🌻 அழகி 47
ஞாயிறன்று அதிகாலையிலேயே குன்னூரில் இருந்து கிளம்பி கோயமுத்தூரில் ஈச்சநாரி விநாயகர் கோயிலுக்கு வதனியையும், முகிலமுதத்தையும் அழைத்து வந்திருந்தான் ஜெயன்.
"ம்ப்ச்! கோவிலுக்கு எல்லாம் எதுக்காக கூட்டிட்டு வர்ற? எனக்கு இங்க வரப் பிடிக்கவேயில்ல!" என்று முணங்கியவளிடம்,
"ஆ.....ங்; சாமியே கும்பிட மாட்டேன்னு சொல்லிட்டு, உன் கற்பகாம்பாள மட்டும் இன்னமும் டெய்லி அமுக்கி அமுக்கிக் கும்பிடுற.... அதென்ன மத்த சாமி மேலயெல்லாம் அர்த்தமில்லாத கோபம்? சாமி கும்பிட வரலையின்னா பரவாயில்ல..... சும்மா கோவில்ல வந்து அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பாரு.... உள்ள வா!" என்று சொல்லி வதனியையும் தன்னுடன் பிடித்து இழுத்துச் சென்றான் ஜெயன்.
"அமுதாம்மா..... நல்லா சாமி பாத்தியா? இல்ல இன்னொரு தடவ போயி வரிசையில நிப்பமா?" என்று கேட்டவனிடம்,
"போதுமுடா ஜெயனு..... சாமிய நல்லாப் பார்த்து மனசார வேண்டிக்கிட்டேன். எம்புள்ள எப்டி என்னைய பத்திரமா பாத்து பாத்து கூட்டிக்கிட்டு வர்றானோ, அதமாதிரி எம்பேரன் கூடயும் இப்டி கோயில், குளம், பார்க்கு, சினிமான்னு ரவுண்டு அடிக்குற வர தெம்பா இருக்கணும்டா சாமின்னு வேண்டிக்கிட்டேன்! நீ என்ன வேண்டிக்கிட்ட?" என்று மகனிடம் கேட்டார்.
"என்னத்த பெரிசா வேண்டிக்கிட? எல்லாரும் மனசுல கவல இல்லாம, நிம்மதியா நல்லாயிருக்கணும். அவ்வளவு தான் எங்க போனாலும் நம்ம வேண்டுதல்..... ஒன்னைய மாதிரி பேரன் கூட ஊரு சுத்துற வரைக்கும் எல்லாம் நம்பளால யோசிக்க முடியாது..... ஆனாலும் என்னா நேக்கா வேண்டுதல போட்டுருக்க அமுதாம்மா நீயி?"
"பேரன் வரணுமுன்னா மொதல்ல புள்ளைக்கு கல்யாணம் நடக்கணும்; இப்டி பாத்து பாத்து கூட்டிட்டு வரணுமின்னா பேரனுக்கு கொறஞ்சது இருபது வயசாவது ஆகணும்.... அது வரைக்கும் நீயி நல்லா தெம்பா வேற இருக்கணுமுன்னு வேண்டிக்கிடுற; எப்பா சாமி; பொம்பளங்க உங்க கிட்ட இருக்குற நேக்க அடிச்சுக்கவே முடியாது அமுதாம்மா!" என்று தன்னுடைய அன்னையை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தவனின் அருகில் அமைதியாக அமர்ந்து அவர்களுடைய உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள் வதனி.
"பையனுக்கு இருபதுன்னா அப்போ இவனுக்கு அம்பத்தி மூணு, அம்பத்தி நாலு வயசாகிடுமே..... அம்பத்தி நாலு வயசுல ஜெயன் எப்டி இருப்பானோ? இவனுக்கு அம்பத்தி நாலுன்னா அப்போ எனக்கு அம்பத்தி ரெண்டு வயசாகிடுமே; அந்த வயசுல ரெண்டு பேரும் எப்டி இருப்போம்? இப்ப இருக்குற மாதிரியே என்னை கேரிங்கா பாத்துப்பானா? இல்ல பொண்டாட்டி ஆகிட்டவுடனே டெய்லி ரெண்டுதடவ சண்ட போடுவானா? ஒரு பையனோட நிறுத்துனா நல்லாயிருக்காதுல்ல.... இன்னொரு பையனும், ஒரு பொண்ணும் வேணும்! இரண்டாவது பையனுக்கு பதினெட்டு; பாப்பாவுக்கு பதினேழு.... அவங்க எல்லாரையும் என்ன படிக்க வைக்கலாம்? கண்டிப்பா இவன மாதிரி பெஞ்ச தேய்க்க விட்டுடக் கூடாது?"
"பசங்க ரெண்டு பேரோட இயல்பும் ஜெயன் மாதிரி; பொண்ணு வந்து என்னை மாதிரி.....!" என்று யோசித்தவள் தன்னுடைய யோசனை இறக்கை கட்டிக் கொண்டு பறந்த தூரம் வரை சென்று பயந்தடித்துக் கொண்டு திரும்பி வந்து எதற்காக இப்போது இப்படி யோசித்தோம் என்று நினைத்து அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
"ஏ........ய் வர்த்தினி!" என்று இரண்டாவது முறையாக அவளை சற்றே அதிகமான சப்தத்துடன் அழைத்தவனிடம்,
"ஹா.....ன்! அடுத்து எங்க போகணும் ஜெயன்? கிளம்பலாமா?" என்று கேட்டாள்.
"அடுத்து எங்க போகவா?
சரித்தான்.... மறுபடியும் நீயி ஒக்காந்துக்கிட்டே கனவு காணப் போயிட்டியா? பிரசாத லட்டு வாங்கிட்டு வந்துருக்கேன்; கொஞ்சூண்டு சாப்டுறியான்னு கேட்டேன்; இந்தா!" என்று நீட்டியவனின் கையிலிருந்த இனிப்பை கொஞ்சமாக எடுத்துக் கொண்டாள் வதனி.
"அட..... சாமி பிரசாதத்த எடுத்துக்கையில என்ன இப்டி நுணுக்கி நுணுக்கி எடுக்குற? அமுதாம்மாக்கு குடுத்தது போக மத்ததெல்லாமே ஒனக்குத்தான்;
இன்னுங்கொஞ்சம் எடுத்துக்க!" என்று அவள் கையைத் திறந்து தன்னுடைய கையிலிருந்த கவரை அப்படியே வைத்தவன், பக்கத்தில் இருந்த குழாய்க்கு சென்று தன் கையைக் கழுவி விட்டு வந்தான்.
"காரசாரமா எதையாச்சு சாப்புட சொல்லு..... உஸ் உஸ்ஸூன்னு உறிஞ்சிக்கிட்டே சட்டிய காலி பண்ணிட்டு தான் எழுந்திரிப்பான்; இப்ப லட்டுவ வாங்குனதும் இது உனக்குத்தான்னு என்னமோ காதல் பொங்கி எனக்காகவே இத வாங்குனது மாதிரி கையில குடுத்துட்டுப் போயாச்சு....!"
"ஒனக்கு இந்த லட்டுவ சாப்புட பிடிக்கல; அதுனால எங்கையில வச்சு அழுத்திட்டுப் போயிட்டன்னு சொல்லுடா லூசுப்பையா!" என்று அவனை செல்லமாக திட்டிக் கொண்டவள் முகிலமுதத்திடம் சொல்லி விட்டு பிரசாத ஸ்டாலுக்கு மறுபடியும் சென்று வந்தாள்.
"இந்தா ஜெயன்.....!" என்று சொல்லி அவனிடம் முறுக்கை நீட்டியிருந்தவளை புரியாத பார்வை பார்த்தான்.
"ஸார் தான் இனிப்ப ஒரு பார்மாலிட்டிக்கு தொட்டுத்தான பாப்பீங்க..... உனக்கு எப்டியும் பசிக்கும்ல? எனக்கும், முகில்ம்மாவுக்காகவும் தான நீ லட்டுவ வாங்குன? நீ இந்த முறுக்க சாப்டு!" என்று சொன்னவளை தூரத்தில் இருந்து முகிலமுதமும் பார்த்துக் கொண்டு தானிருந்தார்.
"அவனுக்கு வேணுங்குறத ஓடிப்போயி வாங்கத் தெரியுது; அவங்கிட்ட குடுக்கத் தெரியுது.... ஆனா ரெண்டு பேரும் இப்டி அழுத்தமா நின்னா இதுகள சேத்து வைக்க எப்பத்தா ஒரு வழி பொறக்குமோ புள்ளையாரப்பா?" என்று நினைத்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
"கைய விடு ஜெயன்..... பிரசாதத்த கையில வாங்குன்னு சொன்னா, எங்கைய புடிச்சுக்கிட்டு என்ன பண்ற?" என்று கேட்டு அவனுடைய கையிலிருந்து தன்னுடைய கையை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் வதனி.
"வீணா உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத வர்த்தினி..... ஒன்னைய விட நாந்தான் பலசாலி; ஒன்னால இப்ப எங்கிட்ட ஜெயிக்க முடியாது; இங்க வந்தப்ப வாங்குனோம்னு பின்னால சொல்லிக்குற மாதிரி
எனக்கு இந்த கோயில்ல இருந்து ஏதாவது வாங்கித் தர்றியா?" என்று அவளிடம் கேட்டான் ஜெயன்.
அவளாக தன்னுடைய பக்கத்தில் வந்திருக்கிறாள்; இப்போது அவளை சற்று நேரம் தன்னுடைய பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு.
"இங்க போயி என்ன வாங்குறது ஜெயன்? பிள்ளையார் சிலையோ இல்ல பொம்மையோ தான் வாங்க முடியும்? பரவாயில்லயா?" என்று கடை கண்ணிகளை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்த படி அவனிடம் கேட்டவளிடம்,
"உங்கள மாதிரி என்னையும் காலம்பூரா அரசமரத்தடியில ஒக்கார வச்சுராதீங்க சாமி; காலகாலத்துல எனக்கு ஒரு வீட்டம்மாவ செட் பண்ணி உடுங்கன்னு அவர்ட்டயே அப்ளிகேஷன போட்டு உடுவோம்; நீ எனக்கு பிள்ளையாரே வாங்கிக் குடு வர்த்தினி!" என்றான் ஜெயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro