🌻 அழகி 49
அவள் நினைத்த மாதிரியே அன்று நள்ளிரவில் தான் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
"இனிமே இப்டி ஒருநா டூருன்னு எங்கள இழுத்தடிக்காதடா! எங்கள அங்க இங்கயின்னு அலைக்கழிச்சு கூட்டி சுத்திக்கிட்டு நீயி நல்லா கல்லுல செஞ்ச குந்தாணி மாதிரித்தா இருக்குற..... எங்க ரெண்டு பேராலயும் தான் சுத்தமா முடியல!" என்று பேசிய முகிலமுதத்திடம்,
"சேரி.... சேரி ரொம்ப சலிச்சுக்காத
அமுதாம்மா! ஏதோ குன்னூருல இருந்து கோவைக்குக்கு பாதயாத்திர போயிட்டு வந்த மாதிரியில்ல அம்மாடா, அப்பாடாங்குற.... இவளப் பாரு ஒத்த இழுப்பு இழுத்துட்டு வந்ததுக்கே பொதக்குன்னு போயி ஒக்காந்துட்டு இருக்கா.....!" என்று ஸோஃபாவில் ஜீவனே இல்லாமல் விழுந்திருந்த வதனியை கைகாட்டினான்.
"வதனிப்புள்ள.... நாளைக்கு முடிஞ்சா பேங்குக்கு போத்தா; இல்லையின்னா ஒருநா லீவு சொல்லிக்கலாமா? வேல நெறய இருக்குற நேரமுன்னு சொன்னியே தங்கம்? எல்லாம் இவனால.... ஒரேநாளுல சினிமாவுக்கு போவணும், அங்க போவணும், இங்க போவணும்னு எட்டு எடத்துக்கு இழுத்தடிக்காதன்னா எங்க நம்ம பேச்ச காதுல வாங்கித் தொலையுறான்? வீட்டுக்குள்ள வந்து ஒக்காந்ததுந்தே நமக்கு ஒடம்புல இருக்குற வலியெல்லாம் ஒண்ணொன்னா தெரியுது....!" என்று சொன்ன தாயிடம்,
"இவ்வளவு விடாம பொலம்புறதுக்கு எனக்கு வாய் வலிக்குதுன்னு என்னைக்காவது ஒருநா எங்கிட்ட சொல்லி இருக்குறியா நீயி? அவளுந்தான நம்ம கூட வந்தா? முடியலன்னதும் செவனேன்னு ஒரு ஸோஃபாவுல கட்டைய நீட்டிட்டு கெடக்குறாளே ஒழிய, ஒன்னைய மாதிரியா வியா வியான்னு கத்திக்கிட்டு கெடக்கா? நீ வா ரூமுக்குள்ள வந்து படு! கொஞ்ச நேரம் மருந்தத் தடவி ஒங்காலப் புடிச்சு உடுறேன்..... காலு ரொம்ப வலி எடுக்காம இருக்கும்!" என்று சொன்னவன் கண்களை மூடியிருந்தவளை பார்த்து விட்டு,
"இரு.... அமுதாமாவ்வ கவனிச்சுட்டு
அடுத்து உங்கிட்ட வாறேன்!" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தாயின் அறைக்குள் சென்றான்.
எல்லா இடங்களுக்கும் சுற்றும் போது இவர்களுக்கு நன்றாக இருக்கிறது. வண்டியில் வீட்டுக்கு திரும்பும் பொழுதே இருவரும் ஆரம்பித்து விடுவார்கள். முகிலமுதத்தின் கால் வேறு முன்னர் சற்று பிரச்சனையாக இருந்ததால் வந்ததும் புலம்பலை ஆரம்பித்து விடுவார்....
வதனிக்கு அந்த அளவுக்கு கூட தெம்பு இருப்பதில்லை; இருவருக்குமாக சேர்த்து கையை அசைத்து விட்டு படிகளில் ஏறி விடுவாள்.... இன்று அதுவும் கூட முடியவில்லை போலும் பாவம் என்று நினைத்தவன், முகிலமுதத்தின் லேசான குறட்டையை கேட்கும் வரை அவர் காலைப் பிடித்து அழுத்தி விட்டு வெளியே வந்தான்.
ஊருக்கு சென்று விட்டு வந்த பையை ஒதுக்கி விட்டு, தாங்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் ஒழுங்குபடுத்தியவன் சோப்புநுரையும், அவளையும் மாறி மாறிப் பார்த்து விட்டு சிரித்துக் கொண்டான்.
"சின்னப் பாப்பாவாம்மா நீயி? நஸாரு புள்ளைங்க இத வச்சுக்கிட்டு வெளையாடுறதே கொஞ்சம் அதிகப்படிதா.... இதுல மூணா வாங்காத; நாலு வாங்குன்னு ஆர்டரு வேற போடுறா அழகி!" என்று முணுமுணுத்தவன் தனது கருப்புக் கயிற்றையும் பத்திரமாக சுவாமி படத்தின் முன் வைத்து விட்டான்.
திடீரென அவளது முகத்தில் கண்ணாடியை காணவில்லை என்று தேடியவன்,
"வர்த்தினி ஒன்னோட கண்ணாடிய எங்கம்மா போட்ட?" என்று அவளிடம் கேட்டான். நல்ல உறக்கத்தில் இருப்பவளிடம் கண் கண்ணாடியைப் பற்றி விசாரணை நடத்தினால் என்ன பலன் இருக்கும்? இவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் எந்த பதிலுமில்லை.
அவள் படுத்திருந்த ஸோஃபாவின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்தவன்,
"வர்த்தினி; முழிச்சுக்கோ! மேல போயி படுக்கணும்; உங்கண்ணாடிய வேற எங்கன்னு தெரியல!" என்று சொன்ன படி அவளுடைய தோளைத் தட்டினான்.
"தூக்...........கம் வருது! எழுப்ப்ப்...........பாத!" என்று தூக்கக்கலக்கத்தில் சொன்னவளிடம் லேசான சிரிப்புடன்,
"எழுப்பாம என்ன பண்ணச் சொல்ற? நீ மேல போயில்ல படுக்கணும்.....? இது முகில்ம்மா வீடு...... வாடா செல்லம்! உன் வீட்டுக்குப் போவோம்!" என்று கெஞ்சி அவள் தோளை தட்டி அவளை எழுப்ப முயன்று கொண்டிருந்தான் ஜெயன்.
அவளை இப்படிப் படுக்க வைத்து நாள் பூராவும் ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருக்க அவன் தயார் தான்.... ஆனால் இங்கேயே படுத்திருந்தால் என்றால்,
நாளை காலையில் எழுந்திரிக்கும் போதே அவனை கொலையாய் கொன்று விடுவாள்; இப்போதே அவளுடைய அனுமதி இல்லாமல்
இரண்டு முறை தோளைத் தொட்டதற்கு வேறு தனியாய் ஒரு பஞ்சாயத்து இருக்கிறது!
"எழுந்திரி! எழுந்திரி! ம்ப்ச் இப்ப எழுந்திரிக்கப் போறியா இல்லையா வர்த்தினி?" என்று மூன்று முறைகள் அழைத்தவனிடம்,
"தூங்க விடு......... பன்னி!" என்று சொல்லி விட்டு ஒரு புறமாக புரண்டு படுத்துக் கொண்டாள் வதனி.
"எது.... பன்னியா? தூங்குறேன்னுட்டு என்ன வேணும்னாலும் பேசுறியா நீயி? இரு உன்னைய எழுந்திரிச்ச பெறகு பேசிக்குறேன்!" என்று சிரிப்புடனேயே நினைத்தான்.
மீன் போன்ற கண்கள் உடைய பெண்கள் அழகாய் இருப்பார்களோ இல்லையோ...... இவளைப் போல சின்ன கண்கள் உடைய பெண் தான் மிக அழகு என்று சொல்வான் ஜெயன்!
மூக்கு ஒன்று தான் இவளது முகத்தில் பெரிதான உறுப்பு; அதைப் பெரிதான என்று சொல்வதா இல்லை எடுப்பான என்று சொல்வதா என்று அவனுக்குத் தெரியவில்லை..... பாவம்!
சின்னக்கண், சின்ன இதழ், சின்ன கழுத்து, சின்ன நெற்றி என நஸாரின் மகள் நிறைய நேரங்களில் கையில் வைத்துக் கொண்டு சுற்றும் பார்பி பொம்மையைப் போலிருந்தாள் எதிரில் இருந்தவள்!
"நம்ம பாக்குற பிகரு தான் நம்ம கண்ணுக்கு ஒலகத்துலயே அழகான பிகராத் தெரியுமோ? இவ்ளோ அழகா இருக்காளே?" என்று நினைத்தவனிடம் அவனது மனசாட்சி,
"அவள இப்டியே வச்சு கொஞ்சிக்கிட்டே இருக்கப் போறியா? இல்ல மேல போயி படுக்க வைக்கப் போறியா?" என்று கேள்வி கேட்டது.
"போறேன்! இரு.....!" என்று மனதிடம் சொல்லி விட்டு வர்த்தினியை தொடையிலும், முதுகிலுமாக கைகளைக் கொடுத்து தூக்கியவன்,
"ஜெயனு..... நாளைக்கு ஒனக்கு விடிஞ்சவொடனே இருக்கு கச்சேரி!" என்று சொல்லியபடி அவளை தூக்கிக் கொண்டு மெதுவாக மாடிக்கு ஏறினான்.
அவள் உடல் முழுவதும் தன்னுடைய உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்க அவளுடைய இதழ் வேறு பக்கத்து வீட்டில் காய்த்து தொங்கிய மாங்காய் போல் அவனை தடுமாறச் செய்தது.
"ஜெயனு.... வேண்டாம்! ஒரு பொம்பளப்புள்ளைய இப்டி எல்லாம் அது தூங்குற நேரம் வேற மாதிரி பாக்குறது தப்பு பாத்துக்க!" என்று சொன்ன மனதிடம்,
"ஆமா.... ரொம்ப தப்புத் தான்!" என்று பட்டென ஒப்புக் கொண்டான்.
"ஐயயோ.... டேய் கேனப்பயலே; இங்க வரைக்கும் அவள மாங்கு மாங்குன்னு தூக்கிட்டு வந்தியே? வீட்டத் தொறக்க சாவி எடுத்துட்டு வந்தியா மொதல்ல?" என்று அறிவு கேள்வி கேட்க அவன் "ஷப்பா!" என்று சலித்துக் கொண்டு மறுபடியும் அவளுடன் படியில் இருந்து இறங்கினான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro