Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆனந்தம் - 17

காலை சீக்கிரமாகவே விழிப்பு தட்டிய பைரவி எழுந்து செல்ல மனமே இன்றி படுத்துக்கிடக்க அவள் கணவன் அவளை அணைப்பதற்கு பதிலாக தலையணையை இறுக்கமாக பற்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

வலுவான அவன் தேகத்தையும், உறக்கத்திலும் இளக்கம் இல்லாமல் வீம்பாக உறங்கும் அவன் முகத்தையும் ஆசையாக அளந்தவள் தலையணையை அவனிடமிருந்து பிரித்து அது இருந்த இடத்தை தான் ஆக்ரமித்துக்கொண்டாள்.

தலையணை சுகத்தை விட பெண் மேனி உஷ்ணத்தை கூட்டும் அல்லவா? பஞ்சு உடலின் வித்யாசம் தேவாவை கண்கள் லேசாக திறக்க வைக்க, பைரவிக்கு பின்னாலிருந்த மணியை பார்த்தான்.

ஐந்து கூட ஆகவில்லை. தூக்க கலகத்தோடு அவளை சந்தேகமாய் பார்த்து, "தூங்கு சக்கரை" என மெதுவாக உறங்க முற்பட்டான்.

"ஏன் உங்களுக்கு கை எல்லாம் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு?"

சோர்வாக கண்களை திறந்து, "சந்தேகம் கேக்குற நேரமாடி இது?"

"வேற எந்த நேரத்துல கேக்கணுமாம்?"

"பேச்சு குடுக்காத பைரவி தூக்கம் போய்டும்" தேவா அதட்டவும்,

"நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல" அவன் துயிலை கலைப்பதற்கு வேண்டும் என்றே காதோரம் பேசினாள்.

மௌனமாக தேவா உறங்க அவன் கன்னத்தை உரசும் சாக்கில் அவள் கைகள் வலிக்காமல் கன்னத்தில் அலைபாய,

ஆசை துளிர்த்து திடுக்கிட்டு விழித்த தேவா மேலும் அவள் கைகளை துளாவ விடாமல் அவள் கையை பிடித்திட, "என்னடி பண்ற?" என்றான் மோகமும் ஆசையுமாக.

வித்யாசம் தெரிந்த அவன் பார்வையில் சிரித்தவள் அவன் கண்களை கை கொண்டு மூடி, "என்ன இது பார்வை மாறுது? கண்ண நோண்டிடுவேன் பாத்துக்கோங்க"

அவள் கையை தட்டிவிட்டு, "என் பொண்டாட்டிய நான் எப்படி வேணாலும் பாப்பேன். உனகென்னடி நோகுது?"

"என்ன மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கீங்க நியாபகம் இருக்கா?"

பற்றியிருந்த அவள் உள்ளங்கையில் முத்தமிட்டு, "முத்தமும் பார்வையும் கணக்குல சேராது"

ஆலய மீனாட்சி போல் மீன் விழியால் சிரித்தவளை ஆண் புறா போல் கழுத்தை வளைத்து அவளை மட்டுமே ரசித்தான். உறக்கம் களைத்து சிரிக்கும் அழகை புதுப்பித்த நொடிகள் என்றும் வீழாது.

"இது போங்காட்டம்! ஆம்பளைங்க பேச்சு மாறக்கூடாது" வெண்சோளை தட்டுகளை கொத்தி தின்னும் குருவிகள் சத்தம், சிலிர்த்து நிற்கும் சண்டை சேவல்கள் கூவலும் இருவரின் செவியினை அடையவில்லை.

"ஆம்பள மாற கூடாது, பொம்பள நீ மாறலாம்ல?"

"நாங்க எல்லாம் நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு-னு வளந்தவங்க. உங்க இஷ்டத்துக்கெல்லாம் மாற முடியாது, சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. ஏன் இவ்ளோ ரப்பா இருக்கு உங்க ஸ்கின்?"

அவன் தோலினை தடவியவள் கை அவன் கைகளில் இருக்க, பார்வையோ டீ-ஷர்ட் உள்ளே இருந்த அவன் முடியடர்ந்த மார்பினில் இருந்தது.

அந்த பார்வையினால் சுயமிழந்த சற்று செயலிழக்கட்டுமே என நினைத்தாள் போலும். மீண்டெழுந்தவன்,

"ஆம்பளைங்க ஸ்கின் அப்டி தானே இருக்கும்" என்றான் அந்த அழகு வெண்ணிலாவை ரசித்தபடியே.

"ம்ம்ஹ்ம்ம் அண்ணா ஸ்கின் இப்டி இருக்காது"

"வெயில், மணல், மூட்டை தூக்குறது, கம்பு சுத்துறதுனு எல்லாமே இருக்கலாம்" தன் கையையே ஆராய்ந்து கூறினான்.

"கம்பு சுத்துவீங்களா?" வியப்போடு கேட்டாள்.

"ம்ம்ம் பத்து வயசுல இருந்து கத்துக்குட்டேன். இந்த ஊர்ல ராஜவேந்தன்-னு ஒருத்தர் இருந்தார். தப்பு செஞ்சா அடி பின்னிடுவார்.

அதுக்காகவே யாரும் அதிகமா அவர்கிட்ட கத்துக்க வர மாட்டாங்க. ஆனா அவர் கம்பு சுத்துறத பாத்தே எனக்கு அவர்கிட்ட பழகனும்னு ஆசை. அதான் கத்துக்குட்டேன்"

"அப்போ நீங்க அடி வாங்கிருக்கிங்களா?"

"வாங்காம பின்ன?" இடையில் இருந்த பனியனை சற்று தூக்கி முதுகை காட்டினான்,

"ஒரு கோடு தெரியும் பாரு. பிளஸ் டூ லீவ்ல அங்க போய் பயிற்சி பண்ணிட்டு இருந்தேன். பேச்சு கவனத்துல கம்ப எப்படி பிடிக்கிறேன்னு கவனிக்காம விட்டேன். அவ்ளோ தான். கைல வச்சிருந்த கம்ப வச்சு ஒரே அடி. அன்னைக்கு பெரிய தழும்பா இருந்தது. இப்ப பரவால்ல"

அவனுக்கு வலிக்குமோ என பயத்தோடு அவள் மெருதுவாக நீவ, வெடுக்கென கையை தட்டிவிட்டு, "சும்மா இரு சக்கரை" என்றான் உணர்ச்சிகளை அடக்கிய குரலில்.

அவள் முகம் சென்நிலவாய் மாற, "சரி கெளம்பலாமா அப்பா முன்னாடி போறேன்னு சொன்னாங்க நேத்தே"

இன்று விருதுநகர் சென்று பெண் கேட்கும் படலத்தை துவங்கி வைக்கவே இந்த பயணம். தேவாவிடம் தன்னுடைய கடந்த காலத்தை கூறி ஒரு வாரம் ஆகியிருந்தது.

அன்று கேட்டதோடு சரி அதன் பிறகு தான் அவனிடம் இது போல் ஒன்றை சொல்லாதது போல் இருந்தது அவன் செயல்.

அவள் கடந்த காலத்தை பற்றி கேட்கும் முன்பு எப்படி இருந்தானோ அதே போல் தான் இப்பொழுதும் இருந்தான்.

பரிதாபமான பார்வை, பச்சாதாப பேச்சு என எதுவும் இல்லை. நிம்மதியாக இருந்தது பைரவிக்கு. வீட்டை விட்டு வெளியில் வந்தாலே பரிதாபம், இரக்கம், வெறுப்பு போன்ற பார்வையை மட்டுமே பார்த்து பார்த்து சலித்து போனவளுக்கு ஆசை பார்வை காதலை தந்தது.

அந்த காதலே ஆலகால விஷமுண்ட ஆத்ம மயக்கத்தையும் தந்தது. காத்திருப்பு காதலில் மட்டுமல்ல, புரிதலுக்கும் அழகு என உணர்ந்தவள் உறவினை வலுவாக்க, பட்டுப்போன பாலைவனத்தில் காதல் என்னும் செடியினை ஆழமாய் ஊன்றிட சில காலங்கள் எடுத்துக்கொண்டாள்.

அவன் அன்பின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஏதேனும் ஆசையில் நிகழ்ந்த கூடலாய் தங்கள் வாழ்கை துவங்கி விட கூடாதென சிறு ஐயம் தான்.

"ஏங்க"

"என்னங்க?" அவள் இழுத்த அதே ராகத்தில் பேசி அவளை கேலி செய்தான்.

"எனக்காக அண்ணன் எதுவும் இஷாவ கல்யாணம் பண்ணிக்க சரினு சொன்னாங்களோ?"

தேவா, "இதுல உனக்கு சந்தேகம் வேறயா?"

என்று தேவாவிடமிருந்து விருதுநகர் சென்று சகோதரனின் திருமண பேச்சை எடுக்கலாம் என்ற செய்தி வந்ததோ அன்றிலிருந்து இந்த நெருடல் மனதில் நீங்காமல் நிற்கின்றது.

"அண்ணனுக்கு இதுல விருப்பம் இல்லனா என்னங்க பண்றது?"

"கட்டைய வச்சு அடிச்சாவது தாலி கட்ட வச்சிடலாம்" விளையாட்டாக பேசியவாறே மனைவியின் கூந்தலை வைத்து விளையாடிக்கொண்டிருக்க அவன் கையில் அடித்து முறைத்தாள்.

"நான் சும்மா கேக்கல ஆனந்த். சீரியசா கேக்குறேன்"

"நானும் சீரியஸா தான்டி சொல்றேன். மாட்டேன்னு உன் அண்ணன் சொல்லி தா பாக்கட்டுமே அப்றம் இருக்கு அவனுக்கு கச்சேரி" தாராளமாக கணவனை முறைத்தவள் அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள்.

"சொந்த விருப்பு வெறுப்பை சொன்னா கச்சேரி வைப்பீங்களோ?"

"விருப்பு வெறுப்பு சொல்றது இல்லை, உன் அண்ணன் வாக்கு குடுத்துருக்கான்... ஆமா நீ ஏன்டி இந்த சிலுப்பு சிலுப்புரவ? உன் அண்ணன் எதுவும் உங்கிட்ட பேசுனானா?" என்றான் கூர்மையான பார்வையோடு.

"இல்ல, எனக்காக அவன் எதுவும் அவசர முடிவு எடுத்திருக்க கூடாதுல ஆனந்த் அதுக்காக சொன்னேன். ஒரு பயம் அவ்ளோ தான். ஒடனே அண்ணன் மேல சந்தேகப்படாதிங்க" என்றாள் தேவாவை சமாதானம் செய்யும் எண்ணத்தோடு.

உண்மையில் அவன் மனதளவில் நினைத்தது தான் சந்தேகமாய் அவனிடம் வந்ததும் கூட. திருமணத்தன்று தான் இருந்த மனநிலையில் அதிகம் யோசிக்க முடியவில்லை.

காரணமே தெரியாமல் பெட்டியில் அடைக்கப்பட்டு ஏறுமதி செய்யும் பொருளை போல தேவாவின் வீடு வந்து சேரும் வரை எந்த விசயமும் பெரிதாக தெரியவில்லை.

வீட்டினரோடு கூட அதிகம் பேசவில்லை. ஆதலால் சகோதரன் மனம் என்ன நிலையில் உள்ளதென்றும் கூட அறிந்திருக்கவில்லை.

அதன் பிறகு பைரவி தேவாவோடு தந்தை இல்லம் சென்ற நேரங்களிலும் கூட அதிகம் தேவா, சந்தோஷ் இரட்டையர்கள் போல் ஒன்றாகவே சுற்றி வருவார்கள். இதில் எங்கு அவனிடம் தனியாக பேசி அவன் மனதை அறிய?

"என்னமோ சொல்ற... சரி நீ கெளம்பிட்டே இரு, நான் மாடுகளை கொளத்து கரைக்கு கூட்டிட்டு பசங்க கிட்ட ட்ரைனிங் பத்தி சொல்லிட்டு வந்துடுறேன்" கையில் ஒரு துண்டோடு வெளியேறினான் தேவா.

வழக்கம் போல் காளைக்கு பயிற்சி கொடுக்க சென்ற இடத்தில் அய்யனாரின் ஆட்கள் வம்பை இழுக்கும் எண்ணத்தோடு பேச்சை வளர்க்க என்றும் இல்லாத திருநாளாய் தேவாவின் சினம் கூரையை தொட்டு எரிமலையாய் வெடிக்க தயாராக நின்றது.

காப்பை முறுக்கி சண்டைக்கு ஓடியவன் தோளை பற்றி நிறுத்தினர் அவனுடைய கூட்டாளிகள் சிலர்.

"மாப்பிள்ளை, தங்கச்சி கல்யாணம் விசயமா நல்ல பேச்சு பேச போற, அடிபட்டு ரத்த காயத்தோட நின்னா நல்லாவா இருக்கும்?"

அவனை அடக்கி அனுப்பிவைக்க வீட்டிற்கு கடுகடுத்த முகத்தோடு வந்தவனை சற்று பயத்தோடு தான் பார்க்க நேர்ந்தது பைரவியால்.

ஐந்தே நிமிடத்தில் தயாராகி வந்தவன் பைரவியை அழைக்காமல் சென்று வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

பைரவியோ அவனுக்கு தேநீரை தயாரித்து க்ளாசில் ஊற்றிக்கொண்டிருக்க அவர்கள் காரின் ஹாரன் சத்தம் காதை கிழித்தது.

வேகமாக வெளியில் வந்து பார்க்க, "இன்னுமா நீ கெளம்பல?" ஆத்திரத்தோடு கடுகடுத்தான் தேவா.

"டீ ஆத்திருக்கேங்க" என்றாள் பவ்யமாக.

"உன் தலைல ஊத்திக்கோ"

காரினுள் இருந்தே கத்தினான், "இப்ப நீ வரல அப்டியே விட்டுட்டு நான் வாட்டுக்கு கெளம்பிடுவேன்"

தேவாவை ஏகத்திற்கும் முறைத்தவள் டம்ளரை அப்படியே திண்ணையில் வைத்து சோபாவில் இருந்த பையை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி வர,

"கதவை யாரு உங்கொப்பண்ணா வந்து சாத்துவாரு?" என்ற உயர்ந்த குரல் வந்தது.

ஏதோ கோவத்தில் சொல்கிறான் என புரிந்தவள் அமைதியாக சென்று வாகனத்தில் ஏறிட செல்லும் வழி எல்லாம் பைரவிக்கு மௌனமாய் கழிய, தேவா கைபேசியில் எவருடனோ மாறி மாறி ஒன்றரை மணி நேரம் திட்டிக்கொண்டும், அறிவுரைகள் கூறியும் வந்தான்.

விருதுநகர் வந்ததும், அவர்கள் வீட்டு தெருவின் முனையில் இருந்த காளியம்மன் கோவில் விசேஷத்தால் அன்று வாயிலை அடைத்து மேடை அமைத்திருந்தனர்.

தணலாய் தகித்திருந்தவன் இன்னும் ஆக்ரோஷமானான். தெருவுக்கு போகும் பாதையை மறித்து வாகனத்தை குறுக்காக நிறுத்தி கீழே இறங்க பைரவி கேள்வி கேட்கும் முன்பு ஒரு பெரியவர்,

"தம்பி வண்டிய ஓரமா நிறுத்து ப்பா, போக வர எடோ வேணாமா?" என்றார்.

அவரை பார்த்து சிறிதும் அசாராதவன், "அந்த மேடையை எடு நான் என் வீட்டுல நிறுத்திக்கிறேன்"

நிற்காமல் கூட்டத்தை கடந்து முன்னேறிட அவரிடம் தான் பார்த்துக்கொள்வதாக கூறி தேவாவை பின் தொடர்ந்து சென்றாள்.

பைரவி கொட்டத்தை கடந்து செல்லும் முன்பே அவன் வீட்டினை அடைந்திருந்தான் தன்னுடைய வேக எட்டில்.

"இவளுக்கு கிடைச்ச வாழ்க்கையை பாரு, ஆனா என்ன பண்றது அதையும் ஒழுங்கா வாழ தெரியல போல"

பைரவி காது படவே பேசியவர் அவள் கையை பிடித்து நிறுத்தினார், "என்ன பைரவி உன்னையும் கல்யாணம் பண்ணிக்க ஒரு பையன் கெடைச்சிருக்கான் அவனையும் நீ சரியா பாத்துக்குறதில்ல போல?" என்றார் அக்கறையாக பேசுவது போல்.

முன்னர் இருந்த பைரவியாக இருந்தால் தலையை கவிழ்த்து அழுகையோடு இல்லம் திரும்பியிருப்பாள், இப்பொழுது ஏதோ ஒரு உத்வேகம் பிறந்தது போல் நிமிர்ந்து நின்றாள்,

"வாங்களேன் எங்க வீட்டுக்கு, அவரை நான் எப்படி கவனிக்கிறேன்னு கண்ணாளையே பாத்து தெரிஞ்சுக்கலாம்" அசையாது நின்று கேட்டவள் துணிவு அவரை வாயடைக்க வைத்தது.

"முப்பது வருசமா இங்கன இருக்க உன் வீட்டுக்கே வந்தது இல்லை, இதுல உன் வீட்டுகார வீட்டுக்கு நான் என்னத்த வந்து? என்னமோ போ நல்லா இருந்தா சரி தான்" ஒ

ன்றும் நடவாதது போல் திரும்பி போனவர் இனிமேலும் தன்னை பற்றி தான் பேசுவார் என தெரிந்தும் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தாள் பைரவி.

கணவன் அர்ஜுனன் வீட்டிற்கு சென்றிருக்க அன்னையிடம் வருகையை காட்டி விட்டு பிறகு அங்கு செல்லலாம் என உள்ளே வர அன்னை கீழ் தளத்தில் இல்லை.

வீடு திறந்திருக்க நிச்சயம் சகோதரனாவது இருப்பான். சிறு சீண்டலோடு அவன் எண்ணத்தையும் கேட்டு நகரலாம் என மாடி ஏரியாவில் செவிகள் கூர்மையாக நின்றன.

"என்னால முடியுமா என்னனு தெரியலடி, ஆனா இது தான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டு நகரனும். என்னையே நினைச்சிட்டு இருக்காம உனக்கான வாழ்க்கையை பாத்து நீயும் சந்தோசமா இருடி"

வருத்தம் மேலோங்கி சஞ்சலத்தில் ஆடியது அவன் குரல். அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ, "என்னடி நிலா..." என்ற சந்தோஷின் இயலாமை குரலில் பைரவி நெஞ்சே பதைபதைத்தது.

சகோதரன் நெஞ்சத்தினில் இப்படி ஒரு ஆசையா? எதிர் பார்க்கவில்லையே. பெரிய மாமன் மகளை மனதில் நினைத்து சிறிய மாமன் மகளை திருமணம் செய்வதா?

சகோதரன் பேச்சிலே சில நாள் பழக்கம் இல்லை இது பல நாள் பழக்கம் போல் தெரிகிறதே. எனக்காக தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்தானா? அவனது முக வாதத்திற்கான காரணமும் கூட இது தானா?

மேலே சென்று சகோதரனை சங்கடத்தில் ஆழ்த்திட விரும்பவில்லை. ஏறிய வேகத்திலே கீழே இறங்கியவளை வாசலில் நின்ற தேவா அழைத்தான்.

"இங்க என்ன பண்ற? அங்க உன்ன எல்லாரும் தேடுறாங்க"

மனைவியிடம் கடுகடுத்தவன் வீட்டினுள் பார்த்து, "டேய் சந்தோஷ் எங்கடா இருக்க?" தேவா கொடுத்த சத்தத்தில் தடதடக்க கீழே வந்த சகோதரன் முகம் வெகுவாய் வாடியிருந்தது.

"யார்ட்ட பேசிட்டு இருந்த எம்புட்டு நேரம் போன் அடிச்சிட்டே இருக்க நானு?"

"இல்ல தேவா ஒரு முக்கியமான போன்..."

சந்தோஷ் கனிவாக பதில் கொடுத்து அவனை உள்ளே அழைக்க, "அப்றம் வர்றேன், உன்ன எல்லாரும் கூட்டியாரசொன்னாங்க. வா போவோ" என கையேடு அவனை அழைத்து செல்ல சகோதரனை ஆற்றாமையோடு பார்த்தாள் பைரவி.

தேவா இருக்கும் கோவத்திற்கு சந்தோஷை தடுத்து நிறுத்தியும் பேச முடியாதே. இன்று தான் வேண்டாத இந்த கோவம் எல்லாம் வர வேண்டுமா இவனுக்கு?

நாய்க்குட்டியை போல் செய்வதறியாமல் அவர்கள் பின்னாலே அங்கு சென்றிருக்க ஏற்கனவே இருவரின் திருமண பேச்சும் துவங்கியிருந்தது தேவா தந்தை ராஜரத்தினம் மூலம்.

"ஏற்கனவே பேசுனது தான் ப்பா, சந்தோஷ்க்கும் இஷாக்கும் கல்யாண பேச்சு எடுக்கலாம்னு தான் வந்தோம்"

ராஜரத்தினம் கூறவும் சகோதரனை பார்க்க உணர்ச்சிகளை துடைத்து இருந்தது அவன் முகம்.

அவனை பார்த்து பைரவி உதயநிலாவை தேட சற்று வெளிறிய முகம், சில நொடிகளுக்கு முன்னர் நீரால் கழுவிய முகம் என அமைதியாக படி இறங்கி வந்து நின்றாள்.

"சாப்பிட வா நிலா?" காயத்திரி மகளிடம் கேள்வி கேட்டு வர வேண்டாமென தலை அசைத்து ஓரமாய் சென்று நின்றுகொண்டாள்.

"நாங்களே பேசலாம்னு தான் ரத்தினம் நினைச்சோம், முறையா நாங்க பேசுறது தானே நல்லது" என சீதாவும் முகம் கொள்ளா புன்னகையோடு வினவினார்.

அவருக்கு இரு குழந்தைகளின் வாழ்க்கையும் நல்லவிதமாக அமைய போகிறது என்கிற ஆனந்தம்.

"யார் பேசுனா என்ன மதினி வந்தாச்சு நம்ம வீட்டுல வச்சே கல்யாண பேச ஆரமிச்சிடலாம்"

மனைவியிடம் நாள்காட்டியை வாங்கி பார்த்த அர்ஜுனனும், "அம்மா ய்யா நாளும் நல்ல நாளா தான் இருக்கு" என்றார் வீட்டில் இன்னொரு சுபநிகழ்ச்சி நடக்க போகும் அதே ஆனந்தத்தில்.

"நல்ல விசியம் நடக்கமுன்ன நல்ல விசியம் கேட்டு ஆரமிக்கலாமே" இடையில் வந்து நின்று விக்னேஷ் தடுத்தான்.

நல்ல காரியம் நடக்கும் பொழுது மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்க விரும்பாதவர்கள் உண்டோ... "என்னையா?" என ஒருவாறு செய்தியை யூகித்து தான் பார்வதி ஆர்வமாய் கேட்டார்.

"இன்னைக்கு காலைல தான் பாத்தோம் அய்யம்மா அம்பது நாள் கணக்கு வருது" என வெட்கத்தோடு அவரிடம் மெதுவாய் கூற அவனுக்கு அருகில் நின்ற மித்ராவிற்கு அளவுகடந்த மகிழக்கோடு வெட்கம் வந்தது.

"ஐயோ நெசமாவா ய்யா?"

மகிழ்ச்சி பொங்க சத்தமாக நற்செய்தியை கூறி வீட்டினர் அனைவருக்கும் இனிப்பை கொடுக்க சந்தோஷ், நிலா, பைரவி முகத்தில் மட்டும் வருத்தம் மேலோங்கி நின்றது.

அனைவரும் ஆரவாரத்தில் இருக்க பெயருக்காக சந்தோஷ் கூட விக்னேஷிடம் இரண்டு வார்த்தைகளை வைத்தான்.

ஆனால் நிலா தான் கடினப்பட்டு கண்ணீரை துடைத்து துடைத்து சிரிக்க முயல்வது பைரவிக்கு பார்க்கவே மனம் கனத்தது.

கண் முன்னே ஒரு காதல் ஜோடி வாழ்க்கையில் அடுத்த அழகான கட்டத்திற்கு சென்றிருக்க, அதே காதலை கொண்டுள்ள தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என அவள் நிச்சயம் மனம் நொந்து அழுத்திருப்பாள் அல்லவா?

தன்னால் தானே என்ற வருத்தம், குற்றவுணர்ச்சி இணைந்து பைரவியை ஆட்டிப்படைக்க எந்த கொண்டாட்டத்தில் பைரவி இணைந்துகொள்ளாமல் போனது அங்கிருந்த எவரையும் சந்தேப்பட வைக்கவில்லை.

இன்னும் அவள் பழையபடி மாறவில்லை, நேரம் தேவைப்பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டனர்.

ஆனால் அவளுள் பெரிய யுத்தமே நிகழ்கின்றதென எவரும் கவனிக்காமல் விட்டனர். தேவா கூட சற்று கோவத்தை குறைத்து இலகுவாய் விக்னேஷை கேலி செய்து வந்தான்.

"மனசுக்கு நிறைவா இருக்கு ப்பா. அதே சந்தோஷத்தோட பூ வக்கிரத்துக்கான நல்ல நாளையும் நீங்களே பாத்து சொல்லிடுங்க"

ராஜரத்தினம் தந்தையிடம் வந்து நிற்க, ஆனந்தம் பொங்க அடுத்து வரவிருக்கும் நல்ல நாளினை பார்க்க துவங்கினார் பெரியவர்.

"மார்கழி மாசமாலே இருக்கு, தை ஆரம்பத்துலையே பூ வச்சு மாசில கல்யாணத்தை வச்சிடலாமா தம்பி?"

மகன் சரி எங்க அடுத்து மருமகனை பார்த்தார், "நீங்க சொல்றது தான் மாமா" என்றார் கண்ணன் மனைவியை பார்த்துவிட்டு.

சீதாவின் மாமனார் மாமியார் சில ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியிருக்க பெரியவராய் கண்ணன் கூட மாமனார் அர்ஜுனனிடம் தான் வந்து நிற்பார் ஆலோசனைகளை கேட்க.

சகோதரன் முகம் சூம்பி போய் இறுக்கமாய் மாறி நிற்க, வெட்கத்தோடு கணவன் அருகில் நின்ற இஷாவின் நிலையில் பைரவியை பாதிக்க விறுவிறுவென உதயநிலா அருகே சென்று நின்றாள்.

பைரவியை பார்த்து வரவழைத்த புன்னகையோடு சோபாவில் இடம் கொடுத்து அமர, "அண்ணாவை எவ்ளோ நாளா லவ் பண்ற நிலா?" என்றான் ஒரே போடாக.

துரிதமாக செயல்பட வேண்டிய நிலை இது என புரிந்தது பெண்ணுக்கு.

"பைரவி..." திடீர் தாக்குதலை எதிர்பாராமல் விழித்தாள் நிலா.

"பதில் மட்டும் தான் நிலா வேணும்"

"ஆறு வருஷம்" உடைந்தது பைரவி மனம், ஆறு வருட காதலை சகோதரன் எனக்காக ஒரே நொடியில் தூக்கி எரிந்து வந்து நிற்கிறானா?

எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு நகர போக அவள் கை பிடித்து தடுத்து நிறுத்தினாள் உதயநிலா, "வேணாம் பைரவி, உன் அண்ணன் சத்தியமும் உன் வாழ்க்கையும் யோசிச்சு நாங்க எடுத்த முடிவு இது"

அவள் பிடியை தளர்த்திவிட்டு, "ஆனா நான் யாருக்கும் சத்தியம் பண்ணி குடுக்கலையே"

பிடிவாதமாக அர்ஜுனன் அருகே வந்தவளை கவனித்தனர் யோசனையாக பார்க்க, "இந்த கல்யாணம் வேணாம் தாத்தா" என்றாள் உறுதியான குரலில்.

அர்ஜுனன் அருகே அவள் சென்று நின்றிருக்க தங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு இது கேட்கவில்லை.

ஆனால் மனைவியின் முகத்தை பார்த்த தேவா யோசனையோடு அருகே செல்ல அர்ஜுனன் முகத்தில் சோதனையின் சாயல்.

"பாப்பா என்னடா பேசுற நீ?" என்றார் அர்ஜுனன் அருகே இருந்த பார்வதி பயத்தோடு.

ஒன்றுபட்ட குடும்பம் எந்த காரணத்திற்கொண்டும் பிரிந்திட கூடாதென்ற பயம் அவரிடத்தில்.

"ஆமா என்னோட அண்ணனுக்கு இஷா வேணாம் ஆச்சி"

அதை கேட்ட தேவா கோவத்தில் கத்தியேவிட்டான், "என்னடி பேசுற நீ?" என்று.

தேவாவின் குரலில் அனைவரும் இவர்களை பார்க்க பதறிய சீதா மகளை தான் அதட்டினார், "பைரவி என்ன சொன்ன தேவாவை?" என்று.

"ம்மா நான் தாத்தாகிட்ட தான் ம்மா பேசுறேன்" கணவனுக்கும் சேர்ந்தே அந்த பதில் வர இருவரையும் உதாசீனம் செய்து மீண்டும் அர்ஜுனனை பார்த்தாள்.

"ப்ளீஸ் தாத்தா, இந்த பேச்சு இதோட நிக்கிறது தான் நல்லது" என்றாள் இன்னும் தீவிரமாக.

"ஏன் ம்மா, இதெல்லாம் முன்னாடியே பேசி வச்சது தான?" பார்வதி பேதியை சமாதானம் செய்யும் நோக்கோடு பேசினார்.

"பேசுனது தப்பு ஆச்சி, அண்ணா மனசுல இஷா இல்ல..." பைரவி பேசும் முன்பே அவள் கையை பற்றி தன்னை பார்க்கும்படி திருப்பி நிறுத்தினான்,

"என்ன பேசுனது தப்பு? உன் அண்ணனுக்கு என் தங்கச்சி கூட பேசுனதா இல்ல எனக்கு உன்கூட பேசுனதா?"

அவன் பேச்சில் திடுக்கிட்ட பைரவி நிதானித்து, "நான் இங்க என் அண்ணனை கல்யாணத்தை பத்தி மட்டும் தான் பேச வந்துருக்கேன். வேற எதையும் இங்க பேச வேண்டாம்" என்றாள் அழுத்தமாக.

"அதே உன் அண்ணன் கல்யாணம் மூலியமா தான் மா உன் கல்யாணமே நடந்தது" வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாயகி ஆற்றமாட்டாமல் வந்து மருமகளை திருத்தினார்.

"அது நடந்துடுச்சே அத்தை, நடக்கலைனா கூட இந்நேரம் ரெண்டையும் நிறுத்தியிருக்கலாம்" பைரவி பேச முதலில் முள் நெஞ்சுக்குள் பாய்ந்தது தேவாவிற்கு தான்.

ஆனால் ஏற்கனவே அவனுக்கிருந்த கோவம், இப்பொழுது மனைவி பேசிய கோவம் என ஆசையை மறந்து சினமே தலை ஓங்கி நின்றது.

"பாத்தியாடா உன் அத்தை மகளை, கல்யாணம் ஆனதும் இந்த பேச்சு அவசியம் தானா?" என்றார் மகனிடம் ஏறிக்கொண்டு.

"என்ன பேச்சு பைரவி இது?" நாயகிக்கு மகளின் மேல் பிடித்தமில்லாதது தெரிந்து பேச்சு பெரிதாகிட கூடாதென பேசும் பொழுதே அழுகை தான் வந்தது சீதாவிற்கு.

"ம்மா என்ன பத்தி அப்றம் பேசிக்கலாம். இப்ப என் அண்ணன் கல்யாணம் நடக்க கூடாது"

தேவா, "நடக்க கூடாதுன்னு சொல்ல நீ யாருடி, என் தங்கச்சி ஆசைப்பட்டா கண்டிப்பா நடக்கும்"

பைரவி, "உங்க தங்கச்சி மட்டும் ஆசைப்பட்ட போதுமா, என் அண்ணனுக்கும் பிடிக்கணும் உங்க தங்கச்சிய"

தேவா வேகமாக சந்தோஷிடம் சென்றான், "ஏன்டா பிடிக்காம தான் சரின்னு சொன்னியா?"

"எதுக்கு இப்போ அண்ணன்கிட்ட சண்டைக்கு நிக்கிறிங்க. அவன் எனக்காக விட்டு குடுத்தான்" பைரவி கணவனிடம் சண்டைக்கு நின்றாள்.

"ஓ காரியம் முடிஞ்சதும் பேச்சு மீறிடுவிங்க?"

"அப்டி இல்ல, ரெண்டு பேருக்கும் புடிச்ச தானே கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கும்?"

"அத தான் கேக்குறேன், என் தங்கச்சிய நம்ம கல்யாணம் பேசுனப்போ பிடிச்சது. இப்போ பிடிக்கலையா? எனக்கு காரணம் வேணும்" என்றான் அவளை போலவே அழுத்தத்தோடு.

"காரணம் தானே, என் அண்ணனும் நிலாவும் லவ் பன்றாங்க" பைரவி போட்டுடைத்த உண்மையில் அவ்விடமே அமைதியாகி அனைவரும் நிலாவை தான் பார்த்தனர்.

பார்வை மொத்தமும் தன் மேல் படிந்திட விழுக்கென கண்ணீர் ஒன்று விழுந்து பைரவியின் கூற்று சரியென நிரூபித்தது.

"இது போதுமா இந்த பேச்சு இதோட நிக்க?" பைரவி கேட்கவும் இஷா பெருங்குரலெடுத்து அன்னையின் தோள் சாய்ந்து அழ வீட்டினர் எவருக்கு சாய்வாக நிற்கவென தெரியவில்லை.

"இத முன்னாடியே சொல்லிருக்கலாமே சந்தோஷ், நாலு மாசமா என் தங்கச்சி ஆசைய வளர்த்து வச்சிருக்கா... இப்போ அந்த கண்ணீருக்கு என்ன பதில் சொல்லுவ?" என்றான் தேவா கோவமாக மச்சானிடம்.

"இனிமேல் என்ன தேவா சொல்லுவாங்க, சிரிச்சு பேசி உன் தங்கச்சிய அண்ணனங்காரன் மயக்கிட்டான். அப்போ தானே நாம அவனை உன் தங்கச்சிக்கு கல்யாணாம் பண்ணி வைக்க பேசுறப்போ அவன் தங்கச்சிய இங்க தள்ளிவிட முடியும்?"

இத்தனை நாள் மனதிலிருந்த கோவத்தை வீட்டினர் முன்பே இறக்கி வைத்தார் நாயகி.

"நாயகி, இப்ப என்ன ஆச்சுன்னு வார்த்தையை விடுற?"

ராஜரத்தினம் கூட தான் இருந்த நிலையில் அதிகம் பேச முடியவில்லை. தங்கை மகன், மகளை நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக இருக்க ஏமாற்றம் குடிகொண்டது.

"நீங்க சும்மா இருங்க, சின்ன பொண்ணு மனசுல அசைய வளர்த்து வச்சு அழுதுட்டு நிக்கிறா. இதோ தேவா கூட கல்யாணம் ஆன விக்னேஷ் இன்னும் பத்து மாசத்துல கைல குழந்தையோட நிப்பான். என் பையன் காலம் எல்லாம் அவனை வேடிக்கை பாத்துட்டே நிக்க வேண்டியது தான்"

பைரவி கலங்கிய விழிகளோடு தேவாவை பார்க்க அவனோ அமைதியாக நிற்கவும் உடைந்தது பைரவி மனம்.

"இப்போ என் ரெண்டு பசங்களுமே இவங்களால நிம்மதி இல்லாம நிக்கிறாங்க" நாயகி ஆற்றாமையில் கூறினார்.

"அத்தை அப்டி எல்லாம் இல்ல, நான் எல்லாத்தையும் மறந்துட்டு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். பைரவி ஏதோ தெரியாம பேசுறா" என்றான் சந்தோஷ் உடனே.

"அதெல்லாம் முடியாது, நீ நிலாவை தான் கல்யாணம் பண்ணிக்கணும்" நடுக்கூத்தில் நின்று சகோதரனை மிரட்டும் பைரவி அங்கிருந்த அனைவருக்குமே புதிது.

"சும்மா நிறுத்துடி. இனிமேலும் உன் அண்ணன் தான் வேணும்னு நிக்கிற அளவு நாங்க மானம்கெட்டு போய்டல"

தேவா பேசியதில் மீண்டும் குடும்பத்திற்குள் பாகுபாடு வந்துவிடுமோ என்ற பயம் அர்ஜுனனுக்கு, "தேவா என்னப்பா இது? பொறுமையா பேசிக்கலாம். பைரவி சின்ன பொண்ணு" என்றார்.

"நான் சின்ன பொண்ணு இல்ல தாத்தா, நான் சொன்னது சொன்னது தான். இந்த கல்யாணம் நடந்தா அவங்க மூணு பேருக்கும் தான் மன கஷ்டம். என் அண்ணனுக்கு இஷா கூட தான் கல்யாணம் இல்லையா அவன் கல்யா..."

அனைவரையும் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று பேசும் மகள் கன்னம் பழுக்கும் அளவு சீதா அறை விட்டிருக்க இன்னமும் இறுகி தான் இருந்தாள் அவள்.

"எல்லாமே உன்னால தான்டி" உக்கிரமாக சிவந்த கண்களை காட்டி நின்ற சீதா கோவம் காட்டும் இடம் மகள் மேல் தான்.

மொத்த வீட்டினரும் அதிர்ந்து நிற்க, "சீதா, இது என்ன கல்யாணம் ஆன பிள்ளை மேல கை நீட்டுற? அவளுக்கு தெரிஞ்சதை அவ சொல்றா" மகளுக்கு துணையாக மனைவியை அதட்டினார் கண்ணன்,

"மாப்பிள்ளை கோவப்பட வேணாம், நாம நிதானமா யோசிச்சு முடிவு பண்ணிக்கலாம்" என்றார் மருமகனிடம் திரும்பி.

"ஆமா ய்யா, மாப்பிள்ளை சொல்றது தான் சரி. ஏதோ தங்கச்சி வாழ்க்கையை நினைச்சு அவனும், அண்ணன் வாழ்க்கையை நினைச்சு பாப்பாவும் பேசிட்டாங்க.

இதுக்காக குடும்பத்துக்குள்ள தேவையில்லாத பிரச்சனை வேணாம். யாரும் வார்த்தையை விடாதீங்க ப்பா" பொதுவாக வேண்டுதல் வைத்தார் அர்ஜுனனும்.

"அய்யப்பா... இனி பேச எதுவுமில்லை. நிலாவும் என் தங்கச்சி தான். தாராளமா கல்யாணம் பண்ணட்டும். ஆனா என் கோவம் எல்லாம் இவன் மேல தான்" என்றான் இன்னமும் இறங்கி வராத குரலில்.

"அப்போ உன் தங்கச்சிக்கு என்னடா பதில் சொல்ல போற?" நாயகி மகனிடம் வந்தார்.

"மனச மாத்த சொல்லுங்க, இல்ல அவன் கால்ல போய் விழுந்து என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் பிச்சை கேட்கணுமா?"

"தேவா ஏன் இப்டி எல்லாம் பேசுற?" விக்னேஷ் தேவாவிடம் பணிவாக கேட்டான்.

"இவங்க சொல்றது அப்டி தானேடா இருக்கு. அதான் அவன் தங்கச்சி சிலுப்பிகிட்டு நிக்கிறால" அப்பொழுதும் கோவத்தை காட்டும் இடம் அவள் முகம் தான் என்பது போல் இருந்தது.

"ஆனந்த்..."

"போதும் பைரவி" மனைவியை நிறுத்தி அன்னையிடம் திரும்பியவன், "பத்து நிமிசத்துல கிளம்பலாம்" என்றான் முடிவாக.

"தேவா, நாளைக்கு கிளம்பலாம்" என்றார் ராஜரத்தினமும் கூட.

"வேணாம் ப்பா. இஷாக்கு இங்க இருந்தா சரி வராது. அப்டி உங்களுக்கு இருக்கணும்னு தோணுனா நீங்க ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க" சகோதரனாய் இஷாவின் நிலையையும் யோசித்து துரிதமாக முடிவெடுத்தான்.

"என்ன ய்யா தேவா இது? இந்த குடும்பம் ஒண்ணா சேர்ந்துடுச்சுனு சந்தோசமா கொஞ்ச நாள் இருந்தோம். மறுபடியும் செதறி போகவாயா இத்தனை நாள் உசுர கைல புடிச்சு வந்தேன்?"

கண்ணீர் மல்க பேரனிடம் பார்வதி கேள்வி கேட்க அவரின் கையை பிடித்து, "இப்ப என்ன ஆச்சுன்னு இந்த கண்ணீர்? யார் சொன்னா இப்போ நாங்க பிரிஞ்சு அப்டியே போறோம்-னு?"

அவர் கண்ணீரை துடைத்தான் கனிவாக, "ரெண்டு பேர் பண்ண தப்பால யாரும் வேணாம்னு நான் சொல்ல மாட்டேன். அப்பா கூட இங்க தானே இருக்கேனு சொன்னாரு?" பார்வதி ஆமாம் என்றார் கண்ணீரோடு.

"அவ்ளோ தான். இஷா நார்மல் ஆகட்டும் நாங்க வர்றோம்" என்றான் தேவா.

"யய்யா உங்களுக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கேன் அதையாவது இந்த கெழவிக்காக சாப்பிட்டு கெளம்பலாம்ல?"

பார்வதி கேட்கவும், காயத்திரி, சீதா என அனைவரும் அதையே வற்புறுத்த அரை மனதாய் சரி என்றான்.

உணவை எடுத்துவைத்து காயத்திரி அனைவருக்கும் பரிமாற தேவா முதலில் அமர்ந்தான் வேகமாக கிளம்பும் எண்ணத்தோடு.

அவனுக்கு பிடித்த நண்டு சூப்பை ஊற்றி நாட்டுக்கோழி குழம்பை வைத்து இறால் தொக்கை வைத்த காயத்திரி,

"தேவாக்கு இவ்ளோ கோவம் கூட வருமா?" என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில்.

தலை திருப்பி பார்த்தவன் அவர் சிரிப்போடு இருப்பது பார்த்து தான் நிம்மதியானான், "பெரிம்மா என் மேல கோவம் இல்லையே" என்றான் சங்கடமாக.

அவன் கன்னம் தடவியவாறு, "இல்லப்பா, ஆனா எங்களுக்கு இந்த விசியம் எல்லாம் இன்னைக்கு தான் தெரியும். ஒரு அண்ணனா நீ பேசியிருக்க தேவா. இஷா சரியானதும் அடுத்து பேசிக்கலாம்.. இப்போ விசயத்தை ஆற போடு" என்றார் அவரும் அமைதியாக.

நிம்மதி பிறக்க இரண்டு வாய் உணவை உண்டவன் பைரவியை தேட அவள் அங்கில்லை. தலையை பின்னால் சாய்த்து வரவேற்பறையில் தேட நிலா பைரவியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

சரி உண்ண வருவாள் என தேவா தன்னுடைய வயிற்றை நிறைக்க முற்பட தனக்கு எதிரில் கண்ணீர் மல்க நிற்கும் சகோதரியை பார்த்து தொண்டைக்குழியில் குத்தியது அந்த பஞ்சு பருக்கை கூட. அதிலிருந்து அவனை விடுவிக்க சரியாக கைபேசி சிணுங்கியது.

வெற்றி தான் அழைத்திருந்தது. குளத்தில் மாட்டியிருந்த சி.சி.டி.வி கேமராவில் இருந்த இரண்டு நாள் பதிவு தொலைந்திருந்தது.

அதை பற்றிய தகவல்களை தேட தான் காலையிலிருந்து முயற்சி செய்துகொண்டிருக்க பயன் என்னவோ பூஜ்யம் தான். பேசிவிட்டு வருவதாக கூறியவன் எழுந்து அர்ஜுனன் அறைக்கு சென்றான்.

"தேவா கிளிப் மிஸ் ஆன மாதிரி தெரியல, கேமரா வயற யாரோ அறுத்துட்ட மாதிரி இருக்குன்றாய்ங்க" என்றான்.

"அப்போ யாரோ வேணும்னே தானே மாப்பிள்ளை உசுர காவு வாங்குறாய்ங்க?" என்றவன் குரலில் மிதமிஞ்சிய வருத்தம்.

"ஆமாடா.. சரி இங்கன வந்து அத பேசிக்கலாம், போன காரியம் என்னாச்சு?"

"நாசமா போச்சு... எல்லாம் இவா பண்ற வேலை மாப்பிள்ளை. நினைச்சாலே ஆத்திரமா வருது" ஜன்னல் கம்பியில் ஓங்கி தேவா குத்தினான்.

"தங்கச்சி என்னடா பண்ணுச்சு? சரி... கோவப்படாத. வந்து பேசிக்கலாம். வைக்கிறேன்"

இணைப்பை துண்டித்த தேவா திரும்பி பார்க்க அங்கு சிவந்த விழி, வாடிய முகமாய் பைரவி காட்சியளித்தாள்.

"அதான் பிளான்படியே நிறுத்திட்டல இன்னும் என்ன வேணும்னு வந்து நிக்கிற?" என்றான் கடுகாய் பொரிந்து. அவன் கோவமும் நியாயமாய் பட பொறுமையாய் பேச எண்ணினாள் பைரவி.

"எனக்கு போதும்கிற அளவு ஏற்கனவே கெடைச்சிடுச்சு ஆனந்த். நான் சொல்றத ஆனா நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும்"

"புரிஞ்ச வரைக்கும் போதும். நீ பண்ண தப்புக்கு விளக்கம் சொல்ல வர்றதா இருந்தா வந்த வழியே கெளம்பிடு"

"நான் பண்ணது தப்பா ஆனந்த்? இந்த விசியம் கல்யாணத்துக்கு அப்றம் தெரிய வந்தா அத கடந்த காலமா நினைச்சு விடுற ஆளா இஷா? தேவையில்லாம பிரச்சனை தான் வரும், சந்தேகம் வரும் அவங்களுக்குள்ள"

"ஓ என் தங்கச்சி அடங்காபிடாரி, அவசரபுத்திக்காரி-னு சொல்ல வர... அதான?"

"அது உங்க எண்ணம் போல, நான் அவளுக்கு அந்த அளவு மெச்சூரிட்டி இல்லனு சொல்ல வந்தேன்"

"தன்னோட தப்ப மறைக்க அடுத்தவங்களை எந்த அளவுக்கு வேணா அவமானப்படுத்த நீ ரெடி ஆகிட்ட. காலைலயே உன் வார்த்தையை எல்லாம் ஒழுங்கா கவனிச்சிருந்தா இன்னைக்கு நாங்க இங்க அசிங்கப்பட தேவையிருந்திருக்காது"

எதார்த்தமாக காலை பைரவி கேள்வி கேட்டதில் கூட உள் அர்த்தம் உள்ளதோ என யோசிக்க துவங்கியது தேவாவின் சிந்தனைகள். அவமானம் ஒரு பக்கம் இருந்தாலும், சந்தோஷ் மேல் சகோதரி வளர்ந்துள்ள நேசம் அவ்வாறானது.

"நான் அண்ணனோட முகத்தை வச்சு பேசுனேன், என்னோட வாழ்க்கைக்காக என்னோட அண்ணன் அவசரப்பட்டு வார்த்தை விட்டுட்டான். அப்போ நானே தானே அத சரியாக்கணும்? அத செஞ்சிருக்கேன்" என்றாள் நிமிர்வாக.

"உனக்கு நீ பண்ணது தப்புன்னே தெரியலையா பைரவி?" கோவமாக அவள் முகம் பார்த்து கேட்டான்.

சிவந்த அவன் விழிகள் பயம் தந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் பெண்ணுக்கு, "தெரியலைங்க. எத்தனை தடவை, எந்த விதத்துல நீங்க கேட்டாலும் நான் பண்ணது தப்புனு நான் சொல்லவே மாட்டேன். உங்க தங்கச்சிக்கு எது நல்லதோ அத மட்டும் தான் நான் செஞ்சேன்" என்றாள் நிமிர்வாக.

"எப்பா, என்ன பெரிய மனசு. உன் அண்ணனுக்காக செஞ்சேன்னு சொல்லுடி. என்ன மயக்க என் தங்கச்சி பேர சொல்லாத" அவள் பேசுவது அவனை மேலும் வெறியேற்றியது.

"என்னது உங்கள மயக்கவா?" புருவங்கள் சுருக்கி அவனை கேள்வியாய் பார்த்தாள்.

"இல்லையா பின்ன? உன் வியாகாணமான பேச்சுல நீ சொல்றதெல்லாம் நம்பி இருந்தவன செருப்புல அடிச்ச மாதிரில புரியவச்சிட" - தேவா

கண்கள் கலங்கி நின்றாள் பைரவி, "பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க ஆனந்த். இந்த பிரச்சனை பெருசா மாற வேணாம்னு தான் பேச்சு வந்தப்பயே முடிச்சு வச்சேன். ரெண்டு நாள் இஷா அழுவா, அதுக்கு அப்றம் மறந்துடுவா"

"ஏது உன் அண்ணன் சந்தோசமா இருப்பான், என் தங்கச்சி அழுகணுமா? இல்ல தெரியாம தான் கேக்குறேன் இந்த விசியம் எல்லாம் நம்ம கல்யாணம் முன்னாடியே உனக்கு தெரியும் தானே? அப்போ தடுத்திருக்கலாமே" - தேவா

"இல்லங்க எனக்கு..." - பைரவி

அவளை பேசிவிடவில்லை அவன் வார்த்தைகளை அள்ளி கொட்டினான், "நீ நல்லவளா இருந்தா கண்டிப்பா அப்ப தான்டி தடுத்திருக்கனும். அப்போ தடுத்திருந்தா இந்த இளிச்சவாயன் உனக்கு சிக்கிருக்க மாட்டானே. நல்லா பிளான் போட்டு வளைச்சிட்டீங்க அண்ணனும் தங்கச்சியும்"

"இதுக்கு மேல பேசாதீங்க அப்றம்..." அவன் பேசிய வார்த்தைகள் மனதை சுட்டு கொல்ல மனம் பொறுக்காமல் கோவத்தை காட்டியவள் மீதே மீண்டும் திருப்பினான்,

"மிரட்டு மிரட்டு. உன் இஷ்டத்துக்கெல்லாம் மிரட்டு. உன்னோட பொய்யான கண்ணீரை பாத்தும் என் குற்ற உணர்ச்சிக்காகவும் உன்ன கல்யாணம் பண்ணது எவ்ளோ பெரிய கிறுக்குத்தனம்னு இப்ப தோணுதுடி"

தலையில் அடித்து அவளுக்கு முதுகு காட்டி நின்ற அந்த தேவா அந்நியமாய் போனான். இத்தனை நாள் திகட்ட திகட்ட அன்பை மட்டுமே கொட்டியவன் இன்று விஷத்தை கொட்டுகிறான். மனம் நெருப்பில் சுட்டது போல் வலித்தது பைரவிக்கு.

"குற்ற உணர்ச்சியா ஆனந்த்?" தடுமாறி உடைந்து வந்த அவள் குரலில் இறுக்கமாக கண்களை மூடினான்,

"குற்ற உணர்ச்சில தான் என்ன கல்யாணம் பண்ணிங்களா ஆனந்த்?" கை வரை மடித்துவிட்டிருந்த அவன் சட்டையை பிடித்து தன்னை நோக்கி திரும்பியவள் முயற்சியை தடுக்கும் விதமாக கையை தட்டிவிட்டான் ஆனந்த்.

கண்ணீர் பெருகி வர முகம் காட்டாமல் திரும்பி நிற்பவனை பார்த்து இன்னும் வேதனை அடைந்தது மனம். அவன் அறையை விட்டு வெளியேற சென்ற கால்கள் திரும்பி அவன் முகம் பார்த்தாள் விசும்பலை கட்டுப்படுத்தி.

"நீங்களும் எல்லாரையும் போல பாவப்பட்டு தான் என் கூட இருக்கீங்களா?"

பேச்சில் இறுதியில் வாயை பொத்தி அழுதவள் மெல்லிய அழுகை அவன் காதை அடைய தலையை மட்டும் திரும்பி பார்த்தான். நிற்கவே தெம்பில்லை அந்த மெல்லிய உடலில், கண்ணீரை துடைத்து அவனை ஏறிட்டு,

"ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ரொம்ப..." என்றவள் குரல் உடைந்தது,

"இப்டி எல்லார் கண்ணுளையும் பரிதாபத்தை பாக்குறதுக்கு அன்னைக்கே நான் செத்துருக்கணும்" முள்ளாய் குத்திய அவள் வார்த்தைகள் அவனை சென்று சேரும் முன்பு அவன் மனைவி அவ்வறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

"ஹே சக்கரை" அவன் அழைப்பு காற்றோடு காற்றானது.

Happaaadaa... how is the chapter??

comments please makkale

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro