Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

இறைவியின் அன்புமகன்: 19

அத்தியாயம் 19: இறைவியின் அன்புமகன்

கொள்ளை அழகை மறைத்திருந்த அந்த ஒரு புன்னகையில் நிலா தன்னை மறந்து அந்த குழந்தையை ரசித்தாள். அந்த பால்முகத்தின் வேல்விழிகள் அவளை படம் போல் தனக்குள் நிறைத்துக் கொள்ள, நிறைவாய் விரிந்திருந்த புன்சிரிப்பு மேலும் வளர்ந்தது அந்த குழந்தை நிலாவின் பின் ஏதோ ஒன்றை பார்த்த போது.

அந்த புன்னகையின் மந்திரத்திலே மெல்ல திரும்பிப் பார்த்த நிலாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இன்னோறு மூலையில் நின்றிருந்த ஆதவன். வினோத் அவனை ஏதோ நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆனாலும் அவன் கண்கள் இரண்டும் நிலா மீதே நிலைத்திருக்க, ஆதவனின் முகத்தில் எந்த ஒரு உணர்வும் தெரியவில்லை.

புரியாமல் மீண்டும் அந்த குழந்தையிடம் நிலா திரும்ப, அவள் முன் அந்த குழந்தை இல்லை.

கடையைவிட்டு வீதிக்கு ஓடிய அந்த பெண் குழந்தை திரும்பி ஒரு முறை நிலாவைப் பார்த்தது. முகத்தில் உறைந்த புன்னகையோடு தன்னைப் பார்த்த குழந்தையிடம் இருந்து கண்களை பிரிக்க இயலாமல் நிலா நிற்க, அந்த குழந்தை நடுரோட்டில் திடீரென ஓடுவதை கண்டதும் அவள் இதயம் எகிறியது.

" பாப்பா! "

நிலா தன்னையும் அறியாமல் கடையில் இருந்து வெளியே ஓடினாள். வேகமாக சீரிப் பாய்ந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையே அந்த குழந்தை நிலாவின் கண்களில் இருந்து மறைந்திருக்க, சித்தம் தவறி நடுவீதியில் நின்றவளை வலிய கரம் ஒன்று பிடித்து ஓரமாக இழுத்து வந்தது.

அந்த தொடுகையில் சிலிர்த்தடங்கிய நிலா பட்டென திரும்பிப் பார்க்க, கல்லென இறுகிய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க இவளை ஓரமாக இழுத்துச் சென்றான் ஆதவன்.

தன்னை மதிக்காமல் சிலை என நின்றிருந்த ஆதவன் திடீரென புயல் வேகத்தில் தன்னை கடந்து ஓடவும் வினோத் அவனைப் பின் தொடர்ந்து வர, நிலாவை காணவில்லை என இசையும் ஹர்ஷனை நச்சரித்து அங்கே இழுத்து வரவும் சரியாக ஆதவனும் நிலாவும் அவர்கள் கண்ணில் பட்டனர்.

கடையோரமாக வந்த அடுத்த நொடி நிலா அவன் பிடியிலிருந்து தன் கையை உதறிக் கொண்டாள்.

" விடுங்க என் கைய! எந்த தைரியத்துல என் கைய புடிச்சீங்க? காமென் சென்ஸ் கூட... "

கத்திக் கொண்டே வந்த நிலாவின் குரலை ஆதவனின் உறுமல் மட்டுப்படுத்தியது.

" ஷட் அப்! காமென் சென்ஸ் பத்தி பேசுற உன் புத்தி எங்கப் போச்சு? நீ பாட்டுக்கு நடுரோட்டுல ஓடுற? நான் மட்டும் வரலன்னா எப்போயோ போயிருப்ப இந்நேரத்துக்கு, "

" இல்ல அந்த பாப்பா... " என மீண்டும் அதே பக்கம் திரும்பப் போன நிலாவை வலுக்கட்டாயமாக அவன் பக்கம் திருப்பினான்.

" ஆர் யு இன் யுர் சென்ஸ்? ஒரு ஒரு தடவையும் உன்ன காப்பாத்த ஒருத்தர் வர மாட்டாங்க, "

அவன் கையை வேகமாக உதறிய நிலா " நான் உங்கள காப்பாத்த சொல்லி கேட்கல! உங்க வேலையப் பார்த்துட்டு நீங்கப் போங்க! "

நிலாவின் கோபமும் ஆதவனின் கோபமும் போட்டிப் போட்டுக் கொள்ள, மற்ற மூவர் தான் எச்சிலை கூட்டி விழுங்கினர். இவர்கள் இருவரும் பொறித் தெறிக்க ஒருவரை ஒருவர் தீயாய் முறைக்க, முதலில் தன்னிலை பெற்ற வினோத் இவர்களிடம் ஓடி வந்தான்.

" டேய்! நிலாமா என்ன டா ஆச்சு? "

நிலா " நான் போறேன் அண்ணா, "

அவனைத் திரும்பி கூட பார்க்காமல் அவன் வந்த நொடியே நிலா அவர்கள் இருவரையும் தாண்டி கடைக்குள் நடந்தாள். ஹர்ஷன் அருகிலே இவளைப் பார்த்துக் கொண்டு நின்ற இசையையும் இழுத்துச் சென்றாள்.

வினோத் ஆதவனை தயங்கித் தயங்கி திரும்பிப் பார்க்க, நிலா நின்ற இடத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் கழுத்தில் நரம்புகள் புடைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அது சாதாரண நிறத்தில் இருந்திருந்தால் கூட வினோத் அமைதியாக இருந்திருப்பானோ என்னவோ...

ஏனெனில் நீல நரம்புகள் மெல்ல மெல்ல அவன் கழுத்திற்கு மேலே பரவி முகத்தையும் ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தது.

ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்தது போல் பேய் முளி முளித்த வினோத் " டேய் ஆதவா! " என ஒரு கத்து கத்தி அவனைப் பிடிக்க, சட்டென அந்த நீல நரம்புகள் மாயம் போல் மறைந்தது.

தன்னிலை அடைந்த ஆதவன் நிலா சென்று மறைந்த பாதையை கோபமாக ஒரு முறை பார்த்துவிட்டு " நான் கிளம்புறேன், " என பற்களை நறநறவென கடித்தான்.

ஆனால் அதற்குள்ளாக அடுத்த கடைக்கு ஏறலாம் என முடிவெடுத்து எதையும் வாங்காமல் அம்பிகா பாட்டியின் குடும்பம் கடையைவிட்டு வெளியேறியது. அனைவரும் வந்த காரில் வேகவேகமாக ஏற, ஹர்ஷனும் வினோத்தும் கொஞ்சம் படாதபாடுபட்டு அவனை காருக்குள் தள்ளினர்.

எந்த ஜென்மத்தில் அவர்கள் செய்த புண்ணியமோ ஆதவனின் கோபத்தில் எரியாமல் தப்பித்தனர்.

ஆதவன் நெருப்பே இல்லாமல் எரியாத குறையாக காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்க, நிலா அவனை பொருட்டாகவே மதிக்காமல் உர்ரென பின் அமர்ந்திருந்தாள். போகப் போக இவர்களை ஒரே காரில் கூட அலைத்துச் செல்ல முடியாது போலவே என நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அடுத்த கடையில் கார் நின்ற அடுத்த நொடியே ஆதவன் காரைவிட்டு இறங்கி எங்கோ சென்று மறைந்தான்.

ஹர்ஷன் வருவதற்குள்ளாக அங்கிருந்து விரைந்து வந்த ஆதவன் ஒரு இடத்தில் தடைப்பட்டு நிற்க அவன் முன் தன் அழகிய புன்னகையோடு நின்றிருந்தது அதே குழந்தை.

பசை வைத்து ஒட்டியது போல் ஆதவன் அந்த குழந்தையைப் பார்த்தபடி அங்கேயே நிற்க, அவனை கண்டு சிரித்த அந்த குழந்தை கொஞ்சம் நகர்ந்து சற்று தொலைவில் அப்போதே காரைவிட்டு இறங்கிய நிலாவைப் பார்த்தது.

மீண்டும் ஆதவனைப் பார்த்தவளின் புன்னகை மெல்ல மென்னகையானது.

" எங்ஙனம் கற்றுக் கொண்டாய் இவ்வாறு ஓடி ஒழிய? யான் அறிந்து இவை எதையும் நீ அறியாய், "

அந்த மெல்லிய குரல் தேனாய் சென்று அவன் உயிரைத் தீண்டி வர, கேசத்தை அழுந்த கோதிய ஆதவன் தன் கடைக்கண்ணால் தொலைவில் நின்ற நிலாவைப் பார்த்தான். ஆனால் பார்த்த வேகத்திற்கு மீண்டும் குழந்தையிடம் திரும்பியவன்

" நான் என்ன நிலமைல இருக்கேன்னு தெரிஞ்சும் நீங்க செய்றது சரி இல்ல... "

ஒற்றைப் புருவத்தை அழகாய் உயர்த்தி தன் ஆள்காட்டி விரலை தாடையில் வைத்து யோசிப்பது போல் அந்த குழந்தை பாவிக்க, இப்போது ஆதவன் அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

" என் வாழ்கை விளையாட்டா இருக்கா உங்களுக்கு? "

க்லுக்கென சிரித்த அப்பெண் குழந்தை தன் கரங்கள் இரண்டையும் முதுகுக்குப் பின்னே கட்டிக் கொண்டு மறுகேள்வி கேட்டது. " விளையாட்டா? எமது கதிர்மைந்தனின் வாழ்வு எவ்வாறு எமெக்கு விளையாட்டாகும்? "

" நீங்க செய்றதெல்லாம் பார்க்க அப்டி தான் இருக்கு, "

" நான் என் செய்தேன் என அறியேனே... என் ஆசைப் பிள்ளைக்கு அகம்நோகும்படி யான் ஏதும் செய்யவில்லையே, "

பெருமூச்சுவிட்ட ஆதவன் ஒரு ஓரமாக இருந்த திண்டில் சாய்ந்து அமர அந்த பெண் குழந்தையும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.

" நீங்க செய்றது சரியே இல்ல... எனக்கு இதெல்லாம் வேணாம் அம்மா... " ஒரு பெருமூச்சோடு ஒருவழியாக அக்குழந்தையை நேருக்கு நேராகப் பார்த்தான்.

" இதுவெனில்? உமக்கு யான் கொடுத்த உம் துணையாட்டி தான் வேண்டாமென நானே முடிவு செய்து கொள்ளட்டுமா? "

" தெரிஞ்சும் ஏன் அப்போ திரும்ப கேக்குறீங்க? நீங்க ஏன் இங்க வந்தீங்க மொதல்ல? "

பொய் அதிர்ச்சியோடு தன் வாயை பொத்திக் கொண்ட குழந்தை " எம் பிள்ளையை காண வந்தது யான் செய்த பிழையோ? பின் நீவிர் புரியும் பிழையை யார் சொல்லித் தருவதாம்? "

" நான் தப்பே செஞ்சிட்டுப் போறனே... என்ன இப்போ? "

அவன் அருகே நெருங்கி வந்து தன் குட்டி கரங்களால் அவன் கன்னங்கள் இரண்டையும் பிடித்து தன்னைப் பார்க்க வைத்த குழந்தை

" என் விழிகளை கண்டு கூறு... உமக்கு அவள் வேண்டாமா? "

அந்த மென்மையான தொடுகை ஆதவனின் உடலை லேசாக்க, ரணங்கள் பார்த்த அவன் இதயம் மெல்ல ஒரு அமைதியான நீரோடையாய் மாறியது.

" அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல் வினவுவதேன் அம்மா? இறை அருளின் விழிகளுக்கு உம் கதிர் மைந்தனின் காயம் கானலானதா? " ஆதவனின் விழி தாண்டிய ஒற்றைத் துளி கண்ணீர் அந்த குழந்தையின் விரல்களை தாண்டி மண்ணில் வீழ்ந்தது.

மேலும் கண்ணீரை அனுமதிக்காத அவன் விழிகளை துடைத்தது குழந்தையாய் வந்திருக்கும் அவனது இறைவியே...

" காயம் ஆற்றிட யான் தரும் மருந்தை மறுக்கும் எம் குழந்தைக்கு அதை புகட்டுவதும் தாயான என் கடமையானதே... பின் யான் அறிந்ததை நீயும் அறியவேண்டுமல்லவா? "

ஒரு குழந்தையை கொஞ்சுவது போல் அழகாய் சொன்ன இறைவி அவன் தலையை உயர்த்தி அன்பாய் அவன் நெற்றியில் முத்தம் பதித்தார்.

" உன் வலியை கண்டும் எவ்வாறு அமைதி காப்பேன் நான்? நின் என் ஆசைப் பிள்ளையல்லவா? "

ஆதவன் அமைதியாய் கண்களை மூடிக் கொள்ள, அவன் தலையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட இறைவி

" காலம் தாழ்த்தாது விரைந்து அன்னையிடம் ஓடி வா... காத்திருக்கிறேன், "

ஆதவன் மீண்டும் கண்களைத் திறந்த போது இறைவி அவன் கண் முன் இல்லை. விரக்திப் புன்னகை வீசிய ஆதவன்

" தாம் எம்மீது வைத்திருக்கும் அன்போ என்னவோ... மீண்டும் உம்மை மதியாமல் செல்லும் உம் மதிவேலனை பொருத்தருளும் அம்மா... "

ஆதவனின் புன்னகை மெல்ல மறைய, வலியை மறைத்த கோவம் அவன் கண்களை சிவக்கச் செய்தது. கண்ணுக்கெட்டிய பாதையில் அவன் நடக்க, அவன் வாழ்வை அறிந்த அவர்களின் அன்னையும் அவன் போக்கிலே அவனை அனுமதித்தார்.

இசை " நிலா... நீ அந்த அண்ணன ஏன் டி அப்டி திட்டுன? "

தரையை வெறித்துக் கொண்டிருந்த நிலா பதில் கொடுக்கவில்லை.

" உன்னோட இந்த சீரியல்ல வர்ர மாதிரி இருக்க மாமியார் ஃபமிலிய விட அந்த அண்ணன் நல்லவரா தான் டி தெரிஞ்சாரு, "

" அறிவிருக்கா டி உனக்கு? அந்த மனுஷன் மனுஷனே இல்ல... அண்ணனாம் அண்ணன்! நீ அவங்களுக்கு ஸப்போர்ட்டா பேசுறதா இருந்தா அவங்ககிட்டேயே போய் பேசு போ! நான் எங்கேயோப் போறேன், "

திடீரென கத்திய நிலா இசை பேயறைந்ததை போல் நின்றதை கூட கவனிக்காமல் விருவிருவென காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளுக்கு மேலும் மேலும் சரியான காரணமே தெரியாமல் கோபம் தலைக்கு மேல் ஏற ஏதோ ஒன்று அவள் கையை வேறு அரித்துக் கொண்டே இருந்தது.

எரிச்சலில் முதலில் கையை வேகமாக கார் சீட்டில் தேய்த்தவள் பின் திடீரென கையைத் திருப்பிப் பார்த்தாள்.

அவள் வலது பூறங்கை மனிக்கட்டில் இதுவரை அவள் பார்த்திடாத ஒரு அச்சு அவளைப் பார்த்து மிளிர்ந்தது.

அலையலையாய் அழலோடு மிளிர்ந்த செஞ்சூரியனின் அச்சு.

தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆதவன் திடீரென நின்று குனிந்து அவன் கையைப் பார்த்தான்.

அவன் இடது புறங்கை மனிக்கட்டில் வெண்பனி நிறத்தில் ஒளிர்ந்தது தேயும் பிறைநிலவு.

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro