Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 79

"ம்மா.... இப்ப நா நேரா வீட்டுக்கே போவட்டா?" என்று காரின் முன்புற இருக்கையிலிருந்து திரும்பி முகிலிடம் கேட்ட நஸாரிடம்,

"ஆமாய்யா..... நாளைக்கு காலையில ஜெயனு கோயிலுக்குப் போயிக்கிடுவான்... நீ இப்ப வீட்டுக்கே போயிடுய்யா!" என்று சொன்னார் முகில்.

அறையில் இருந்து வெளியேறிய மகனின் கோலத்தைப் பார்த்ததும் அவனை ரெண்டு திட்டு திட்டி விட்டு
தான் போட்ட திட்டத்தை தானே மாற்றியமைத்து விட்டார்.

"எங்கயாவது ஊரு சுத்த கெளம்பிடாத! நேரா வீட்டுக்கு வரணும். புரியுதா?" என்று சொன்னவர் வதனியை அவனுடன் பைக்கில் ஏறச் சொல்லி விட்டு நஸாருடன் காரில் வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார்.

"ஓய் ஹெட்லைட்டு..... இப்ப ஒருக்க ஒங்க புருஷன இறுக்கி அணைங்க பாப்போம்!" என்று சொன்னவனிடம் சந்தேகக் குரலில்,

"முகில்ம்மா கோபமா இருக்காங்களா ஜெயன்? என்னைய உங்கூட வரச் சொல்லிட்டு கெளம்பிட்டாங்க?" என்று கேட்டாள்.

"அது...... ஒரு சின்ன பெசகு! நா ஒனக்கு வீட்ல போயி அந்த கதைய சொல்றேன்!" என்று சொன்னவனின் இடையை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்துக் கொண்டவள் பின்னிருந்து அவனிடம்,

"இது போதுமா வீட்டுக்கார்?" என்று புன்னகைத்த படி கேட்டாள்.

"மேடம்.... நானெல்லா வெளிய சுத்துற கார்! நீங்கதா என் வீட்டுக்கார்! வீட்டுக்குப் போற வரையில ஸீட்ல என்னைய விட்டு
பின்னால தள்ளிப் போயி ஒக்காரக் கூடாது..... பாதியிலயே எஇடுப்புல இருந்து கைய எடுத்துடக் கூடாது!
பொடவ உடுத்தியிருக்க வேற! ஜாக்ரதயா ஒக்காரு!" என்று அவளுக்குப் பத்திரம் சொன்னவன் அவளுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து பைக்கை நிறுத்திய போது முகிலமுதத்தின் தோழி சாந்தலெஷ்மி ஆரத்தி தட்டுடன் நிற்க நஸார் வீட்டைத் திறந்து விட்டு டிக்கியில் இருந்த நிறைய பரிசுப்பொருட்கள், மண்டபத்திற்கு எடுத்து சென்ற சில பைகள் எல்லாவற்றையும் வீட்டுக்குள் கொண்டு போய் வைத்து விட்டு மணமக்கள் திருமண வேளையில் அணிந்திருந்த மணமாலைகளை காரில் இருந்து எடுத்து வந்து நண்பன் கையில் கொடுத்தான்.

"எதுக்குடா இன்னொருக்க மால?" என்று கேள்வி எழுப்பிய ஜெயனிடம்,

"இன்னொருக்க ஆரத்தி எடுக்க போறாங்கல்ல.... அதுக்குத்தா! போட்டுக்க; ஒவீட்டுக்காரம்மாவுக்கு ஒண்ண போட்டு உடு!" என்று சொன்னான்.

"இந்தா ஹெட்லைட்டு! நீ ஒண்ணு போட்டுக்க!" என்று அவள் கையில் ஒரு மாலையை தந்தவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் நஸார்.

மனதளவில் நெருங்கிய பிறகு வதனியை இப்போதெல்லாம் மேடம் என்று அழைக்க வாயே வரவில்லை அவனுக்கு. அவள் அவனை ஸார் என்று அழைத்தாலும் அவன் அவளை மனதிற்குள் எப்போதோ தன்னுடைய தங்கையாக ஏற்றுக் கொண்டு விட்டான்.

"என்ன சாந்தாமா..... கல்யாணத்துல நல்லா சாப்டியா?" என்று கேட்ட ஜெயனிடம்,

"ஒருவேள நல்லா திருப்தியா சாப்டேன்டா தம்பி!" என்று சொன்ன சாந்தாமா,

"ஜெயனு..... வதனிப்புள்ள நல்ல பொண்ணுடா! ஒருநா ஒங்களுக்கு சாப்பாடு எடுத்தாரயில இட்லி அவிச்சு கொண்டாந்துட்டேன்; இவளுக்கு அத சாப்புட பிடிக்காதுன்னு எனக்குத் தெரியாது; நமக்காக செஞ்சு கொண்டு வந்துட்டாங்களேன்னு அன்னைக்கு இட்லியத்தா சாப்ட்டுப் போச்சு!"

"இப்டி அனுசரிச்சுப் போற பொண்டாட்டி ஒனக்கு கெடச்சது நீ செஞ்ச யோகமுய்யா! அவள நல்லாப் பாத்துக்க..... வதனி நீயுந்தான்தா எங்க ஜெயன நல்லா வச்சுக்கணும்..... ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷத்தோட நூறு வருஷம் நல்லாயிருக்கணும்!" என்று வாழ்த்தினார்.

"ஏன்டீ.... லெச்சு! இட்லி கதய எப்ப சொல்லலாமுன்னு இம்புட்டு நாளா மனசுல வச்சுக்கிட்டு இருந்தியா?
மதியம் அங்க சாப்புடாம கெளம்பி வந்துட்டியா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார் முகில்.

"உள்ள போங்க புள்ளைங்களா! நா இந்தா வாரேன்!" என்று அவர் சொன்ன போது மணமக்கள் என்னைப் பார்க்காமல் எப்படி வீட்டிற்குள் செல்லலாம் என்ற கேள்வியுடன் கோமதி ஜெயனை சப்தமிட்டு அழைத்தது.

"கோமதி.... ஒன்னைய எப்டி கண்ணு மறந்தேன்? இந்தா வந்துட்டேன்டீ அழகி!" என்று சொல்லி உடல் சிலிர்த்தவனிடம்,

"ஏலேய்.... இந்நேரத்துல போயி மாட்டக் கொஞ்சிக்கிட்டு கெடக்காதடா..... புதுச்சட்ட; அது வாயில இருந்து எச்சிய வடிச்சி
வீணாகிடப் போவுது!" என்று எச்சரித்தான் நஸார்.

"அதெல்லாம் பாத்துக்கலாம்டா மாப்புள!" என்று சொல்லி நஸாரின் மறுப்பை காதில் வாங்காமல் மாலையைக் கழற்றி மனைவியிடம் கொடுத்து விட்டு கோமதியின் அருகே சென்றான் ஜெயன்.

"நீங்க எவ்ளோ சொன்னாலும் இப்ப இவர் காதுல எதுவுமே விழாது நஸார் ஸார்! நீங்க உள்ள வாங்க! உங்க ப்ரெண்ட் உள்ள வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷம் கால்மணி நேரம் ஆகும்!" என்று சொன்ன வதனி கணவனோடு கோமதியின் அருகில் சென்று ஒரு நிமிடம் நின்று விட்டு வீட்டிற்குள் வலது காலெடுத்து நுழைந்தாள்.

"ஏம்மா.... எந்நேரமும் இவேன் அது கிட்ட மொகரய நக்க குடுத்துக்கிட்டே இருக்கானே? அது நீ வாங்கிக் குடுத்த மாடுங்கறதுனாலயா?" என்று சந்தேகம் எழுப்பிய நஸாரிடம் மெல்லிய சிரிப்புடன்,

"அதுனாலயும் இருக்கலாம்.... இப்பல்லாம் நல்ல பால் குடிக்கிறாரே அதுனால கூட இருக்கலாம்.... எப்டியோ நான் குடுத்த கிப்ட்லயே கோமதியும், இளங்கோவும் தான் அவருக்கு ரொம்ப பிடிச்சது; உட்காருங்க! உங்களுக்குத்தான் ஸார் எங்களால ரெண்டு நாளா நிறைய வேல....!" என்று சொல்லிக் கொண்டே அவனை அமரச் சொன்னவளிடம்,

"அதனால என்னம்மா....? ஜெயனுக்கும் ஒனக்கும் செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம்?" என்று பதிலளித்தான் நஸார்.

சாந்தலெஷ்மியின் வீட்டிற்கு சென்று விட்டு கறவைக்காரர் அவர்களுடைய வீட்டில் கொடுத்து வைத்திருந்த பாலை வாங்கி வந்த முகிலமுதம் அதைக் காய்ச்சி நஸாருக்கு ஒரு டம்ளர் காஃபியை போட்டுக் கொடுக்கும் வரையிலும் ஜெயன் வீட்டின் முன்பகுதியில் கோமதியுடன் தான் நின்று கொண்டிருந்தான்.

அதற்குள் வதனி மாலைகளை அறையில் ஹேங்கரில்
மாட்டி வைத்து விட்டு மடமடவென சாமான்களை பிரித்து பரிசுப் பொருட்களை எல்லாம் ஜெயனுடைய அறையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"எலே.......ய்! உள்ள வாரியா என்ன?" என்று முகில் கூப்பிட்ட பிறகு தான் "அமுதாம்மா கூப்டுது!
அப்புறமா பாப்பமா கோமதி... எளங்கோ; அண்ணே உள்ள போறேன்டா!" என்று அவர்கள் இருவருக்கும் அப்போதைக்கு பை சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றான்.

"வதனிக்கண்ணு.... சாமி ரூமுக்குள்ள போயி வெளக்கு ஏத்துடா! அப்டியே இங்க அடுப்படிக்குள்ள வந்து உப்பு, புளி, அரிசியில கைய வச்சு எடு!" என்று சொன்னார் முகிலமுதம். மனைவியின் பின்னால் ஜெயனும் சென்று அவள் என்னென்னவெல்லாம் செய்கிறாள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

"சர்றா மாப்புள.... அப்ப நா அப்டியே கெளம்புறேன்டா! நீ ஒருவாரம் ஷெட் பக்கம் வர வேண்டாம்; ரெண்டு பேரும் எங்கயாவது போயிட்டு வாங்கடா!" என்று சொன்னவனிடம்,

"நீ மேல வா! ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்று சொல்லி நஸாரை மாடிக்கு அழைத்துச் சென்றான் ஜெயன்.

"என்னடா.... இப்டி தனியா கூட்டிட்டு வந்து பேசுற அளவுக்கு அப்டி என்ன ரகசியம் பேசப்போற?" என்று அவனிடம் கேட்டபடியே,

"இதுதா நம்ம தங்கச்சி வீடா? நல்லாத்தான்யா ஒரு சாமானுமில்லாம காலியா அழகா வச்சுருக்கு!" என்று சொல்லி வதனியுடைய அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

"டேய்...... இதல்லாம் கெடக்குது விடு! புதுப்பசங்க கல்யாணத்துக்கு வரலயின்னு சொல்லி நீ அவிய்ங்கள திட்டுனியாமே....? ஏன்டா?" என்று கேட்டவனிடம்,

"பட்டனு..... அதுக்குள்ள
அதையும் ஒங்கிட்ட போட்டுக் குடுத்துட்டாளா? அவள..... வீட்டுக்குப் போயிட்டு வச்சுக்குறேன்!" என்று சொன்னவனின் பின் மண்டையில் பொளீரென்று ஒரு அடி அடித்தான் ஜெயன்.

"அட கெரகம் புடிச்சவனே.... இப்ப  எதுக்குடா என்னைய அடிக்கிற?" என்று கேட்ட நஸாரிடம்,

"எதுக்கு அவிய்ங்கள திட்டுன?" என்று மறுபடியும் கேட்டான்.

"திட்டாம.... என்ன பண்ணுவாய்ங்க பெறவு? பூராப்பயலும் கொறமாசத்துல பொறந்தவனுவளா இருப்பானுவ போலிருக்கு! நேத்தும் ஏதோ அக்கப்போர கூட்டிருக்கானுவ.... அது முடிஞ்சுச்சுன்னு பாத்தா இன்னிக்கும் மொத்தமா காணாப் போயிட்டானுவ!"

"அது கூடப் பரவாயில்லடா...... கஸ்டமர் எங்க போனாலும் வந்தாலும் அவனுங்க பையையும், சாமானுங்களையும் நாங்க எதுக்கு ஒவ்வொரு எடத்துலயும் கணக்கு எடுக்கணும்னு கேக்குறானுக... அதெல்லாம் அவனுங்க வேல கெடையாதாமா! இந்த சர்வீஸ் கஸ்டமர்ஸ்க்கு ரொம்ப திருப்தியா இருக்குடா.... நம்ம ஸ்டாஃப்லயே ஒருத்தர் பாராட்டெல்லாம் வாங்கியிருக்காருன்னு சொன்னா அத வச்சு என்ன ஸாரு செய்யுறதுன்னு கேக்குறானுகடா ஜெயனு!"

"அதான்..... வேலைக்கு வர்ற எடத்தோட தேவைகள புரிஞ்சுக்கிட்டு வேலையில இருக்குறதுன்னா இருங்க! இல்லாட்டி கெளம்புங்கடான்னு சொல்லிட்டேன்.... ஆனா இதெல்லாம் மரியத்துக்கு தெரியாது; கல்யாணத்துக்கு வரலன்னு திட்டுனத மட்டுந்தா அவ கிட்ட சொன்னேன்.....!"

"ஒழப்பே இல்லாம சம்பளம் மட்டும் வேணுமுன்னா எங்கிட்டு இருந்துடா குடுக்குறது?" என்று வருத்தத்துடன் கேட்டான்.

"கொஞ்சங் கஷ்டந்தான்டா மாப்புள.... இருக்குற இம்சயில நீயி என்னிய வேற ஒருவாரம் லீவு எடுத்துக்க சொல்றல்ல....? எனக்கு இன்னும் ரெண்டுநா லீவு போதும். அதுக்குப்புறம் நா வந்துருவேன். பயலுகளுக்கு நம்மளோட பக்க நியாயத்த புரிய வப்போம்!" என்றான் நஸாரின் தோளை தட்டிக் குடுத்து!

"டேய்..... பேசிக்கிட்டே மறந்துட்டேன் பாரேன்! இந்தா ஒங்கல்யாணத்துக்கு ட்ராவல்ஸ்ல இருந்து குடுக்குற அன்பளிப்பு! இது நம்ம எல்லா ட்ரைவர்ஸூக்கும் கல்யாணம் ஒனவொடனே குடுக்குற பரிசு...... அதுனால நீ இத வேணாமுன்னு சொல்லக்கூடாது!" என்று சொல்லி ஜெயன் முன்பாக ஒரு கவரை நீட்டினான்.

"எவ்ள வச்சுருக்க இதுல?" என்று கவரை சுட்டிக்காட்டி ஜெயன் கேள்வி கேட்க,

"டேய்..... எவ்ள இருந்தா என்னடா? பணத்த கையில வாங்கு மொதல்ல!" என்றான் நஸார்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro