Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 92

வீட்டின் க்ரில் கேட்டை திறந்து செருப்பை கழற்றிய வர்த்தினி தங்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் இத்தனை செருப்புகள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்து தன்னுடைய ஹேண்ட்பேகை கழற்றி டீவி ஸ்டாண்டின் மேல்பக்கமாக இருந்த ஆணியில் மாட்டியவள் நஸார், மரியம், குழந்தைகள், லோகேஷ், அவனுடைய குடும்பத்தினர், திண்ணன் அனைவரும் கட்டிலிலும், ஸோஃபாவிலும் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவருக்கும் பொதுப்படையாக ஒரு புன்சிரிப்பை வழங்கினாள்.

"வாங்க நஸார் ஸார்; வா மரியம்... ஹலோ எஸ்ஐ ஸார், ஹலோ மேடம், வாங்க திண்ணன் தாத்தா!" என்று மெதுவான குரலில் அனைவரையும் வரவேற்பு அளித்தவள் குழந்தைகள் ஐவருக்கும் "ஹாய்" சொன்னாள்.

தன் மனைவியை ஒரு பார்வை பார்த்த படியே குழந்தைகள் ஐவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்கு ஏறிய ஜெயனிடம் நஸார் "எதுக்கு மேல போற?" என்று சைககையில் கேட்க ஜெயனும் வதனியை சுட்டிக்காட்டி,

"அவ எம்மேல கோபமா இருக்கா. நீங்க பேசுங்க!" என்று சொல்லி விட்டு மேலே ஓடி விட்டான்.

கணவனுடைய ஓட்டத்தை பார்த்தும் பார்க்காதது போல ஒரு பாவத்துடன்,

"என்ன எல்லாரும் திடீர்னு இங்க?" என்று அவர்களிடம் கேட்டாள் வதனி.

"அதத்தான் கண்ணு நானுங் கேட்டேன். இந்த போலீசு தம்பியும் நம்ம நஸாருப்பயலும் ஒனக்கு அண்ணே மொறையாவுதாம்! இந்தப் பெரிசு ஒனக்கு தாத்தா மொறையாவுதாம்! அதா ஆளாளுக்கு அதுக சத்துக்கு தக்கன சீரு, தங்க நகைன்னு கொண்டு வந்து குடுத்துட்டு பொண்ணு மாப்புளய எங்க கூட மறுவீட்டுக்கு அனுப்பி வையுங்கன்னு எங்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு நிக்குதுக!"

"இப்டி மூணு தனி தனிக் குடும்பமும் நம்ம வீட்டுக்கு ஒட்டுக்கா வந்து பொண்ணு மாப்புளய அனுப்பி வைங்கன்னு கேட்டா உங்கள யார் கூட அனுப்பி வைக்கறது? அதான் நீயே வந்ததும் பேசிக்கிடுவன்னுட்டு அமைதியா இருந்துட்டேன்!"

"வந்து ஒக்காந்தவொடனே மரியாதக்கு ஒருவா டீத்தண்ணிய எல்லாருக்கும் போட்டுக் குடுத்தாச்சுத்தா! மத்ததயெல்லாம் அவுகட்ட நீயே என்னான்னு பேசிக்க!" என்று சொன்ன முகிலமுதம் இந்த விஷயத்தில்
அதற்கு மேல் ஒரு பார்வையாளராக அவருடைய அறையின் கட்டிலில் சென்று அமர்ந்து விட்டார்.

"என்ன மரியம் இதெல்லாம்? எதுக்கு திடீர்னு நஸார் ஸாரப் போயி எனக்கு அண்ணா தம்பின்னுட்டு....? திண்ணன் தாத்தா நீங்களும் எதுக்கு இப்ப ஒங்களோட வேலைய எல்லாம் விட்டுட்டு இங்க வந்து ஒக்காந்துட்டு இருக்கீங்க?" என்று இருவரிடமும் விசாரணைக் குரலில் கேட்டவள் எஸ்ஐ லோகேஷிடம் ஒரு கேள்வி கூட கேட்கவேயில்லை.

ஒரு அவசரத்தில் ஜெயன் உதவி செய்தவர்களை எப்படி உறவாக ஏற்றுக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் அந்த காவலனிடம் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

"அட என்ன ஆயி நீ? யாருமில்லாத பொண்ணு..... எல்லாப் பொண்டுகளும் போல ஒரு நல்லநா, பெரிய நான்னா அப்பனாத்தா வூட்டுக்கு போறது மாதிரி இது எங்க போவும்? யாரு இருக்கா இது பக்கத்துல நிக்குறதுக்குன்னு எவனாவது ஒன்னிய பாத்து ஒரு கேள்வி கேட்டுரக் கூடாது இல்லம்மா?"

"அதுக்குத்தா நா கல்யாணத்துக்கு வந்தன்னிக்கே அந்த டைவரு கொமரங்கிட்ட புள்ளய கூட்டினு நாலுநா நம்ம எடத்துக்கு வந்துட்டுப் போலேன்னு சொல்லிருந்தேன்..... ஒரு வாரங்கழிச்சு நீயே எங்கூட்டுக்கு வந்து எங்கம்ம கிட்ட கேட்டுட்டு எங்கள அங்கண கூட்டினு போ பெருசுன்னு அவே எங்கிட்ட அப்பமே சொல்லியிருந்தான் பாத்துக்க!"

"பேச்சுப்படி நா இங்கண வாரதுக்குள்ள இந்த ரெண்டு பயலுவ வேற எதுக்கு எங்கூட போட்டிக்கு வந்தானுவன்னு எனக்குத் தெரியல......? நீ தாத்தா வூட்டுக்கு வா ஆயி! நா ஒனக்கு கோழிக் குழம்பெல்லாம் செஞ்சு தந்து ஒன்னிய நல்லாப் பாத்துக்கிடுறேன்!" என்று வேகமான குரலில் நான் தான் இந்த விஷயத்திற்கு முதலில் யோசனை சொன்னவன் என்று அவளிடம் உரைத்தார் அந்த முதியவர்.

"என்ன நஸார் ஸார்? இதெல்லாம் ஒங்க ப்ரெண்டோட வேல தானா? வீடு பூரா திங்க்ஸ வாங்கி அடுக்குடான்னு ஒங்க கிட்டயும் சொன்னானாக்கும்?" என்று கேட்டவளிடம்,

"இல்லம்மா வதனி..... நாங்களா தான் ஒங்களுக்கு ஆசையா இதெல்லாம் வாங்கிட்டு வந்தோம். நாலுநா அவளுக்கு சேந்தாப்புல லீவு வருதுடா மாப்புள; அதுனால நாங்க அவலாஞ்சி பெரிசு வீட்டுக்கு மறுவீடு போகப்போறமுன்னு ஜெயனு காலையில எங்கிட்ட சொன்னான்! இந்த மாசத்துல நெறய லீவு ஆகிட்டதால பாதி சம்பளம் மட்டும் வாங்கிக்குறேன்டா மாப்புளன்னு கணக்கு பேசுனான்!"

"சரி..... அவே எப்பவும் இருக்குறாப்லயே இருக்கட்டும், ஆனா நீங்க பெருச ஒறவா நெனச்சு அவரோட வீட்டுக்கு போகப் போறீங்கன்னா, எங்கள ஒறவா நெனச்சு நாங்க குடுக்குற சீரையும் வாங்கிக்கலாம்ல.... இந்தப் பெரிசு வீட்டுக்கு இப்ப போயிட்டு வாங்க; எங்கிட்ட இருந்து பழம், பூ, ரெண்டு பேருக்கும் ட்ரெஸ்ஸூ, ஸ்வீட்ஸ்னு சீர வாங்கிக்கங்க; இந்தா ஸார் கிட்ட இருந்து அவரு கொண்டு வந்த நகைய வாங்கிக்கங்க.... நாங்க மூணு பேரும் உங்களுக்கு ஒன்னொன்னு செஞ்சுட்டோம்ங்குற திருப்தியில சாப்ட்டு வீட்டுக்கு கெளம்பிருவோம்! நான் சொல்றது சரிதானம்மா?" என்று கேட்க வதனி சலிப்புடன் உச்சுக்கொட்டினாள்.

"என்ன நஸார் ஸார்....? உங்க எம்ப்ளாயீஸ்ல ஜெயனும் ஒருத்தன்!
அன்னிக்கே அவன தனியா கவனிச்சதுல உங்க ஸெட்ல பிரச்சன வந்ததா இல்லையா?
இப்டி அவனுக்காகன்னு எதையும் ஸ்பெஷலா செய்யாதீங்கன்னு உங்களுக்கு எத்தன தடவ தான் சொல்றது?" என்று கேட்டவளிடம்,

"அந்த கொரங்கு பயலுக்காவ இத்தனயும் எவஞ்செஞ்சான்? உங்களுக்காக..... எங்க லைஃப்ல நாங்க இத்தன வருசமா பட்டுக்கிட்டு இருந்த கஷ்டத்தயெல்லாம் வெறும் ரெண்டு ஐடியாவ குடுத்து சரி செஞ்ச எங்க தேவதைக்காக தான் இத்தனயும்....!"

"நீங்க எங்க கிட்ட அதெல்லாம் பேசலையின்னா இப்ப வரைக்கும் எதுவும் மாறி இருக்குதும்மா.....! வீட்லயும் சரி; ஷெட்லயும் சரி..... நாங்க இன்னிக்கு ஒரு நெலையில நிக்குறதுக்கு முக்கிய காரணம் நீங்கதா..... ஒங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யுறது?"

"அவேந்தா ரோஷப்பட்டுக்கிட்டு எங்கிட்ட ஒரு பிரியாணிக்கு மேல என்னத்தயும் வாங்க மாட்டேங்குறான்... ஆனா நாங்க உங்களுக்கு செய்யலாம்ல? அதான் செஞ்சோம்!"

"இந்த வீட்ல அம்மாவால எல்லாம் உங்களுக்கு ஒரு சங்கடமும் வராது.... அவே இருக்கான்ல அவேன், அவனாலதா எல்லா கரச்சலும் வரும்.... அப்டி ஏதாவது வந்துச்சுன்னா, அன்னிக்கு ராத்திரி கூப்டீங்க பாருங்க... அதே மாதிரி எந்நேரம் வேணாலும் ஒரு போன் அடிங்க! உங்களுக்காக நாங்க வந்து நிப்போம்!" என்று சொன்ன நஸாரை வதனி நன்றியோடு பார்த்துக் கொண்டிருக்க மரியம் அந்த நேரத்தில் வதனியின் அருகில் வந்து அவளைக் கட்டி தழுவிக் கொண்டாள்.

"தேங்க்யூ...... மரியம்! உன்னோட இந்த ஹக் இப்ப எனக்கு ரொம்ப தேவையா இருக்கு! வேல முடிஞ்சு வர்ற வழியில இப்பத்தான் ஒருதடவ எம்புருஷன் என்னைய டென்ஷன் பண்ணி விட்டுருந்தான்! அது எல்லாமே இந்த ஒரு ஹக்ல சரியாகிடுச்சு...... தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க் மரியம்!" என்று சொல்லி மரியத்தின் கன்னம் கிள்ளினாள் வதனி.

"என்னைய மட்டும் மரியம்.... நஸார மட்டும் ஸாரா? என்ன புள்ள நீயி? அண்ணே அத்தாச்சின்னு ரெண்டு வார்த்த சொல்லி எங்கள கூப்டுறதுக்கு அம்புட்டு வலிக்குதுல்ல ஒனக்கு?" என்று கேட்ட தன்னுடைய நல்ல சிநேகிதியிடம்,

"வேண்டாம் மரியம்! உறவுன்னாலே அது பாசத்த விட காயத்த தான் அதிகமா குடுக்குது..... என்னை ஃபோர்ஸ் பண்ணாத! விட்டுடேன்!" என்று சொன்னவளின் கரங்களைப் பற்றி தட்டிக் கொடுத்தவள்,

"போய்த்தொல!" என்றாள் புன்னகைத்த படி.

"எக்ஸ்க்யூஸ் மீ! நானும் என் வொய்ஃபும் எங்களோட சான்ஸ் வர்றதுக்காக ரொம்ப நேரமா இங்க ஒக்காந்து நடக்குறதெல்லாம் வேடிக்க பாத்துக்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கோம். இப்ப நான் பேசலாமா?" என்று கேட்டவனின் அழுத்தமான கட்டைக்குரல் இன்றும் வதனிக்கு பயத்தை ஏற்படுத்தியது.

"நஸார் ஸார்..... நீங்க ஜெயனோட சைல்டுஹூட் ப்ரெண்ட்! திண்ணன் தாத்தா ஜெயனோட வெளி ப்ரெண்ட்ஸ் பழக்கத்துல இருக்குற
ரொம்ப நாள் ப்ரெண்டு.... ஸோ உங்கள எல்லாம் என்னோட ரிலேஷன்ஸா அக்செப்ட் பண்ணிக்கலாம். பட் சம்பந்தமேயில்லாம ஒரு நாள் நம்ம ஹெல்ப் பண்ணுனவங்கள எல்லாம் ரிலேஷனா அக்செப்ட் பண்ணிக்க முடியாது. எஸ்ஐ ஸார்.... மேடம்! நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். சாப்ட்டுட்டு நீங்க வாங்கிட்டு வந்த ஜ்வல்ஸ எடுத்துட்டு ஒங்க வீட்டுக்கு கெளம்புங்க!" என்று கைகூப்பி வணங்கியவளின் தோரணையைக் கண்ட முகிலமுதம் மெதுவான குரலில்,

"கண்ணு.... என்ன தான் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்டி மூஞ்சிக்கு நேரா கெளம்புங்கன்னு சொல்றது சரியில்ல தங்கம்!" என்றார்.

"என்னங்க.... அந்தப் பொண்ணு தான் நம்மள ஒரு ப்ரெண்டா கூட அக்செப்ட் பண்ணிக்க மாட்டேங்குறாளே? எங்க பேமிலிய மொத்தமா காப்பாத்துனதுக்கு உங்க ஹஸ்பெண்டுக்கு இன்னும் ஒருக்க ஒரு பெரிய தேங்க்ஸ்னு சொல்லிட்டு நாம கெளம்பிடலாமா?" என்று அவன் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு மெல்லிய குரலில் கேட்ட தன்னுடைய மனைவியிடம்,

"ரெண்டு நிமிஷம் இரும்மா! போகலாம்!" என்று சொன்ன லோகேஷ் வதனியின் பக்கமாக திரும்பி அவளிடம்,

"மிஸஸ் ஜெயன்.... இவங்க ரெண்டு பேரையும் விட நாந்தான் உங்களுக்கு ரொம்ப நெருக்கமான ரிலேஷன் தெரியுமா?" என்று கேட்டபடி தன்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டுக் கொண்டு நிற்க அந்த இடத்தின் அளவு சட்டென்று குறைந்தது போல் தோன்றியது வதனிக்கு.

"ஏன் ஸார்.....? உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமேயில்ல கெளம்புங்கன்னு சொல்லிட்டு இருக்கேன். இதுல நீங்க நெருக்கமான ரிலேஷன் அது இதுன்னு பேசிக்கிட்டு? முகில்ம்மா இவங்களுக்கு தட்டு எடுத்து வைங்க. நான் போய் சாப்பாட எடுத்துட்டு வாரேன்!" என்று முகிலிடம் சொன்னாள் வதனி.

"சாப்பாடெல்லாம் அப்புறமா மிஸஸ் ஜெயன்.... அன்னிக்கு நீங்க ஹாஸ்பிட்டல்ல ஜெயன் கூட உட்கார்ந்துருக்கும் போது என்னைய இர்ரெஸ்பான்ஸிபிள் டாட்னு திட்டுனீங்களா இல்லையா?
உரிமை இருக்குற எடத்துல தானே இப்டி திட்டெல்லாம் வரும்?" என்று கேட்டவனை

"யாருடா நீ?" என்ற பாவத்துடன் பார்த்த வதனி, "ஆமா ஸார்..... உங்க பையனோட தலையில இன்னும் இருக்குது ப்ளாஸ்டர்! அத பாக்க பாக்க அவ்ளோ கோபம் வருது உங்க மேல..... நீங்க பெரிய போலீஸா இருக்கலாம்! எல்லாரும் உங்களுக்கு சல்யூட் பண்ணலாம்.... ஆனா நீங்க செஞ்சாலும் தப்ப தப்புன்னு தான் சொல்ல முடியும். அன்னிக்கு மழையில உங்க பேமிலியோட வெளிய கெளம்புறப்ப நீங்க இன்னுங்கொஞ்சம் பொறுப்பா நடந்துருந்தீங்கன்னா யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது!" என்றாள் தீர்மானமான குரலில்.

"வெல் அண்ட் குட்! அப்டி ஒரு ஆக்ஸிடெண்ட் ஆனதால தான் எனக்கு இப்டி என் வயசுக்கு ஒண்ணு ரெண்டு வயசு கொறயா ஒரு சிஸ்டர் கெடச்சுருக்காங்க! ஸோ அந்த ஆக்ஸிடெண்ட்டும் நல்லதுக்குதான்!" என்று சொன்னவன் மெல்ல முகிலமுதம் அமர்ந்திருந்த அறைக்குள் சென்று ஒரு ஜோடி வளையலையும், ஒரு செயினையும் கையில் எடுத்து வந்தான்.

"மிஸ்டர் ஜெயனுக்கு அதான் மச்சானுக்கு ஏற்கனவே நான் அவர் கையில ஒரு மோதிரத்த போட்டு உட்டேன். கொஞ்சம் கைய நீட்டுறீங்களா?" என்று கேட்டவனிடம்,

"மிஸ்டர் லோகேஷ்..... திஸ் இஸ் த லிமிட்! என்னை ஃபோர்ஸ் பண்ணி இதெல்லாம் கையில திணிச்சுட்டீங்கன்னு சொல்லி கம்ப்ளையிண்ட் பண்றதுக்கு உங்க ஸ்டேஷனுக்கே வருவேன்!" என்று மிரட்டல் விடுத்தவளை அவனது மூத்த குழந்தையைப் பார்க்கும் பாவத்துடன் பார்த்தவன்,

"அங்க வந்தும் என்னைய பாக்கணும்னு நீ நெனச்சா நல்லா வரலாம்.... உனக்கு அறிவிருக்காடான்னு கேட்டு திட்டக் கூட செய்யலாம்! பட் கம்ப்ளையிண்ட் எல்லாம் ரொம்ப ஓவர்....!" என்று சொல்லி விட்டு சிரித்தான்.

"ஏன் சம்பந்தமேயில்லாம எங்க கூட பைண்ட் ஆகுறீங்க? எங்களோட கிட்னி ஏதாவது உங்களுக்கு தேவைப்படுதா?" என்று அவன் முகத்தை நேராகப் பார்த்து கேட்டவளின் கேள்வியில் திண்ணன் உட்பட அனைவரும் சிரித்து விட்டனர்.

"உன்னோட கிட்னி எல்லாம் நீயே பத்திரமா வச்சுக்கோ. அதெல்லாம் எனக்கு வேணாம்! ஆக்சுவலி, உன்
பயாலஜிக்கல் ஃபாதர் ரொம்ப அன்லக்கி தெரியுமா பர்வதவர்த்தினி? போய்த் தொலையுறான் விடு. உன்னை சொந்தமா பாத்துக்க எங்க மூணு பேருக்குந்தான் வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு நெனச்சுக்க!"

"இந்த ரெண்டு நகையையும் எப்பயும் பத்திரமா வச்சுருக்கணும். புரிஞ்சதா? என்னோட அன்ப புரிஞ்சுக்கல்லாம் முயற்சி பண்ணாத..... கஷ்டம்! ஸோ அத அப்டியே அனுபவி சரியா!" என்று சொன்னவன் பர்வத வர்த்தினியின் தலையில் ஒரு முறை கைவைத்து விட்டு திரும்பி நின்று,

சத்யா கெளம்புவோமா?" என்று தன் மனைவியிடம் கேட்டான்.

"எங்க கெளம்புறது? சாப்ட்டு தான் கெளம்பணும் எல்லாரும்! ஒக்காருங்க. ஒரு பத்து நிமிஷம்!" என்று சொன்ன வதனி அதற்கு மேல் லோகேஷிடம் ஒரு சச்சரவு வார்த்தையை கூடப் பேசாததை எண்ணி அனைவருக்கும் ஆச்சரியம்!

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro