🌻 அழகி 70
"வதனிக்கண்ணு; நாளையில இருந்து அந்தக் கிறுக்குப்பயல நா ஒங்கையில புடிச்சுக் குடுத்துருவேன் தங்கம்.... அப்புறம்
அவேன்பாடு.... ஒம்பாடு! எப்பாடா....
இந்தப்பயலுக்குனு பொறந்தவ எங்கடா இருக்கா, எப்படா நம்ம கண்ணுல அம்புடப் போறான்னு நா நெனைக்காத நாளில்ல கண்ணு!"
"ஒருவழியா அவே மனசப் புரிஞ்சுக்குற மாதிரி ஒரு மகராசி நீ கெடச்சு ஒங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு ஒரு நல்லதும் நடக்கப்போவுது.... இப்ப தான்டா கண்ணு முகில்ம்மாவுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு!"
"இப்டி சந்தோசத்துல திக்கு முக்காடிப் போயிருந்தா நான் பெத்தது அதுக்கும் ஒரு புள்ளிய வச்சு நிப்பாட்டுங்குது.....
நாளைக்கு ஒனக்கு கல்யாணமுடா; அதுனால இன்னிக்கு பத்து பேத்த கூப்ட்டு நிச்சயம் பண்ணனும்; வதனிப்புள்ளக்கு நலுங்கு வைக்கணும்னு சொன்னா கேக்குறானா....?"
"எதச் செய்றதா இருந்தாலும் அத நீயே செய்யிம்மா; நாளைக்கு காலையில கல்யாணத்தன்னிக்கு வார தெரிஞ்சவங்க, சொந்தக்காரவுங்களுக்கு ரெண்டு வேளைக்கு மட்டும் நல்ல சாப்பாடு போட்டா போதும்; தேவையில்லாம இன்னிக்கு வேற எதுக்கு சும்மா ஆளத் தெரட்டிக்கிட்டுங்குறான்! உசுர வாங்குறதுக்குன்னே வந்து பொறந்தபய!" என்று மகனை திட்டிய முகிலமுதத்திடம் அசட்டையான குரலில்,
"ஆமா.... நாந்தான் உங்கிட்ட அதெல்லாம் சொன்னேன்; இப்டித்தான் ஒஉசுர வாங்குவேன்!
அதுக்கென்னங்குற இப்ப....?"
"நீயுந்தான் சும்மாயில்லாம இவ மொகத்துல ஒரு சந்தனத்த பூசி பொட்டு வைக்குறதுக்காண்டி பத்து பேர கூப்டுவேன், அம்பது பேர கூப்டுவேன்னு சொல்லி அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்க......!"
"வைக்குற பொட்ட நீயே வையி; எங்களுக்கு வச்சது போக சந்தனம் மிச்சமிருந்தா அப்டியே கோமதிக்கும், எளங்கோவுக்கும் ரெண்டு பொட்ட வச்சு உட்டுட்டு வா!" என்று சொன்ன படியே தன்னுடைய சட்டையை பேண்ட்டுக்குள் இன் பண்ணிக் கொண்டு வந்து வதனியின் அருகில் உட்கார்ந்தான் ஜெயன்.
"ம்ப்ச்! நாளைக்கு தானம்மா கல்யாணம்? இப்ப வீட்ல தான இருக்கேன்..... லுங்கி பனியனோட இருந்தா என்ன இப்ப?" என்று கேட்டு வீண் வாதம் செய்தவனை அறைக்குள் தள்ளி இப்போது தான் துணி மாற்றி வர செய்திருந்தார் முகில்.
போனது வந்தது பேசியது பழகியது என அவனுக்கு ஊரில் நிறைய தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.... அத்தனை பேரையும் நிச்சயம், திருமணம் என்ற பெயரில் அழைத்துக் கொண்டிருந்தால் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவள் தனக்கு மட்டும் தன் பக்க உறவென்று யாருமே இல்லையே என்று இன்னும் தான் கொஞ்சம் வருத்தப்படுவாள்!
வருடம் திரும்பிய நாளில் இருந்து அழுது அழுது இப்போது கண்ணீர் வற்றித் தான் போய் இருக்கிறாள்.... இதில் புதிதாக வேறு அவளை சிரமப்பட வைக்க வேண்டுமா என்று நினைத்தவன் திருமணத்திற்கு முந்தைய நாள் சம்பிரதாயமான நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம் என்று முகிலிடம் சொல்லி விட்டான்.
"அடேய்.... அதெப்டிடா நிச்சயம் பண்ணாம கல்யாணம் பண்ண முடியும்?" என்று அதிர்ச்சியுற்ற அன்னையிடம்,
"ம்ப்ச்.... என்ன அமுதாம்மா? சும்மா சும்மா நீ எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க! இப்ப நிச்சயதார்த்தம் வேண்டாம்னு முடிவு பண்ணுனாலும் நம்ம யார்கிட்ட இதுக்கெல்லாம் போய் வெளக்கம் குடுத்துக்கிட்டு இருக்கணும்?"
"அப்டியெல்லாம் நீங்க நிச்சயம் வச்சே தான் ஆகணும்னு சொல்ற மாதிரி நம்ம சைடுலயும் வர்த்தினிக்கும் ஒரு சொந்தமும் இல்ல; கவலப்படாம போயி வேலையப் பாரு!" என்று சொன்னவனை அடிக்குரலில் ஏதோ திட்டிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்றார் முகில்.
மகனுக்கு இப்படி ஒரு நல்ல நிகழ்வு நடக்கையில் இவனை எதற்காக இப்படி திட்டிக் கொண்டே இருக்கிறோம் என்று நினைத்தாரோ என்னவோ?
"அமுதாம்மா.... நீ என்னையத் தான் என்னவோ திட்டுறன்னு புரியுது; ஆனா அது என்னதுன்னு தான் தெளிவா கேக்கல! சந்தனம் கரைச்சுட்டு வெளிய வரும் போது என்னைய எப்டி திட்டுனன்னு எங்கிட்ட சொல்லு!" என்று ஹாலில் இருந்த படியே சப்தமாக கத்தி அப்போதும் தன் தாயை வாரியவனிடம்,
"ஏன் ஜெயன்.... அவங்களுக்கு ஒரே பையன் நீ! முகில்ம்மாவோட ஆசைப்படி அவங்க எல்லாத்தையும் ஒனக்கு செஞ்சு பாக்கட்டும்னு நீ விட வேண்டியதுதான? அதுல எதுக்குப்பா இது வேண்டாம் அது வேண்டாம்னு சொல்லி அவங்கள டென்ஷன் பண்ற?" என்று கேட்டாள் வதனி.
"பார்றா.... இப்பவே மாமியாருக்கு ஏத்துக்கிட்டு கொடி பிடிக்குறீகளாக்கும்? நீ எம் பொண்டாட்டிடீ! எனக்கு ஏத்துக்கிட்டு தான் பேசணும் தெரியுதா?" என்றவன் அவளை ரசனையுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"இந்த சேலையில டக்கரா இருக்க? கல்யாண சேலய பாத்தியா?" என்று கேட்டான்.
"ம்ம்ம்! அழகா இருந்தது!" என்று சொல்லி புன்னகைத்தவளிடம் உச்சுக்கொட்டியவன்,
"அவ்ளதானா?" என்று கேட்டு சலித்துக் கொண்டான்.
அவளுக்காக பார்த்து பார்த்து அவன் தேர்ந்தெடுத்த இரண்டு புடவைகளின் நிறம், தரம், பார்டர், ஜரிகை, இந்த சேலைக்கென்று அவள் மரியத்துடன் அவசரமாக கடைக்குச் சென்று தேடிப் பிடித்து வாங்கிய ரெடிமேட் ப்ளவுஸ் என எதைப் பற்றியாவது அவளிடம் பேசுவாள் என்று நினைத்தால் வழக்கம் போல ரெண்டு வார்த்தை பதில் தான் கிடைத்தது.
"இன்னும் நெறையத் தான் பேசேன்டீ! நம்ம ரெண்டு பேருல நாந்தான் எந்நேரமும் பேசிக்கிட்டே கெடக்கேன்; நீ எப்பப்பாரு என்னத்தயாவது யோசிக்கத்தே செய்யுற...!" என்று அவளிடம் சொல்லி சற்று வருந்தினான் ஜெயன்.
"ரெண்டு பேரும் ஒரே மாதிரியே இருந்தா போர் அடிக்கும்ல
ஜெயன்..... நீ பேசு! நான் கேக்குறேன்..... எப்போவாச்சு நான் நெறய பேசுற மாதிரி இருந்தா அத நீ கேளு!" என்றாள் புன்னகைத்த படி.
"இப்டி கேக்குற கேள்விக்கெல்லாம் லைட்டா பல்லக் காட்டிப் பேசியே ஆளக் கவுத்துடு!" என்றவன் அறைக்குள் இருந்த முகிலமுதத்திடம்,
"அமுதாம்மா.... இன்னுமா அந்த சந்தனத்தப் போட்டு கரைச்சுக்கிட்டு கெடக்க?" என்று குரல் கொடுத்தான்.
"அட வர்றேன் இருடா!" என்று பதிலளித்தவரிடம்,
"ஒண்ணும் அவசரமில்ல.... நாளைக்கு காலையில வா!" என்றவன் வர்த்தினியின் தோளைப் பற்றி அவன் புறம் திரும்பி அவள் கால்களை தன்னுடைய தொடை மேல் போட்டுக் கொண்டான்.
"ஏய்... என்னடா பண்ற? முகில்ம்மா வந்துரப் போறாங்க. என்னை விடு!" என்று பயந்த குரலில் சிணுங்கி அறையின் வாசலைப் பார்த்தவளிடம்,
"இனிமேட்டாவது நீ வண்டியில ஒக்காருறப்ப என் இடுப்ப பிடிப்பியா? மாட்டியா?" என்றான் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு.
"ஐயோ; இப்டி ஒரு கேள்வி கேக்க ஒனக்கு இந்த நேரந்தானா கெடச்சது? கால விடு ஜெயன்..... ப்ளீஸ்!" என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னவளிடம் கறார்க்குரலில்,
"பதில் சொல்லு! கால உடுறேன்; இல்லன்னா பொண்டாட்டிக்கு ஜாலியா கால் அமுக்கி உட்டுக்கிட்டு இருப்பேன்!" என்று சொன்னவன் அவளுடைய தொடைகளில் கை வைக்க வந்ததை பார்த்து பதறி,
"ஓகே ஜெயன்..... இனிமே நான் வண்டியில ஏறுனா உன் ஷர்ட்ட பிடிக்கல; இடுப்ப பிடிச்சுக்குறேன்!" என்று அவனிடம் சமரசத்திற்கு வந்தாள் வதனி.
"அப்டி வா வழிக்கு! இனிமேட்டு எங்கயாச்சு ஒண்ணா நடக்கும் போது சுண்டு வெரல மட்டும் கோத்துக்குறது, பைக்ல போறப்ப
சட்டைய இறுக்கி பிடிச்சுக்குறது, சேந்து நடக்கும் போது ரெண்டு அடி தள்ளியே நடந்து வர்றது இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்த..... அப்புறம் நா இப்டித்தா ஒன்னைய ஹாலுக்குள்ளயே வச்சு விசாரிக்க வேண்டியதிருக்கும்!"
"ஒன்னைய என்ன பதினெட்டு, இருவது வயசுப் புள்ளைக பண்ணுற மாதிரியா மொகத்த பொத்திக்கிட்டு லவ்வு பண்ண கூப்டேன் நானு? அங்க இங்க போகையில வரயில கையப் புடிச்சுக்குறதுல, தோளப் புடிச்சுக்குறதுல என்ன பிரச்சன ஒனக்கு?"
"நாளைக்கு காலையில நமக்கு கல்யாணம்; இன்னும்
ஒங்க அம்மா படமும், வினோத்தோட படமும் இங்க தான் கெடக்குது. அத மேல எடுத்துப் போயி இந்தப் பயல நான் கட்டிக்கிடுறதுக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்கன்னு அவங்க கிட்ட கேக்கலயா நீ?" என்று கேட்டவனை பக்கவாட்டில் பார்த்து முறைத்தவள்,
"அவங்களுக்கு நினைவு நாள் படையல் கூட நீ தான வச்ச? அப்ப இதயும் நீயே கேக்க வேண்டியதுதான?" என்றாள் எரிச்சல் குரலில்.
"நா அதெல்லாம் ஏற்கனவே பேசிட்டேன்ப்பா! எங்க பாப்பா ஒசுரத்துல தான் ஒங்களுக்கு முக்காவாசி ஒசரம் வளந்துருக்கு.... மத்தபடி அது எதுக்குன்னாலும் ஒரு ஆள அண்டிக்கிட்டே திரியுற பொண்ணு.....!"
"நாங்க அப்டியே வளத்துட்டோம்; நீங்க அவள இனிமே பத்திரமா பாத்துக்குங்கன்னு சொன்னாங்க! நெசமாலுமே சொன்னாங்கடீ! நீ மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுற மாதிரியே நானும் பேசுனேன்..... நெஜம்மா!" என்று அழுத்திச் சொன்ன ஜெயனிடம் மெலிதான புன்னகையுடன் தலையை ஆட்டி தன்னுடைய கால்களை உருவிக் கொண்டாள் வதனி.
"அமுதா.....ம்மா; நாங்க நெறயவே பேசி முடிச்சாச்சு! இன்னும் நீ உள்ள ஒக்காந்துக்கிட்டு என்ன தான் செய்யுற?" என்று அலறியவனிடம் இருந்து தன் காதைப் பொத்திக் கொண்டு விலகி அமர்ந்தவள் அலைபேசியில் தன்னுடைய அலுவலக நண்பர்களிடமிருந்து வந்த வாழ்த்தை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
வந்த புதிதில் இருந்ததற்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை. பேங்க்கில் எல்லாருடனும் சேர்ந்து தான் மதிய உணவை சாப்பிடுகிறாள்;
"நம்ம வதனி மேடம் கொஞ்சம் ரிஸர்வ்டு டைப்.... பட் நல்லவங்க தான்ப்பா!" என்று எல்லாரும் சொல்வது போல் சக ஊழியர்களிடம் ஹாய், ஹலோ சொல்லி சின்ன சின்ன வேலைகளை அவர்களுடன் பகிர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
இது போதாதென்று அச்சுதனுடைய உதவிகள் வேறு... வினோத் மற்றும் வதனியுடைய அன்னையைப் பற்றி மேம்போக்காக அவன் அலுவலகத்தில் அனைவரிடமும் சொல்லி வைத்திருப்பான் போலும்.... வந்த புதிதில் வதனியுடைய ஒதுக்கத்திற்கும், தனிமைக்குமான காரணத்தை இப்போது அவளுடைய சக பணியாளர்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது அவளுக்கு ஜெயனுடன் திருமணம் என்றதும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அவர்கள் உற்சாகமாக வதனியின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனால் தான் இரண்டு நாட்கள் முன்பிருந்தே வாட்ஸ் அப்பில் ஒரே வாழ்த்து மழையாக வந்து குவிந்து கொண்டிருந்தது.
"என்ன ஏஎம் அம்மா; வாயெல்லாம் ஒரே வெள்ள வெள்ள பல்லாத் தெரியுது.... பேங்க்குல இன்னிக்கு எல்லாருக்கும் வேலயே ஓடல போலருக்கு... ஒரே மெசேஜு சத்தமா கெடக்கு!" என்று கேட்டவனிடம்,
"ஒனக்கென்ன பொறாம? வேணும்னா நீயும் உன்னோட ப்ரெண்ட்ஸ ஒனக்கு விஷ் அனுப்பச் சொல்லு!" என்று சொன்ன படி வதனி தனக்கு முன்கூட்டிய திருமண வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"நீயும், ஒம்மாமியாரும் அவரவர் வேலையில பிஸியா இருக்கீங்க! கடைசில நம்ம தான் வெட்டியா ஒக்காந்துருக்குற ஆளா இருக்கோம் போல.... நம்மகூட வேல பாக்குற ப்ரகஸ்பதிங்க நமக்கு நாளைக்கு வாழ்த்து சொல்றதே ஆச்சரியந்தான்; இதுல அவிய்ங்க எங்க இன்னிக்கு நம்மள நெனைக்குறது....? எம்மோனோலிசாவ இன்னிக்கு எந்தப் பக்கி எங்க சவாரிக்கு எடுத்துட்டுப் போயிருக்கோ?" என்று அவனாகப் பேசி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஜெயன்.
இவ்வளவு நேரம் அவர்கள் இருவரையும் காக்க வைத்து விட்டு
முகிலமுதம் ஹாலுக்கு வந்து சேர்ந்தார்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro