈஸ்வர் பக்கம் பார்த்து, "வர்ட்டா மாமே..." நக்கல் சிரிப்போடு வெளியேறியவன் மூளை ஈஸ்வரனை தாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை மூலையில் அசைபோட்டுக்கொண்டே சென்றது.
**********************
பூமி பூஜை செய்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது... ஆதியின் தந்தையின் நிலத்தில் வேலைகள் எதுவும் துவங்காவிடினும் வானம் தோண்ட ஆயத்தங்கள் அத்தனையும் தயாராகிக்கொண்டே தான் இருந்தது.
பூஜை போட்ட முதல் நாளே உதய் தன்னுடையதாக மாற்றியிருந்த ஆதியின் தந்தை அலுவலகத்தின் பின்னே இருந்த பெரிய காலியிடத்தில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கப் பெரிய கூரை போட்டு கூடாரம் அமைத்திருக்க அதிலிருந்த படியே தான் கடந்த இரண்டு நாட்களாக கௌதம், தமிழ் இருவரும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க ஆதவன் வந்து அவர்கள் இருவரும் பேசுவதைக் காதில் கூட வாங்காமல் சஹானாவிடம் கடலை போட்டுக்கொண்டிருப்பான்.
"வந்து ஏதாவது சொல்லு டா"
"நான் மெக்கானிக்கல் படிச்சேன்டா இத பத்தி எல்லாம் சுத்தமா ஐடியா இல்ல" என்று மழுப்பிவிடுவான்.
ஆதி வெளியில் வங்கி அல்லது வேறு ஏதாவது வேலை இருப்பதாகக் கூறி இரண்டு வாரங்களுக்கு மேல் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். புழுக்கம் தாங்காமல் ஆதவன் ஒரு காகிதத்தை மடித்து விசிறிக்கொண்டிருக்க அவனுக்கு எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் ஆதவனின் கருப்பு கண்ணாடியை அணிந்து சாய்ந்து அமர்ந்த வாக்கிலே தூங்கிப் போனான் கௌதம்.
என்ன விசிறியும் வேர்வை வழிந்துகொண்டே தான் இருந்தது ஆதவனுக்கு. எந்நேரமும் குளுகுளு என எ.சியில் இருந்தே பழக்கப்பட்டிருந்தவனுக்கு மாசி மாத வெயிலையே சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கௌதமை போல தானும் சட்டையைக் கழட்டி அமர்த்துவிடுவோமா என்ற எண்ணம் தோன்றிய உடனே சட்டையை அவிழ்த்துப் போடத் தான் சிறிது ஆசுவாசமடைந்தான்.
ஆனால் அதுவும் சில நொடிகளே தாக்குப்பிடிக்க மீண்டும் வியர்வை வழிந்தது. ஆனால் கௌதம் அசராமல் வியர்வையைக் கூட கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான். அந்த நேரம் தமிழ் ஒரு பெரிய மினெரல் கேனுடன் வந்து ஆதவனுக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.
"என்னடா ஒரு பேன் கூட இல்லையா?" கேள்வி கேட்டுக்கொண்டே தண்ணீரை வாங்கினான்.
வாயில் தண்ணீரை ஊற்றிய பொழுது தமிழின் கை ஆதவன் தலையில் ஓங்கி அடிக்க புரையேறி எதிரில் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திலிருந்த கௌதம் முகத்தில் சாரலாய் அது தெறிக்க அதையும் துடைத்து கொஞ்சமும் அசையாது உறக்கத்தைத் தொடர்ந்தான் கௌதம்.
"கேன கூ..." - தமிழ்
"டேய் டேய்... வார்த்தை வார்த்தை" ஆதவன் எச்சரிப்பை விடுத்தான்.
"கூமுட்டை..." வார்த்தையைத் திருத்தி, "உனக்கு விசுர வேற எதுவுமே கெடைக்கலயாடா? இது பிளான் பேப்பர்" ஆதவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கியவன் அதை மீண்டும் விரித்துப் பத்திரப்படுத்தி வைத்தான்.
கௌதம் பக்கம் திரும்பி அவன் காலிலே ஓங்கி ஏத்தியவன், "தூங்குது பாரு நைட் எல்லாம் போன் பேசிட்டு..."
"ஆஆ..." காலை பிடித்து எழுந்த கௌதம், "மூதேவி எதுக்குடா எத்துன?"
"அவன் பிளான் பேப்பர எடுத்து விசிறிட்டு இருக்கான் நீ வாட்டுக்கு தூங்குற" முறைத்துக்கொண்டு கேட்டான் தமிழ்.
உதட்டை ஏளனமாக முடித்தவன், "என் நண்பனுக்காக இந்த சின்ன பேப்பர் என்ன... என் உசுரையே தருவான் டா இந்த கெளதம்"
"நீ மசுர கிழிக்கிற லட்சணம் எனக்கு தெரியும்..." - ஆதவன்
"வன்மம் கக்கப்பட்டது" - கெளதம்
"பின்ன என்னடா எனக்கு சின்ன வயசுல நாய் பயம் அதிகம் தெரிஞ்சும் ஒரு நாள் இவன் வீட்டு பக்கம் கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்ப நாய் இருக்குற வீட்டுக்கு வேணும்னே அனுப்பி வச்சு ஒரு வாரம் காச்சல்ல படுக்க வச்சது இவன் தான... இதுல உசுர குடுத்து நொட்டுவானாம்" ஆதவன் அன்றைய நிகழ்வில் நண்பனை தீயாய் முறைக்க தமிழும் கௌதமும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"ஆதவா ஒரு டீ சொல்லேன்" இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு சோர்வாய் அமர்ந்தான் தமிழ்.
"தமிழு ஒரு எ.சி சொல்லேன்" தமிழை போலவே அதே மாடுலேஷன் தவறாமல் ஆதவன் கூறினான்.
"டீ வேணாம்... எனக்கு களனி தண்ணி போதும்" - தமிழ்
"சரி டா மாடு ஒரு தொட்டிலாவது கட்டி விடுங்கடா நைட் ஏழு மணிக்கு இப்டி வேர்க்க வேர்க்க புடிச்சு ஒக்கார வச்சிருக்கீங்க" தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு புழுக்கம். காற்று சுத்தமாக இல்லை.
"என்னோட ஆயா பழைய சேலை இருக்கு, நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வர்றேன்... ஏன் டா தமிழு இவன் வெயிட்டுக்கு மூணு சேலை ஒண்ணா வச்சு காட்டுனா போதுமா?" கூரை பந்தலில் எ.சி., தொட்டில் எல்லாம் கேட்கும் நண்பனை பார்க்க பாவமாக இருந்தாலும், அவனை கிண்டல் செய்யும் வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை கௌதமிற்கு.
"நக்கலு? இருடா ஓணானை புடிச்சு உன் டிரௌசர் குள்ள விடுறேன்" இப்பொழுது கெளதம் அதை யோசித்து பார்க்க, முகம் அஸ்டகோலமாக மாறியது.
'ஆத்தி... இது வெவகாரமான யோசனையால இருக்கு. சரி மூடிட்டு போய்டுவோம்' நண்பனின் மனதில் என்ன யோசனை, கற்பனை விரிகின்றதென்று புரிந்த தமிழ் வாய் விட்டு சிரிக்க, அந்த அமைதியான இடத்தில் ஏதோ ஒரு ஆட்டோ நுழையும் சத்தம் தெளிவாக கேட்டது மூவருக்கும்.
"யார்ரா அது இந்நேரத்துல வர்றது" தமிழ் அத்தனையையும் எடுத்து கிளம்ப ஆரம்பித்தான். எவர் என்று பார்க்க வந்த கெளதம், ஆதவன் வெளியில் வர, அந்த ஆட்டோவுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தான் ஆதி.
ஆதவனை பார்த்ததும், "இன்னும் நீ இங்க என்ன டா பண்ற?"
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அதான் நீ வரட்டும்-னு வெயிட் பண்றேன். ஆமா உன் வண்டி என்ன ஆச்சு?" - ஆதவன்
"கொஞ்சம் வேலை இருக்கு அதான்" பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வாசல் பக்கம் திரும்பிய ஆதி வாசலில் இருந்த வெளிச்சத்தை பார்த்து, "டேய் ஓரமா நில்லுங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்"
சிரித்த முகத்துடன் வழியில் கிடந்த சில கட்டைகளை தூக்கி போட்டு, "ண்ணே உள்ள வா" சத்தமாக அழைத்தான் வாசலை பார்த்து.
அழைத்தத்தும் மெதுவாக அந்த காலியிடத்தில் நுழைந்தது பெரிய கண்டைனர்களை சுமக்கும் லாரிகள் இரண்டு வரிசையாக.
"ஆதி எதுக்கு டா கண்டைனர் வருது?" - கெளதம்
"வெயிட் அண்ட் சீ டா ட்ரொவுசரு" நண்பனை அமைதியாக்கி அந்த லாரியை வழி நடத்தியவன் பின்னாலேயே வந்த பெரிய க்ரேன் ஓட்டுனரிடம் எந்த இடத்தில் அவைகளை இறக்க வேண்டும் என்று இடத்தை சுட்டி காட்டி அடுத்த கட்ட வேலைகளை துவங்க இவன் செய்வதை புரியாமல் மூவரும் விழித்து நின்றனர்.
அதற்குள் அந்த க்ரேன் முதலில் ஒரு கண்டைனர் பெட்டியை வைத்து அதை போர்த்தியிருந்த திரையை விலக்கியதும் அதான் தோற்றத்தில் குழப்பம் உண்டானது நண்பர்கள் மூவருக்கும். பிறகு அதான் மேல் மற்றொரு கண்டைனரை சரியாக வைக்கவே கால் மணி நேரம் பிடித்தது. அத்தனையும் முடித்து சிலர் கண்டைனர் உள்ளே சென்று அடுத்த அரை மணி நேரம் இரவென்று கூற பாராமல் வேலை பார்க்க நண்பர்களை அந்த பக்கமே ஆதி விட வில்லை.
"என்னடா சிமெண்ட் மூட்டை வைக்க தான் இந்த குடிசை இருக்கே எதுக்குடா இது?"
"கண்டைனர் வாங்கி விக்கிற வேலை பாக்க ஆரமிச்சிட்டியா?" என மாறி மாறி ஆளுக்கு ஒரு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்க பொறுமையை இழுத்து புடிக்காமல் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி மூவர் முகத்திற்கு நேராக வார்த்தை பேசாமல் காட்டி ஆதி எச்சரிக்க, அடுத்து ஒரு வார்த்தை வரவில்லை அவர்களிடமிருந்து.
"ண்ணே முடிஞ்சது... நாளைக்கு வந்து கம்பி மட்டும் அடிச்சு விட்டுடுறோம். இந்தா சாவி"
ஒருவன் ஆதி கையில் சாவியை ஒப்படைக்க, "தேங்க்ஸ்டா தம்பி..." இன்முகமாய் அவர்களை அனுப்பி வைத்தவன், "வாங்க டா" நண்பர்களை அழைத்து கண்டைனர் அருகே சென்றவன் கதவு போல் தெரிந்த இடத்தின் முன் நின்று தன்னுடைய கைபேசியில் இருந்து உதய்யின் எண்ணிற்கு வீடியோ கால் விடுத்தான்.
"எதுக்கு ஆதி அவனுக்கு இப்ப கால் பண்ற. அவனை டிஸ்டர்ப் பண்ணாத" உதய் வீட்டில் அவன் தந்தைகளுடன் நடைப்பெற்ற வாதங்கள் பற்றிய அத்தனை தகவல்களையும் ஆதியிடம் பேச்சுவாக்கில் மனம் பொறுக்காமல் ஆதவன் கூறியிருந்தாலும் அதை காதில் கேட்காதது போல் அமைதியாக கடந்து சென்றுவிட்டான்.
"ஒரு ரெண்டு நிமிஷம் டா" சரியாக உதய் அழைப்பை ஏற்க, "வணக்கம்டி மாப்பிள்ளை" சல்யூட் வைத்து உதய்யை கேலி செய்த ஆதிக்கு சோர்ந்த முகம் கொண்ட, வாழ்க்கையே ஒதுக்கிய எண்ணத்தில் இருந்த உதய்யின் தரிசனமே கிடைத்தது.
இன்னும் அலுவலகத்தில் தான் இருந்தான், அலுவலகத்தில் இருந்த அனைவருமே சென்றதால் சட்டையின் இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டு தளர்வாய் இருக்கையில் சாய்ந்திருந்தான்.
"என்னடா?" மிகவும் சாதாரணமாக கேட்டவன் கைபேசியை முன்னாள் நிறுத்தி வைத்து மீண்டும் சாய்ந்துகொண்டான்.
"உதய் மாதவன் உதய் மாதவன்-னு ஒருத்தன் இருந்தான்... அவன் அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி தானும் கஷ்டப்படுறது ரொம்ப புடிக்கும். அது தான் அவன் முன்னாடி ஒரு பில்டிங் என்னோட லட்சியத்தை தடுத்து நிறுத்திடாதுன்னு காட்டணும்" கேமராவை திருப்பி அந்த கண்டைனரின் கதவை திறந்து அந்த இடத்தை மொத்தமாய் உதய் பார்க்கும் அளவு செய்தான்.
"இத பாத்து வயிறு எரிஞ்சு சாகட்டும் அந்த ஜென்மம்"
ஆதியின் வார்த்தை உதய் இதழ்களில் சிரிப்பை தான் தந்தது. சில நொடிகளே ஆதி அந்த இடத்தை காட்டினாலும் அத்தனையையும் உதய் தெளிவாக கவனித்துக்கொண்டான்.
ஆதியின் கோவமான முகத்தை பார்த்தவன், "ஆபீஸ என் பேர்ல மாத்துன எனக்கு அந்த காலி இடத்தை மாத்தி வாங்குறதுக்கு எத்தனை செகண்ட் ஆகும்ன்னு தெரியுமா?"
திமிராக புருவத்தை உயர்த்தி உதய் கேட்க கையை அந்த கண்டைனர் மேல் ஓங்கி குத்தி தன்னுடைய ஆத்திரத்தை ஆதி வெளிப்படுத்த, "நான் உன்னோட ப்ராஜெக்ட்க்கு மொத்தமா ஆப்பு ரெடி பண்ணிட்டு இருக்கேன்... நீ என்னடா சின்ன புள்ள மாதிரி டப்பா வச்சு வீடு கட்டுனதுக்கு இவ்ளோ சந்தோச படுற" நக்கலாய் சிரித்தான் உதய்.
"அத செய்றதுக்கு உன்ன விட்டா தான டா நீ பண்ணுவ... பாக்கலாம் என்னை மீறி நீ என்ன செய்ற-னு"
ரௌத்திரம் தெறிக்கும் விழிகளுடன் ஆதி விடுத்த சவாலை, "வைடா கோமாளி" சிரிப்போடு உதய் துண்டித்திருந்தான் அலைபேசி இணைப்பை.
கையிலிருந்த கைபேசியை வெறித்து பார்த்த ஆதியின் தோளை தோட்ட தமிழ், "இதெல்லாம் எப்படா பிளான் பண்ண?" பேச்சை மாற்ற தமிழ் ஆர்வமாய் கேட்க, தற்போது சிந்தனை அத்தனையையும் தற்காலிகமாக விட்டு, "ஒருத்தன் வேர்வைலயே சிமெண்ட் மூட்டை எல்லாம் கட்டி கட்டியா மாறுதுன்னு கம்ப்லைன் வந்துச்சு அது தான்" ஆதவனை நோக்கி சிரிப்போடு கூறவே புரிந்துபோனது எல்லோருக்கும்.
ஆதி வரவழைத்திருந்த கண்டைனர் உள்ளே மூவரையும் தள்ளிவிட்டு நுழைந்த கெளதம் விழிகள் அங்கிருந்த அனைத்தையும் பார்த்து மெச்சாமல் இருக்க முடியவில்லை. நீளமான அந்த கண்டைனர் உள்ளே வலது புறம் ஒரு சிறிய மேஜையும், அதற்கு அருகில் பிளான் போட என ஒரு பெரிய மேஜையும் இருக்க இடது புறத்தில் கோப்புகளை, அல்லது முக்கியமான பொருட்களை வைக்க சிறிய வடிவில் அலமாரி ஒன்றும் இருந்தது. இவற்றை தாண்டி இறுதியாக ஒரு படிக்கட்டும் இருக்க அதில் மேல் ஏறி சென்ற ஆதவன் கண்கள் விரிந்தது.
பெரிய மீட்டிங் அறை போல் நீண்ட மேஜை ஒன்றும் சிறிய ஓய்வு அறை அமைப்பில் சிறிய மெத்தையும் அதான் அருகே ஒரு குளியலறையும் இருந்தது. மேல் தளம் மொத்தமும் எ.சி காற்று இப்பொழுது கூட வீசியது. அந்த அறையை தாண்டி சென்றால் பால்கனி அமைப்பில் இருந்தது.
தட தடக்க படிகளில் இறங்கி வந்த கெளதம், "டேய் கருவாயா உனக்கு எப்படி டா மூளை எல்லாம் வேலை செஞ்சது?" கேள்வியோடு இறங்கி வந்தவன் மீண்டும் அந்த இடத்தை அளக்க கண்கள் சென்றது.
"என்ன பண்றது... இந்த மூளை இருவது வருஷம் முன்னாடி வேலை செஞ்சிருந்தா சில பல ஜீவராசிகளையும் மீட் பண்ணாமயே சந்தோசமா இருந்துருப்பேன்" என்றவன் மேலும், "இனி இது தான் நம்ம ஆபீஸ். மேல மீட்டிங் ரூம், கூடவே ஒரு சின்ன ரூம், இன் கேஸ் ஒடம்பு சரியில்லாம ரெஸ்ட் தேவ படுறப்ப யூஸ் பண்ணிக்கலாம்"
"செம்மயா இருக்கு ஆதி ஆனா இதுக்கு ரொம்ப செலவு ஆகிருக்குமே" கண்டைனர் ஆகவே இருந்தாலும் உள் பக்க சுவர்கள் எல்லாம் மின்ட் கிறீன் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் நிறம் தீட்டப்பட்டு அழகாய் காட்சியளித்தது.
"அதெல்லாம் இல்லடா பட்ஜெட் ப்ரன்ட்லி தான்... மேலயும் கீழயும் சேத்து மூணு லட்சம் தான் ஆச்சு. இந்த பர்னிச்சர் அது இதுன்னு ஒன்றை லட்சம். அவ்ளோ தான்"
"என்னடா சொல்ற இவ்ளோ கம்மியா?" - கெளதம்
"ம்ம் ஆமா... ஒடம்பெலாம் அசதியா இருக்கு ஒரு கட்டிங் வாங்கிட்டு வாயேன்... இன்னைக்கே ஆபீஸ் ஓபன் பண்ணிடலாம்"
நண்பனிடம் நல்ல பிள்ளையாய் கெஞ்சிய ஆதியின் பிடரியில் இரண்டு அடி போட்டு, "குடிகார கபோதி... குடிச்சு சாக எங்க ஆபீஸ் தான் உனக்கு கெடச்சதா?"
நாற்காலி ஒன்றை எடுத்தே ஆதியை தமிழ் அடிக்க வர அதை வாங்கி சிரிப்போடு வைத்த ஆதவன், "விடுடா... நாளைக்கே பூஜையை போட்டு ஆரமிப்போம். அதுக்கு முன்ன நான் ஒன்னு சொல்ல போறேன். எனக்கு நீங்க யோசிக்கிற ப்லோர்ஸ் எத்தனையோ இருந்தாலும் பரவால்ல அதுக்கு மேல ரெண்டு ப்லோர்ஸ்ல கம்ப்ளீட்டா ஒரு பெண்ட்ஹவுஸ் மாதிரி ஒன்னு டிசைன் பண்ணி தாங்க. மொத்தம் அஞ்சு ரூம் வேணும் அது எல்லாம் கண்டிப்பா பால்க்கனி இருக்கனும்.
ஒரு பெரிய ஹால், டைன்னிங் ரூம், பெரிய கிட்சன், ஒரு தியேட்ர் ரூம், இண்டோர் ஸ்விம்மிங் பூல், ஒரு ஹோம் ஆபீஸ், ஓபன் ஸ்பேஸ்ல பயர் பிட். இது எல்லாம் வச்சு லக்ஸுரி ஹவுஸ் வேணும். எவ்ளோ செலவு ஆனாலும் எனக்கு சுத்தமா கவலை இல்லை. எஸ்டிமேட் போட்டு கைல குடு ஒரே நாள்ல புல் அமௌன்ட் செட்டில் பண்ணிறேன்" ஆதவன் அடுக்கிக்கொண்டே போக மூவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தனர்.
ஆனால் அதன் காரணத்தை அறிந்து எதுவும் பேசாமல் அமைதியாகிவிட அதற்கு மேல் மூவரையும் எதுவும் யோசிக்க விடாமல், "என்னடா எப்ப எஸ்டிமேட், பிளான் எல்லாம் என் கைக்கு வரும்?" என்றான் அதிகாரமாய்.
"ஆதவா தனியா லக்ஸுரி பில்டிங்ஸ் டிசைன் பண்ற அளவு எங்களுக்கு திறமையோ, அனுபவமோ இருக்கானு தெரியல டா" உள்ளே சென்ற குரலில் கெளதம் கூற, அவன் கூற்றை ஆமோதிப்பதாய் ஆதி, தமிழ் அமைதியாய் நின்றனர்.
"பழகிக்கோங்க டா" என்றான் ஆதவன் அசால்டாக.
"டேய் இது என்ன மல்லிகை வியாபாரமா? ஒரு நாள் விக்கலனா மறு நாள் கூவி கூவி விக்க கத்துக்கலாம்னு... கட்டிடம் டா. ஒரு சராசரி மனுஷனோட கனவு, ஆசை, ஏக்கம்... அதையும் தாண்டி பல உயிர் சம்மந்தப்பட்டது. இதுல எங்கையாவது ஒரு இடத்துல சொதப்புனாலும் நாங்க என்ஜினீயர்ன்ற பட்டத்துக்கே தகுதியில்லாதவனா மாறிடுவோம்" - ஆதி
"உங்க மேல நம்பிக்கை எனக்கு இருக்கு" - ஆதவன்
"எங்களை நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பை குடுக்காத. அவ்ளோ தான் சொல்லிட்டேன். உதய் கம்பெனில பேசு, சீனியர் ஆஃபீஸ்ர்ஸ் வந்து கச்சிதமா முடிச்சிடுவானுக, எனக்கு எந்த பிரச்னையும் அதுல இல்ல" மொத்தமாய் மறுத்தான் ஆதி.
"நீங்க தான் எனக்கு பண்ணனும். நீங்க மட்டும் தான். புரியுதா?"
அழுத்தி ஆழமாய் ஆதவன் கூறி மறு பேச்சிற்கே இடம் இல்லாமல் சென்றுவிட ஏற்கனவே உதய்யின் வார்த்தைகளால் மேலும் யோசனையில் ஆழ்ந்தான் ஆதி. எத்தனை தடைகள் தான் வந்து சேரும்?
*****************
பத்து அடி நீளம் பத்து அடி அகலம், மனதை சாந்தமாக்க வெள்ளை நிற சுவர் சாயம் கொண்ட அந்த படுக்கை அறை நிச்சயம் ஒரு நடுத்தர குடும்பத்தினருக்கு மன நிம்மதியை வழங்கும். அதிலும் ஒரு ஆள் தாராளமாக உறங்கும் அளவிற்கு பெஞ்சு மெத்தை, காற்றாட ஒரு மின்விசிறி, தேர்ந்தெடுத்த சில புத்தகங்கள், அவற்றை வைத்து படிக்க ஒரு மேஜை, நாற்காலி என சராசரி மனிதனுக்கு தேவைப்படும் அத்தனை தேவைகளும் அந்த சிறு அறைக்குள் அடுக்கியிருந்தது.
ஆனால் ஏழையாக பிறந்து, வாலிப வயதிற்கு மேல் பணத்தில் படுத்து எழுந்த மனிதனால் அந்த எளிய வாழ்க்கையுடன் ஒன்றி இரண்டு வாரங்கள் கூட இருக்க முடியவில்லை. சிறையே ஆனாலும், வி.வி.ஐ.பி ஈஸ்வரனுக்கு ஏனைய கைதிகளை போல் அல்லாமல் வசதியாகவே இருந்தது சிறை வாசம். வன்மம் மனதில் மண்டி கிடக்க, இருந்த அந்த சிறிய காலி இடத்தில் அறை மணி நேரத்திற்கும் மேலாக குறுக்கும் நெடுக்கும் உலாவிக்கொண்டே இருந்த மனிதருக்கு நள்ளிரவை தாண்டியும் உறக்கம் எட்டாக்கனியாக இருந்தது.
நிமிடங்கள் கடக்க அறை கதவை பார்த்துக்கொண்டே இருந்தவரை அதிகம் காக்க விடாமல் அவரின் கதவை திறந்து உள்ளே பயத்தோடு நுழைந்தான் ஈஸ்வரன் பி.எ.
"என்னடா இவ்ளோ நேரமா நீ வர? இந்த மயிருக்கெலாம் நான் காத்துட்டு இருக்கணுமா?" எடுத்த எடுப்பிலே காய்ந்தார் அவன் மேல்.
"சார் செக்யூரிட்டி எல்லாம் சமாளிச்சு வர லேட்டா ஆகிடுச்சு. கோவப்படாதிங்க"
"பேசிட்டு இருக்காத. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? இன்னைக்கு நான் அவன்கிட்ட பேசியே ஆகணும்" மேலும் உக்கிரமாய், 'இன்று மட்டும் நீ செதப்பி பாரேன்' எச்சரித்தது அவர் பார்வை.
"எல்லாமே செட் சார். கன்பர்மேஷன் வந்ததும் கூப்ட்டு பேசிடலாம்" என்றான் அவர் பி.எ.
அந்த நிமிடத்தையும் வீணடிக்க விரும்பாமல், "என்ன இங்க அனுப்பி வச்சிட்டு அந்த பரதேசி இந்நேரம் அவளோட கூத்தடிச்சிட்டு இருப்பானே... இருக்கட்டும் எல்லாத்துக்கும் இன்னையோட ஒரு முடிவு கட்டுறேன். அவ மேல கை வச்சா இவனுக்கு இங்க உறுத்ததோ? முடிக்கிறேன்... மொத்தமா கூண்டோட முடிச்சு விடுறேன் இவனுகல"
க்ரோத தீ பற்றிக்கொண்டு காட்டு தீயாய் உடலில் இருந்த ஒவ்வொரு செல்லும் உதய் மாதவனை, தன்னை தன் குடும்பம், வேலையாட்கள் முன்னாள் அவமானப்படுத்தியவனை தன் கையாலே கொல்லும் அளவிற்கு ஆத்திரம் எரிந்தது.
"பிசினஸ்ல என்ன பன்றான்?" மீண்டும் உதய் பற்றிய கேள்வி தான்.
"என்னால கம்பெனி உள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியல சார். நீங்க உள்ள வந்த ஒடனே என்ன வெளிய அனுப்பிட்டாங்க. ஆனா அந்த யாழினி பொண்ணு இப்ப காலைல ஏதோ நர்சரி ஸ்கூல்ல வேலை பாத்துட்டு சாயந்தரம் ஒரு சின்ன ஹோட்டல்ல வேலை பாக்குது" - பி.எ
யாழினி மட்டுமே ஒரு நிம்மதியான செய்தியை கொடுத்துளாள் ஈஸ்வரனுக்கு, "பிச்சைக்காரி அவளுக்கு ஏத்த வேலைய தான் பாக்குறா" இளக்காரமான புன்னகை அவர் முகத்திற்கு சிறிது நேரம் மகிழ்ச்சியை தந்தது.
"அப்றம் சார் நம்மள பத்தி முதல உதய் சார் காதுக்கு நியூஸ் கொண்டு போனது ஆதவன் தான்" அவர் சற்றும் எதிர் பாராத தகவலை தந்தான் அவன்.
"எல்லாம் இவன் குடுக்குற இடம். கொஞ்ச நாள் தானே... இவன முடிச்சு விட்டா எல்லாரும் அடங்கிடுவானுக"
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஏதோ செய்தி ஈஸ்வரன் பி.எ எண்ணிற்கு வர, "சார் பேசலாமா?"
"ம்ம்ம் அடி" என்கவும் அவன் ஈஸ்வரன் கையில் கைபேசியை கொடுத்தான்.
ரிங் சென்ற ஐந்தே நொடியில் அழைப்பை ஏற்று, "என்ன அந்த பக்கிங் பாஸ்டர்ட் கால் பண்ண சொன்னானா? வெளிய வந்த அஞ்சே நிமிசத்துல மொத்த குடும்பத்தையும் தூக்கிடுவேன்... சொல்லி வை டா அவன்கிட்ட"
எடுத்த எடுப்பிலே மொத்த வன்மத்தையும் வார்த்தைகளில் இறக்கிய அவசர புத்தியுடவன் சாட்சாத் நீரஜ் தழல் தான். ஒரு பக்கம் ஈஸ்வரனை உதய் வெளியில் வர விடாமல் வைத்திருக்க, அந்த பக்கம் நீரஜ் வெளியில் வர விடாமல் அரசு பார்த்துக்கொண்டது.
"என் குடும்பத்தை விட்டுட்டு அவனுகள நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. வேணும்னா நானே உனக்கு ஸ்கெட்ச் போட்டு தர்றேன்" நீரஜ் வார்த்தைகள் ஈஸ்வரனுக்கு புது தெம்பை கொடுத்தது, அதனாலே மகிழ்ச்சியாக நிதானமாய் பேசினார்.
ஈஸ்வரனின் பேச்சை கேட்டு நீரஜ் புருவங்கள் முடிச்சிட்டது, "என்ன அந்த மாதவன் அடுத்த ஆட்டைய உன் மூலியமா நடத்த பாக்குறானா?" கடுமையாய் தான் இன்னமும் இருந்தது நீரஜ் வார்த்தைகள்.
"என் மானத்தை சந்தி சிரிக்க வச்சு ஜெயில்-கு அனுப்புனவன் கூட உறவாட நான் ஒன்னும் அறிவில்லாதவன் இல்ல. பிஸ்னஸ் மேன். அறிவு இருக்குற நீயும், தகவல் இருக்குற நானும் சேந்த்தா நடக்காதது கூட நடக்கும்" ஈஸ்வரன் உஷ்ணத்தை வெகு தொலைவில் இருந்தவன் அருகே அனுபவிப்பது போல் கத கதப்பாக இருந்தது நீரஜ் மனம்.
"வெளிய வராம என்னால ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது" ஆதங்கத்தில் ஈஸ்வரன்.
"அவனை பத்தி டீட்டைல்ஸ் மட்டும் எனக்கு தந்தா போதும், மீதியை நான் பாத்துக்குறேன்" கோணல் சிரிப்பு நீராஜின் இதழ்களில் விரிய அடுத்த ஒரு மணி நேரம் உதய்யின் மொத்த தகவலும் நீரஜ் வசம் இருந்தது.
"சொதப்பிடாத தழல், அவன் தப்பிச்சு கைல சின்ன க்ளூ கிடைச்சாலும் உன்னையும் என்னையும் ஜெயில்லயே பொதச்சிடுவான்... ஒரே ஒரு பேப்பர் போதும் நம்ம கதவ அவன் கண்டுபுடிக்க"
தந்தையின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியவனுக்கு ஈஸ்வரனின் வார்த்தைகளை அது போலவே விட தோன்றவில்லை. ஒருமுறை நடந்த தவறின் பலன் கண் முன்னே இருக்க... தன்னுடைய திட்டத்தை மேலும் மேலும் உறுதியாக்க சிந்தனையில் மூழ்கினான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro