🌻 அழகி 91
ஜனமேஜயன் பர்வதவர்த்தினி திருமணம் முடிந்து ஒருவார காலம் ஆகி விட்டது. ஜெயனும் காய்ச்சலில் இருந்து நல்லபடியாக தேறி எழுந்து உற்சாகமாக நடமாடத் தொடங்கி விட்டான். அன்று காலையிலேயே எக்ஸர்சைஸ் முடித்து, ஷேவிங் செய்து கொண்டிருந்தவன் மாடியில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவளிடம்,
"ஓய்.... ஹெட்லைட்டு! வர்றியா சேந்து குளிப்போம்!" என்று கேட்டு கண்சிமிட்டினான்.
"சேந்து சாப்டணும், சேந்து படுக்கணும்னு சொல்றது ஓகே வீட்டுக்கார்.... சேந்து குளிக்கணும்னு கூப்டுறது மட்டும் நல்ல ஐடியாவா தெரியலயே?" என்று சொல்லி சிரித்தாள் வதனி.
"என்னடீ நல்ல ஐடியாவா தெரியல? நானே பாவம்.... காய்ச்சல்ல கெடந்து இத்தன நாள வேஸ்ட் பண்ணிட்டமே அத எப்டிறா சரிக்கட்டுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்! ஒரு வேலையில டச் விட்டுப் போயிடுச்சுன்னா அத மறுபடியும் செய்யுறப்ப கொஞ்சம் முழிக்குற மாதிரி இருக்கும். அப்டி எல்லாம் ஆகலாமா சொல்லு?" என்று கேட்டவனின் அருகில் வந்தவள்,
"யாரு நீயா வேல தெரியாம முழிக்குறவன்? இப்ப செய்யுற வேலையில ஒழுங்கா கவனமா இருந்து செஞ்சு முடி. ஒன்னோட கன்னத்துல மார்க் போடுறதுன்னா அது நானா மட்டுந்தான் இருக்கணும்! ஏதாவது கனவு கண்டுக்கிட்டே ஷேவ் பண்ணி கன்னத்த கிழிச்சு வச்சுருக்குற மாதிரி இப்ப மூக்க கிழிச்சுக்காத! அது அதுக்கு ஒரு நேரம் இருக்கு..... டச் விட்டுப் போன வேலையெல்லாம் ராத்திரில வந்து கவனி!" என்று தன் கணவனிடம் சொல்லி அவன் நெற்றி முடியை கலைத்து விட்டு கீழே சென்றாள் வதனி.
ஒரு வாரமாக அவன் உடம்பு வலியென்று சொல்லி
அசதியாக படுத்து படுத்து கிடந்த போது முன்பு முகிலை எவ்வாறு அக்கறையாக கவனித்துக் கொண்டாளோ அவ்வாறே இப்போது ஜெயனையும் கவனித்துக் கொண்டாள். காலையிலும் இரவிலும் வதனி அவனை கவனித்துக் கொள்ள மதியத்தில் தன் மகனை முகிலமுதம் கவனித்துக் கொண்டார்.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவில் அவளிடம்,
"ரெண்டு பேரும் சேந்து பாஸாவனும்னு ஒங்கிட்ட அவ்ள பேசிட்டு, இப்ப கைய கால தூக்குறதுக்கே சத்தில்லாம கெடக்கேனே.... ஒனக்கு கோவம் வரலயாடீ ஏஎம் அம்மா?" என்று கேட்டவனின் கன்னம் கிள்ளி வைத்து சிரித்தவள்,
"லூசுப்பையா..... நீ ஒண்ணும் கை கால தூக்குறதுக்கு சத்தில்லாம எல்லாம் கெடக்கல! என்னை நம்ம வீட்டுக்கு நீ தான பைக்ல கூட்டிட்டு வந்த? நம்ப பர்ஸ்ட் நைட்லயே
எல்லாத்தையும் ஒடனே கத்துக்கணும்னு ஒண்ணும் அவசியமில்லன்னு நீ தான சொன்ன....? மறந்து போயிட்டியா?"
"ரொமான்டிக் ஹீரோவா இருந்தாலும், க்ரை பேபியா இருந்தாலும் மொதல்ல ஜெயன் ஒரு நல்ல ஹ்யூமன் பியீங்க்! எனக்கு அவன பிடிக்கும்! அவன் காய்ச்சல்ல கெடந்தாலும் அவன மட்டுந்தா புடிக்கும்! மாத்தர சாப்டியா?" என்று கேட்டவளிடம் இவ்வளவு நேரம் கிறக்கமாக அவள் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன் கடைசி கேள்வியில் மட்டும் சுதாரித்து,
"ம்.... ம்ம்ம்! சாப்ட்டேனே!" என்று வேக வேகமாக தலையாட்டினான்.
"ம்ஹூம்! நீ தலையாட்டுற வேகத்த பாத்தா ஏதோ ஒண்ணு சரியில்லயே....! அப்ப இன்னிக்கும் எப்பவும் போல செக்கிங்க போட்ற வேண்டியதுதான்!" என்று சொன்ன வதனி அவன் பக்கத்தில் வந்து அவனுடைய பேண்ட் பாக்கெட், சட்டை பாக்கெட் இவற்றை எல்லாம் தடவிப் பார்த்தாள்.
கணவனுக்கு மாத்திரைகள் என்றால் ஒவ்வாமை என்ற விஷயம் அவளுக்கு இன்று மதியம் தான் தெரிந்திருந்தது. அதுவும் அவளுடைய மாமியார் சொல்லித்தான்!
"பாத்தியா? எங்கயுமே மாத்தர இல்ல பாத்தியா.....? ஆனாலும் நீ என்னைய ரொம்ப அவமானப்படுத்துற பொண்டாட்டி!" என்று சொன்னவனிடம்,
"சின்ன கொழந்த மாதிரி மாத்தர போட பயந்துக்காம நேரா நேரத்துக்கு இத நீ வாயில போட்டுக்கிட்டன்னா, நான் ஏன் ஒன்னைய இப்டியெல்லாம் செக் பண்ணப் போ... இதோ கிடைச்சுடுச்சு!" என்று கேட்டவள் தலையணைக்கு அடியில் அவன் ஒளித்து வைத்திருந்த மூன்று மாத்திரைகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.
"கண்டுபிடிச்சுட்டாளே..... எமகாதகி! இன்னும் பயிற்சி வேண்டுமோ அமைச்சரே?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன் அவளைப் பார்த்து "இஹிஹிஹி" என்று பற்களைக் காட்டினான்.
"எத்தன தடவ ஒனக்கு மாத்திரை எடுத்துக் குடுத்து, அத நீ வேஸ்ட் பண்ணி குப்பைத்தொட்டியில போடுறது ஜெயன்? ஒழுங்கா மாத்தர போட்டுக்க மாட்டியா? ஏன்டா இப்டி பண்ற?" என்று கேட்க ஜெயன் அவள் தாடையைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தான்.
"ப்ளீஸ் வர்த்தினி.... இத்தன மாத்தரயெல்லாம் நமக்கு வேணவே வேணாம்மா! நான் ஆவி புடிச்சு, தைலம் தடவிக்கிட்டு, ரசசாதம் கரைச்சு குடிச்சேன்னாலே இந்த காச்ச பறந்து போயிரும்!" என்று அவளிடம் சொன்னவன் சொன்னதைப் போல் மாத்திரைகளின் உதவியை அண்டாமல் வெறும் வெந்நீரைக் குடித்தே காய்ச்சலை சமாளித்து எழுந்து நின்று விட்டான்.
இந்த ஒரு வாரத்தில் ஜெயனுக்கு ஓய்வை தவிர வேறு முக்கிய வேலைகள் இல்லாததால் வதனி பேங்கில் இருந்து வந்ததும்
கீழே ஜெயனுடைய படுக்கையறையையும், மேலே வதனியுடைய படுக்கையறையையும் தம்பதியர் இருவருமாக சேர்ந்து தயார் செய்து வைத்தனர்.
காய்ச்சலும் அசதியுமாக ஒருவாரம் கீழே இருந்த ஜெயன் இன்றிரவு மேலே சென்று படுக்க வேண்டும் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி விட்டு வேலைக்கு சென்றிருந்தான்.
காலை ஐந்தரையில் எழுந்ததில் இருந்து முதல் வேலைக்கு சென்று வந்து இரண்டாம் வேலைக்கு கிளம்பும் வரையிலும் வீட்டில் அட்டவணை போட்டுக் கொண்டு அமுதாம்மா, கோமதி, இளங்கோ, பர்வதவர்த்தினி ஆகிய நால்வரையும் ஜெயன் சமமாகவே கவனித்தான்.
அமுதாம்மாவிடம் பாசச் சேட்டைகள்; வதனியிடம் காதல் சேட்டைகள்; கோமதியிடம் தோழன் போன்ற இயல்பான பேச்சுகள்; இளங்கோவிடம் அண்ணன் மாதிரியான உரிமைப் போராட்டம் என நால்வரில் யாரையும் அவன் அவனுக்காக ஏங்க விடவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள் தான் என்றாலும் திருமணத்திற்கு பிறகு ஜெயன் வதனிக்குள் நிறைய சமிக்ஞை மொழிகள் புதிதாக உருவாகியிருந்தது.
"இப்பதான்டா காச்ச வந்து வெடவெடன்னு ஆடி முடிச்சுருக்க.... ஒம்பொண்டாட்டி கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியிரு!" என்று முகிலமுதம் சொன்ன அறிவுரையை இருவராலுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
உள்ளங்காலில், உள்ளங்கையில், மார்பில் சூடு பறக்க மருந்தை தேய்த்து விட்டு ஒரு போர்வையுடன் அவளையும் தன்னையும் சேர்த்து இதமாக மூடிக் கொண்டு அவனுடைய நெஞ்சில் சாய்பவள் அருகாமை இல்லாமல் அவனால் கண்களை மூட மூடியவில்லை.
வதனிக்கும் ஒருவார காலமாக அவனுடைய முடி படர்ந்த வெற்று மார்பின் வாசமும், அவனது தோள் வளைவிற்குள் குளிர் தெரியாமல் வாகாக ஒண்டிக் கொள்வதும் மிகவும் பழகி விட்டது.
நெற்றி முத்தத்தோடு "குட்நைட்" சொல்லிக் கொண்டவர்கள் இதுவே சொர்க்கம் என்று நினைக்கும் அளவிற்கு ஒருவரிடம் ஒருவர் அடிமையாகி இருந்தனர்.
மாலை ஏழரை மணியளவில் வங்கிக்கு வெளியே வந்து நின்று அவளை தன்னுடைய பைக்கில் ஏற்றிக் கொண்டவன்,
"அப்புறம் மேடம்.... நமக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சு! நாம நியாயப்படி இப்ப மறுவீடு போவணும். அதாவது உங்களோட அம்மாவும் அப்பாவும் நம்ம வீட்டுக்கு வந்து, நம்மள அவங்க வீட்டுக்கு விருந்துக்கு கூப்ட்டு ஒருவாரமோ மூணு நாளோ அவங்க வீட்ல விருந்து வச்சு நமக்கு தட்டு நெறய சீரெல்லாம் குடுத்து நம்மள வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்! இதல்லாம் நமக்கு எப்ப நடக்கப்போவுது?" என்று கேட்டவனிடம்,
"இதல்லா ஒங்கனவுல தான் நடக்கும் ஜனமேஜயன்..... நான் யாரு, என் பேமிலி எப்டி இந்த மாதிரியான எந்த விஷயத்தையும் நா ஒங்கிட்ட ஒளிச்சு மறச்சு உன்னைய கல்யாணம் பண்ணிக்கல. அதுக்கு மேல இந்த மாதிரியெல்லாம் ஆசப்படுறது ஒனக்கு இதுக்கெல்லாம் வழியில்லன்னு எங்கிட்ட நீ சொல்லிக் காட்டுற மாதிரியிருக்கு! நமக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து மொத தடவயா நீ எம்மனசு ஹர்ட் ஆகுற மாதிரி பேசியிருக்க ஜெயன்!" என்று சொன்னவளின் குரலில் அவ்வளவு வேதனை நிரம்பியிருந்தது.
மனைவியின் குரலில் தெரிந்த வேதனை ஜெயனுக்குப் பெரிதாக தெரியவில்லை போலும்!
"அப்டியா..... எம் பொண்டாட்டி ஹர்ட் ஆகிட்டாங்களா? த்சூ.......த்சூ! த்சூ!" என்று அவளிடம் கேட்டு பொய்யாக பரிதாபம் காட்டி உச்சுக் கொட்டினான்.
"வண்டிய ஸ்டாப் பண்ணு ஜெயன்!" என்றவளிடம்,
"ஏம்மா.... காத்தாட அப்டியே நடந்து வருவம்னு நெனச்சியா?" என்று கேட்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவன்,
"நைட்டுக்கு வழக்கம்போல நாலுமொழம் பூ போதுமா? இல்ல எக்ஸ்ட்ராவா கொஞ்சம் தேவைப்படுமா?" என்று குறும்பு நகைப்புடன் கேட்டான்.
"ஏன் இப்டி பண்ற ஜெயன்? ஒம்பேச்சால என்னைய வருத்தப்பட வச்சுருக்க.... ஒனக்குப் புரியுதா இல்லையா?" என்று கேட்டவளிடம்,
"மல்லிப்பூ வாங்கவா? இல்ல பிச்சியா வர்த்தினி?" என்று கருத்து கேட்டான்.
"எனக்கு எவ்ளோ மனசு கஷ்டம் இருந்தாலும், ஒனக்கு ஒன்னோட காரியம் தான் முக்கியம் இல்ல; உங்கிட்ட இருந்து இப்டி ஒரு மைண்ட் செட்ட நான் எதிர்பாக்கல!
ஐ ஹேட் யூ ஜெயன்!" என்று சொல்லி விட்டு விறுவிறுவென நடந்தவளை பார்த்தவன் பெரிதாக அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை.
அவன் பாட்டில் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு சென்று பூவை வாங்கினான். பின்பு அவன் பாட்டில் வீட்டிற்கு செல்லும் பாதையில் கிளம்பி சென்று விட்டான்.
"இடியட்! அறிவு கெட்ட முண்டம்; நல்ல மூடுல இருந்தேன்! லூசு மாதிரி பேசி என் மூடக் கெடுத்ததும் இல்லாம இப்ப என்னை நடுரோட்ல வேற விட்டுட்டுப் போறியா? கல்யாணம் ஆகி பத்துநாள் கூட ஆகல..... அதுக்குள்ள முதல் சண்ட வந்தாச்சு!"
"வீட்ல வந்து நைட்டு சாப்பாட முடிச்ச பிறகு எம்பக்கத்துல வந்து ஹஸ்கி வாய்ஸ்ல மேல வந்து படுக்கலயா வர்த்தினின்னு கேட்டு பல்லக் காட்டு..... அப்ப சப்பாத்தி கட்டைய எடுத்து ஒம்பல்ல உடைச்சு விடுறேன் நானு!" என்று உள்ளுக்குள் குமைந்தபடியே வழக்கமான பாதையில் வீட்டிற்கு நடந்து சென்றாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro