Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 55

அன்று முழுவதும் உட்கார கூட நேரமில்லாமல் புதர் போல் மண்டியிருந்த புற்களை வெட்டி, வீட்டின் வெளிப்புற கேட்டில் இருந்து வீட்டின் வாசற்புறம் வரை உள்ள பாதையை பைப் கொண்டு தண்ணீர் விட்டு கழுவி, ஸ்விம்மிங் பூலின் பாசம் படிந்த டைல்ஸ்களை எல்லாம் சோப் போட்டு கழுவி, வீட்டைச் சுற்றியும் வாய்க்கால் போல் சிறிதாக தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கு எல்லாம் ப்ளீச்சீங் பவுடர் போட்டு கழுவி சற்றே மூடி அடித்த வெயில் விழ விட்டவன் அந்த வீட்டின் காவலாளியையும் திட்டுவதற்கு மறக்கவில்லை.

"யோவ் நிக்கலஸ்ஸூ.... என்னய்யா வீட்டுக்கு வெளிய லான் ஏரியாவுல எங்க பாத்தாலும் வெத்தல கறையாக்கி வச்சுருக்க? இதுவே உன் வீடா இருந்தா இப்டி கண்டபடி துப்பியிருப்பியா? ஏன்யா என்ன வேல பண்ணி வைக்குறன்னு
ஒம்பொண்டாட்டி ஒஞ்சட்டயப்புடிச்சு கேக்காது?" என்று வாய் வலிக்க ரெண்டு திட்டு திட்டிய ஜெயனுக்கு இன்னும் குறுக்கு ஒடிந்து போகும் அளவிற்கு வேலைகள் குவிந்து கிடந்தன.

இரண்டு நாட்கள் வெளிப்புற வேலைகளை ஒழுங்கு படுத்தி முடித்து விட்டுத் தான் பிறகு வீட்டிற்குள் இருக்கும் வேலைகளையே தொட வேண்டும் என்று நினைத்திருந்தவன், தன்னுடைய அயராத வேலைகளுக்கு நடுவிலும் வதனியின் சிறு சிரிப்புடன் கூடிய தலையாட்டலையே சப்பென்ற சாதத்துக்கு சுருக்கென்று தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல நினைத்துக் கொண்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

இரவு எட்டு மணியளவில் முதுகைப் பிடித்துக் கொண்டு உடலை அப்படியும் இப்படியுமாக நெளித்துக் கொண்டிருந்தவனிடம்,

"ஒரு கட்டிங் அடிச்சா இப்டி ஒடம்பு நோவுதுன்னு உருட்டிக்கிட்டு இருப்பியா நீயி? வெறும் பாலக் குடிச்சுட்டு, எப்டித்தான் இப்டி பேயி புடிச்சவன் கணக்கா வேல பாக்குறியோ தெரியல...... இங்க வா ஜெயனு, வந்து ஒக்காந்து மொதல்ல சாப்பாட்ட சாப்ட்டு முடி! நானே ஒனக்கு ராச்சாப்பாட்டுக்கு பார்சலும் வாங்கிட்டு வந்துட்டேன்;
நாலர மணிக்கு ரெண்டு பன்ன சாப்டவன்....... அதுக்கு அப்புறம் எங்கிட்ட ஒண்ணுமே வாங்கிட்டு வரச் சொல்லலியே? இவ்ள நேரமாச்சு; மொத வயித்த கவனிய்யா!" என்று சொல்லி விட்டு அவனிடம் அவனுடைய இரவு உணவு பார்சலை நீட்டினார் அந்த வீட்டின் காவல்காரர் நிக்கோலெஸ்.

"நீயும் நானும் திங்கறதுல மட்டும் கரெக்டா இரு. மத்த வேலைய எல்லாம் ஒண்ணும் கண்டுக்காத! மொட்ட மாடியில தண்ணி தேங்கி அப்டியே ஒரு எடத்துல போயி அடச்சிக்கிட்டு நிக்குது; வெளிய இருக்குற கதவுல சென்ஸார் ஒர்க் பண்ணல...... ஒரு வாட்ச்மேனா பொறுப்பா லச்சணமா இந்த வேலையெல்லாம் சரி செஞ்சு வச்சுருக்கலாம்ல நீயி?"

"எங்கயோ தூரமா இருக்குறவிய்ங்க ஒரு அஞ்சாறு நாளைக்கு தான் நிக்கலஸ்ஸூ இந்த வீட்டுக்கு சொந்தக்காரவுங்க..... நாம தான் அவிய்ங்கள விட அதிகமா இத புழங்குறோம், வைக்கிறோம்..... அப்ப நாம தான இத நல்லா பாத்துக்கணும்?" என்று கேட்டவனிடம் ஆமோதிப்பாக தலையை மட்டும் வேகமாக ஆட்டி வைத்தார் அந்தப் பெரியவர்.

"பாதிநா இந்த வீட்டுச் சாவியவும் தூக்கிட்டு ஒவீட்டுக்கு ஓடிற வேண்டியது.... இல்ல அவிய்ங்கள இங்க கூட்டியாந்துட்டு மொயலப் புடிச்சேன், காடயப் புடிச்சேன்னு புடிச்சு சுட்டு சாப்ட்டுக்கிட்டு இருக்க வேண்டியது...... இந்த லச்சணத்துல
எனக்கு அப்பா வயசுல இருந்துக்கிட்டு கட்டிங் போடலாம் வான்னு என்னைய கூப்டுற? ஒன்னயெல்லாம்......?" என்று நாக்கை துருத்திக் கொண்டு ஏதோ ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்கப் போனவனிடம் கைகூப்பி அவனது வார்த்தையை தடுத்தார் நிக்கோலெஸ்.

"நீயுந்தான ஜெயனு நஸாரோட வந்தா காட்டுக்குள்ள போயிட்டு என்னத்தயாவது புடிச்சுட்டு வந்து சாப்டுவ? என்னைய மட்டும் திட்டுற?" என்று அடிக்குரலில் கேட்டவரிடம்,

"யோவ்.... நாங்க செய்யுறதும், நீ செய்யுறதும் ஒண்ணாய்யா? நாங்க இந்த வீட்ல ரெண்டுநா வேல செய்ய வருவோம். வேலய முடிச்சுட்டு, ராத்திரில சும்மா ஒலாத்துற நேரத்துல அதெல்லாம் செய்வோம்! நீ ஒங்குடும்பத்தயே டூரு போற மாதிரியில்லய்யா இங்க கூட்டிக்கிட்டு வார?" என்று சொன்னவனிடம் தண்ணீர்ப் பாட்டிலை திறந்து அவனுக்கு தண்ணீரை நீட்டினார் நிக்கோலெஸ்.

"வாயத் தொறக்காம ஒவேலைய மட்டும் பாத்துக்கிட்டு போடான்னு சொல்லாம சொல்றியாக்கும்? எனக்கென்ன..... வாங்கப்போற காசுக்கு வொர்த்தா வேலையப் பாத்து குடுத்துட்டு கெளம்புறேன். அவ்ளோதான்!" என்று அவரிடம் சொல்லி விட்டு தான் சாப்பிட்ட பார்சலை ஒதுக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தான்  ஜெயன்.

"நீ வீட்டுக்கு கெளம்புறதுன்னா கெளம்புய்யா; நான் இன்னிக்கு ஒன்னோட க்வார்ட்டர்ஸ்ல படுத்துக்குறேன்; காலையில கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வா! வரும் போது வீட்ல இருந்து ரெண்டு மூணு நாளோட நியூஸ்பேப்பர் எடுத்துட்டு வா; எனக்கு வீட்டுக்குள்ள சுத்தம் செய்ய கொஞ்சம் பேப்பர் வேணும்; அத நான் மறந்துட்டு வந்துட்டேன்!" என்று சொன்ன ஜெயனிடம் தலையாட்டி விட்டு தன்னுடைய சைக்கிளின் அருகில் சென்றார் அந்த மனிதர்.

ஜெயனிடம் அவருக்கு பிடித்த குணம் இதுதான்; அவன் வேலைகளில் அவரை உதவிக்காக கூப்பிடவும் மாட்டான்; அவருக்கு உதவி புரியும் வகையில் இவ்வாறு சிறு சிறு சலுகைகளும் கொடுப்பான்..... எப்போது தட்டிக் கொடுக்க வேண்டும், எப்போது அதட்டி வேலை வாங்க வேண்டும் என்ற தந்திரங்களை நன்கு அறிந்த சாதுர்யமான வித்தைக்காரன்!

நிக்கோலெஸ் கிளம்பியதும் அவருடைய படுக்கையை தட்டிப் போட்டு அதில் படுத்தவன் அந்த லேக் வ்யூ பங்களாவில் இப்போது அவளுடன் இருந்திருந்தால் தான் என்ன செய்து கொண்டிருப்போம் என்று யோசித்தான்.

"ஆமா ஜெயன்..... ஒன்னைப் பாத்தா எனக்கு பயமாயிருக்கு...!"  என்று அன்று அவனிடம் சொன்னவள் நேற்று தான் அவளை எதற்காக அழைக்கிறோம் என்று நன்றாக தெரிந்திருந்தாலும் சிரிப்புடன் அவனோடு வருவதற்கு தலையை ஆட்டினாளே? அந்த நொடியிலிருந்து இப்படித்தான் அவ்வப்போது உடம்பு சிலிர்த்துக் கொள்கிறது. ஆண்மை விழித்துக் கிளர்ந்தெழுகிறது!

அவனது யோசனை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கண்ணியமான யோசனையாக இல்லாததால் உடலை முறுக்கிக் கொண்டு கிடந்தவனுக்கு தன் அன்னையிடம் வாங்கிய அறை இப்போது நினைவிற்கு வந்தது.

"ஜெயனு.... இப்பல்லாம் நீ ரொம்ப கெட்டுப் போயிட்ட?" என்று இடித்துரைத்த மனசாட்சியிடம்,

"என்ன செய்றது? நான் இப்ப  எந்நேரமும் அவளப்பத்தி நெனச்சுக்கிட்டு இல்ல கெடக்கேன்!" என்று சமாதானம் சொல்லிக் கொண்டான்.

மதியம் சாப்பிட்டு விட்டு அந்தப் பெரிய வீட்டினுடைய வராண்டாவில் படுத்து கிடந்த போது நிக்கோலெஸின் அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த பாடல் ஜெயனை மிகவும் ஈர்த்தது.

"நிக்கலெஸ்ஸூ..... இந்த பாட்ட மறுபடி ஒருக்கா போடு!" என்று அவரிடம் இரண்டு மூன்று முறை கேட்டு விட்டான்.

"என்னய்யா நீ? எப்பவும் அய்யப்பன் பாட்டோ, நாகூர் அனீபா பாட்டோ தான் கேட்டுக்கிட்டு வேல செய்வ..... இன்னிக்கு என்ன திடீர்னு சினிமா பாட்டெல்லாம்? ஒவயசுக்கு இத விட நல்ல பாட்டெல்லாம் இருக்குதுய்யா!"
என்று சொன்னவரிடம்,

"போடுன்னு சொன்னா போடு... கருத்தெல்லாம் பேசாத!" என்று சொன்னவன் கண்கள் மூடி கற்பனையில் தன்னுடைய வீட்டின் மாடியில் அவளுடன் நின்றிருந்த பொழுதை இப்போது நினைத்துக் கொண்டிருந்தான்.

பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும்
நாணுதே
இன்பத்தில் வேதனை
ஆனதே
என்னத்தான்...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான்
நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில்
தேவனும் சோதித்தான்
மோகம் தான்
சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

என்று பாடிய இளையராஜா அவன் காது நரம்புகள் சிலவற்றிற்குள் புகுந்து அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டி அவனை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தார்.

"நம்ப ஹெட்லைட்டு என்ன பண்றான்னு தெரியலயே..... தூங்கியிருப்பாளோ? இருக்கும்...... நொச நொசன்னு பேசி தூங்க உடாம உயிர வாங்குறவன், ஒருவழியா வீட்ல இருந்து கெளம்பிப் போய்த் தொலஞ்சான்டான்னு நெனச்சு நிம்மதியா படுக்கயில சாஞ்சுருப்பா அழகி!" என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் நினைப்பு தவறானது; நானும் உன்னைப் போல் உன்னுடைய நினைவில் தான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்வது போல் வதனி ஜெயனுடைய அலைபேசிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

"என்னடா இது? சவாரிக்குப் போகயில தான் வண்டியில போறவிய்ங்கள பத்திரமா பார்த்துக்க.... நீயும் பத்திரமா இருன்னு சொல்றதுக்கு கூப்புடுவா; ஒருவேள நம்ம இவள தேடுறதப் போல நம்ம ஏஎம் அம்மாவும் நம்மள தேடுறாளோ? அப்டியெல்லாம் நடக்குறதுக்கு வாய்ப்பில்லயே?" என்று நினைத்தவன் அவளது அழைப்பை ஏற்று,

"சொல்லு வர்த்தினி!" என்றான்.

"என்ன ஜெயன் எடுத்தவுடனே சொல்லுன்ற? நீ தான் சொல்லணும். என்ன செய்ற? எப்டியிருக்க? சாப்டியா? வேல நெறய இருந்ததா? டயர்டா இருக்கா? இதெல்லாம் சொல்லு. காலையில இருந்து நீ பேசவேயில்லயே? முகில்ம்மாக்கு கூட கூப்டவே இல்லயாம்?" என்று அவள் கேட்க கேட்க அவளது அக்கறை ஜெயனின் உதடுகளை இன்ஞ்ச் இன்ஞ்சாக விரிய வைத்தது.

"எம்மா வேலை பாக்கத்தான இங்க வந்துருக்கேன் நானு? அப்புறம் வேல நெறய இருக்கான்னு கேட்டா என்ன பதில் சொல்றது? வேல நெறயத்தா இருக்கு; ஒடம்பும் கொஞ்சம் அசத்தத்தா செய்யுது..... ஆனாலும் நீ இப்டி விசாரிக்குறது ரொம்ப நல்லாயிருக்கு வர்த்தினி! நான் சாப்டேன். நீயும் முகில்ம்மாவும் சாப்டீங்களா? எங்க அம்மையாரு மெத்துக்கு ஏறி ஒங்க படுக்கையில உழுந்தாச்சா?" என்று கேட்டவனிடம்,

"நானும் முகில்ம்மாவும் அப்பவே சாப்ட்டோம். நான் இன்னிக்கு ஒரு சேன்ஜ்க்கு உன்னோட வீட்டுல, உன்னோட பெட்ல தான் படுத்துருக்கேன். பட் நீ யூஸ் பண்ணுன பெட்ஷீட் எல்லாம் வாஷ் பண்ணி புது பெட்ஷீட் போட்டு விட்டுட்டேன்.....!" என்று மெல்லிய குரலில் பேசியவள் சொன்ன சேதி ஜெயனை பித்தம் கொள்ள செய்தது.

"என் வீட்ல.... என் படுக்கயில அவளா? என்னாச்சு திடீர்னு...? இம்புட்டு தைரியமா என் ரூமுக்குள்ளார வந்து படுத்து கெடக்கேன்னு சொல்றா?" என்று நினைத்தவன் அவன் மனதை மறைத்துக் கொண்டு கிண்டல் குரலில்,

"அதான..... வாரத்துக்கு ஒருக்க மெத்தஉற, பெட்ஷீட்ட எல்லாம் படுக்கயில இருந்து உருவலன்னா தூக்கம் வராதுல்ல நமக்குதா..... என் ரூமுக்குள்ள வந்து படுத்து கெடக்குறதுக்கு எங்கிட்ட நீங்க வாடக குடுக்கணுமாக்கும் மேடம்!" என்று கேட்டான்.

"ம்ம்ம்! குடுத்துட்டாப் போச்சு ஜெயன் ஸார்.....!" என்று மகிழ்ச்சிகரமான குரலில் சொன்னவள் சற்று நேரத்தில் தயக்கமான குரலில்,

"ஜெயன் உங்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!" என்றாள்.

"சொல்லும்மா..... ஏதாவது பிரச்சனயா?" என்று பதற்றக்குரலில் கேட்டவனிடம் அவள் சொன்ன விஷயத்தைக் கேட்ட ஜெயன் ஒரேடியாகத் திகைத்துப் போனான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro