ஆனந்தம் - 13
மாலை வெயிலிலும் அங்கிருந்த கூட்டம் இம்மியளவும் அசையவில்லை. சலசலப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே சென்றது. எந்நேரமும் வெடித்துவிடும் கோவம் அனைவருக்கும்.
இழந்த இழப்பு அத்தகையது. ஒரு கிராமமே வருத்தம்கொள்ளும் நிலையில் அந்த ஊரின் தலைமைப்பணி உள்ளது என்பதை அவர்கள் உணரவே மூன்று ஆண்டுகள் எடுத்திருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் தான் வந்தார் அய்யனார்.
"அய்யனார் ஊற மதிச்சு வர்ற நேரமா இது?" நடுநிலையை அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் கேட்டார்.
"வேலை இருந்ததுங்க" என்றார் அய்யனாரும் சாந்தமாக.
"யோவ் நீ தூங்கி எந்திரிச்சிட்டு வந்து வேலைனு ராவ கூட்டாத" சலசலத்தது கூட்டம் தேவாவின் பேச்சை கேட்டு.
"இவிங்க வந்தாலே ஏதாவது ஏழரைய கூட்டிட்டு தான் இருக்காய்ங்க, டேய் பெரிய மனுசங்க நாங்க பேசுகிறோம், நீங்க கமுக்கமா இருக்குறது நல்லது" என்றான் அய்யனார் பக்கம் ஒருவன்.
"யோவ் இந்தாயா, நீங்க பண்ண தப்ப கேக்க வந்தா நாங்க ஏழரைய கூட்டுரோமா?" வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு நின்றான் வெற்றி.
"நீங்களே பேசுனா இந்த கூட்டம் எதுக்கு? செத்த செவனேனு இருங்கயா" குரலை உயர்த்தி கூட்டத்தை அமைதிப்படுத்தினார் இளங்கோவன்.
அதனால் வேறொருவர் பேச்சை எடுத்தார், "அய்யனார் ஊர் தலைவரா நீ பண்ண வேண்டிய வேலைய எதுவும் பண்ண மாட்டிக்கிறதா உன் மேல புகார் வந்துருக்கு" புகாரை கேட்டதும் அவர் பார்வை தேவாவிடம் தான் சென்றது.
"புகார் குடுத்தவிங்க யார்னு அழுத்தி சொல்லலாம்ல என்ன இது தூணுக்கு பின்னாடி நின்னுட்டு" உசுப்பிவிடும் வார்த்தைகள் அய்யனாரிடமிருந்து.
நண்பனை பேசியதும் குணாவிற்கு கோவம் வர, "என்ன பார்வை அங்க போகுது? பிராது குடுத்தது நானு, அத விட்டு அங்க என்ன சல்லய கூட்டிகிட்டு இருக்கீங்க?" கேள்வி கேட்டான் குரலை உயர்த்தி.
"ஊர் தலைவர்கிட்ட பேசுற தேவா நியாபகத்துல வச்சு வார்த்தையை விடு" எச்சரித்தார் அந்த கூட்டத்தின் பொது ஆள் ஒருவர்.
"ஊர் தலைவர் மாதிரி நடந்துருந்தா நாங்க ஏன் நடு ஊர்ல நிக்க வச்சு கேள்வி கேக்க போறோம்?" அதே மனிதரிடம் மீண்டும் ஒரு கேள்வியை வைத்தான்.
"என்னங்கடா உங்களுக்கு அவர் பண்ணல? இந்த ஊருக்கு ரோடு போட்டு பாலம் கட்டி, போன வருஷம் மழை பேஞ்சு பயிர் எல்லாம் முங்கி போன நேரம் சோத்துக்கு வழி இல்லாம கிடந்தப்போ கலெக்டர கூட்டிட்டு வந்து நிவாரணம் வாங்கி தந்தது யாரு?
இப்ப மூணு மாசம் முந்தி நாக்க தொங்கப்போட்டு பாத்தீங்களே அந்த ஆடலும் பாடலும். எல்லாம் எங்க அய்யா தான்" கூட்டாளி சொல்ல சொல்ல அய்யனாரின் கைகள் மீசையை கம்பீரமாய் நீவிவிட்டது.
"என்னது பாலம் போட நீங்க அலைஞ்சீங்களா? ரூட்டை குடுக்காதீங்கய்யா... பாலம் போட்டது இவரு தலைவர் ஆனதும் தான், ஆனா அதுக்கான பெர்மிட் என் தாத்தா தலைவரா இருந்த சமயத்துலையே வந்துடுச்சு" - தேவா
"மாப்பிள்ளை ரோடு போட்டேன், நிவாரணம் வாங்கி தர்றேன்னு சொன்னாய்ங்களே, அந்த அழகு ரோடு போட்ட சமயம் நிலத்துல இன்னைக்கு வர தார கொட்டி கெடக்கு. அத சொல்ல மாட்டிக்கிறாய்ங்க. இந்த ஆடலும் பாடலும் கூட நாம பெர்மிஸ்ஸின் வாங்கி பண்ணது தானேடா?"
நண்பனிடம் கேட்பது போல பேசிய வெற்றி பிறகு அய்யனாரை பார்த்து, "ஏங்க உங்க வேலை எப்படி, எந்த அளவுல இருக்கும்னு இந்த ஊருக்கே தெரியும். பக்கத்துல நாலு காவாலி பயலுகல வச்சு ரவுசு காட்டுனா இவிங்க மெரண்டுடுவானுங்க எந்த கேனைப் பயலாவது சொல்லிருந்தா அந்த பேச்சை இத்தோட மறந்துடுங்க" என்றான்.
"என்னமோ நான் இவனுங்கள தான் நம்பி பொறந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க? டேய் எத்தனை பயலுக வந்தாலும் ஒத்தையா நின்னு சமாளிப்பேன்டா.
பக்கத்துக்கு ஊர்காரைங்க கூட எல்லாம் வம்பு பண்ணிட்டு நீங்க நிக்கிறப்போ போலீஸ் பக்கம் போகாம நான் காப்பாத்துனத சொல்லுங்கடா பாப்போம்" இருக்கையிலிருந்து எழுந்து அவர்களை பார்த்து கோவமாக கேட்டார்.
அதுவரை ஒரு ஓரமாக நின்ற குணா அவரை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான், "ம்ம்ம் அதான் பாத்தோமே. நீ மாட வெட்டி, தப்பே பண்ணாதவனை ஒரு நாள் முழுக்க செல்லுல வச்சிருந்தியே"
"எப்பா அய்யனார் தான் அத பன்னானு ஆதாரமே இல்லை, அப்டி இருக்கப்போ அவன் மேல கை வச்சா அவன் போலீஸ தானே கூப்பிடுவான்" நாட்டாமை பெரியவர் ஒருவர் அவர்களிடமே நியாயம் கேட்டார்.
"ஆதாரம் என்ன ஆதாரம்? எங்களுக்கு தெரியாதா என்ன... இந்த ஊர்ல இந்த ஆள மாதிரி மனசாட்சியே இல்லாம வேற யார் இருக்கா" - குணா
"என்னடா மனசாட்சி இல்லாததை நீ பாத்த? பக்கத்துல வைகை ஆத்து தண்ணிய வச்சுக்குட்டும் குடிக்க தண்ணிக்கு சிங்கி அடிச்சப்போ வீட்டுக்கு வீடு தண்ணிய விட்டது நான் தானே?" அய்யனார்.
"எப்பா உலக உத்தமரே, உன் லட்சணம் என்னனு எடுத்து காட்ட எனக்கு ஒரு நாள் போதும். கவர்மெண்ட்ல எவ்ளோ காசு சான்ஷன் ஆச்சு, ஊருக்கு எவ்ளோ வந்து சேர்ந்துச்சுனு நான் எடுத்து காட்டவா? இங்க அத பத்தி பேச வரல, போன உசுருக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா? உன்னால ஏதாவது தான் பண்ண முடியுமா?" வந்தான் தேவா.
"அந்த ஆள் என்னையா பண்ணான்? உயிரை காவு வாங்கிட்டானே" ஆற்றாமையில் பொங்கினான் குணா.
"அந்த குளத்தோட ஆழத்தை பத்தி தெருஞ்சும் நீங்க ஏன்யா அவ்ளோ தூரம் வர போறீங்க?" என்றார் அய்யனார் கேலியாக.
"ஓ நாங்க என்ன பண்ணனும்னு நீங்க தான் சொல்லுவிங்களோ? ஏன் தேர்தல்ல ஜெயிச்ச நேரம் 'மக்கள் வாக்கே மகேசன் வாக்குன்னு' சொன்ன தலைவர் இப்ப ஊர் மக்கள் சொல்றத கேட்டு தான் டெய்லி பல்லு வெளக்குறதுல இருந்து கழுவுற வர பாக்குறீங்களா"
வெற்றி கேட்ட கேள்வியில் ஆவேசமடைந்த அய்யனாரின் ஆள் ஒருவன் வெறியோடு வந்து வெற்றியின் சட்டையை பற்றி அடித்திட, நண்பனுக்கு துணையாக தேவாவும் குணாவும் உடனே சண்டைக்கு வர அவ்விடமே நொடியில் கபளீகரமானது. கூச்சலும் இரைச்சலும் அதிகமாக ஊர் மக்கள் பலர் சேர்ந்து தான் இருவரையும் பிரித்து நிறுத்தினர்.
" 'கோபம் பாபம்; நித்திரை சத்துரு', உங்க வயசுக்கேத்த ஆத்திரம் வந்தாலும் அதுல நிதானம் இருக்கனும். பாத்து பேசுறதா இருந்தா பேசுங்க இல்லையா கெளம்பிட்டே இருங்க. பஞ்சாயத்தை எப்படி நடத்தணும்னு எங்களுக்கு தெரியும்" இளங்கோவன் பேசவும் சுற்றியிருந்த ஒருவரும் வாயை கூட திறக்கவில்லை,
அந்த மனிதருக்கான மரியாதை அவ்விடத்தில் அது போல் கொடி கட்டி பறக்கும். இளங்கோவன் கூறினால் அது சரியும் இருக்குமென நம்பி தான் அவர் பேச்சை கேட்டு அய்யனாருக்கு தங்கள் ஆதரவை தந்து அவரை ஊரின் தலைவர் பதவியில் அமர்த்தியது.
பெரியவர் தனக்கு சாதகமாக பேசியும் அய்யனாரின் கோவம் சிறிதும் மட்டுப்படவில்லை, அரசியல்வாதியாக பவனி வர ஆசைகொள்ளும் மனிதருக்கு இதெல்லாம் இந்நேரம் பழக்கப்பட்டிருக்க தான் வேண்டும்,
ஆனால் முகத்திற்கு நேராக இத்தகைய கேள்வியை கேட்கும் மனிதர்களிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நாசமாக்க தான் துடித்தது.
"சரி உங்க கதைக்கே வர்றேன், அந்த ஆள்கிட்ட கேளுங்க, கணக்குப்பிள்ளையோட மக குளத்துல விழுந்த அன்னைக்கே குளத்துல ரொம்ப கொடி வளந்து கெடக்குது சுத்தம் பண்ண ஏற்பாடு பண்ணுங்கன்னு நாங்க மூணு பேர் தான் போய் சொன்னோம். நாங்க சொல்லி ரெண்டு மாசம் ஆகுது.
பன்றேன் பன்றேன்னு சொன்னவரு இன்னைக்கு வர அந்த பக்கமே எட்டி கூட பாக்கல. அப்போ அவன் என்ன கேனையன் சொல்றது-னு தானே இருந்திருக்கார்?" வினவினான் தேவா.
"என்னமோ நான் போன் அடிச்சு சொன்ன ஒடனே கவெர்மென்ட்ல இருந்து ஆள அனுப்புற மாதிரியே பேசிட்டு போற? ஒரு ஒரு வேலையும் நடக்க மூணு மாசம் ஆகும்" என்றார் அய்யனார்.
"சரி நான் சொல்லியே மூணு மாசம் ஆகுது. நீங்க எந்த வகைல நடவடிக்கை எடுக்க முயற்சி பண்ணிங்கனாவது எனக்கு காட்டுங்க. இப்படியே இந்த இடத்தை கலைச்சிட்டு நாங்க கெளம்புறோம்"
பிடிவாதமாக நின்றவனை என்ன சொல்லி ஏமாற்றுவது? படிக்காதவர்கள் அதிகம் என நம்பி தானே தைரியமாக இந்த பதவிக்கு ஆசைப்பட்டது. அதுவும் இவன் வந்து தன்னை கேள்வி கேட்பான் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
"எல்லாத்துக்கும் ஆதாரம் காட்டு ஆதாரம் காட்டுனு சொல்றவன் ஒரு நாள் என்னோட இடத்துல நின்னு பாருடே அப்போ தான் தெரியும் இது எவ்ளோ கஷ்டம்-னு" எந்த நிலையிலும் விளக்கம் மட்டும் கொடுக்க தயாராக இல்லை அய்யனார்.
"அந்த கருமம் புடிச்ச வேலை எல்லாம் இங்க வேணாம். உன்ன என்ன உன் கை காசு போட்டா வேலை பாக்க சொல்லுது?" அருகில் நின்ற ஒருவரின் தோளில் கிடந்த துண்டை எடுத்தவன், "இப்ப என்ன உனக்கு நான் உன்னோட வேலைய பாக்கணுமா?"
அய்யனாரிடமிருந்து பதில் வரவில்லை. துண்டை தரையில் விரித்து தன்னுடைய சட்டையிலிருந்து ஐநூறு ரூபாய் பணம் ஒன்றை அதில் வைத்தான்.
"என் ஊர்ல இந்த மாதிரி காரணமே இல்லாம இனி ஒரு உயிர் பலியாக கூடாதுன்னு என்னால முடிஞ்ச இந்த உதவிய நான் பண்ணுறேன். உங்களால இருவது ரூவா முடிஞ்சாலும் குடுங்க. எவ்ளோ காசு வருதோ அது நம்மளோட குளத்தை சுத்தம் பண்ண மட்டும் தான் ஆகும்.
இதுல வர்ற காச விட அதிகமா பணம் தேவைப்பட்டா, நான் காசு போடுவேன். அப்டி அதுல காசு மிச்சம் ஆச்சுன்னா நம்ம அம்மன் கோவில் உண்டியல்ல போட்டுடுவேன்"
தெளிவாக தகவல் கூறி ஓரமாக நின்றுவிட அங்கு குழுமியிருந்த ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை அதில் வந்து போட்டு சென்றனர்.
அய்யனார் தேவாவை முறைக்க, அவனோ அவரை பார்த்து புருவம் தூக்கி சிரித்தான். அதுவும் ஒரு பக்கம் சிரிப்பை பற்களுக்கிடையில் வைத்து சிரித்தது தன்னுடைய கர்வத்தை குடைவது போல் இருந்தது அய்யனாருக்கு. மக்கள் அனைவரும் பணம் கொடுத்ததும் அங்கிருந்த ஒருவரையே வைத்து பணத்தை எண்ணி கணக்கை காட்டினான்.
"என்னால எதுவும் முடியாதுனு ஊரே கூட்டி அசிங்கப்படுத்துறீங்களா? இன்னைக்கு சரி நாளைக்கு எதுவும் பிரச்சனை வந்தா என்கிட்ட எவனும் வந்து நிக்க மாட்டிங்களா என்ன?" என்றார் ஆவேசமாக.
"எப்பா என்ன இது சத்தெடுக்குற? அவன் என்ன நல்லத தானே செய்றான்" பேரனுக்காக பேசினார் இளங்கோவன்.
"உங்க பேரன் பண்ணவும் சரியா இது? மானம்கெட்டு போய் என்னால இத பாத்துட்டு நிக்க முடியாது" அய்யனார் விடவேயில்லை.
"இப்ப எதுக்கு தலைவரே வாலு வாலுன்னு கத்திக்கிட்டு நிக்கிற? சரி நான் செஞ்சதாவே வேணாம். குளத்துக்காக மக்கள் நன்குடை செஞ்சதா வச்சு நீயே இந்த வேலைய முடிச்சு குடேன்?"
தேவாவிற்கு இனி அந்த குளத்தை வைத்து எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது. அதற்காகவே தவியாக தவிக்கிறான்.
"முடியாது, இந்த காச நீங்களே திரும்ப எடுத்துக்கோங்க. நான் என்னோட வேலையை வீட்டுக்கே வராமனாலும் செஞ்சு முடிக்கிறேன் இன்னும் ரெண்டு மாசத்துல" என்றார் அய்யனார்.
"ஒரு உயிர் போனது பத்தாதா? இன்னும் எத்தனை உயிரை தான் யா காவு வாங்குவிங்க? இன்னும் ரெண்டு மாசம் இழுத்தா அதுக்குள்ள இன்னோருத்தர்க்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது? ஒரு குடும்பம் பரிதவிச்சு அழுகுறது போதாதா? மனசாட்சியோடு நடந்துக்கோங்க யா" உணர்ச்சி வசப்பட்ட குணா இடைப்புகுந்து அய்யனாரிடம் கேள்வி கேட்டான்.
"எப்பா நீங்க தான் பெரிய மனசாட்சி இருக்க ஆள் தானே, உன்ன படிக்க வச்சு அழகு பாத்த அந்த செந்திலோட மகளை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமாடே?"
திடீரென அய்யனார் கேட்ட கேள்வியில் அவ்விடமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க குணாவும் ஒரு நொடி அதிர்ந்தே தான் போனான்.
காரணம் செந்திலின் மூத்த புதல்வி திருமணம் ஆகி ஒரு மாதத்தில் கணவனது நடவடிக்கை பேச்சு சரியில்லாமல் விவாகரத்து வாங்கி இல்லம் வந்துவிட்டாள். அதன் பிறகு செந்தில் மகளுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கலாம் என நினைத்திருக்க அதற்குள் அவரே சென்றுவிட்டார்.
"என்ன பேச்சையே கானம் அப்பு?" குத்திக்காட்டும் விதத்தில் அழுத்தி சொன்னார் அய்யனார்.
குணா கூட அமைதியாக நிற்க, தேவா தான் வந்தான், "அவன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா இந்த குளத்து வேலை நாளைக்கே நடக்கும். சரியா? அதுவும் எங்க மேற்பார்வைல?"
ஒப்பந்தம் பேசியவன் முகத்தையே பார்க்க புடிக்காத அய்யனார் உடனே குணா மேல் உள்ள நம்பிக்கையில் ஒப்புக்கொண்டார், "சரி நடக்கட்டும்" ஊரறிய உரைத்தார்.
"அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்"
குணாவின் அந்த உடனடி பதில் கூட அங்கிருந்தவர்கள் காதுகளுக்கு தவறாக கேட்டுவிட்டோமோ என்ற சந்தேகத்தை கொடுக்க முதலில் விசிலடித்து ஆரவாரம் செய்து தேவா தான் அனைவரின் அய்யத்தையும் போக்கினான்.
"இன்னும் எண்ணி முப்பதே நாளைக்கு அப்றம் வர்ற நல்ல முகுர்த்தத்துல எங்க கல்யாணம் நடக்கும். நாளைக்கே அடிக்கிறேன் பத்திரிகையை" என்றான் தெளிவாக.
"எழவு வீட்டை கல்யாண வீடா மாதியாச்சு. நாளைக்கே குளத்தை சுத்தம் பண்ணி மாப்பிள்ளைக்கு அங்கையே ஒரு போட்டோ ஷூட் வச்சிட்டு வேண்டியது தான்" தேவாவிற்கு ஆரவாரம் தான்.
"ம்ம்ம் அப்றம் என்ன அய்யனாரும் ஒத்துக்குட்டான், ஆனா அய்யனாரு எந்நேரமும் இதே மாதிரி கூட்டம் சுமூகமான முடிஞ்சிடாது ஒழுங்கா வேலை செய்றது உனக்கு நல்லது"
எச்சரிக்கையோடு ஒரு பெரியவர் கூட்டத்தை கலைக்க பொருமிக்கொண்டே சென்ற அய்யனார் பின்னால் ஓடி சென்று நிறுத்தினான் தேவா, "ரொம்ப நன்றிங்க தலைவரே" என்று.
"போய்ட்டுடா அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன்" தேவாவை திட்டி விறுவிறுவென நடந்தவர் முன்னாள் வந்து நின்றான் மீண்டும்.
"இன்னைக்கு நாங்க நினைச்சு வந்தது குளத்தை பத்தி மட்டும் தான் தலைவரே. ஆனா கல்யாணத்தையும் சேர்த்து நடத்திட்டிங்க ரொம்ப சந்தோசம்" என்றான்.
அய்யனாரோ சிரிப்போடு நடந்தார், "டேய் முட்டாப்பயலே... அவன் வேற ஒரு பிள்ளையை லவ் பன்றான்டா. இது தெரியாம வந்து ரூட்டை குடுத்துட்டு இருக்க"
அவரை விட நன்றாக சிரித்த தேவா அவரோடு நடக்காமல் அப்படியே நின்றவன், "ஐயோ தலைவரே இந்த பொண்ணு தான் அந்த பொண்ணு" என்றான்.
அய்யனார் அதிர்ச்சியில் அப்படியே நின்று தேவாவை திரும்பி பார்க்க, அவன் பின்னால் கை காட்டினான். தேவா கை காட்டிய திசையில் குணாவின் இடுப்பை கிள்ளி கிள்ளி வெற்றி கேலி செய்ய குணா முகத்தில் அத்தனை சந்தோசம் தாண்டவமாடியது.
வெறுப்பாக தேவாவை பார்த்தவர் அவனை முறைத்து, "எந்த அடியையும் நான் லேசுல மறக்குற ஆள் இல்லடா. உனக்கு இருக்கு" என்ற உறுதியோடு அங்கிருந்து அகல தேவாவிற்கு சிரிப்பு தான் அப்பொழுதும்.
நண்பர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறிது தூரம் தள்ளி வந்து நின்றான் தேவா. காலையிலிருந்து மனைவியிடமிருந்து மூன்று அழைப்புகள் இது வர வந்துவிட்டது. இருந்த இடம் கருதி அவளது அழைப்புகளை ஏற்க முடியாமல் போனது.
பைரவி அதிகம் அவனுக்கு தானாக அழைத்தது இல்லை. இன்று அவள் இத்தனை முறை அழைத்ததும் அவள் பயம் புரிந்து தானே அழைத்தான்.
"எல்லாம் முடிஞ்சதா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" பதட்டமாக வந்தது மனைவியின் குரல் மறு பக்கமிருந்து.
"இல்ல, பிரச்சனை பண்ற அளவுக்கு ஒன்னுமில்ல. ஏன் இந்த பதட்டம்?" என்றான் சிரிப்போடு.
"இல்ல நீங்க போன் எடுக்கவே இல்லை. அதான் ஏதோ பிரச்சனையோனு நினைச்சேன்" என்றாள் பைரவி.
"ம்ம்ம், அம்மா வந்தாச்சா?" என மனைவியிடம் வினவினான் தேவா.
"ம்ம் இப்ப தான். மாமா இன்னும் வரல. ஏதோ அவங்க டிபார்ட்மென்ட் பங்ஷன் போல காலேஜ்ல" என்றாள்
"ஓ சரி. இன்னொரு விசியம் சொல்லணும். குணாக்கு கல்யாணம் பேச போறோம்" என்றான்.
மனைவிக்கு குழப்பம், "என்ன சொல்றிங்க? எல்லாரும் அங்க தான இருந்துருப்பீங்க எப்படி இப்ப திடீர்னு கல்யாணம் பேசிருக்கீங்க?" சந்தேகத்தை கேட்டாள்.
தேவா நடந்தவை அனைத்தையும் கூறி விலக்கினான். "நீங்க அப்போ இன்னும் ஒரு மாசம் ரொம்ப பிஸியா?"
காலை நடந்த நிகழ்வில் அவள் தன்னை தவறாக எண்ணியிருக்க கூடுமோ என்ற பயம் தேவாவுக்கு இருக்க இங்கே அவன் மனைவி குரலில் ஏக்கம் கொஞ்சம் தெரிந்தது.
"ம்ம்ம் ஆமா தான் நினைக்கிறன். இன்னைக்கு இல்லனா நாளைக்கு மதுரைல இருந்து ஆள ஏற்பாடு பண்ண போகணும். அடுத்த நாள் காலைல வெயில் வர முன்ன குளத்து வேலைய பாத்துட்டு அதுக்கு அப்றம் தான் தோப்பு வேலை பாக்கணும்.
இதுவும் இல்லாம பொங்கல் வருது. காளைகளை ஜல்லிக்கட்டுக்கு ரெடி பண்ணனும். ஹ்ம்ம் நிக்க கூட நேரம் இருக்காது இன்னும் ரெண்டு மாசம்" பெருமூச்சு தேவாவிடம். பைரவி இங்கு தேவா அறையின் பால்கனியில் நின்று பேச மெதுவாக அமர்ந்துகொண்டாள்.
"அப்போ ரெண்டு நாள் இங்க வர மாட்டேன்னு சொல்றிங்களா?" என்றாள் மெதுவான குரலில்.
மனைவி அழைப்புகள் இனிப்பை உண்டது போல் இனிக்க, இவள் ஏகமாய் கேட்கும் அழைப்புகள் சக்கரை பாகை திகட்டாமல் உண்பது போல் தித்தித்தது.
சிரிப்பை கட்டுப்படுத்தி, "உனக்கு விடுதலை தானே பைரவி? நான் இருக்கப்போ தயக்கமாவே நைட் எல்லாம் சுத்துவ. இப்போ நிம்மதியா இரு" என்றான்.
"ஆனந்த் தயக்கம் இருந்தது, அது பயம் இல்ல. இப்ப நான் எப்படி தனியா இருப்பேன்?" என்றவள் குரல் சற்று கோவத்தை காட்டியது.
"ஏன் நீ எப்பவும் தனியா தானே இருப்ப?" கேள்வி தேவாவிடமிருந்து. எப்படி சொல்வாள் அவன் முகமே அவள் அமைதி என?
"நீங்க வர மாட்டேன்னு சொல்லிட்டீங்கல்ல? இனி என்ன பத்தி கேக்க வேணாம்" என்றாள் வீம்பாக.
"சரி கேக்கல, ரெண்டு நாள் இல்லை. நான் வீட்டுக்கு வர ஒரு மாசம் கூட ஆகலாம். அது வர அத்தை வீட்டுக்கு போறியா?"
"ஏன் ஒரு மாசம்?" இரண்டு நாளையே தாங்க முடியாதவளுக்கு ஒரு மாதம் பேரதிர்ச்சியே அதனால் தான் வேகமாக கேட்டுவிட்டாள்.
அதை மறைக்கவும் இப்பொழுது விருப்பமில்லாமல் அவன் பதிலுக்காக காத்திருக்க அந்த பக்கம் தேவா மகிழ்ச்சியில் துள்ளினான். நிற்க முடியாமல் மகிழ்ச்சியில் துள்ளியது அவன் உள்ளம்.
மரத்தை பிடித்து கால்களை உதறி ஏதேதோ செய்துக்கொண்டிருந்த நண்பனை தூரத்தில் இருந்து பார்த்த நண்பர்களுக்கு கூட அவன் செயல் விசித்திரமாக இருந்தது.
அவள் குரலில் இருந்த தவிப்பு அத்தகையது. இசையை சேரும் பாடல் வரிகள் போல் தவித்தது அவள் வார்த்தைகளோடு அவள் உள்ளமும். ஆசையாய் அவனை திருமணம் செய்யாவிடினும் தேவா காட்டிய அன்பின் சாரலில் பெண்ணவலால் நனையாமல் இருக்க முடியவில்லை. கையில் குடையோடே விரும்பி குளிரில் நிற்கிறாள். காலப்போக்கில் சிறு வெயில் கூட உடலை காந்தியது, இந்த பிரிவைப் போல.
"ரெண்டு மாசம் கூட ஆகலாம்" என்றான் அவள் கோவத்திற்கு தூபம் போட.
"ஆனந்த், உங்க திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சிடுறேன். வந்து எடுத்துட்டு போய் அங்கையே தங்கிக்கோங்க" அவனை பேச விடாமல் இனிப்பை துடித்தாள்.
அதன் பிறகு அவன் கூறியது போல் இரண்டு நாட்கள் தேவாவை பற்றிய எந்த தகவலும் இல்லை. மனைவியை அடிக்கடி தொல்லை செய்யும் எண்ணம் கூட இல்லாமல் போனான்.
மூன்றாம் நாளும் அவனை இன்றி தவித்தவள் அன்று தங்கள் இருவரின் நெருக்கத்தை எந்த விதமான உணர்வில் சேர்ப்பதென தெரியாமல் அவன் ஒலிக்கவிட்ட ஸ்பீக்கர் முன்னாள் சென்று நின்று அதனை உயிர்ப்பிக்க தேவாவின் ருசிபடியே அதிரடியான பாடல் ஒலித்தது.
சரக்கு வச்சிருக்கேன்...
இறக்கி வச்சிருக்கேன்...
கருத்த கோழி முளகு போட்டு...
வறுத்து வச்சிருக்கேன்...
கோழி ருசியா இருந்தா...
கோழிய வெட்டு...
குமரி ருசியா இருந்தா...
குமரிய வெட்டு...
சிரிப்போடு கைபேசியை எடுத்து தான் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே அமர்த்திருந்தவள் இதழ்கள் மெல்ல பாடலின் வரிகளை முணுமுணுத்தது.
"எனக்கு சரக்கடிக்கிற பழக்கம் இல்ல" காதருகில் திடீரென கேட்ட குரலில் பதறி, 'ஆஆ' வென கத்தியவள் கழுத்தை ஒரு கையால் பிடித்து மறு கை வைத்து வாயை அடைத்தான்.
"ஏன்டி ஊரையே கூட்டுற?" திடீரென வந்த ஆண்மையான குரல் கணவன் குரல் என்பதையும் மறந்து பயத்தில் அலறியிருந்தாள்.
தன்னை முறைப்போடு பார்த்து கேள்வி கேட்டவன் வருகையை அவள் மூளை கொண்டாடிக்கொண்டிருக்க இதயம் தன்னையும் அறியாமல் அவன் சட்டையை பெரும் ஆசையோடு பற்றிக்கொண்டது.
கட்டிலில் அமர்த்திருந்தவளை அமைதிப்படுத்த தேவா குனிந்திருக்க இறுதியில் அது தனக்கே வினையாக மாறியது.
பலமாக மூச்சு வாங்கும் அவள் முகத்தை விட்டு தானாக கண்கள் கீழ் இறங்க, அதற்குள் அவன் மனைவியின் கை அவன் நெஞ்சத்தின் மீது பட்டு தேவாவின் மோகத்தை மறைத்து காதலை உயர்த்தியது.
அவளை நெருங்கவே பயந்த இதயம், தன் துடிப்பை அதிகப்படுத்தி பயம்கொள்ள வைத்தது, எங்கே அவளை உரிமையோடு நெருங்கிவிடுவோமோ என.
அந்த ஆசையை நொடியில் அறுத்துவிடும் வகையில் அவன் மனைவி இத்தை தந்த அதே இடத்தில் தன்னுடைய சிறிய கைகளால் ஓங்கி குத்தினாள்.
"ரெண்டு மாசம் வர மாட்டேன்னு சொன்னிங்க போங்க. ஏன் இப்போ வந்திங்க?" மீண்டும் மீண்டும் அவனுக்கு அடி தான் கிட்டியது.
பைரவி கைகளை பற்றிக்கொண்ட தேவா அவள் கன்னத்தை தொடப்போக, பின்னுக்கு சென்றதையும் பொருட்படுத்தாமல் விழிகள் ஓரம் பூத்திருந்த கண்ணீரை துடைத்துவிட்டவன், "என் சக்கரையோட கண்ணு என்ன ரொம்ப தேடுச்சு போல?" என வினவினான் ஆசையாக.
அதை கணவன் கேட்ட பிறகு தான் பைரவிக்கு இன்னும் அழுகை வந்தது, கன்னம் பற்றியிருந்த அவன் கைகளை தன் இரு கைகள் கொண்டு பிடித்தவள் அந்த கைகளிலே இதமாக கண்களை மூடி இளைப்பாறினாள், "இல்லை" என்ற பொய்யோடு.
சன்னமாக சிரித்த தேவா என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் அவள் நெற்றியில் அனுபவித்து முத்தம் ஒன்றை வைத்து,
"நமக்கு அங்க ஊர்ல வீடு பாத்துட்டேன் பைரவி. என்னாலயும் இந்த சக்கரை இல்லாம இருக்க முடியல" என்றான்.
அவன் வார்த்தைகளை கேட்ட பைரவி இம்மியளவும் அசையவில்லை, கண்களை மட்டும் திறந்து அவனை பார்த்து சிரித்தாள் திருப்தியாக.
அவள் சம்மதம் கிடைத்த திருப்த்தி அவனிடமும் வர குறும்பும் எட்டி பார்த்தது, "இப்டியே நான் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னா வீட்டுக்கு இல்லை, முதுகு ஒடஞ்சு ஹாஸ்பிடல்க்கு தான் போவோம்"
அவன் கூறியதை ஆராய்ந்தவள் சடுதியில் அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்து முகம் சிவக்க கட்டிலில் நன்றாக தள்ளி அமர்ந்தாள்.
மனைவியை விட்டு விலகி நின்ற தேவா முதலில் ஸ்பீக்கரை அணைத்துவிட்டு மனைவி கையில் ஒரு கவரை கொடுத்தான்.
ஏதோ என வாங்கி பார்த்த பைரவி தேவாவை தீயாய் முறைத்தாள், "உங்களால என்ன பாத்துக்க முடியலைன்னா ஓப்பனா சொல்லிடுங்க ஆனந்த். இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க என்ன பாத்துக்கணும்னு அவசியமே இல்லை.
இல்லை உங்களுக்கு நான் சம்பாதிக்கிற காசு தான் வேணும்னா அப்டி ஒன்னும் உங்க சந்தோசத்தை நிறைவேத்தணும்னு எனக்கு விதி இல்லை. என் அம்மா வீட்டுக்கு நான் போறேன், நீங்க வேற ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு உங்களுக்கு தோணுறது எல்லாம் பண்ணிக்கோங்க"
மனைவி இத்தனை கோவம் கொள்வதன் காரணம் அவளை மதுரையில் உள்ள ஒரு கட்டுமான அலுவலகத்தில் சேர்ப்பதற்கான வேலையை நண்பன் ஒருவன் மூலம் நடத்தி வெளியில் சேர்வதற்கான கடிதத்தை தான் அவளிடம் நீட்டினான்.
பைரவி பேசியதில் கோவம் ஊற்றாய் பெருகினாலும் பொறுமையாய் அவளை பார்த்தான் தேவா, "எனக்கு உன்னோட காசு வேணாம். எனக்கு நீ வாங்கி தரேன்னு சொன்ன அந்த பிளாட்டினம் செயின் வேணும்.
அத வாங்கி குடுத்துட்டு நீ வேலைக்கு போக மாட்டியோ இல்லை வேலைக்கு போயி அந்த சம்பளத்தை தெருவுல விதைச்சிட்டு வருவியோ எனக்கு கவலை இல்லை" அவனது குரலில் இருந்த அழுத்தம் நீ எதுவேனாலும் பேசிக்கொள் நான் கேட்டது எனக்கு வேண்டும் என்றது.
"நான் உங்க கூட வரல" முகத்தை தூக்கி வைத்து பதில் கொடுத்தாள் பைரவி.
"ரொம்ப சந்தோசம், கிராமத்துக்கு வந்தா வாரம் ரெண்டு நாள் தான் வேலைக்கு போகணுமே உனக்கு எக்ஸ்போஷர் கிடைக்காதோன்னு நினைச்சேன். இப்ப வாரத்துல அஞ்சு நாளும் தாராளமா போகலாமே" அதில் ஒரு திருப்தி அவனுக்கு.
"நான் எங்க இருந்தாலும் வேலைக்கு போக மாட்டேன்" விடாப்பிடியாக பைரவி.
"அப்போ ஒரு நல்ல ஐடியா, உன்ன விருதுநகர்ல விட்டுடுறேன். உன் அப்பா கடைல வேலை பாக்கலாம், உன் தாத்தா கடைல வேலை பாக்கலாம். ரெண்டே மாசத்துல ஷிபிட் கணக்குல வேலை பாத்து எனக்கு செயின் வாங்கிடலாம் நீ" என்றான் தேவா.
"ஏன் என்ன நிம்மதியாவே விட மாட்டிக்கிறீங்க? சந்தோசத்தை நான் ஒரு நிமிஷம் கூட நிம்மதியா அனுபவிக்க கூடாதா? வீட்டுல அம்மா விரட்டி விரட்டி விட்டாங்க. இங்க நீங்க" ஏமாற்றமான குரலில் குற்றம் சாட்டினாள் அவன் மனைவி.
"இங்க உன்ன யாரும் விரட்டி விடலயே ஆபீஸ் போறேன்னு சொன்னா நானே கூட்டிட்டு வந்து நானே கூட்டிட்டு போய்டுவேன், இதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம்?" அவளை சமாதானம் செய்து அனுப்பும் முயற்சி மட்டும் தான் தேவாவிடம்.
"எனக்கு புடிக்காதத என்ன செய்ய சொன்னா எனக்கு கோவம் வர தானே செய்யும். உங்களுக்கு புடிச்ச வேலைய நீங்க பாக்குறீங்க. அதுக்கு நான் சப்போர்ட்டிவா இருக்கேன். அதையே உங்ககிட்ட எதிர் பாக்குறது தப்பா ஆனந்த்?" நியாயம் கேட்டு நின்றாள்.
மனைவிக்கு பதில் சொல்லாமல் அவள் முன்னே ஒரு புகைப்படத்தை காட்டினான் தேவா. அதை பார்த்ததும் பைரவி கண்ணில் நீர் திரண்டோட துடைக்கும் தைரியம் கூட அவளிடம் இல்லை.
"ரெண்டு வருஷம் முன்னாடி பெஸ்ட் எம்ப்லாய் ஆஃப் தி இயர் அவார்ட் வாங்குன யாரும் தன்னோட வேலைய புடிக்காம செஞ்சிருக்க மாட்டாங்க. ஜாயின் பண்ண ஒரே வருசத்துல இந்த அவார்ட் உன் கைக்கு வந்திருக்குனா உன்னோட வேலைல நீ எவ்ளோ மும்முரமா இருந்திருப்பனு எனக்கு தெரியும் பைரவி.
பைனல் இயர்ல உன் தாத்தா வீட்டை கட்டுறப்போ எவ்ளோ திறமையா பாத்துக்கிட்டனு தாத்தா சொல்லி ரொம்ப பெருமைப்படங்க. கொட்டி இருக்குற திறமையை வச்சுருக்க என்னோட மனைவியை நாலு சுவருக்குள்ள அடைச்சு வைக்க எனக்கு விருப்பம் இல்லை.
இப்ப உன்னோட பிடிவாதத்துல லூஸ்ல நான் விட்டு நாளைக்கு அதுவே உனக்கு ஒரு ஏக்கமா வந்து நிக்க கூடாதுனு தான் சொல்றேன். இதுக்கும் மேல உன் இஷ்டம் தான்"
ஒரு பையை எடுத்து தன்னுடைய உடைகளை தேவா அமைதியாக எடுத்து வைக்க சில நிமிடங்களில் அவளும் வந்து அவனுக்கு உதவினாள். தேவா தன்னிடம் ஏதேனும் கேள்வி கேட்பான் என நம்பியிருக்க அவனோ அமைதியின் உருவமாய் நின்றான்.
"அத்தை மாமாகிட்ட சொல்லிட்டீங்களா?"
அவளே கேள்வியை வைத்தாள். எதை பற்றி பைரவி கேட்கிறாள் என்பதை தெரிந்தே, "ம்ம் மூணு மாசம் தான இருக்க போறோம். காலைலயே அப்பாகிட்ட பேசிட்டேன். அம்மாக்கும் பிரச்சனை இல்லை" என்றான்.
பைரவி உச் கொட்டி, "நான் அத கேக்கல. நான் வேலைக்கு புகுத்த பத்தி கேட்டேன்" என்றாள் சற்று சோர்வாக.
மனைவியை திரும்பி பார்க்காமல் அவள் தன்னை தான் பார்த்துக்கொண்டுள்ளாள் என அறிந்த தேவாவின் இதழ்களில் அரும்பியது மெல்லிசான புன்னகை ஒன்று.
"நீயாவது படிச்ச படிப்புக்கு வேலை பாக்க போறனு சந்தோசம் தான்" என்றான் உள்ளுக்குள் மகிழ்ந்து.
மறு நாள் அதிகாலை மனைவியை அழைத்து தங்கள் வாகனத்தில் அயன்தென்கரை நோக்கி தேவா பயணிக்க மனைவிக்கு செல்லும் வழி எங்கும் ஒவ்வொரு கிராமங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கிக்கொண்டே செல்ல அவன் ஊரின் எல்லையை நெருங்கிய சமயம் ஒரு நியூஸ் வாகனம் நிற்க அதன் வெளியில் இரண்டு ஆண்கள் வாகனத்திற்கு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
முன் பின் பார்த்திராத மனிதர்கள் அதுவும் தொலைக்காட்சியிலிருந்து வந்திருக்க விசாரிக்கும் எண்ணத்தோடு ஓரம் நிறுத்தினான்.
"யாருங்க நீங்க என்ன வேணும்?" என்றான்.
தங்களை நெருங்கி வந்து நின்ற வாகனத்தை பார்த்தவன் அருகில் சென்று கேள்வி கேட்டவனிடம், "அயன்தென்கரைல குளத்துல ஏதோ பிரச்சனைன்னு தகவல் வந்தது அதான் ஒரு நியூஸ் கலெக்ட் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம்" என்றான் ஒருவன்.
"டேய் கேனைப் பயலே இன்னும் அஞ்சு நிமிசத்துல வண்டி ரெடி ஆகலனு வை, உன்ன அறுத்துப் போட்டு உன் கரிய தின்னுடுவேன் பாத்துக்கோ" காரின் பேனட்டில் தலையை விட்டு நின்றவனிடம் எச்சரித்து வாகனத்தினுள் இருந்து கீழே இறங்கி வந்தான் வேறொருவன்.
"டேய் ராமு அந்த வண்டில இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டையாவது திருடிட்டு வாடா" என்றான் மேலும் பரிதவிக்கும் குரலில்.
அவன் பேசியதை கேட்டு பைரவி சிரித்துவிட, கணவனிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
தங்களிடம் பேசிக்கொண்டிருந்த ராமிடம் அதை கொடுத்து, "என்ன ப்ரோ பிரச்சனை?" என்றான் மீண்டும்.
"வண்டி ஸ்டார்ட் ஆகல. நைட் மூணு மணில இருந்து இங்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ப்ரோ. ஒருத்தரும் சிக்கலை" என்றான் ராம்.
"அவ்ளோ தானா? உங்க ஐ.டி தாங்க" என தேவா கேட்கும் பொழுது சரியாக மற்றொருவனுக்கு வந்துவிட, "சார் எந்த ஏரியா இன்ஸ்பெக்டராம் நம்ம ஐ.டி வாங்கி செக் பன்றார்?" அவன் கேலியாக கேட்டு தேவாவை எட்டி பார்த்துவிட்டு மீண்டும் சென்றுவிட்டான்..
தேவா அலட்டிக்கொள்ளவே இல்லை, ராம் தேவாவிடம் தங்கள் அடையாள அட்டையை கட்டினான், "அவன் ஒரு கிறுக்கன் ப்ரோ. பசில என்ன பேசுறோம்னு தெரியாம பேசுறான். முடிஞ்சா ஊர்குல போய் ஒரு வண்டி ஏற்பாடு பண்றிங்களா?"
தேவா மனைவியை பார்த்து, "வண்டி ஏற்பாடு பண்ண முடியுமா தெரியல, மெக்கானிக்கு கால் பண்றேன், அப்றம் நானே வந்து உங்கள கூட்டிட்டு போறேன். ஒரு கால் மணி நேரம் வெயிட் பண்ணுவிங்களா?" என தேவா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே மற்றொருவன் வந்து வாகனத்தின் பின் கதவை திறந்து அமரப் போக ராம் அவனை பிடித்து நிறுத்தினான்.
"நிரஞ்சா என்னடா பண்ற, அடுத்த ட்ரிப்ல நம்மள கூட்டிட்டு போறேன்னு சொன்னார் இப்ப இல்ல" என்று.
"எதுக்கு பெட்ரோல் வேஸ்ட் பண்ணனும்? இப்பயே போகலாமே" என்றான் நிரஞ்சன், அகம் பத்திரிகையின் முக்கிய பத்திரிக்கையாளர்களில் ஒருவன்.
"டேய் உள்ள ஒரு பொண்ணு இருக்குடா, மூடிட்டு கீழ இறங்கிடு. வந்த லிப்ட்டும் போய்ட போகுது" நண்பனை எச்சரித்தான் ராம்.
"அதுக்காக தானே நான் போறேன்" நண்பன் காதில் நிரஞ்சன் கிசுகிசுத்து அவனிடமிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்க, தேவா வாகனத்திலிருந்து கோவமாக கீழ் இறங்க சென்ற நேரம் அவன் கையை பிடித்தாள் பைரவி.
"கைய விடுடி. இன்னைக்கு இருக்கு அவனுக்கு" துள்ளிய கணவனிடம், "அவர் பசில இருக்கார் ஆனந்த். தப்பான ஆள் மாதிரி தெரியல, விடுங்க. ஊருக்குள்ள வந்தாச்சுல பயமும் இல்லை" என்றாள்.
"ப்ரோ உள்ள ஏறுங்க" என்றான் தேவாவும் ராமிடம் சில நொடிகள் யோசனைக்கு பிறகு.
நிரஞ்சன் ஆசையாக உள்ளே ஏறி அமர்ந்துகொள்ள பைரவியிடம், "ஹாய்ங்க நீங்க இந்த ஊரா?" என்றான்.
கணவனை பார்த்தவள் பின் சிரிப்போடு அவனிடம் திரும்பி, "உங்கள மாதிரியே நானும் இன்னைக்கு தான் இந்த ஊருக்கு வர்றேன்" என்றாள்.
"பார்றா, அப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ஊற சுத்தி பாக்கலாம்" என்றான்.
ராம் நண்பனை சீட்டின் பின்னால் தள்ளி அவன் கையில் கேமரா மற்றும் இதர பொருட்களை திணித்தான், "அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பக்கத்துல இருக்கவன் தான் புருஷன் போல" என எச்சரித்தான்.
அதே நேரம் தேவாவும், "டேய் அந்த கவலை உனக்கு வேணாம். என் பொண்டாட்டிக்கு நான் ஊர சுத்தி காட்டிக்குவேன்" சிறிய அளவு இல்லை பெரிதும் பொறாமை இருந்தது அவன் குரலில்.
"இது அத விட நல்லதுங்க, கூடவே கைட் வச்சு நிம்மதியா இருக்கலாம்" நிரஞ்சன் பேச பேச பைரவி கணவனை பார்த்து வெளிப்படையாகவே சிரித்தாள், "அவ்ளோ தான போகலாம்" என்று.
மனைவி பேசுவதை கேட்ட தேவாவின் கைகளில் வாகனம் மின்னல் வேகத்தில் சீறி பாய, அவன் உணர்வை புரிந்தவள் கியரில் இருந்த அவன் கையை மெதுவாக பற்றிட, மனைவியின் கையை உதறி அவளை திரும்பி முறைத்தான் தேவா.
How is the chapter|?
Comments please
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro