Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 89

அதிகாலை ஐந்தரை மணிக்கு ஜெயனுடைய வீட்டு வாசலில் நின்று கொண்டு இப்போது கதவை தட்டுவோமா வேண்டாமா என்று எட்டு யோசனை யோசித்துக் கொண்டிருந்தவனை மாடியில் இருந்து பார்த்து விட்டு படிகளில் ஓடி வந்தாள் வதனி.

"ஜெயன் எங்க நஸார் ஸார்?" என்று மூச்சிரைக்க கேட்டவளிடம்,

"அதா சொன்னேனேம்மா? சவாரிக்குப் போயிருக்கான். ராத்திரி பூரா தூங்கவேயில்லயா நீயி? இப்ப எதுக்கு என்னையப் பாத்துட்டு திடுதிடுன்னு ஒடியாந்த?" என்று சற்றே அழுத்தமான குரலில் கேட்டான்.

"நீங்க சொன்ன மாதிரி ஜெயன் சவாரிக்கு போயிருந்தா முகில்ம்மாட்ட, எங்கிட்ட.... ஏன் அந்தோ கட்டி வச்சு நிக்குதுங்க பாருங்க.... ரெண்டு ஜீவனுங்க; அதுங்க கிட்ட முதற்கொண்டு சொல்லிட்டு தான் வீட்ட விட்டு கெளம்புவான். ஒரு போன் கூட பேச முடியாம அர்ஜெண்ட்டா  வண்டியெடுத்துட்டு கெளம்பவே மாட்டான்!"

"அப்டியே நீங்க சொல்ற மாதிரி அவன் சவாரிக்கு தான் போயிருக்கான்னா நீங்க எதுக்கு  இந்த நேரத்துல வீட்டுக்கு வந்துருக்கீங்க....? அதுவும் வீட்டுக்குள்ள வராம வெளியவே நின்னு கையப் பெசஞ்சுக்கிட்டு நிக்குறீங்க? என்ன ஆச்சுன்னு தயவுசெஞ்சு சொல்லுங்க நஸார் ஸார்!"

"ஜெயன் இன்னும் கெடைக்கலையா? அவனுக்கு ஒண்ணும் ஆகிடல தான? இஸ் ஹி ஆல்ரைட்? எங்க இருக்கான் இப்போ?" என்று கண்களில் பொங்கி வழிந்த வந்த கண்ணீருடன் நஸாரிடம் கேட்டாள்.

"ஐயோ.... நீ மொதல்ல பயப்படாம இப்டி கண்ணீரு உடாம தைரியமா இரும்மா! ஜெயனுக்கு ஒண்ணுமில்ல!" என்று மென்று விழுங்கியவனிடம்,

"அவனுக்கு ஒண்ணுமில்லன்னா இந்நேரம் அவன் வீட்ல தான ஸார் இருந்துருக்கணும்? ஒரு ஃபுல் நைட் வீட்டுக்கு வராம, எங்க இருக்கேன்னு இன்ஃபர்மேஷனும் குடுக்காம எங்க போனான்? இப்ப கூட அவன் நல்லா தான் இருக்கான்னு சொல்ல மாட்டேங்குறீங்களே நீங்க? ஜெயன் எங்க தான் ஸார் இருக்கான்.... தயவு செஞ்சு சொல்லுங்களேன்!" என்று கைகூப்பி கேட்ட கேள்வியையே மறுமுறை கேட்டவளிடம் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு,

"ஜெயன் லாலி ஹாஸ்பிட்டல்ல தான்மா இருக்.....!" என்று சொன்னவனை பாதியில் நிறுத்தியவள், 

"எங்க.....? லாலி ஹாஸ்பிட்டல்னா சொன்னீங்க நஸார் ஸார்?" என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அவளுடைய கண்கள் இருட்டிக் கொண்டு வர அதிர்ச்சியில் மயங்கி சரிந்தவளை,

"ஏ.... ஏய்! பர்வத வர்த்தினி!" என்று   இருகரம் கொண்டு பற்றிக் கொண்டு கத்தியவன் அவளுக்கு அடிபடாமல் அவளை சுவரோரமாக சாய்த்து அமர வைத்திருந்தான்.

"அம்....மா; அம்மா!" என்று வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டிருந்தவன் இந்த மாதிரியாக ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்று பயந்துதான் ஜெயன் தற்போது இருக்குமிடத்தை சொல்வதற்கு யோசித்துக் கொண்டிருந்தான்.

"வாய்யா நஸா....ரு! நீ என்னய்யா இந்நேரத்துல? அந்த கடாயன் ராத்திரி பூராவும் வீட்டுக்கு வரலயா? எங்க போறதுன்னாலும் சொல்லிட்டுப் போவாம இதென்ன சொல்லாம கொள்ளாம ராத்தங்குற பழக்கம்?"

"நம்ம வதனிப்புள்ள மூஞ்சியில ராத்திரில இருந்து அப்டி ஒரு கொழப்பம்.... ஒங்கூட்டாளி எங்க தான் நஸாரு போய் தொலஞ்சான்.....?" என்று அவள் கேட்டதைப் போலவே முகிலமுதமும் கேட்டதையே அவனிடம் கேட்டுக் கொண்டிருக்க நஸார் அவருடைய கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் முகிலிடம் மெதுவாக வதனியின் புறம் கண்களைக் காமித்தான்.

"ஐயயோ...எம்புள்ள! இவளுக்கு என்னாச்சு?" என்று கேட்டு வர்த்தினியை "தங்கம்.... வதனிக்கண்ணு!" என்று முகத்தில் தட்டிக் கொண்டிருந்தார் முகில்.

"கொஞ்சம் தண்ணிய கொண்டாந்து தெளிங்கம்மா!" என்று சொன்னவனிடம், "தண்ணி... இந்தா வாரேன்!" என்று அவசர அவசரமாக உள்ளே செல்கிறேன் என்று நிலைப்படியில் வேறு முட்டிக் கொண்டார்.

"ஐயோ.... இதுதான் நேரங்காலம் தெரியாம பதறிப்போயி மயங்கி உழுவுதுன்னா நீங்க வேற ஏம்மா? பாத்து பொறுமையா போங்க!" என்று சொன்னவன் கவலையோடு வதனியின் முகத்திற்கெதிராக அமர்ந்திருந்தான்.

"வதனி... வதனிப்புள்ள! எந்திரிடா தங்கமே.... ஐயோ கடவுளே! இப்டி கெடக்காளே? இவபுருஷன் வந்து கேட்டா அவனுக்கு நா என்ன பதில் சொல்லுவேன்?" என்று புலம்பிக் கொண்டே மருமகளின் முகத்தில் லேசாக தண்ணீரை தெளித்தார் முகில்.

தண்ணீர் பட்டதும் கரு விழிகள் லேசாக அசைந்து நினைவு திரும்பியது வதனிக்கு. ஆனால் ஏன் மயக்கத்திற்கு போனோம் என்ற காரணம் இன்னும் மறக்கவில்லை.

"முகில்ம்மா ஜெயனுக்கு ஏதோ பெரிசா ஆகிடுச்சு... நஸார் ஸார் நம்ம கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாரு!" என்று சொல்லி அத்தையைக் கட்டிக் கொண்டாள் வதனி.

"என்னைய முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேச உட்டா தான நான் பேச முடியும்? அழுவுங்க. ஒருத்தர ஒருத்தர் மாறி மாறி கட்டிப் புடிச்சுட்டு அழுவுங்க! இன்னும் எவ்ள நேரத்துக்கு இப்டி மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கப் போறீங்கன்னு நானும் பாக்குறேன்!" என்று சொல்லி விட்டு எழுந்து நின்று கையைக் கட்டிக் கொண்டவனை இருவரும் பாவமாக ஏறிட்டனர்.

"ம்ம்ம்.... இது பரவாயில்ல!
இப்ப நான் சொல்றத ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க! நேத்து ராத்திரி ஜெயன் ரிஸாட்டுல இருந்து கெளம்புற நேரம் மழ பேய்ஞ்சு ரோடெல்லாம் ஈரம் மண்டி கெடந்துருக்கு! அந்நேரம் பாத்து நம்ம குன்னூர் எஸ்ஐ அவர் குடும்பத்தோட எங்கயோ போயிட்டு பைக்ல வந்துருக்காரு!"

"அவரோட பைக் ரோட்டுல ஸ்கிட் ஆகி அவருக்கும் அவரோட பொண்டாட்டிக்கும் கொஞ்சம் கையில காலுல நல்லா கிழிச்சு உட்ருக்கு... ஆனா அவரோட நாலு  வயசுப் பையனுக்குதா தலையில அடி! இவேம்பாட்டுக்கு மூடிக்கிட்டு அவிய்ங்கள பாத்தமா, உச்சுக்கொட்டிட்டு போனமான்னு இல்லாம மொதல்ல ஆம்புலன்ஸ கூப்ட்டு அவிய்ங்கள அதுல ஏத்தி உட்டுருக்கான்! அப்புறம் மெக்கானிக்க கூப்ட்டு எஸ்ஐ ஸாரோட வண்டிய அவர் எடுத்துட்டுப் போற வரைக்கும் கூட நின்னுருக்கான்!"

"குடும்பத்தோட மூணு பேரும் அட்மிட் ஆனதால அவங்களோட பாப்பாவ ராத்திரி பூரா அவனே பக்கத்துல வச்சுக்கிட்டு அதுக்கு தைரியம் வேற சொல்லிக்கிட்டு இருந்து அந்த சின்னப்பயலுக்கு ஒரு யூனிட் ரத்தம் வேற குடுத்துட்டு வந்துருக்கான்! இவ்வளவும் செஞ்சுட்டு இப்ப அவங்க எல்லாரும் ஓரளவுக்கு தேறுனவொடனே தலைவருக்கு குளிர்காய்ச்சல்! இடுப்புல ஊசியப் போட்டு, கையில ட்ரிப்ஸ் போட்டு பெட்டுல படுக்க வச்சுருக்காங்க!"

"தங்கச்சி..... நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத! அவே வீட்டுக்கு வந்தவொடனே இப்டி ஊருக்கு ஒண்ணுன்னா வரிஞ்சு கட்டிட்டு ஓடுவியான்னு கேட்டு செவுளு மேலயே ரெண்டு வையி.....  அப்பத்தான் இனிமே இப்டி ஓட மாட்டான்!" என்று சொன்னவனிடம்,

"இல்ல நஸார் ஸார்..... நீங்க பொய் சொல்றீங்க! ஜெயனுக்கு வெறும் ஜீரம்தான்னு ஹாஸ்பிட்டல்ல ட்ரிப்ஸ் போட்டு இருந்தா, நீங்க அவன ஒரு போட்டோ எடுத்துட்டு வந்து எங்கிட்ட காட்டியிருக்கலாம்ல?" என்று சொன்னவளை சற்று அயர்ச்சியுடன் ஏடாகூடமாக பார்த்து வைத்தான் நஸார்.

"எம்மா.... ராத்திரி நீ ஃபோன் பண்ணி கூப்டதுல இருந்து, அந்த கருவாயன கண்டுபிடிக்குற வரைக்கும் எனக்குப் பைத்தியமே பிடிக்குற மாதிரி ஆகிடுச்சும்மா! ஒருவழியா அந்த எஸ்ஐ ஸார் கொஞ்சம் தெளுச்சிக்கி வந்து, நம்ம பையனப் பத்தி யோசிச்சு அவனப் பத்தி எங்கிட்ட சொல்லி, நாம்போயி அவனப் பாத்துட்டு வார வரையில எத்தன தடவ குதாவ கூப்டேன்னு அவர் ஒருத்தருக்கு தான் தெரியும்! ராத்திரி பூரா தூங்காம கண்ணெல்லா எரியுது! அந்தப்பயலுக்கு ஒரு பாட்டிலு ட்ரிப்ஸ் முடிச்சவொடனே அவன கழுத்துல அடிச்சு பத்தி உட்ருவாய்ங்க! இதுலயும் ஒனக்கு நம்பிக்க இல்லன்னா நீ எஸ்ஐ ஸார் நம்பருக்கே போனப் போடு!" என்று சொன்னவன் வீட்டிற்குள் சென்று ஸோஃபாவில் சாய்ந்து கண்களை மூடினான்.

"முகில்ம்மா.... நஸார் ஸாருக்கு டீ ரெடி பண்ணுங்க. நான் வந்து தோச போட்டு தர்றேன்! அவர் சாப்ட்டு, டீ குடிச்சிட்டு இங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கெளம்பட்டும்! நாம அப்புறமா போயி ஜெயன பாக்கலாம்!" என்று முகிலிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வதனி.

"எம்மா! நல்லாயிருப்ப.... அப்டியே எம்பொண்டாட்டிக்கும் ஒரு போன போட்டு நா இங்க இருக்குறத சொல்லிடு!" என்று சொன்ன நஸாரிடம்,

"அந்த போலீஸ்காரரோட நம்பர் மொதல்ல தாங்க நஸார் ஸார்!" என்று சொன்னவள் மரியத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

மரியத்திடம் ஒருமுறை எல்லாக் கதையையும் சொல்லி விட்டு நஸார் வீட்டில் இருப்பதையும் சொல்ல மரியம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளும் எதிர்முனையில் ஜெயனைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தாள்.

"பத்துரம் பத்துரம்னு நமக்கு பத்துரம் சொல்லும்... ஆனா அது பத்துரமா ஒரு எடமா இருக்காது! ஒனக்கு ஹாஸ்பிட்டலுக்கு போக பயமா இருந்ததுன்னா, நா வேணா தொணைக்கு கூட வரவா வதனிப்புள்ள?" என்று கேட்ட மரியத்திடம்,

"இல்ல.... நஸார் ஸார் உண்மை தா சொல்றாங்கன்னு எனக்கு இன்னும்
நம்பிக்கயில்ல மரியம்! ஜெயன் ஒரு புல் நைட் அவங்களோட ஹெல்ப்புக்காக தான நின்னுருக்கான்; அப்ப அவன் எங்கிட்ட பேசியிருக்கலாம்ல?" என்று நம்பிக்கையில்லாமல் சொல்லி விசும்பினாள் வதனி

"ஏ....புள்ள லூசு! அடச்சீ மொதல்ல அழுகைய நிறுத்து! அங்குட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு இருக்கும் போது ஜெயனு ஒங்கிட்ட கூப்ட்டு பேசுமாக்கும்? பத்தாக்கொறைக்கு
அந்த ஹாஸ்பிட்டல் பேரே தான் ஒனக்குப் பிடிக்காதுல்ல......? அதுனால கூட சொல்லாம உட்ருக்கலாம்!" என்றாள் மரியம்.

"அந்த கடங்காரனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காதுல்ல மரியம்? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு!" என்று தவிப்பான குரலில் சொன்ன வதனியிடம்,

"கொஞ்சம் பயமா இருந்தா கால் பண்ணி பேசு! ரொம்ப பயமா இருந்தா நேர்ல போயி பேசு!" என்று சொல்லி விட்டு வைத்தாள் மரியம்.

முதலில் ஒரு டீயும், ஆறு தோசைகளும் அப்புறம் ஒரு பூஸ்ட்டும் குடித்து விட்டு சற்று தெம்பாக உணர்ந்த நஸார் எட்டரை மணியளவில் முகிலமுதத்திடமும், வதனியிடம் சொல்லி விட்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினான்.

நஸார் கிளம்பிய பிறகு காலை சாப்பாடு கூட சாப்பிடப் பிடிக்காமல் முகிலமுதத்தின் அருகில் சென்று அமர்ந்தவள் அவரது தோளில் சாய்ந்து கொண்டாள்.

"மண்ணு சரிஞ்சு, ரோட்டுல சறுக்கி, வளவுல கண்ட்ரோல் மிஸ் ஆகின்னு இங்க வண்டிங்க உழுவுறதெல்லாம் சாதாரணம்டா வதனி! இவே ஏன் அதப் பாத்துட்டு போயி ஒதவிக்கு நின்னான்னு தான் தெரியல!" என்று அவளிடம் சொன்னார் முகிலமுதம்.

"எந்த ஒரு ஆக்ஸிடென்ட்ட பாத்தாலும் இனிமே எனக்கென்ன போச்சுன்னு போக மாட்டேன்னு
ஒங்க புள்ள வினோத் மேல ப்ராமிஸ் பண்ணியிருக்காராம் முகில்ம்மா...... அதுனால தான் நேத்து அவங்களுக்கு அவ்ளோ ஹெல்ப் பண்ணியிருப்பாரா இருக்கும்!" என்று சொன்னவள் ஜெயனுடைய செயலை எண்ணியும் கண்ணீர் வடித்தாள்.

"என்னம்மா எப்ப பாரு அழுதுக்கிட்டு? அவனுக்கு என்ன காய்ச்ச தான வந்துருக்கு? வா போய் பாத்துட்டு கையோட அவன கூட்டிட்டு வருவம்!" என்று  தேறுதலாக வதனியிடம் சொன்னார்.

"நீங்க ட்ரெஸ்ஸ மாத்திட்டு கெளம்புங்க முகில்ம்மா!" என்றவளிடம்,

"எங்க கெளம்ப? சாப்டு. கூட்டிட்டுப் போறேன்! அதுக்குள்ள ஒருக்கா அவன கூப்ட்டு பேசு! மொகமெல்லாம் பாரு எப்டி அழுது வடியுதுன்னு.... நா போயி பொடவ மாத்திட்டு வாரேன்!" என்று சொன்ன முகிலமுதம் அவருடைய அறைக்குள் போனதும் வதனி அந்த காவலரின் எண்ணுக்கு அழைத்தாள்.

அவரது மொபைலில் கால் கட் செய்யப்பட்டு அடுத்த நிமிடத்திலேயே ஜெயனுடைய அலைபேசியிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அந்த ஒரு நிமிடத்திற்குள் பலமுறை செத்துப் பிறந்து விட்டாள் பர்வதவர்த்தினி.

"ஓய்.... ஹெட்லைட்டு! என்னாடீ; ரொம்ப பயந்துட்டியா?" என்று சற்றே களைத்த குரலில் பேசியவனிடம்,

"எழவெடுத்தவனே, சனியன் புடிச்சவனே, கடங்காரா, பரதேசி, லூசுப்பயலே எங்க போயி யாருக்கு ஹெல்ப் பண்றதுன்னாலும் அத
ஒரு கால் பண்ணி எங்கட்ட சொல்லிட்டு போறதுக்கு என்ன கேடு வந்துச்சு ஒனக்கு?" என்று கேட்டவள் மறுபடியும் தன் சந்தேகம் தலைதூக்க,

"நீ ஜெயன் தான?" என்றாள் அவனிடம்.

"முகில்ம்மா பெத்த முத்துரத்தினம்!
பர்வதவர்த்தினோட பரமசிவம்! குன்னூரோட ராஜா ஜனமேஜயன்.... சாட்சாத் நானே தான் பொண்டாட்டி! எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு! என்னைய கூட்டிட்டுப் போறதுக்கு நீ
இங்க வர்றியா?" என்று கேட்டவனிடம், 

"இதோ நானும் முகில்ம்மாவும் அங்க வர்றதுக்கு தான் கெளம்பிட்டோம் ஜெயன்! வந்துடுறோம்!" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தவள் தன்னுடைய காலை உணவைக் கூட மறந்து விட்டு உடையை மாற்றிக் கொள்ள மேலே ஓட்டமாக ஓடினாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro