🌻 அழகி 7
அன்று ஜெயன் தனக்கு சவாரி எதுவும் இல்லாததால் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஒரு ரிஸார்ட்டை சுத்தம் செய்யும் பணிக்காக சென்றிருந்தான். ஒருநாள் பணி முழுவதும் பத்து, பனிரெண்டு மணி நேர வேலை என்பதால் இந்த வேலையில் உழைப்பும் நிறைய இருக்கும்! அதற்கேற்றாற்போல் சம்பளமும் நிறைய இருக்கும்! நஸாரின் மனைவி மரியம் இந்த ரிஸாட்டில் தான் மேனேஜராக பணிபுரிகிறாள்.
வட இந்தியாவில் இருந்த ஒரு பெரிய குடும்பம் இந்தப் பகுதியிலேயே தங்கி, எல்லா இடங்களையும் நிதானமாக கண்டு ரசித்து விட்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஒருவாரத்திற்கு இந்த ரிஸார்ட் முழுவதையும் மொத்தமாக புக் செய்து வைத்திருந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன் ரிஸார்ட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் துடைத்து வைத்து பளிச்சென இருக்க வேண்டும். அதற்காக தான் மரியம் இந்த இரண்டு ராட்சதர்களையும் வேலைக்கு அழைத்திருந்தாள்.
இப்படி மொத்த வேலை இருக்கும் நேரத்தில் எல்லாம் தன் கணவனையும், ஜெயனையும் உதவிக்கு அழைப்பது அவளுக்கு வாடிக்கை தான்!
வெளியே புல்வெளியில் இருந்து உள்ளே உள்ள அறைகள் வரை
மொத்தமே இந்த இடம் இரண்டாயிரம் சதுர அடிகள் தான் இருக்கும். இதை முதலில் ரிஸார்ட் என்று சொல்வதே தவறான வார்த்தை. பத்து கோழிகள், நாலைந்து வாத்துகள், புல்வெளியின் நடுவில் ஒரு கேம்ப் பயர் செட்டப் எல்லாம் இருந்ததால் இந்த ஹோட்டலை அவர்களும் ரிஸார்ட் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்.
"இங்கரு நஸாரு; சாயந்தரம் ஆறு மணிக்குள்ள முன்னால கேட்ல இருந்து, பின்னால ரூம்ஸ் வரைக்கும் எல்லாம் பளபளன்னு மின்னனும் தெரியுதா? நீயும் உன் வாப்பா மாதிரி சவுதிக்குப் போயி ஒட்டகம் மேய்க்க மாட்டேன்னு சொன்னயின்னா இப்ப இந்த வேலையச் செய்யி! ஜெயனு அண்ணா நீங்களும் தான்....!" என்று சொன்னவளிடம் தன்னுடைய ஐயாயிரம் ரூபாய் கடனைப் பற்றி நியாபகமாக நினைவு படுத்தினான் ஜெயன்.
"நாங்கொஞ்சம் கறாரான பொம்பள தான்ங்கண்ணா.... ஆனா இன்னிக்கு உங்க கையில சம்பளமா குடுக்கப்போற காசையெல்லாம் புடுங்க மாட்டேன். நீங்களும் என்னிய மாதிரி கட்டு செட்டான ஆளு... ஆனா இந்த நஸாரு அப்டியில்ல; அதுனால தான் அவங்கிட்ட மட்டும் பணத்த தராம அத புடுங்கிக்குறேன். மத்தபடி உங்க கடன் எல்லாம் அவனுக்கும், உங்களுக்கும் நடுவுல இருக்குற விஷயம்!" என்று சொல்லி விட்டு தன்னுடைய கணவனைப் பார்த்து ஒரு முறைப்பை கொடுத்து விட்டுச் சென்றாள் மரியம்.
"ஆமா இந்தா எம்பக்கத்துல நிக்குற பரதேசி பெரிய சிக்கன சிந்தாமணி; நாங்க எல்லாம் பணத்த அள்ளி எறைக்கிற தாராள தொண்டி! இப்ப இவ எதுக்குடா இப்டி பேசிட்டு போறா?" என்று முனைத்துக் கொண்டு முகத்தை தூக்கியவனிடம்,
"உன்னைய பத்தி நல்லா தெரிஞ்சவ அப்டித்தான்டா பேசிட்டுப் போவா! நம்மள மாதிரி மிடில்க்ளாஸூக்கு எல்லாம் சிக்கனம் ஒரு பழக்கம் கெடையாதுடா நஸாரு! அது தான் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வாழ்க்கமுறையாவே மாறிடுது! உன்னோட அப்பாவும், அம்மாவும் நீ வெளிநாட்டுல போயி பெரிசா சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறாங்க. மரியம், நீ இங்கயே இருக்கணும்னு ஆசைப்படுது. இங்கயே இருந்து வாங்குன வண்டியெல்லாம் சொந்த வண்டியா ஆக்கிக்கணும்னா, அதுக்கு நீ அந்தப்புள்ள பேச்ச அப்டியே கேட்டா தான் முடியும்! வாடா போய் பொழப்ப பாப்போம்!" என்று சொன்னவன், நஸாருடைய வண்டியில் தான் அணிந்திருந்த நல்ல சட்டையை கழற்றி வைத்து விட்டு, ஒரு இலகுவான அரைக்கை பனியன், ட்ராக்ஸ், கையில்
கையுறை, முகத்தில் மாஸ்க், கண்களில் தூசி படாமல் இருக்க போட்டுக் கொள்ளும் கண்ணாடி இவற்றையெல்லாம் அணிந்து கொண்டிருந்தான்.
"ஒவ்வொரு தடவ இப்டி வாரப்பயும் அவனுக்கு என்ன தேவையோ அத மட்டும் சரியா எடுத்துட்டு வர்றான் பாருய்யா இவேன்.... நாங்க எல்லாம் அங்க ரூமுக்குள்ள கெடக்குற குப்பைய வெறுங்கையால அள்ளிப் போடணும். இவரு மட்டும் பெரிய டாக்டரு கணக்கா க்ளவுஸு போட்டுக்கிட்டு தான் வேலை பாப்பாரு! துரை பெரிய லாடு லபக்கு தாஸூல்ல! என்ன செய்வாரு பாவம்....?" என்று கேட்ட தன்னுடைய நண்பனிடம்,
"உனக்கும் இதெல்லா வேணும்னா, எம்பக்கம் ஒண்ண நகட்டுடா ஜெயனுன்னு கேளுடா தடிமாடு! வெறுங்கையால வேலை செய்யக்கூடாதுன்னு அறிவு இருக்குறவன், என்னைய மாதிரி முன்னேற்பாடா உனக்கு தேவையானத எடுத்துட்டு வந்துருக்கணும்! அத உட்டுட்டு என்னைய பாத்து கடுப்பாகி நக்கல் பண்ணிட்டு திரியாத! சீக்கிரமா ரெடியாகி துடைப்பத்த எடுத்துட்டு வா! முதல்ல கோழி அடையுற ஷெட்ட க்ளீன் பண்ணனும்!" என்று சொன்ன நண்பனிடம் தலையசைத்து விட்டு அவனுக்காக நண்பன் கொண்டு வந்திருந்த கையுறை, முகக்கவசம் இவைகளை அணிந்து கொண்டான் நஸார்.
வேலை செய்வது என்று வந்தாகி விட்டது... ஆனால் இந்த மாதிரியான வேலைகளுக்கு செல்லும் போது சில அறைகளை சுத்தம் செய்கையில் பீர் பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், இன்னும் சில அந்தரங்க உபயோகத்திற்கான பொருட்கள் என முதலில் எல்லாம் அறையை சுத்தப்படுத்தும் பணியில் ஜெயன் கொஞ்சம் அருவருப்பு படுவான்.
நஸார் அவன் பாட்டில் வேலையை செய்து கொண்டிருக்கும் போது, தன் முகச்சுளிப்பு அவனை பாதித்து விடக்கூடாது என்பதற்காக அவன் கண்டுபிடித்தது தான் இந்த கண், முகம், கைகளுக்கான கவசப் பாதுகாப்பு! பின்பு அவனுடைய நண்பனுக்கும் ஜெயனின் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது.
தன்னைப் போல் இல்லாமல்,
இருபத்து நான்கு வயதில் நஸாருக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த எட்டு வருட காதல் வாழ்க்கையில் அவனுக்கு ஆறு வயதில் அனிஷா என்ற ஒரு பெண் பிள்ளையும் மூன்று வயதில் ஹசன், ஃபைசல் என்ற மகன்கள் இருவரும் இருக்கின்றனர்.
நஸாருடைய தாயாருக்கு பெரிய பங்களா மாதிரியான வீட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணம்! அனிஷா பிறந்த போதே மகனை வெளிநாட்டுக்கு கிளம்பும் படி சற்று முணுமுணுத்துக் கொண்டிருந்தவர், இரட்டையர்கள் பிறந்த பிறகு தன்னுடைய ஆசையை நேரடியாகவே சொல்லி விட்டார்.
பிள்ளைகள் வளர்ந்து பெரிதாவதற்குள், நீ அங்கு சென்று விட்டு ஐந்தாறு வருடங்களில் சம்பாதித்து கொண்டு இங்கு வந்து விடலாமே என்ற யோசனை தந்தவர்களிடம் மரியம் முகத்திலடித்தாற்போல "என்னால அனியோட அபுவை அத்தன வருஷத்துக்கு வேற நாட்டுல வேல பாக்க விட்டுட்டு இங்க ஒத்தையில இருக்க முடியாது அத்த!" என்று சொல்லி விட்டாள்.
சொந்தமாக வீடு இருக்கிறது, நஸாருக்கு என்று ஒரு தொழில் இருக்கிறது, கடல் கடந்தும் ஒரு வருமானம் வருகிறது, என்னுடைய சம்பளத்தில் ஒரு பாதியை வேறு நான் இந்த குடும்பத்திற்காக தருகிறேன்! இதற்கு மேலும் இங்கு பணத்துடைய தேவைக்கு அவசியமில்லை என்பது அவளுடைய எண்ணம்! என்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென அவர்கள் எதற்கு என்னிடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; என் வாழ்க்கையை சிறப்பாக வாழ எனக்குத் தெரியும் என்ற கோபம்; இந்த பிரச்சனையினால் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வீட்டில் மாமியாரும் மருமகளும் வாய்ச்சண்டை போட்டு முட்டிக் கொள்வார்கள்.
மனைவியின் பக்கமும் பேசாமல், தாயின் பக்கமும் நிற்காமல் அந்நேரத்தில் நஸார் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு சரியாக நழுவி ரவுண்ட்ஸுக்கு சென்று விடுவான்.
இப்படிப்பட்ட நண்பன் அன்று மாலை வேலைகளை எல்லாம் முடித்து ஓய்ந்து அமர்ந்திருந்த போது ஜெயனிடம்,
"டேய் இவனே.... யார்ரா அந்தப் பொண்ணு?" என்று ஒரு கேள்வியைக் கேட்டவாறு மாலை வேளை தேநீரை அருந்தினான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro