Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

23

அடுத்த நாள் காலை அனைவருக்கும் இனிமையானதாய் விடிய விஷாகனிற்கோ நரகமாய் விடிந்தது. ஆம் இன்று அவர்கள் குறிப்பிட்ட அந்த பௌர்ணமி ,இன்று அவனின் தவப்புதல்விகள் இருவரையும் அவன் கைகளாலேயே அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வரவேண்டும் .எந்த ஒரு தகப்பனிற்கும் வரக்கூடாத நிலை தான் பெற்ற பிள்ளையின் மரணநாளை அறிந்தே அவர்களிற்கு பிறப்பை கொடுப்பதென்பது. எனில் விஷாகன் இன்று அந்த நிலைமையில் தான் இருந்தான் .

தன் மகள்களையே பார்த்துக்கொண்டிருந்தவனின் நினைவடுக்குகள் பின்னோக்கி சென்றது .நாகநேயனிற்கு இரு புதல்வர்கள் முதலாமவன் நாகநேயனிற்கு தப்பாது பிறந்தவன் பெயர் நீலகாந்தன். சம்ஹித்த வம்சத்தின் சிம்மசொப்பனம் அவனே. அவனை கண்டால் எந்த கோர அரக்கனும் பயந்து போவான் அத்தனை கொடூரம் நிறைந்தவன் மாந்திரீகத்தில் தலை சிறந்தவன் ,ஆருத்ராவிற்கு இப்படி ஒரு கண்டம் உள்ளதென்பதை ஆதவக்குலத்தில் ஒருவரும் அறியார் எனில் அவளின் ஜென்ம ஜாதகத்தை வைத்து இத்தகைய புதைகுழி ஒளிந்திருப்பதை கணித்து அதற்காக காய் நகர்த்த துவங்கியவன் அவனே .

அவனை விட பத்து வயது இளையவன் விஷாகன் அந்த குலத்தவர்கள் மூர்க்கம் சற்று இருந்தாலும் வெளியுலகத்திலேயே உறவாடியதாலோ அவனின் அன்னையின் மென்மை குணத்தாலோ இயற்கையிலேயே நல்லவன் அவன் .ஆருத்ராவின் ஜாதகப்படி ஆதவகுலத்தை சேர்ந்த அவளிற்கு சம்ஹித்த வம்சத்தை சேர்ந்த ஒருவனுடன் திருமணம் நிகழ்ந்து வாரிசுகள் உருவானால் அவளின் தெய்வ சக்திகள் மொத்தமும் பறிபோய் மாந்த்ரீகத்தை சுத்தமாய் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவாள் .எனில் அவளின் சக்திகளை விட இருமடங்கு சக்திகளை பெற்றதாய் அவளின் மகவுகள் இருக்கும் .

எனில் சம்ஹித்த வம்சத்தவன் என்று தெரிந்தாலே ஆதவக்குலத்தவர் வெறுப்பெனும் தீயை உமிழ நேர்வழியில் இதை சாதிக்க முயல்வதென்பது கண்ணை கட்டிக்கொண்டே அடர்ந்த காட்டிலிருந்து வெளியே வர வழிதேடுவதற்கு சமமாகும். எனவே விஷாகனை சம்ஹித்த வம்சத்தவன் என்று யாரும் கண்டுகொள்ளாது இருக்க அவனின் அடையாளத்தை மறைக்க ஒரு மகாயாகம் செய்தான். அதில் அவனது மொத்த சக்திகளும் விரயமானது .

இன்றளவும் விஷாகனின் அண்ணன் சக்திகள் அற்று ஒரு சாமான்ய மானுடனாய் தான் இருக்கின்றான் அவனிற்கு அவன் இழந்த சக்திகளும் இந்த உலகையே ஆளும் அளவிற்கான சக்தியும் ஆருத்ராவிற்கு பிறக்கும் மகவுகளை இந்த பௌர்ணமி அன்று பலியிடுவதால் கிடைக்கும் .

இவை அனைத்தும் அறிந்தே ஆருத்ராவை போலியாய் காதலிப்பதாக அவளின் கல்லூரியிலேயே அவள் எடுத்த மருத்துவதையே தேர்ந்தெடுத்து சேர்ந்தான் விஷாகன் தனக்கு அன்னை தந்தை யாரும் இல்லை என்ற பொய்யோடு .அவளிற்காக அவன் விரித்த காதல் வலையில் ஆருத்ராவும் சிக்கினால் எனில் அதில் அவனே எதிர்பாரா ஒன்று ஆருத்ராவின் தூய அன்பிலும் குணத்திலும் தன்னையே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் சாய்ந்தவன் சிறிது காலங்களிலேயே அவள் இன்றி அவன் இல்லை என்னும் நிலைக்கு அவளை தன் உயிராய் நேசிக்க துவங்கினான் .

இதை அறிந்த அவனின் தந்தையும் தமயனும் அவனை விளித்து வசவுமொழிகளால் விலாச அவன் சொன்ன ஒரே பதில் "உங்களிற்கு தேவையானது அவளிற்கு பிறக்கும் குழந்தைகள் தானே? என் குழந்தைகளை என் கையாலேயே உங்களிடம் வந்து ஒப்படைக்கிறேன் பலி இட்டுக்கொள்ளுங்கள் எனில் என் மனைவியின் மேல் ஒரு சிறு கீறல் விழுந்தாலும் என்னால் அதை ஏற்க முடியாது "என்று உறுதியாய் கூறிவிட விஷாகனின் தந்தைக்கோ ஆருத்ராவின் மேல் உள்ள வன்மம் மேலும் காட்டு தீயாய் தகித்தது.

தன் சொல்லை மீறாத தன் புதல்வனை தன்னையே எதிர்க்கும் படி செய்துவிட்டாள் என்று எனில் சக்திகள் திரும்பும் வரை அவனை மீறி ஏதும் செய்ய முடியாதென்பதால் அமைதியாகிவிட்டார் .அந்த நொடி தன் காதல் மனைவியை காப்பதற்க்க்காக அவன் அளித்த வாக்கு இன்று அவன் நெஞ்சையே பெரும் பாரமாய் அழுத்தியது "எந்த தைரியத்தில் நான் பெற்ற பிள்ளைகளை பலி இட நானே வந்து ஒப்படைக்கிறேன் என்று கூறினேன்? என் உயிரல்லவா இவர்கள் ?என் தந்தைக்கும் இவர்கள் பேத்திகள் அல்லவா அவர்களின் ரத்தம் தானே என் மகள்களும்? தமையனின் புதல்வனிற்கு அமுதையும் என் புதல்விகளுக்கு நஞ்சையும் வார்க்கிறார்களே. அனைத்தும் அறிந்தும் கையாலாகாதவனாய் என் புதல்விகளை காக்க இயலாதவனாய் நிற்கிறேன் இறைவா .

என்னவள் எம் மகள்களின் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். தினம் அவர்களின் முகம் கண்டு எழாவிட்டால் பித்து பிடித்தவள் போல் துடிப்பாளே அவர்களின் சிரசு துண்டிக்கப்படும் காட்சியை எங்கனம் தங்குவாள்? என்னால் தான் என் மகள்கள் உயிரை துறந்தபின் இவ்வுலகில் வாழ இயலுமா ?ஏன் இறைவா என்னை படைத்தாய் "என்று மனதிற்குள்ளேயே புழுங்கியவன் தன் இருமகள்களையும் தன் மார்போடு அணைத்தவாறு அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே படுத்திருந்தான் ஆதவன் உதித்தபின்னும் அவன் பார்வையை விளக்கினான் இல்லை .

சூரியனின் ஒளிக்கதிர்கள் தந்த சுரணையில் ஆருத்ரா தன் கண்களை பிரித்து பார்க்க அவள் எழப்போகிறாள் என்பதை உணர்ந்த விஷாகன் தான் விழித்திருப்பதை பார்த்தால் மேலும் கேள்விகளால் துளைப்பாள் என்று தன் கண்களை மூடிக்கொண்டான் .

கண்களை கசக்கி எழுந்தமர்ந்தவள் விஷாகனின் இருதோள்களில் ஆராதனாவும் ஆதிராவும் நிர்ச்சலனமாய் உறங்கிக்கொண்டிருப்பதை ரசித்துப்பார்த்தவள் மூவரின் தலையையும் வருடிவிட்டு மூவருக்கும் நெற்றியில் இதழ் பதித்தவள் தன் காலைக்கடன்களை முடிக்க சென்றுவிட அவள் முத்தமிட்ட ஸ்பரிசத்தில் லேசாய் அவன் தோள்களிலேயே ஆராதனாவும் ஆதிராவும் சினுங்க இருவரையும் தட்டி கொடுத்த விஷாகன் கண்ணீர் மல்க இருவரையும் பார்த்து

"லவ் யு டா குட்டிமா "என்க

இருவரும் தூக்க கலக்கத்திலேயே "லவ் யு அப்பு "என்று அவனை மேலும் ஒன்றி படுத்துக்கொண்டனர்.

கீழுதட்டை கடித்து தன் துக்கத்தை கட்டுப்படுத்தியவன் நிறைவேறாதது என்று நினைத்து கடவுளிடம் வேண்டினான் "ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்த்தி என் பிள்ளைகளையம் என் மனைவியையும் காத்து விடு இறைவா என் உயிரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் "என்று வேண்ட இறைவனின் காதில் இவனது பிரார்த்தனை சேர்ந்ததா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

பின் இன்றைய பூஜைக்காக அனைவரும் எழுந்து தயாராக தனது புதல்விகளுக்கு தானே குளிப்பாட்டி தலைவாரி உடை அணிவித்து உணவூட்டி என்றுஅனைத்தையும் தானே பார்த்து பார்த்து செய்தான் விஷாகன் .

அவன் இருவருக்கும் தோட்டத்தில் போக்கு காட்டிக்கொண்டே உணவூட்டுவதை பார்த்து அருகில் வந்த ஆருத்ரா "என்ன புருஷன் அவர்களே பொண்ணுங்க மேல பாசம் வழுக்கிகிட்டு ஓடுது நா சும்மா நாளுல ஊட்ட சொன்னாலே ஓட விடுவாளுங்கன்னு ஊட்ட மாடீங்க இன்னிக்கு விழுந்து விழுந்து கவனிக்குறீங்க வாட் இஸ் த மேட்டர் ?"என்க

அவனோ "இன்னைக்கு தான நா கடைசியா என் பிள்ளைங்களுக்கு செய்ய முடியும் "என்று மனதில் நினைத்தவன் வெளியே தன் வேதனையை மறைத்து "என்ன பொண்டாட்டி அவர்களே உங்க பேச்சுல லைட்டாக பொறாமை எட்டி பாக்குற மாறி இருக்கே ?"என்க அவளோ கண்டுகொண்டான் என்று அசடு வழிய சிரித்தவள் ஈ என்று இளித்து வைக்க அவளின் தலையில் லேசாய் தன் நெற்றி கொண்டு முட்டியவன் பின் அவளிற்கும் சேர்த்து ஊட்டிவிட துவங்கினான் .

அன்று பௌர்ணமியாதலால் இரவில் மகாபாரதத்தையும் புராண கதைகளையும் நாடகங்களாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு வேடம் பூண்டு நடிப்பர்.இன்றைய நாடகத்திற்கு ஆராதனா ஆதிரா இருவரும் மிகவும் சிறிய குழந்தைகளாதலால் ராதா வேஷம் போட்டுக்கொண்டு அங்கேயும் இங்கேயும் திரிந்துகொண்டிருக்க ஆதேஷும் அருள்மொழிவேந்தனும் ஆதிராவின் பின்னும் ஆராதனாவின் பின்னும் திரிந்து கொண்டிருந்தனர்.

அவர்களை தயார் செய்த ஆருத்ரா நாள்வரையும் நெட்டி முறித்து"அப்பா எனது செல்வங்கள் நால்வரும் அந்த ராதையயும் க்ரிஷ்ணனையும் போலவே உள்ளீர்கள் என்றவள் பின் நெற்றிச்சுட்டியை கடைசியாய் வைக்க போக ஒன்றோ அறுந்திருந்தது .

ஐயோ என்று அவள் பார்க்க ஆராதனை "என்னாச்சும்மா ?"என்க

ஆருத்ரா "நெற்றிச்சுட்டி அறுந்துவிட்டதடா நான் இன்னொன்று எடுத்து வைக்கவில்லையே "என்க

ஆதிராவோ "அம்மா அக்கா வச்சுக்கட்டும்மா "என்க

ஆராதனாவோ "அம்மா வேணாம் ஆதி வச்சுக்கட்டும் "என்க இவ்வாறே மாறி மாறி இருவரும் யார் வைப்பது என்று சண்டை இட

அங்கே நடுவில் வந்த அருள்மொழி வேந்தன் "இப்பொழுது என்ன இருவரில் யார் இதை வைக்கவேண்டும் என்பது தானே பிரெச்சனை ?"என்க

இருவரும் தலையை ஆட்ட ஆதேஷ் ஆருத்ராவிடம் நன்றாக இருந்த நெற்றிச்சுட்டியை வாங்கியவன் "இது இருந்தால் தானே பிரச்னை "என்று அதையும் இருவரும் சேர்ந்து அறுத்தெறிய அதை கண்டு திகைத்த இரு வாண்டுகளும் "அத்தான்ன்ன்ன் ......."என்று கத்தியவாறே இருவரையும் அடிக்க தத்தகாபெத்தக்காவென்று துரத்தி செல்ல நால்வரையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் மற்றவர்கள் .அதன் பின் ஆராதனாவும் ஆதிராவும் ஆதேஷ் அருள் மொழி வேந்தனின் பாதுக்குக்காப்பில் உள்ளனர் என்று அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்ற கவலை இன்றி நாடகங்கள் காண்பதிலும் அரட்டை அடிப்பதிலும்  இருந்துவிட்டனர் .

பின் அனைத்தும் ஆடி அடங்க ஆதிராவையும் ஆராதனாவையும் அதுவரை தேடாமல் இருந்தவர்கள் எங்கே என்று தேட இருவரும் இவரின் கண்களிலும் படவில்லை .முதலில் சற்று சாவகாசமாய் தேடியவர்கள் பின் ஆதேஷ் அருள்மொழி இருவரையும் சேர்த்து காணவில்லை என்றதும் பதறி போய் தேட ஆரம்பிக்க வீடு முழுதும் தேடியும் நால்வரையும் காணவில்லை .இவர்கள் இங்கே பதற்றதோடு குழந்தைகளை தேடிக்கொண்டிருக்க விஷாகனோ ஒரு கையில் கொள்ளிக்கட்டையை வெளிச்சத்திற்காகவும் இரு தோள்களிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதிராவையும் ஆராதனாவையும் கண்ணீர் வழியும் கண்களோடு தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தான் .

நெடிய பயணத்திற்கு பின் இருள் முழுதும் சூழ்ந்து முழுமதியின் வெளிச்சம் ஆங்காங்கே சிறு ஒளிச்சிதறல்களாய் கசிந்தபடி இருக்க அங்கே ஓர் இடத்தில் தன் முன்னே ஆபத்தான ஓர் கொடிய மிருகத்தின் கோர பற்கள் தன்னுள் வருபவர்களை விழுங்குவதை போல் அமைந்திருந்த குகைக்குள் செல்லுமுன் சற்று தாமதித்தால் விஷாகான் தன் கையிலிருந்த கொள்ளிக்கட்டையை கீழே வைத்தவன் கீழே மடிந்தமர்ந்து தன் இருமகள்களையும் கடைசியில் ஒரு முறை பார்ப்பதற்காக அந்த வெளிச்சத்தில் இருவரையும் இரு கைகளில் வைத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான் .

பால் மனம் மாறாது ஆழ்ந்த உறக்கத்தில் இருவரும் இருக்க குண்டு கன்னங்கள் கண்களில் மை தீட்டி இருக்க அணிந்திருந்த ராதையின் வேஷத்தை கூட கலைக்காது இருந்தனர். இருவரின் கன்னத்தையும் வருடி கண்ணீரோடு முத்தமிட்டவன் "எ...... என்ன மன்னிச்சுருங்கடா குட்டிமா .அ......அப்பாக்கு வேற வழி தெரிலடா அப்பாவை மன்னிச்சுருங்கடா .அப்பா உங்கள காப்பாத்த என்னால முடுஞ்ச எல்லா வழியையும் முயற்சி பண்ணேன்டா ஆனா முடிலடா உங்க உயிரை காப்பாத்துனா உன் அம்மாவை கொன்னுருவாங்க நா யாரடா காப்பாத்துறது ?என் உயிர்ல உதிச்ச ஒரே பாவத்துக்காக உங்கள பலி குடுக்க போறாங்கடா "என்றவன் அவர்களை அணைத்துக்கொண்டு கதறி அழ திடீரென்று இரு குழந்தைகளும் அவன் கைகளிலிருந்து பறிக்கப்பட்டனர்அவன் திடுக்கிட்டு நிமிர அங்கே இருபுறமும் ஏளனமாய் சிரித்தபடி நின்றிருந்தனர் அவனின் தந்தையும் அண்ணனும் .

இருவரின் ஒற்றை கையை பிடித்தவாறு அவர்கள் தூக்கி இருக்க அதை கண்டு பதறியவன் "ஐயோ தந்தையே தமையனே ஏன் இப்படி தூக்கி இருக்கிறீர்கள் கை நோவும் தயை கூர்ந்து சரியாக பிடியுங்கள் "என்க

அவனின் அண்ணனோ ஏளனமாய் அவ்விடமே அதிரும் படி சிரித்தவன் "ஹாஹாஹாஹா என்ன இளவனே இன்னும் சற்று நேரத்தில் தலை வேறாய் உடல் வேறாய் பிரியப்போகும் உயிருக்கு கை நோவது பெரும் பிழையோ "என்க

அவர்களை அடிபட்ட பார்வை பார்த்தவன் கடைசி முறையாய் "உங்களை கடைசி முறையாய் யாசிக்கிறேன் தயை கூர்ந்து என் குழந்தைகளை விட்டுவிடுங்கள் இவர்களும் உங்கள் ரத்தம் தானே உங்கள் கண்களிற்கே எட்டாத தூரத்திற்கு சென்று விடுகிறோம் என் உயிரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் "என்க

அவனை ஓங்கி மிதித்தான் அவனின் அண்ணன் "என்ன பெத்த பாசம் பொங்குகின்றதோ ?உன் உயிராம் உன் குழந்தையாம் எங்கள் ரத்தமாம் .நம் எதிரிகுலத்தவளோடு உனக்கு பிறந்த இவை எம்மை பொறுத்தவரை வெறும் சதை பிண்டங்கள் தான் ."என்றவன் முழுமதி மேகக்கூடத்திலிருந்து வெளிவந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வெளிச்சத்தை கொடுக்க அதை கண்டு ஓர் வெற்றி புன்னகை செய்தவன் விஷாகனிடம் திரும்பி "ம்ம் பூஜைக்கான வேளை நெருங்கி விட்டது இங்கிருந்து சென்றுவிடு இல்லை...... உன் உயிர்கள் இரண்டும் துடிதுடித்து இறப்பதை கண்டு களித்துவிட்டு செல்கிறாயா ?"என்று கேட்டுவிட்டு அவனும் அவனின் தந்தையும் சிரிக்க இருவரையும் வெறுப்பு நிறைந்த அடிபட்ட பார்வை பார்த்தவன் கடைசி முறையாய் இரு குழந்தைகளும் பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான் .

அவன் அவ்விடம் விட்டு அகல இரு குழந்தைகளையும் வெறியுடன் பார்த்த நாகநேயனும் நீலகாந்தனும் இருவரையும் உள்ளே எடுத்து சென்று பலி பீடத்தில் படுக்கவைத்தவர்கள் சில பல மந்திரங்களை ஓதியவாறு அருகில் இருந்த வாளை ஆளிற்கொன்றாய் எடுத்தவர்கள் முழுமதி அவர்களின் உடலில் படும் நேரம் கழுத்தில் குறிபார்த்து வெட்ட இருவர் முகத்திலும் ரத்தம் தெளித்தது .

அதை கண்மூடி ரசித்தவர்கள் கண்களை திறக்க தன் எதிரே இருந்தவையே கண்டு மொத்தமாய் அதிர்ந்தனர் ஏனெனில் அங்கே ஆதிராவிற்கும் ஆராதனாவிற்கும் பதில் இரு குட்டி ஆடுகள் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தன .தன் கண்ணையே கசக்கிக்கொண்டு பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் அங்கே ஆட்டுக்குட்டிகளே இருக்க எப்படி இது நடந்தது என்று புரியாமல் அங்கும் இங்கும் பார்க்க பௌர்ணமி முடிந்து ஆதவன் கிழக்கு திசையில் உதயமாகி இருந்தான் .முடிந்தது அவர்கள் இத்தனை காலமாய் கண்டு வைத்திருந்த கனவு கோட்டை அனைத்தும் சுக்கு நூறாய் உடைய கனவுகள் களைந்து சக்திகள் இழந்த ஆத்திரத்தில் பெருங்குரலெடுத்து அக்காடே அதிருமளவு கத்தினான் .

அங்கிருந்து விஷாகன் அகன்று கால் போன போக்கில் ஏதோ உயிரற்ற ஜடமாய் நடந்து சென்றவன் எப்படியோ அரண்மனைக்கு ஓய்ந்த தோற்றமாய் வந்து சேர்ந்தவன் அங்கே வரவேற்பறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தவன் கண்களை மூடி பின்னிருக்கையில் சாய சிறுவயதிலிருந்து அவனின் புதல்விகள் செய்த சேட்டைகள் அனைத்தும் ஞாபகம் வந்தவனை இம்சித்தது .

முதல் முதலில் அவன் கையில் இரு ரோஜா பந்துகளை போல் குட்டி குட்டியாய் இருந்த அவர்களை ஏந்தியது,இருவருக்கும் முதல் வார்த்தை அம்மா என்பதற்கு பதில் அப்பா என்றே சொல்லியது ,நடக்க ஆரம்பிக்கும் வயதில் தத்தகாபெத்தக்காவென்று நடந்து வீட்டிற்கு அவன் வந்தபின் அவன் எங்கு சென்றாலும் பின்னேயே சுற்றியது ,இருவரையும் தோளில் இருபுறமும் வைத்துக்கொண்டு ஊர் சுற்றியது ,அவனிற்கு அலங்காரம் செய்கிறேன் என்று அவன் முடியை இருவரும் பிய்த்தெடுத்து போட்டு வைத்து பவுடர் அடித்தென்று அவனை அலங்காரப்படுத்திவிட்டு கை தட்டி சிரிக்க இருவரையும் அள்ளி எடுத்து கொஞ்சியது ,ஒவ்வொரு நாளும் இருவரையும் ஒரு புற தோளிலும் ஆருத்ராவை மறுதோளிலும் வைத்தவாறு தூங்கியதென்று ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அவனை வாட்டி வதைக்க கண்ணில் வஞ்சனை இன்றி கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது .அப்படியே தலை சாய்ந்து அமர்ந்திருந்தவனின் இரு கன்னத்திலும் இரு தளிர் கரங்கள் படர கண்ணை திறந்து பார்த்தவன் வெகுவாய் அதிர்ந்தான்.

அவனின் உயிர்கள் இரண்டும் ரத்தமும் சதையுமாய் அவன் முன் அவன் இருபுறமும் நின்றவாறு அவனையே உத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் .

ஆனந்த அதிர்ச்சியாய் அவன் கண்களை கசக்கி பார்க்க ஆதிராவோ "அப்பு என்னாச்சு கண்ணு கலங்கிருக்கு தூசி போயிருச்சா ?"என்க

ஆராதனாவோ "அச்சோ அப்பு கண்ண காட்டு நா ஊதுறேன்"என்று ஒருபுறக்கண்ணை அவள் பிஞ்சு விரல்களால் விரித்து ஊத உணர்ச்சிப்பிடியில் சிக்கியவன் தன் கண்ணையே நம்ப இயலாது இருவரையும் இருபுறக்கைகளாலும் அணைத்துக்கொண்டவன் மாறி மாறி முத்தமழை பொழிந்தவன் நேரே பார்க்க அங்கே அவன் மனையாள் கையில் கோப்பையுடன் அவளின் மந்தகாச சிரிப்புடன் அவனை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள் .

மனதில் அளவில்லாத மகிழ்ச்சியையும் தாண்டி இவை எப்படி நிகழ்ந்தது என்ற கேள்வியும் அவனிற்கு எழ

அதற்கான பதிலை அடுத்த பதிவில் காண்போம் .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro