Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 93

"குட்டீஸ்..... யார் யாருக்கு இப்பவே டின்னர் வேணும்? டின்னர் சாப்ட கீழ போலாமா எல்லாரும்?" என்று கேட்டவளின் அருகில் வந்து நின்ற நிஷா அவளை சற்று குனிந்து கொள்ள சொன்னாள்.

"என்ன நிஷா குட்டி? ஆன்ட்டி கிட்ட ஏதாவது சொல்லணுமா நீங்க?" என்று கேட்ட வதனியிடம்,

"ஆமா ஆன்ட்டி! ஜெயன் மாமா ஒங்க மேல கோபமா இருக்காங்களாம். நீங்க போயி அவங்கட்ட ஸாரி கேட்டா தான் கீழ வருவாங்களாம்; இல்லன்னா நைட் முழுசும் மாடியிலயே தான் ஒக்காந்துருப்பாங்களாம்! ஜெயன் மாமா கூட போய் பேசுங்க!" என்று அவளை முதுகுப்புறம் கை வைத்து நெம்பித் தள்ளியவளிடம் புன்னகைத்து,

"ஒங்க மாமா சாப்ட வரலன்னா இங்கயே இருக்கட்டும்! நாம எல்லாரும் கீழ போகலாம் வா.... எல்லாருக்கும் வயிறு பசிக்குதுல்ல? யார் யாருக்கு எல்லாம் பூரி வேணும்?" என்று கேட்டவளிடம்,

"எனக்கு.... எனக்கு, எனக்கும் வேணும்! எனக்குத் தான் நெறய பூரி வேணும்!" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு படிகளில் இறங்கினார்கள் குழந்தைகள்.

"பாத்து.... மெதுவா எறங்குங்க!" என்று சொன்ன வர்த்தினி அவர்கள் பின்னாலேயே சென்று படிக்கட்டில் இறங்கும் இடத்தில் நின்று கொண்டு அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்தாள்.

"சாப்புட வாங்க!" என்று இரண்டு வார்த்தையை துண்டு துண்டாக வெட்டியவளிடம்,

"இப்டியெல்லாம் வாயில அன்பேயில்லாம கூப்டா என்னால வரமுடியாதுங்க மேடம்!" என்று அவளைப் போலவே பேசினான் ஜெயன்.

"திமிரு.... உடம்பு பூரா திமிரு! ஐயா
சொந்தம்னு சொல்லிக்கிட யாருமே இல்லன்னு இவங்கிட்ட போயி யாராவது அழுதாங்களாமா? ஆளு சேக்குறானாம் ஆளு! ரூமுக்குள்ள வா...... செமத்தியா இருக்கு ஒனக்கு! கூப்ட்டா வரலன்னு சொல்லிட்டு இங்கயே நின்னுட்டு இருந்தா சாப்புடாம பட்டினி கெட.... எனக்கென்ன?" என்று முணங்கியவள் மெதுவாக படியிறங்கி கொண்டிருந்தாள்.

அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தவன் யாருக்கு பேசுகிறான் என்பதை கேட்க படிகளில் சத்தமில்லாமல் அமர்ந்து கொண்டாள்.

"ஹலோ.... துபாயா! அங்க என்னோட ப்ரதர் மார்க் இருக்காரா? ஏய் நீ தான் பேசுறியா? ஹவ் ஆர் யூ? ஹே ஒய் ஆர் யூ க்ரையிங் மேன்? என்னது.... ஒம்பொண்டாட்டியும் ஒனக்கு பூரி குடுக்கலயா? இங்க எம்பொண்டாட்டியும் எனக்கு பூரி குடுக்கல.... ஒருவேள பட்டினி போடுறது கூட ப்ரச்சனயில்லடா தம்பி; என்னைய பாத்து ஐ ஹேட் யூ வேற சொல்லிட்டா ராட்சஸி! ஏதாச்சு திட்டுறதுன்னா மூஞ்சி மேல திட்ட வேண்டியது தானடா? அதான ஒலக வழக்கம்? இவ வாய்க்குள்ளயே மொணங்குறாடா மார்க்கு!" என்று நடிகர் வடிவேலு பேசிய நகைச்சுவையை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்து கொண்டிருந்தவனின் பேச்சில் வாயை மூடிக் கொண்டு சிரித்தவள் கீழிறங்கி வந்தாள்.

அரைமணி நேரம் கழித்து லோகேஷ் ஜெயனை சந்திக்க மாடி ஏறி வந்தான்.

"ஸார்.... சாப்டீங்களா? வீட்டுக்கு கெளம்பிட்டீங்களா?" என்று கேட்ட ஜெயனிடம் தன்னுடைய கையில் இருந்த வளையலையும், செயினையும் காட்டினான் லோகேஷ்.

"என்ன ஸார்? நீங்க அவளுக்கு குடுத்தத திருப்பி உங்க கிட்டயே குடுத்துட்டாளா?" என்று கேட்டவனிடம்,

"ஜெயன்...... உங்கிட்ட நான் பர்வதவர்த்தினியோட புல் ஸ்டோரியையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டது, ஹாஸ்பிட்டல்ல அவ பேசுனத ஜன்னல் பக்கத்துல மறைஞ்சிருந்து கேட்டது இது எல்லாமே அவளப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆர்வத்துல தான்....!"

"அவளுக்கு எப்டி பெத்த அப்பா அவள வெரட்டி விட்டாரோ, அதே மாதிரி என் கேஸ்ல என் அத்தை.... அப்பா அம்மா இறந்தவொடனே குடும்பத்தோட வந்து எங்க வீட்ல செட்டில் ஆகிட்டு என்னைய அநாதைன்னு சொல்லி விரட்டி விட்டுட்டா!"

"எட்டு வயசுல அவ்ளோ ரோஷம் வந்துருச்சு எனக்கு; கோபம், அவமானம், ரோஷம், வலி இது எல்லாத்தையும் பாஸிட்டிவ் எனர்ஜியா கன்வெர்ட் பண்ணுனேன்! நல்லா படிச்சதுனால ஏதோ இன்னிக்கு சொல்ற மாதிரியான ஒரு வேலையில இருக்கேன்!"

"....பட் இன்னிக்கும் நாலு பேரு ஒக்காந்து ஜாலியா பேசிட்டு இருந்தா, அந்த எடத்துல நான் ஒரு பொம்ம மாதிரி தான் இருப்பேன். என்னால யார் கூடயும் ஈஸியா மிங்கிள் ஆகிக்க முடியாது!"

"உன் வொய்ஃப் ஒருத்தி மேல மட்டும்..... என்னன்னு தெரியல கருமம்; அவ்ளோ பாசம் வருது! அவளும் என்னை மாதிரியே ரிஜிடா இருக்குறதாலயா இல்ல அவளுக்கும் என்னோடது மாதிரி ஒரு ஸ்டோரி இருக்குறதாலயா.... இதெல்லாம் தெரியல ஜெயன்!"

"நீங்க யார் கிட்டயும் இவ்ளோ அஃபெக்ஷனேட்டா இருந்து நான் பாத்ததே இல்லயேங்கன்னு என் வொய்ஃபே வதனி விஷயத்துல ஆச்சரியப்படுறா..... ஆனா இவ என்னடான்னா என் கிட்னிய திருடுறதுக்கு வந்துருக்கியான்னு கேக்குறா!"

"ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்ததால நான் அவளப் பாக்க முடிஞ்சது என்னோட அதிர்ஷ்டம்னு நான் நினைக்குறேன்.... ஆனா அவ என்னை ஒரு தொல்லையா தான் நினைக்குறா! உனக்காவது என்னோட ஃபீலிங்ஸ் புரியுதா ஜெயன்?" என்று கேட்டவனிடமிருந்து அந்த தங்க அணிகலன்களை வாங்கிக் கொண்டான் ஜெயன்.

"அவளுக்கு உறவுகள் மேல சட்டுன்னு பிடிப்பு வரமாட்டேங்குது ஸார்! அத நாம தப்புன்னும் சொல்ல முடியாது ஏன்னா அவ வளந்த விதம் அப்டி!"

"அவ ஒரு ராணி மாதிரி ஸார்.... எங்க போனாலும் அவளோட பேச்சால, அறிவால, திறமையால இல்ல நல்ல செய்கையால எதிர்ல நிக்குறவங்கள அப்டியே தன்னோட பக்கத்துல இழுத்துக்குவா.... இதோ இன்னிக்கு கூட நீங்க மூணு பேரும் அவளுக்காக தான இங்க வந்து நிக்குறீங்க?"

"அவளோட அப்பன மட்டுந்தா எந்த காலத்துலயும் என்னால அவ பக்கத்துல நெருங்கவே விட முடியாது! அது ஒண்ணு மட்டுந்தா மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு.... இப்ப அந்த வருத்தமும் இல்ல! அதான் ஒண்ணுக்கு மூணு பேரு இருக்கீங்களே? பொறந்த வீட்டு சொந்தம் மாதிரி பாத்துக்க மாட்டீங்க?"

"என்ன.... அவ இதெல்லாம் புரிஞ்சு உங்க பக்கத்துல வர்றதுக்கு மாசக்கணக்குல டைம் ஆவலாம். அது வரையில நீங்க பொறுமையா இருக்கணும்! முடியும்ல?" என்று கேட்டவனிடம்,

"நான் வெயிட் பண்றேன் ஜெயன்! பட் இனிமே மிஸஸ் பர்வதவர்த்தினி ஜனமேஜயனுக்கு ஒவ்வொரு தடவ சீர் குடுக்குறதும் எங்களோட ரெஸ்பான்ஸிபிளிட்டி புரியுதா? ஒரு வாரத்துக்குள்ள அவள வளையலையும், செயினையும் போட வச்சுருக்குற! பை!" என்று சொல்லி விட்டு தடதடவென கீழிறங்கினான் லோகேஷ்.

"இந்த நகைய கையில வாங்குனது ஒரு குத்தமாய்யா? இத நான் வாங்குனது தெரிஞ்சா ஏன் வாங்குனன்னு கேட்டு அவ அடிப்பா! வேண்டாம்னு சொன்னா ஏன் வாங்கலன்னு கேட்டு நீ அடிப்ப! அன்னிக்கு ரோட்டுல வச்சு ஒன்னிய காப்பாத்துனது தான்யா நா செஞ்ச பெரிய தப்பு!" என்று புலம்பிய ஜெயன் நகைகள் இரண்டையும் பாக்கெட்டிற்குள் பத்திரப்படுத்தி விட்டு கீழிறங்கினான்.

சாவகாசமாக சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டின் திண்ணையில் அமர்ந்து ஒரு குச்சியால் தன்னுடைய பல்லை குத்திக் கொண்டிருந்த திண்ணன் அவனைப் பார்த்து விட்டு,

"நம்ம வூட்டுக்கு போவமாடா கொமரா?" என்று கேட்டார்.

"வக்கனையா சோத்த முழுங்கிட்டு இப்ப பல்ல வேற குத்திக் காட்டி கடுப்பேத்துறியா என்னைய? நல்லா சோத்த முழுங்குனேல்ல....? ரொம்ப அசதியா இருக்கும். மேல போயி பாய விரிச்சு தூங்கு. காலையில ஒம்பட்டறைக்கு கெளம்புவோம்!" என்று சொன்னவனை ஒரு புரியாத பார்வை பார்த்தவர்,

"மாட்டுக்கு தண்ணி காட்டலையா? அப்பேலர்ந்து கத்திக்கிட்டே கெடக்கு பாவம்!" என்று சொல்லிக் கொண்டே மாடிப் படிகளில் ஏறினார்.

"ஏய் கோமதி.... ஒனக்கென்னடீ ப்ரச்சன? அதாநீயும் இந்நேரத்துக்கு வயிறு நெறய சாப்ட்டு முடிச்சுருப்ப இல்ல....? கத்திக்கிட்டே கெடக்காம தூங்கு. டேய் பொடுசு நீயுந்தான்டா ஒங்கம்மா பக்கத்துல படுத்து தூங்கு!" என்று சொன்னவனுடைய குரல் கேட்டு அமைதியடைந்து அன்னையும், மகனும் கால்களை மடித்து அமர்ந்து அவை பாட்டில் அசை போட ஆரம்பித்து விட்டன.

"வீட்டுக்கு வர்றவிய்ங்கள எல்லாம் நல்லபடியா கவனிச்சு அனுப்பி வைக்கத் தெரியுது! பெத்த புள்ளைக்கு ஒருவாய் சோறு போடறதுக்கு வழியக் காணும்..... அமுதாம்மா! அதுக்குள்ள தூங்கிட்டியா? கதவத் தொற. எனக்கு இப்பவே சாம்பார் சாதமும், கத்திரிக்கா வதக்கலும் வேணும்.....! வா வந்து சோறு போட்டுக் குடு!" என்று கேட்டு தன்னுடைய அன்னையின் அறைக்கதவை விடாமல் தட்டிக் கொண்டிருந்தவனிடம்,

"அடே....ய்! எழுந்திரிச்சு வந்தேன்; தொடப்பக்கட்ட பிய்ய பிய்ய அடிப்பேன். மரியாதயா எதுத்த ரூம்பு கதவப் போய் தட்டு! சொல்லாம கொள்ளாம ஆளுங்க புள்ளைங்கன்னு இத்தன பேர கூட்டிக்கிட்டு வந்து வேலைய இழுத்து உட்டுட்டு மறுபடியும் எந்திரிச்சு வான்னு கூப்புடுற!"

"காலையில அவலாஞ்சி கெளம்பயில சொல்லிட்டு போறதுக்கு மட்டும் கூப்டு.... அதுக்கு முன்னால கதவ வரக்கு வரக்குன்னு சொரண்டுன..... விடிஞ்சவொடனே இருக்குது ஒனக்கு வேடிக்க!" என்று கதவுக்கு மறுபுறத்தில் இருந்து முகில் சொல்ல அன்னையின் பேச்சு கேட்டு பம்மிக் கொண்டு பின்னால் சென்று ஸோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் ஜெயன்.

"ஐயோ பாவம்.... சாப்பாடு இல்லன்னு ரொம்ப சோகமா ஒக்காந்துருக்க போலிருக்கு..... த்சூ.... த்சூ... த்சூ!" என்று போலியாக பரிதாபம் காட்டி உச்சுக்கொட்டியவள் தலை நிறைய பூ வைத்து நைட்டியில் தேவதை போல் நின்று கொண்டிருந்தாள்.

"என்....னடீ? நான் செஞ்சத திரும்ப செஞ்சு பழிவாங்குறியா? இப்ப சோறு போட முடியுமா? முடியாதா?" என்று கேட்டவனுடைய மடியில் ஏறி அமர்ந்து கொண்டு அவனுடைய மார்பில் கன்னம் வைத்து இழைந்தவள்,

"ஸாரி...... நீ இவ்ளோ எல்லாம் யோசிச்சு எல்லாரையும் வீட்டுக்கு வரச் சொல்லிட்டு தான் மறுவீடுங்குற டாப்பிக்கையே எடுத்துருக்க! நான் தான் அது புரியாம ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்!" என்று சொன்னவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன்,

"நானும் ஸாரி! என்ன தான் இருந்தாலும் நா ஒன்னிய ரோட்டுல அப்டியே விட்டுட்டு வீட்டுக்கு வந்துருக்கக் கூடாது! மூணு பேருமே நல்லவங்கம்மா.... ஒரு தனிப்பட்ட மனுஷியா ஒன்னிய அவங்களுக்கு பிடிச்சிருக்கு! அவ்ள நல்ல பொண்ணு நீ!" என்று சொன்னவனின் அணைப்பு சற்றே இறுகியது.

"ம்ஹூம்! ராஜாவுக்கு மூடு மாறுது. சாப்ட்டுட்டு அப்புறமா நம்ம ஆர்க்யூமெண்ட்ட கன்டினியூ பண்ணலாமா?" என்று கேட்டவளிடம்,

"ஏய் என்ன வெளையாடுறியாடீ? ஒங்க அண்ணன் தங்கச்சி பாசத்துல கொள்ளிக்கட்டய வைக்க...! எனக்கு இன்னிக்கு ராத்திரி முழுசா வேணும். வரப்போற நாலு நாளும் கூட வேணும்!" என்று சொன்னவனிடம் புன்னகைத்து தலையசைத்தவள், 

"மேடையில ஏறி ஒக்காரு. நான் உனக்கு சோறு பிசைஞ்சு ஊட்டி உடுறேன். ஒனக்கு ரொம்ப பசிக்குதுன்னு நெனக்குறேன்!" என்று சொல்லி ஜெயனை சமையலறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro