🌻 அழகி 77
"அதுக்கு தான ஸார் நான் எங்கண்ணாடியெல்லாம் தொடச்சு மாட்டிட்டு வந்துருக்கேன்? ஒங்கள சூப்பரா பாத்துக்கிட்டாப் போச்சு!" என்று பதிலளித்து விட்டு புன்னகைத்தாள் வர்த்தினி.
"ஏய்... என்ன இவ்ள குனிஞ்சுட்டு இருக்க? நிமுந்து பாருடீ! நா
அழகா இருக்கனா பொண்டாட்டி?" என்று கேட்டவனை "ம்ம்ம்....!" என்ற யோசனையுடன் மேலிருந்து கீழே வரை ஒரு முறை பார்த்து விட்டு நிமிர்ந்தவள் அவனிடம்,
"அழகா தான் இருக்க! பட் ஒன்னோட குட்டி தொப்ப மட்டும் இல்லன்னா இன்னும் அழகாயிருப்ப!" என்று சொல்லி விட்டு தன்னுடைய சிரிப்பை வாய்க்குள் போட்டு மென்றாள்.
"ஏய்.... யாருக்குடீ தொப்ப இருக்கு? எனக்குலா இல்ல..... இங்கணக்குள்ளயே வச்சு சட்டைய தூக்கி காட்டுறேன் பாக்குறியா?" என்று கோபமாக கேட்டவனிடம்,
"கூல்.... மிஸ்டர் ஜெயன்! உண்மைய சொன்னா கோபம் தான் வரும்! பொண்டாட்டிய விட்டுட்டு தனியா சாப்டா தொப்ப தான் வரும்! அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது; டென்ஷனாகாத... ரிலாக்ஸா இரு....!"
"திண்ணன் தாத்தா கூட நான் பேசுனேன். புதுச் சட்டை போட்டு டேஸ்ட்டான ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டதுனால அவருக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷம்; எதுக்கு செலவழிக்கணுமோ, அதுக்கு சரியா செலவழிச்சுருக்கன்னு சொல்லி ஒன்னைக் கூட ரொம்ப புகழ்ந்து பேசுனாரு ஜெயன் அவர் நம்மள மறுபடியும் அவரோட வீட்டுக்கு வரச்சொல்லி கூப்டாருப்பா!" என்று சொன்னவளிடம் புன்னகைத்தவன்,
"ஒருநா போலாம்!" என்றான்.
அச்சுதனோடு சேர்ந்து வதனியின் பேங்க் நண்பர்கள் கிட்டத்தட்ட முப்பத்தைந்து பேர் வந்திருந்தனர். அவளுடைய மேனேஜரிடம் சென்ற முகிலமுதம்,
"வாங்க ஸார்.... வந்து புள்ளைங்களோட கல்யாணத்த நடத்திக் குடுங்க!" என்று சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார்.
"ஏய்.... ஜெயன்! என்னடா எங்க மேனேஜரயா கல்யாணத்த நடத்த சொல்லி கேட்ருந்தீங்க?" என்று கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையாட்டியவன்,
"இவன கூப்டா அவன கூப்டல, அவன கூப்டா இவன கூப்டலன்னு பிரச்சன வரும்! எனக்கு பெர்சக் கூப்ட்டு கல்யாணத்த நடத்த சொல்லணும்னு ஒரு ஆச தான்.... அமுதாம்மா தான் பத்திரிக்க வைக்கப் போன எடத்துல ஒங்க மேனேஜர் கிட்ட கல்யாணத்த நடத்திக் குடுங்கன்னு கேட்ருச்சு..... அதான்!" என்று விளக்கம் அளித்தான் ஜெயன்.
நஸார் வதனியின் மேலாளரை மரியாதையாக மேடைக்கு அழைத்து வந்து அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்து விட்டு மேடையில் ஓரமாக நின்றான்.
வதனியின் மேலாளர் மேடை ஏறி ஜெயன் வதனி இருவரையும் முதலில் மாலை மாற்றிக் கொள்ளச் சொன்னார்.
"ஏய்... ஹெட்லைட்டு! மாலைய முதல்ல நான் உனக்கு போடணுமா? இல்ல நீ எனக்குப் போடுவியா?" என்று மணமேடையில் நின்று கொண்டு அவளிடம்
மிக முக்கியமான ரகசியம் கேட்டவனிடம்,
"நீ தான் எனக்குப் போடணும்!" என்று மெதுவான குரலில் சொல்லி அவன் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள் வதனி.
"எல்லாருக்கும் வணக்கம்! இந்த கல்யாணத்துல கலந்துக்கிட வந்தவங்கள்ல என்னை விட வயசுல பெரியவங்களும் இருக்குறீங்க... உங்கள எல்லாம் விட்டுட்டு மிஸ்டர் ஜனமேஜயனோட அம்மா இந்த கல்யாணத்த நடத்தி வைக்க என்னைக் கூப்டதுல ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு..... அது என்ன தெரியுங்களா?" என்று கீழே அமர்ந்திருந்தவர்களை பார்த்து கேட்டார்.
"என்னவா இருக்கும்?" என்று கீழே இருந்த அனைவரும் பக்கத்தில் உள்ளவரிடம் மெல்லிய குரலில் பேசி அவர்களுக்குள்ளாகவும் யோசித்துக் கொண்டிருந்த போது ஜெயனும் வதனியிடம் அதே கேள்வியைத் தான் கேட்டு முடித்திருந்தான்.
"நீங்க இவ்ளோ யோசிக்குற அளவுக்கு இது ஒண்ணும் பெரிய விஷயமில்ல! இந்த கல்யாணத்துல ஜெயனோட நண்பர்கள் நிறைய பேரு வந்துருக்காங்க.... அவங்க யாரையாவது கல்யாணத்த
தலைமை தாங்க கூப்ட்டா எங்களோட நண்பர் இப்படிப்பட்டவருன்னு ஆரம்பிச்சு இன்னும் அரமணி நேரத்துக்கு கல்யாண வைபவத்த இழுத்துடுவாங்க!"
"சரி.... நண்பர்கள் வேண்டாம்! உறவுக்காரங்கள கூப்டுவோம்னு யோசிச்சா அவங்க எங்களோட பையன எப்டியெல்லாம் இந்த பொண்ணு பாத்துக்கணும் தெரியுமான்னு ஆரம்பிச்சு பொண்ணுக்கு நிறைய அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க!
"இந்த ரெண்டு பிரச்சனையும் வர வேண்டாம்னு நெனச்சு தான் மிஸ்டர் ஜனமேஜயனோட அம்மா விவரமா என்னைய மாதிரி ஒரு மூணாவது மனுஷன் கிட்ட பொறுப்ப ஒப்படைச்சுருக்காங்க!"
"உங்க எல்லாருடைய சம்மதத்தோடயும், ஆசிர்வாதத்தோடயும் இப்ப இந்த மணமக்களுக்கு திருமணம செஞ்சு வைக்குற பாக்கியத்த நான் வாங்கிக்குறேன்!" என்று சொன்னவர்,
"மிஸ்டர் ஜனமேஜயன் எழுந்திரிங்க தம்பி!" என்றார்.
"தம்பி!" என்ற மூன்று எழுத்துக்கள் அவர் வாயில் இருந்து வெளியேறி சொல்வதற்குள் எழுந்து நின்றிருந்தான் ஜனமேஜயன்.
"பர்வதவர்த்தினி என்ற இந்த கன்னிகையை இன்று முதல் உங்களுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களிலும் லாப நஷ்டங்களிலும் அவளுக்கு சமவாய்ப்பு அளித்து கடைசி மூச்சு உள்ள வரை அவளைப் பாதுகாத்து காதல் தர உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்டவரிடம்,
"பர்வதவர்த்தினியை மணந்து கொள்ள எனக்கு பரிபூரண
சம்மதம்! அவள கடசி வரை நேசித்து பாதுகாத்து சுக துக்கம் லாப நஷ்டத்தில் சம வாய்ப்பு அளிப்பேன். சத்தியம்!" என்று கொஞ்சம் கூட பிசிரற்ற தெளிவான குரலில் அவரிடம் சொன்னான் ஜெயன்.
"வதனி.... எழுந்திரிம்மா!" என்று சொன்ன தன்னுடைய மேலாளரின் பேச்சைக் கேட்டு எழுந்து நின்றாள் வர்த்தினி.
"மாப்ள; பொண்ணோட கைய புடிச்சுக்கோங்க.....!" என்று சொன்னவரை பார்த்து லேசாக புன்னகைத்தவன் அவளது சில்லிட்டிருந்த வலக்கரத்தை தன் கரத்தால் பற்றிக்கொண்டு அவள் கையில் லேசாக அழுத்தம் தந்தான்.
"ஜனமேஜயன் என்ற இந்த வாலிபரை இன்று முதல் உங்களுடைய கணவராக ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களிலும் லாப நஷ்டங்களிலும் அவருக்கு சமவாய்ப்பு அளித்து கடைசி மூச்சு உள்ள வரை அவரை காதலித்து அவர் காரியம் யாவிலும் துணைக்கரம் தர உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்டவரிடம் ஜெயனைப் போலெல்லாம் திக்காமல் திணறாமல் நிறைய பேச முடியும் என்று வதனிக்கு தோன்றவில்லை.
ஏற்கனவே இவ்வளவு பேரின் நடுவில் அமர்ந்திருக்கிறோமே என்ற பதட்டத்தில் தொண்டைக்குழியை ஏதோ துணி வைத்து அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. அவனது கரத்திற்குள் தன்னுடைய கை சிக்கியிருக்கும் பயம் ஒரு புறம்!
"வர்த்தினி! ஸார் ஒன்னையத்தான்டீ பேசச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்காரு..... ஏதாவது சொல்லு!" என்று அவள் காதருகில் ரகசியம் பேசியவனிடம் தலையை அசைத்தவள்,
"சம்ம.....தம்!" என்று மட்டும் சொல்லி விட்டு அவன் கண்களைப் பார்த்திருந்தாள்.
ஒரு பெண் அதை தன் கழுத்தினில் அணிவதனால் மட்டுமே மதிப்பு கூட்டப்படும் தங்க ஆபரணமான திருமாங்கல்யத்தை தன்னுடைய கைகளில் எடுத்து இந்த மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டுமென தன்னுடைய இஷ்டதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டவர் அதை ஜெயனுடைய கைகளில் கொடுத்தார்.
இப்போது சுமை ஜெயன் கைகளில் அமர்ந்திருந்தது!
"கல்யாணமுன்னா இவ்ள பயமா இருக்குமாடா? நம்ம கூடவே சுத்துற ஒரு பக்கியும் இத நம்ம கிட்ட சொல்லவேயில்ல?" என்று நினைத்தவன் பெரிதாக ஒரு மூச்செடுத்துக் கொண்டு,
"வர்த்தினி.....!" என்றான் அவளைப் பார்த்து.
தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் புன்னகையுடன் தலையசைத்து "ம்ம்ம்!" என்று அவனுக்கு சம்மதம் கொடுத்தாள்.
நஸாருடைய மொபைலில் நாதஸ்வரம் மேளத்தின் இசை ஒலிக்க, ஜனமேஜயன் தன் கையில் இருந்த திருமாங்கல்யத்தை வர்த்தினியின் கழுத்தில் அணிவித்து அவளை தன் வாழ்க்கைத் துணைவி ஆக்கிக் கொண்டான்.
முகிலமுதம், மரியம் மற்றும் அவளது குழந்தைகள், பாயம்மா மற்றும் அவருடைய கணவர்,
திண்ணன், அச்சுதன், ஜெயனுடைய நண்பர்கள், வதனியுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கைதட்டி பூ இதழ்களை தூவி அந்த திருமணத்திற்கு ஆசிகள் வழங்கினர்.
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸூங்க ஸார்..... என்ன சொல்ல வர்றமோ அத கரெக்டா சொல்றதுங்குறது ஒரு கலை போலிருக்கு! நான் இதுவரைக்கும் பாத்த கல்யாணத்துலயே என்னோட கல்யாணந்தா ரொம்ப அழகாயிருந்தது. அதுக்கு முக்கால்வாசி காரணம் நீங்க தான்.... எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க ஸார்!" என்று சொன்ன ஜெயன் தன் மனைவியுடன் அந்த மேலாளரின் கால்களில் விழுந்து கும்பிட்டான்.
"நல்லாயிருங்க மிஸ்டர் ஜனா.... வதனி ரொம்ப கொயட்.... பட் ரொம்ப சின்சியர் கூட! இந்த பொண்ணு முகத்துல சந்தோஷம் நிறைஞ்சு இருக்கணும். அத மட்டும் பாத்துக்கோங்க! விஷ் யூ ஹேப்பி மேரீட் லைஃப்!" என்று வாழ்த்தி கைகுலுக்கியவரிடம்,
"தேங்க்ஸூங்க ஸார்! கண்டிப்பா சாப்ட்டு போகணும்!" என்று சொன்னான் ஜெயன். அப்போதும் வதனி பொம்மை போல் அவன் அருகில் பேசாமல் தான் நின்று கொண்டிருந்தாள்.
அவர் மேடையிலிருந்து கீழே இறங்கும் போது அவசர அவசரமாக சென்று நன்றியும் சாப்பிட்டு செல்லுங்கள் என்ற கோரிக்கையும் வைத்து விட்டு வந்தாள்.
முகிலமுதம் மேடை ஏறி வந்த போது வதனி அவர்களுடைய கன்னம் கிள்ளி முத்தமிட்டு,
"மாமியார்..... இப்ப நீங்க எனக்கு அஃபிஷியலா மாமியார் ஆகிட்டீங்க மாமியார்!" என்று சொல்ல சந்தோஷ மிகுதியில் தன் மருமகளை கட்டியணைத்து அவளது நெற்றி வகிட்டில் இதழ் பதித்தார் முகிலமுதம்.
"எனக்கெல்லாம் ஒண்ணும் கெடையாதாக்கும்?" என்று கோபமாக கேட்டவனிடம்,
"ஒனக்கில்லாமயாடா என் ராஜா?" என்று கேட்டு அவனுக்கும் ஒரு முத்தம் தந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மணமக்கள் தங்களுக்கு தொடர்ந்து கிடைத்த வாழ்த்துகள் மற்றும் பரிசுகளால் களைத்துப் போய் விட்டனர்.
ஒருபுறம் பந்தி நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் சாப்பிட்டு விட்டு முகிலிடம் விடைபெற்றவர்கள் அவர்கள் பாட்டில் அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
"டேய்.... புருஷா; இந்த ஸாரி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! இவ்ளோ நேரம் இத கட்டியும் எனக்கு கொஞ்சங்கூட ஒரு அன்கம்பர்டபிள் ஃபீலே வரல..... எனக்காக பாத்து பாத்து செலக்ட் பண்ணியா?" என்று கேட்டவளை பார்வை மாற பார்த்திருந்தவன்,
"நேத்து சாப்ட அல்வா மாதிரியே இருக்கடீ.... என்ன அது தேன் கலருல இருந்துச்சு! நீ செவப்பு கலருல இருக்க..... எனக்கு ரொம்ப நாளா.... ம்ஹூம் கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஒங்கிட்ட கேக்க வேண்டிய ஒரு சந்தேகம் இருக்கு! பொண்டாட்டி ஆன பெறவு தான் அத ஒங்கிட்ட கேக்கணுமின்னு பொறுத்துக்கிட்டு இருந்தேன்....... கேக்கட்டுமா?" என்றவனிடம்,
"ம்ஹூம்! சந்தேகமெல்லாம் அப்புறம்!" என்றாள் வதனி சிரிப்புடன்.
"இல்ல.... இப்பவே கேப்பேன்!" என்று அடம்பிடித்து அவள் காதில் அவன் தன்னுடைய சந்தேகத்தை கேட்ட போது வதனி அவனை முறைத்து அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டியிருந்தாள்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro