Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 57

ஜெயன் அன்று விடிகாலையில் இருந்து பங்களாவிற்குள் அத்தனை வேலைகளை முடித்து வைத்திருந்தான். எப்போதாவது உத்வேகம் பீறிட்டுக் கொண்டு வரும் போது தான் இந்த மாதிரியான வேலைகளை களைப்பில்லாமல் செய்து முடிக்க முடியும்..... மற்ற நேரங்களில் செய்த வேலையின் பலனாக உடலும், மனமும் ஓய்வுக்காக ஏங்க ஆரம்பித்து விடும்!

இன்று காலை ஐந்தரையிலிருந்து எட்டரைக்குள் மாடியில் மூன்று அறைகளின் வேலையை முடித்திருந்தான். இன்னும் வாஷிங்மெஷினில் துவைத்த டீப்பாய் கவர் முதலான சில துணிகளை காய வைத்து, மாடியின் ஹாலுக்கு மாப்பு போட்டு விட்டால் இங்கு வேலை முடிந்தது!

கீழ்த்தளத்தின் வேலையை நாளை முடித்து விட்டால் நாளை இரவிற்குள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்தவன் அவளுடன் பேசிய போன் உரையாடல்களை நினைத்துக் கொண்டே வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஜெ.....யனு! டேய் ஜெயனு; எங்கடா இருக்க?" என்று அவனை சப்தமாக அழைத்த படி உள்ளே நுழைந்த நிக்கோலெஸிடம்,

"இங்க தான்யா இருக்கேன்! வேற எங்க போவேன்.....? சும்மா ஜெயனு, ஜெயனுன்னு கத்திக்கிட்டு?" என்று மேல்மாடியிலிருந்து குரல் கொடுத்தான் ஜெயன்.

"அட.... அதுக்குள்ள டாப்புல ஏறிட்டியா? நாளைக்கு தான் இந்த வேலைய ஆரம்பிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்த?" என்று அவனிடம் கேட்டுக் கொண்டே தன்னுடைய பாக்கெட்டை தடவினார் பெரியவர்.

"யோவ்..... இந்தாரு; என் வேலைய நான் முடிக்குறதெல்லாம் இருக்கட்டும்! இன்னும் நாலு நாளைக்கு... இல்ல இல்ல; ஒமொதலாளி இங்க வந்துட்டுப் போற வரையில நீ வெத்தலபாக்கு மாதிரியான அயிட்டத்த பையில இருந்து கையில எடுக்குறத பாத்தேன்? பக்கெட்ட ஒங்கையில குடுத்த வூட்ட மொழுவுன்னு உட்டுடுவேன் பாத்துக்க...... என்னத்துக்கு சும்மா இந்த கத்து கத்துற? என்னிய தேடிக்கிட்டு ஒரு பொண்ணு வருவா! அவ வந்தவொடனே எங்கிட்ட வந்து சொல்லு!" என்று ஜெயன் அவரிடம் சொல்ல பெரியவர் அவனைப் பார்த்து ஒருமாதிரியாக சிரித்து விட்டு தலையாட்டினார்.

"அடிங்க..... லூசுக்கெழவா! என்ன நமுட்டுச் சிரிப்பு வேண்டிக்கெடக்கு ஒனக்கு? வர்றவங்க நான் கட்டிக்கிடப் போற பொண்ணுய்யா! பேங்க் ஆபிசரம்மா; மண்டைக்குள்ள எதையாச்சு தப்பு தப்பா நெனச்சு வச்ச.....?  ஒம்மண்டைய தனியா பிச்சு எடுத்துருவேன் பாத்துக்க!" என்று சொன்ன ஜெயனிடம்,

"நான் என்னத்தப்பா அப்டி எல்லாம் தப்பா நெனைக்கப் போறேன்? அதெல்லாம் ஒண்ணுமில்ல!" என்று சொல்லி விட்டு சென்றார் பெரியவர்.

எட்டரை மணியில் இருந்து ஒன்பதே கால் வரையில் அவள் இன்னுமா வரவில்லை இன்னுமா வரவில்லை என்று கேட்டு வீட்டிற்குள் இருந்து வாசலில் அமர்ந்திருந்தவருக்கு இருபது முறைகளுக்கு மேல் போன் செய்து விட்டான் அந்த பொறுமை இல்லாதவன்.

"டேய்.... யாராவது வந்தா தானடா உள்ள அனுப்ப முடியும்? யாருமே வராம யார உள்ள அனுப்ப சொல்ற லூசுப்பயலே?" என்று திட்டியவரிடம், 

"ஒனக்கு எம்மேல கொஞ்சங்கூட மரியாதயோ, பயமோ இல்லாமப் போச்சு பெருசு!" என்று சடைத்துக் கொண்டவன் கீழிறங்கி வந்து இன்னும் சுத்தம் செய்யப்படாத ஒரு அறைக்குச் சென்று ஒரு குளியலைப் போட்டு வந்தான்.

முக்கால் மணி நேரமாக அவன் அனற்றிக் கொண்டிருந்த போதெல்லாம் வராதவள், அவன் குளிக்கப் போன பத்து நிமிட இடைவெளியில் அந்த வீட்டிற்குள் வந்திருந்தாள்.

"ஹலோ ஸார்.... என் பேரு வதனி; இங்க மிஸ்டர் ஜெயன பாக்குறதுக்காக வந்துருக்கேன். அவர் இங்க தான வேலை பாக்குறாரு?" என்று புன்னகைத்த முகத்துடன் கேட்ட வதனியிடம்,

"ஆமாம்மா; வாங்க..... நீங்க வருவீங்கன்னு ஏற்கனவே ஜெயன் தம்பி எங்கிட்ட சொல்லி வச்சுருந்துச்சு! உள்ள வாங்க!" என்று சொல்லி அவளுக்கு கதவைத் திறந்து விட்டார் நிக்கோலெஸ்.

"நீங்க இங்க செக்யூரிட்டியா வொர்க் பண்றீங்களா ஸார்?" என்று கேட்டவளின் கையிலிருந்த ஒரு பெரிய கூடையை வாங்கிக் கொண்டவர்,

"என்னம்மா நீங்க? செக்யூரிட்டியா வேல பாக்குறீங்களான்னு கேட்ட பெறகும் ஸார்னு கூப்டுறீங்க? சும்மா என் பேரச் சொல்லிக் கூப்டுங்க; ஜெயனெல்லாம் என்னைய அப்டித்தான் கூப்டுவாப்ல.... என் பேரு நிக்கலசு!" என்று சொன்னவரைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள் வதனி.

"என் அப்பாவோட வயசுல இருக்குற உங்களப் போயி எப்டி ஸார் நான் பேர் சொல்லிக் கூப்ட முடியும்? ஜெயனுக்காக நான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். நீங்களும் வாங்க ஸார்..... சாப்டலாம்!" என்று அழைத்துக் கொண்டிருந்தவளிடம்,

"அதெல்லாம் ஒருதடவக்கு ரெண்டுதடவயா வூட்டுல மொக்கிட்டு தான் வந்துருப்பான்!" என்று சொன்ன படி மூச்சிரைக்க அங்கு வந்து நின்றான் ஜெயன்.

அவன் அணிந்திருந்த சட்டையெல்லாம் நனைந்திருக்க மூச்சு வாங்கிக் கொண்டு வந்த நின்றவனைப் பார்த்து பயந்து விட்டாள் வதனி.

"ஐயோ... ஜெயன்; என்னாச்சு? சட்டையெல்லாம் இப்டி நனைஞ்சுருக்கு? ரொம்ப வேர்த்ததுனாலயா? மூச்சு வேற பயங்கரமா வாங்குற? ஒடம்புக்கு ஏதாவது செய்யுதாடா?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன் உச்சுக்கொட்டியவன்,

"அதெல்லாம் ஒண்ணுஞ்செய்யல.
குளிச்சா ஈரமாயிருக்க மாட்டனா? ஓடி வந்தா மூச்சு வாங்காதா? என்ன இதெல்லாம் ஒரு கேள்வின்னுட்டு கேக்குற? வா உள்ள.....!" என்று சொன்னவன் அவளை உட்புறமாக அனுப்பி விட்டு அவளுக்கும் நிக்கோலெஸூக்கும் இடையில் செக்போஸ்ட் கேட் போல் நின்று கொண்டு அவரிடம் கைநீட்டினான்.

"அந்த பொண்ணு என்னைய ஆசயா சாப்ட கூப்ட்டுச்சு ஜெயனு!" என்று சொன்னவரிடம்,

"பரவாயில்ல..... நாந்தான் அவ கேட்ட கேள்விக்கு ஏற்கனவே பதில சொல்லிட்டேனே? நேத்து ராத்திரி வரைக்கும் நா சாப்புட்ட சாப்பாட்டுக்கு நாந்தான காசு குடுத்தேன்? பையன் பாவமேன்னு நீ ஒவூட்ல இருந்து எனக்கு நேர்ந்த சோறு கொண்டாந்தியா..... இல்லல்ல? அப்புறம் இப்ப எதுக்கு எஞ்சோத்துல பங்குக்கு வார? அதெல்லாம் ஒனக்கு பங்கு குடுக்க முடியாது. நீ போயி வழக்கம்போல கேட்டுல ஒக்காந்து பாட்டு கேளு நிக்கலஸ்ஸூ! நான் ஏதாச்சு உதவி தேவைப்பட்டா ஒன்னைய கூப்புடுறேன்!" என்று அவருக்கு பதில் சொல்லி மரத்தில் சிக்கி அறுந்து விழுந்த பட்டத்தின் நூலைப் போல் அவரை தனியே அத்து விட்டான் ஜெயன்.

அந்த பங்களாவையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்த்துக் கொண்டே வந்த வதனி ஜெயனிடம்,

"இந்த வீடு அழகா இருக்கு ஜெயன்..... ஆனா ஏன் வந்தவொடனே எங்கிட்ட கத்துன?" என்று கேட்டாள்.

அவளை மேலும் கீழுமாக பார்த்தவன் தன்னுடைய சிறிய பையில் இருந்து எடுத்து வைத்திருந்த துண்டை அவளிடம் நீட்டினான்.

"முக்கா மணி நேரமா ஒனக்காக காத்துக்கிட்டு கெடந்தேன்; அப்பயெல்லாம் வராம, பாதி குளிச்சுட்டு இருக்கும் போது வந்தா.... நீ வந்தவொடனே ஒன்னைய பாக்க முடியலயில்ல..... அதான் கோபத்துல கத்துனேன்! ஒன்னையால தான் ஒடம்ப  தொவட்டிக்காம அப்டியே ஈரத்தோட ஒடியாந்துட்டேன். அதுனால இப்ப நீ எனக்கு தொவட்டி உடு!" என்றான்.

"இவ்ளோ நேரம் குளிக்காம என்ன பண்ணிட்டு இருந்த? என்னால எல்லாம் உனக்கு தொடச்சு விட முடியாது; நீ என்ன சின்ன கொழந்தயா? இதெல்லாம் நீயே செஞ்சுக்க மாட்டியா?" என்று கேட்டு அந்த பெரிய ஹாலின் ஜன்னல் ஓரத்தில் சென்று நின்றவளிடம்,

"நேத்து வரைக்கும் செஞ்சேன். இன்னிக்குல இருந்து செய்ய மாட்டேன். நீ எனக்கு தொவட்டி உடுறதுன்னா விடு..... இல்லையின்னா எந்தல ஈரமாவே இருக்கட்டும்!" என்று சொன்னவனுடைய அருகில் மனது கேட்காமல் வந்து நின்றாள் வதனி.

"உக்காந்து தொலடா; நீ இப்டி நின்னன்னா ஒன்னோட தல எனக்கு எட்டாது!" என்று சொன்னவளை ஒரு பார்வை பார்த்தவன் அங்கே பாலிதீன் கவர் போட்டு மூடி வைத்திருந்த ஒரு ஸோஃபாவின் அருகே சென்று அதன் கவரை எடுத்து விட்டு அமர்ந்தான். அவனுடைய பின்புறமாக சென்று தலையை துவட்டி விடுவோம் என்று நினைத்த வதனியை கைப்பிடித்து தன்னுடைய மடியில் அமர வைத்துக் கொண்டான்.

"ம்ப்ச்... உனக்கு தலைய துடைச்சு விடணுமா? வேண்டாமா?" என்று கேட்டவளின் தோள் வளைவில் சாய்ந்து கொண்டவன்,

"நைட்டெல்லாம் சரியாவே தூக்கம் வரல ஹெட்லைட்டு; ஒங்கூட கொஞ்ச நேரம் சும்மா ஒக்காந்து பேசிக்கிட்டு இருக்கணும்னு, விடியறதுக்கு முன்னாலயே எழுந்திரிச்சு வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா? ஏன்டீ அப்டி சொன்ன?" என்று கேட்டவனின் முடிக்கற்றைக்குள் துண்டையும், விரல்களையும் சேர்த்து நுழைத்திருந்தவள்,

"எப்டி சொன்னேன்?" என்று அவனிடம் கேட்டு அவனை கேள்வியாக நோக்கினாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro