ஆனந்தம் - 18
"பேச கூடாதது எல்லாம் பேசிட்டு இப்ப ஒக்காந்து இழுவுனா எல்லாம் சரியாகிடுமா?"
உணவை உண்ணாமல் அதை பார்த்தபடியே அமர்ந்திருக்கும் மகளை எத்தனை திட்டியும் மனம் ஆறவில்லை சீதாவிற்கு.
அன்று தேவா பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து மீளாத பைரவியை தேவா நேரமாகிறதென வீட்டிற்கு அழைக்க, மாட்டேன் என சொல்லவும் உன் விருப்பம் என அவனும் சென்றுவிட்டான்.
இதோ பத்து நாட்கள் ஆகிறது அவனும் சென்று. ஒரு முறை கூட அவனும் கைபேசியில் கூட பேசவில்லை, அவளும் பேச விரும்பவில்லை. கோவம், ஏமாற்றம், காழ்ப்புணர்ச்சி, வருத்தம், வேதனை என மனிதன் வாழ்க்கையில் சங்கடத்தை ஏற்படுத்தும் உணர்வுகள் மட்டுமே பைரவியிடம்.
அனைவர் முன்பும் வைத்து இருவரது அன்னையும் பேசியதை கேட்டும் அமைதியாக இருந்தான் என்றால் அந்த எண்ணம் தான் அவன் மனதிலும் இருந்ததா என்ற வருத்தம். சரி அன்று தான் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்...
அதற்கு பிறகான நாட்கள் கூட தன்னை பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டானா என்று மனம் விட்டு போன உணர்வு. திருமணத்திற்கு முன்பு எப்படி அறையினுள்ளே அடைந்து கிடந்தாலோ அதை விட அதிகம் ஒடுங்கிபோனாள்.
அப்படியே விடுபவன் தேவா இல்லை தான் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்த இரண்டு வாரங்களில் அவன் காட்டும் ஒதுக்கம் அவ்வளவு தானா என்ற விரக்தி நிலையை கொடுத்தது.
"உன் அண்ணன் வார்த்தை ரெண்டு விட்டா, அது உனக்காகன்னு தெரியாத அளவா கூறுகெட்டு போன கூவ மாதிரி இருப்ப நீ?"
"நானும் கண்ண கண்ண பின்னால இருந்து காட்டிட்டே இருக்கேன். நிறுத்துறியா நீ? ப்பா ஆனாலும் ஒரு பொட்ட புள்ளைக்கு இம்புட்டு கோவமும் பிடிவாதமும் ஆகாது, கடைசில ஒக்கார வச்சிடுச்சுல ஒரு மூலைல" மனம் ஆரமாட்டாது தன் வாக்கில் மகளை அலசிக்கொண்டே வேலையை பார்த்தார் சீதா.
"ஊர்ல ஒரு பயலும் நீ பண்ண காரியத்துக்கு உன்ன கட்டிக்க மாட்டேன்னு நின்னப்போ கடவுளா உன் மேல பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுத்தவன் அந்த பையன்.."
அன்னையின் கூற்றில் வேதனை பன்மடங்காக இறுக்கமாக கண்களை மூடி திறந்தவள் வேதனை அந்த தாய்க்கு தெரியவில்லை போலும்.
"ஏன் காதலிச்சவல தான் கட்டிக்கணுமா? உன்ன கல்யாணம் பண்ணிட்டு அந்த பையன் இல்ல?"
"எப்படி ம்மா இவ்ளோ மாறுனீங்க? என் அண்ணனோட வாழ்க்கையை அழிச்சு தான் எனக்கு அந்த வாழ்க்கை அமையும்னு தெரிஞ்சிருந்தா இந்நேரம் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கவே மாட்டேன்" என்றாள் மௌனத்தை உடைத்து.
மகள் பேசியதில் கண்ணீர் பெருகிட, "வாடி, இப்பயே உன் மாமனும் பிடி குடுத்து பேச மாட்டிக்கிறான், தேவாவும் ஒரு போன் பண்ணாக தெரியல, இதுல நீ இப்டியே ஏடாகுடமா பேசி, இந்த வீட்டுலையே இருந்து காலம் எல்லாம் என் வீடுகாருக்கும், மகனுக்கும் சுமையாவே நின்னுடு"
ஒருமுறை தவறிப்போன நல்வாழ்க்கை மீண்டும் பாதாளத்தில் விழுந்திடுமோ என்ற ஆற்றாமையை யோசிக்காமல் பாதிக்கப்பட்டவளிடமே கொட்டினார்.
"செத்தாலும் சாவேனே தவற, இந்த வீட்டுக்கு பாரமா ஒரு நாளும் இருக்க மாட்டேன்... போதுமா?" வாடிக்கிடந்த மனம் வெம்பி வெடித்து சிதற, தாங்காத காயத்தோடு அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள் பைரவி.
பெருகி வந்த கண்ணீரை துடைத்து உடைகளை எடுத்து வைத்தவள் அன்னையிடம், "எங்க வீட்டுக்கு போறேன்" என மதுரை கிளம்பிவிட்டாள்.
வீட்டில் ஆண்களும் இல்லாமல் இருக்க சீதாவிற்கு மகளின் வாழ்க்கை சீராக வேண்டுமென அவளை தடுக்கவும் இல்லை. தனியாக திருமணத்திற்கு முன்பு வந்து சென்றவள் என்று தானே அதிக சிரத்தையும் எடுக்கவில்லை.
வேகத்தில் வந்தவள் பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் திணறிப்போனாள். பாழாய்ப்போன நினைவுகள் அனைத்தும் மீண்டும் கண் முன்னே வந்து நிற்கின்றன.
இன்று கூட்டமும் அங்கு அதிகமிருக்க தங்கள் பேருந்து வந்ததும் சிலர் எதார்த்தமாக அவளை உரசி சென்றது கூட உதறலை தந்தது. பேருந்து நிலையம் செல்லும் பேருந்து சில வந்தும் கூட அதில் ஏற மனமில்லாமல் சிதைந்த நினைவுகளோடு மூலையில் ஒதுங்கி நின்றிட கோவமாக வந்தது.
எல்லாம் தேவா மேல் தான். கோவம் என்ன கோவம்? கண் மண் தெரியாத அளவிற்கு கோவம் வந்து இன்று தான் தானே அவஸ்தைப்படுகிறேன்? அவன் தங்கை நிம்மதியாக அன்னையின் கைகளுக்குள்ளும் தந்தை சகோதரனின் பாதுகாப்பிற்குள்ளும் இருக்கிறாள். தானோ வீதியில்.
கோவம் அதிகமாக அது கண்ணீராய் மாறி நின்றது. கைபேசியை எடுத்தவள் அதே கோவத்தோடு அவனுக்கு அழைக்க சில நொடிகளில் அழைப்பை ஏற்றுவிட்டான்.
எடுத்த உடனே அவனை பேசவிடவில்லை, "இப்டி பாதிலையே விட்டுட்டு போக தான் கல்யாணம் பண்ணி இவ்ளோ நம்பிக்கை குடுத்தீங்களா? உங்க தங்கச்சிக்காக நீங்க சண்டை போட்டு நினைத்து எவ்ளோ சரியோ, அதே பிடிவாதத்தை நான் வச்சு கேக்குறது தப்பா இருக்கு.
உங்க அம்மா என்ன திட்டுனப்பையும் தடுக்கல, என் அம்மா என்ன அடிச்சப்பயும் கூட நிக்கல. எல்லார் பண்ணதும் சரி ஆனா ஒரு காதல் பிரிய கூடாதுன்னு நினைச்ச நான் தப்பு செஞ்சவ.
சரி இந்த பாவி கூட இனிமேல் நீங்க பேச வேணாம். பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு அப்டி ஒன்னும் என் கூட"
"பைரவி" தேவாவின் கண்டிப்பு குரலை உதறினாள்.
"...வாழணும்னு யாருக்கும் அவசியமில்லை. உங்க இஷ்டம் போல இருங்க. போதும் நான் எல்லாருக்கும் பாரமா இருந்தது" இணைப்பை துண்டித்து கையிலிருந்த பையில் கைபேசியை திணித்தவள் அடுத்து வந்து நின்ற மணி பஸ்ஸில் ஏறிவிட்டாள்.
கண்ணில் பட்ட முதல் இருக்கையில் அமர்ந்தவள் கண்ணீர் நிற்க வழியில்லாமல் வழிந்துகொண்டே இருக்க, முகத்தை ஜன்னலோரம் திருப்பி கண்களை மூடிக்கொண்டாள்.
எதற்காக தேவாவிற்கு அழைத்தோம் என்று கூட தெரியவில்லை, தேவையில்லாததை பேசி சண்டையிட தானோ என்னவோ.
ஆனால் ஒன்று மட்டும் அவள் ஏற்க மறுத்தது உண்மை. அவன் குரலையாவது கேட்க வேண்டும் என உள் மனம் அடித்துக்கொண்டது. அது யாசகம் பெறவோ, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கவோ இருக்கக்கூடாதென்பதிலும் உறுதியாக இருந்தாள்.
ஒரு வரி கவிதை சில சமயம் மனதிற்கு போதையூட்டுவது போல் அவன் ஒரு வார்த்தை தைரியம் ஊட்டியது. அவனே உடன் வருவது போல்.
சந்தோஷ் வேறு தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருக்க எடுத்தபாடில்லை, அடுத்தது குறுந்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தான், 'எங்கடா இருக்க, சொல்லு அண்ணன் வர்றேன்' என.
அதை அனைத்து வைத்துவிட்டாள். பேருந்து நிலையம் வந்ததும் இறங்கியவள் ஒரு நிழற்கூரையின் கீழ் நின்றாள் அந்த அகன்ற நிலையத்தை பார்த்தாள்.
முதலில் மதுரை சென்று தாய்மாமன் இல்லம் சென்றிடலாம் என தான் வந்தது, அதன் பிறகு அவனிடம் பேசியதில் இனி அங்கும் செல்ல இயலாது. தவித்து நின்ற தருணம் மீண்டும் எட்டிப்பார்த்த கண்ணீர் கண்ணிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்க கையிலிருந்த கைப்பை மேல் பைரவியின் இறுக்கம் கூடியது.
தடாலடியாக ஒரு கரம் அவள் கையை பற்றி இழுத்திட அன்னை சகோதரனை ஏவியிருப்பார் என பயந்தவள், "அண்ணா..." என அதிர்ந்து திரும்பிட, "திருத்தம். புருஷன்" என்ற கூரிய பார்வையோடு தேவா நின்றான்.
அவன் மனைவியை முறைத்து இழுத்து செல்ல திமிராமல் அவன் வழி நடந்தாள் பெண்ணவள். பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வர அங்கு அவனது வாகனம் நின்றிருந்தது. அதன் அருகில் அவள் சகோதரனும்.
தேவா வந்ததே வியப்பை தந்திருக்க இருவரும் ஒன்றாக நின்றது சந்தேகத்தை தந்தது.
சகோதரியை பார்த்ததும் வாடியிருந்த முகம் சற்று தெளிச்சியடைந்தது சதோஷிர்க்கு, "பாப்பா என்ன இது பழக்கம்? யார்கிட்டயும் சொல்லாம உன்வாட்டுக்கு கெளம்பி வர்றது?"
"என்ன சுமையா நினைச்ச வீட்டுல எனக்கென்ன வேலை?"
"அம்மா சொன்னாங்களா அப்டி?" பயம் நீங்கி கோவம் இடம்பெற்றது சந்தோஷ் முகத்தில்.
"விடு சந்தோஷ், நாங்க கெளம்புறோம்" என்றான் தேவா.
"நான் உங்க கூட வரல" என்றாள் முறுக்கிக்கொண்டு.
"எங்க போவ?"
"எங்கையாவது போறேன், விட்டுட்டு போனவர் தான நீங்க... எதுக்கு புதுசா அக்கறை வருது?"
சந்தோஷ் ஏதோ பேச வர அவனை அனுப்பி வைத்து மனைவியை வலுக்கட்டாயமாக வாகனத்தினுள் திணித்தான் பொருளை போல.
வாகனம் மதுரை நோக்கி பயணப்பட தேவா பக்கமே திரும்பவில்லை பைரவி. மதுரையை தாண்டியதும் ஆள் அரவமில்லாத ஒரு காலியிடத்தில் வாகனத்தை நிறுத்தி அவளை திரும்பி அமர்ந்துவிட்டான் தேவா.
ஐந்து நிமிடம் பத்து நிமிடம், அரை மணி நேரம் கடந்திருக்க, அவன் பார்வை தன்னை துளைப்பதையும் தெரிந்து கவனிக்காதது போல் அமர்ந்திருக்க பசி மயக்கம் பார்வையை மந்தமாக்கியது. தண்ணீரை கூட எப்பொழுது இறுதியாக அருந்தினோம் என நினைவில் இல்லை.
பசியே கோவத்தை தூண்டிவிட தலை திருப்பாது, "என்ன எதிர் பார்த்து நிக்கிறிங்க?" என்றாள் கடுகடுத்து.
"உன்னோட பார்வை"
புசுபுசுவென ஆத்திரம் அதிகரித்தது, அவனை திரும்பி முறைத்தவள், "ரொம்ப நடிக்காதிங்க. பார்வையை எதிர்பார்த்து நின்னவர் தான் பத்து நாள் உயிரோட இருக்கேனா செத்துட்டேனான்னு கூட கேக்காம இருந்திங்களாக்கோம்"
"கோவம் பைரவி"
"அப்போ ஒவ்வொரு தடவை கோவம் வரும்போதும் இப்டி தான் நான் என் அப்பா வீட்டுக்கு வந்துடனும், அம்மா வெளக்கமாத்த எடுத்து விரட்டாத குறையா பேசுவாங்க.
பாரம்னு சொல்லுவாங்க, தங்கச்சிக்காக எனக்கு நீங்க வாழ்க்கை கொடுத்ததை பத்தியும் ஒவ்வொரு முறையும் சொல்லி என்ன குத்தி கிழிக்கட்டும்.
இதே மாதிரி ரெண்டு வாரம் ஒரு மாசம்னு உங்களுக்கு கோவம் போனதும் நீங்க வந்து கூட்டிட்டு போய் மறுபடியும் இரக்கப்பட்டு அன்ப காட்டி நடு தெருவுல லூசு மாதிரி அழுக வைங்க"
கண்ணீர் தத்தளித்து நிற்க துவங்கியது. கலக்கம் நிறைந்தவள் விழிகளை பார்த்தவன் அவள் கையை மென்மையாய் பற்றிட அதை தட்டிவிட்டு, "தொடாதிங்க. ஒரு நாள் கூட என் நியாபகம் வரலல உங்களுக்கு? ஆனா எனக்கு உங்கள பத்தி மட்டும் தான் சிந்தனை. காலைல, மதியம், நைட்-னு எப்போ சாப்பாட பாத்தாலும் அன்னைக்கு நீங்க சொன்னது தான் நியாபகம் வருது. பக்கத்துல நாம இருக்கணுமேன்னு மனசு கெடந்து தவிக்கிது"
"எண்ணம் இல்லாம எப்படிடி சக்கரை?"
"அப்டி சொல்லாதீங்க. இந்த சக்கரைல தான் நான் விழுந்ததே" தொடர்ந்து அவள் அழுத அழுகையில் கன்னங்கள், நாசி எல்லாம் சிவந்து போனது. தொண்டை அடைத்து வார்த்தைகள் கூட கனத்தது.
"எனக்கு ஒரு சந்தேகம்" அவனை போலவே வாகாக திரும்பி அமர்ந்துகொண்டாள் கேள்வி கேட்க ஏதுவாக.
ஏதோ வில்லங்கமாக வர போகிறதென உணர்ந்தவன் அமைதி காக்க, "இத்தனை நாள் என் அண்ணன் உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்குவாங்கனு நம்பிக்கைல என்ன நல்லா பாத்துகுட்டிங்க, இப்போ அது இல்லனதும் என்ன விட.." பேசியவள் வார்த்தை அப்டியே சிறைப்பட்டு போனது தேவாவின் இதழ்களுக்குள்.
ஒரே நொடி உரசிய இதழ்களின் ஈரம் இருவரின் மனதிலும் தணலை கிளறியிருக்க மெய் மறந்து அவன் விழி அருகே சுவாசம் செய்யும் அவள் மூச்சு காற்றின் மேலும் கூட காதல் கொண்டான். தேனை உறிஞ்சும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் போதை ஏறியது தேவாவிற்கு.
சிரிப்போடு இரு இன்ச் இடைவெளி விட்டு அவள் முகம் பார்த்தவன் சிவந்து முத்தம் கேட்டு காத்திருக்கும் அவள் கண்ண குழிக்கு சத்தமின்றி முத்தம் பதித்து மௌன யுத்தம் செய்திருந்தான்.
"தேவா உயிரோட இருக்க வர அவன் சக்கரையை விட மாட்டான்-னு இத விட அழுத்தமா கூட என்னால உனக்கு புரிய வைக்க முடியும்" முகம் சர்வசாதாரணமாக இருந்தாலும் விழிகள் குறும்பில் கூத்தாடியது ஆடவனுக்கு.
"உன்ன ரொம்ப பேச விட்டுட்டேன்... மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டியாச்சுனா நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ சக்கரை... யாருக்காகவும் உன்ன நெருங்கியும் வரல, யாருக்காகவும் உன்ன விட்டு விலகியும் போக மாட்டேன். விட்டுட்டு போனது தப்பு தான். நான் கூப்ட்டு வர மாட்டேன்னு நீ சொன்னதும் வீம்புல போடி-னு போய்ட்டேன்" என்றான் குற்றத்தை ஒத்துக்கொண்டு.
"எங்க கூப்பிடுங்க? ஒரு தடவ பேருக்கு வர்றியான்னு கேட்டீங்க. அவ்ளோ தான். வரல சனியன் போச்சுன்னு தானே ஓடுனீங்க?"
அவள் இடையோடு கைகள் கோர்த்து இறுக்கமாக பற்றினான், "ஏண்டி இப்டி எல்லாம் பேசுற? அப்டி நினைச்சிருந்தா இன்னைக்கு இங்க வந்து நின்னுருப்பேனா?" என்றான் பாவமாக.
"எதாவது வேலையா வந்துருப்பீங்க, நான் கால் பண்ணவும் என் அம்மா மாதிரியே எங்கையும் ஓடிடுவாளோ மானம் போய்டுமோனு பயந்து ஓடி வந்திங்க"
அதிகம் பேசும் அந்த தாடையினை பற்றி அருகில் தன்னோடு இழுத்தான் சிவந்த விழிகளோடு, "அறைஞ்சிடுவேன் பைரவி வாய மூடிடு"
அவள் முகத்தை சற்று பின்னால் தள்ளிவிட்டவன் தன்னுடைய சட்டை பட்டன் மூன்றை வேகமாக அவிழ்க்க அவனது ஆத்திரத்தில் பேச்சற்று அமர்ந்திருந்தாள் பைரவி.
பாதி அவிழ்த்திருந்த அந்த உடையை நன்றாக திறந்து அவளுக்கு முதுகு காட்டி அமர, அப்பொழுது தான் அவனது இடது முதுகை கவனித்தாள்.
பெரிய கட்டு ஒன்றை போட்டிருந்தான்.
அது வரை வீம்பாக இருந்த பைரவியால் இதற்கும் மேல் சோகத்தையோ கோவத்தையோ கடைபிடிக்க இயலவில்லை. தத்தளித்த மனம் அவன் காயத்தின் அளவை பார்த்து கூப்பாடுபோட்டது, முன்பு கோவத்தில் வழிந்த கண்ணீர் எல்லாம் இப்பொழுது வேதனை மிகுதியில் வெளியேறியது.
பயத்தோடு அவன் முதுகினில் கையை வைக்க போனவள் செயல் உணர்ந்து, "கை எடுடி..." வேகமாக வந்த அவன் வார்த்தைகளை விட அதி விரைவாக சட்டையை அணிந்தவன் அவளை பார்த்து உஷ்ணமாக,
"இதுனால தான் வரல, போதுமா? இன்னைக்கு தான் ஹாஸ்பிடல்ல இருந்து நேரா இங்க வர்றேன். ஒடனே என்ன என்னமோ பேசுறா. இந்த திடீர் பாசம் எல்லாம் இங்க வேணாம் சொல்லிட்டேன்"
"உங்ககிட்ட சண்டை போடுற நிலமைல நான் இல்ல, என்ன இது கட்டு? ஆழமா தெரியுது... எப்படி ஆச்சு? டாக்டர் கிட்ட போனீங்களா இல்ல உளூர்ல இருக்க செடிய எடுத்து வச்சிட்டு டிரீட்மென்ட்-னு சொல்றிங்களா? சரி வாங்க இப்ப டாக்டர் பாத்துட்டு போகலாம்"
படபடத்தவள் அவனை கேள்விகளால் துளைத்து பதில் கொடுக்க நேரமே கொடுக்காமல் பேசியவளை சட்டையே செய்யாமல் வாகனத்தை உயிர்ப்பித்து கிராமத்தை நோக்கி செலுத்தினான்.
"ஆனந்த் ஹாஸ்பிடல்..."
"வாய மூடிட்டு வாடி பல்ல ஒடைச்சிடுவேன், பேசுறதெல்லாம் பேசிட்டு அக்கறை காட்டுறாளாம். ஏன்டி நீ பேசுறது உனக்கே கூசலையா? நீ ஓடிப்போவ-னு ஒரு நாள் யோசிச்சிருப்பேனா? இல்ல அந்த பயத்துல தான் உன்ன நெருங்கிருப்பேனா?" கோவம் கொப்பளிக்க மொழிந்தவன் கைகளில் வாகனம் மின்னல் வேகத்தில் பாய்ந்தது.
பயத்தில் அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்த பைரவி, "மெதுவா போங்களேன் ஏதோ தெரியாம கோவத்துல சொல்லிட்டேன்"
"நீ பேசுனா கோவத்துல தெரியாம சொல்லிருப்ப, நான் பல மாசம் பிளான் பண்ணி ஸ்கிரிப்ட் எழுதி வச்சு பேசிருப்பேன். அதான?"
அவனது வேகத்தை கட்டுப்படுத்த தெரியாமல் தவித்தவள் பிடிமானத்தையும் துறந்து அவனை நெருங்கி வர, இருவருக்கும் இடையில் இருந்த அந்த கியர் வைக்கும் இடைவெளி கூட பெண்ணுக்கு பயம் தந்தது. அதை தாண்டி அவன் கைகளை பற்றி தலையை அதில் சாய்ந்துகொண்டாள்.
"ஏ நகருடி. மனுஷன் என்ன நிலமைல இருக்கானு யோசிக்காம கண்ட வார்த்தையை விடுவா. பைத்தியம், லூசு, அறிவில்லாதவ. நல்லா வீங்குற அளவு வாய அடிச்சு ஒடைக்கணும் அதுக்கு அப்றமாவது தோணுனத எல்லாம் பேசாம யோசிச்சு பேசுவா" சகட்டுமேனிக்கு மனைவியை திட்டிக்கொண்டே வந்தவன் எந்த நிலையிலும் அவளை தன்னை விட்டு விலகி மட்டும் நிறுத்தவில்லை.
"தெரியாம பேசிட்டேனு சொல்லிட்டேன்ல? ஆனாலும் உங்க அம்மா பேசுனப்பையும் நீங்க எதுவும் கேக்கல, என் அம்மா என்ன அத்தனை பேர் முன்னால அடிச்சபையும் அவங்கள தடுக்கவும் நீங்க வரல"
"உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை" வார்த்தைகளுக்கு மாறாக பைரவியை மெல்ல மெல்ல தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டான்.
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தில் தன்னுடைய உயிருக்கு ஒரு நொடியில் ஆபத்து விளைந்திடுமோ என்ற பயத்தை விட மனைவியோடு இனிமையான வாழ்க்கையை வாழாமலே போயிருந்தால் என்ற எண்ணமே கசந்தது.
அன்று காளைகளை குளத்திற்கு அழைத்து சென்றவன் அவற்றுக்கு நீச்சல் பயிற்சி முடித்து வயக்காட்டில் பயிற்சி கொடுக்க காத்திருந்த பொழுது எங்கிருந்து தான் வந்ததோ சீறி பாய்ந்த அய்யனாரின் காளை.
நொடியில் தேவாவை நெருங்கியிருக்க அதன் பின்னோடு வேகமாக ஓடி வந்த அய்யனாரின் ஆட்களின் உரத்த குரலில் திரும்பிய பொழுது இடது முதுகோரம் அதன் கூரிய கொம்பு உரசி, அதுவே ஆழமான காயத்தை கொடுத்தது.
இதுவே சுதாரிக்காமல் போயிருந்தால் இந்நேரம் அவன் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும்.
அந்த காளையோ அதோடு நிறுத்தாமல் மேலும் தேவாவை நெருங்கி வர பார்க்க அவனுக்கு அரனாய் அய்யனாரின் காளையை பக்கவாட்டிலிருந்து முட்டி தள்ளி நிறுத்தினான் காளையன்.
தன்னை தடுத்த காளையனை வெறி கொண்டு தாக்க வந்த அய்யனாரின் காளையை அசராமல் திமில் திமிர வேல்விழிகள் கூர் ஈட்டியாய் மாற்றி சண்டைக்கு நிற்க அவ்விடத்தில் இரண்டு காளைகளுக்கு நடுவில் சில நிமிடம் அங்கு சிறு யுத்தமே நிகழ்ந்தது.
"காளையா நிறுத்து" தேவா சத்தமிட்டு அழைத்தும் பயன் இல்லை, அய்யனாரின் ஆட்கள் அவர்கள் காளையை பிடிக்க முயன்றும் இரண்டு காளைகளின் சண்டை தீவிரமடைந்ததே தவிர குறைந்தபாடில்லை.
"யண்ணே தண்ணி எடுத்தார சொல்லு... டேய் கயித்த இங்கன குடு" தன்னுடைய காளையனை பிடிக்க தேவா முயற்சிக்க அய்யனாரின் ஆட்கள் துரிதமாக தண்ணீரை பிடித்து வர அவற்றின் மேல் தண்ணீர் பாய்ந்ததும் தான் கொம்பினை வளைத்து நெற்றி முட்டி சண்டையிடுவதை நிறுத்தினர்.
"ஏடெய் என்ன சண்டை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது, கரைச்சல் குடுத்தீங்கன்னு வையி, காட்டுல தடையாமே தெரியாம பொதைச்சிடுவேன்" எகிறிக்கொண்டு செல்லும் வெற்றியை தடுத்தார் இல்லை.
"எப்பா டேய், என்னமோ நாங்க மாட்ட வேணும்காட்டி அவுத்து வுட்ட மாதிரி பேசுறாய்ங்க, எங்க கை மீறி ஏதோ கோவத்துல வந்துடுச்சு. தேவா, பஞ்சாயத்து ஆயிரம் இருந்தாலும் உசுர பொலி போடுற கணக்கா நாங்க இல்ல. மன்னிச்சுக்கோ ய்யா" என்றார் மாட்டை பயிற்றுவிக்கும் ஒருவர்.
காளையனையும் அய்யனாரின் மாட்டையும் பார்த்துக்கொண்டிருந்த தேவாவின் சட்டையை அவிழ்த்து பார்க்க ரத்தம் இன்னும் நிற்கவுமில்லை காயமும் ஆழமாக பட்டிருந்தது.
பாசத்தை மட்டுமே காட்டியவன் உயிரை காவல் தெய்வம் போல் காத்து கொடுத்த அந்த காளையனை நினைக்க நினைக்க தேவாவிற்கு நெஞ்சு இறுமாப்பில் விம்மியது.
"பாருயா இன்னும் கொஞ்சம் தள்ளி குத்திருந்தா உசுருக்கே ஆபத்து தான், குரல் கொலைஞ்சு ரெண்டு வார்த்தை பேசுனா நாங்க நம்பிடுவோமா? அத்தனை பேர் இருக்கப்போ நேரா இவன பாத்து என்னாத்துக்கு மாடு வரணும்? இத நாங்க எப்படி பாக்கணுமோ அப்டி பாத்துக்குறோம்... நீ வா பங்கு வண்டில ஏறு" என குணா கோவமாக பேசி தேவாவை அவ்விடத்தை விட்டு அகற்றினர்.
காயத்தின் அளவு தீவிரமாக இருக்க மருத்துவமனை வாசம் தான் மூன்று நாள் என உறுதியாக மருத்துவர் கிடுக்கு பிடியாக பிடித்துவிட அசைய முடியவில்லை தேவாவால்.
ஒரு பக்கம் உயிரை மீட்டெடுத்த காளையனை பார்க்கும் ஆவல், மற்றொரு பக்கம் மனைவியை சென்று சேர ஏக்கம் என தத்தளித்தான் தேவா.
"பைரவி பாக்கணும்" சிறு குழந்தை போல் அடிக்கடி புலம்பும் நண்பனை அதட்டி மிரட்டி ஓரிடத்தில் அமர்த்தி வைத்தனர்.
அதன் பிறகு மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பியும் கூட அதிகம் சிரத்தை எடுத்து வேலை செய்ய முடியவில்லை, வேலை நடந்த இடங்களில் நின்று மேற்பார்வை செய்வதோடு நிறுத்திக்கொண்டான்.
இழுத்து போட்டு வேலை செய்ய முடியாத காரணத்தால் மனைவியின் எண்ணம் அதிகம் வந்து இம்சித்தது.
தன்னை கேள்வியாக பார்த்த அந்த கண்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டுமென கிளம்பிவிட்டான் விருதுநகருக்கு. முதலில் சென்று மனைவியை பார்க்காமல் மச்சினனை சந்திக்க கடைக்கே சென்றான்.
தேவாவை எதிர் பார்க்காத சந்தோஷ் சண்டையிட தான் வந்தானோ என்று பயந்தே போனான். ஆனால் தேவா அன்று ஆவேசமாக நடந்ததற்கு மன்னிப்பு வேண்டி வீட்டிற்கு செல்ல அப்பொழுது தான் சீதா மகள் வெளியில் கிளம்புவது சொல்ல அத்தையை முறைத்து வந்தவனுக்கு அவளே அழைத்து பேசியது கேட்டு வந்து பேருந்து நிலையத்தில் பிடித்துவிட்டனர்.
"கை வலிக்கும் ஆனந்த்" அழுதுவிடும் துக்கம் அவளிடம்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர வலிச்சாலும் உன்ன பாக்க, உன்ன என்ன சொல்லி சமாளிக்க-னு யோசிச்சிட்டே வந்ததுல வலியே தெரியல" அப்போ இப்பொழுது வலி உள்ளதோ மனத்தினுள்ளே மருகியவள் வாகனத்தை பிடிவாதமாக நிறுத்த கூறி சாதித்தும் விட்டாள்.
வாகனம் நின்றதும் கதவை திறந்து இறங்கி வந்தவள் அவனை பார்த்து வம்படியாக, "இறங்குங்க" என்றாள்.
"என்ன நீ வண்டி ஓட்ட போறியா?" என்றான் கேலியும் கேள்வியுமாக.
"ஆமா" என்றாள் தயக்கமே காட்டாமல். கலவரம் தெரிந்த அந்த பார்வையில், "கை ஒடஞ்சது பத்தலையா காலையும் ஒடைச்சு மொத்தமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக போறியா?"
"நான் மைசூர்ல இருந்தப்போ ட்ரிவிங் கிளாஸ் போனேன்"
அவளை மேலும் கீழும் பார்வை பார்த்து, "இருக்கட்டும் நானே ஓட்டுறேன்" மறுத்தான் தேவா.
அவளோ பிடிவாதமாக அவனை விலக்கிவிட்டு தானே ஓட்டுநர் இருக்கையில் அமர வாகனத்தை மேலும் கீழும் சில நொடிகள் ஆராய்ந்தாள், "சரியா போச்சு போ" முணுமுணுத்த தேவா ஒய்யாரமாக சாய்ந்து அவளை ஆராய்ச்சியை கவனித்தான்.
அனைத்தையும் பார்த்தவள் வாகனத்தை உயிர்ப்பித்து மெதுவாக செலுத்த மனம் அடித்து சொன்னது இவள் அரை மணி நேர பயணத்தை ஒரு மணி நேரம் ஆகிவிடுவாள் என.
அதையே சாதகமாக எடுத்துக்கொண்ட தேவா பத்து நாட்கள் அவளை காணாமல் தள்ளி வைத்திருந்த ஆசை எல்லாம் இணைத்து ரசிக்க துவங்கினான்.
பல முறை தேவா கேட்டு புடவை அணியாதவள் மாற்று உடை எதுவும் எடுத்து வராத காரணத்தால் வேறு வழி புலப்படாமல் புடவை எடுத்து அணிந்திருந்தாள்.
தேவா முன்பு சற்று அவள் மெலிந்த உடலை தேத்தியிருக்க இப்பொழுது மீண்டும் மெலிந்து காட்சியளித்தாள். தன் பிரிவு அவளை வருத்தியது என எண்ணிய நொடி வருத்தமும் ஆனந்தமும் ஒருங்கே வந்தது.
மனைவி சில நிமிடங்கள் முன்பு திட்டியது கூட இனிய கீதமாக ஒலித்தது அவனுக்கு பற்களை காட்டிக்கொண்டே கேட்டவனை அருகில் இருந்த சந்தோஷ் கூட விசித்திரமாக பார்த்தான்.
'ஹீஹீ பொண்டாட்டி லவ்' என்றான் சமாளிப்பாக.
இப்பொழுது கூட கோபமில்லை வருத்தம் அவளது பேச்சில். நம்பிக்கை இல்லாமலா அவளோடு இருக்கிறான்?
காற்றில் ஆடிய கற்றை கூந்தல் எத்தனை அடக்கினாலும் திமிறிக்கொண்டிருக்க ஜன்னலை பைரவி அடைக்க அந்த காற்று செய்த உதவியில் அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்த தேவாவிற்கு ஏமாற்றமாக போனது.
மீண்டும் அதனை திறந்து வைத்தான். சாலையில் ஒரு கண்ணை வைத்து தேவாவை திரும்பி பார்க்க அவனது கள்ள பார்வை உணர்ந்து முகம் சிவந்தது ஆடையை சரி செய்ய அவளது அழகினில் மயங்கி விழுந்தான் அவன்.
மந்தார சிரிப்போடு கண் மூடி பின்னால் தலை சாய்த்தவன் கண்கள் அதிக நேரம் மூடியிருக்கவில்லை, அதே நிலையில் தலை திருப்பி அவளை மீசை துடிக்கும் சிரிப்போடு பார்த்தான்.
பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் உணர்வு அவனை காட்டிக்கொடுக்க வெட்கம் பிடிங்கு தின்றது பைரவியை, "ஆனந்த்" சினங்களோடு எச்சரிக்கை வந்து விழ தேவாவின் புன்னகை மேலும் விரிந்தது.
நிழலில்லா வானவில் பல வர்ணங்களை துறந்து முழுதும் சிகப்பாய் உருமாறி நிற்பது போல் அழகான காட்சி அது. ரசித்தான் அனைத்தையும் மறந்து.
"புடவை அடிக்கடி கட்டு சக்கரை" தேன் குழைத்த குரலில் அவன் கூற சக்கரை பாகாய் இனித்தது.
இந்த அழைப்பை கேட்டு எத்தனை நாட்கள் ஆகியது. உணர்ச்சிகள் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அதையும் ரசனையை பார்த்தான், "இவ்ளோ அழகா சக்கர நீ" என அதிசயித்தான்.
இதழ் கடித்து சிரிப்பை விழுங்கிய பைரவி வாகனத்தின் வேகத்தை சற்று அதிகரித்து திசை திருப்ப முயன்றாள். எதற்கும் அசருபவனா அவன்? இன்று அவளை பார்வையாலே ரசித்துவிட்டு முடிவெடுத்துவிட்டான். நிறுத்தும் வழி தான் இல்லை. காமத்தை தாண்டிய ரசனை அவனுடையது. மனைவிக்கு தவறாக தெரியவில்லை.
சிரிப்பை அடக்க முயன்று சிரமப்பட்ட பைரவிக்கு இதழ் கடித்து வந்ததே அலுப்பை தர அவசர அவசரமாக ஓட்டினாள் வாகனத்தை.
அவனும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மனைவியின் கையில் உயிரை ஒப்படைத்து வேறு வேலையை கவனிக்க துவங்கிவிட்டான். பல திருத்தங்கள் இருந்தது அவள் வாகனம் செலுத்துவதில், குறித்துவைத்துக்கொண்டான் பிறகு அவளிடம் சொல்ல.
"கோவம் போச்சா?" என்றாள் அவள்.
"போய்கிட்டே இருக்கு" கள்ளச்சிரிப்புடன் தேவா கூற வலிக்காமல் அவன் காலில் ஒரு அடி வைத்தாள்.
"காளையான பாக்கணும் போல இருக்கு" நொடியில் சிரிப்பு மறைந்து கண்ணீர் ஆக்கிரமித்தது அவள் கண்களில்.
"எதுக்கு இந்த எமோஷன்?"
"அவன் மட்டும் இல்லனா..." விழுக்கென கண்ணீர் ஒன்று விழுந்தது. அவனின்றி யோசிக்க கூட முடியவில்லை. யாதுமாகி நின்றான்.
வாழ்க்கையின் முன் பக்கங்களை இனியும் திருப்பி பார்க்காமல் முன்னோக்கி செல்ல மட்டுமே தவித்தது மனம். அவன் இல்லையென்றால் அதற்க்கும் வழியில்லாமல் தேங்கிவிடுமே அவள் வாழ்க்கை.
"விடு அதான் ஒன்னுமில்லைல. நம்ம ஊர் மாரியம்மனுக்கு பொங்க வக்கிறேன்னு ஆச்சி வேண்டிக்கிட்டாங்க போல. ம்ம்ம் பொங்கல்-னு சொன்னதும் தான் நியாபகம் வருது பொங்கல் ரெண்டு நாள் முன்ன எல்லாம் விருதுநகர் போக முடியாது.
முதல் நாள் அலங்காநல்லூர்ல ஜல்லிக்கட்டுக்கு போகணும். உன்ன வேனா சனிக்கிழமை விட்டு வரவா, இல்ல உன் அண்ணன் நாளைக்கு பொங்க சீர் குடுத்து அழைக்க வர்றோம்-னு சொன்னான் அவன் கூட போறியா?"
"உங்ககூட வர்றேன், எப்படா பொண்டாட்டி ஊருக்கு போவா ஊர்ல இருக்க முறை பொண்ணுங்கள சைட் அடிக்கலாம்ணே காத்துட்டு இருக்கீங்க?" வார்த்தைகளில் உஷ்ணம் தெரிய அவள் கண்களிலோ விளையாட்டு பாவம்.
"அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி சக்கரை, இப்ப அய்யா ராமன்"
"அதான் பாத்தேனே... என்கிட்ட சண்டை போட்ட அன்னைக்கு. அவ்ளோ கலவரத்துலையும் பொண்டாட்டிகிட்ட ஒரு பாய் சொல்லல. நிவிகிட்ட சிரிச்சிட்டே பேசிட்டு போனீங்களே"
நியாபகப்படுத்தி கேள்வி கேட்டவள் அதோடு நிறுத்தாமல், "ஆமா அது என்ன குற்ற உணர்ச்சில கல்யாணம் பன்னேனு சொன்னிங்க?"
"அது... அது நீ அழுததை நான் பாத்தேன்ல மனசுக்கு கஷ்டமா போச்சு" என்றான் சமாளிப்பாக.
"இல்ல வேற ஏதோ அர்த்த.."
"அடடே வீடு வந்துடுச்சு, பொண்டாட்டி வண்டிய இங்கனையே நிறுத்து உள்ள லோட் ஏத்த பொருள் இருக்கு" வாகனத்தை முழுதாய் பைரவி நிறுத்தும் முன்பே குதிப்பது போல் இறங்கி அவசரமாக ஓடிவிட்டான்.
அவனை பின்தொடர்ந்தவள் அந்த பேச்சை கைவிட்டு காளையனிடம் அழைத்து செல்ல கேட்க அவனும் மறுக்காமல் அழைத்து சென்றான்.
தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே இரண்டு கயிற்றினால் கட்டப்பட்டிருந்த காளையனின் கம்பீரம் எவருக்கும் சிலிர்ப்பை கொடுக்கும் உடலில்.
இதில் அவள் நெருங்கும் நேரம் குனிந்து தலை சாய்த்து கொம்பினால் மண்ணை வெட்டி வீசிய அந்த கம்பீரத்தில் நொடி ஒன்று தடுமாறியது பைரவியின் தைரியம்.
அவள் பயத்தை உணர்ந்தவன் அவள் கை பற்றி, "தூரத்துல இருந்தே பாத்துக்கோ சக்கரை" என்ற சொல்லோடு தான் அழைத்து சென்றான்.
பைரவியின் செவிப்பறையில் அது எதுவுமே விழவில்லை. பல முந்தைய கால புத்தகங்களில் சொற்ற்றாடலில் குறிப்பிட்டிருந்த காளைகளின் தத்ரூப உருவமாய் நின்றான் இவன்.
சிறு சதைப்பற்றும் இல்லாமல் இறுகிய உடலில் கிரீடம் போல் திமில், வரிந்து கட்டும் கூறிய விழி, ரத்த திலகம் வைத்தது போல் நெற்றியில் சிவப்பு பொட்டு, வீச்சரிவாள் போல் இரண்டு கூறிய கொம்பு.
அப்பப்பா! கம்பீரத்தின் அர்த்தம் இவனிடம் வந்து கற்றுக்கொள்ளுங்கள் என செவிப்பறை கிழிய கத்த வேண்டும் போல் இருந்தது.
அவள் மயங்கி நின்றது அவன் கம்பீரத்தினால் மட்டுமல்ல, மனிதரை விட பல மடங்கு உயர்ந்து நிற்கும் அதன் பாசத்தின் மீதும் ஈர்ப்பு உண்டானது.
தேவாவின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் அதனை நெருங்கி முகத்தை இரு கைகள் கொண்டு பற்றி அதன் நெற்றியிலே முட்டி கண்ணீராலே நன்றியை தெரிவித்து நின்றாள்.
தேவாவிற்கு பயம் கலந்த அதிர்ச்சி.
அவளை எதுவும் செய்துவிடுவானோ என்ற பயம், அதே நேரம் தான் அருகில் சென்றால் அமைதியாக இருப்பவன், தேவா அவனை கொஞ்ச நினைத்தால் சிலுப்பிக்கொண்டு செல்பவன் இன்று பைரவியிடம் அப்பாவி குழந்தையாய் நிற்க நம்ப முடியவில்லை.
ஆனால் அவன் செய்ய நினைத்ததை பைரவி செய்ததிலும் மகிழ்ச்சி.
பைரவிக்கு, தன்னுடைய உயிரையே மீட்டி கொடுத்தவனிடம் தன்னை குத்தி கிழித்து கொன்றாலும் பரவாயில்லை என ஆற தழுவி நன்றியை தெரிவிக்க அசையாது நின்றான் காளையன்.
அவனுக்கு தெரியாதா அவளை? பல நாட்கள் நெருங்கி வருபவள் ஆசையாக தன்னை பார்த்து பிறகு பயந்து நடுங்கி புலி வேந்தனை மட்டும் கொஞ்சி உணவூட்டி ஓடுவது அவள் வழக்கம். அவள் கண்களில் இருந்த ஆசை தெரிந்ததோ என்னவோ அசையாது நிமிடங்கள் நின்றுவிட்டான் காளையன்.
ஆசை தீர மௌனமாய் நன்றி உரைத்தவள் தலை உயர்த்தி, "ம்ம்ம் என்ன நீ பெரிய திமிரு புடிச்சவனா? பக்கத்துல வந்தாலே முறைக்கிற?" செல்லமாக கன்னத்தில் இரண்டு அடி கொடுக்க காளையன் எதுவும் எதிர்வினை ஆற்றாவிடினும் பின்னாலிருந்து தேவா குரலை உயர்த்தினான்.
"அடியேய் என் தம்பிய நானே கை நீட்டுனது இல்ல நீ என்ன அடிக்கிற?" மகிழ்ச்சி கூத்தாடியது அவன் குரலில்.
அவளுக்கோ பிள்ளை போல் மாறினான் காளையன், தைரியத்தில் அவனை இன்னும் இறுக்கமாக பற்றி, "ஏன் இவன் முட்டிடுவானோ? என்ன எதுவும் செய்ய மாட்டலடா?" கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள் காளையனுக்கு.
"சக்கரை மச்சானும் முரட்டு பயலா மாறிடவா?"
கன்னத்தை ஆசையாய் தடவிக்கொண்டே அவன் கேட்க பற்கள் தெரிய சத்தம் வராமல் சிரித்தாள் பெண், "வாய்ப்பில்லை ராஜா" என்று.
"தம்பி உங்க அம்மா வந்துருக்காக" என தூரத்திலிருந்து குரல் ஒன்று கேட்க நம்ப முடியாமல் இருவரும் மாறி மாறி பார்த்து வீட்டிற்கு நடந்தனர்.
வாசலிலே கிடந்த மூன்று காலணிகளை பார்த்து பெற்றோரும் சகோதரியும் வந்துவிட்டனர் என புரிந்து பைரவியை பார்த்தான், "அம்மா எதுவும் உன்ன சொல்ல மாட்டாங்க பைரவி. நான் பாத்துக்குறேன் நீ அமைதியா மட்டும் இரு" சகோதரி திருமணத்தை பற்றி தான் பேச வந்துள்ளனரோ என மனைவிக்கு அறிவுரை கொடுத்து அழைத்து சென்றான்.
தாய் தந்தை அன்று நடந்த பிரச்சனைகளுக்கு பிறகு அயன்தென்கரைக்கு வருவதையே நிறுத்தியிருக்க இவ்வளவு அவசரமாக வந்ததன் காரணத்தை கூட அறியாமல் அவர்களை எப்படி அமைதிப்படுத்த வேண்டும் என்பதையும் யோசிச்சு உள்ளே சென்றான்.
அவன் நினைத்தது ஒன்று நடந்தது வேறு, நாயகி மகனின் காயத்தை பார்த்து கண்ணீர் வடித்திட தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை. அவர்கள் குலத்தின் ஒளி அல்லவே அவன்! உயிரே நடுங்கியது. எப்படியேனும் போ என இருந்தவர்களால் அவனுக்கு நடந்த விபத்தை ஜீரணிக்க இயலவில்லை.
தகவல் அறிந்த உடனே ஓடி வந்துவிட்டனர். சகோதரி கூட தேவா தோள் சாய்ந்து பயத்தில் அழுதுவிட்டாள்.
அனைவரையும் ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மருமகளை முறைத்த நாயகி, "என் புள்ளைய பத்தரமா பாத்துக்கணும்னு தான உன்ன இங்க அனுப்புனது? நீ உன் அம்மா வீட்டுல ஒய்யாரமா ஒக்காந்துக்குட்ட. என் புள்ள தனியா ஆஸ்பத்திரில இத்தனை நாள் கஷ்டபட்ருக்கான். ஒரே வாரத்துல இளைச்சு போய்ட்டான்"
"ம்மா அவளை விட்டுட்டு வந்தது நானு. திட்டு விழுகுறது அவளுக்கா? பைரவி ஒரு சுக்கு காப்பி" மனைவியிடம் திரும்பி கண்களை சுருக்கி சமாதானம் செய்தேன்.
அவன் சமாதானத்தை ஏற்றதாய் சின்ன சிரிப்பு பைரவிக்கு வர சமயலறைக்குள் செல்லவிருந்தவளை தடுத்து நிறுத்தினார் நாயகி.
"நானே என் பிள்ளைக்கு போடுறேன்" புடவை முந்தானையை உதறி சமயலறைக்குள் சென்றவர் நாவில் மொத்தமும் பைரவியை அர்ச்சிக்கும் நாமமே.
"என்னவோ போடா... அவளுக்கு அதிகமா இடம் குடுக்குறதே நீ தான். அந்த தைரியத்துல தான் இவ்ளோ தூரம் எல்லாரையும் இளக்காரமா நடத்துறா. எத்தனை நல்ல நல்ல லட்டு மாதிரி பொண்ணுங்க வந்தது தெரியுமா உனக்கு? ஒவ்வொன்னும் அழகுல மட்டும் இல்ல குணத்துலையும் தங்கம். வீட்டுக்கு அடங்கி ஒடுங்கி இருந்துருப்பாங்க" தன் பின்னாலே சமையலறை வந்த மகனிடம் குற்றம் சாட்டினார்.
"எத்தனை லட்டு இருந்தாலும் சக்கரை இல்லாம எதுவும் இனிக்காதுல ம்மா" பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து வரவேற்பரையில் நின்ற மனைவியை பார்த்து தேவா கண் சிமிட்ட வெட்கத்தில் முகம் சிவந்து உளம் மகிழ்ச்சி போனாள்.
நாயகிக்கோ மற்றவருக்கோ அவன் பேசியதன் பொருள் சரியாக பிடிப்படவில்லை.
"யாருக்காக யோசிச்சு உனக்கு இவளை கட்டி வச்சேனோ அவளோட கல்யாணமே இல்லனு ஆனதும் உன் பொண்டாட்டி மேல எனக்கு கோவம் தான் இன்னும் அதிகமாகுது. பா என்ன பேச்சு அன்னைக்கு? அப்பாவி மாதிரி இருக்குறத பாத்து இனிமேலாவது ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன். ஆனா தப்புடா தேவா"
"நாயகி போதும் நிறுத்து..." வார்த்தை அதிகம் வளர்வது தெரிந்து மனைவியை அதட்டினார் ராஜரத்தினம்.
நாயகியோ மகனின் நிலைக்கு காரணம் மருமகள் என்னும் விதத்திலே பேசிக்கொண்டே போனார், "வாய அடைச்சாலும் உண்மை எவ்ளோ நாள் மூடி இருக்கும்? ஏன்டா தேவா நல்லா கேட்டியா அண்ணனும் தங்கச்சியும் பிளான் பண்ணி ஒரு கல்யாணத்தை நடத்தி இன்னொரு கல்யாணத்தை நிறுத்திருக்க போறாங்க..."
மகன் கையில் டம்ளரை திணித்தவர் கணவனிடம், "உங்க தங்கச்சிக்கு இதுல சம்மதம் இல்லல... இல்ல அதுவு?"
நக்கலாய் நாயகி நிறுத்த மனைவியை பார்த்த தேவா அவள் முகத்தில் அப்பிக்கிடந்த வேதனையின் வலிமை புரிந்து அன்னையை வீட்டை விட்டு தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.
"ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க ம்மா, இஷாக்கு அண்ணன் நான் ஒருத்தன் உயிரோட தான் இருக்கேன். என் தங்கச்சிக்கு நல்ல பையன நான் பாப்பேன். போனவன் வந்தவனை பத்தி எல்லாம் யோசிக்காதிங்க.
இன்னோன்னு ஒரு சில விசயங்களை தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மாத்த முடியாது. பைரவி மேல உங்களுக்கு வெறுப்போ கோவமோ எது வேணாலும் இருக்கட்டும். ஆனா அவ மட்டும் தான் உங்களோட மருமக. எனக்கு இந்த ஜென்மத்துல அவளை தவற வேற ஒருத்தர் என் வாழ்க்கைல இல்லை" என்றான் தீர்க்கமாக.
கலங்கிய விழிகளோடு மகனை இயலாமையாய் பார்த்தார், "என்னால அவளை இன்னும் ஏத்துக்க முடியல தேவா. தப்பு பண்ணவ-னு மட்டும் தான் பைரவிய பாக்குற நேரம் எல்லாம் என் மண்டைல ஓடிட்டே இருக்கு... நான் என்னடா பண்ணட்டும்? ஒழுக்கமா பிள்ளைகளை வளர்த்து, ஒழுக்கமானவை கைல ஒப்படைச்சா தானே எனக்கு மனசு ஆறும்?"
"பைரவியோட அந்த நிலைமைக்கு காரணம் உங்க மகன் தான்னு தெரிஞ்சா?"
"தேவா..." அதிர்ந்தவர் பிடிமானத்திற்கு அவன் கையை பற்றிக்கொண்டார்.
அவனது கண்களும் கலங்கியது, "நான் தான் ம்மா என் பைரவி இப்டி இருக்க மொத்த காரணமும்" கண்கள் கலங்கி வலி படர்ந்தது தேவாவின் முகத்தில்.
"என்னடா சொல்ற?" தவிக்கும் மகனின் நிலை அவரை பெரிதும் ஆட்டியது, எதற்கும் அசாராதவன் இன்று கண்ணீர் வடித்து நிற்க புரியாமலே பயந்தார் நாயகி.
"வீட்டுல எல்லாரும் யோசிக்கிற மாதிரி அவ ஓடி போகல ம்மா, ரேப் விக்டிம் ம்மா அவ" தாடை இறுகி உதடுகளும் கண்களும் கோவத்தில் துடித்தது தேவாவிற்கு.
"நீ..." அவளது நிலை பரிதவிப்பை தர தான் தான் காரணம் என மகன் கூறியது அதை விட அச்சத்தை தந்தது.
இல்லை என தலை அசைத்து மறுத்தவன், "ஆனா மறைமுகமா நான் தான் ம்மா இதுக்கு காரணம்... நான் நினைச்சிருந்தா இந்நேரம் அவ சந்தோசமா எங்கையோ நிம்மதியா இருந்துருப்பா... இப்டி எல்லாரோட வாயில விழுந்து தினம் தினம் அழுதுட்டு இருந்துருக்கு மாட்டா" உடைந்து அமர்ந்த மகனின் நிலை அவளது வேதனையை தான் நாயகிக்கு காட்டியது.
"தேவா..."
"ஒன்றை வருசத்துக்கு முன்னாடியே என் வாழ்க்கைல வந்துட்டாம்மா என் பைரவி, அப்போ பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை கோட்டை விட்டேன். இப்ப கைல கிடைச்சிருக்கு மறுபடியும் யாருக்காகவும் எந்த சூழ்நிலையையும் அந்த தங்கத்தை விட மாட்டேன்"
எண்ண சூழலில் சிக்கியிருந்த மகன் அருகே அமர்ந்தவன் அவன் பேசுவதற்காக காத்திருந்தார்.
"மொடா குடிகாரனா இருந்த நான் எப்படி தண்ணி அடிக்கிறத நிறுத்தினேன்-னு கேட்டுட்டே இருப்பிங்கள்ல?" வலி சுமந்த விழிகளோடு அன்னையை பார்க்க ஆமாம் என்றார் அவர்.
"ஒரு தடவ மைசூர்க்கு என்னோட ப்ரன்ட் சதீஷ பாக்க போயிருந்தேன் அன்னைக்கு நைட் கிளப் போய்ட்டு கார்ல அவன் கூட வீட்டுக்கு போய்ட்டு இருந்த நேரம் மணி பதினொன்றைக்கு மேல இருந்தது. முழு போதைல இருந்தேன்.
ஹை-வேல ஒரு பொண்ணு வந்து ரோட்டுல பாதி தூரம் வந்து ஹெல்ப் கேட்டுட்டு இருந்தா. நான் கால் கேர்ள்-னு நினைச்சு சதீஷ வண்டிய நிறுத்த விடல, அவன் பொலம்பிட்டே வந்தான். பாக்க அந்த பொண்ணு தப்பான பொண்ணு மாதிரி தெரியலடா, முகம் படபடப்பா இருந்துச்சு-னு சொல்லிட்டே இருந்தான்.
ஏதோ கற்பனை பன்றான் போய் பாத்தா நிம்மதியா இருப்பான்னு யோசிச்சு சரி வண்டிய திருப்பு-னு வந்தோம். கார நிறுத்தி இறங்கி பாத்தா அங்க யாருமே இல்ல. கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி பாத்துட்டு கெளம்பலாம்னு இருந்தப்போ தான் ஒரு பேக் பாத்தேன்.
தண்ணீ பாட்டில், கிழிஞ்ச பை எல்லாம் பாத்துட்டு எனக்கே பயம் வர ஆரமிச்சிடுச்சு. மொத்தமும் இருட்டு எதுவும் கண்ணனுக்கு தெரியல, கார் லைட் ஆன் பண்ணிட்டு மேல போய் தேடுனோம்.
அப்போ தான் ம்மா பாத்தேன் அவளை. கை கால் கட்டி, டிரஸ் மொத்தமும் கிழிஞ்சு, உடம்பெல்லாம் ரத்தம்... உயிரே துடிச்சிடுச்சு ம்மா" பேசியவன் குரல் கரகரத்தது.
"உடனே என்னோட சட்டையை மாட்டிவிட்டு எழுப்ப பாத்தேன், மயக்கத்துல இருந்தா.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம். என்ன பண்றது ஏது பண்றதுன்னு ஒண்ணுமே புரியல. அடிச்ச போதை மொத்தமும் போச்சு, ஆனா அவளோட முகம் மட்டும் நியாபகம் வரல அவ இருந்த நிலமைல.
மூணு மணி நேரம் செக் பண்ணிட்டு டாக்டர் எங்களை கூப்பிட்டாங்க, 'கொடூரமா ரேப் பண்ணிருக்காங்க. ஒருத்தர் இல்ல ரெண்டு பேர். ப்ளீடிங் ரொம்ப ஹெவியா இருக்கு. ஒடம்பு மொத்தமும் காயம், அந்த பொண்ணோட உத்துழைப்பு இல்லாததால அரக்க தனமா அடிச்சு தன்னோட இச்சையை தீத்துருக்காங்க.
நக கீறல், அடிச்ச தடம்-னு எல்லாமே இருக்கு. அந்த பொண்ணு மேல ஆல்கஹால் ஸ்மெல் வருது. சோ ரேப் பண்ணவங்க நிதானமான போதைல இருந்துருக்காங்க' தன்னோட ஆசைக்காக தனியா இருந்த பொண்ணுகிட்ட இவ்ளோ கேவலமா நடந்துருப்பாங்களானு மனசே ஆறலை ம்மா.
யாரோ தெரியாத பொண்ணா இருந்தாலும் அவளுக்காக அந்த மிருகங்களை கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும்னு வெறி எல்லை மீறி போச்சு.
ஆனா அத விட அந்த நேரம் அந்த பொண்ண தனியா விட முடியல. அவங்க குடும்பத்துக்கிட்ட தகவல் சொல்லலாம்னு யோசிச்சா அவ கண் முழிக்கல. நான் வண்டிய நிறுத்த விட்ருந்தா இந்நேரம் ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கை பாலா போயிருக்காதேன்னு ஒடஞ்சு போனேன்.
போதைல ஒரு பொண்ணோட தவிப்பு கூட தெரியாம இருந்துட்டோமேன்னு அவளை பாக்க கூட கூசி போய் வெளியே இருந்தோம் நானும் சதீசும். நேரம் ஆச்சு, விடிய காலைல கண் முழிச்சவ கதறுன கதறல் இருக்கே..."
இறுக்கமாக காதை மூடி கண்களை சுருக்கி மூடியிருந்த மகனின் உணர்வை புரிந்தவர் கண்களிலும் பைரவியின் நிலை எண்ணி பொறுக்க முடியாத வலி. ஏதேதோ அவளை பற்றி மனம் சித்தரித்திருக்க அதை எல்லாம் உடைத்தெறிந்து சிதைந்த நிலையில் படுக்கையில் வாடிக்கிடக்கும் மருமகளை கற்பனை செய்த நாயகிக்கே உடல் தூக்கிவாரி போட்டது.
"இன்னமும் காதுல கேட்டுட்டே இருக்கு ம்மா, அவளோட அழுகை எல்லாம் 'ஏன்டா என்ன காப்பாத்தல'-னு சட்டையை புடிச்சு கன்னத்துலையே அறைஞ்ச மாதிரி இருந்தது. குற்ற உணர்ச்சி சுக்கு நூறா என்ன கொன்னுச்சு.
அன்னைக்கே ஆச்சிக்கு ஒடம்பு சரியில்லைன்னு போன், என்ன பாக்கணும்னு சொல்லி. போகவே மனசில்லாம போனேன் சதீஷ விட்டுட்டு. அவன் வீட்டுக்கு போய்ட்டு வர முன்ன அவ இருந்த தடையாமே தெரியல, ஹாஸ்பிடல் எல்லாம் தேடுனோம். அவளை கண்டு புடிக்கவே முடியல. டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்கனு சொன்னாங்க"
கண்களை துடைத்தவன் அன்னையை பார்த்து, "இப்ப கூட பைரவி காப்பாத்துனது நான் தான்னு தெரியாது. தெரிஞ்சது, இரக்கப்பட்டு அவளை கல்யாணம் பன்னேனு நொந்துடுவா.
அவளோட நினைவுகளை அழிக்க முடியாது அவளோட வாழ்க்கையை திருத்த முடியாது, ஆனா என்னால செழிப்பா மாத்த முடியும். இது பரிதாபத்துலையோ குற்றஉணர்ச்சிளையோ எடுத்து முடிவில்ல, எனக்கு நெஜமாவே பைரவி புடிச்சிருக்கு.
விருதுநகர்ல முதல் தடவ அவளை பாத்த அன்னைக்கு கூட சரியாய் முகம் நியாபகம் இல்ல. எங்களுக்கு கல்யாணம் முடிவாகி என்னோட ப்ரன்ட்க்கு நான் தகவல் குடுத்த நேரம் தான் சதீஷ் சொன்னான் அந்த பொண்ணு தான் பைரவி-னு.
உண்மை தெரிஞ்ச அன்னைக்கு எந்த மாதிரி நான் பீல் பன்னேனு சொல்ல தெரியல ம்மா, நிம்மதியா சந்தோசமா வருத்தமா ஏதோ ஒன்னு. ஆனா மனசு நிறைவா இருந்தது. காரணம் தெரியல. அவ வேணும், அவ மட்டும் தான் வேணும் அது மட்டும் சத்தியம்" என்றான் ஆத்மார்த்தமாக.
அவன் பேச்சிலும் கண்களிலும் இருந்த தெளிவு நாயகியை உலுக்கியது. என் மகன் இத்தனை உறுதியானவனா என. இவனையா நான் ஒன்றும் தெரியாதவன் என நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? வியப்போடு மகனை பார்த்தவர் கண்கள் அவன் பின்னால் தேநீர் கோப்பையோடு வந்து நின்ற பைரவி மேல் பட்டது.
அன்னை பார்வை உணர்ந்தவன் முகத்தை சாதாரணமாக வைத்து தலை திருப்ப, அவனை சந்தேகத்தோடு பார்த்தவள் வரவா என அனுமதி கேட்டாள். கண் மூடி திறந்து அனுமதி கொடுத்தவன் அன்னையிடம் சத்தமே இல்லாமல், "அவளுக்கு எதுவும் தெரிய வேணாம்" என்றான்.
பைரவி கொடுத்த தேநீரை சத்தமில்லாமல் எடுத்து அருந்தியவர் அவளை பார்த்த பார்வையில் ஒரு கனிவு இருந்தது.
"தம்பி கணக்குல கொஞ்சம் இடிக்கிது கொஞ்சம் இங்கன வர்றிங்களா?" கணக்குப்பிள்ளை தேவாவை அழைக்க எழுந்து சென்றுவிட்டான்.
பைரவி உள்ளே செல்ல எத்தனிக்க, "இங்க வா பைரவி" கனிவான குரலில் அத்தை அழைக்கவும் கண்களில் வியப்பு பைரவிக்கு.
இதுவரை அவர் பெயர் கூறி அவளை அழைத்தது இல்லை. இன்று அழைத்துவிட்டார் அதுவும் மென்மையான குரலில்.
அதே சமயம் சந்தேகமும் வந்தது, இருந்தும் வெளிக்காட்டாமல் அமைதியாக அவர் அருகில் அமர்ந்தவள் அவர் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள். நாயகிக்கோ தூரத்தில் நிற்கும் மகன் மீது தான் கண்கள்.
"ரொம்ப நல்லவன் அவன். இருபத்தி ஆறு வருசமா புரிஞ்சுக்காத எனக்கு அஞ்சே நிமிசத்துல வாழ்க்கை இவ்ளோ தான்னு பக்குவமா புரிய வச்சிட்டான் இந்த பையன்" சிரிப்பு அவர் இதழில்.
"இந்த மாடு, கோழி-னு அவன் திரிஞ்ச நேரம் ஒரு ப்ரோபஷர் பையன் இப்படியா காடு கரை-னு இருப்பாங்கன்னு கோவம். அந்த மாடு இப்போ இவன் உயிரை காப்பாத்துச்சுனு கேள்வி பட்டதும் அந்த மாட சாமியா நினைச்சு வணங்கணும் போல இருந்தது அதான் வந்துட்டோம்.
இங்க வந்து தேவாவை பாத்ததும் தான் உயிரே வந்தது அந்த நிமிஷம் முடிவு பண்ணேன் என் பையன் வாழ்க்கையை அவன் விருப்பத்துக்கு வாழ விடணும்னு. அவனோட சொந்த வாழ்க்கையையும் சரி தொழில் வாழ்க்கையையும் சரி" மறைமுகமாக அவளையும் ஏற்றுக்கொள்ளும் அனுமதி வர அவர் செற்றாடல்களில் மனம் விம்மியது பைரவிக்கு.
"என்ன பத்தி எதுவும் அவங்க சொன்னாங்களா அத்தை?" கையை இறுக்கமாக பிணைத்து அவரை பார்த்தாள்.
பரிதவிக்கும் அவள் விழிகளின் மொழி அறிந்தவர் அவள் கை பற்றி அதில் அழுத்தம் கொடுத்தார், "உன்ன பத்தி எதுவும் சொல்லல, அவனை பத்தி சொன்னான். அவனோட வருங்காலத்தை பத்தி சொன்னான்" மளுக்கென கண்ணீர் ஓட பைரவியின் மெல்லிய விசும்பல் நிம்மதியோடு பறந்தது...
ஆத்தாடி ஆத்தா எவ்ளோ பெரிய அப்டேட் 😰😰
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro