Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 88

மாலை ஏழாகி இருந்தது. அன்று வானம் ஒருமாதிரியாக இருட்டிக் கொண்டிருந்தது. மழை வரும் அறிகுறியுடன் சுழற்றி அடித்த காற்றில் பாலிதீன் பைகள் எல்லாம் ரோட்டில் பறந்து கொண்டிருந்தன.

"மழ வரும் போலிருக்கே... ரிஸார்ட்டுக்குப் போறதுக்குள்ள பெரிய மழ புடிச்சிக்கிட்டா நனைஞ்சுடுவமே?" என்ற யோசனையுடன் டீக்கடையில் பால் குடித்த படி ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.

"ண்ணா... ஒரு எட்டு டீ பார்சல்! நம்ம பசங்களுக்கு எடுத்துட்டுப் போறேன் அதுனால நல்லா ஸ்ட்ராங்கா டேஸ்டா போட்டுக் குடுங்கண்ணா!  கேன்ல குடுத்துருங்க. நான் ராத்திரி வரும்போது கேன திருப்பிக் குடுத்துர்றேன்!" என்று சொல்ல
பத்து வருடங்களுக்கு மேல் தன்னிடம் வாடிக்கையாக தேநீர் வாங்கும் ஜெயனை சற்று அதிக நேரம் காக்க வைத்தாலும் அவன் கேட்டது போல் நல்லபடியாக தேநீரைப் போட்டு கேனில் ஊற்றிக் கொடுத்தார் அந்தக் கடைக்காரர்.

தேநீருக்காக நின்ற நேரத்தில் சற்று தாமதமாகி விட தன்னுடன் வேலை பார்க்கும் தம்பிகள் வெறும் வயிறுடன் கிளம்பி விடக் கூடாதென்ற அக்கறையில்
அரக்க பரக்க ரிஸாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் ஜெயன். அவன் ரிஸாட்டை அடைந்ததும் தூறலாக பெய்து கொண்டிருந்த மழை சற்று பெரிதாக பிடித்துக் கொண்டது.

மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

என்று தனது மொபைலில் வைத்த சிச்சுவேஷன் பாடலுடன் ரிஸாட்டின் வாசலில் ரிலாக்ஸ்டாக ஒரு சேரில் அமர்ந்து தானும் அலைபேசியுடன் இணைந்து பாடிக் கொண்டிருந்த நஸார் தான் தன்னுடைய நண்பனைப் பார்த்து விட்டு அவனிடம் கையசைத்தான்.

"நீ எங்கடா இங்க?" என்று கேட்ட படி தன்னுடைய பைக்கிற்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய படி கேட்ட ஜெயனிடம்,

"அத நாங்கேக்கணும் தம்பி! நீங்க என்ன பண்றீங்க இங்க.....?  புதுமாப்ள! அதுவும் மழையோட இங்க கெளம்பி வந்துருக்குற!
காலா காலத்துல வீட்டுக்குப் போயி ஆவுற வேலையப் பாப்பியா.... அத உட்டுட்டு கையில என்ன டீ கேனோட வர்ற....? இப்ப செய்யுற எட்டு வேலையோட டீ விக்குற வேலையவும் சேத்து செய்யப்போறியா? சைனப் டிராவல்ஸுல அப்டியா ஒன்னைய கவனிக்காம உட்டுட்டோம்.....? ஆனாலும் இந்த மழைக்கு சூடா டீ சூப்பரா இருக்குமுடா! பாத்து பாத்து சாப்புட வைக்குறதுல நீ எம்பீவியவே மிஞ்சிட்டடா மாப்புள! இப்பவே எடுத்துக்கட்டா டீய?" என்று கேட்டான் நஸார்.

"வெட்டியா வாய் பேசிட்டு இருக்காத! இத்தன சாமான கையில புடிச்சுட்டு நிக்குறேன்ல? கொஞ்சத்த கையில வாங்கலாமுல்ல? எதையுமே சொன்னா தான் அறிவு வரும் ஒனக்கு!" என்று சொன்ன ஜெயன் கேனில் இருந்த டீயையும், வடை மற்றும் பட்டர் பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு பெரிய பையையும் இரண்டு கைகளில் தூக்கிக் கொண்டு வாசலில் இருந்து ரிஸாட்டிற்குள் சென்று கொண்டிருந்தான்.

"ஹைய்.... பட்டர் பிஸ்கெட்டு; எனக்குடா ஜெயனு!" என்று கேட்டவனிடம்,

"எல்லாருக்கும் இருக்கு. உனக்கும் இருக்கு! பறக்காத! உள்ள வந்து தொல!" என்று நண்பனிடம் சொல்லி அவனை தள்ளிக் கொண்டு சென்றான்.

இருவரும் வரவேற்பறைக்கு வந்ததும் மரியம் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு அவள் பார்த்துக் கொண்டிருந்த ஏதோ வேலையை முடிக்க மறுபடியும் குனிந்து கொண்டாள்.

அவள்முகத்தைப் பார்த்து விட்டு நஸாரிடம் ஒரு பெருமூச்சுடன் "சண்ட போட்டீங்களா ரெண்டு பேரும்?" என்று கேட்டான் ஜெயன்.

"சண்டயெல்லாம் இல்லடா மாப்புள! இவ இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போவணும்னு சொல்லிட்டு இருந்தா! அந்த சைத்தானுங்களால இவ வேல இழுத்தடிக்குதா.... அதான் அவிய்ங்கள உட்டுட்டு நம்மள மொறைக்குறா.... இதுக்கு மொதல்ல ஐடியா குடுத்ததே இவதான்! அதல்லா ஈஸியா மறந்து போயிரும் அவளுக்கு!" என்று மனைவியைப் பற்றி நண்பனிடம் குற்றப்பத்திரிக்கை படித்தான் நஸார்.

"மொறச்சாப்புல..... வேல முடிஞ்சிடுமா? எங்கடா அவனுங்கள காணும்? எப்ப வேலைய முடிப்பானுக?" என்று கேட்டான் ஜெயன்.

"எங்க முடிச்சானுவ.... பொட்டி பொட்டியா இருபது ரூம்பு, ரிஷப்ஸன் ஏரியா, முன்னால லானு, கோழி, வாத்து அடையுற கூடுன்னு இத்தன எடம் இருக்கு. மொத்தமா இருபதாயிரம்னு மரியம் சொன்னவுடனே ஆளாக்கு நாலாயிரம் கெடைக்குமா... அதுவும் ஒரே நாளையிலன்னுட்டு வாயப் பொளந்துட்டு வந்தானுக! இப்ப ரெண்டாவது மாடியில நிப்பானுவன்னு நெனைக்குறேன்! டேய் மாப்புள.... வயிறு பசிக்குதுடா! அந்த பட்டர் பிஸ்கெட்டு....!" என்று மெல்லிய குரலில் கேட்டவனிடம்,

"மரியமுக்கும், அவளோட வேல பாக்குற ஆளுங்க எல்லாருக்கும் டீயும் பிஸ்கெட்டும் எடுத்துக் குடுத்துட்டு நீயும் சாப்டு.....!" என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அவனுடைய சட்டையை கழற்றி விட்டு தன்னுடைய பைக் கவரில் பத்திரப்படுத்தியிருந்த மாஸ்க், கண்ணுக்கு போடும் கண்ணாடி, ஹெட்கேப் அனைத்தையும் போட்டுக் கொண்டிருந்தான்.

"டேய்..... லூசுப்பயலே! காச வாங்கப் போறது அவனுங்க தான? வேலயவும் அவனுங்களே முடிக்கட்டும்னு உடேன்! வந்துட்டான் பெரிசா தம்பிங்கள காப்பாத்துறதுக்கு!" என்று சொன்னவனை ஒரு முறைப்பான பார்வை பார்த்தவன், 

"வேல செய்ய கத்துக்கிட்ட புதுசுல நமக்கு இந்த ரிஸாட்ட மொத்தமா சுத்தம் பண்ணி முடிக்க நமக்கு எத்தன மணி நேரம் ஆகும்?" என்றான்.

"அது ஆகுமே.... ஆறேழு மணி நேரம்! இப்பதா ஒன்றரை ரெண்டு வருசமா எந்த வேலைய எப்டி செய்யணும்னு கத்துக்குட்டதுல இருந்து நமக்கு கொஞ்சம் வேகமா வேல முடியுது!" என்றான் நஸார்.

"அதத்தா பசங்களுக்கு சொல்லித் தரப் போறேன்!" என்று சொன்னவன் இரண்டு எட்டு எடுத்து வைத்து விட்டு மறுபடியும் நஸாரின் அருகில் வந்தான்.

"சட்ட பத்திரம்! கர்ண மகராஜா மாதிரி எவனுக்காவது தூக்கி குடுத்துடாத! அது என்னோட கல்யாண சட்ட!" என்று சொன்னவனிடம்,

"தெரியும் போடா!" என்று சொல்லி ஜெயனை மாடிப்படிகளில் விரட்டி விட்டான் நஸார்.

பத்து நிமிடங்களில் அந்த நண்பர்களை கீழே அழைத்து வந்தவன்,

"மேனேஜர் மேடம்.... நாங்க எல்லாரும் ஒரு டென் மினிட்ஸ் டீ ப்ரேக் எடுத்துக்குறோம்!" என்று மரியத்திடம் அனுமதி கேட்டு அவர்களுக்கு டீயும் பிஸ்கெட்டும் எடுத்துக் கொடுத்தான்.

"ஐயயோ.... நாக்கு தள்ளுதுண்ணா! முடியல.... இப்ப மட்டும் நீங்க டீ குடிக்க கீழ கூட்டியாரலன்னா எங்களுக்கு இந்த வேல இன்னும் ரெண்டுமன்னேரம் இழுத்துருக்கும். இப்ப தான்னா கண்ணே நல்லாத் தெரியுது!" என்று சொன்னவர்களிடம் சிரிப்புடன் வடையையும் எடுத்து சாப்பிட கொடுத்து கொண்டிருந்தான் ஜெயன்.

கேனை கழுவி டீக்கடைக் காரரிடம்
பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்! சில நேரங்களில் நிறைய எண்ணிக்கையில் தேநீர் பார்சல் கேட்பவர்களுக்கு என்று இந்த கேனை அவருடைய கடையில் வாங்கி வைத்திருக்கிறார் என்று நினைத்தவன் நஸாரிடம், "இந்தா வரேன்டா மாப்புள!" என்று சொல்லி விட்டு சென்றான்.

பிஸ்கட்டை டீயில் முக்கி அதைக் குடித்து விட்டு, வடையை சாப்பிட்ட படி கால்களைப் பிடித்து அழுத்திக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தவர்களின் முன் மரியம் வந்து நின்றாள்.

"என்ன தம்பிங்களா? எப்டி இருந்தது வேல?" என்று கேட்டவளிடம்,

"இங்க இவ்ள வேல இருக்கும்னு நெனக்கலக்கா. ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். தூசிய தட்டி, கழுவி, குப்பைத்தொட்டியில எல்லாம் குப்பைய பிரிச்சு க்ளீன் பண்ணி, பெட், தலகாணியோட கவரெல்லாம் மாத்தி.... ஹப்பா! ஒரு வரியில சொல்றதுன்னா நாக்கு தள்ளிருச்சுக்கா!" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களுடைய கஷ்டத்தை அவளிடம் சொன்னார்கள்.

"நாலு பேர் செஞ்சே உங்களுக்கு இந்த வேல இவ்ளோ கஷ்டமாயிருக்கே? இந்த வேலைய நஸாரும், ஜெயனும் சேந்து நெறய தடவ செஞ்சு முடிச்சுருக்காங்க. இந்த ரிஸாட் வேலைய பொறுத்த வரைக்கும் ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ்! அது போக பள்ளிக்கூடத்துல இருந்து ஒண்ணாப் படிச்சவங்க! அந்த உரிமையில தான் ஜெயன் நஸார்ட்ட ஷெட்ல வந்து பேசுறாரு; பழகுறாரு!"

"அவர் லீவு போட்டு வீட்ல இருக்குறப்ப மழை நேரமும் அதுவுமா உங்களுக்கு ஏன் நம்ம எல்லாருக்கும் இப்ப டீயும் வடையும் பிஸ்கட்டும் அவர் எதுக்காக வாங்கிட்டு வரணும்? நம்ம பசங்களுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் பழக்கமில்லயேங்குற அக்கற தான் காரணம்! அவர் உங்க மேல அக்கறப்பட்ட மாதிரி நீங்களும் சைனப் டிராவல்ஸுல இருக்குற உங்க கூட வேல பாக்குறவங்க கிட்ட கொஞ்சம் அன்பா அக்கறயா இருங்க!"

"உழைப்பு ஒண்ணு தான் நம்மள அடுத்த அடுத்த நிலைக்கு உயர்த்திக்கிட்டு போற படிக்கட்டு! இத நீங்க நியாபகம் வச்சுக்கலன்னாலும் பரவாயில்ல! இந்தாங்க.... இன்னிக்கான உங்களோட ஒருநாள் சம்பளம்!" என்று சொல்லி அவர்களிடம் ஆளாளுக்கு ஒரு கவரை கையில் கொடுத்தாள் மரியம்.

"அக்கா.... இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு வேல பாக்கியிருக்கும்னு நெனைக்குறோம்க்கா!" என்று தயங்கிய படி சொன்னவர்களிடம்,

"சீக்கிரத்துல போய் அதயும் முடிங்க தம்பிகளா! இன்னிக்கு நீங்க வேலைய முடிச்சா தான் எல்லாரும் வீட்டுக்கு கெளம்ப முடியும்!" என்றாள் புன்னகைத்த படி.

கையை துடைத்துக் கொண்டே அவர்கள் புறம் வந்தவன்,
"வாங்கடா பசங்களா.... மேல போலாமா?" என்று கேட்டபடி நஸாருடைய பெல்ட்டுக்கும் பேண்ட்டுக்கும் இடையில் கை விட்டு அவனை இழுத்துக் கொண்டு படியேறினான்.

"டேய் நான் என்ன ஒனக்கு எலவச இணைப்பா? ஏன்டா எஞ்சீவன வாங்கித் தொலையுற? கைய உடுறா தடிமாடு!" என்று கத்திய நஸாரும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் புலம்பிக் கொண்டே மாடியறை பெட்ரூமின் ஃபேனைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

எட்டே கால் மணியளவில் சைனப் டிராவல்ஸின் சப்ஸ்ட்டிடுயூட்
ட்ரைவர்களுடன் ஜெயனும் கீழே இறங்கி கொண்டு இருந்தான்.

"வேலைய ஃபுல்லா முடிச்சாச்சுங்க மேடம்!" என்று சொன்னவனிடம் தலையசைத்து புன்னகைத்தாள் மரியம்.

"ண்ணா.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ணா! நீங்களும் ஓனரும் இல்லன்னா கண்டிப்பா பத்து மணிக்குதா நாங்க இந்த வேலைய முடிச்சிருப்போம்!" என்று சொன்னவர்களிடம்,

"அதெல்லா பரவால்ல! நேரங்காலத்துல பாத்து வீட்டுக்குப் போயி சேருங்கடா! இன்னிக்கு எக்ஸ்ட்ரா வேல பாத்தமுன்னுட்டு
நாளைக்கு வேலைக்கு மட்டம் போட்ராதீங்கடா! காலையில வெள்ளன வந்து சேருங்க!" என்று  அந்த பையன்களிடம் சொல்லி அனுப்பினான் நஸார்.

"சர்றா மாப்புள.... அப்டியே நானும் கெளம்புறேன்!" என்று சொன்ன ஜெயன் மரியத்திடம் போய் நின்று,

"என்னைய ஒருவார்த்த கூடப் பேசுனவங்கள எப்டியாவது கசக்கி எடுக்கணுமுனுட்டு இப்ப நீதா கண்ண கசக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்க...... தேவையா இதெல்லாம்;
அவே மேல தூங்கி உழாம ரெண்டு பேரும் பாத்து வீடு போய் சேருங்க.  மழ லேசா தான் அடிக்குது! மறுபடியும் பெரிசா புடிச்சுக்கிடாம!" என்று சொன்னான்.

"போயிட்டு வர்றேன் ஜெயனு!" என்று அவனிடம் தலையாட்டி விட்டு கிளம்பியவளுக்கு அன்றிரவு பன்னிரெண்டு மணியளவில் அலைபேசியில் அழைப்பு வந்தது.

"ம்ப்ச்! ஏய்.....பட்டனு; இந்நேரத்துல என்னடீ அலாரம் அடிக்குது?" என்று உச்சுக்கொட்டி அரைக் கண்களை திறந்தவனிடம்,

"அலாரம் இல்ல நஸாரு! ஃபோனு.... வதனிப்புள்ளதா கூப்புடுது!" என்றாள்.

அவசர அவசரமாக காலை அட்டெண்ட் செய்து "வதனிப்புள்ள என்னம்மா இந்நேரத்துல?" என்று கேட்க மறுமுனையில் சொல்லப்பட்ட விஷயத்தை கேட்டு திகைத்தாள்.

"டேய்.... ஜெயனு இன்னும் வீட்டுக்கு வரலன்னு சொல்றா!" என்று சொன்ன தன்னுடைய மனைவியிடம் வாயில் விரல் வைத்துக் காட்டியவன்,

"ஃபோன கொண்டா இங்க!" என்று சொல்லி மரியத்திடமிருந்து  அலைபேசியை கையில் வாங்கியவன்,

"வதனி.... நஸாரு பேசுறேம்மா! ராத்திரில ஒரு சவாரி மைசூருக்கு கெளம்பணும்னு சொன்னாங்க. ஏதோ அவசரமாம்..... அதான் அவேன் எங்கிட்ட ஷெட்டு சாவிய வாங்கிட்டு அப்டியே கெளம்புனான். அவே ஃபோனாம்மா மழையில கண்டா சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கும்! நா பார்ட்டி கிட்ட பேசிட்டு அவங்க நம்பர்ல இருந்து ஜெயன உங்கிட்ட பேசச் சொல்றேன்மா! நீ பயப்படாம, அமைதியா இரு என்ன?" என்று சொல்லி அலைபேசியை வைத்து விட்டு பெருமூச்சு விட்டவனிடம் பயக்குரலில்,

"நஸாரு என்னடா அந்தப்புள்ள கிட்ட பொய் பொய்யா சொல்லுற.... ஜெயன எங்க?" என்று மரியம் கேட்க நஸார் அவளை கவலையாகப் பார்த்து,

"தெரியல பட்டனு.... தேடணும்! நா கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன். நீ கதவ சாத்திக்க!" என்று சொல்லி விட்டு இரவு ஷார்ட்ஸில் இருந்தவன் தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டிருந்தான்

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro