Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆதவமதியின் சரித்திரம்: 11

அத்யாயம் 11: ஆதவமதியின் சரித்திரம்

மாயலோகத்தில் மஞ்சள் நிற கதிரவன் எழுந்து ஒரு சில மணி நேரங்கள் கடந்திருந்தது. அந்த மஞ்சள் கதிர்கள் ஒளிவேந்தர்களின் ராஜ்ஜியத்தை அழகாய் ஒளிமையமாக்க தன் வாழ்வின் மொத்த குழப்பத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு பச்சை பசேலென செழித்திருந்த மலை ஒன்றின் முகட்டில் இயற்கையோடு இயற்கையாய் எழும்பியிருந்த கோட்டையில் முளிக்க முளிக்க தன் முன் நின்றவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வான்மதி.

' யார் இவன்? எங்கேந்து வந்தான்? நான் எங்க இருக்கேன்? ஆமா இவனும் ஏன் ஓல்டு தமிழ் பேசுறான்... ஆஹா இன்னும் கனவு கலையலையா...? என்ன எழவு டா இது? ' என பலவாறாக அவள் குட்டி மூளை சிந்திக்க, அவள் முன் நின்ற அவனின் முகத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியிருந்தது.

சித்தேஷ்வர். அஸ்த்திரஞாலத்தின் சிம்மாசனத்திற்கு உரிமையானவன், கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் பாதிக்கும் மேலாக தியானத்தில் களித்துவிட்ட இறைவியின் அருள்வாக்கில் குறிப்பிடப்பட்ட அஸ்த்திரஞாலத்து ராஜ குடும்பத்தின் வாரிசு.

இவன் யாரென தெரியாமல் மதி அவனை பார்த்த மாத்திரமே எழுந்து நிற்க அவள் மடிமீதிருந்து ஒரு போர்வை கீழே விழுந்தது. அது கீழே விழுந்த ஒரு சில நொடிகளுக்கெல்லாம் குளிர்காற்று அவளை நெருங்கிய தோழி போல் ஓடி வந்து அணைத்துக் கொள்ள நடுங்கிப் போன மதிக்கு இந்த திடீர் வானிலை மாற்றம் புரியவில்லை.

ஆனால் பொருமையாக அவள் முன் வந்த சித்தேஷ் குனிந்து அந்த போர்வையை எடுத்து உரிமையாய் மதியின் தோள்களை சுற்றி போர்த்திவிட, அந்த போர்வையின் கதகதப்பு அவளை குளிரில் இருந்து காப்பாற்றியது.

" நான் சித்தேஷ்வர். "

மதி இன்னமும் புரியாமல் அவனை பார்த்துக் கொண்டிருக்க சித்தேஷ் அவள் விம்பத்தை அவன் கண்களுக்குள் நிறப்பிக் கொண்டிருந்தான்.

" எம் சகோதரன் தம்மிடம் என் கூறினான் என யான் அறிந்து கொள்ளலாமா? "

மதி இன்னமும் முளிப்பதை நிறுத்தாமல் அவனையே பார்த்திருக்க

" என் இளையவனின்  நாமம் ஹர்ஷவர்தேஷ்வரன் ஆகும். தாம் எனது இளவலை அறிவீர் தானே? "

ஹர்ஷனனின் பெயரை கேட்ட அடுத்த நொடி மதி மற்றதை மறந்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கொழுத்திவிட்ட தீபாவளி பட்டாசாய் வெடித்தாள்.

" ஏன் தெரியாம நல்லாத் தெரியுமே, அவன் தான் என்ன இங்க தூக்கீட்டு வந்தான்! எங்க அவன் இப்போ?! என்ன தம்பி வளத்து வச்சிருக்கீங்க நீங்க?! ஒரு பொம்பலப் புள்ளைய படிக்கிற காலேஜ்ல இருந்து தூக்கீட்டு வந்துருக்கான், நீங்க அவன என்னுன்னு கேக்காம என்கிட்ட அதுவும் அவனப் பத்தியே கேட்டுப் பேசீட்டு இருக்கீங்க?! "

ஆனால் அவளின் கதகளி ஆட்டத்தை இரண்டே கூற்றில் புஸ்மானாக்கினான் அந்த இளவரசன்.

" நன்று. யான் தான் தம்மை அழைத்து வரக் கூறியது. "

கப்சிப்பென வாயை மூடிக் கொண்ட மதி மேலும் அவள் கண்களை அகலமாக விரிக்க தன் தலையை சரித்து அவளை பார்த்தவன்

" தம்மை திடீரென அழைத்து வர வேண்டுமென்ற நியதியிலே இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று. எம் இளவலின் நடவடிக்கைக்கு யான் மன்னிப்பு வேண்டிக்கொள்கிறேன். குழந்தை மனம் கொண்ட இளமகனை பொருத்தருளும், "

" பனமரத்துல பாதி வளந்துருக்குற அந்த ஜுராசிக் விலங்கு குழந்தையா? என்ன என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? "

பொருத்துப் போனது போதும் பொங்கி எழு பெண்ணே என மதிக்கு பின்னே யாரோ பங்ரௌண் ம்யூசிக் போட்டது போல் அவள் பொரிந்து தள்ள, சித்தேஷ் அவளை அமைதியான பார்வை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான்.

" இப்டியே போஸ்ட் கம்பத்துக்கு அண்ணன் மாதிரி நின்னா என்னா அர்த்தம்? யாரு நீங்க? என்ன வேணும் உங்களுக்கு? "

" நீ தான் வேண்டும். "

இப்படி படாரென அணுகுண்டை தூக்கி மதியின் தலை மீது வீசிய சித்தேஷை அவள் விழி விரித்து நோக்க சித்தேஷ் எந்த முன்சிந்தனையும் இன்றி இன்னும் அவள் தலை மேல் இமைய மலையைத் தூக்கி வைத்தான்.

" யான் தமக்காய் பிறந்தவன். ஈராயிரத்தி ஐநூறு வருடங்களாய் தாம் எம் ஞாலத்தில் ஜீவிக்க வேண்டி காத்துக் கொண்டிருக்கிறேன். இது மாயலோகம். மாயலோகத்தின் தற்போதைய காவலன் நான். "

" என்ன? "

" மாயலோகத்தின் தற்போதைய காவலன் நான். "

விக்கித்து நின்ற மதி சித்தேஷைவிட்டு இரண்டடி பின்னே வைக்க திடீரென சற்று தன் கண்களை அவர்களை சுற்றி சுழலவிட்ட சித்தேஷ் மீண்டும் மதியைப் பார்த்தான்.

" என் இளவல்கள் தமக்கு எம் வரலாற்றை தெரிவித்தனரா? "

மதி பதில் கூறாமல் இன்னமும் பாதி கனவுலோகத்தில் தொலைந்த முயல்குட்டியாக அப்படியே நின்றிருந்தாள். அவள் அப்படியே நின்றிருந்ததால் அவனே தன் உரையை தொடர்ந்தான்.

" எம் இறைவி குறிப்பிட்ட அருள்வாக்கில் இடம்பெற்ற மதி நீ. உம் வரவை எதிர்நோக்கி இந்த மாயலோகம் ஈராயிரம் வருடங்களாய் காத்து நிற்கிறது... தாம் தற்போது இங்ஙனம் ஜீவித்ததை எம் மக்கள் அறியப்பெற்றால் அது உம் உயிருக்கே பேரிடராய் விழையும். "

ஏதோ கொண்டாட்டம் வைத்து கொண்டாடுவார்கள் என கூறுவான் என்று எதிர்பார்த்த மதி இவன் தூக்கி வீசிய அடுத்த அணுகுண்டிலும் அதிர்ந்தாள்.

" ஆனா...ஆனா எனக்கும் இந்த...இந்த உலகத்துக்கும் சம்மந்தமே இல்லையே... "

அவன் யார் என அறியும் வரை கதகளி ஆடிய அவள் அதரங்கள் அவன் அவளுக்கு யார் என அறிந்ததும் நடனம் மறந்த மழலை போலானது.

ஆனால் சித்தேஷின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

" தாம் கால மாய விசைக்குள் இருந்த போழ்து அக்குரலை கேட்டீர் அல்லவா? "

ஹர்ஷன் கேட்ட அதே கேள்வி. ஆனால் மதி இப்போதும் சரியான பதில் கொடுக்காமல் அப்படியே நிற்க

" தமக்கு கேட்டதென்று யான் அறிவேன். தம்மை கண்ட மாத்திரமே தாம் யார் எனவும் யான் அறிந்திருக்கும் போழ்து இன்னமும் தாம் அருள்வாக்கில் குறிப்பிடப்பட்ட என் மதி அல்ல என்ற சந்தேகம் தேவயல்ல. "

" ஆனா... ஆனா அந்த பொண்ணு... மிருவோட மடில இறந்துப் போன பொண்ணு நான் இல்லையே... அவ தான மதி?! "

மதியின் முகத்தில் அப்பட்டமாகவே பதட்டம் குடிகொள்ள சித்தேஷ் ஒரு நிமிடம் மௌனத்தை நீடித்தான்.

" தாம் அவள் இல்லை என எவ்வாறு கூறிகிறீர்களென யான் அறிந்து கொள்ளலாமா? "

ங என அவனைப் பார்த்தவள் மனதுக்குள்ளேயே அவனை அர்ச்சித்துக் கொண்டாள். ' என்ன பார்த்து சீரியசா தான் கேக்குறானா இந்த கேள்விய? அந்த பொண்ணு நானா இருந்தா இவன் எனக்காக பொறந்துருக்குற பட்சத்துல அவன் ஏன் என் டெடட்பாடிய புடிச்சு அழுவ போறான்?! இவன் தான அழுதருக்கனும்? '

" கூறும்... தாம் அவ்வாறு என்னுவதன் காரியம் யாதம்மா? "

" யோவ் மண்டூஸ் மண்டையா! அது நான் இல்ல அவ்ளோ தான்! நான் இரெண்டாயிரம் வருஷம் முன்னாடி என் அண்ணன் கூட பூமில பிக்னிக் போயிற்றுந்துருப்பேன்! உங்க கிரகத்துக்கு நான் வந்ததே கிடையாது! "

அசராமல் நின்ற சித்தேஷ் " யான் அறிந்தே தம் முன் நின்று கொண்டிருக்கிறேன். நீர் மாய விசையில் கண்ட அப்பெண்... தாம் குறிப்பிடும் மிருதேஷ்வரனின் மடியில் உயிரிழந்த அந்த பாவை தான் வெண்மதி. "

மதிக்கு உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது அந்த பெயரைக் கேட்டதும். அவள் ஆவென வாயைப் பிளக்காத குறையாக சித்தேஷைப் பார்த்திருக்க அவனே தொடர்ந்தான் பண்டைய காலத்திலே மறைந்த ஆதவமதியின் சரித்திரத்தை.

" மாலோகத்தின் முதல் காதல். முதல் காவல். ஆதியாய் தொடங்கி அந்தமாய் ஆன இருவரே ஆதவமதி. கதிரோனாய் ஆதவனும் சந்திரனாய் மதியும் இம்மாலோகத்தை காவல் காத்தனர். எதனிடமிருந்து காத்தனர் என்பதை அறியாத போதிலும் அவ்விருவரின் உயிரொளி தான் இம்மாலோகத்தை அண்டபிரபஞ்சத்தில் இருக்கும் பிற ஞாலங்கள் மற்றும் ஜீவிகளிடம் இருந்து காத்தது. சந்ததியினர் பிறள, எழுதப்படாத ஆதவமதியின் கதைகள் புராணமாய் மாறியதும் அப்படி இருவர் இம்மாயலோகத்தை காத்தனர் என்ற வரலாறு கானலாகியது. ஆயின் அஸ்த்திரஞாலம் மற்றும் அமரராஜ்ஜியம் என ஈராய் பிரிந்தும் அரசகுல குடும்பம் இரண்டும் ஆதவமதியின் சரித்திரத்தை மறக்கவில்லை. அவ்விருவரும் மீண்டும் இம்மாலோகத்தில் எங்கேனும் ஓர் பகுதியில் ஜனிக்க பல்லாயிரம் ஆண்டுகள் காத்து வந்தனர். யான் அஸ்த்திரஞாலத்தின் அரச வாரிசாக முழு அண்டத்தின் சக்தியைப் பெற்றுப் பிறந்தேன். என் பிறப்பிலே எமது ஒளியாகப் போகும் என்னவள் எமக்கு மாத்திரமல்லாது என் ஞாலத்திற்கும் மதியாவாள் என்ற விதி மொழியப்பட்டது. ஒரு சில வருடங்களிலே அந்த சரித்திரத்தின் பலனாக எழுந்த அசிரீரியின்படி ஆதவமதியின் பிறப்பும் ஈடேறியது. ஆனால் அவளவனுக்காக ஈராயிரம் ஆண்டுகள் முன் வெண்மதி தன் உயிரை தியாகம் செய்தாள். "

மதி தலையில் கை வைத்தபடி அந்த மெத்தையில் பொத்தென அமர, இமைக்க மறந்திருந்த அவள் கண்கள் தரையைவிட்டு சற்றும் அகலவில்லை.

" வான்மதி மற்றும் வெண்மதி. தாம் இருவரும் இறைவியின் ஒளிமகள்களாவீர்கள். "

" ஆனா...ஆனா இத்தன வர்ஷமும் இது ஏன் எனக்குத் தெரியல? ஏன் அண்ணன் என்ட்ட சொல்லவே இல்ல? இதெல்லாம்... இதெல்லாமே புதுசா இருக்கு! என் அண்ணனுக்கு தெரியாம இதெல்லாம் கண்டிப்பா நடந்துருக்காது... இல்ல ஏதோ ஒன்னு எங்கையோ தப்பா போயிருக்கு, "

மதி தனக்குத் தானே பேசிக் கொண்டு தலை முடியைப் பிய்த்துக் கொள்ள மீண்டும் சித்தேஷ் அவன் விழிகளை அந்த அறை முழுவதும் சுழலவிட்டான். அவன் கண்களுக்கு எட்டாத ஏதோ ஒன்று அவர்களை சுற்றி வளைத்திருப்பதாக அவன் உள்மனம் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தது.

ஆனால் அதற்கு பெரிதும் கவனம் கொடுக்காமல் அவன் மனதை வந்த சில வினாடிகளில் கொள்ளையடித்திருந்த அவனது ஒளியாளை நோக்கினான் அவன்.

" தாமே எங்ஙனம் ஜீவிக்கும் வரை தம்மை தொந்தரவு செய்ய விரும்பாமலே யான் தனித்திருந்தேன். ஆயின் மிருதேஷ்வரனின் எழுச்சியை யாமெவரும் எதிர்நோக்கவில்லை. இந்நாழியில் தமக்கு புவியிலோ அல்ல வேறெந்த ஞாலத்திலோ நான் நம்பும்படியான பாதுகாபில்லை. "

மதி புரியாமல் அதே நேரம் இவை அனைத்தோடு வந்த சோர்வுடன் பாவமாக அவனைப் பார்த்தாள். " எனக்கும் மிருக்கும் என்ன சம்மந்தம்? அவன் வெளிய வந்தது நல்லது தானே? பாவம் அவனே- "

" அழிவின் தொடக்கம். அவனுக்கு இந்த மாயலோகமே கொடுத்த நாமம் அது. மரணன். கேதவன். அசுரன். அரக்கன்... இவை அனைத்தும் அவன் பெற்றுக் கொண்ட நாமங்கள். தம்மை யான் காக்க நினைக்கும் பேரிடரே அவன் தான். வெண்மதிக்காக உயிரையும் குடிக்கும் அந்த நிழல்வேந்தன் இந்த மாயலோகத்திற்கு மட்டுமல்ல மொத்த மாலோகங்களுக்கும் அதன் ஒளியான தமக்கும் மரணத்தின் மாயன். "

இப்படி பலவாறு பெயர்கள் பெற்ற மிருதேஷ்வரனின் வரலாறு மதியின் மனதை உலுக்க அவனுக்கு பாவம் பார்த்ததற்கு அவள் மனசாட்சி அவளையே கேள்வி கேட்டது. அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனவளுக்கு மூளையை கலட்டி கீழே வைத்திடலாமா என்று தான் இருந்தது.

" ஆனா ஏன்... ஏன்? அந்த...அந்த அருள்வாக்குல வந்த நிழல்வேந்தன் மிரு தான? எதனால அவன்...அவன்... "

அவளுக்கு அதரங்கள் வார்த்தைகளை வெளியிட தடைவிக்க, உடல் நடுக்கத்தால் தன்னை சுற்றி இருந்த போர்வையை இருக்கிக் கொண்ட மதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

சித்தேஷ் அவளை நெருங்கி வந்து அந்த போர்வையை மதிக்கு சரியாக போர்த்திவிட அவன் தொடுகையில் மேலும் சிலிர்த்துப் போனாள் அவள். இன்னமும் தரையையே வெறித்துக் கொண்டிருந்த பெண்ணின் தாடையை தன் விரல் கொண்டு உயர்த்திய அந்த இளவரசன் அவள் அழகிய வதனத்தில் தவழ்ந்த கேசத்தை மறுகரத்தால் மென்மையாய் கோதிவிட்டு

" யான் அருகில் இருக்கும் வரை தமக்கு எத்தீங்கும் விழையாது. புரிந்ததா? தாம் சற்று பொருமை காத்து யான் கூற வரும் அனைத்தையும் செவிமடுத்தால் மேலும் நான் தொடர்வேன்... சரியா? "

அவன் சிகப்பு விழிகளுள் கட்டுண்ட மதி அவளை அவன் புறமாக இழுக்கும் அந்த மாயத்திற்குள் விரும்பியே தொலைந்து மந்திரத்திற்கு கட்டுப்பட்ட பாவையாய் தலையசைத்தாள்.

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro