🌻 அழகி 82
வெளியே போன தன்னுடைய கணவன் வீட்டிற்கு திரும்பி வந்து மாடியில் ஏறிக் கொண்டிருக்கிறான் என்பதை இளங்கோவின் சத்தம் உணர்த்தியது வதனிக்கு.
கோமதியாவது பரவாயில்லை. பொஸஸிவ் பொண்டாட்டி போலத்தான். "என்னைய கவனிக்காம ஒனக்கு வேற என்ன வேல?" என்று அவ்வப்போது சப்தமிட்டு கோபித்துக் கொள்வாள்.
இளங்கோ அவளுக்கும் ஒரு படி மேலே...... தாயின் அருகிலேயே
துறுதுறுவென விளையாடும் அந்த குட்டிப்பையன் கேட்டின் சப்தம் கேட்டாலே தலையை தூக்கிப் பார்த்து விடுவான் போலும்.
வதனியோ, முகிலோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. காலையும் மாலையும் அவனுடன் விளையாடி அவனை இரண்டு உலுக்கு உலுக்கி எடுக்கும் ஜெயன் மட்டுந்தான் இளங்கோவின் கண்ணுக்கு தெரிந்த ஒரே ஒரு ஆள்;
"அண்ணா வந்துட்டியாடா?" என்று அவன் மொழியில் கேட்காமல் ஜெயனை அவன் வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை. இன்று இளங்கோவின் அந்த சப்தம் ஜெயனின் இல்லாளுக்கு தன்னுடைய கணவன் வந்து விட்டதை சொன்ன ஒரு அறிவிப்பு ஒலியாக மாறி விட்டது.
"கீழயா.... மாடியிலயா?" என்று ஒரு காசை சுண்டி பூவா தலையா போட்டுப் பார்த்தவன்,
"நம்ம முடிவ போயும் போயும் ஒர்ருவா காசா சொல்லணும்? நாமளே யோசிப்போம்!" என்று இரண்டு நிமிடங்கள் யோசித்து மொட்டைமாடிக்கு செல்வது என்று தீர்மானித்து மேலே ஏறி விட்டான்.
முகிலும் அன்று மருமகளுடன் இரவு சமையலில் ஈடுபட்டிருந்ததால் ஜெயன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை.
"வதனிப்புள்ள...... வெளிய போயிட்டு வாரமுன்னுட்டு போனவன இன்னும் காணுமேத்தா? ஒரு போன் அடி அவனுக்கு!" என்று சொன்ன முகிலிடம்,
"கால் மணி நேரம் முன்னாலயே ஜெயன் வீட்டுக்குள்ள வந்தாச்சு முகில்ம்மா! இளங்கோ கத்துனத கவனிக்கலயா நீங்க?" என்று பதில் சொன்னாள் வதனி.
"மேல போயி என்னத்தயோ நோண்டிக்கிட்டு இருக்கான் போலிருக்கு!" என்று நினைத்து சிரித்துக் கொண்ட முகிலமுதம் அதற்கு மேல் வதனியிடம் ஒன்றும் கேட்காமல் அவர் சாப்பிட்டு விட்டு,
"நீயுங்கூட ஒக்காந்து சாப்புடலாம்ல?" என்று கேட்டார்.
திருமணம் ஆகும் முன்னரே இந்த கேள்விக்கு வெறும் புன்னகை மட்டும் தான் பதிலாக வரும். இப்போது போய் தன்னோடு சாப்பிட வா என்று கூப்பிடதும் சாப்பிட்டு விடுவாளா இவள் என்று நினைத்தவர்,
"இன்னிக்கு என்னன்னு தெரியல முகில்ம்மா! சரியா பசிக்கவே இல்ல; எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமே..... நீங்க சாப்டுங்க!" என்று சொன்னவளிடம்,
"சரிம்மா! நீங்க ரெண்டு பேரும்
பசிக்குறப்ப மெதுவா சாப்டுங்க!" என்று சொல்லி விட்டு தான் சாப்பிட்டு முடித்தார்.
"ஒம்போதரை மணி ஆகப்போகுது! இன்னும் மேல போயி நின்னுட்டு என்ன பண்றான் இவன்? சாப்ட்டு வேலய முடிச்சா அவங்கூட போயி கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்! நெறய பேசணும் போல இருக்கு... ஆனா எல்லாத்தையும் அவங்கிட்ட சொல்லிட்ட மாதிரியும் இருக்கு? எனக்கு என்ன ஆச்சு? மேல போயி என்ன செய்யப் போறேன்? ஒரு ஐடியாவே இல்லயே?"
"பொதுவா பர்ஸ்ட் நைட்ல பேசணும், நிறைய விஷயத்த ஷேர் பண்ணிக்கணும்ற மாதிரி
சில எக்ஸ்பெக்டேஷன ஹஸ்பெண்ட் வச்சுருப்பாங்க இல்லையா.....? இவன் சும்மாவே என்னைய நிறைய பேசு பேசுன்னு சொல்லுவான்.... இன்னிக்கு அப்டி கேட்டான்னா என்ன பண்றது? என்ன பேசுறது?" என்று யோசித்துக் கொண்டே பாத்திரங்களை கழுவி கவிழ்த்தியவள் அவர்களுக்கான சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு குடைமிளகாய் க்ரேவியை இரண்டு பாத்திரங்களில் வைத்துவிட்டு அடுப்பை துடைத்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டாள்.
"வதனிப்புள்ள..... வேலையெல்லா முடிஞ்சுச்சுன்னா ப்ரிட்ஜ்க்கு பூ வாங்கியாந்து வச்சுருக்கேன். அத எடுத்து தலையில வச்சுக்க தங்கம்!" என்று சொல்லிக் கொண்டு தொலைக்காட்சியில் பழைய பாடலைப் பார்த்துக் கொண்டிருந்த முகிலமுதத்தின் காலடியில் வந்தமர்ந்தாள்.
"அட... இப்டி கட்டில்ல பக்கத்துல வந்து ஒக்காருத்தா!" என்று சொன்னவரிடம் உச்சுக்கொட்டியவள்,
"இதுதா நல்லாயிருக்கு முகில்ம்மா!" என்று சொல்லி அவருடைய மடியில் தலைசாய்ந்து கொண்டாள்.
"என்னடா தங்கம்..... பயமாயிருக்கா?" என்று வாஞ்சையாகக் கேட்ட அந்த பெண்மணியிடம்,
"பயம்னு இல்ல! ஒரு மாதிரியா.... ஜெயனோட எதிர்பார்ப்ப எல்லாம் என்னால.... சரியா குடுத்துட முடியுமா முகில்ம்மா?" என்று கேட்டு அவரை தயக்கத்துடன் ஏறிட்டாள்.
"அடிக் கூறுகெட்டவளே.... மொதநா ராத்திரிலயே இப்டி யோசிச்சன்னா வெளங்குச்சு போ! இந்தபார்றா வதனிக்கண்ணு.... ஒனக்கு வந்துருக்குற இந்த மாதிரி எண்ணத்துல தான் நம்ம இனமே தோத்துப் போயி நிக்குறோம்! அவருக்கு என்ன புடிக்கும், அவருக்கு புடிச்ச மாதிரி நான் இருக்கணுமாங்குற யோசனய முதல்ல உடு. அவன் ஆம்பள.... ஆயிரத்தெட்டு யோசன வச்சிருப்பான். உனக்கு என்ன புடிக்கும், உம்புருஷன் கிட்ட நீ என்னென்னத்த எதிர்பார்க்குறன்னு ஒனக்காக யோசி....!"
"ரெண்டு தனிப்பட்ட மனுஷங்க ஒண்ணாகப் போறீங்க... அந்த எடத்துல ரெண்டு பேரோட எதிர்பார்ப்பும் முக்கியம்! ரெண்டு பேரோட ஆச பூர்த்தி ஆகுறதும் முக்கியம்..... என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?" என்று கேட்ட தன்னுடைய அத்தையை அணைத்துக் கொண்டு மெதுவாக தலையாட்டினாள் வர்த்தினி.
"நீங்க ஏன் முகில்ம்மா எப்பப் பாத்தாலும் எனக்கே ஸப்போர்ட் பண்றீங்க?" என்று சிரிப்புடன் கேட்டவளிடம்,
"ஆ....ங்! நீதா என் ஆச மருமவ! அந்தப் பயலயாவது நா பத்து மாசத்துல இதுதா நம்ம புள்ளயான்னு கண்ணுல
பாத்துட்டேன். ஒன்னிய கண்ணால பாக்குறதுக்கு தானத்தா யாரு எம்மருமவ, யாரு எம்மருமவன்னு நாலஞ்சு வருசமா தவங்கெடந்துட்டேன்? பெறவு ஒனக்கு ஸப்போட் பண்ணாம யாருக்கு பண்றதாமா?" என்று சொன்னவர்,
"இங்க வா!" என்று கூப்பிட்டு அழைத்துக் கொண்டு பூஜையறைக்குள் சென்றார்.
"அவனயெல்லாம் இப்ப கீழ வாடான்னு கூப்ட்டா சத்தியமா இங்க வந்து நிக்க மாட்டான். சாப்புடுறதுக்கு கூட எறங்குறானோ இல்ல மேலயே என்னத்தயாவது
வாங்கி கொண்டு போய் வச்சுட்டானோ தெரியல! நீ என்ன பண்ணு? நம்ம வீட்டு சாப்பாட்ட ப்ரிட்ஜ்ல வச்சுட்டு மேல கெளம்பி போ.....!"
"ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச காதல மட்டும் கடசி வரைக்கும் உட்டுடாம புடிச்சு வச்சுக்கணும். நல்லாயிருக்கணும்!" என்று வாழ்த்தி அவள் நெற்றியில் குங்குமம் வைத்து, சமையலறைக்கு சென்று குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பூவையும் எடுத்து வந்து வதனியின் தலையில் வைத்து விட்டார்.
"முகில்ம்மா.... பூ நெறய இருக்குற மாதிரி இருக்கே?" என்று சொன்னவளிடம் உச்சுக்கொட்டியவர்,
"முடி தான் நல்லா இடுப்பு வரைக்கும் வளந்துடுச்சுல்ல..... பெறவு இந்த நாலு மொழத்த தாங்காதா ஒம்முடி....? இந்தா.... பாத்து பொடவ தடுக்கிடாம இந்த தாம்பாளத்தையும் புடிச்சிக்கிட்டு மேல ஏறிப் போ! கை வலிச்சா ஒம்புருஷன கீழ வரச்சொல்லி கூப்டு!"
"ஒன்னையும் சேத்து தோள்ல போட்டு தூக்கிட்டுப் போயிருவான்! வெளி கேட்ட பூட்டியாச்சு! வீட்டுக் கதவு சும்மா சாத்தித்தா இருக்கு! மேல படுத்தாலும் சரி தான்.... இல்ல கீழ வந்து படுத்துக்கிட்டாலும் சரிதான்.... போயிட்டு வா!" என்று சொன்ன முகிலிடம் "குட்நைட் முகில்ம்மா!" என்று சொல்லி விட்டு சிரிப்புடன் மாடிப்படிகளில் ஏறினாள் வதனி.
புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு தாம்பாளத்தை இடக்கையில் இடுக்கிக் கொண்டு ஒரு சொம்பில் இருந்த பாலை மட்டும் வலக்கையால் பிடித்துக் கொண்டு சிரித்தவள் ஒரு
விசில் சப்தம் கேட்டு மேலே நிமிர்ந்து பார்த்தாள்.
"கீழ வா!" என்று சொன்னவளிடம் முடியாதென தலையசைத்தவன்,
"நீ மேல வா!" என்றான் கண்சிமிட்டி.
"எரும.... பாத்துக்கிட்டே நிக்குறான்! வந்து ஹெல்ப் பண்றானான்னு பாரு!" என்று அவனை திட்டிக் கொண்டே படியேறியவள் மாடியேறியதும் தனது செட்டப்பை மாற்றிக் கொண்டிருந்த மாடியைப் பார்த்து திகைத்துப் போனாள்.
"யேய் ஜெயன்.... என்னப்பா நீ? மொட்ட மாடியில இத்தன சாமான கட பரப்பி வச்சுருக்க?" என்று கன்னத்தில் கை வைத்த படி அவனிடம் கேட்டாள் வதனி.
அவள் அவனிடம் அப்படிக் கேட்டது கொஞ்சமும் அதிகப்படியான வார்த்தையில்லை. அந்த மாதிரியாக தான் ஒரு மணி நேரமாக நிறைய மெனக்கெட்டு அனைத்தையும் தயார் செய்திருந்தான் ஜெயன்.
அவளுக்குப் பிடித்த மக்காச்சோளம், சோன்பப்டி, பபுள்ஸ் பாட்டில் என்று நேந்திரம்பழ சிப்ஸ், ப்ளாஸ்கில் சாக்லெட் டீ என அனைத்தையும் வரிசையாக கொண்டு வந்து அடுக்கி வைத்திருந்தான்.
நடுவில் ஐந்தாறு பெட்ஷீட்களை வேறு வரிசையாக விரித்து வைத்திருந்தவன், பெட்ஷீட்டின் ஓரத்தில் "பொண்டாட்டிக்கு மட்டும்!" என்று ஒரு குறிப்பு வேறு எழுதி வைத்திருந்தான்.
எவன் எவனோ விழாவென்றோ, திருமணம் என்றோ, அவர்களுடைய மறக்க முடியாத நாள் என்றோ ஹோட்டலிலோ, ரிஸாட்டிலோ வந்து
கொண்டாடுவதற்கு கடினமாக உழைத்துக் கொடுப்பவன், என்னுடைய முதலிரவை மட்டும் சும்மா விட்டு விடுவானா என்று கேட்பது போல் இருந்தது அவளுக்கு.
வெளியில் போய் விட்டு வீட்டிற்கு வந்தவன் நேராக மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த பூந்தொட்டிகளை ஒரு ஓரமாய் நகர்த்தி மண் துகள்கள் நிறைய இருந்த இடத்தை நன்றாக கழுவி விட்டு, அந்த இடம் காய்வதற்கு நேரம் இல்லாமல் நஸார் செய்வது போல் தன் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டே முழு மாடியையும் நன்றாக மாப் போட்டு
துடைத்து விட்டான்.
அதற்குப் பிறகு தான் இத்தனை கடை பரப்பலும்...... இந்த பெட்ஷீட்டுகளின் அணிவகுப்பும்!
அவள் கையிலிருந்த தாம்பாளத்தை வாங்கி தான் வைத்திருந்த பொருட்களுடன் சேர்த்து வைத்து விட்டு வந்தவன் அவளிடம்,
"பால மட்டும் குடிச்சுக்கட்டுமா? அது இப்பவே கொஞ்சம் ஆறிப் போயிடுச்சும்மா!" என்று கேட்டான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro