Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 60

"ஒன்னைய கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்!" என்ற வார்த்தையை அவன் தூங்கிக் கொண்டிருக்கையில் வதனி அவனிடம் எப்படி சொன்னாளோ எவ்வாறு சொன்னாளோ?

அந்த ரகசியம் இன்று வரை ஜெயனுக்குத் தெரியாது. உன்னைப் பிடித்திருக்கிறது, உன்னை காதலிக்கிறேன் என்ற விஷயத்தை சமீபமாக வதனி தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் ஜெயனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.....

ஆயிற்று! அவள் லவ்டேலுக்கு அவனைத் தேடி வந்து இன்றுடன் இரண்டு.... ம்ஹூம் இரண்டரை மாதங்கள் இருக்கும்; ஜெயனுக்கு தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் இந்த இரண்டரை மாதங்களை "வாழ்வில் பொன்னெழுத்துகளால் பொறித்து வைக்கப்பட்ட வேண்டிய நாட்கள்" என்று அடைமொழியிட்டு அழைக்கலாமா என்று கூட தோன்றியது.

"நீ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஜெயன்..... ஒனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஒண்ண நான் வாங்கித் தரட்டுமா?" என்று கேட்டவளிடம் சிறு சிரிப்புடன்,

"என்ன வாங்கித்தரப் போறீங்க மேடம்? ஸ்வெட்டரா?" என்று கேட்டான்.

"ம்ஹூம்......!" என்று தலையாட்டி புன்னகைத்தவள் அவனுக்கான பரிசாக வாங்கி வந்தது ஒரு நாட்டின பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும். ஏற்கனவே மாட்டிற்காக யாரிடமோ சொல்லி வைத்து இருந்திருப்பாள் போலும்.... கன்று ஈன்று ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் போல தெரிந்தது.

வதனியிடம் இருந்து இப்படி ஒரு பரிசை முகிலமுதம், ஜெயன் இருவரும் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை.

"ஜெயன்..... இந்தப் பொண்ணு பேரு கோமதியாம்; இவங்களோட குட்டிக்கு பேரு இளங்கோவாம்! நம்ம அச்சுதன் ஸாரோட போய் தான் கோமதியோட பழைய ஓனர் கிட்ட எல்லாம் பேசிட்டு அவங்கள இங்க கூட்டிட்டு வந்துருக்கேன்.... இளங்கோ சாப்டுறது போக கோமதியோட பால் உனக்குத்தான்; பட் கோமதி இளங்கோ ரெண்டு பேரையும் நாம நல்லாப் பாத்துக்கணும்... பாத்துக்கலாம்ல?" என்று தலைசரித்துக் கேட்டவளை

"எப்டிறீ எங்கிட்டப் போயி இவ்ளவு காதலக் காமிச்சுக் கொல்லுற?" என்ற கேள்வியை கேட்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

"ஜெயன் உங்கிட்ட தான் கேக்குறேன். பதில் சொல்லு; நான் வாங்கித் தந்த ரெண்டு பேர ஒனக்குப் பிடிக்கலயா?" என்று சந்தேகம் எழுப்பியவளிடம்,

"நீங்க வாங்கித் தந்த கோமதியவும், எளங்கோவையும் எனக்கு
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஏஎம் அம்மா; ரெண்டு பேரையும் நான் பத்திரமா பாத்துக்குறேன்!" என்று சொன்னவன் தன்னுடைய வீட்டின் முன்பக்கமாக இருந்த சிறிய காலி இடத்தில் அந்த பசுவிற்கும், கன்றுக்கும் ஒரு பிளாஸ்டிக் ஷெட் வீட்டையும் கட்டிக் கொடுத்து விட்டான்.

மார்க்கெட்டில் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேசி அவருடைய மருமகளின் பசுஞ்சாணத்தால் சாம்பிராணி தயாரிக்கும்
கைத்தொழில் ப்ளாண்ட்டுக்கு
தினமும் கோமதி மற்றும் இளங்கோவின் சாணத்தையும் வண்டியில் வந்து எடுத்துச் செல்லும் படி ஏற்பாடும் செய்து விட்டான்.

"ஏய்.... வதனிப்புள்ள; என்னாது இது? ஒன்னைய கட்டிக்கிடப் போறவன் குடிக்குறதுக்கு பாலு வேணுமின்னுட்டு மாட்டையும் கன்னுக்குட்டியையும் வாங்கிக் குடுப்பியா நீயி? ஏன் தொர இப்ப வரைக்கும் குடிச்சாப்ல வெளிய வாங்கி பாலக் குடிக்க மாட்டாரோ?" என்று தன்னுடைய மகனையும், வருங்கால மருமகளையும் கிண்டல் செய்தாலும் முகிலமுதத்திற்கு அவர்கள் இருவரையும் வருங்கால தம்பதிகளாக நினைப்பதே அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.

"ஜெயன் வேண்டாம்னு சொல்லாத மாதிரி ஒரு பரிச வீட்டுக்கு கொண்டு வரணும்னு யோசிச்சேன் முகில்ம்மா; அதுனால தான் இப்டி ஒரு கிப்ட் குடுத்தேன். உங்களுக்கும் இந்த மாதிரி என்ன வேணும்னு சொல்லுங்க. அத குடுத்துட்டாப் போச்சு!" என்று கேட்ட வதனியை தன்னுடைய அருகில் அமர்த்திக் கொண்ட முகிலமுதம்,

"என்னைய அப்பப்ப நீ அத்தன்னு கூப்டு! அது தான் எனக்கு வேணுங்குற கிப்ட்டாக்கும்!" என்று சொல்ல வதனி அவர்களை அணைத்துக் கொண்டு முகிலமுதத்தின் முகம் பார்த்து, "ஓகே அத்தை! பட் எப்பவாவது தான் உங்கள இப்டி கூப்டுவேன் பாத்துக்கோங்க..... மத்தபடி எப்பவும் நீங்க என்னோட பேவரைட் முகில்ம்மா தான்!" என்று சொல்லி விட்டு லேசாக சிரித்தாள்.

"ச்சை...... இந்த மாமியா, மருமகளுக்குள்ள சண்டையே வராது போலிருக்கேடா ஜெயனு? இதுக ரெண்டையும் நாலு நாளைக்கு பாயம்மா மரியம் மத்தியில இருங்கன்னு கொண்டு விட்டுட்டு வரணும்..... அப்பத்தான் அதுங்க போடுற சண்டையப் பாத்து இதுகளும் கொஞ்சம் ட்ரையின் ஆவுங்க!" என்று சும்மா வாய் பேசினாலும் வதனியும் அமுதாம்மாவும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சி ஜெயனுடைய கண்களுக்கு அவ்வளவு அழகான காட்சியாக தெரிந்தது.

ஒரு வெள்ளியன்று இரவு அவனிடம் தயங்கிய படி வந்து அவன் மார்பில் ஒட்டிக் கொண்டு கன்னம் பதித்தவளிடம் "என்னடா வேணும்?" என்று கேட்டு அவள் தலையில் தன்னுடைய நாடியைப் பதித்தான் ஜெயன்.

"அப்பாவ பாக்க போயிட்டு வரலாமா ஜெயன்...... ப்ளீஸ்?" என்று மெல்லிய குரலில் கேட்டவளிடம்,

"அங்கல்லாம் வேண்டாம் வர்த்தினி!" என்று நிர்தாட்சயணமான குரலில் மறுத்தான் ஜெயன்.

"நான் சொல்றத ஒரு நிமிஷம் கே..." என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் வாயை வேகமாக தன் கைகளால் அடைத்தவன்,

"எதையும் கேக்க சொல்லாத; அந்த ஆள முதல்ல ஒன்னோட அப்பன்னு சொல்லாத!" என்று அழுத்தமான குரலில் சொன்னவனுடைய கண்களைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் வர்த்தினி.

"என்னைய கல்யாணம் பண்ணிக்கறதா வேணாமான்னு ஒனக்குள்ளயே கூட இன்னும் நூறு தடவ யோசி; ஆனா ஒரு இத்தபய முன்னால போயி நின்னு இவன நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லணும்னு நெனக்காத.....!"

"அவனுங்க முன்னால போயி நின்னா நம்ம கையி, வாயெல்லாம் சும்மாயிருக்காது வர்த்தினி. என்னைய நீ அங்க கூட்டிட்டுப் போனயின்னா அவிய்ங்க கிட்ட நான் அசிங்கமா எதையாவது பேசி, எங்களுக்குள்ள கைகலப்பாகி வீணா ரசாபாசம் தான் வரும்! இதுக்கும் மேல சென்னைக்குப் போவணும்னா சொல்லு; இப்பவே கிளம்புவம்!" என்று சொன்னவனுடைய முதுகைப் பற்றிக் கொண்டவள்,

"வேணாம்! அங்க போக வேணாம்! அவர்ட்ட சம்மதம் கேக்காம எப்பவும் போல இதுல நானே முடிவு எடுத்துக்குறேன்..... உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே ஜெயன்!" என்று சொன்னவளை தொடையைப் பற்றி தன்னுடைய நெஞ்சுக்கு மேல் தூக்கினான் ஜெயன்.

"ஏ....ய்! வர வர ஒன்னோட சேட்டய தாங்க முடியல; இப்ப எதுக்கு என்னை தூக்குன? கீழ எறக்கி விடுறா!" என்று சிணுங்கியவளை தலையை உயர்த்திப் பார்த்தவன்,

"அதான் மேல வரைக்கும் போய்ட்டேல்ல? போனாப் போவுதுன்னு உன் கடங்காரனுக்கு நெத்தியில ஒத்தடம் வைக்குறாப்ல ஒரு முத்தம் குடுத்துட்டு வா பாப்போம்!" என்று கேட்டபடி அவளை தூக்கிய நிலையிலேயே நின்று கொண்டு அவளிடம் பேசினான்.

"வதனிப்புள்ள கேக்குதுன்னு எத வேணுனாலும் செய்யச் சொல்லுங்க அமுதாம்மா; நான் செய்றேன்..... ஆனா அந்தப்புள்ளய எதுக்குப் பெத்தோம், ஏன் பெத்தோம்னே தெரியாம ஒருத்தன் பெத்துப் போட்டான் பாத்தீங்களா? அவேமுன்னால போயி என்னைய நிக்கச் சொல்லாதீங்க. நாளப்பின்ன இவள தேடிக்கிட்டு, சொந்தங்கொண்டாடிக்கிட்டு அவிய்ங்களையும் இங்க வரக்கூடாது பாத்துக்கோங்க. அப்டி ஒருவேள இங்க வந்தாய்ங்கன்னா அவிய்ங்கள செருப்புல அடிச்சு வெளிய பத்தி உடுங்க! என்னோட பொண்டாட்டிய தங்கமா நெஞ்சுல வச்சு தாங்குறது எப்டின்னு எனக்குத் தெரியும்!"

"இதுவரைக்கும் அவள என்ன ஏதுன்னு ஒருவார்த்த கேக்காதவன் கிட்ட எல்லாம் இப்ப என்னால அவள கூட்டிக்கிட்டுப் போய் நிக்க முடியாது பாத்துக்கோங்க!" என்று முகில்ம்மாவிடம் சொன்ன அவனுடைய கோபத்தை இப்போது ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அப்பாவைப் பார்க்கலாமா என்ற கேள்வியை வதனி அவனிடம் கேட்டாள்.

இந்த விஷயத்தில் ஜெயனுடைய கோபம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாரும் இல்லாத அகதி அல்ல நீ.... என் வாழ்வின் பாதியாகவும் ஆதியாகவும் ஆனவள் என்று திரும்ப திரும்ப ரீங்காமிடுவது போல் அவனுடைய மொத்த கோபமும் இருந்தது.

"நாங்கேட்டத குடுக்காம
என்னைய இப்டி கண்கொட்டாம பாத்துக்கிட்டே இருந்தா, விடிய விடிய நானும் இப்டியே ஒன்னைய தூக்கி வச்சுக்கிட்டு நிக்கப்போறேன் பாத்துக்க ஹெட்லைட்டு!" என்று மெல்லிய குரலில் உரைத்தவனைப் பார்த்து குறுஞ்சிரிப்பை உதிர்த்தாள் வதனி.

"இப்டி சிரிச்சு சிரிச்சே ஆள மயக்கிடு......!" என்று சலித்தவனை மறுபடியும் இமை கொட்டாமல் பார்த்தவள் அவனது நெற்றியை விட்டு விட்டு தன்னுடைய இதழ்களை விருப்பமாக அவனது இதழ்களுடன் இணைத்தாள்.

"ஆ.......ங்!" என்று ஒட்டுமொத்த ஆச்சரியத்தில் கைகளை தளர்த்தியவனின் இதழிடமிருந்து தற்காலிகமாக தன் இதழைப் பிரித்தவள்,

"மிஸ்டர் Impatient Customer! இப்ப நீ ஜெர்க் ஆகி என்னைய கீழ விட்டுட்டன்னா உனக்கு இன்னிக்கான கோட்டா கிடையாது பாத்துக்க; அப்புறம் அதுக்கு ஒருக்க என்னைய டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. வாங்குறதுன்னா இப்பவே இந்த செகண்ட்லயே கிஸ்ஸ வாங்கிக்க!" என்று சொன்னவளை அதற்குமேல் கீழே இறக்கி விட ஜனமேஜயன் என்ன முட்டாளா?

இருவரின் இசைவாலும், இச்சையாலும் பொறுமையாக, ஆழமாக, ரசனையுடன், பற்கள், நாக்கு, இதழ்கள் மூன்றின் தேடல்களுடன் பிறந்த அந்த இதழ் முத்தம் அப்போது தான் பிறந்த பச்சிளம்குழந்தை போல அவ்வளவு பரிசுத்தமாக இருந்தது.

"என்னை நீ மதிக்கிற; காதலிக்குற; ஏதோ கையில கிடைச்ச பொக்கிஷம் மாதிரி தாங்குற; உடம்புக்கும் மனசுக்கும் எவ்ளோ தூரம் இம்ச குடுக்க முடியுமோ அவ்ளோ இம்ச குடுத்து ஒன்னையவே எப்பவும் நெனச்சுட்டு இருக்குற மாதிரி பண்ணுற..... இதுக்குல்லாம் ரொம்ப ரொம்ப லவ் யூ ஜெயன்!" என்று மெதுவான குரலில் காதுமடல்கள் சிலிர்க்கும் படி கூறி அப்போது தான் ஈரப்படுத்திய தன் இதழ்களைக் கொண்டு அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள் வதனி.

இறக்கி விட்டால் தேவையானது கிடைக்காது என்று தெரிந்து அவளை மிகக் கவனமாக இத்தனை நேரம் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்த கள்ளன், இப்போது இதழிலும், கன்னத்திலும் இருமடங்காக கேட்டதெல்லாம் கிடைத்த திருப்தியில் வர்த்தினியை தரையில் பாதம் பதிக்க வைத்தான்.

முத்தத்திற்கு மேலாக அவனுக்கு போதையை தந்தது அவளுடைய பேச்சும், காதருகில் உரசிய அவள் மூச்சும் தான்..... நெஞ்சுக்கூடு உலர்ந்து மயங்கி விழுபவனுக்கு தெரியும் எல்லா அறிகுறிகளும் ஜெயனுக்கும் தெரிந்தன.

"வர்த்தினி..... கண்ணக் கட்டிக்கிட்டு வர்ற மாதிரி இருக்குடீ! காதுக்குள்ள பேசி மனுஷன இப்டியெல்லாம் உசுப்பேத்தி உடாத; ய........ப்பா; ரொம்ப மூச்சு முட்டுதுடா  சாமி!" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பெரிய பெரிய மூச்சுக்களாக எடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டிருந்தான்.

"நீ தான ஒருநாள் எங்கிட்ட சொன்ன.... கல்யாணம் ஆகிட்டா முத்தம் மட்டுமில்ல அதுக்கு மேலயும் நிறைய விஷயத்த பாக்க வேண்டியது வரும்னு? நான் ரெடியாகிட்டேன்ப்பா! விடுற மூச்சையெல்லாம் பாத்தா நீ இன்னும் அதுக்கு ரெடி ஆகல போலிருக்கே?" என்று கேட்டவளை தீப்பார்வையால் முறைத்தவன்,

"பேசுடீ ஹெட்லைட்டு..... இதுவும் பேசு! இதுக்கு மேலயும் பேசு! எல்லாத்துக்கும் சேத்து வச்சு கவனிக்க வேண்டிய நேரத்துல ஒன்னைய நான் கவனிச்சுக்குறேன்!" என்று சொல்லி விட்டு அவளை கீழிறக்கி அவளுடைய அறைக்குள் தள்ளி விட்டு அவனும் கீழே இறங்கிச் சென்றான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro