🌻 அழகி 5
அன்றிரவு பணி முடித்து மிகவும் அலுப்புடன் வந்து அப்படியே படுக்கையில் விழுந்த ஜெயன் மறுநாள் காலையில் தான் வதனியின் போர்ஷனுக்குள் கதவைத் தட்டி விட்டு வெளியே நின்றான்.
"உள்ள வாங்க ஸார்!" என்று கூப்பிட்டவளின் வரவேற்பில் அவளது போர்ஷனுக்குள் வந்து அவளை சந்தித்தான். அறையை சுற்றி ஒருமுறை தன் கண்களால் நோட்டமிட்டவன் அவளிடம்,
"எல்லாம் ஓகேங்களாங்க பர்வதவர்த்தினி? பேங்க்ல, இங்கன்னு நீங்க தங்கி இருக்குற இடமெல்லாம் உங்களுக்கு செட் ஆகிடுச்சுங்களா? நல்ல சூடான ஊருல இருந்து வந்துருக்கீங்க? மொதல்ல எங்க ஏரியா க்ளைமேட் செட் ஆகிடுச்சா உங்களுக்கு? வீட்டுக்குள்ள ரொம்ப ரொம்ப சிம்பிளா, கம்மியா தான் சாமானெல்லாம் வாங்கியிருக்கீங்க போலிருக்கு.....! ஏன் இது மட்டும் போதுமா?" என்று அவளது சலிப்பைக் கண்டுகொள்ளாதவன் போல் இருந்து அவளிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அவளை துளைத்து எடுத்தான் ஜெயன்.
அவன் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டான் என்றால் அந்த வீட்டில் அவளது செருப்புகள் மட்டுந்தான் ஜோடியாக இருந்தன. மற்றபடி பிவிசி சேர், பாய், அதன் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த மெல்லிய ஃபோம் மெத்தை, பெட்ஸ்பெர்ட், தலையணை, குடை, தண்ணீர் கேன், அவளுடைய ஹேண்ட்பேக், சூட்கேஸ், அயர்ன் பாக்ஸ் இவை அனைத்துமே ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது.
சாதாரணமாக ஒரு வீட்டில் இவை ஒரே ஒரு பொருளாக இருந்தால் அது பெரிய விஷயமாக தெரியாதோ என்னவோ? இவளது வீட்டில் இவள் வேண்டுமென்றே பொருட்களை ஒற்றை ஒற்றையாக வாங்கி வைத்திருக்கிறாளா என்று நினைப்பு ஏனோ ஜெயனுக்கு அந்த அறையை நோட்டமிட்ட போது தோன்றியது.
"பாத்திரம் மட்டுந்தான் ஏழெட்டு வச்சிருக்கீங்க போலிருக்கு! மத்தபடி சன்னியாசி வாழ்க்க தானா?" என்று கேட்டவனிடம் லேசாக உதடு விரித்தாள்.
"கொஞ்சம் நல்லா தான் சிரியேன்டீ! பல்லைப் பூரா புடுங்கி தூரப் போட்டுட்டு நான் திருடிட்டுப் போக உன் வாய்க்குள்ள என்ன தங்கமும், வைரமுமாவா மாட்டி வச்சிருக்க?" என்று தன் மனதிற்குள்ளாக சலித்துக் கொண்டான் ஜெயன்.
அவனது நினைப்பை அறியாதவள் அவனிடம்,
"ஒரிஜினல் சன்னியாசிங்க எல்லாம் தங்கியிருக்குற இடத்துல கதவையே யூஸ் பண்ணிக்க மாட்டாங்களாம் ஸார்; ரெண்டே ரெண்டு ட்ரெஸ் தான் வச்சிருப்பாங்களாம்! மத்தபடி தலையில முடியில்லாம..... ஓ நானும் அப்டி இருக்குறதுனால தான் நீங்க என்னை அப்டி கிண்டல் பண்றீங்களா?" என்று கேட்டவளிடம் பெருமூச்சுடன்,
"ஏம்மா.... பாவம் இப்டி ஒண்ணுமில்லாம நிக்குறியேங்குற அர்த்ததுல சொன்னா, நீ ஏம்மா நான் சொல்றத வேற அர்த்ததுல எடுத்துக்குற?" என்று கேட்டான்.
"இருக்குறதே போதும் ஸார்..... என்
ஒருத்திக்கு இதுவே அதிகந்தான்!
எப்படியும் மூணு வருஷந்தானே? அதுவரைக்கும் வாங்குனதெல்லாம் யூஸ் பண்ணிட்டு, போகும் போது தேவை இருக்குற யார்ட்டயாவது குடுத்துட்டுப் போயிட வேண்டியதுதான்!" என்றாள் பர்வதா.
"நிறைய அழுவுறீங்களேங்க?" என்று அவளைப் பாவமாக பார்த்து கேட்டவனிடம்,
"இப்ப இதக் கேக்குறதுக்கு தான் மேல வரைக்கும் வந்தீங்களா ஸார் நீங்க? எங்கம்மா போயிட்டாங்க. இவர் தான் உனக்கு புருஷனா வரப்போறவர்னு எங்கம்மா சொன்னவரும் போயிட்டாரு! என் வாழ்க்கையில அடுத்து நான் பிடிக்குறதுக்கு ஒரு பற்றுக்கோடே இல்லாம போயிடுச்சு! இவ்வளவு கஷ்டத்துலயும் கூட நான் அழக்கூடாதுங்குறீங்களா?" என்று கேட்டவளிடம்,
"இல்ல.....ம்மா! உங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்! புரியுது.... ஆனா தினமும் நீங்க பேங்க்ல இருந்து வந்ததுல இருந்து, நான் வீட்டுக்குள்ள நுழையுற வரைக்கும் அம்மாட்ட எதையாவது பேசுறதும், பிறகு அத நெனச்சு அழுறதுமா தான் இருக்கீங்களாம்! அவங்க எங்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க! அதான் கேட்டேன்!" என்றான் பரிவான குரலில்.
"ஊ....ப்ஸ்! உங்க அக்கறை, பரிவு, கருணை, அனுதாபம், எக்ஸட்ரா, எக்ஸட்ராவெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம் ஸார்! வந்த வேலை முடிஞ்சதுன்னா தயவுசெஞ்சு கெளம்புறீங்களா? நான் காலையில, மதியம் ரெண்டு சமையலுக்கும் சேத்து வேலையப் பாக்கணும்!" என்றாள் அவசரக்குரலில்.
"அதுதா வேண்டாமுங்குறேன்! எங்க அக்கறை, பரிவு, கருணை, அனுதாபம் இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்னா, உங்களோட சாப்பாடு, அன்பு, அக்கறை இதெல்லாம் எங்களுக்கும் வேண்டாம்! நீங்க இங்க வந்ததுல இருந்து சமைச்சதுக்கான காசு எவ்ளோன்னு சொல்லுங்க! நான் அதத் தந்துடுறேன்! அவ்வளவுதான் நான் முக்கியமா சொல்ல வந்தது!" என்று சொல்லி விட்டு திரும்பியவனை,
"ஜெயன் ஸார்.... ஒரு நிமிஷம்!" என்று கூப்பிட்டு நிறுத்தியிருந்தாள் வதனி.
"என்ன... சீக்கிரம் சொல்லுங்க! நானும் ஒண்ணும் வெட்டி ஆபிசர் இல்ல! எனக்கும் வேலைக்கு நேரமாகுது!" என்று அவளிடம் கடுகடுத்தான் ஜெயன்.
"அது வந்து.... என்னைய தப்பா நினைக்காதீங்க ஸார்;
இங்க தனியா சமைக்குறதுக்கும், சாப்புடுறதுக்கும் சுத்தமா மனசே வரமாட்டேங்குது! கீழ வந்தா, அப்டியே முகில்ம்மா கூட எதையாவது பேசிட்டே வேலை செஞ்சு, எதையோ வயித்துக்குள்ளயும் போட்டுக்குற மாதிரியிருக்கு! அதுனால நீங்க தப்பா எடுத்துக்கலன்னா நானே இன்னுங்கொஞ்ச நாளைக்கு நம்ம மூணு பேரோட சாப்பாட்டையும் பார்த்துக்குறேனே?" என்று கேட்டவளை முறைத்தவன்,
"இப்ப நீங்க தான் எங்கள ஒண்ணுக்கும் இல்லாதவங்க மாதிரி நடத்துறீங்க பர்வதவர்த்தினி! நான் உங்களுக்கு என் வீட மட்டுந்தான் வாடகைக்கு விட்டேன்; எங்கம்மாவையும் சேத்து வாடகைக்கு விடல! இன்னைக்கு என்னப்பா செஞ்ச? எங்க சவாரிக்கு போயிட்டு வந்த? இன்னைக்கு உனக்கு நாள் எப்டிப் போச்சு? கார்ல உன்னோட பேசெஞ்சரா வந்தவங்க என்னென்ன செஞ்சாங்கன்னு நீங்க இங்க வந்த நாள்ல இருந்து எங்கம்மா எங்கிட்ட கேக்கவே இல்லங்க! வீடுன்னா வெறும் சாப்புடுறதுக்கும், படுத்து தூங்குறதுக்கும் மட்டும் வர்ற எடமா? எங்கம்மா என்னைய அன்பா ஒருதடவ ஜெயனுன்னு கூப்புட்டாலே எனக்கு மனசெல்லாம் நிறைஞ்சிடும்! இப்ப அதையெல்லாம் ஒண்ணையும் காணும்......"
"உங்களுக்கு நிறைய மனவருத்தம் இருக்கலாம்; அத சொல்றதுக்கு சரியான ஆளா எங்கம்மாவும் தெரியலாம்.... ஆனா நீங்க ரெண்டு பேருமா சேந்துக்கிட்டு, ஒரு பாவப்பட்ட ஜீவன தனியா ஒதுக்குறது எந்த விதத்துலங்க நியாயம்?" என்று கேட்டவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் வதனி.
காசில்லாமல் சோறு போடுகிறாய்; எங்களை இல்லாதவர்கள் போல் பார்க்கிறாய்; என் தாயுடன் நான் செலவிடும் நேரத்தை திருடிக் கொண்டாய்! என்று எதிரில் நிற்பவன் தான் அவன் பாட்டில் புகார்களை அடுக்குகிறானே?
"ஸாரி ஸார்! உங்க வீட்ல நான் வந்து கொஞ்சம் அதிக நேரம் இருக்கிறதுனால இவ்ளோ பெரிய பிரச்சனையெல்லாம் வரும்னு நான் யோசிக்கல..... இத சரி பண்ண நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க! செய்றேன்... ஆனா முகில்மா கால் சரியாகுற வரைக்கும்
கண்டிப்பா சாப்பாடு நான் தான் செய்வேன்; அதுக்கு நீங்க காசும் தரக்கூடாது; நான் உங்க ப்ரெண்டுக்கு தர வேண்டிய பணத்தையும் கரெக்டா எங்கிட்ட வாங்கிக்கணும்! இதத் தவிர வேற எதாவது சொல்லுங்க! அத நான் கண்டிப்பா கேட்டுக்குறேன்!" என்று அவனிடம் சொன்னாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro