மாயக்குழந்தை: 18
அத்யாயம் 18: மாயக்குழந்தை
ஆதவன் தோட்டத்தில் நின்று கொண்டு வேகபெருமூச்செடுத்துக் கொண்டிருந்தான். இப்போதைய நேரத்திற்கு அவனை அவனே கட்டுப்படுத்திக் கொள்ள அவனிடம் இருக்கும் ஒரே வழி பொருமை மட்டும் தான்.
கடந்த இரண்டு வாரங்களாக அவளைவிட்டு தூர ஓட முடிந்த அவனுக்கு மீண்டும் கிடைத்த அவளின் அருகாமை கசக்க, அதில் தகித்த இதயத்தை தனிக்க இயலாமல் போராடிக் கொண்டிருந்தவனை மேலும் சித்திரவதை செய்வது போல் அவனை நோக்கி வந்தாள் நிலா.
எதுவும் பேசாமல் அவள் எடுத்து வந்த கப்பை ஆதவன் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகிலே கிடந்த மரபெஞ்சில் வைத்துவிட்டு மெதுவாக அவள் நகர முயல, " எனக்கு வேணாம், " என்ற ஆதவனின் குரல் அவளை நிறுத்தியது.
முதல் முறை அவன் குரலை கேட்டதில் உறைந்திருந்த நிலாவிற்கு அவள் மனதில் ஊடுருவிய உணர்வுகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அவள் புரியாமல் திரும்பி பார்க்க, கண்களை இறுக்கி மூடிக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டி நின்றவனின் குரலில் தெரிந்த வெறுப்பு நிலாவை ஏதோ செய்தது.
" நான் காஃபீ குடிக்க மாட்டேன். எனக்கு வேண்டாம். "
" அது டீ தான்... "
அவன் பல்லை நறநறவென கடிக்கும் சத்தத்தில் நிலா அவனை முழுதாகத் திரும்பி நோக்க ஆதவனும் அவளை திரும்பிப் பார்த்தான்.
" நான் டீயும் குடிக்க மாட்டேன். " ஆதவன் பச்சையாக பொய் சொன்னாலும் அதை தான் நிலா அறிய மாட்டாளே...
நிலா " ஒரு நாள் மே பி...அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா? "
" முடியாது. "
" என்ன? " அவன் நேரடி மறுப்பில் நிலா விழிக்க ஆதவன் குழந்தை போல் அவன் பிடிவாதத்தில் உறுதியாய் இருந்தான்.
" எனக்கு வேண்டாம்னா வேண்டாம் தான், "
" ஆனா "
" எனக்கு வேண்டாம்! "
" என்னங்க பிரச்சனை உங்களுக்கு? வேணாம்னா முன்னடியே சொல்ல வேண்டியது தான? இப்போ ஒரு டீ குடிச்சா என்ன குறஞ்சுப் போய்டுவீங்க நீங்க? "
நிலாவின் நிலையான குரல் ஆதவனின் கோவத்தை ஏற்றிவிட அவளுக்கும் அங்கு அதே நிலை தான். யார் என்ன ஏச்சு பேச்சு பேசினாலும் பொருத்துப் போகும் நிலா பெரிதும் யாரையும் அவளுக்கு தனிப்பட்ட முறையில் கண்டு கொண்டதே இல்லை. இதோ கண் முன் ஆறடிக்கு நிற்கும் நெருப்பில்லாமலே எரியும் தீயைத் தவிர வேறெவரும் நிலாவின் பூமியையே ஆளும் பொருமையை அசைத்துப் பார்த்ததில்லை.
ஆனால் இந்த ஒரு கயவனின் பாராமுகம் அவள் உணர்வுகளை ஏடாகூடமாக குழப்பத் தொடங்கியதை அந்த மானிடத்தி அறியவில்லை.
ஆதவன் மீண்டும் ஏதும் பேசும் முன் நிலா அவனை மதிக்காமல் வீட்டிற்குள் நுழைய முனைய, கேசத்தை அழுந்த கோதிய ஆதவன்
" ...ஒன்னு சொன்னாப் புரியாது... ச்ச ப்லடி... " என அவன் வாய்க்குள்ளே ஏதோ கடுகடுக்க அதை லேசாக காதில் வாங்கிய நிலாவிற்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.
அதுவும் ஆதவன் அந்த டீ கப்பை ஒரே தள்ளில் தள்ளி எறிந்ததைப் பார்த்ததும் வேகமாக திரும்பி அவனிடம் விரைந்து வந்த நிலா
" என்ன சொன்னீங்க? வேற ஒருத்தவங்க வீட்டுக்கு வந்துட்டு எப்டி நடந்துக்கனும்னு யோசிக்க மாட்டீங்களா? "
நிலாவின் குரல் அவளுக்குத் தெரிந்த அவளின் இருவது வருட வாழ்வில் அன்று தான் முதல் முறை உயர்ந்தது. கண்களை தாண்டி அவள் கோபம் கொப்பளிக்க, அவளுக்கு நிகராக கோவத்தோடு மிளிர்ந்த ஆதவனும் அவளை சரிசமமாய் முறைத்தான்.
" நான் உங்களுக்கு க்லியரா வேண்டாம்னு சொல்லியும் வச்சிட்டுப் போனது உங்க தப்பு மிஸ் நிலா. "
டீ கப்பை உடைத்தது கூட தன் தவறே இல்லை என நிற்பவனை பார்க்க பார்க்க நிலாவிற்கு கோபம் மட்டும் தான் வந்தது. ஆனால் அதை வெளிக்கொணர தெரியாமல் அவள் எடுத்து வந்த ட்ரேவை பலமாக அந்த மரபெஞ்சு மீது வைக்க, ஆதவன் சற்றும் அசரவில்லை.
இவர்களின் களோபரத்தில் திடீரென வெளியே ஓடி வந்த ஹர்ஷனுக்கு ஒருவரை ஒருவர் எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் மற்றும் நிலாவை கண்டதும் தலையில் இடி வந்து விழுந்தது போல் இருந்தது.
நிலா அவன் முகத்திற்கு நேராக விரலை உயர்த்தி ஏதோ பேச வந்த அதே நேரம் ஹர்ஷன் தலைதெறிக்க அவர்கள் அருகில் ஓடி வந்தான்.
" டேய் டேய் என்ன டா? நிலா என்ன டா ஆச்சு? " என இருவருக்கும் நடுவே புகுந்த ஹர்ஷன் ஆதவனை நிலாவிடம் இருந்து தள்ளி நிறுத்த, அவனை பார்த்தும் கூட நிலாவிற்கு மனம் தனியவில்லை.
" அத்தான் உங்க ஃப்ரெண்டுகிட்ட வேற ஒருத்தவங்க வீட்டுக்கு வந்தா எப்டி நடந்துக்கனும்னு சொல்லி வைங்க, "
ஹர்ஷன் தான் பார்த்து வளர்ந்த நிலாவா பேசியது என வாயைப் பிளந்து அவளைப் பார்க்க அவள் கண்கள் ஆதவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
" மொதல்ல ஒருத்தரோட விருப்புவெறுப்பு தெரிஞ்சிக்காம தான் இஷ்டமுன்னு நடந்துக்க வேணாம்னு உங்க வீட்டுப் பொண்ணுக்கு சொல்லி குடு, " ஆதவன் சரவெடியாய் வெடித்துவிட்டு ஹர்ஷனை திரும்பியும் பாராமல் அங்கிருந்து விலகியிருந்தான்.
அவன் சென்று மறைந்த சில நொடிகளில் நிலா கொஞ்சம் கொஞ்சமாய் அமைதி அடைந்திருந்தாலும் அவள் மனதின் அடி ஆழத்தில் இன்னும் அவன் கொழுத்திய கோபம் எரிந்து கொண்டு தான் இருந்தது.
" ஸாரி நிலா அவன் ஏதோ டென்ஷன்ல இருக்கான் போல டா... "
ஹர்ஷன் தயங்கித் தயங்கி நிலாவின் தோளைத் தொட, எங்கு அழுதுவிடுவாளோ என்ற பயத்திலே அவன் இருக்க அதற்கு நேர்மாராய் இருந்தது நிலாவின் சாந்தமான முகம்.
" ஐயோ அத்தான் யாரோ பண்ணத் தப்புக்கு நீங்க ஏன் ஸாரி கேக்குறீங்க? எனக்கு அவங்கள பிடிக்கல அத்தான். அவங்க வேணும்னே தான் இப்டி இருக்க மாதிரி இருக்கு. விடுங்க நான் அவாய்ட் பண்ணிக்கிறேன். நான் க்லீன் பண்ணீட்டு என் ரூமுக்குப் போறேன் அத்தான், "
நிலா அவன் முகம் பார்க்காமல் கூறிவிட்டு உடைந்து நொருங்கிய டீ கப்பின் துண்டுகளை சேகரித்துவிட்டு அங்கிருந்து சென்றாள். ஹர்ஷனுக்குத் தான் இந்த நேரெதிரான மாற்றம் ஒன்றும் புரியவில்லை.
ஈ எரும்பை கூட மனிதன் போல எண்ணி தீங்கு நினைக்காதா நிலா எவ்வாறு ஆறடி மனிதனை காரணமில்லாமல் வெறுக்கத் தொடங்கினாள் என அவனுக்குத் தெரியவில்லை.
அந்த காரணத்தை தான் அந்த வெண்ணிலவும் அறியவில்லையே.
ஆனால் நிலா சொன்னது போலவே அவள் என்ன முயன்றும் ஆதவனை சாதாரணமாக அவளால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அவனது ஒவ்வொரு அசைவும் இவளை இம்சித்துக் கொண்டிருக்க, நிலாவின் பொருமை அவன் வந்த முதலில் இருந்தே விழிம்பில் தான் தொங்கிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை ஆதவன் அவளை அப்பட்டமாக மதிக்காமல் செல்லும் பொழுதும் அவளை விடுத்து மற்ற அனைவரிடமும் சாந்தமாக பேசும் பொழுதும், அவளிடம் காரணமே இல்லாமல் தொட்டதெற்கெல்லாம் தாம்தூமென குதிக்கும் போதும் நிலா அவளை மறந்து அவனை வெறுக்கத் தொடங்கியிருந்தாள்.
நாளாக நாளாக அந்த வெறுப்பு இருவரை தாண்டி சுற்றி உள்ளோரையும் ஈர்க்க, ஒருவர் முகத்தை பார்த்து மற்றவர் கத்தும் போது மற்றவரை இவ்விருவரும் மறந்துவிடுகின்றனர்.
அவ்வாறே இன்றும் நிலா மற்றும் கௌஷிக்கின் திருமணத்திற்காக நகை கடை செல்லலாம் என மொத்த குடும்பமும் திரண்டிருக்க, நிலா இசையை இழுத்துக் கொண்டதும் வர மாட்டேன் என தன் வீட்டின் வாயிற்கதவைப் பிடித்துக் கொண்டு தொங்கிய ஆதவனை அறும்பாடுபட்டு ஹர்ஷனும் வினோத்தும் இழுந்து வந்தனர்.
உண்மையில் மயில்விழி மட்டும் களோபரம் நடந்து கொண்டிருந்த ஆதவனின் வீட்டிற்கு வந்து " இப்போ போறியா இல்லையா டா நீ? " என ஒரு கத்து கத்தாமல் இருந்திருந்தால் பூகம்பமே வந்திருந்தாலும் நிச்சயமாக ஆதவன் இங்கு வந்திருக்க மாட்டான்.
ஆதவன் அதை நினைத்து மனதுக்குள்ளே கருவியபடி கார் ஓட்டிக் கொண்டிருந்த ஹர்ஷன் அருகில் அமர்ந்திருக்க, பின் சீட்டில் நிலாவை ஜன்னல் சீட்டின் அருகில் அமர்த்திவிட்டு அவள் அருகே ஜாலியாய் அமர வந்த கௌஷிக்கை நாசூக்காய் தள்ளிவிட்டுவிட்டு வந்து அமர்ந்த இசை அவளை விசித்திரமாய் பார்த்த ஹர்ஷன் கௌஷிக் மற்றும் வினோத்தையும் கண்டு இளித்து வைத்தாள்.
அவளை பார்த்ததும் தலையை சொரிந்த கௌஷிக்கிற்கு வினோத்தோடு மற்றொரு காரில் வருவதே வழியாய் போனது.
இசையின் நோக்கம் அறிந்திருந்த ஹர்ஷனும் எதுவும் சொல்லாமல் இருக்க, நம் நாயகர்கள் இருவருமோ தங்களுக்கும் இந்த காருக்குமே சம்மந்தம் இல்லை என்பது போல் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி அமர்ந்திருந்தனர்.
நகைக்கடை வந்ததுமே முதல் ஆளாய் இறங்கி வந்த பக்கமே திரும்பப் போன ஆதவனை வினோத் வந்து பிடித்து இழுத்துச் செல்ல, வேண்டா வெறுப்பாய் வந்து கொண்டிருந்த நிலாவை இசை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாள்.
அம்பிகா பாட்டியின் குடும்பத்தில் எது வாங்க சென்றாலும் குறைந்தபட்சம் நான்கு கடையாவது ஏறிவிட்டு அதை கண்டுபிடித்து வாங்குவது தான் வழக்கம். அவரின் மருமகள்கள் மூவரும் திருமணமாகப் போகும் நிலாவை சேர்த்துக் கொண்டனரோ இல்லையோ அவரவருக்கு வேண்டியதை தேர்வு செய்வதில் கவனமாய் இருந்தனர்.
இசை மட்டும் தான் நிலாவிற்கு தேர்வு செய்வது போல் அவளை ஒரு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு நடக்க, அவ்வப்போது பாட்டியும் நிலாவிடம் ஒரு சில ஆபரணங்களை காட்டிக் கொண்டிருந்தார்.
ஆதவனை கடையோடு கட்டி வைக்காத குறையாக அவனுக்கு பாடிகாட் போல் ஹர்ஷனும் வினோத்தும் ஒருவர் மாற்றி ஒருவர் அவனோடே அலைந்து கொண்டிருந்தனர்.
" எனக்கு எதுவும் புடிக்கல இசை... நாம வெளிய போகலாம் வா டி, "
" ஏய் ஏதோ என் கல்யாணத்துக்கு நான் நகை வாங்க வந்த மாதிரி என்ன வெளிய கூப்புடுற? உன்னோட கல்யாணத்துக்காக ஷாப்பிங் வந்துருக்காங்க டி, " இசை அடம்பிடிக்கும் அவள் தோழியை நம்பாத பார்வை பார்க்க, நிலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
" ஆமா கல்யாணமே வேணாமுங்குறேன், இப்போ நகை ஒன்னு தான் கொறச்சல்... ஏன் டி? "
" வேணாமுன்னு உனக்கே சொல்லிக்கிட்டா போதாது. வெளிய சொல்லனும், "
" சொல்லீட்டனே... பாட்டி ஏன் வேணாமுன்னு என்கிட்டயே கேக்குறாங்க டி, "
அதிர்ச்சியான இசை நிலாவை கண்டு விழித்தாள்.
" இதெப்போ டி நடந்துச்சு? எப்போ பாட்டிகிட்ட சொன்ன? என்கிட்ட கூட சொல்லல? பாட்டி என்ன சொன்னாங்க? உனக்கு புடிக்கலன்னு தெரிஞ்சும் ஏன் அப்போ இன்னைக்கு ஷாப்பிங் வந்து இருக்காங்க? இரு நான் போய் என்னன்னு கேக்குறேன், " என நடுகடையில் அமர்ந்திருந்த பாட்டியிடம் ஓடப் போனவளை நிலா பிடித்து நிறுத்தினாள்.
" அடியேய் நில்லு டி செத்த நேரம்! அதான் சொல்றேன்ல அவங்க ஏன் வேணாம்னு கேக்குறாங்க... நான் என்ன சொல்லுவேன்? "
" இது கூடவா உனக்குத் தெரியாது? புடிக்கலன்னு சொல்லு டி, அவ்ளோ தான். "
" அத சொன்னதுக்கு அப்பரம் தான் ரீசன் கேக்குறாங்க டி எரும! "
" ஏ நிலா உனக்கு இப்டிலாம் திட்டத் தெரியுமா? "
இப்போது இசையை அவள் முறைக்க இசை தானாக வாயை மூடிக் கொண்டாள். பெருமூச்சோடு தன்னை சமன்செய்ய முயன்ற நிலா தன் பார்வையை அங்குமிங்கும் சுழலவிட நகைக்கடை அருகே அமைந்திருந்த குழந்தைகள் பகுதி அவளை ஈர்த்தது. கடைக்கு அருகிலே நின்றபடி ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஏக்கமாய் உள்ளே பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட நிலா அந்த பெண் குழந்தையை நெருங்கினாள்.
இவளை கண்டதும் ஓடப் போன குழந்தை நிலா அதனருகில் மண்டியிட்டு அமரவும் அவளை பார்த்தது.
" உங்கப் பேரு என்ன டா மா? இங்க என்ன செய்றீங்க? "
அதற்கு குழந்தை பதில் தராமல் நிலாவையே பார்த்திருக்க, நிலா அவள் கன்னத்தை தொடப் போன நேரம் திடீரென கடையின் வாயிலில் நிற்கும் வாட்ச்மேன் அவளிடம் ஓடி வந்தார்.
" ஸாரி மேடம் இந்தப் புள்ள கேட்டத் திறக்குறப்போ உள்ள ஓடி வந்துருச்சு. நீங்க விடுங்க நான் வெளிய அனுப்பீடுறேன். ஸாரி மேடம், "
" இல்ல பரவாயில்ல, அவங்கம்மா பக்கத்துல தான் இருப்பாங்க... "
நிலா சொல்லி முடிக்கும் முன்னே அந்த வாட்ச்மேன் முந்திக் கொண்டார்.
" இந்த தெருக்கு பக்கத்துல இருக்க கூவத்துப் புள்ள மேடம். நான் அனுப்பீடுறேன். நீங்க உள்ளப் போங்க. ஏய் போ வெளிய! " என அவர் அதட்டிய அதட்டலில் அந்த குழந்தையின் உடல் அதிர்ந்து அடங்க, ஏதோ ஒரு மாயையில் இருந்து வெளிப்பட்டது போல் சுற்றி முற்றிப் பார்த்து விழித்த அந்த குழந்தை நிலாவை கண்டதும் மீண்டும் அமைதியானது.
" ஏய் சொல்றேன்ல! போ வெளிய இங்கல்லாம் வர கூடாது, "
" அண்ணா விடுங்க ப்லீஸ்! எதுவும் சொல்லாதீங்க, " என திடீரென நிலா கத்தவும் அவர் அவளை பார்த்து விழித்தார்.
தன்னையே பார்த்திருந்த குழந்தையின் கன்னத்தை மென்மையாய் ஏந்திய நிலா " உங்க பேரு என்ன டா மா? நான் வீட்டுக்கு வந்து விடவா? அம்மா எங்க இருக்காங்க? "
ஆனால் பதிலே சொல்லாமல் அந்த குழந்தை அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro