Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 76

வதனி காரில் இருந்து இறங்கி அங்கு வந்து நின்ற போது மரியம், ஜெயனுடைய நண்பர்களின் மனைவி இருவருமாக சேர்ந்து ஆரத்தி எடுத்து அவளுக்கு பொட்டு வைத்தனர்.

"ஹூ.....ம்! நாம வாரப்ப மண்டபத்தோட மேனேஜர் தான் நம்ப பக்கத்துல வந்து நின்னு கதவ தொறந்து உட்டுட்டு போனாரு..... ஒனக்கு தானா தம்பி இன்னிக்கு கல்யாணம் ஆகப்போவுதுன்னு கேட்டு ஒரு வாழ்த்து கூட சொல்லாம வெளக்கெண்ணய குடிச்சவரு மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு போயிட்டாரு! இப்ப
இந்த ஹெட்லைட்டு வாரப்ப மட்டும் இவள சுத்தி எல்லாரும் நின்னுக்கிட்டு இவளுக்கு ஆரத்தியெல்லாம் வேற எடுக்குறாய்ங்க.....!" என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ஜெயன்.

"ஏய்.... என்ன என் நண்பன உட்டுட்டு கல்யாணப் பொண்ணுக்கு மட்டும் ஆரத்தி எடுக்குறீங்க? இதெல்லாம் நல்லாயில்ல பாத்துக்கங்க!" என்று நஸார் சொல்ல வதனி ஜெயனுடைய முகத்தைப் பார்க்க அது களையில்லாமல் இருந்தது.

"ஏய்.... பொண்ணுதா இப்ப வெளியில இருந்து உள்ள வருது; அதுக்கு சுத்திப் போடுறோம்... ஒம்ப்ரெண்டு ஏற்கனவே உள்ள தான நிக்குறாப்ல? அவருக்கு என்னத்த சுத்திப் போடுறதாம்?" என்று சொன்ன மரியத்தை,

"வில்லி.....குள்ளச்சி! அப்புறமா தனியா கையில அம்புட்ட.... நொங்கி எடுக்கப்போறேன் பாரு!" என்று மனதிற்குள்ளாக திட்டிக் கொண்டிருந்தான் ஜெயன்.

"அதுனால என்ன மரியம்? உள்ள நிக்குறவங்கள வெளிய கூப்ட்டு பக்கத்துல நிக்க வச்சுக்கிட்டா போச்சு! ஜெயன் இங்க வா.....ங்க!" என்று அவனை அழைத்தவளிடம் அவன் "இந்தா வந்துட்டேன் வர்த்தினி!" என்று சொல்லிக் கொண்டே அவளருகில் சென்று நின்றான்.

"மரியம்.... மாரிமுத்து ஸாரோட மேடம்! நீங்க ரெண்டு பேரும் சேந்து
ஆரத்திய இன்னொருதடவ சுத்த முடியுமா? இந்தத் தடவ ஜெயனும் எங்கூட வந்து நிக்குறாரு இல்ல?" என்று வதனி மரியத்திடம் கேட்க,

"இதுக ரெண்டும் செய்யுறத
பாரேன்!" என்று சொல்லி தாடையில் கை வைத்துக் கொண்ட இருவரும் மணமக்களுக்கு மறுமுறை ஆரத்தி சுற்றினர்.

"சீக்கிரத்துல நம்மள உள்ளார உடுதுகளான்னு பாரு.... வந்தவங்கள வாங்கன்னு சொல்லுவம்னா வழிய மறைச்சுக்கிட்டு வெளையாடிட்டு இருக்குதுக!" என்று நினைத்து பதறிய முகில்

"வாங்க..... வாங்க! எப்ப வந்தீங்க?" என்று வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். பின்பு வதனியிடம் திரும்பி,

"கண்ணு..... வந்துருக்குற எல்லாரையும் வாங்கன்னு கூப்டு தங்கம்! முகில்ம்மா இந்தா வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

வதனியும் ஜெயனும் மண்டபத்தின் உள்ளே நுழைந்து அனைவரையும் பார்த்து சிரித்த படி "வாங்க" என்று அழைத்துக் கொண்டே வந்து தங்களுக்கென மொத்தமாக ஐந்தாறு இருக்கைகள் தேடி அங்கே அமர்ந்து கொண்டிருந்த போது சரியான நேரத்தில் ஒலித்த அந்த பாடலைக் கேட்ட வதனி தனக்குள் லேசாக சிரித்துக் கொண்டாள்.

"சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி
ஒருத்தி மயிலாக வந்தாளாம்
அத்தானை பாத்து அசந்து
போயி நின்னாளாம்....!"

இதோ அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்து அவ்வப்போது அசந்து போய் மெய்மறந்து பார்த்துக் கொண்டே நின்று பின்பு அதற்காகவும் அவனையே திட்டி விட்டு மாடிக்கு ஓடிய தருணங்கள் எல்லாம் அவளுடைய நினைவிற்கு வந்தன.

"மரியம்.....என்ன பாட்டு இது? அழகா இருக்குல்ல?" என்று மரியத்திடம் கேட்டவளிடம் திருதிருவென விழித்த மரியம்,

"தெரியல வதனிப்புள்ள.... ரொம்ப பழைய பாட்டா இருக்குது!
நான் இந்த பாட்ட இதுவரைக்கும் கேட்டதேயில்ல!" என்றாள்.

"இதுவாம்மா.....? எனக்குத் தெரியுமே! இதெல்லாம் ஒரு டிகேடுக்கு முன்னால வந்த பாட்டு! ஏன்டா இவனே.... பாட்டு போடுறவனுக்கு தனியா காசு குடுத்தியா இல்லயா?"

"ஒரு கீர்த்தி சுரேஷ் பாட்டு போடலாம் அட அது இல்லயா நம்ம சாய்பல்லவி பாட்டு அட அதுவும் கெடைக்கலன்னா ஒரு
ஜோதிகா பாட்டயாவது போடலாம்..... அதெல்லாம் உட்டுட்டு சித்தாட, வித்தாரமுன்னு என்னடா பாட்டு இது?"

"இவியிங்க இன்னும் அப்டேட்டுக்கே வராம ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுல அப்டியே நின்னுட்டாய்ங்க போலருக்கு! மண்டபமும் அப்டித்தான் இருக்கு! போடுற பாட்டும் அப்டித்தான் இருக்கு!" என்று சலித்துக்கொள்ள நண்பனின் குரல், வசவுகள் இவை எதுவும் ஜனமேஜயனுடைய காதுகளில் விழவேயில்லை.

முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்....

என்ற வரிகளில் தான் முழுமனதுடன் லயித்திருந்தான். இன்னும் சற்று நேரத்தில் அவள் கழுத்தில் ஒரு பூமாலையை அணிவிப்பதற்கு தானே இத்தனை பொறுமையாய் காத்திருந்தான்?

குண்டூசி போலே ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை
அன்பா பேசும் நல்லவளாம்
அந்த கண்டாங்கி
சேலைக்காரி கைகாரியாம்
அந்த கள்ளி அத்தானை
கல்யாணம் பண்ணி கொண்டாளாம்....

என்ற வரிகளை எல்லாம் அவன் தனக்காகவே தேர்ந்தெடுத்து கொடுத்த வரிகள் போல் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான். எப்போதோ இந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கு வதனியுடைய இயல்புகள் எப்படி தெரிந்தது என்று மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தான்.

அஞ்சாத சிங்கம் போலே
வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
அந்த முண்டாசுக்காரன்
கொஞ்சம் முன்கோபியாம் ஆனாலும் பெண் என்றால்
அவன் அஞ்சி கெஞ்சி
நிப்பானாம்

"டேய் மாப்புள! நாயப் பாத்தாலே பயந்து நாக்கு தள்ளுற அளவுக்கு ஓடிப்போயிருவ.... ஒங்கம்மா சத்தியமா சொல்லு! நீயா அஞ்சாத சிங்கம்?" என்று சொல்லி ஜெயனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்ட நஸாரிடம்,

"சத்தியமா நானு சிங்கம்லா இல்லப்பா; டேய்..... மேல விழுந்ததெல்லாம் போதுமுடா! சாப்புடுற எடத்துல ஆளுங்க பந்தி முடிஞ்சு எழுந்திரிக்குறாங்க பாரு..... நீயும், மரியமும் இவளையும் கூட்டிட்டுப் போயி சாப்ட்டுட்டு வந்துருங்க! பாயம்மா புள்ளைங்கள கூப்ட்டு எப்ப வரும்? அதுக்கு ஒருக்கா போன்
பண்ணு!" என்று சொன்னான்.

"ஜெயன்... நீ சாப்புடலையா?" என்று ஆவலாக கேட்டு அவனுடைய முகத்தைப் பார்த்தவளிடம்,

"நாந்தா வர்த்தினி மொத ஆளா சாப்புட்டேன். நீ இவங்க கூட போய் சாப்புட்டு வர்றதுக்குள்ள நான் துணிய மாத்திட்டு ரெடியாகிடுவேன்!" என்று ஏதோ செய்தி வாசிப்பது போன்ற இயல்பான குரலில் சொன்னான்.

"வீட்ல இருந்து கெளம்பும் போதும் தனியா உட்டுட்டு வந்துட்ட! ப்ரேக்பாஸ்ட்டும் தனியா சாப்டியா? நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிருக்கலாம்ல?" என்று கேட்டவளின் குரலில் லேசான கோபம் தெரிந்தது.

"ஏய்.... காலையில வெள்ளன வந்ததுல இருந்து நா இங்க எத்தன வேல பாத்தேன் தெரியுமா? இப்ப கூட பெருசும், எங்க செட் ப்ரெண்ட்ஸூம் தான் பத்திய கவனிக்குற வேலையில நிக்குறாங்க.... நம்ம செய்யுற வேலைக்குல்லா பசிய ரொம்ப நேரம் தாங்கிக்கிட்டு இருக்க முடியாதும்மா! அதனால சேந்து சாப்புடுறதயெல்லாம் நாம நெதமும் ராத்திரில வச்சுக்கலாம்.....!"

"இப்ப வரைக்கும் அப்டித்தான? என்ன புதுசா காலையிலயும் சேந்து சாப்புடணுங்குற? அமுதாம்மாவ ஒங்கூட சாப்புட கூட்டிட்டுப் போ!" என்று சொல்லி கன்னம் கிள்ளி சமாதானம் செய்தவனிடம் உச்சுக்கொட்டி விட்டு எழுந்து சென்றாள் அவள்.

"ஏய் பட்டனு... பாருடீ இவஞ்செஞ்ச கோளாறுனால அந்தப்புள்ள மொகமே சூம்பி போச்சு....... போ அம்மாவையும் வதனியையும் கூட்டிட்டுப் போயி சாப்புட ஒக்காரு!" என்று சொன்ன நஸாரிடம்,

"நீ வரலயா நஸாரு?" என்று கேட்டாள் மரியம்.

"இவங்கிட்ட இவனோட பொண்டாட்டி கேக்குறா; எனக்கு எம்புள்ளைங்க கேக்கும்.
புள்ளைங்க வந்துடட்டும்... அவிய்ங்களோட சேந்து சாப்புடுறேன். நீ போய் முதல்ல சாப்புடு போ!" என்று சொல்லி மரியத்தை அனுப்பி வைத்தான் நஸார்.

"என்னடா ஜெயனு? இன்னும் ஒங்களுக்கு கல்யாணமே ஆகல.... அதுக்குள்ள அந்தப்புள்ள கிட்ட மொகத்துல அறையுற மாதிரி பேசுற? வதனி என்ன கேட்டுச்சு? ஏன் எங்கூட ஒக்காந்து சாப்புடலன்னு தான?" என்று ஜெயனிடம் கேட்டான்.

"டேய்.... நீயும் என்னடா அவள மாதிரியே புரியாம பேசிக்கிட்டு இருக்க? எனக்குலா வேலை நேரத்துக்கு தக்கனதான்டா சாப்பாடு; அது அவளுக்கே நல்லாத் தெரியும்..... நாலுநா மூணு வேளைக்கு கொஞ்சி கொஞ்சி அவளுக்கு சோறூட்டிட்டு அஞ்சாவதுநா அதச் செய்யலயின்னா அங்க தான் பிரச்சன ஆரம்பிக்கும்....... அத விட முதல்லயே அவள இதுக்கு பழக்கிட்டம்னா நல்லதுதான.... உடு; மதியம் அவளோட ஒண்ணா ஒக்காந்து சாப்ட்டுக்குறேன்!" 

"சரி..... பாயம்மாட்ட பேசச் சொல்லி நான் ஒங்கிட்ட ஒரு விஷயத்த சொன்னேனே.... அதப் பேசுன?" என்று ஜெயன் கேட்க நஸாரின் முகம் மலர்ந்தது.

"கிழி கிழின்னு போட்டு கிழிச்சுட்டேன்டா! இத்தன வருஷம் அவன தேவையில்லாம திட்டி தீத்ததுக்கு மட்டும் அவங்கிட்ட மன்னிப்பு கேட்டீங்களாமே? இத்தன வருஷமா என் பீவியவும், அவனையும் சேத்து வச்சு பேசுனதுக்குல்லா யாரு கிட்ட மன்னிப்பு கேக்கப் போறீக? அந்த குதா கிட்டயான்னு கேட்டதுக்கு வாயவே தெறக்கலடா அவுங்க!" என்று சொன்ன நண்பனிடம் இகழ்ச்சியாக சிரித்தவன்,

"எப்டி தெறப்பாங்க? மனசு உறுத்தியிருக்கும்! நாம இதெல்லாம் கேக்க கேக்க
இன்னும் மரியத்துக்கு மரியாத கூடிட்டே போகும் பாரு! சரியான நேரத்துக்கு தான் காத்துருக்குனாவ..... நாம என்ன பேசுனாலும் திருப்பிக் குடுக்காம இருக்க இவனுங்க ஒண்ணும் ஊமைங்க இல்லன்னு தெரியணும்!" என்று மெதுவான குரலில் சொன்னவன்,

"சரி நீ ஒக்காந்துருடா! நாம்போயி சட்டைய மாத்திட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு ஹாலின் ஒரு மூலையில் இருந்த ஒரு அறைக்குள் சென்றான்.

"ப்ரெண்டு மாதிரி தங்கச்சி மாதிரி யோசிக்குற ஒரு புள்ளைய நம்மளோட சேத்து பேசுறாகளேன்னு இத்தன நாளா மனசுக்குள்ளயே புழுங்கிட்டு இருந்துருக்கான் பாரு...... டேய் நண்பா ஒன்னால தான்டா என் பட்டனுக்கு கெடைக்க வேண்டிய மரியாதயும் இனிமே சரியா கெடைக்கப் போகுது!" என்று நினைத்த நஸார் பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று
தன்னுடைய பணியாளர்களுடன் அரட்டை அடித்தபடியே அங்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையின் கடைசி பந்தி நடந்து கொண்டிருந்த போது ஜெயன் சிவப்பும் சந்தனநிறமும் கலந்த ஒரு சட்டையும், சந்தன நிறத்தில் ஒரு பேண்ட்டும் அணிந்து கொண்டு மேடைக்கு வந்தான். அவன் இருக்கையில் அமர்ந்த இரண்டு நிமிடங்களில் வதனியும் அழைத்து வரப்பட்டு அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

"வாங்க வர்த்தினி மேடம்..... நீங்க தான் என்னிய கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? நா‌ன் பாவங்க. சூதுவாது தெரியாத ரொம்ப அப்பிராணிப் பையன்.... பொண்டாட்டியாகி என்னைய நல்லா பாத்துக்குவீங்களா?" என்று அவளிடம் புருவம் தூக்கி கேள்வி கேட்டான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro