ஆனந்தம் - 14
தேவாவின் ஸ்கார்பியோ அந்த பெரிய வீட்டின் முன்னால் வந்து நிற்கவும் முதல் ஆளாக கீழே இறங்கியது நிரஞ்சன் தான். இறங்கியவன் அமைதியாக இருந்தானா? பைரவி இறங்க ஏதுவாக அவள் பக்க கதவை திறக்க எத்தனிக்க தேவா அதனை லாக் செய்துவிட்டான்.
"ப்ரோ கதவை திறக்க முடியல ப்ரோ, அன்லாக் பண்ணுங்க" என்றான்.
"ராம் உங்க ரிப்போர்ட்டர்கிட்ட சொல்லி வச்சுக்கோங்க, உசுரோட ஊர் போய் சேரமாட்டான்"
தேவாவின் எச்சரிக்கையை கேட்டு பைரவி அவன் கையை பற்றிக்கொண்டாள், "ஆனந்த் இது என்ன சின்ன புள்ள தனமா?" சிரிப்போடு கேட்ட மனைவியை முறைத்தான்.
"என்னமோ பல வருஷம் பழக்கம் மாதிரி சிரிச்சு பேசுற அவன்கிட்ட. என்கிட்டே என்னைக்காவது அப்டி பேசிருக்கியா? போடி" பொறாமை வேரூன்றி இருந்தது அவன் குரலில்.
பின்னால் இருந்த ராம் தன்னுடைய உடமைகளை எடுத்து கீழே இறங்கி நண்பன் நிரஞ்சனை அவ்விடம் விட்டு அப்புறப்படுத்தினான்.
"அவர் போய்ட்டார் ஆனந்த்" தேவா இன்னும் கதவை திறக்கும் வாய்ப்பை மனைவிக்கு கொடுக்கவில்லை.
"அவர் பார்வைல சுத்தமா தப்பு இல்லங்க. ஏதோ அவர் இயல்பு போல இது" என்றாள்.
'டக்' என்ற சத்தத்தோடு அவள் கீழே இறங்க அனுமதி தேவாவிடமிருந்து வர இந்த முறை பெண்ணவள் இறங்கவில்லை. மனைவியை திரும்பி முறைத்தவன்,
"போடி சக்கர" என கோவமாக கூறி கீழே இறங்க கதவில் கை வைக்க தன்னுடைய இருக்கையிலிருந்து தேவாவின் கதவின் ஓரம் சென்று அவனை வெளியில் செல்லவிடாமல் அவன் உடலோடு உரசி தடுத்தாள் பைரவி.
மனைவி செயல் அதிர்ச்சியை கொடுக்க சற்று நகர்ந்தாலும் அவள் உடலை அதிகம் உரசும் தன் உடலை மூச்சு கூட விடாமல் பிடித்து வைத்திருந்தான் தேவா.
"ஆனந்த் உங்களுக்கு பொறாமை தான?" கேலி சிரிப்போடு அவனை பைரவி ஏறிட, முதலில் அவளுக்கு பதில் கூறவேனும் மூச்சை விட வேண்டுமென உணர்ந்து அவள் கையை விளக்கி அமர்த்தினான்.
"ஒரு ஆமையும் இல்ல" மீண்டும் மனைவி தன்னை முற்றுகையிடும் முன்பு வேகமாக கீழே இறங்கி, "பேக் எதையும் எடுக்காத, உள்ளையே இருக்கட்டும்" என்றான்.
"ஆனந்த்" மனைவியின் என்ற திருப்தியற்ற அழைப்பில் திரும்பி, "ஏய் அவிங்க இருக்காய்ங்கனு நான் சொல்லலடி. நமக்கு வேற வீடு ஏற்கனவே பாத்து வச்சிருக்கேன், அங்க தான் போறோம். காரணம் இப்ப எதிர் பாக்காத" என்றான் முடிவாய்.
சரி என்றவள் வீட்டினுள் சென்று இளங்கோவன், கடற்கரைதாயம்மாளிடம் சென்று ஆசீர் பெற்று காலை உணவை உண்ண, உடன் தேவாவே ராம் மற்றும் நிரஞ்சனை அழைத்தான்.
"அந்த புள்ள அப்பயே சாப்ட்டானே, என்ன தம்பி உனக்கு இன்னும் பசிக்கிதாய்யா?" என தேவாவின் பாட்டியே கேட்கும்படி இருந்தது அவன் செயல்.
"இல்ல அப்போ எனக்காக சாப்பிட்டேன். இப்போ ஆசையா என்ன கூப்பிட்ட உங்க பேரனுக்காக சாப்புடுறேன் பாட்டி, இன்னொரு ஆப்பம் வச்சாலும் குறை சொல்லாம சாப்புடுவேன்" ஏப்பம் ஒன்றை விட்டு அவன் கேட்டதும் பைரவி சத்தமாக சிரிக்க அவனுக்கு வைக்கப் போன உணவை தான் பிடுங்கி உண்டான்.
"உங்க பேரனுக்கு பசிக்கிது போல, சரி எனக்கு ரெண்டா வந்து குடுத்துடுங்க. அப்டியே முடிஞ்சா நாட்டுக்கோழி முட்டை உடைச்சு ஊத்தி முட்டை ஆப்பம்" நிரஞ்சன் கேட்டதில் கட்டுப்படைந்த தேவா அருகில் அமர்ந்திருந்த ராமை தலையில் ஒரு அடி வைத்தான்.
"உங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விட்டதே தப்புடா. ஒழுங்கா மதியம் சாப்பிட்டு ஊரு பாத்து கிளம்புங்க"
உரிமை தானாகவே தேவா எடுத்துக்கொள்ள ராமும் சரி நிரஞ்சனும் சரி எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. அவர்களுக்கே உரிய தொழிலின் பழக்கம் பார்ப்பவரை எல்லாம் சில நொடிகளில் சொந்தமாக்கிக் கொண்டனர்.
அதற்கு ஏதுவாக கடற்கரைதாயம்மாளின் பாசமும், இளங்கோவனின் அரவணைப்பும் கிடைக்க மேலும் பழக எளிதான பாதையாக போனது.
"ராமு வாடா ஒரு தூக்கம் போட்டு மதியம் போல வேலைய பாக்கலாம்" நண்பனை அழைத்தான் நிரஞ்சன்.
"யய்யா, முட்ட ஆப்பம் கேட்ட?" சமயலறையிலுருந்து குரல் வந்தது.
"இங்க தீய சக்தி அதிகமா இருக்கு பாட்டி, நான் அங்க வந்து வாங்கிக்கிறேன்" இலையை மடித்து அப்படியே தூக்கி சென்றவனை எழுந்து நின்று தலையில் கொட்டினான் தேவா.
"வெண்ணை இலைய வச்சிட்டு அங்க போய் தட்டுல எடுத்து சாப்பிடுடா" தேவா மிரட்டவும், "போடா டேய்" என திட்டிக்கொண்டே சமயலறைக்குள் ஓடி பதுங்கிவிட்டான் நிரஞ்சன்.
சின்ன சிரிப்போடு உணவை மனைவி முடிப்பதை பார்த்தவன், "குளம் வர போய்ட்டு வர்றேன்" பெயருக்காக கூறி செல்ல அவனிடம் தலை அசைத்து அனுமதி கொடுத்தாள் தேவானந்தின் சக்கரை.
தேவா சென்றதும் அவன் ஆச்சி இருந்த சமையலறை சென்ற பைரவி அங்கு நின்று ஆப்பம் ஊற்றும் நிரஞ்சனை பார்த்து கடற்கரைதாயம்மாளிடம் திரும்பினாள்.
"அவங்க எங்களுக்கு தனியா வீடு பாத்துருக்குறதா சொன்னாங்க ஆச்சி உங்ககிட்ட எதுவும் சொன்னாங்களா?" என கேள்வி கேட்டாள்.
"தெரியும் ம்மா, என் பேராண்டிக்கு இங்கன இருக்கவே பிடிக்காது. ஒருவேளை இங்க தங்குற சூழ்நிலை வந்தாலும் வாசல்லயே கட்டில்ல படுத்து எந்திரிச்சிட்டு கெளம்பிடுவான்" வேதனையோடு முடித்தார்.
"ஓ வாட்ச்மேன் வேலை கூட பாப்பாரா உங்க பேரன்?" வெற்றிகரமாக ஆபத்தை பியித்துவிடாமல் எடுத்த துள்ளலில் நா பரபரத்து கேட்டுவிட்டான். பைரவி அவனை முறைக்க அவன் பேசியதை கேட்டு ஆச்சிக்கு மேலும் தான் வருத்தம்.
"நீ சொல்ற மாதிரி தான் ய்யா இந்த வீட்டுல உள்ளவிங்க பேசுனாய்ங்க. கொஞ்சம் நஞ்சமாவா பேச்சு வந்துச்சு என் பேரனை பத்தி" ஏதோ பெரிதாக நடந்திருக்குமோ என்ற பய உணர்வு பைரவிக்கு வந்தது.
"அவரை யார் ஆச்சி இப்டி எல்லாம் பேசிருப்பாங்க?" என்றாள் தயக்கமாக. அவனை பைரவி தெரிந்தவரை எவர் பேச்சையும் அதிகம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான்.
அதிகம் அவனை ஒதுக்கிவைக்கும் அவன் தந்தையின் வார்த்தையை கூட மூளைக்கு எடுத்துச் சென்று கோவத்தை காட்டுபவன் அதை ஒருபொழுதும் மனதிற்கு எடுத்து சென்றதில்லை.
இப்பொழுது கூட மாளிகை போல் இருக்கும் இந்த வீட்டில் குறைந்தது பத்து குடும்பம் தாராளமாக தங்கலாம் தான். ஆனால் இன்று இங்கு ஒரு நாள் கூட தங்க வேண்டாம் என வேறு இல்லம் பார்த்திருப்பவன் மனதின் காயத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
"வேற யாரு ம்மா நான் பெத்த மவராசன் தான்" என்றார்.
"கதை நல்லா இருக்கே" ஆர்வமாக கதை கேட்க துவங்கினான் நிரஞ்சன்.
"குசும்புக்காரா" ஆச்சி செல்லமாக அவனை அடித்து பேத்தியிடம் திரும்பினார்.
"என் மவன் நல்லவன் தான் தாயி. மறுமவனே-னு அவன் உருகுறதும் மாமா-னு இவன் உருகுறதும் பாக்கவே அப்டி கண்ணு குளுந்து போகும். தேவாவை தோள் மேல தூக்கி வச்சு ஊரையே சுத்துவான். அந்த அளவு பிரியம் அவனுக்கு தங்கச்சி மவன் மேல.
என் மவனுக்கு மண்ணு சகதி, வெயில் எதுவும் ஆகாது. சரின்னு மருதல ஒரு மல்லிகை கடை வச்சு கொடுத்தோம். நல்ல யாவாரம் ஆச்சு. கையோட கல்யாணத்தை பண்ணி வச்சிட்டோம். மருமக குணமும் தங்கம்னும் சொல்ல முடியாது, ஒண்டாத பண்டாரம்னும் சொல்ல முடியாது. இங்க வந்தா அனுசரிச்சு தான் போவா.
கிடுகிடுன்னு தேவா வளந்தான். வளர வளர மாமன் வருவான்னு இங்க வந்து கிடையா கிடப்பான். தாத்தா கஷ்டப்படுறத பாத்து கூட மாட எல்லா வேலையும் இழுத்து ஒட்டு செய்வான்.
என் மகன் கத்துக்காதத என் பேரன் பதினெட்டு இருவது வயசுலயே கத்துக்கிட்டு மீசையை முறுக்கி நினைப்போ என் அய்யாவை பாத்தா மாதிரி அம்புட்டு கம்பீரம் அவன்கிட்ட" பேரனை பற்றி பேச பேச பூரிப்பு அவர் முகத்தில் பூத்து மகிழ்ச்சி தாண்டவமாடியது.
"அவன் தாத்தன பத்தி ஒருத்தர பேச விட மாட்டான். சண்டியனாட்டம் முறுக்கிக்கிட்டு நிப்பான். அவனோட அந்த அழகை பாத்தே நான் அவனுக்கு அந்த தங்க காப்பு வாங்கி தந்தேன். அவன் தாத்தா என்ன வசவு வஞ்சே கொன்னுடுவார்.
அவன் கோவத்தை குறைக்க பாக்காம இது என்ன ஏத்தி விடுற-னு . இதுல மருமகன்புள்ள வேற நாயகிக்கிட்ட திட்டுவார் போல. படிச்சவன் மாதிரி இல்லாம மாட வளக்குறது தென்னை ஏறுறதுன்னு" சிரித்தார் முகம் உடனே வாடியது.
"எல்லாத்துக்கும் கண்ணு வச்ச மாதிரி கொஞ்சம் கொஞ்சமா வீட்டுல பஞ்சாயத்து வர ஆரமிச்சது. தேவாவை அவன் தாத்தா இப்டியே வேலைய பாத்துக்கோ-னு கொஞ்சம் கொஞ்சமா அவன் பொறுப்புள்ள விட ஆரமிச்சார்.
என் மவன்க்கு ரெட்டை பொம்பள புள்ளைங்க. அதுல ஒருத்தி தேவாவை விட நாலு வயசு இளையவ. இந்த பயன் ஊருல எல்லா புள்ளைங்ககிட்டையும் ரவுச காட்டுற மாதிரி அவகிட்டையும் பேசிருக்கான்.
அத என் பேத்தி பெருசா எடுத்துக்காட்டு அவ அப்பன்காரன்கிட்ட சொல்லி அழுக, மருமக அவனை ஏவிவிட்டு வீட்டுல ஒரே சலசலப்பு. 'அனாதையா நின்ன உன் அம்மையையும் அப்பனையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து விட்டதுக்கு என் பொண்ண வளச்சு போட்டு சொத்தை அமுக்கலாம்னு பாக்குறியா'னு நாக்குல நரம்பே இல்லாம பேசுனான்" புடவை முந்தானையை எடுத்து கண்ணீரை துடைத்தார் அந்த முதியவர்.
பைரவியால் ஓரளவு யூகிக்க முடிந்தது அதன் பிறகு பிள்ளைகளுக்கு இடையேயான உறவு எந்த வகையில் இருந்திருக்கும் என. தங்கள் திருமணத்திற்கு கூட அவன் தாய்மாமா மட்டும் தான் வந்தார், அதுவும் மூன்றாம் நபரை போல நேரத்திற்கு வந்து பெற்றோர், தங்கையிடம் கூட பெரிதாக பேசவில்லை. ஒதுக்கம் காட்டி சென்றுவிட்டார்.
"அதோட நிறுத்துனானா அந்த பாவிப்பயே, என் பேரனை அடிச்சு முகம் எல்லாம் ரத்தம் வழிய நின்னும் வெறி அடங்காம போலீஸ் வர கூட்டிட்டு போனான். அதுக்கு மேல இவரால் பொறுத்துக்க முடியல.
'வருசத்துக்கு ஒரு நாள் வந்து நாங்க உசுரோட இருக்கோமா என்னனு பாத்துட்டு போற நீ எங்களுக்கு வேணாம், உன்னோட பங்க இன்னைக்கே உனக்கு ரூவாயா தர்றேன் இனி இந்த பக்கமே வர கூடாது' னு சொல்லிட்டார்.
ஊர் பஞ்சாயத்தை கூட்டி மகளுக்கும் மகனுக்கும் சரி சமமா பங்கு குடுத்தார். தேவாக்கு விவசாயம் தான் விருப்பமனு தெரிஞ்சு அவன் பேர்ல தோட்டம் நிலைத்த வச்சு அதுக்கான தொகையை என் மவன் கிட்ட கொடுத்தோம்.
'கடைசில உழைக்காம பெரிய சொத்தையே களவாடிட்டு போறான் பாரு-னு' அந்த நேரத்துலையும் என் மருமக சொல்ல நாயகி கைல இருந்த மொத்த பத்தரத்தையும் எங்க கைல குடுத்தான்.
'இந்த இடம் எனக்கு வேணும், ஆனா அதுக்கான பணத்தை வட்டியும் முதலுமா உங்க கைல குடுத்துட்டு தான் அதுல முழு உரிமை கொண்டாடுவேன்'-னு ஊர் முன்னாடி வச்சு சத்தியம் பண்ணான்.
அதுக்காக இன்னைக்கு வர என் பேரன் மாடா ராத்திரி பகல் பாக்காம உழைச்சுபணத்தை கட்டிக்கிட்டு இருக்கான். இப்போ கூட இந்த வீட்டுக்கு அவன் வர ஒரே காரணம் எங்க மேல இருக்க பாசத்தால் தான் தவற, உரிமை எடுத்து வந்ததில்லை. ஒரு நாள் கூட வாய தொறந்து பசிக்கிது-னு கேக்க மாட்டான்.
இப்போ அவன் கூட்டிட்டு வந்தானே இந்த பசங்க, இவங்களுக்கான சாப்பாடு செலவு கூட அவன் இதோ இங்க வச்சிருப்பான்" அஞ்சறைப்பெட்டியை எடுத்து காட்டினார். இரண்டாயிரம் தாள் ஒன்று காற்றில் ஆடி நின்றது.
"ஆனா எனக்கு என் பேரன் செஞ்சது இப்ப வர பெருமையா தான் இருக்கும். அவன் மனசுக்கு மவராசனா தான் வாழுவான்" என்றார் ஆத்மார்த்தமான வாழ்த்தோடு.
குடும்பம் இரண்டாக போனதது வருத்தமாக இருந்தாலும் கணவனின் செயல் மனைவிக்கு கர்வத்தை கொடுத்தது. கொண்டவன் நல்லவனாக இருந்தால் கூரை மேல் ஏறி நின்று கூட கூவலாம் என்பதை போல் சுயம்புவாய் நிற்கும் தன்னவன் உழைப்பின் மீது கர்வம் அவளுக்கு.
"நோட் பன்ரா... நோட் பன்ரா நிரஞ்சா... 'மாமன் மகள் கண்ணீரில், அத்தை மகன் இளநீரில்'-னு ஒரு ஆர்டிகிளே விடலாம் போலயே"
தனக்கு தானே பேசிய நிரஞ்சன் திடீர் தாக்குதலை கேட்டு பைரவி வயிற்றை பிடித்து சிரிக்க துவங்கியவள் இரண்டு நிமிடம் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள்.
கைபேசியில் ஒரு முக்கியமான அழைப்பு வந்திருக்க குளத்திற்கு செல்லாமல் வெளியில் இருந்த தேவாவிற்கு மனைவி சிரிப்பொலி கேட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க, அடுப்படி திண்ணையை பிடித்து இன்னும் சிரித்துக்கொண்டிருந்தவள் கண்களில் ஓரம் கண்ணீர் துளி. மேலும் வெறுப்பேற்றியது அவன் ஆச்சியின் சிரிப்பும்.
"டேய் கேமரா எடுத்துட்டு வா, குளத்துக்கு உன்ன கூட்டிட்டு போக ஆள் வந்துருக்கு" அவன் காதில் விழும்படி கத்தினான் தேவா.
"யோவ், நான் மதியம் தான் வருவேன், இப்போ தூங்க போறேன். வேணும்னா கேமரா தர்றேன் நீ ரெண்டு போட்டோ எடுத்து வை"
பொறுப்பை அவன் கையிலே நிரஞ்சன் ஒப்படைக்க கடுப்பானவன், "அடிங்க.." கீழே குனிந்து கல்லை தேடி தலையை தூக்க நிரஞ்சன் அங்கு இல்லை.
மதிய உணவை முடித்து சில மணி நேரங்களில் நிரஞ்சன் மற்றும் ராமை குளத்திற்கு அனுப்பிவைத்தவன் தானும் அங்கு மனைவியோடு சென்றான். வீட்டிற்கும் குளத்திற்கும் தூரம் அதிகம் இல்லாத காரணத்தால் நடந்தே சென்றனர்.
குளத்தை தூரத்தில் இருந்தே பார்த்த பொழுதே பைரவி வாயை பிளந்தாள், "இவ்ளோ பெரிய குளமா?" என்று.
"ஆமா இந்த குளத்தை ஒவ்வொரு பத்து வருசத்துக்கு ஒருக்க தூர் வருவோம். வைகை ஆத்துல தண்ணி கிடைக்காத நேரம் எல்லாம் இது தான் கை குடுக்கும், இங்கன தான்..."
தூரத்தில் கை காட்டி எதையோ கூற வந்தவன் அப்படியே பேச்சை நிறுத்திட, கணவன் முகத்திலோ குறும்பின் சாயல்! "என்ன புள்ள சாந்தி பாத்தும் பாக்காத மாதிரி அப்டியே போற?"
அருகில் வரும் மனைவியை கூட மறந்து போனான் தேவா. தேவாவை திரும்பி முறைத்தவள், "நீங்க தானே மாமா என்ன ஏமாத்திட்டீங்க அதான் கோவமா போறேன்" என்றாள் அந்தப் பெண்.
"என்னது ஏமாத்திட்டேனா?" வேகமாக நடந்தான் தேவா அவளை நெருங்கிவிடும் நோக்கத்தில், "என் மாமா மக யாரும் ஏமாத்த விட மாட்டாளே" என்றான் அவனும்.
தேவாவிற்கு பின்னால் வந்த பைரவியை பார்த்த சாந்தி, "அக்கா இவரு ஊர் மகா ஏமாத்துக்கார்க்கா. கொஞ்சம் உஷாரா இருங்க. ஊர்ல இருக்க அம்புட்டு பொம்பள புள்ளைங்ககிட்டையும் கட்டிக்கிறேன் கட்டிக்கிறேன்-னு டாவு விட்டுட்டு சுத்துறார்"
பைரவிக்கு எச்சரிக்கை கொடுத்த கையேடு, "யாருக்கு தெரியும் சொன்ன மாதிரி எந்த புள்ளையையாவது கல்யாணம் பண்ணிருக்க போறார்" என்றாள்.
பைரவி அமைதியாக வர தேவா இப்பொழுதும் சாந்தியிடம், "இப்ப கூட ஒன்னுமில்ல, என் பொண்டாட்டி பெர்மிஷன் வாங்கி உன்னையும் ரெண்டாம் தாரமா கட்டிக்கிறேன். சரி சொல்லு பாப்போம்" என்றான் விடாமல்.
பைரவிக்கு அருகில் இருந்த பெரிய பாறையை அவன் தலையில் போடும் கோவம் வந்தது. அவளை துரத்திக்கொண்டே சென்றவர்கள் குளத்தை அடைய சாந்தியோ தேவாவிடம் சிறிது பேசி தன்னுடைய கோவத்தின் அளவை கட்டிவிட்டு சிரிப்போடு நகர்ந்தாள்.
குளத்தின் கரையை எட்டிய நேரம் அங்கு ராம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க நிரஞ்சன் அங்கிருந்த மூன்று நபரிடம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
மாலை வெயில் மங்கியிருக்க குளத்தில் சற்று கூட்டம் இருந்தது. குளத்தை சுத்தப்படுத்தும் வேலை சிறிது முடிந்திருக்க ஆட்கள் தங்கள் பொருட்களை எடுத்து வைத்து காத்திருந்தனர்.
வேலை செய்பவர்களுக்கு அன்றைய நாளின் பணத்தை கொடுத்து வரும் வரை பைரவி கரையின் ஓரம் அமர்ந்திருக்க அவளை அடையாளம் கண்டுகொண்ட பெண்கள் பலர் அவளோடு வந்து இதமாக பேச துவங்கினர்.
அரை மணி நேரம் பிறகு தேவா மனைவி அருகில் வர, "பாருங்க உங்க பொண்டாட்டி வந்ததும் எங்களை கண்டுக்கவே மடிக்கிறிங்க?" குற்றம் சாட்டிய பெண்ணை பார்த்து சிரித்த தேவா கால்களை அப்படியே திருப்பி அவள் அருகில் சென்று நின்றுகொண்டான்.
"யார் சொன்னா கண்டுக்கலனு... வரப்போ கண்ண கசக்கிட்டே வந்த, இப்ப முகம் பளிச்சுனு ஆகிடுச்சே, எல்லாம் மாமனை பாத்தா தெம்பு தான?" கண்ணடித்து அவன் கேட்டதில் வெட்கமே வந்துவிட்டது அவளுக்கு.
"உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு மாமா" என்றாள் எச்சரிக்கையோடு.
"அதுனால என்ன? நம்ம வேலைய நாம எப்பவும் சரியா பண்ணிகிட்டே இருக்கனும், என்ன பைரவி சரி தான?" அவளையும் பேச்சில் இழுக்க உள்ளுக்குள் குமைந்தவள் வெளியில் சிரித்தாள்.
மனைவியின் முக மாற்றத்தை பார்த்தவன் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை தொடர அவனோடு போட்டி போட்டு பேச வந்துவிட்டான் நிரஞ்சன்.
"இந்த வில்லேஜ் எப்பவும் இப்டி தான் அழகா இருக்குமா?" என்றான் பொதுவாக. தேவா இருப்பதால் அவனிடம் சகஜமாகவே பேசினார் பெண்கள் அனைவரும்.
"வந்த ஒரே நாள்ல எங்க ஊரோட அழகுல மயங்கிடிங்க போல?" ஒரு பெண் கூறி சிரிக்க அதை நிராகரித்தால் நிரஞ்சன்.
"ஊர் அழகுல இல்லங்க, உங்க மாதிரி பொண்ணுங்களோட அழகுல" மலர்வனத்தை தூவினான் நிரஞ்சன் பேச்சாலே.
"வெளி அழக பாத்து பேச கூடாது. என் ஊர் பிள்ளைக மனசு தான்டே அத விட அழகு" என்றான் தேவா.
"அழகான மனசு இருக்கத்தால தான நான் வந்த ஒடனே இவங்க எனக்கு தண்ணி எல்லாம் குடுத்தாங்க. அதான் சொல்றேன் ஊர் அழக விட, அவங்க அழக பாருடா... சென்னைல அம்புட்டும் கிரீம், ஸ்பா, பார்லர்-னு கண்டதையும் பண்ணிட்டு இருக்குறப்போ எந்த கிரீமையும் போடாம இவ்ளோ அழகா இருக்காங்கல்ல அதான் சொன்னேன்" என்றான் நிரஞ்சன்.
"ஓ அப்போ வெளி அழகு தான் முக்கியம் தான்னு சொல்றியா?" - தேவா
"யோவ் நான் எப்பயா அப்டி சொன்னேன்?" முந்திக்கொண்டு வந்தான் நிரஞ்சன்.
"இப்ப சொன்னியே... எங்க ஊர்ல கெழவி கூட ஒரு தனி அழகுடா.. அதுவும் என் அத்தை மக காயத்திரி பாத்துருக்கியா? அந்த மல்லியப்பூ மாதிரி வெள்ள வெளீர்னு அழகு, அந்த கோலிக்குண்டு கண்ணு, இதெல்லாம் விட அவளோட குணம்னு ஒன்னு இருக்கேடா...!" என இழுத்த தேவாவின் முகத்தை திருப்பி பைரவியை பார்க்க வைத்தான் நிரஞ்சன்.
கணவன் தன்னை பார்த்ததும் ஒற்றை புருவம் உயர்த்தி கோணலாக அவள் சிரித்த சிரிப்பு அவனை அமைதியாக்கியது.
"ம்ம்ம் வந்த வேலை முடிஞ்சது... நாம அப்டியே அந்த பக்கம் இருக்க செடி பத்தி பேசலாமா?"
பெண்களை நிரஞ்சன் வாகாக அழைத்து செல்ல பார்க்க, "என் ஊறுகார பிள்ளைங்க கிட்ட ஏதாவது வம்பு பண்ணணு தெரிஞ்சது தோலை உரிச்சிடுவேன்"
பெண்களிடம் திரும்பியவன், "இந்தா போங்க எல்லாரும் அந்த பக்கம்" அவர்களையும் விரட்டி அவர்கள் பின்னாலே செல்லப் போன நிரஞ்சன் சட்டையை பிடித்து வேறு பக்கம் திருப்பி விட்டான்.
"ஆம்பளைங்ககிட்ட பேச கொஞ்சமாவது கத்துக்கோடா" என்றான் தேவா.
"நீ என்னமோ உத்தமன் மாதிரி பேசுற? ஏங்க உங்களுக்கு இவனப் பத்தி முழுசா தெரியாதுல?" பைரவியிடம் கைபேசியை எடுத்து காட்டினான்.
அதில் அன்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் தேவா அருகில் அந்த பெண் ஆடியது காணொளியாக ஓடியது, "பாத்திங்களா? உஷாரா இருந்துக்கோங்க" எச்சரிக்கை விடுத்து ஓடிவிட்டான்.
இது எப்படி இவனுக்கு கிடைச்சது என்ற சந்தேகத்தோடு தேவா சென்றவனையே பார்க்க அவள் தோள் சுரண்டி தன் பக்கம் கவனத்தை திருப்ப வைத்தாள் பைரவி.
"கெளம்பலாமா? இல்ல இன்னும் வேலை இருக்கா?" கேட்டாள் நேரடியாக.
"போகலாம் சக்கரை" என்றவன் அமைதியாக செல்லும் மனைவியோடு வீடு வந்து சேர்ந்தான்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக உண்டு கிளம்ப அந்த நேரமும் நிரஞ்சன் ராம் இருவரும் வீடு வந்து சேரவில்லை. கைகேசியில் அழைத்து பார்த்தும் பதில் வராமல் போக மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய தோட்டம் அழைத்து சென்றான்.
"தோட்டத்துக்கு எதுக்கு?" என்றாள் இரவில் எட்டுக்களை பார்த்து எடுத்து வைத்து.
"தோட்டத்துக்கு இல்ல வீட்டுக்கு" என்றவன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே பாய்ந்து வந்த தேவாவின் இரு நாய்கள் பைரவியை சுற்றி நின்று அவ்விடத்தையே சிதறவிடும் சத்தத்தில் குறைத்தனர்.
மனைவி பயந்துவிடுவாளோ என்ற பயத்தில் தேவா அவளை தனக்கு பின்னால் நிறுத்திக்கொண்டு இருவரையும் அதட்டினான், "டேய் வேங்கையா நம்ம அக்காடா"
அதன் கழுத்தில் கட்டியிருந்த பெல்ட்டை பிடித்து தேவா நிறுத்த, பைரவன் அவளை பின்னால் இருந்து குறைந்துகொண்டே இருக்க சிறிதும் பயம்கொள்ளாமல் நொடியில் அதன் கன்னத்தை பற்றி அதன் உயரத்திற்கு குனிந்தாள்.
"அவன் கோவக்காரன்டி, கடிச்சிட போறான்" தேவா பயத்தில் தடுக்க அவளோ அதன் கன்னத்தை பற்றி கொஞ்சிக்கொண்டிருந்தாள்.
"அதெல்லாம் மாட்டான்" என்றவள் இரண்டு காவலாளிகளிடமும் தன்னுடைய அன்பை பொலிந்து சில நிமிடங்களில் நண்பனாக்கினாள்.
இவரிடமிருந்து மனைவியை பிடித்து தோட்டத்து வீட்டிற்கு அழைத்து செல்வதே பெரிய வேலையாகிப் போனது. அந்த தோட்டத்து வீடு மிகவும் சிறிய வீடு தான்.
வரவேற்பறை, ஒரு படுக்கையறை அதனோடு ஒரு குளியலறை மற்றும் சிறிய சமையலறை தான். வீட்டை சுற்றி விசாலமாக நாலாபுறமும் காலியிடம் இருக்கும். அதனை இருளில் பார்க்க முடியாவிட்டாலும் ஓரளவு அந்த பெரிய தோட்டத்தின் வனப்பு தெரிந்தது.
"நீ உள்ள படுத்துக்கோ, நான் வெளிய படுத்துக்குறேன்" அங்கிருந்த கயிற்று கட்டிலை எடுத்து போட்டு சொன்னான்.
"வெளிய வேணாம்" அவன் மேல் இருந்த கோபத்தினால் பைரவி அதோடு உள்ளே சென்றிட, பைரவியின் குரலின் பேதம் அறிந்து உள்ளே சென்றான்.
வரவேற்பறையில் மூவர் அமரக்கூடிய மர சோபா ஒன்று இருந்தது. அதற்கு நேர் எதிரில் சுவற்றில் மாட்டியிருந்தது ஒரு தொலைக்காட்சி. வரவேற்பறையை அளந்தவள், அறைக்குள் செல்ல அங்கு ஒரு குயின் சைஸ் மார்க்கட்டில், பெட் இருந்தது.
"நான் சின்ன காட்டில் தான் வாங்க சொன்னேன் இந்த கேனை வெற்றி தான் இத வாங்கிட்டான்" என்றான் உண்மையாக.
கணவன் எதற்கு வெளியில் படுத்துக்கொள்கிறேன் என கூறியதன் அர்த்தம் இப்பொழுது பைரவிக்கு புரிந்தது.
கட்டில் போக மீதம் மிகவும் சிறிய இடைவெளி தான் இருந்தது அதுவும் மூன்று அடி இடைவேளை மட்டுமே இருக்க அவன் படுப்பதற்கான வாய்ப்பு குறைவு. வரவேற்பறையிலும் படுக்க முடியாது.
தேவா வரவேற்ப்பறையில் நிற அவனை தாண்டி வந்தவள் வீட்டின் கதவை பூட்டினாள்.
வாயிலை நோக்கி நகர்ந்தவன், "நான் போனதும் பூட்டு" என நடந்தவனை பிடித்து உள்ளே நிறுத்தி முறைத்துவிட்டு அறையினுள் நுழைந்தாள்.
அவளை கோவமாக பின் தொடர்ந்தவன் முகத்தில் கதவை மூடினாள். தேவா சோபாவில் அமர்ந்திருக்க சில நொடிகளில் உடையை மாற்றி நின்றாள் எளிதான ஒரு சுடிதார் அணிந்து.
"ஏண்டி நான் கோவப்படணும், நீ மூஞ்சிய தூக்கிட்டு சுத்துற?!" என்றான் அவளிடம். பைரவி அமைதியாக சென்று கண்ணாடி முன் நின்று மாஸ்டரைசரை முகத்தில் தடவினாலே தவிர பதில் சொல்லவில்லை.
கட்டிலில் அமர்ந்து அவளை முறைத்தவன், "உன்ன தான்டி கேக்குறேன். என்னமா அவன்கிட்ட சிரிச்சு பேசுற? அதுவும் ஒரே நாள்ல! மனுஷனுக்கு கோவம் வருமா வராதா" என்றான்.
"அதுக்கு தான் நீங்களும் பேசுனீங்கள்ல? இல்ல இல்ல வர்ணிச்சிங்களே... காயத்திரி கண்ணு அப்டி, காது அப்டி, குணம் இப்டி-னு" என்றாள் சலிப்பாக.
"இந்தா பாரு, நாம கல்யாணம் அன்னைக்கே இதே பத்தி பேசியாச்சு, நான் பேச்சிலரா தான் இருக்கபோறேன்-னு"
"பேச்சிலர்னா இப்டி தான் பேசுவீங்களா?" எதிர்த்து உரிமையோடு கேள்வி கேட்கும் மனைவி இன்று இந்த சாதாரண உடையில் கூட கொள்ளை அழகாய் தெரிந்தாள்.
"அழகை வர்ணிப்பது ஒரு ஆணின் கடமை பொண்டாட்டி. என்னைக்கும் அந்த கடமை என்கிட்ட இருந்து போகாது" என்றான் ஆழமாக அவள் கண்கள் பார்த்து.
"அப்போ நான் நிரஞ்சன்கிட்ட அப்டி தான் பேசுவேன்" பிடிவாதமாக அவனிடம் சொன்னவள் அவன் தோளைத் தள்ளிவிட்டு மெத்தையின் ஒரு மூலையில் சென்று படுத்துகொண்டாள்.
கோவம் கோவம் கோவம் மட்டும் தன் அவளிடம். எப்படி ஆத்து மீனுக்காக காத்திருக்கும் கொக்குகளாய் சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் போலும். என் கணவன் என தெரிந்த பின்னும் அவனிடம் எப்படி உரிமையோடு மாமா கீமா என வந்து நிற்கிறார்கள்?
ஆம் நான் அவனுக்கு என் மீதான உரிமையை கொடுக்கவில்லை தான். அது எங்களது தனி விருப்பம், இவர்கள் யார் இடையில் வர? அதற்கு இவனும் சேர்ந்து அல்லவா புகைமூட்டுகிறான்!
என் மனதின் காயங்களை ஆற்ற எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இப்பொழுதும் தேவை தான் அதற்காக தன்னுடைய ஆனந்தத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தோன்றியது. சுவற்றை பார்த்து படுத்திருந்த மனைவியின் தோள் பற்றி திருப்பினான்.
"இங்க பாரு பைரவி, நான் இப்டி தான். எனக்கு சந்தோசமா எல்லாரோடையும் பேசிக்கிட்டே நாள் போகணும். சின்ன வயசுல இருந்தே பாத்து ஒண்ணா விளையாண்டு ஊற்றி சுற்றி அலைஞ்ச பொண்ணுங்க அவங்க எல்லாம்.
சட்டுனு அந்த உரிமை பேச்சு எல்லாம் மாத்திக்க முடியாது. அந்த பொண்ணுங்க பேச்சுளையும் தப்பு இருக்காது, என் பார்வையையும் மாற்றம் வராது" என்றான் ஸ்திரமாக.
பைரவி அவனை பார்வை அகற்றாமல் பார்த்திருக்க அறையின் ஜன்னல் கதவு திறந்திருந்த காரணத்தால் தென்னை மரத்தின் காற்று சத்தம் அவ்விடத்தையே அலச, அவளிடமிருந்து பார்வையை அகற்றி இறுக்கமான மனநிலையோடு ஜன்னல்களை மூடினான்.
காலையில் அவன் ஆச்சி கூறியதையும் இப்பொழுது தேவா கொடுத்த விளக்கத்தையும் உருவகப்படுத்தி பார்க்கும் பொழுது தான் அவன் வேதனை என்னவென தெரிந்தது.
அன்று கூட இதே கேள்வியை தானே கோவமாக கேட்டான்? அவன் பார்வையில் என்றும் உரிமை உள்ள அவள் மீதே தவறை கண்டதில்லை, இன்று தங்களது பாதுகாவலனாக எண்ணி தைரியமாக நிற்கும் பெண்களிடம் எப்படி தவறி போகும் அவன் பார்வை.
"வா வந்து கதவை சாதிக்கோ" தேவா கட்டிலை விட்டு இறங்கப் போக அவன் பனியனை பிடித்து நிறுத்தினாள் பைரவி, "வேணாம்" என்று.
"லூசு, நான் அசந்து தூங்கிட்டா என்ன பண்றது, ஒரு சேப்டிக்கு தான் பூட்ட சொல்றேன்" என்றான் அவள் கையை எடுத்துவிடும் முயற்சியில்.
தேவா ஒரு கையை எடுக்க முயற்சிக்க அவளோ அவனை இரு கைகள் கொண்டு பிடித்தாள், "உங்கள வெளிய போக வேணாம்னு சொன்னேன்" என்றாள்.
"அடியேய் குளுரு பட்டைய கெளப்புது. என்னால தரைல எல்லாம் படுக்க முடியாது, அதுவும் சிமெண்ட் தரை" என்றான் தேவா.
"உங்கள யார் கீழ படுக்க சொன்னது?" என்றாள் வேகமாக.
"கீழ படுக்காம இங்க உன்கூட பெ..." என்று தொடங்கியவன் பேச்சை நிறுத்தி மனைவியை பார்க்க அவன் பனியனை பற்றியிருந்த கையை விடுத்தவள் முகம் குப்பென சிவந்து போனது.
உள் பனியன் மட்டும் அணிந்திருந்தவன் மனைவியை சங்கடப்படுத்த விரும்பாமல் எழுந்து எளிமையான ஒரு காலர் இல்லாத டீ-ஷர்ட் அணிந்து வந்து படுக்கை அருகே நிற்க, சுவற்றோடு ஒட்டி நின்று அவனுக்கு இரண்டாம் முறையாக அவள் அனுமதி கொடுத்தாள்.
தேவா அவள் அருகே படுத்தான் மெதுவாக. மெத்தையில் படுத்திருந்தாலும் சௌரியமாக இல்லை இருவருக்கும். மேற்கூரையை வெறித்து படுத்திருந்த தேவா மனைவியை நோக்கி திரும்பி படுத்து அவள் முகம் பார்த்தான்.
எத்தனை நிமிடங்களாக தன்னையே பார்த்திருந்தாளோ, அவன் பார்க்கவும் கூட விழிகளை திருப்பவில்லை. வீட்டிற்கு வந்ததும் தலை முடியை அவிழ்த்து இலகுவாக பின்னலிட்டிருக்க பல காற்றை முடிகள் அவள் முகத்தில் மோதி நின்றது.
சரிந்து விழும் குழல் அழகில் ஆயிரம் ஜரிகை பாட்டாக மாறி மென்மையாய் தெரிந்த அவள் கன்னத்தினை வருடம் ஆசை எழ, ஏதோ ஒரு உந்துதலில் கன்னத்தை பெருவிரல் கொண்டு தேவா வருடியதில் பெண்ணவளின் கண்கள் மயக்கத்தில் மூடி இரண்டு நொடிகளில் மீண்டும் திறந்தது.
"என்ன இன்னைக்கு பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?" கேள்வி கேட்டு அவள் அமைதி தந்த தைரியத்தில் கைகள் பின்வாங்க மறுத்தன.
"அப்டிலாம் இல்லையே" என்றவள் இதழில் மெல்லிய புன்னகை. சுகமாக இருந்தது இருவருக்கும், தன்னுடைய மன கசப்புகளை மறக்க வைக்கிறேன் என்னும் பெயரில் அதன் ரணத்தை பெரிதுபடுத்தாமல், ரணமான மனதின் போக்கை மாற்றி அவளையே மீட்டுக்கொண்டு வந்திருந்தான்.
குடும்பத்தையே ஒதுக்கி வைத்து தானும் வாடி, அவர்களையும் வாட்டி செய்த பிழைகள் எவ்வளவு மடத்தனமானது என புரிய வைத்தவன் அவனே.
புழையிலிருந்து கற்றுக் கொள்ளாவிடில் பிழைக்க முடியாது...! கற்றுக்கொண்டதோடு ஒத்தும்கொண்டாள், வாழ்க்கை அந்த ஒரு நாளில் நின்றுவிடாது, அவனோடு செல்லவேண்டிய பாதை ஏராளம் இன்னும் உள்ளதென.
ஆண்மையின் பரிமாணங்கள் எல்லாம் அவனிடம் சென்று விண்ணப்பித்து கற்றுக்கொள்ளலாம். அவன் சுவாசத்தில் பங்கு கொண்டு, வாசத்தில் குழல் நுகர்ந்து புன்னகையுடன் இன்பத்தில் மாள மட்டில்லா இன்பம் தருவதன் பெயர் தான் காதலோ?
"ஆச்சி சொன்னாங்க உங்க தாய்மாமா பத்தி..." அவன் முகம் மாறுவதை பார்த்தாள், "எல்லாம் சொன்னாங்க" என்று.
தேவாவின் கை அதன் வருடலை நிறுத்த, "ப்ச்... ஆனந்த் ஏன் நிறுத்துறீங்க" கேட்டாள் ஏக்கமாக.
"என்னடி பரிதாபத்துல பாக்குறியா?" என்றான் சற்று கோவம் ஏறிய குரலில்.
"இந்த கேள்வியை நான் ரெண்டு மாசமா கேக்குறேன், எனக்கு உங்க பதில் என்னவா இருக்குமோ அதே பதில் தான் நானும் உங்களுக்கு சொல்லுவேன்" என்றாள் அவள் கிண்டலாக.
தலை அசைத்தான், "எனக்கு ஆறுதலுக்கு சொல்லாத பைரவி" பெரிதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் தேவா.
"எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு நீங்க ஏன் ஆனந்த் தேவையில்லாம யோசிக்கிறீங்க? உங்க மேல நம்பிக்கை எனக்கு இருக்கு, உங்க உழைப்பு மேல, உங்க வார்த்தை மேல நம்பிக்கை இருக்கு"
நம்பிக்கை வார்த்தை கொடுத்த மனைவியை சொல்ல முடியாத உணர்ச்சிகளை அடக்கி பார்த்தான், "தப்பு என் மேல இல்ல பைரவி" என்றான்.
"அத நீங்க சொல்லி தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல ஆனந்த் எனக்கு..."
மனைவியை குறுக்கிட்டு, "என்ன பேச விடுடி" என்றான். பைரவி கண்களை மூடி திறக்க மேலும் தொடர்ந்தான்,
"மாமா பொண்ணுகிட்ட நான் ஏதோ பேசி தான் சண்டை வந்துச்சுனு எல்லாரும் சொல்றாங்கள்ல? அது பொய்" பைரவி கண்கள் அதிர்ச்சியில் விரிய, தலை அசைத்து உறுதிப்படுத்தினான்,
"ஆமா, பிரச்சனை நடந்தப்போ எனக்கு இருபத்தி நாலு வயசு தான் இருக்கும். அவளுக்கு இருவது தான் நினைக்கிறன். ஸ்கூல் படிக்கிற சமயத்துல இருந்தே என்ன லவ் பண்ணா. மூணு வருசமா இங்க வர்ற நேரம் எல்லாம் என் பின்னாடியே சுத்துவா.
அன்னைக்கு இதே மாதிரி சொல்றப்போ கோவத்துல ரெண்டு வார்த்தை திட்டிட்டேன். உடனே அழுதுட்டு எல்லார்கிட்டையும் நான் அவளை தப்பா பேசுனதா சொல்லிட்டா"
"நீங்க உண்மைய சொல்லிருக்கலாமே.."
"சொல்லிருந்தா பிரச்சனை பெருசாகிருக்கும் பைரவி. என்ன பத்தி தப்பா பேசுனா கூட பரவால்ல, ஒரு பொண்ண பத்தி பேசுறது நல்லா இருக்காதுல" அந்த நிலையிலும் அவள் நிலையை பற்றி யோசித்தவன் குணம் மேலும் மேலும் பைரவியை கவர்ந்தது.
கனிவு தெரிந்த அவளது கண்களை பார்த்து ஆசையும் கேள்வியாய் புருவம் தூக்கினான், "என்ன பார்வை இது?" என்று.
"இல்ல எதுனால உங்க மேல பலி விழுந்துச்சோ அந்த குணத்தை மாத்தாம அப்டியே வச்சிருக்கீங்க? உங்க இடத்துல வேற ஒருத்தர் இருந்தா இந்நேரம் இந்த மாதிரி இலகுவா இருந்திருக்க மாட்டாங்க. சொல்ல போனா இந்நேரம் பொண்ணுங்க மேல வெறுப்பை வளர்த்திருப்பாங்க" வியப்பு தான் அவள் குரலில் இருந்தது.
சிரித்தான், "நாம எப்பவும் சாப்டா இருக்கனும் பைரவி. இல்லனா நாம எப்படி இருக்க கூடாதுனு ஆசைப்படுறோமோ அந்த மாதிரி இந்த உலகம் நம்மள தானா மாத்தி விட்ரும்" பைரவி சரி என்று சிரிக்க, இன்னும் அந்த இதமான மெத்தை வசப்படவில்லை அவளுக்கு.
"சக்கரை..." தேவா அவளை ஆசையாய் அழைக்க அவனை பைரவி பார்த்ததும்,
"உன்ன ஒரே ஒரு தடவ ஹக் பண்ணிக்கவா?" ஆசை மின்ன மின்ன வேகமாக கேட்டுவிட்டு பிறகு தான் அவள் முகத்தை பார்த்து தவறை உணர்ந்தான்.
உடனே பின்னால் விலகி, "சாரி... ஏதோ தெரியாம கேட்டுட்டேன். எந்த தப்பான எண்ணமும் இல்லை" உண்மையாக ஒப்புக்கொண்டான்.
மௌனம் சிறகடித்து பறக்க, அன்பு மட்டுமே ப்ரதான ஈர்ப்பை காட்டி இழுக்கும் அதீத புரிதல்! நிர்பந்தமாய் நிற்கும் அவனுள் நிராசையாய் அவள் தொலைந்திட, அவனே ஏற்படுத்திய இடைவெளியை குறைக்கவே நெருங்கி வந்தவள் கந்தர்வ ராகம் போல் அவன் சிகை படர்ந்திருந்த கன்னத்தில் இதழ் அச்சாரமிட்டு அவன் மார்பினிலே தலை சாய்த்து படுத்துகொண்டாள்.
மடிந்துபோய்விடலாமா என்ற நிலையில் இருந்த அவளுக்கு எங்கிருந்தோ வந்த வரமாய் அவன் வரவு. சோகத்தை கழற்றிவிட்டு உற்சாகம் வந்தது அவனே, எள்ளளவு கூட வாழ்க்கையை வாழ விருப்பமில்லாதவளுக்கு இன்று ஊரே பொறாமைப்படும் படி வாழ்ந்துகாட்ட வேண்டுமென பேராசை தந்த அவனின் ஆசையை நிறைவேற்றாவிடில் அவனது உழைப்பிற்கு ஏது பயன்? தடைகளை தகர்த்து உன் அன்பு போதுமென்று மாரோடு சாய்ந்து மனதிற்கு போதையேற்றிவிட்டாள் அவனுக்கு.
எல்லாம் ஒரு சில நொடிகள் தான். தேவா மோனநிலையிலுருந்து விடுபட்டு சுகத்தை அனுபவிக்கும் முன்பே வீட்டின் கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்டு இருவரும் பிரிந்து எழுந்தார்கள்.
"ஆனந்த் யார் இந்த நேரத்துல?" தேவா எழுந்து கதவை நோக்கி செல்ல, "டேய் கதவை திற" என்றது நிரஞ்சன் குரல்.
"இந்த கிறுக்கன் எதுக்கு இந்நேரம் வந்திருக்கான்?" யோசனையோடு மனைவியிடம், "நீ இங்கையே இரு" என எச்சரித்து கதவை திறந்தான்.
தேவா வந்ததும் அவன் பின்னே ஓடி வந்து வீட்டினுள் நுழைந்திட அவனை துரத்தி வந்த அவன் இரண்டு நாட்டு நாய்களையும் பிடித்து தேவா சமாதானம் செய்தான்.
"இந்நேரம் நீ எங்கடா இங்க வந்த?" என்றான். "ஒரு முக்கியமான விசியம் பேசணும். பைரவி உள்ளையா இருக்காங்க?" என்றவன் பார்வை வீட்டையே அலசியது.
"ஆமா, முதல நீ வெளியவா" என வெளியில் அழைத்து சென்று வீட்டை விட்டு சற்று தூரமாக நிறுத்தினான். "இப்போ இறந்தார்ல செந்தில்... அவருக்கு இதுக்கு முன்னாடி இந்த ஆஸ்துமா, வீசிங் எதுவும் இருந்ததா?" என்றான்.
"எனக்கு தெரிஞ்சு இல்ல" நிரஞ்சன் முகத்தில் இருந்த தீவிரம் தேவாவையும் தீவிரமாக்கியது.
"ஸ்விம்மிங்?"
"நல்லாவே தெரியும். சொல்லப்போனா இங்க ஊர்ல நெறைய பசங்களுக்கு அவர் தா ஸ்விமிங் சொல்லி கொடுத்ததே. ஏன் கேக்கற?" புரியாமல் கேட்டான் தேவா.
"ஏண்டா வெண்ண... யோசிக்க மாட்டியா நீ? நீச்சல் தெரிஞ்சவர் எப்படிடா இந்த குளத்துல மூழ்கி சாவாறு? இது என்ன கடலா பிரஷர் அதிகமாகி வெளிய வர முடியாம போக?"
"டேய் தெளிவா சொல்லு... யாரையும் பகைச்சுக்குற மனுஷன் இல்ல அவர். இதுவரை எனக்கு தெரிஞ்சு ஒரு சண்டைக்கு கூட போனதில்லை. அவரை எப்படி..." தேவா யோசிக்கவே தயங்கினான்.
"பகை இருந்தா தான் சாகணும்னு அவசியம் இல்ல தேவா. பணம் இருந்தாலும் சாகலாம்" அழுத்தி நிரஞ்சன் கூறியதில் கண்களை மூடி தலையை கோதி நடப்பதை கிரகிக்க முயன்றான்.
தேவாவின் தடுமாற்றம் புரிந்த நிரஞ்சன் தன்னுடைய கைபேசியை எடுத்து சில புகைப்படங்களை கட்டினான்.
"இது நீ மூணு மாசம் முன்னாடி காப்பாத்துன பொண்ணு. விசாரிச்சேன், அவளோட கால் பச்சை கொடில சிக்குனாதா நீ காப்பாத்தி கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க" அடுத்த புகைப்படத்தை காட்டினான்.
அது செந்தில் சடலத்தின் புகைப்படம், ஆற்றங்கரையில் அவர் உடலை கிடத்தியிருந்தது.
"இதுல அவர் கால பாரு" என்றான்.
தேவா பார்க்க அதே போல் கொடி சுற்றப்பட்டதற்கான தடயம் காலில் தெளிவாக இருந்தது.
"கொடியா?" என்றான் பிரமிப்பாக.
"ஆமா, இதோட இன்னொரு கோ-இன்சிடென்ஸ் இருக்கு. இவரை ஊர் மக்கள் யாரும் பயத்துல காப்பாத்தப் போகல, அதுனால ரெண்டு பேர் காசு அதிகம் கேட்டு பாடிய வெளிய எடுத்துட்டு வந்துருக்காங்க. அதே மாதிரி அந்த பொண்ணுக்கும்..."
நிரஞ்சன் கூறும் முன்பு, "காசு கேட்டு நினைப்போ நான் தடுத்து உள்ள போனேன்" என்றான் தேவா.
"அதே தான்... சோ இது இயற்கை மரணம் இல்லை..." நிரஞ்சன் அழுத்தமாக தேவாவின் முகத்தை பார்த்து கூறவும் நள்ளிரவில் தென்னை காற்றில் சீற்றலில் பித்து பிடித்தார் போல் நின்றான் தேவா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro