🌻 அழகி 68
அன்று காலை நீலகிரி மாவட்டத்தின் District Police Office சைனப் ட்ராவல்ஸின் உரிமையாளன் நஸாரையும், அவனுடைய பணியாளன் மாரிமுத்துவையும் அழைத்து வாழ்த்து தெரிவித்ததை குன்னூரின் உள்ளூர் டீவி சேனலில் செய்தியாக காண்பித்து இருந்தனர்.
"அமுதாம்மா.... இங்க ஓடியா.... இந்தா டீவியில நஸாருப்பயலையும், முத்துவையும் காட்றாய்ங்க பாரு!" என்று உணர்ச்சிப் பெருக்கில் கூவிய மகனிடம்,
"ஏன்டா ஒம்ப்ரெண்டு ஒன்னையவும் கூட கூட்டிட்டுப் போவல? ஒரு பேக்க திருப்பிக் குடுத்ததுக்கா டீவியிலலாம் காட்றானுவ? இந்நேரம் வதனிப்புள்ள இங்க இல்லாம போயிட்டாளே? " என்று ஒரு கேள்வி கேட்டு விட்டு மகனிடம் சொன்னார்.
"அதென்னம்மோய்.... ஒரு பேக்குன்னு சாதாரணமா சொல்ற? இந்த லக்கேஜ பத்திரம் பண்ணி குடுக்குற வேலைய ஆரம்பிச்சதுல இருந்து நாங்க இதுவரைக்கும் எத்தன பொருள ஒடமைப்பட்டவங்க கிட்ட பத்திரமா திருப்பிக் குடுத்துருக்கம் தெரியுமா? ஏதோ இந்த லூசுப்பய கஸ்டமரு பையில ஒரு தங்கச்சங்கிலியும் இருந்துச்சாம்; அதுனால தான் எங்களுக்கு அங்க போலீஸ்காரங்க தனியா பாராட்டு குடுத்தாங்க தெரியுமா?"
"அன்னைக்கு அந்த கஸ்டமரோட எங்கங்க போனோம்னு நியாபகம் வச்சு மேட்டுப்பாளையத்துல இருக்குற தீம்பார்க்ல மறந்து அவங்க விட்டுட்டு வந்த பைய எங்களோட ட்ராவல்ஸ் Tag அ காமிச்சு மாரிமுத்து தான் மெனக்கெட்டு தேடிக் கண்டுபிடிச்சு குடுத்துருக்கான்!"
"பேக்க கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சவனும், மொதலாளியுந்தா பாராட்ட வாங்கப் போவாங்க! நீ எதுக்கு
சம்பந்தமேயில்லாம என்னைய அங்க போவலையான்னு கேக்குற? நானும் ஏதாவது பைய கண்டுபிடிச்சு குடுத்தேன்னா வேணா அங்க போயி நிக்குறேன். அப்ப என்னிய நீ இந்த மாதிரி டீவியில பாரு என்ன?" என்று சொன்ன மகனிடம்,
"ஆமா.... டீவியில இவேன் என்னிக்கு வருவான்னு பாத்துக்கிட்டே நாங்க வாயப் பொளந்துக்கிட்டு ஒக்காந்து இருக்க வேண்டியதுதான்..... போடா அங்கிட்டு!" என்று அவனை திட்டி விட்டு சமையல் அறைக்குள் சென்றார் முகிலமுதம்.
வதனி அன்று நஸாருடைய வீட்டிற்கு சென்று கொடுத்த சில யோசனைகளால் நஸாரின் சைனப் டிராவல்ஸ் மலை வட்டாரத்தில் சற்று பிரபலம் அடைந்திருந்தது.
நான்கு பழைய கார்களை வந்த விலைக்கு கடத்தி விட்டு, மூன்று புதிய கார்களை இறக்கியவன் வாடிக்கையாளர் சேவைகளில் சற்று அதிகமான அக்கறையுடன் இருந்தான். அதிலும் வாடிக்கையாளரின் உடைமைகளை பத்திரப்படுத்தும் அந்த ட்ராவல்ஸின் ஒரு அம்சம் குறிப்பாக எல்லோருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
சமீபத்தில் அவர்களுடைய Luggage Identification Tags ன் உதவியால் வாடிக்கையாளர் ஒருவரின் 15 பவுன் நகை இருந்த பையை அவரிடமே District Police Office ல் கொண்டு போய் ஒப்படைத்திருந்தனர். அதற்கான பாராட்டு விழா தான் இன்று நடைபெற்று இருந்தது.
வாடிக்கையாளரின் ஒவ்வொரு லக்கேஜூம் எவ்வளவு முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பொருள் என்று அவர்களுக்கே இந்த சம்பவத்திற்கு பிறகு தான் புரிந்தது.
ஒரு பை நிறைய ஏதோ சாமான்கள் என்று நினைத்து ஆதாரத்துடன் போலீஸின் முன் பையை ஒப்படைக்க நினைத்தவர்களுக்கு, பையை தொலைத்தவர் சொன்ன உபரியான தகவல் தான் அந்த பைக்குள் தங்க ஆபரணம் வேறு இருந்தது என்ற விபரம்!
"குட் ஜாப்..... வெல்டன்!" என்று சொன்ன போலீஸாரின் பாராட்டும்,
கைகூப்பி அந்த வாடிக்கையாளர் சொன்ன நன்றியும் நஸாருக்கும், அவனது பணியாளர்கள் அனைவருக்கும் ஏதோ தாங்கள் பெரிய சாதனை செய்ததைப் போல அவ்வளவு கர்வத்தை அளித்தது.
"லேய் ஜெயனு..... தங்கச்சிக்கு ஒரு பெரிய தேங்க்ஸூ சொல்லிருடா மாப்ள; ஏதோ நம்மளால செய்ய முடிஞ்ச வேலைய திருப்தியா செஞ்சு குடுத்துட்டோங்குற மாதிரி ஒரு சந்தோஷம்டா நெஞ்சுக்குள்ள!" என்று சொன்ன நண்பனைப் பார்த்து சிரிப்புடன் தலையாட்டி விட்டு சென்றான் ஜெயன்.
நண்பன் அவனுடைய ட்ராவல்ஸ்க்கு புதிதாக மூன்று இயந்திரப் புரவிகளை வாங்கியிருக்கிறான்; அவனுடைய அப்பா குன்னூருக்கு வந்து பாயம்மாவுடன் நஸாருடைய வீட்டு மாடியிலேயே செட்டில் ஆகி விட்டார், கணவருடைய வருகையால் பாயம்மாவின் ஆட்டம் எல்லாம் சற்றே மட்டுப்பட்டு மரியமும், நஸாரும் இப்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர்களுடைய வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறார்கள். நண்பன் கடன் சுமை இல்லாத பிரச்சனைகள் அற்ற மகிழ்வான வாழ்வை வாழ்கிறான் என்பதே ஜெயனுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.
ஏதோ மழைக்காலத்தில் பிடித்து வாட்டி வதைத்த மூக்கடைப்பு திடீரென்று சரியாகி விட்டது போல "இந்த விஷயத்துல என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல ஜெயனு!" என்று ஆறேழு ஆண்டுகளாக பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனையை பையிலிருந்து அவிழ்த்துக் கொட்டும் மரியம் என்ற பொறுப்பான ஒரு குடும்பப்பெண் இப்போது தான் சற்று விரிந்த சிரிப்பை இதழ்களில் காட்ட ஆரம்பித்து இருக்கிறாள். அதுவே இப்போதைக்கு பெரிய மனநிறைவு.
மற்றபடி அவன் விஷயத்திலும் வதனியின் நிபந்தனையற்ற அன்பு அவனை பித்துப் பிடிக்க வைத்தது.
"எலேய்..... ஒனக்கு கல்யாணம் ஆகலடா! முஹூர்த்ததுக்கு இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு; அதுவரையில மாடிக்குப் போறேன்னு எப்போ பாத்தாலும் தாவி தாவிக் குதிக்காம கொஞ்சம் அடங்கியிரு!" என்று முகிலமுதம் சொன்ன அறிவுரை எல்லாம் அவன் காதுமடலோடே நின்று விட்டது.
முத்தங்கள், அணைப்புகள், செல்லக்கடிகள், அன்புப் பிய்ச்சல்கள் போன்றவை ஜெயன் வதனி இருவரிடமிருந்தும் சமமான அளவில் தன்னுடைய பெட்டர்ஹாஃபுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.
"ஏய்... வர்த்தினி! நான் உங்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்ல? பதில் சொல்லுடீ! சலூனுக்கு போய் அவங்கிட்ட முடிக்கு என்ன பாயிண்ட்ல ட்ரிம்மர் போட்டு வெட்டச் சொல்லட்டும்? எந்த அளவு முடியக் குறைச்சா ஒனக்கு கையில புடிக்க வாட்டமா இருக்குன்னு நீ தான சொல்லணும்......?" என்று ஏடாகூடமான கேள்வி எதையாவது கேட்டு மேலே நடக்கும் அந்தரங்க விஷயங்களை கீழே வந்து முகிலமுதத்தின் முன்னால் கத்தினான் என்றால் சத்தமே இல்லாமல் அவனது புஜங்களை கிள்ளி வைத்திருப்பாள் காதல் ராட்சஸி.
"ஷ்ஷ்..... ஆ!" என்று அடுத்த நிமிடம் கத்தி தன்னுடைய புஜங்களை தடவிக் கொண்டிருப்பான் ஜெயன்.
"எருமமாடு மாதிரி வளந்துருச்சு..... கல்யாணமும் பண்ணிக்கப் போவுது; இன்னும் எந்த விஷயத்த சத்தம் போட்டு பேசணும் பேசக்கூடாதுங்குற அறிவு வரமாட்டேங்குது.... மண்டிஎண்ணெ! வதனிப்புள்ள குடுக்குற தண்டனையெல்லாம் தேவதான் இவனுக்கு!" என்று நினைத்து ரகசியமாக சிரித்துக் கொள்ளும் முகிலமுதம் பிள்ளைகள் இருவரின் வாழ்வில் இப்படி சந்தோஷம் மட்டுமே எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்வார்.
திருமணம் ஆகாவிடிலும் தங்களுக்குள் இப்போதே தோன்றி விட்ட அந்நியோன்யத்தை சற்று தூரம் வரை தாயிடம் காட்டினால் தான் அவரது தேவையற்ற பயத்துக்கு எல்லாம் அமுதாம்மா விடை கொடுப்பார் என்று நினைத்து ஜெயன் இவ்வாறான வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.
இப்படியாக நாளும் பொழுதும் உழைப்பும், காதலுமாக இருவருக்கும் ஓடியதில் வதனி எதிர்கொள்ள பயந்த ஒருநாளும் வந்து நின்றது.
"ரெண்டு நாள்ல அம்மா வினோத்துக்கு நெனவு நாள் வருதுல்ல....? காரியம் எல்லாத்தையும் கவனிக்கணும்.
ஒரு பத்து ரூபா தேவைப்படுது வர்த்தினி.... இன்னிக்கு சாயந்தரம் வரும் போது எடுத்துட்டு வா!" என்று இந்த முறை நேரடியாகவே அவளிடம் பணம் கேட்டவனை ஏறிட்டவள்,
"ஜெயன்..... எனக்கு... அந்த நாள் வராமலே அத தாண்டிப் போயிட மாட்டோமான்னு இருக்கு!" என்று சொன்னவளிடம் சின்னதாக புன்னகைத்தவன்,
"ரெண்டு பேரும் போயி
பனிரெண்டு மாசம் கடந்துட்டதால உன்னோட மனசுல இருக்குற வலி இல்லன்னு ஆகிடுமா? இல்ல நீ சொல்ற மாதிரி அந்த நாள கடக்காம தாண்டிப் போயிட முடியுமா? வலிக்கத் தான் செய்யும். தாங்கித் தான் ஆகணும்; நாளு ஓடுனதே தெரியல.... ஒரு வருஷம் ஆகிப்போச்சு!"
"என்ன ஒண்ணு..... வலியக் கொஞ்சம் நகட்டி வச்சுட்டு அவங்க கூட இருந்த சந்தோஷமான நாள மட்டும் நெனச்சுப் பாரும்மா...... எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல! வேலைக்குப் போயிட்டு வர்றேன்!" என்று சொல்லி அவளிடம் விடைபெற்று போயிருந்தான்.
அவனுடைய சமாதானங்கள் எல்லாம் அப்பளம் போல நொறுங்கி
வினோத் மற்றும் மனோன்மணியின் புகைப்படத்தைப் பார்த்த போது கையெடுத்து கும்பிடாமல்,
"மனோம்மா..... வினு! என்னை விட்டுட்டு ஏன் போனீங்க ரெண்டு பேரும்?" என்று கேட்டு தரையில் இரண்டாக மடிந்து கதறியவளை,
"அழா.......த!" என்று அதட்டி அவளை வாரி அணைத்துக் கொண்டாலும் அன்று முழுவதும் விம்மிக் கொண்டிருந்தவளை என்ன செய்து தேற்றுவது என்று முகில், ஜெயன் இருவருக்கும் தெரியவில்லை.
"வதனிக்கண்ணு..... கொஞ்சம்டா இன்னும் கொஞ்சம் சாப்டுமா!" என்று அன்று முழுவதும் முகில் தான் அவளது பின்னாலேயே கெஞ்சி உணவை அவள் வாயில் தள்ளிக் கொண்டிருந்தார்.
இருவருக்குமான படையலை ஒரு இலையில் எடுத்துச் சென்று
மாடியில் வைத்தவன் தன்னவளின் துயரத்தை தன்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே என்று பெருமூச்சு விட்ட படி நின்றிருந்தான்.
"வினோத்து..... நீ யாரு என்னன்னு முன்னப் பின்ன எனக்குத் தெரியுதுப்பா! வர்த்தினிய தெரிஞ்சதால ஒன்னையவும் ஓரளவுக்கு தெரிஞ்சது எனக்கு; அவ மனசுல இருக்குற ஒனக்கான எடத்த நான் ஒண்ணும் செய்யப் போறதில்ல.... நீ ஆசப்பட்ட அந்தப்புள்ள மனசுல இப்ப எனக்கான எடம்னு ஒண்ணு உருவாகி இருக்கு; எனக்கும் அதே மாதிரித்தா! ஏதோ ஒரு ஆக்ஸிடென்ட்டு, அதுல எவனோ செத்தா நமக்கென்னன்னு அன்னிக்கு நா அசட்டையா போயிருக்காம இருந்துருந்தா, இன்னிக்கு நீயாவது ஒருவேள உயிரோட இருந்துருப்பியோ என்னவோ? இனிமே என்னோட கண்ணு முன்னால நான் பாக்குற எந்த ஒரு ஆக்ஸிடென்ட்லயும் என்னால முடிஞ்ச எதாவது சின்ன ஒரு உதவிய செஞ்சுட்டு தான் நகருவேன். ஒங்க ரெண்டு பேரோட உயிரு போனதுக்கு பிராயச்சித்தமா என்னால செய்ய முடிஞ்சது இவ்ளதான்... வர்த்தினிய என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லாப் பாத்துக்குறேன். எங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கும் நீங்க ரெண்டு பேரும் ஆசிர்வாதம் பண்ணனும்!" என்று வேண்டிக் கொண்டவன் அன்றிரவே அச்சுதனுடைய குடும்பத்தினருடன் வர்த்தினியை ஊருக்கு அனுப்பி வைத்தான்.
"எதுக்கு இப்ப என்னை அச்சுதன் ஸாரோட அவர் ஊருக்குப் போகச் சொல்ற?" என்று கேட்டவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன்,
"அச்சுதன் ஸாரோட வீட்ல எல்லாரும் ஒன்னைய பாக்கணும்னு சொல்றாங்களாம். அதான் அவரோட ஒன்னையும் மூட்ட கட்டி அனுப்பி வைக்குறேன்...... நாலஞ்சு நாள் தான? அவங்க கூட ஜாலியா போயிட்டு வா ஹெட்லைட்டு!" என்று சொல்லி விட்டு அவளைப் பிரிந்த தனிமையில் வாடிக் கொண்டிருந்தான்.
அச்சுதனோடு சென்றவள் திரும்ப வருகையில் அவளது சின்ன இதழ்களில் சின்னதாக ஒரு புன்முறுவலோடு வந்தால் அதுவே போதும் என்று நினைத்தான். தன்னவளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro