Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 72

"நாளைக்கு காலையில ஒனக்குத் தான கல்யாணம்....? என்னமோ யாருக்கு வந்த விருந்தோன்னு இங்க வந்து இப்டி ஒக்காந்துட்டு இருக்க? இங்க ஒன்னைய எதுக்கு கூப்ட்டோம்? இப்டி கன்னத்துல கைய வச்சுக்கிட்டு ஒக்கார்றதுக்கா? வாடா..... கீழ வந்து நீயும் ஒரு ஆட்டத்தப் போடு!" என்று மூச்சு வாங்கிக் கொண்டு சொன்ன நஸாரை முறைத்த ஜெயன்,

"எ......து; இப்ப காது கிழியுற அளவுக்கு மரணம் மாஸூ மரணமுன்னு பாட்ட போட்டு ஆளாளுக்கு சாமி வந்த மாதிரி ஆடுனீங்களே; அதுதான் ஒங்க என்ஜாய்மெண்ட்டா....?"

"நாளைக்கு காலையில கல்யாணம் தான நடக்கப்போவுது? அப்புறம் எதுக்குடா இப்டி ஒரு குத்துப்பாட்ட போட்டு குதிச்சுக்கிட்டு கெடக்கீங்க.....? நீங்களும் ஒங்களோட பாட்டு செலக்ஷனும்! போடா..... அங்குட்டு; எனக்கு நல்லா வாயில வந்துரப் போவுது.....!" என்று திட்டினான்.

"சரி.... நாங்க ஆடுற பாட்டு பிடிக்கலன்னா நீ வேற பாட்டுக்கு ஆடு.... இல்ல பாடு! ரொம்ப வருசமா எதிர்பார்த்த ஒரு விசேசம்
நாளைக்கு நடக்கப்போவுதுன்னு நெனச்சு நமக்குள்ள ஒரு குதூகலம் வரணும்! எங்களுக்குலாம் அது வந்துருச்சுப்பா; இன்னும் ஒனக்குத்தான் அது வரக் காணும்!" என்று நண்பனிடம் சிரித்த படி சொன்னான் நஸார்.

"அட இவன் ஒருத்தன் நையி நையின்னு உசுர வாங்கிக்கிட்டு..... எனக்கு இந்த பாட்டு, ஆட்டமெல்லாம் வராதுடா..... நீங்க சந்தோசமா இருக்கீங்கல்ல; அது போதும்! நீ கீழ போயி குதி போ!" என்று அவனுக்குப் பதிலளித்தான் ஜெயன்.

"என்னடா பிரச்சன ஒனக்கு?" என்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு கேட்டவனிடம்,

"அத ஒங்கிட்டல்லா சொல்ல முடியாது.... மரியத்த இங்க வரச்சொல்லு; வர்த்தினிய கொஞ்ச நேரம் கீழயே புடிச்சு வச்சுக்க!" என்றான் ஜெயன்.

"நெனச்சன்டா! கொலப்பசியில இருக்குற கொடூரக்கொரங்கு மாதிரி நீ ஒம்மூஞ்சிய உர்ருன்னு வச்சுருக்கும் போதே ஒனக்கு ஏதோ பிரச்சனயின்னு எனக்குத் தெரியும்....! இரு நான் போயிட்டு பட்டன மேல அனுப்புறேன். அவ வந்து ரெண்டு அப்பு உட்டான்னா தான் நீ அடங்குவ!" என்று சொன்னவன்,

"இப்டி கொமட்டுல கைய வச்சுட்டு ஒக்காந்துட்டு இருக்காத!" என்று சொல்லி ஜெயனுடைய தாடையில் இருந்த அவனது கையை எடுத்து விட்டு கீழிறங்கி சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து
"ஜெயனு.... என்னாச்சுப்பா? அங்க கீழ வர்த்தினிய உட்டுட்டு
இங்க வந்து தனியா ஒக்காந்துருக்க? என்னைய  வேற நீ கூப்டதா நஸாரு சொன்னாப்ல...? புதுமாப்ள மொகத்துல ஒரு களையவே காணுமே? இங்க வர்றப்ப நல்லாத்தான இருந்த....? அதுக்குள்ள என்ன வந்துச்சு?" என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்ட மரியத்தை நேர்பார்வை பார்த்தவன்,

"மரியம்.... எனக்கு ஒரு உண்மைய சொல்லு! நானும் இங்க எல்லாரையும் மாதிரி ஒரு வேலக்காரன் தான்..... ஆனா எனக்காகன்னு நா ட்ராவல்ஸ்ல இருந்து இதுவரைக்கும் எதாவது
தனிப்பட்ட உரிமைய எடுத்துருக்குறனா? ஏதோ ஒருநா,  ரெண்டுநா லீவு வேணுமுன்னா நஸாரு பய கிட்ட கேட்டு எக்ஸ்ட்ராவா போட்ருப்பேன்.... ஆனா அதுவும் எங்கயாவது க்ளீனிங் வேலைக்குப் போயி ஒடம்பு வலிக்கும் போது தான்!" என்று குரலில் கலக்கத்துடன் சொல்லிக் கொண்டிருந்தவனிடம்,

"ஏய்.... ஜெயனு... இரு! இரு! இப்ப எதுக்காக சம்பந்தமேயில்லாம இதல்லாம் பேசிக்கிட்டு இருக்க? வேலக்காரன்.... தனிப்பட்ட உரிமைய எடுத்துக்குறது எதுக்குப்பா இதெல்லாம்? எனக்கு ஒண்ணுமே புரியலயே?" என்று குழப்பமான குரலில் அவனிடம் கேட்டாள் மரியம்.

"பேச வேண்டிய கட்டாயம் வந்துடுச்சும்மா...... அதான் பேசுறேன்; இப்ப நம்ம ஷெட்ல புதுசா வேலைக்கு வந்தவங்கள்ல ரெண்டு பசங்க இந்த ஜெயனுக்கு வந்த வாழ்வ பாருடா; அது சரி; மொதலாளியோட ப்ரெண்டுல்ல..... அப்ப கவனிப்பும் அதுக்கேத்த மாதிரி தான் இருக்கும்!"

"இவேன் நிச்சயத்த இங்க கொண்டாடுறான்னு பலூன ஊது, தோரணம் கட்டுன்னு ஏன்டா தேவையில்லாத வேல சொல்லி நம்ம கழுத்த அறுக்குறானுவ? இதெல்லாம் நம்ம எதுக்காக செய்யணும்னு  அவனுங்களுக்குள்ள பேசிக்குறானுங்க மரியம்!"

"இப்டி வேல செய்யுற எடத்துல வச்சு எனக்கும் அவளுக்கும் பங்ஷன வைங்கன்னு ஒங்கட்ட நான் கேட்டனா? ஏதோ நியூ இயர், நோம்பு தொறக்குறதுன்னு எல்லாருக்கும் பொதுவான விஷயத்த இங்க செஞ்சன்னா பரவாயில்ல.... யாரும் எதுவும் கேள்வி கேக்க மாட்டாங்க!" 

"எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட ஒரு பங்ஷன இங்க ஏற்பாடு செஞ்சு
ஏன் இப்டி தேவையில்லாம வீணா தலவலிய இழுத்து விடுறீங்க ரெண்டு பேரும்? பசங்க நமக்கான வேலய செய்யப் புடிக்காம அத ஒரு கஷ்டமா நெனச்சு செய்றாங்கங்குறதே வருத்தமா இருக்குது மரியம்!" என்று மெதுவான குரலில் அவளிடம் சொன்னான் ஜெயன்.

"எல்லாரும் ஒரே குடும்பமா, ஒருத்தருக்கு ஒருத்தர் கழுத்த கட்டிக்கிட்டு தான கெடப்பீங்க ஜெயனு..... ஓ.... அதெல்லாம் பழைய செட் ஆளுங்களா? இப்ப புதுசா நாலஞ்சு குஞ்சு குளுவானுங்க வந்துருக்குங்க இல்ல? இதெல்லாம் அவனுங்க பேசுன பேச்சா?"

"அவனுங்களுக்கு ஒங்க ரெண்டு பேரையும் பத்தி என்ன ஜெயனு தெரியும்....? அதில்லாம நீயும் நஸாரும் ஒவ்வொரு நேரம் இங்கணக்குள்ளயே
கழுத்தக் கட்டிக்கிட்டு மல்லுக்கட்டுறீங்க வேற; அதயெல்லாம் பாக்குற பயலுவளுக்கு கொஞ்சம் பொறாமையாத்தா இருக்கும்; அதுக்கான்டி என்ன வேணா பேசுவானுங்களா? இரு கீழ போயி வச்சுக்குறேன் அவனுங்கள!" என்று சொல்லி சிலிர்த்து கொண்டு எழுந்தவளிடம்,

"ம்ப்ச்! வேண்டாம் விடு மரியம்;  அவனுங்க பேசுனத நான் கேட்டதுனால ஏதோ மனச ஆத்த மாட்டாம ஒங்கிட்ட அத சொல்லி வச்சேன்.... இப்ப நீ போயி அந்த பயலுக கிட்ட இதுக்காக சண்ட போட்டா, நாந்தா என்னவோ ஒங்கிட்ட இந்த விஷயத்த போட்டு குடுத்துட்டேங்குற மாதிரி வேற தோணும்..... தயவுசெஞ்சு இனிமேட்டு இங்க வேல பாக்குற யாருக்கும் இங்கணக்குள்ள வச்சு  விசேசமெல்லா வைக்கணுமுன்னு நெனைக்காத மரியம்!" என்று சொன்ன ஜெயனிடம்,

"ஏய்.... அதெப்டி ஜெயனு நெனைக்காம இருக்க முடியும்? எங்க ஆளுங்க எல்லாரும் ஒண்ணுமண்ணா தான் பழகுறோம்னு சொல்லாம சொல்ற மாதிரி தான் நாம நம்ம ஷெட்ல ஆயுதபூஜ, பிள்ளையார் பூஜ, இஃப்தார் நோம்பு, நியூ இயர் எல்லாத்தையும் கொண்டாடுவோம்? அத மாதிரித்தா இப்ப ஒங்க நிச்சயத்தையும் இங்க வச்சு கொண்டாடுறோம்.....!"

"ஏன்.... நம்ம முத்தைய்யா அண்ணே மவ சடங்கு, நம்ம மாரிமுத்து தங்கச்சி பையனோட காதுகுத்துக்கு கறி சாப்பாடு இது எல்லாத்தையும் நம்ம இங்கணக்குள்ள வச்சு தான பண்ணுனோம்? இந்தப் பயலுகளுக்கு இன்னிக்கு வேல செய்யப் புடிக்கலன்னா, அத எங்கிட்டயோ நஸாரு கிட்டயோ சொல்லியிருக்க வேண்டியதுதான? இன்னிக்கு பேட்டாவையும் குடுத்து அவிய்ங்கள படம் பாக்கவும் அனுப்பிச்சு வச்சிருப்போம்ல?"

"யாரும் யாரையும் இங்க கண்டிப்பா வேல செய்யணும்னு சொல்லி புடிச்செல்லாம் வைக்கல ஜெயனு... நம்ம ஷெட்ல நம்ம பயலுக்கு நடக்குற நல்லது....... இதுல நாம வேல செய்யாம எப்டின்னு நெனச்சு எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்தால தான் இங்க இருக்காங்க; சின்னப் பயலுக ரெண்டு பேரு ஏதோ என்னவோ பேசுனாங்கன்னுட்டு நீங்க இத்தன வருசமா ஒங்களுக்குள்ள இருந்த ஒற்றுமைய போட்டு ஒடச்சுடாதீங்க ஜெயனுண்ணா.... பெறவு ரொம்ப கஷ்டமாப் போயிடும்!" என்று கேட்டவளிடம் லேசாக சிரித்தவன்,

"நீ உண்மையிலயே ஒரு நேக்கு போக்கான மொதலாளி தான் மரியம்..... பசங்க கிட்ட இதப் பத்தி எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதம்மா; நாளைக்கு அவனுங்க கல்யாணத்துக்கும் நாம இப்டித்தான தோரணம், பலூனு எல்லாத்தையும் ஷெட்ல அங்கங்க கட்டணும்.....? அப்ப ஜெயனு மட்டும் நஸாருக்கு தனிப்பட்டவன் இல்லன்னு நம்பளுந்தான் அப்டின்னு புரிஞ்சுப்பானுவ!" என்றான் தெளிவான குரலில்.

"அம்புட்டுதான்.... இதெல்லாம் ஒரு பிரச்சனையின்னு எங்கிட்ட பேசிக்கிட்டு வேற இருக்கீங்க பாருங்க; கீழ வாங்க!" என்று சொல்லி அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள் மரியம்.

"என்னடா... மேல இருக்குறப்ப பேஸ்து அடிச்சவேன் மாதிரி ஒக்காந்துக்கிட்டு இருந்த..... கீழ நிக்கயில பல்லக் காட்டிக்கிட்டு நிக்குறியே என்ன?" என்று கேட்ட நண்பனிடம்,

"அதெல்லா ஒனக்கென்னத்துக்கு? மொதலாளியம்மா ஒங்கிட்ட என்ன வேலைய செய்ய சொன்னாங்களோ அத மட்டும் செய்டா!" என்று சொன்னான்.

"ஆ.....மா! என்னிய என்னிக்காவது நீ மொதலாளின்னு சொல்லியிருக்கியா? எப்பப் பாரு அந்த குள்ளச்சிதா ஒனக்கு மொதலாளியம்மா....!" என்று உதட்டை சுழித்துக் கொண்டவன் அங்கும் இங்குமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான்.

இரவு ஏழு மணியான போது நஸாருடைய பணியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக அங்கு வரத் தொடங்கினர்.

வந்திருந்த தன்னுடைய சக பணியாளர்களின் குடும்பத்தினரை ஜெயன் வதனியிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவள் சகட்டு மேனிக்கு அனைவரையும் ஸார் என்றும், மேடம் என்றும் அழைத்ததைப் பார்த்து நஸாரும் ஜெயனும் ரகசியமாக சிரித்துக் கொண்டனர்.

"என்னடா இந்தப்புள்ள வாரவன், போறவனயெல்லாம் ஸாருன்னு கூப்டும் போல.... எவ்ள சொல்லியும்
என்னையவும் இன்னிக்கு வரையில அண்ணான்னு கூப்ட மாட்டேங்குதேடா..? ஏன்டா இப்டி எல்லாரையும் மரியாத குடுத்து ஒரு தூரத்துக்கு அந்தப் பக்கமாவே நிறுத்தி வைக்குது?" என்று கேட்ட நஸாருடைய குரலில் நிஜமான அக்கறை தெரிந்தது.

"தெர்லடா மாப்ள! நானும் அவ கிட்ட நெறய தடவ இதப் பத்தி பேசிட்டேன்; என்னையும் அமுதாம்மாவையும் தவிர மத்த யாரையும் கிட்டக்க சேத்துக்க மாட்டேங்குறா.... என்ன செய்றது? சின்ன வயசுல இருந்து அப்டியே பழகிட்டா!" என்று தன் நண்பனுக்கு சமாதானம் சொன்னான் ஜெயன்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது முகில் அவர்கள் பக்கத்தில் வந்தார்.

"என்ன அமுதாம்மா.... நீ கேட்டத நண்பன் நெசமாக்கிட்டான்! இப்ப சந்தோஷமா ஒனக்கு?" என்று தாயிடம் கேட்டான்.

"ஆமாண்டா இவனே; நீதா நா சொன்ன பேச்ச கேக்கல.... ஆனா ஒங்கூட்டாளி அப்டியில்ல! யய்யா நஸாரு ஒனக்குத்தானுய்யா நா நன்றி சொல்லணும்.... இந்தப்பய எங்கிட்ட யாரும் வேணாம், எவனும் வேணாமுன்னு சொன்னதுக்கு இப்ப அவனோட வேல பாக்குற புள்ளைங்க குடும்பத்துல இருக்குறவங்களே இங்க வருதுங்க..... இப்ப தான்யா எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்று சொன்னார்.

"இல்லம்மா.... இந்தப் பயலுக்கு நா என்னத்த பரிசா குடுக்குறதுன்னே எனக்குத் தெரியல! பணம், காசு, பொருளுன்னு என்னத்தயாவது அவேன் கையில நீட்டுனா என்னிய கொன்னுடுவான்! அதுக்குத்தா இந்த மாதிரி ஒரு ஏற்பாட்ட பண்ணுவோம்னு நெனச்சோம்! அப்பப்ப வீடு சின்னதா இருக்கு, அதுனால இங்க வச்சு பங்ஷன் பண்ணிக்கிடட்டுமான்னு கேக்குற சில பேருக்கு செய்றது தான்; என்ன இந்தப்பயலுக்கு அவேன் கேக்காமலேயே இதச் செய்யுறோம்!
அவ்ளோதாம்மா.... நீங்க போயி வாரவங்கள வாங்கன்னு கூப்டுங்கம்மா; நானும் இந்தா பின்னாலயே வாரேன்!" என்று அவரிடம் சொல்லி விட்டு எங்கோ ஓடினான் நஸார். முகிலமுதம் தன்னுடைய பிள்ளைக்கு கிடைத்த ஒரு அற்புதமான நட்பைக் கண்டு பூரித்து வாசலுக்குச் சென்று எல்லாரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro