🌻 அழகி 66
மறுநாள் காலையில் ஆறரை மணிக்கு கோமதியுடன் சென்று நின்று அதன் கறவைக்காரருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜெயன். அவன் பேசுவதையெல்லாம் புரிந்து கொண்டது போல் தன் வாலையும், தலையையும் ஆட்டி அவ்வப்போது உடல் சிலிர்த்துக் கொண்டிருந்தது கோமதி. தாயின் கால்மாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த இளங்கோவின் அருகில் சென்றவன்,
"குட்டிப்பையா... என்னடா செய்யுற? நைட்டு நல்லா தூங்குனியா? வயிறு நெறஞ்சுச்சா ஒனக்கு? சீக்கிரமா பெரிய பையனா வளரணும்டா எளங்கோ; எத்தன நாளைக்கு தான் குட்டிப்பயலாவே இருந்து அம்மாவ நச்சுக்கிட்டே இருக்குறது சொல்லு பாப்போம்.....? நீ பெரிசா வளந்ததுக்கு அப்புறம் அண்ணே ஒனக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்ன?" என்று அதன் வாயில் ஒரு சிறிய வாழைப்பழத்தை திணிக்க முயற்சி செய்தபடி அதனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
"யண்ணா.... கோமதி இங்க வந்ததுக்குப் பெறவு சந்தோஷமா இருக்காளா இல்லையான்னு எப்டிண்ணா தெரிஞ்சுக்குறது?" என்று கேட்டவனை பார்த்துப் புன்னகைத்தவர்,
"கோமதி சந்தோஷமா தானுங்க தம்பி இருக்கு! அதோட கன்னுக்குட்டிய போட்டு நீங்க இப்டி பாடாப்படுத்துறீங்க; அம்மாவ நைக்காதங்குறீங்க; கல்யாணம் பண்ணி வைப்பேங்குறீங்க! பொண்ணு பாத்து தர்றேன்னு வேற சொல்றீங்க..... கோமதி இத்தனயும் பாத்துக்கிட்டு பேசாமத் தான இருக்குது? இதுக்கு இங்க இருக்குறது பிடிச்சிருக்கு தம்பி!" என்று சொன்னார்.
"சரிங்கண்ணா! நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும்..... ஆமால்ல கோமதி? என்னம்மா நீயி?இப்பத்தான் எளங்கோவுக்கும் எங்களுக்கும் பாலு குடுத்துருக்க..... அங்கண சும்மா நிக்காம ஒன்னோட சாப்பாடு எதையாவது சாப்டு வா!" என்று சொன்னவனை ஒருமாதிரியாக பார்த்து விட்டு அவன் கையில் பால் பாத்திரத்தை திணித்து விட்டு கிளம்பினார் அந்த நபர்.
"நமக்குள்ள இருக்குறது அந்த அண்ணனுக்கு எப்டித் தெரியும்? அதான் எப்ப வந்தாலும் நம்ம பேசிக்கறத இப்டி குர்ருன்னு பாத்துக்கிட்டே கெடக்காரு. நீ ஒண்ணும் கண்டுக்காத. சாப்ட்டுட்டு இரு, இந்தா வந்துடுறேன்!" என்று சொன்னவன் கையில் பாத்திரத்துடன் வீட்டிற்குள் சென்றான்.
"ஒனக்கு பால் கலக்கவா ஜெயனு....?" என்று
சமையலறைக்குள் நின்று கொண்டு அவனைப் பார்த்து கேட்டார் முகிலமுதம். இன்னும் வதனி கீழிறங்கி வராததால் அவளுக்காக கொஞ்சம் பொறுத்துப் பார்த்தார். பின்பு சமையலறைக்குள் சென்று தனக்கு மட்டுமாக தேநீரை தயாரித்து குடித்துவிட்டு மகனுடைய பேச்சுக்களை எல்லாம் கேட்ட படியே காலை உணவிற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்.
"எலேய்.... பாலு வேணுமான்னு
ஒங்கிட்டத்தா கேட்டேன்!" என்று மறுபடியும் கேட்டவரிடம்,
"ம்ஹூம்! நேத்துப் பாலெல்லாம் நீயே வச்சுக்கிட்டு ஏதாவது செஞ்சுக்க அமுதாம்மா! நான் எனக்கு இப்ப கறந்தத காய்ச்சி குடிச்சுக்குறேன்!" என்று சொல்லி விட்டு அடுப்பில் பாலை ஏற்றி விட்டு சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு பொட்டுக்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
"அவள இன்னும் காணும்?" என்று அவனிடம் கேள்வியாகவோ, அறிவிப்பாகவோ வதனியைப் பற்றிக் கேட்டவரிடம் அக்கறையற்ற பாவத்தில்,
"ஞாயித்துக்கெழம தான..... லேட்டா எழுந்திரிப்போம்னு நெனச்சாளோ? இல்ல நேத்து அழுத அழுகைக்கெல்லாம் சேத்து காச்ச வந்து படுத்துக் கெடக்காளோ யாருக்குத் தெரியும்?" என்று தோளைக் குலுக்கிக் கொண்டு கொஞ்சம் தேங்காய் துருவலை அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.
"எல்லாத்தையும் இப்டி தனித்தனி சாமானா வாயில போட்டு அரைச்சுக்கிட்டு இருந்தன்னா, அப்புறம் சட்னிக்கு மிக்ஸியில என்னத்தப் போட்டு அரைக்குறதாம்? போ..... இம்புட்டு நேரமெல்லாம் அவ தூங்கிட்டு இருக்க மாட்டா! மேல போயி அவள டீ குடிக்க கூட்டிட்டு வா..... இல்ல டீய மேலவே வேணும்னா கொண்டு போறியா?" என்று கேட்ட அன்னையிடம்,
"வர்றப்ப வந்து குடிக்கிறா.... இல்ல எதுவும் குடிக்காம சாப்புடாம கெடக்குறா..... நான் போயி எதுக்கு அவளுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருக்கணும்?" என்று சொல்லி முறுக்கிக் கொண்டான் ஜெயன்.
"டேய்...... நேத்து ஒங்க அப்பா கூட வேல சேந்து பாத்த ராமச்சந்திரன் மாமா நம்ம வீட்டுக்கு வந்துருந்தாரு. நான் அவரு கிட்ட ரொம்ப சந்தோஷமா எம்பையனுக்கு கூடிய சீக்கிரத்துல கல்யாணம் ஆகப் போகுதுங்கண்ணேன்னு சொன்னேன்.....!"
"வதனிப்புள்ள என்ன செய்யுது என்ன ஏதுன்னு கேட்டாரு! அப்பதான் நம்ம ஜெயனு நல்லா கரிபுடிச்ச பாய்லரு மாதிரி இருப்பான்..... சமீபத்துல ஏதோ ஒங்க ரெண்டு பேருக்கும் அடிப்பட்டு அவன் மொகத்துல வேற அடிபட்டுச்சுன்னு கேள்விப்பட்டேன்!"
"நான் இப்டி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதம்மா அமுதா....
அந்தப்புள்ள பெரிய பேங்க் ஆபிசரா இருக்குன்னு சொல்ற
கண்ணுக்கும் திருத்தமா வேற இருக்குமுன்னு சொல்ற......
உண்மையிலயே இதுங்க ரெண்டுக்கும் தான் கல்யாணம் செய்ய முடிவு பண்ணியிருந்தன்னா, ஒம்புள்ளய கொஞ்சம் பாக்குற மாதிரி ஆக்கிட்டு அப்புறமேலு கல்யாணத்த பத்தி யோசின்னு சொன்னாரு! அவர் சொன்னது நியாயந்தானடா ஜெயனு?"
"நான் வதனிப்புள்ள கிட்ட ஏதோ மொகத்துல இருக்குற தழும்ப சரி பண்றதுக்கெல்லாம் வழி இருக்காம்லன்னு கேட்டதுக்கு, அப்டியெல்லாம் யோசிக்கவே யோசிக்காதீங்க முகில்ம்மான்னு அது கொஞ்சம் கோபமா பேசிடுச்சுடா ஜெயனு!"
"இத்தன வருஷத்துல பாத்த புள்ளைங்க எல்லாம் ஒன்னைய ஒவ்வொரு காரணத்த வச்சு வேண்டாம்னு சொன்ன மாதிரி, நாளைக்கு கல்யாணத்துக்கப்புறம்
வதனிப்புள்ளயும் ஒன்னைய மனசு நோகுற மாதிரி எதுவும் பேசிடாதுல்ல?" என்று கேட்ட தன் அன்னையிடம் பதில் சொல்லாமல் லேசாக சிரித்தான் ஜெயன்.
"அடக் கூறுகெட்டவனே.... நாளப்பின்ன உன் வாழ்க்க என்னாகிடுமோன்னு நெனச்சு நான் பயத்துல அல்லாடிக்கிட்டு கெடக்கேன். ஒனக்கு என்ன இளிப்பு வேண்டிக் கெடக்கு?" என்று கேட்ட தன்னுடைய கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு அவரை அணைத்துக் கொண்டவன்,
"இங்கரு அமுதாம்மா..... நம்ம வாழ்க்கையில டெய்லி பத்து பேரு வந்து அவிய்ங்க நெனைக்குறத எல்லாம் நாம செய்யணுங்குற மாதிரி கப்பித்தனமா என்னத்தயாவது பேசிட்டுத் தான் போவாய்ங்க..... ஆனா நாம எப்டி வாழணும், என்ன செய்யணுங்குறத நாம தான் முடிவு பண்ணனும்..... சரியா?"
"எனக்கு ஏதாவது நல்லது செய்யணுமா? அத நீ யோசிச்சு சொல்லு அமுதாம்மா.......! நீ சொன்னதுக்காகவே நான் அந்த விஷயத்த செய்றேன். மத்தபடி சும்மா ரோட்ல போயிக்கிட்டு இருந்தேன், ஒங்கள பாக்க வந்தேன்னு வீட்டுக்கு வர்ற எவனோட யோசனையையும் நாம காதுல கூட வாங்கத் தேவயில்ல.... என்ன சொல்ற?" என்று கேட்டான்.
"உங்க அப்பாவோட கூட்டாளி நமக்கு நல்லத தான் சொல்லுவாருன்னு நெனச்சு அவர் பேசுனத அப்டியே வதனிப்புள்ள கிட்ட சொல்லி தப்பு பண்ணிட்டேனோடா ஜெயனு?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம் தோள்குலுக்கியவன்,
"நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல, ஒனக்கே தெரிஞ்சா சரித்தான்!" என்றான் ஜெயன்.
"டேய்....டேய்! மேல போடா; போயிட்டு நான் பண்ணுனது தப்புத்தான்னு சொல்லி எம்மருமகள கீழ கூட்டிட்டு வாடா ஜெயனு.....!" என்று பரபரத்த அன்னையின் தோள்பட்டையில் முகத்தை சொகுசாக சாய்த்துக் கொண்டு நின்றவன்,
"அப்ப என்னைய கண்ணு, செல்லம், தங்கமுனு கொஞ்சி கன்னம் வழிச்சு திருஷ்டி எடு.... அப்பத்தான் மேல போயி அவள சமாதானம் பண்ணி கூட்டிட்டு வருவேன்! ஒங்க ரெண்டு பேரோட போராடி, ஒங்கள சமாதானம் பண்றதுக்குள்ள எனக்கு தாவு தீந்து போவுது அமுதாம்மா.... அதுனால இனிமேட்டு இப்டி ஆளாளுக்கு தனித்தனியா ஒக்காந்துக்கிட்டு மூஞ்சிய தூக்குற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க புரியுதா?" என்று சொல்லி என்னவோ அவன் தான் இவ்வளவு நேரம் மாங்கு மாங்கென்று பேசியவன் போல் சலித்துக் கொண்டான்.
"சரிடா கண்ணு.... எந்தங்கம், சாமி, எங்க வீட்டு ராசகுமாரா, நான் பெத்தெடுத்த அழகுசுந்தரம்! இனிமேட்டு வதனிக்கண்ணு கூட நான் சண்டையே பிடிக்க மாட்டேன்டா செல்லம்.... போய் அவள கீழ கூட்டிக்கிட்டு வாடா ராசா!" என்று அவன் கன்னம் வழித்து நெட்டி முறித்த படி அவனிடம் சொன்னார் முகிலமுதம்.
"ம்ம்ம்..... இப்ப தான் நீ நல்ல அமுதாம்மா! இப்டித்தான் ஜெயனு சொல்ற பேச்சயெல்லாம் சமத்தா கேக்கணும் என்ன?" என்று அவரிடம் சொன்னவன் தன்னவளை கீழே அழைத்து வருவதற்காக மேலே ஏறிச் சென்றான்.
படிகளில் விசிலடித்துக் கொண்டே ஏறியபடி அவளுடைய வீட்டிற்குள் நுழைந்தவன் தலைக்குக் குளித்து, தாயின் பட்டுப் புடவையைக் கட்டி, விளக்கேற்றி கற்பகாம்பாளின் முன் அமர்ந்து ஏதோ ஸ்லோகத்தை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த வதனியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.
இளம்பச்சை நிறத்தில் வயலட் நிற பார்டர் போட்ட புடவை அணிந்திருந்தாள். அவளைப் பார்க்க ஆரம்பித்த பிறகு தான் ஜெயனுக்கு பெண்களின் உடைகளான புடவை, சுடிதார், டாப்ஸ் இதிலெல்லாம் சற்று பரிச்சயமே வந்தது.
அதிலும் தனக்கு எது நன்றாக பொருந்தும் என்று தெரிந்து உடுத்துவதை பாந்தமாக கண்ணுக்கு நிறைவாக உடுத்தும் இயல்புடையவள் வதனி!
முடியின் வளர்ச்சிக்காக சில பொருட்களை கலந்து வீட்டில் காய்ச்சிய எண்ணெயை பயன்படுத்துவதால் இப்போது அவளுடைய கூந்தலும் இடை வரை வளர்ந்திருந்தது.
செடிகளில் பூக்கள் பிடிக்க வேண்டுமென நினைத்து சிலநேரங்களில் ஜெயன் தன்னுடைய பூச்செடிகளின் கிளைகளை ஒட்ட வெட்டி விடுவதுண்டு. அவை பத்து நாட்களில் துளிர்த்து, மொட்டுக்கள் பிடித்து பூக்களை தரத் தொடங்கி விடும்.
அதேபோலத்தான் வதனி ஏழெட்டு மாதங்களுக்கு முன் அவன் கண்களுக்கு ஒருவிதமான அழகுடன் தெரிந்தாள்; இப்போதும் வேறு மாதிரியான அழகுடன் தெரிகிறாள்.
மனது சஞ்சலப்படும் நேரங்களில் அவனுக்கு எப்படி முகத்தில் காற்று மோத எங்காவது காரில் பயணிக்கப் பிடிக்குமோ அது போல் இவளுக்கு இந்தப் பழக்கம்!
"அதென்ன எந்நேரமும் கற்பகாம்பா கூட பேசிக்கிட்டு? அமுதாம்மா மாதிரி நீயும் கெழவியாடீ.....?" என்று அவளைக் கிண்டல் செய்தாலும் லேசாக சிரிக்கத் தான் செய்வாளே தவிர எப்போதாவது இப்படி மனம் கவர்ந்த தியானத்தில் அமர்ந்து விடுவாள்.
மணியோசையுடன் சுவாமிக்கு தீபாராதனை காட்டியவள், அவனை தன் பக்கத்தில் வந்து நிற்குமாறு கண்களால் அழைத்தாள்.
"நா இன்னும் குளிக்கலடீ....!" என்று சைகை செய்தவனின் அருகில் வந்து நெற்றியில் திருநீறு பூசி விட்டவள் அவன் கண்களை மறைத்து நெற்றியில் ஒருமுறை ஊதி விட்டாள்.
".......ஹா...... காலங்காத்தால ஒங்கிட்ட இருந்து வர்ற வாசம் எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா? கீழ ப்ரச்சன எல்லாம் முடிஞ்சுச்சு. அமுதாம்மா ஒன்னைய காணும்னு தவிச்சுக்கிட்டு இருக்கு..... நீ என்னடான்னா இங்க உன் கற்பகாம்பாளோட ஒக்காந்து கத பேசிட்டு இருக்க...... முடி நல்லா இடுப்பு வரைக்கும் வளந்துடுச்சுல்ல ஒனக்கு.....?" என்று கேட்டு அவளோடு ஒட்டிக் கொண்டவன்,
"பல்லு தேய்ச்சு, குளிச்சுட்டு எதுக்கும்மா இப்டி ஒட்ட ஒட்ட வெறுவயித்தோட சாமி முன்னால ஒக்காந்துட்டு இருக்குறவ? ஒருவாய் சாப்ட்டு வந்து இதெல்லாம் செய்யக்கூடாதா? வயிறு பசிக்கலயா ஒனக்கு? கீழ இறங்கு. சாப்புடப் போவம்!" என்று சொல்லி விட்டு அவளிடமிருந்து விலகி வாசல் புறமாக நகரப் போனான்.
அவனை தன்னுடைய அணைப்பில் இருந்து விடுபட விடாமல் இறுக்கிக் கொண்டவள் சற்றே எரிச்சலுடன்,
"டேய்.... உனக்குப் பிடிக்கும்னு தான் நேத்து நைட்டே ப்ளவுஸ்ல தையலப் பிரிச்சு, காலையில தலைக்குக் குளிச்சு, ரோஸ பறிச்சு தலையில வச்சு, பொடவ கட்டி, மொகத்துக்கு லேசா மேக்கப் வேற போட்டுட்டு அப்புறமா ஒக்காந்து பூஜ செஞ்சு முடிச்சுருக்கேன். நீ வந்ததும் ஒண்ணுமே சொல்லாம வா கீழ போவம்னு என்ன அர்த்தம்?" என்று அவன் தாடைக்கு நேராக அவள் முகத்தை நிமிர்த்தியபடி கேட்க ஜெயன் பெரிதாக ஒரு மூச்சு விட்டு தன் தலையை உலுக்கிக் கொண்டான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro