Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 59

கண்ணுக்கு முன்னால் பெரிய அளவில் ஒரு காலி இடம் தெரிந்தது வதனிக்கு. அது உண்மையில் காலி இடம் அல்ல; லவ்டேலை சுற்றி அமைந்துள்ள லேக்வ்யூ பாயிண்ட்!

இந்த மாதிரியான பங்களாக்களின் முதலாளிகள் தங்களுடைய பங்களாவில் இருந்து ஏரிக்கு ப்ரத்யேகமாக ஒரு பாதை அமைத்துக் கொண்டு அதில் படகு விட்டுக் கொள்ளலாம்; தண்ணீர் இல்லாத ஏரிக்குள் இறங்கி கிரிக்கெட் விளையாடலாம்; சின்னதாக டென்ட் அமைத்து அதில் தங்கலாம்....... ஆனால்
ஏரியில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பாதுகாப்பை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்!

அங்கு தான் இப்போது ஜெயனும், வதனியும் வந்து உட்கார்ந்திருந்தனர். அவனிடம் பேச நிறைய கதைகள் இருந்தது வதனிக்கு.

"ஜெயன்.... 80'ஸ் ப்ரீயட்லலாம் இந்த மாதிரி புல்வெளியில தான டூயட்ஸ்லாம் எடுப்பாங்க..... நாமளும் அவங்கள மாதிரியே இந்த எடத்துல உருண்டு வெளையாடலமா?" என்று குதூகலித்த படி கேட்டவளை

"யாரும்மா நீயி?" என்று கேட்பவன் போல முறைத்துப் பார்த்தான் அவன்.

பின்னே அலைபேசியில் பேசிய போது "இப்ப நீ என்ன சொல்ற? வினோத்தோட நெனப்பு இல்லாம இப்ப ஒம்மனசுல நாந்தான் இருக்குன்னே சொல்றியா?" என்று கேட்டவனிடம் ஆம் என்றோ இல்லை என்றோ ஒரு தெளிவான பதிலைத் தராமல் உன்னைப் பார்க்க நீ இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என்றாள்; சரி..... வந்ததும் வராததுமாக ஏதோ அவளுடைய மனதில் இருப்பதை தான் கொட்டப் போகிறாள் என்று அடித்துப் பிடித்து ஓடி வந்தால்,

"நானும் ஒங்கூட சேந்து வேல செய்யட்டுமா?" என்று கேட்டு சுத்தம் செய்யும் வேலையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

அந்தக் கொடுமையெல்லாம் போதாதென்று இப்போது அவனிடம் இந்த இடத்தில் உருண்டு விளையாடாலாமா என்று வேறு கேட்கிறாள்!

"இவ என்னைப் பத்தி என்னத்த தான் நெனச்சுக்கிட்டு இருக்கா? ஒன்னப் பிடிச்சுருக்குடா ஜெயனு.... ஒன்னையவே நான் கல்யாணம் பண்ணிக்குறேன்னு ஒருவார்த்த சொன்னா கொறஞ்சா போயிடுவா?" என்று நினைத்தவன் அவளிடம் ஒரு மாதிரியான சலிப்புக்குரலில்,

"சினிமாவுல பாத்தத, பாக்குறத எல்லாம் நெஜவாழ்க்கையில அப்டியே செஞ்சு பாக்கமுடியாது வர்த்தினி! இது ஒண்ணும் புல்வெளி இல்ல; தண்ணி கம்மியா கெடக்குற ஏரி! ஆசையா இருக்குதுன்னு உருண்டு வெளையாடுன.... அங்கங்க தூக்கிக்கிட்டு நிக்குற சின்ன சின்ன கல்லுல முட்டி மண்ட ஓப்பனாகிடும்; ஏற்கனவே ஒருதடவ ஓப்பன் ஆனது வேற...... கை காலு எல்லாத்தையும் பத்திரமா வச்சுக்க! நான் கொஞ்ச நேரம் படுத்துருக்கேன்!" என்று அவளிடம் சொன்னவன் தன்னுடைய கையை தலைக்குப் பின்னால் மடித்து தலையில் கை வைத்து படுத்துக் கொண்டான்.

"தூக்கம் வருதா ஒனக்கு? நான் ஏதாவது பாடவா ஜெயன்?" என்று கேட்டவளிடம்,

"ஒண்ணுந்தேவயில்ல! நான் தூங்கல்லாம் இல்ல; சும்மாத்தான் கைய கால நீட்டிப் படுத்துருக்கேன்;
நாம இங்கருந்து சீக்கிரமா கெளம்பணும்!" என்று சொல்லி விட்டு கண்களை மூடினான் ஜெயன்.

இந்த இடத்தில் மன ஒருமைப்பாடு சுலபமாக கை கூடி வருகிறது என்று நினைத்த வதனி, ஜெயனுடைய அருகில் அமர்ந்து லலிதா சகஸ்ர நாமத்தின் முதல் நூற்றியெட்டு மந்திரங்களை தடங்கல் இன்றி ஜபிக்க ஆரம்பித்தாள்.

"பாட்டு தேவயில்லன்னு சொன்னா மந்திரம் படிக்க ஆரம்பிச்சுட்டாளா? இவள வச்சிக்கிட்டு.....!" என்று சலித்தவன் சற்று நேரத்திற்குள் அவளது மந்திரம் அவனுக்கு தாலாட்டுப் போல் கேட்க தன்னையும் மீறி அயர்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

சீரான அவன் மூச்சுக்காற்றை கேட்டபடியே மந்திரத்தை முடித்தவள், அவனுடைய நெஞ்சுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எப்டிடா இப்டி கொழந்த மாதிரி தூங்குற? எப்பப்பாத்தாலும் கவுந்து படுத்துக்குறதால நீ
தூங்கும் போது ஒம்முகம் எப்டியிருப்பன்னு நான் ரொம்ப கவனிச்சதேயில்ல; இன்னிக்கு ரொம்ப க்யூட்டா தூங்குற தெரியுமா? நான் ஹெட்லைட்டுன்னா நீ யாராம்? காரோட என்ஜினா இல்ல காரோட சாவியா? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா மிஸ்டர் ஜனமேஜயன்?" என்று கேட்டவள் சின்ன புன்முறுவலுடன் அவனது கன்னத்தின் தழும்பை ஒற்றை விரலால் வருடிக் கொடுக்க அவளுடைய ஸ்பரிசத்தில் ஜெயன் லேசாக அசைந்தான்.

"ஐயோ..... ஜெயன் மெல்லமா அசையுறான் வதனி; அப்டியே படுத்துரு!" என்று அவளுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு ஏரியின் கரையோரத்தில் அவன் பக்கத்தில் படுத்தவள் அவன் தூக்கம் கலைந்து கண்களைக் கசக்கி விட்டு "ரொம்ப
நேரம் தூங்கிட்டனா?" என்று அவளிடம் கேட்டு, அவளை இங்கிருந்து எழுந்து வருகிறாயா என்று நிறைய தடவைகள் கேட்ட போதும் கூட அங்கேயே அப்படியே தான் படுத்திருந்தாள் வதனி.

"சொல்லிக்கிட்டே இருக்கேன்ல? அப்டியே மண்ணு கணக்கா தரையிலயே கெடந்தா என்ன அர்த்தம்? வீட்டுக்கு கெளம்புற மாதிரி உத்தேசம் இல்லயா? மணி ஆறாச்சு!" என்று பனிரெண்டாவது தடவையாக அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தவனின் அருகே புல்வெளியில் வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவள் அவனிடம்,

"இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போறேன் ஜெயன்..... ப்ளீஸ்!" என்று மூக்கைச் சுருக்கிக் கொண்டு சொல்ல ஜெயன் அவளது செய்கையினால் கோபமடைந்தான்.

நாளை மாலை வரை வேலை செய்ய போட்டு வைத்திருந்த திட்டம், இவளது உதவியால் நாளை காலையிலேயே முடிந்து விடும்தான்.... ஆனால் இங்கிருந்து புறப்படவே இவ்வளவு தாமதமாக்கினால் இவள் எப்போது வீட்டிற்குச் சென்று சேர்வது என்று நினைத்து பல்லைக் கடித்தவன்,

"இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள அமுதாம்மா ஒனக்கு போன் அடிக்கப்போவுது; இங்கருந்து இன்னும் கெளம்பலையின்னு நீ சொல்லு.... அதுக்கப்புறம் எனக்குத்தான் மொத்தமா ஆப்பு அடிக்கப்போவுது எங்கம்மா!" என்று சொல்ல பக்கவாட்டில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்து முறைத்தவள்,

"முகில்ம்மா எதுக்கு காரணமே இல்லாம திட்டப் போறாங்க ஒன்ன? அதெல்லாம் திட்ட மாட்டாங்க. நான் கிளம்புறதுக்கு லேட் ஆனா என்ன இப்ப? என்னைய வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு நீ காலையில இங்க வாயேன்..... கொஞ்சம் வேல தான இருக்குன்னு சொன்ன? எனக்காக இன்னிக்கு ஒருநாள் எங்கூட வர மாட்டியா?" என்று கோபமாக கேட்டவளிடம்,

"ம்ப்ச்.... இந்த யோசன மூளையில தோணாமப் போச்சு பாரேன் நமக்கு; இங்கணக்குள்ளயே
உருண்டுக்கிட்டே மேகம், மரம், மலைன்னு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இரு.....என்ன இன்னுங்கொஞ்ச நேரத்துல நம்ம நாலு காலு ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவிய்ங்களோட ராத்திரி சாப்புட்டுக்காக கெளம்பி வெளிய வருவாய்ங்க......!"

"வர்றது காட்டுக்கோழியா இருக்கலாம், நரியா இருக்கலாம், ஓநாயா இருக்கலாம்.... இல்ல கரடியா கூட இருக்கலாம்! நீ பாட்டுல புல்லுல குப்புற படுத்துக்கிட்டு நீல வானம், நீயும் நானுமுன்னு பாட்டு பாடிக்கிட்டு கெடந்த..... வா நீயும் நானும் கொஞ்சம் கட்டிப்புடிச்சு பாட்டுப்பாடுவோமுன்னு அதுங்களும் ஒனக்கு தொணைக்கு வரும்! பங்களாவுக்கு முன்னால நிக்கலச நெருப்பேத்த சொல்லுறேன்..... எவ்ளோ நேரம் வேணுமின்னாலும் ஒக்காந்து பாடிக்கிட்டோ, பேசிக்கிட்டோ இரு. இப்ப கிளம்பலாமா இங்கருந்து?" என்று சொன்னவனிடம்,

"நீ பொய் சொல்ற..... மணி இப்பத்தான் ஆறு ஆகுது; லேசா இருட்ட ஆரம்பிச்சவுடனே எல்லா அனிமல்ஸூம் நம்ம இருக்குற எடம் வரைக்கும் வந்துடுமாக்கும்? சில்லுன்னு அடிக்குற காத்து, கொஞ்சமான வெளிச்சத்துல ஒக்காந்துருக்குற நம்ம, நம்மள சுத்தி பச்சையா கார்ப்பெட் விரிச்ச மாதிரி இருக்குற ஏரிக்கரை, அந்த ஏரிக்கரையில தூரத்துல கொஞ்சூண்டு தண்ணி, பறவைங்க, அதுக்கு பின்னால பெரிய மலைன்னு இந்த எடம் எவ்ளோ ஏகாந்தமா இருக்கு! இத விட்டுட்டு அந்த சிமெண்ட் கட்டடத்துக்கிட்ட போறேன், போறேங்குறியே.......ஜெயன்? உனக்கு கொஞ்சங்கூட ரசனையே இல்ல!" என்றவளிடம்,

"ஆமா.... இல்ல; அதுக்கு என்னங்குற இப்ப?" என்று கேட்டவனிடம் கையை நீட்டினாள்.

"என்ன வேணும் ஒனக்கு?" என்று கேட்டவனிடம்,

"கையப் புடிச்சு தூக்கி உடேன்; ஏன் ஒருமாதிரி கோபமா இருக்க? இப்ப என்ன ஆச்சு?" என்று விளங்காத பார்வை பார்த்து அவனிடம் கேட்டாள் வதனி.

அவளுடைய அருகில் வந்தவன் தன் ஒரே கையின் உதவியால் அவளது எடையைத் தூக்கி அவளை நிற்க வைத்திருந்தான்.

"ஜெயன்..... எனக்கு இங்கல்லாம் நெருப்பு மூட்டி ஒக்கார வேணாம். என்னை வேற எங்கயாவது கூட்டிட்டுப் போயேன்..... திண்ணன் தாத்தா வீடு மாதிரி அமைதியா அழகா இருக்குற வேற ஏதாவது எடத்துக்கு?" என்று கேட்டவளை ஒரு பார்வை பார்த்தவன்,

"மணி என்னாச்சு பாத்தியா? இந்நேரம் வீட்டுக்குப் போவாம இன்னும் எங்க போயி சுத்திக்கிட்டு இருக்கச் சொல்ற? அதெல்லாம் முடியாது. எல்லா இடமும் ஆறு மணிக்கே மூடியிருப்பாங்க. இப்பல்லாம் எங்கயும் சுத்த முடியாது!" என்றான் அந்நியமான குரலில்.

"ரொம்ப பொறுப்பான கைய்டு மாதிரியே பேசுறியேப்பா? நீ தான் உதகமண்டலம் ஏரியாவுக்கே ராஜா ஆச்சே? தாங்கள் இப்டி என்னுடைய விண்ணப்பத்தை நிராகரிக்கலாமா அரசே?" என்று கேட்டவளின் சிரிப்பைப் பார்த்து ஏனோ இன்று அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

வதனியுடைய ஆசை என்ன என்பது அவனுக்குப் புரியவில்லை. ஜெயனுடைய எதிர்பார்ப்பை அவள் அறிந்து கொள்ளவில்லை. எனவே இருவரும் மாறுபட்ட மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்.

"எங்கயும் போக வேண்டாம் சரி;  போற வழியில சோளமாவது வாங்கித் தாயேன்...... நாம கொஞ்ச நேரம் அப்டியே நடந்துட்டு வீட்டுக்குப் போகலாம்!" என்று கேட்டவளிடம்,

"சோளம் சாப்ட்டா வயிறு வலிக்கும்!" என்று சிறுகுழந்தைக்கு சொல்வது போல சொன்னவனிடம் அதற்கு மேல் ஏதும் பேசாமல் வெறுமனே தலையை மட்டும் ஆட்டியவள் பெரியவர் நிக்கோலெஸிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.

"இன்னிக்கு நீ இங்க பாத்துக்க நிக்கலசு! நான் போயிட்டு காலையில வெள்ளன வந்துடுறேன்!" என்று சொன்னவனிடம்,

"பைய்யவே வா ஜெயனு! ஒண்ணும் அவசரமில்லை!" என்று சொல்லி வதனியிடம் இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு அவர்களை அனுப்பி வைத்தார் நிக்கோலெஸ்.

பேருந்திலும் இடித்துப் பிடித்துக் கொண்டு அவனருகில் அமர்ந்து கொண்டவளிடம்,

"வேற ஸீட்ல எடந்தான் காலியா இருந்துச்சுல்ல.... அங்க ஒக்காந்துருக்க வேண்டியதுதான?" என்று கேட்டவனைப் பார்த்து உதடுபிதுக்கியவள்,

"வதனிப்புள்ள பாவம் ஜெயன்; எங்கயாவது காணாப் போயிட்டான்னா என்ன பண்றது? நீதான அவள பத்திரமா பார்த்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்?" என்று கேட்டவளை அனைவரின் மத்தியிலும் கட்டிப் பிடித்து கன்னத்தில் கடித்து வைக்கத் தோன்றியது அவனுக்கு.

"உதடு வரைக்கும் சிரிப்பு வந்தா அத ஒளிச்சு வைக்கக்கூடாது; சிரிச்சுடணும்..... மதியம் சாப்புடுற வரைக்கும்...... ம்ஹூம் இல்ல ஈவ்னிங் வேலைய முடிக்கிற வரைக்கும் நல்லாதான இருந்த? இப்ப என்ன திடீர்னு மூட் அவுட் ஜெயன்? என்ன ப்ராப்ளம்? முகில்ம்மா நம்மள ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. வீட்ல இருந்து கிளம்பும் போதே கொஞ்சம் லேட் ஆகிட்டாலும், ஒங்கூட பத்திரமா வந்துடுறேன்னு அவங்க கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்!" என்று சொன்னவளை உடம்பை லேசாக திருப்பி அவள் கண்களைப் பார்த்தவன்,

"அமுதாம்மாட்ட சொல்றத எல்லாம் சரியா சொல்லிட்டு தான் வந்த..... எங்கிட்ட சொல்ல நினைச்சது எல்லாத்தையும் சரியா சொன்னியா? நான் எதிர்பார்த்தத நீ இன்னும் சொல்லல. அதுனால தான் எனக்கு தேவையேயில்லாம கோவம் கோவமா வருது!" என்று மெதுவான குரலில் சொன்னவனின் கைகளை ஸீட்டின் மேற்பரப்பில் இருந்த கம்பியில் இருந்து தன்னுடைய கைகளுக்குள் இறுக்கிக் கொண்டவள்,

"நீ கேக்கணும்னு நெனச்சத
நான் சொல்லிட்டேன்! நீ தான் தூங்கிட்டே கேக்கல..... அதுக்கு நான் என்ன பண்றது? அதுமட்டுமில்லாம நான் மண்ணு மாதிரி தரையில கெடக்கேன்னு என்னைய திட்ட வேற செஞ்ச! எங்கயாவது கூட்டிட்டுப் போன்னு கேட்டா அப்டி சலிச்சுக்குற?போடா..... இனிமே என்னால எதையும் சொல்ல முடியாது!" என்று தலையை சிலுப்பியவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான் ஜெயன்.

"நாம பேசுறப்ப அதக் கேக்கப்
போறவிய்ங்க முழிச்சுருக்காய்ங்களா இல்லையான்னு மொதல்ல செக் பண்ணிட்டு அப்புறமா நாம நெனைக்குறத அவிய்ங்க கிட்ட பேசணும். இது தான் நல்ல பழக்கம்! நீ தூங்கயிலயே நான் ஒங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு சொன்னன்னா நீ எங்கிட்ட என்ன சொன்னன்னு நான் நெனைச்சுக்கிடுறது?"

"வதனிக்கு ஜெயனப் பிடிச்சிருக்குன்னு நெனச்சுக்கிடுறதா?" என்று கேட்டவனிடம்,

"ம்ம்ம்.....!" என்று உம் கொட்டினாள் தலைகவிழ்ந்த படி.

"ஜெயனு அவள கல்யாணம் பண்ணி நெதம் இப்டி எனக்கு நீயும் ஒனக்கு நானும் ஒத்தாச பண்ணிக்கிட்டு நம்ம ரெண்டு பேரும் அனுசரணையாவும்
சந்தோஷமாவும் வாழப்போறோம்னு நெனச்சுக்கிடவா?" என்று குதூகலக்குரலில் கேட்டு அவளுடைய தோளை அணைத்தவனிடம்,

"பஸ்ஸூ.... கைய எடு!" என்று சொல்லி நெளிந்தாள் வதனி.

"நான் கட்டிக்கிடப் போற பொண்ணு மேல நான் கையப் போடுறேன், போடுவேன்..... இனிமே என்னைய எவங்கேக்குறது? இங்கரு. வீட்டுக்குப் போயிட்டு ஒங்கிட்ட நெறய பேசணும். போனவொடனே மாடிக்கு ஏறிறாத! எனக்கு மாடியில ஏறுறதுக்கு அமுதாம்மா 144 போட்டு வச்சுருக்கு!" என்று பாவமாக சொன்னவனைப் பார்த்து புன்னகைத்தவள்,

"அந்த 144 எல்லாம் இனிமே கிடையாது ஜெயன்..... எப்பவும் போல நீ நைட்டு டின்னர் வரைக்கும் எங்கூட பேசிட்டு இருக்கலாம்!" என்று சொன்னாள்.

"போ ஹெட்லைட்டு..... இனிமேல எனக்கு சாப்பாட்டுக்கு அப்புறமுல்ல ஒங்கிட்ட வேல இருக்கு?" என்று கண்சிமிட்டியவனை அதிர்ச்சியாக பார்த்து, "ச்சூ....போடா....!" என்று சொல்லி  அவன் தோளில் ஒரு அடி வைக்க சிறு சிரிப்புடன் அவளுக்கு எங்கு சோளம் வாங்கித் தந்து ஒரு நடை போய் விட்டு வரலாம் என்ற யோசனையுடன் ஜெயன் அவளுடன் கைகோர்த்து பேருந்தில் சென்று கொண்டிருந்தான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro