19
மங்கலாபுரி இன்று போல் அல்லாது இந்த காட்டுப்பகுதியையும் மற்றொரு புறத்தில் இருந்த அரண்மனையையும் சேர்த்து பறந்து விரிந்த ராஜ்யமாக இருந்த ஓர் அழகிய ராஜ்ஜியம் .
மக்களின் மகிழ்ச்சிக்கு என்றுமே பஞ்சம் இருந்ததே இல்லை.என்ன தான் நாட்டில் ராஜாக்களின் ஆட்சிகள் முடிவிற்கு வந்து அரசாங்கம் மக்களாட்சி என்று புதுமைகள் வந்தாலும் ஆதவக்குலத்து தோன்றல்களாய் வழிவழியாய் ஆட்சிசெய்பவர்களையே தமது தலைவர்களாய் ஏற்று அவர்கள் ஆட்சிக்குட்பட்டு வாழ்ந்து வந்தனர் அவ்வூர் மக்கள்.
அவர்களை அழைக்கும் விதம் அரசரிலிருந்து மாறி பிரபு என்றாகி இருக்கலாம் எனில் மக்கள் அவர்களை காணும் பார்வை என்றுமே மாறியதில்லை .ஆதவகுலத்தில் பிறந்தவர்கள் பெயரிற்கேற்றாற்போல் சுட்டெரிக்கும் சூரியனைப்போன்றவர்கள்.
அவர்களின் குலத்தவர்கள் இறைவனிற்காக எண்ணற்ற தொண்டுகள் செய்து வரலாற்றில் இன்றியமையா இடத்தை பெற்றவர்கள் .அவர்களின் குலத்தில் பிறந்தவர்கள் சிலர் படிப்பு வேலை என்று நகரத்திற்கு சென்றாலும் பெரும்பாலானோர் அந்த காட்டில் அவர்களின் அரசரின் ஆட்சியில் இன்றும் போர்பயிற்சிகள்,மாந்திரீகங்கள், யாகங்கள் என்று பழமையான வாழ்வையே வாழ்ந்துவந்தனர்.
ஆதவகுலத்தையும் மங்கலாபுரியையும் ஆளும் அரச வம்சத்தவர்களோ மாந்திரீகத்தில்,வீரத்தில்,கலைகளில் நற்பண்புகளில், பழக்கத்தில் என்று அனைத்திலும் சிறந்து விளங்கினர்.
எனில் அறுபது சந்ததிகளாய் அவர்கள் குளத்தில் பெண் சிசு இல்லவே இல்லை .ஆதவகுலத்தின் ராஜவம்சத்தவர் என்றும் திருமண பந்தம் வைத்துக்கொள்வது அவர்களைப்போன்றே அருகில் இருக்கும் ராஜ்யத்தை ஆளும் கார்மேக வம்சத்தவரிடம் தான்.
இப்படி நன்மைகள் மட்டுமே நிறைந்திருக்கும் ஆதவக்குலத்தின் எதிரி வம்சமாய் இருந்தவர்கள் சம்ஹித்த வம்சத்தவர் .பில்லி சூனியங்களில் தேர்ந்தவர்கள் .தெய்வத்தை எதிர்க்கும் தீய சக்திகளையும் ஆராதிப்பவர்கள்.உலகத்தில் தெய்வ சக்தியை அழித்து மக்களை துன்புறுத்த அனைத்து வழிகளையும் மேற்கொள்பவர்கள்.
இவ்விரு குலத்தவர்களுக்கும் போர் மூள்வதென்பது மிகச்சாதாரண விஷயமாகும்.அப்படி ஒரு திடீர் தாக்குதலில் பரிதாபமாய் நிறைமாத கர்பிணியும் ஆதேஷின் தந்தையுமான வந்தியத்தேவரின் அன்னையான கற்பகாம்பாள் இறந்து போக நிறைந்த பௌர்ணமியில் அறுநூறு வருடங்களுக்கு ஒருமுறை சிவன் பார்வதியின் மொத்த சக்திகளும் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இறந்த ராணியின் சடலத்தில் இருந்து ஒரு நாழிகைக்கு பின் உயிருடன் அறுத்து எடுக்கப்பட்டு அதிசயக்குழந்தையாய் தெய்வ அம்சங்கள் நிறையப்பெற்று பிறந்தார் ஆதிரா மற்றும் ஆராதனாவின் அன்னையும் ஆதவக்குலத்தின் பெண் தெய்வமுமாய் மதிக்கப்பட்ட ஆருத்ரா தேவி .
பிறப்பிலேயே கையில் சூல ரேகை கொண்டு ஜெனித்தவர். இக்குலத்திலேயே அதிகபட்ச மாந்த்ரீக சக்தியை பெற்றவர் .எதிர்க்கும் ஒரு பலம்பொருந்திய மதயானையையும் இரு அடிகளில் வீழ்த்தக்கூடிய பலசாலி .அவர் பிறந்தது முதல் சம்ஹித்த வம்சத்தவரால் ஆதவகுலத்தவரின் ஒற்றை உயிரை கூட அசைக்க முடியவில்லை.ஒரு முறை அவர்கள் தொடுத்த தாக்குதலின் பொழுது எட்டே வயதான ஆருத்ராவின் கையால் அக்குலத்தலைவனின் கைகள் துண்டிக்கப்பட அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.இவ்வாறு அக்குலத்தின் சிம்ம சொப்பனமாக விளங்கினார் ஆருத்ரா தேவி .
பிறக்குமுன்னே தாய் இறந்து போக அவர் பிறந்து அடுத்த ஐந்து வருடத்தில் மனைவியை பிரிந்த சோகத்தில் தந்தையும் இறந்து போக அண்ணன் வந்தியத்தேவனோ ஆருத்ராவின் தாயுமானவராய் மாறிப்போனார்.
வந்தியத்தேவனின் உயிரே ஆருத்திரா தான்.வருடங்களும் உருண்டோட வந்தியத்தேவனிற்கு கார்மேக வம்சத்தின் தோன்றல் வானமாதேவியுடன் திருமணம் முடிந்து அருள்மொழித்தேவனும் ,
ஆதேஸ்வரனும் பிறந்திருக்க அருள்மொழிவேந்தன் இங்கே இருந்து மாந்திரீகங்களையும் போர்கலைகளையும் கற்றுக்கொள்ள ஆதேஸ்வரனை பள்ளிக்கனுப்பும் முடிவுடன் இருந்தனர்.
இது அவர்கள் குலத்தில் வழக்கமான ஒன்றே இரு குழந்தைகள் இருந்தால் அவற்றில் ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி புதிய வழி கல்வியைகற்க வைத்து ராஜ்யத்தில் புதியவையை கொண்டுவரவும் இன்னொரு குழந்தையை பழம் முறையான குருகுல கல்வியில் ராஜ்யத்தை நிர்வகிக்க வேண்டியும் சேர்த்துவிடுவர்.
அந்த முறைப்படி வந்தியத்தேவன் இங்கே இருந்துவிட ஆருத்ரா வெளியே சென்று பள்ளிப்படிப்பை முடித்தவர் ஒரு மருத்துவராய் தனது பட்டப்படிப்பை முடித்தார் .விடுதியில் தங்கி படித்தவர் இரு நாட்கள் இடைவெளியிலும் தனது ராஜ்ஜியத்திற்கு வந்து தனது தமயனுடன் நேரத்தை செலவிட்டுவிட்டு செல்வதை தன் வழக்கமாகவே கொண்டிருந்தார் .வந்தியத்தேவனின் உயிர் ஆருத்ராவாய் இருக்க அவரின் துணைவியாரோ அதை விட ஒரு படி மேலே சென்று தனது குழந்தையாகவே ஆருத்ராவை நடத்தினார் .அருள் மொழி வேந்தனிற்கும் ஆதேஷிற்கும் ஆருத்ரா என்றால் கொள்ளை பிரியம் அவளிற்கு அவ்விதமே.
இவ்வாறே வருடங்கள் உருண்டோட ஒரு நாள் ,
அது அந்த ராஜ்யத்தின் மத்தியில் அமைந்திருந்த ஒரு களரி பயிற்சிக்கூடம் .புழுதி பறக்க மலை முகடுகளை போன்ற தேகங்கள் உடைய ஆண்மகன்கள் தமது தினவெடுத்த தோள்களை தூக்கி விட்டுக்கொண்டு ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டு தமது பலத்தை காட்டிக்கொண்டிருக்க அங்கே நடுவில் நடந்த ஓர் போட்டியை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள் .
அவ்வழியே வயற்காடுகளை பார்த்துவிட்டு மக்களை சந்தித்துவிட்டு அரண்மனைக்கு திரும்பிக்கொண்டிருந்த அரசர் வந்தியத்தேவன் அங்கே ஒட்டுமொத்த ஆதவக்குலத்தவரின் பிரஜைகளும் திரண்டிருப்பதை பார்த்தவர் என்ன என்று சென்று நோக்க அங்கோ ஒரு தினவெடுத்த காளைமாட்டை போன்று உறுதியான தேகத்தையும் புஜங்களையும் கொண்டிருந்த ஆறடி ஆண்மகன் ஒருவன் முன் சரிக்கு சமமாய் கையில் ஏந்திய வாளுடன் தன் முகத்தை மூடிய துணியுடன் அவன் முன் வாளேந்தி தயாராய் நின்றார் ஆருத்ரா .
புறவியிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன் தங்கை இடும் யுத்தத்தை பார்க்க வென்று கூட்டத்திற்குள் கூட்டமாய் சிறு சிரிப்புடன் கலந்து நிற்க சண்டையும் துவங்கியது .முதலில் அந்த ஆண் அவன் வாளை சுழற்றி ஆருத்ராவின் முகத்திற்கு நேரே வீச குறுக்கே தன் வாளை வைத்து தடுத்த ஆருத்ரா அவனின் வாளை தட்டிவிட்டவர் அடுத்து தன் தாக்குதலை முன் வைக்க கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியது .நேரங்கள் நீண்டு கொண்டே செல்ல அவனும் விடுவதாய் இல்லை அவரும் விடுவதாய் இல்லை .அவர் தலைக்கு அவன் குறிவைத்து வாளை வீசிட சட்டென்று கீழே குனிந்து ஒருமுறை சுழன்று மேலே எம்பி குதித்தவர் ஓங்கி அவன் வாளிலேயே அடிக்க அவனின் வாள் கீழே இரண்டடி தள்ளி போய் விழுந்தது .
சிறு சிரிப்புடன் தன் முகத்தில் இருந்த துணியை விளக்கியவர்"இம்முறையும் தோற்றாயா ?"என்று கூறி அவன் வாளை எடுத்து இன்னொரு கையில் வைத்தவாறு இருவாள்களையும் சுழற்றியபடியே பேச
அவனோ சிரித்தவன் "தமது வேகத்திற்கு ஈடு கொடுக்க எம்மால் அல்ல அந்த வருணதேவனாலும் இயலாது இளவரசியாரே "என்க
அவளோ முகத்தை சுருக்கி இரு கைகளை இடுப்பில் வைத்தவள் "போதும் உன் பரிகாசம் இந்தா உன் வாள் என்று வாளை அவனிடம் தூக்கி போட பின்னே இருந்து வந்தியத்தேவன் கைதட்டிக்கொண்டே அவளை நெருங்கியவர் "அற்புதம் ஆருத்ரா "என்க
அவனின் குரலில் பின்னே திரும்பிய ஆருத்திரா மகிழ்வுடன் சென்று அவள் தமையனை கட்டிக்கொண்டவள் "தமையனாரே எப்படி இருக்கிறீர்கள்?அண்ணியும் குழந்தைகளும் நலமா ?அருள் எப்படி இருக்கிறான் "என்று இடை விடாது கேள்விகளால் வந்தியத்தேவனை துளைத்துக்கொண்டு வர அவரும் ஒரு சிறு புன்னகையோடு தன் தங்கையுடன் பேசிக்கொண்டு வந்தார் .
இருவரும் அரண்மனைக்குள் நுழைய வாசலிலேயே ஆரத்தியுடன் காத்திருந்தார் வானமாதேவி .அதுவரை அண்ணனுடன் கதைத்துக்கொண்டிருந்தவள் அவரிடமிருந்து பிரிந்து ஓடிப்போய் தனது அண்ணியாரை கட்டிக்கொள்ள ஒரு கையால் அவளை அணைத்தவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு ஆரத்தி எடுக்க வந்தியத்தேவரோ அவரின் காதிர்கருகில் குனிந்தவர் "ஹ்ம்ம் நாத்தனாரிற்கு மட்டும் தான் முத்தங்கள் வழங்குவீரோ தேவியாரே அவரின் தமயனிற்கு கிடையாதோ "என்க
அவரோ வந்தியத்தேவரின் கையை கிள்ளியவர் "குழந்தையின் முன் என்ன பேசுகிறீர்கள் தாம் "என்று
அவரை முறைத்தவர் உள்ளே சென்றுவிட ஆருத்ராவோ தன் தமையனின் முகத்தை கண்டு சிரிக்க வந்தியத்தேவனோ சிரித்தவர் "திருமணம் செய்து வைத்தால் அடுத்த வருடம் ஒரு குழந்தைக்கு தாயாகி விடுவாய் உன்னை இன்னும் குழந்தை என்றுவிட்டு செல்கிறாள் உன் அண்ணி "என்று கூறி சிரிக்க
ஆருத்ராவோ சற்றே வெட்கம் பூசியவர் "போங்கள் தமையனாரே எப்பொழுதும் எனது திருமணப்பேச்சு தானா சிறிது காலம் செல்லட்டும்"என்றவாறு உள்ளே நடந்தவள் "அத்தை "என்ற கூவலுடன் அவளை நோக்கி ஓடி வந்த நான்கு வயதான அருள் மொழி வேந்தனையும் தத்தக்க பெத்தக்காவென்று நடந்து வந்த இரண்டு வயது ஆதேசயும் இரு கைகளில் தூக்கி கொண்டவள் அவர்களை கொஞ்சியவாறே உள்ளே அழைத்து செல்ல அவளின் பிம்பத்தையே கண்ணில் நிறைத்துக்கொண்டு நின்றார் வந்தியத்தேவன் .
ஆருத்ரா வந்ததும் அந்த அரண்மனையின் பொலிவு மேலும் கூடியதை போல் இருந்தது .அங்கிருந்த ஒருவரையும் விட்டு வைக்கவில்லை அவள் அனைவரிடமும் சென்று வாயாடிக்கொண்டிருந்தவள் அருள்மொழிவேந்தனோடு மாலையில் வாள் பயிற்சி செய்யவும் காலையில் ஊரிற்குள் சென்று மருத்துவ உதவி செய்யவும் தவற வில்லை .
இவ்வாறே சிறிது காலம் ஓட வானமாதேவியின் தந்தையார் அவரின் குடும்பத்துடன் ஒருமுறை அரண்மனைக்கு திடீரென வந்திருக்க அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற குடும்பத்தவர்கள் அனைவரும் அளவளாவிக்கொண்டிருக்க வானமாதேவியாரின் தம்பியான மேகதூதனிற்கோ கண்கள் ஆருத்ராவின் மீதே நிலைத்திருக்க வானமாதேவியாரின் பெற்றோரோ ஏதோ ஒன்றை கூற வருவதும் அதன் பின் அதை கூற தயங்குவதுமாய் இருந்தனர் .
இவற்றை கவனித்த வந்தியத்தேவன் "மாமா அவர்களே தாம் நெடு நேரமாக எதையோ கூற விழைகின்றீர் எனில் கூற தயங்குகின்றீர் என்ன விஷயம் கூறுங்கள் "என்க
வானமாதேவியாரின் தந்தையோ தயக்கத்தை உடைத்தவர் "அது மாப்பிள்ளை அவர்களே தாம் அறிந்தது தான் மேகதூதன் திருமண வயதை அடைந்துவிட்டான் .அவனிற்கு பெண் பார்க்க முனைந்த போது அவனோ ஆருத்ராவின் மேல் தான் பிரியம் கொண்டிருப்பதாய் எம்மிடம் தெரிவித்தான் ஆதலால் ஆருத்ராவையே எமது மருமகளாக்க யாம் விழைகின்றோம்.அதற்கு தமது விருப்பத்தை அறிய வந்தோம் "என்க
அதுவரை அருள்மொழிவேந்தனுடன் ஏதோ ஓர் பொம்மையை தூக்கி பிடித்தவாறு போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆருத்ரா அவர்களின் இப்பேச்சை கேட்டு சிலை ஆக அவள் கையிலிருந்த பொருள் கீழே விழுந்து உடைந்தது .
வந்தியத்தேவனின் முகத்தையே அவள் தவிப்புடன் நோக்க தங்கையின் முகமாறுதல்கள் அனைத்தையும் கவனித்த வந்தியத்தேவன் "எமக்கு எமது தங்கையின் விருப்பமே முதன்மையாகும் அவளிற்கு இத்திருமணத்தில் சம்மதமாயின் எமக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லை "என்க
அனைவரின் கேள்வி தாங்கிய மற்றும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த பார்வையும் ஆருத்ராவின் மீது திரும்ப அது வரை விரித்தவாறு நின்றிருந்தவள் நேருக்கு நேர் யாரிடத்தும் பேசுபவள் முதல் முறையாய் தலை குனிந்து "எ...... எனக்கு சிந்திக்க சற்று அவகாசம் தேவை தமையனாரே "என்க
வந்தியத்தேவரோ அவர்களை நோக்கி திரும்பியவர் "இரண்டு நாட்கள் கழித்து எம்முடிவை கூறுகிறோம் "என்க
வானமாதேவியாரின் அன்னை "அவளோ சிறுபெண் அவளிடம் திருமண விஷயத்தை பற்றி கேட்டால் அவளிற்கென்ன தெரியும் தாம் முடிவெடுக்க வேண்டியது தானே "என்க
ஆருத்ரா கலங்கி நிற்க உள்ளிருந்த வந்த வானமாதேவி "அன்னையே இது அவளின் வாழ்க்கை அவளின் துணைவனை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை அவளிற்கே உள்ளது ஆருத்ரா என்ன கூறுகிறாளோ அதுவே இறுதி முடிவாய் இருக்கும் "என்று அவரிடம் இறுதியாய் உறுதியாய் கூறியவர் ஆருத்ராவின் தலையை வாஞ்சையாய் தடவி" உள்ளே வா உணவு இன்னும் உண்ணவில்லை அல்லவா நீ "என்று உள்ளே அழைத்து செல்ல இங்கே மேகதூதனிற்கோ கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் கனன்றிட துவங்கியது .
உள்ளே வானமாதேவியுடன் வந்தவள் அவரின் கையை பற்றி "அண்ணியாரே தமக்கு வருத்தம் எதுவும் இல்லையே "என்றிட
அவளை கனிவாய் நோக்கியவாறு "என் முதல் குழந்தையடா நீ உன் விருப்பத்திற்கு மாறாக உணவையே அளிக்காத நான் உன் விருப்பத்திற்கு மாறாய் மணாளனை தேர்ந்தெடுத்திட விடுவேனா ?"என்றவர் பின் சுற்றி முற்றி பார்த்துவிட்டு "யாரவன் ?"என்க
தன்னை கண்டு கொண்டாரே என்று தலை கவிழ்ந்தொரு வெட்கப்புன்னகை செய்தவள் அவனின் பெயரை உச்சரித்தால் "விஷாகன்"என்று
அதை கேட்ட வானமாதேவி" ஹ்ம்ம் ஆருத்ரா விஷாகன் பெயர் பொருத்தம் அருமை "என்க
"போங்கள் அண்ணியாரே" என்று சிணுங்கியவள் தன்னறைக்கு ஓடிவிட அவளை கண்டு புன்னகைத்த வானமாதேவி அவளின் அறைக்கு உணவை எடுத்துச்சென்றார் .
இங்கே இவள் அகமிழ்ந்திருக்க அங்கோ ஒரு குகையில் பெரும் யாகம் வளர்த்துக்கொண்டிருந்தது ஓர் முதுமை எய்திய உருவம் .முகத்தின் ஒருபக்கம் முழுதும் தீக்காயத்தால் சிதைந்திருக்க மறுபக்கத்தில் ரத்தமென சிவந்த கண்களும் நரைத்த தலைமுடியுமாய் இருந்தவன் ஒரு கை இல்லாது கம்பளியை முழுவதுமாய் போர்த்தி இருக்க அவற்றின் நினைவடுக்ககளில் மீண்டும் மீண்டும் எட்டு வயது சிறுமியை ஆருத்ரா வாளை எடுத்து அவனின் கையை வெட்டிய காட்சிகளே நினைவில் வந்தது .
அந்த யாக குண்டத்தில் கடைசியாய் எதையோ கூறி ரத்தத்தை தெளிக்க அந்த யாககுண்டத்திலிருந்து வெளிப்பட்ட ஒளி ஒன்று மேலே எழும்பி ஒரு ஜாதகக்கட்டத்தை காட்டிட அதை உற்று நோக்கிய அவ்வுருவம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுகி இருந்த இதழ்கள் சிரிப்பில் விரிய சற்று நேரத்தில் அவ்விடமே அதிரும் அளவிற்கு சிரித்த அவ்வுருவம் அந்த ஜாதக கட்டத்தை நோக்கி "அடியேய் ஆருத்ரா ஆதவகுலத்தின் அரனாய் விளங்கும் உனது அழிவின் ஆரம்பம் துவங்கிவிட்டதடி இனி பார் இந்த சம்ஹித்த வம்சத்தவனின் ஆட்டத்தை ."என்று தன் கையில்லாத பாகத்தை வருடிய அவ்வம்சத்தின் தலைவன் "பதிலடி கொடுக்காது ஓயமாட்டேனடி "என்று கூறி கோரமாய் சிரிக்க தனது அழிவின் அவகாசம் ஆரம்பித்துவிட்டதை அறியாது ஆனந்தமாய் அஸ்தமிக்கும் ஆதவனை கண்டவாறு தன்னவனின் நினைவில் முழ்கி இருந்தால் ஆருத்ரா .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro