🌻 அழகி 56
"இப்பல்லாம் வினு எங்கூட பேசவே மாட்டேங்குறான் ஜெயன்!" என்று சொல்லியிருந்தவளின் வார்த்தைகளை அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளது பேச்சில் சற்றே திகைத்து தான் போயிருந்தான்.
"இவளுக்கு என்ன ஆச்சு? அவன் தான் போயிட்டானே? அவன் எப்டி இவ கூட பேச முடியும்? இப்பல்லாம் பேச மாட்டேங்குறான்னு வேற சொல்றா..... எதுக்கு இப்டி பேசுறான்னு புரியலயே?" என்று நினைத்துக் கொண்டு அவளிடம் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
"இறந்து போயிட்டவன் எப்டிடா வர்த்தினி கூட பேசுவான்.....? என்னடா இவ லூசு மாதிரி எதையோ உளறுறாளேன்னு நெனைக்கிறியா ஜெயன்?" என்று கேட்டவளிடம்,
"இல்லம்மா.... நான் அப்டியெல்லாம்!" என்று பேசிக் கொண்டிருந்தவனை மேலும் பேச விடாமல் நிறுத்தியவள்,
"இல்லன்னு பொய் சொல்லாத!
நீ அப்டித்தான் நெனச்சுருப்ப ஜெயன்; எனக்குத் தெரியும்! என்ன மாதிரி நேரத்துல நீ எப்டி எப்டி பேசுவ, என்ன நெனப்பேன்னு என்னால நல்லாவே கெஸ் பண்ண முடியும்!"
"உன்னோடது மாதிரியே தான் வினுவோட மூடுக்கேத்த பேச்சையும் என்னால கெஸ் பண்ண முடியும். அவன் எங்கிட்ட பேசுறது மாதிரி அவனோட வாய்ஸ்ல நானா எனக்கான பதில யோசிச்சுக்குவேன். அதுக்காக நான் லூசோன்னு நெனச்சு பயப்படாத ஜெயன்; இது சும்மா ஒரு பழக்கம் அவ்ளோதான்.....!"
"உன் பின்னாலயே சுத்திட்டு இருக்குறதால இப்பல்லாம் நீ என்ன செய்வ, என்ன பேசுவ, என்ன யோசிப்பன்னு நெனச்சுட்டே இருக்கேன். ஸோ எனக்கு வினுவோட வாய்ஸ் மனசுக்குள்ள கேக்க மாட்டேங்குது ஜெயன்!" என்று சொன்னவளின் பேச்சை முழுதாக நம்ப முடியாமல்,
"வர்த்......தினி! என்னடீ சொல்ற? அப்ப அவனுக்குப் பதிலா இப்ப நாந்தான் உன் மனசுல இருக்கேங்குறியா? எப்டி யோசிச்சுப் பாத்தாலும் நீ சொன்ன வார்த்தைக்கு இந்த அர்த்தந்தா வருது!" என்று அவளிடம் அவசரக்குரலில் கேட்டான் ஜெயன்.
அவளுடைய அம்மா, வினோத் இவர்கள் இருவரும் இல்லாமல் தனிமையிலேயே இருந்து இப்படி புதுவிதமான நோய் ஒன்றை வளர்த்து வைத்திருக்கிறாளே என்ற வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவள் சொன்ன அடுத்த விஷயம் இந்த வருத்தத்தை மிகவும் சின்னதாக்கி இருந்தது.
"போடா..... எல்லாத்தையும் ஒனக்கு நான் டீடெயிலா சொல்லி ஒங்கிட்ட விளக்கணுமாக்கும்? நீயா எதையும் புரிஞ்சுக்க மாட்டியா? ஏன் இப்ப போயி என்னை தனியா விட்டுட்டுப் போன?"
"நீ எங்கிட்ட கேட்டதயாவது ஒழுங்கா வாங்கிட்டுப் போயிருக்கலாம்ல? அதுவும் இல்ல..... நீ செஞ்சு வச்ச அட்ராஸிட்டியினால இப்ப முகில்ம்மா வேற எனக்கு ஏதோ பாதுகாப்பு கவசம் மாதிரி நிக்குறாங்க? நான் என்ன பண்றது இப்போ?" என்று கேட்டவளிடம் ஒரு ஆழ்ந்த நிம்மதிப் பெருமூச்சை வெளியேற்றியவன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு,
"ஒரு நாளைக்கு லீவப் போட்டுட்டு, நம்மளப் பாக்க அப்டியே இங்கணக்குள்ள வந்துட்டுப் போறது!" என்றான் உல்லாசம் தள்ளாடும் குரலில்.
எனக்கு இது பிடிக்கல, பயமாயிருக்கு ஜெயன் என்று அவன் அணைப்பிற்குள் பதுங்கி நின்று கொண்டு இருந்த போது வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தவள் இப்போது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் தினமும் தரும் நெற்றி முத்தத்தையாவது தந்து விட்டு சென்று இருக்கலாமே என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இதை விட கர்வம் கொள்வதற்கும், உற்சாகம் கொள்வதற்கும் அவனுக்கு வேறு என்ன காரணம் வேண்டும்? அதனால் தான் மகிழ்ச்சி ததும்பும் குரலில் அவளை தான் இருக்கும் இடத்திற்கு வரச்சொல்லி அழைத்திருந்தான்.
எங்காவது சாவகாசமாக தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் போது அவனுக்கு இப்படித்தான் இருக்கும். இவ்வளவு எடை கொண்டிருக்கும் இந்தப் பெரிய உடல், எப்படி இங்கே அதுபாட்டில் மிதக்கிறது என்ற வியப்போடு நீரின் ததும்பலுக்கு ஏற்றவாறு அசையும் உடலை வேடிக்கை பார்த்தபடி இருப்பான். அதைப் போலவே தான் இப்போது கட்டிலில் கிடந்தாலும் அவளது வார்த்தைகளைக் கேட்ட பிறகு நீருக்குள் மிதப்பது போலவே தோன்றியது அவனுக்கு.
"ஏ.....ய்! ஹெட்லைட்டு என்ன அந்தப்பக்கம் சத்தத்தையே காணும்? லைன்ல தான் இருக்கியா?" என்று கேட்டவனிடம்,
"ம்ம்.... இருக்கேன் ஜெயன்!" என்றாள் வர்த்தினி.
"எங்க இருக்க? எங்கூடவா இருக்க?
வீட்டுக்குள்ள ஒக்காந்துக்கிட்டு நல்லா எம்மெத்தையில பொரண்டுக்கிட்டு கெடக்க..... நான் உன்னைய இங்க வான்னு கூப்டேன். நாளைக்கு காலையில சாப்ட நாலு இட்லியும், சுருக்குன்னு கொஞ்சூண்டு மொளகா கொழம்பும்..... மதியத்துக்கு சாதமும் அவியலும் செஞ்சு எடுத்துட்டு வாரியா இங்க?"
"பேங்குக்கு கெளம்புறாப்லயே கெளம்பி நைஸா இங்குட்டு ஒடியாந்துரு. சாயந்தரமும் அந்த மாதிரியே வீட்டுக்குப் போயிடுவியாம்! தப்பி தவறி ஜெயனப் பாக்கப் போறேன்னு எல்லாம் அமுதாம்மாட்ட சொல்லிராத; கோபம் தாங்காம
ஒன்னையும் பொளேருன்னு செவுட்டுல அப்பிப்புடப் போவுது.....!
எனக்கும் ஒன்னையப் பாக்கணும் போல இருக்குதுடீ!" என்று கேட்டவனிடம்,
"முகில்ம்மாட்ட பொய் சொல்றதெல்லாம் தப்பு; அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்!" என்று பொறுப்புத் திலகமாக அவனுக்குப் பதிலுரைத்தாள் வதனி.
"அட யார்ரா இவ? எதுக்குடா உட்டுட்டுப் போனன்னு திட்டவும் செய்யுறா; சரி கெளம்பி என்னையப் பாக்க வாம்மான்னு சொன்னா அதுக்கும் சரிங்க மாட்டேங்குறா!" என்று சடைத்துக் கொண்டவன்,
"நான் நாளைக்கு உன்னைய எதிர்பார்த்துட்டு இருப்பேன் ஏஎம் அம்மா! இங்க வந்தா உனக்கு இந்த எடம் ரொம்பப் பிடிக்கும்; ஜெயன நம்பி ஒருவாட்டி அவங்கூப்புடுற எடத்துக்கு வந்து தான் பாரேன்! இப்ப போன வைக்குறேன். சீக்கிரத்துல தூங்கு!" என்று சொன்னவன் அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் வைத்து விட்டான்.
"என்ன இவன்? என்னால அங்க வர முடியாதுன்னு சொல்லி அவன்ட்ட நான் ஸாரி கேக்குறதுக்குள்ள கால கட் பண்ணிட்டான்!" என்று வதனி நினைத்துக் கொண்டிருக்க அதற்குள் லவ்டேலில் தான் இருக்குமிடத்தின் லொகேஷனை வதனிக்கு ஷேர் செய்திருந்தான் ஜெயன்.
"யாரு உன்ன அவனுக்கு போன் பண்ணி இப்டியெல்லாம் பேச சொன்னது? இப்ப பாரு, உன்னை அவன் அங்க கூப்டுறான்!
எப்டி போவ அங்க? அப்டியே போனாலும் எப்டி அவன் மொகத்த பாத்து பேசுவ..... லூசு!" என்று தன்னைத்தானே திட்டி தலையில் அடித்துக் கொண்டவள் வித்தியாசமான இடம், வித்தியாசமான படுக்கையாக இருந்தாலும் அதில் ஜெயனுடைய வாசத்தை லேசாக உணர்ந்ததால், அதற்குமேல் நிம்மதியாக அயர்ந்து உறங்கி விட்டாள்.
காலையில் முகிலமுதம் எழுந்து வருவதற்குள் படுக்கையில் இருந்து எழுந்து, குளித்து,
பாதி முதுகு வரை படர்ந்திருந்த ஈரக்கூந்தலின் நடுவில் ஒரு க்ளிப்பை போட்டு, தன் காலை நேர சாக்லேட் டீயை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தாள்.
"என்னடா வதனிப்புள்ள? அதுக்குள்ள எழுந்திரிச்சு, குளிச்சு, கிச்சன தொடச்சு, பாலையும் காய்ச்சி, டீ குடிக்க ஒக்காந்தாச்சு போல? முகில்ம்மா இன்னிக்கு கண்டா கொஞ்சம் அசந்து ஒறங்கிட்டனா?" என்று கேட்க அவரிடம் புன்னகைத்தவள்,
"குட்மார்னிங்! நான் தான் கொஞ்சம் சீக்கிரத்துல எழுந்திரிச்சுட்டேன் முகில்ம்மா! நீங்க லேட் இல்ல..... போய் ப்ரெஷ் ஆகிட்டு வர்றீங்களா? நான் அதுக்குள்ள உங்களுக்கு டீ.....!" என்று சொல்லிக் கொண்டிருந்த வதனியிடம்,
"வேணாம்; வேணாம்; எனக்காக இன்னொருக்க நீ வேல பாக்காத; நான் பல்ல தேய்ச்சுட்டு மொகங்கழுவிட்டு வந்து எனக்கு பாலுல ஏதாச்சு பொடியப் போட்டு ஆத்திக்குறேன்!" என்று சொல்லி விட்டு சென்றார் முகிலமுதம்.
கால் மணி நேரம் கழித்து அவர் வந்த போது வதனி அடுப்பில் இட்லிக்களை ஊற்றி வைத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு லேசாக சிரித்துக் கொண்டார்.
எத்தனை பஞ்சு போல அவித்து எடுத்திருந்தாலும் வதனியைப் பொறுத்தவரை இட்லி என்பது காய்ச்சல்காரர்கள் சாப்பிடும் உணவு.
எங்காவது வெளியே செல்லும் போது வீட்டு உணவை எடுத்து செல்வதென்றால், அவன் எந்த அளவுக்கு இட்லியை பரிந்துரைக்கிறானோ இவள் அந்த அளவுக்கு இட்லி வேண்டாம் என்பாள்!
"முகில்ம்மா உனக்கு மட்டும் குண்டு தோச சுட்டு எடுத்துட்டு வாரேன்டா வதனிப்புள்ள!" என்று ரகசியக் குரலில் சொல்வதையும் காதில் வாங்கி விடுபவன்,
"ஏன்..... குண்டு தோசைக்குப் பதிலா குண்டு இட்லிய சாப்ட்டா தொண்டக்குள்ள போன இட்லி பாதியில நின்னுக்கிட்டு விக்கி செத்துருவாளாமா இவ?" என்று கிண்டல் செய்து விட்டுத் தான் அந்தப்பக்கம் செல்வான்.
"ஒனக்குப் புடிச்சத நீ சாப்டு; அவளுக்குப் புடிச்சத அவ சாப்டட்டும்; வயிறு பத்தாதுன்னு சிலநேரம் சுட்டு வச்ச தோசய ஓரமா நகத்தி வச்சுட்டு சோற எடுத்து சாப்ட்டுட்டுப் போகல நீயி? அது மாதிரியா அவ பண்றா? மொதல்லயே வேணாமுன்னு சொல்லிடுறது இல்ல?" என்று மகனிடம் கேட்டு சண்டைக்கு செல்வார் முகிலமுதம்.
"அவள ஒண்ணு சொல்லிரக்கூடாது; மொத ஆளா நீ எங்கிட்ட கொடியத் தூக்கிட்டு வந்துரு; இதெல்லாம் நல்லாயில்ல பாத்துக்க அமுதாம்மா!" என்று அன்னையிடம் சொல்லி விட்டு செல்வான் ஜெயன்.
அப்படி அவளிடம் வம்பு பேசும் அவனுக்கென தான் இத்தனை சீக்கிரத்து முழிப்பும், இட்லியும் மிளகாய் குழம்பும் என்று கூட அறிந்து கொள்ளாதவர்களா ஜெயனுடைய தாயார்?
"வதனிம்மா..... யாருக்காகடா இட்லி அவிக்குற? உனக்குத் தான் இட்லின்னா கொஞ்சம் பிடிக்காதே?" என்று தெரிந்த விடை தெரியாதது போல் நடித்தவரிடம்,
"அது வந்து முகில்ம்மா..... இன்னிக்கு வந்து..... நான் வந்து!" என்று திக்கி திக்கி வார்த்தைக்குப் பஞ்சம் வந்து விட்டது போல தவித்தவளைப் பார்த்து சிரித்தவர்,
"எத்தன வந்து புள்ள....? அங்க வருவேன்னு அவங்கிட்ட சொல்லியிருக்கீங்களாக்கும்? அதுக்குத்தான் இத்தன வந்தா? மனசுல இருக்குறத ரெண்டு பேரும் பேசி முடிங்க..... ஆனாக்க இது தான் கடசி; இனிமேல எல்லாம் இப்டி காரணமில்லாம லீவப் போட்டு, அவம்பின்னாலயே போயிட்டு இருக்கக்கூடாது பாத்துக்க!" என்று சொன்னவரை மகிழ்ந்து கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் வதனி.
"தேங்க்யூ முகில்ம்மா; தேங்க்ஸ்! நான் எங்க மேனேஜர் கிட்ட கூட தைரியமா லீவ் கேட்டுட்டேன். உங்க கிட்ட தான் எப்டி விஷயத்த சொல்றதுன்னு நினைச்சு யோசிச்சுட்டு இருந்தேன். நல்லவேள, நா அங்க போறேன்னு நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க!
ரெண்டு நிமிஷம் நீங்க அடுப்ப பாத்துக்கோங்க.... நான் மேல போயிட்டு ரெடியாகிட்டு வந்துடுறேன்!" என்று சொன்னவள் நல்ல தீவனம் தின்று வயிறு நிரம்பிய மான் போல் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்தாள்.
"இந்த ட்ரெஸ்ஸே நல்லாத்தான இருக்கு? அவனப் பாக்கத்தான போறா? அதுக்கு அப்டியே போவ வேண்டியதுதான? ரெடியாகிட்டு வந்துடுறேன்னு சொல்லி
எத்தன தடவ மேலயும் கீழயும் ஏறி இறங்குவாளோ?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டு புன்னகைத்த முகிலமுதம் அடுப்பில் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro