🌻 அழகி 41
மலைப்பகுதியில் நடுநாயகமாக அமைந்த அந்த ரிஸாட்டிற்குள் வலப்புறமாக சென்று இடப்புறமாக திரும்பி வந்து விடலாம் என்ற அமைப்பு இருந்தது. வலப்புறம் முழுவதும் விருந்தினர் அறைகள், ரிஷப்ஷன் ஏரியா, சமையல் அறை, டைனிங் என்று வைத்திருந்தவர்கள், டைனிங் ஏரியா வழியாக வெளியேறியதும் இடப்புறமாக சின்னதாக ஒரு அருவி, அதற்குப்பின் வெட்டவெளியில் வாக்கிங் ஏரியா, ஸ்விம்மிங்பூல், கடைசியாக கார்களுக்கான பார்க்கிங் என்று பிரித்திருந்தனர்.
ரிஸார்ட்டின் நேம் போர்டு வைத்திருந்த பவுண்டேன் பக்கத்தில் இருந்து நடக்க ஆரம்பித்து பெரிதாக ஒரு பூஜ்ஜிய வடிவில் அல்லது ஆங்கில எழுத்து O வடிவில் நடந்தால் அந்த ரிஸார்ட் முழுவதையும் பார்த்து விடலாம் போல இருந்தது.
அச்சுதனுடைய குடும்பத்தினர் அனைவருடனும் ஜெயன், வதனி, முகிலமுதம் மூவரும் இணைந்து அமர்ந்திருந்தனர். அவர்களுடைய பெரிய குடும்பத்தினருடன் இவர்கள் மூவரும் சேர்ந்து, அந்த மகிழ்ச்சிகரமான குடும்பத்தினருடன் வரவேற்பு பானம் அருந்திக் கொண்டிருந்தனர்.
"இங்க Ambience ஏ ரொம்ப ரிச்சா தெரியுதே? இந்த ரிஸார்ட் மரியம் வொர்க் பண்றத விட அளவுல பெருசோ ஜெயன்?" என்று கேட்ட வதனியிடம் தலையை ஆட்டி,
"ஆமா.... இடத்துலயும் பெரிசு! செலவுலயும் பெரிசு! பாத்தல்ல..... அச்சுதன் ஸார் குடும்பத்த தவிர இங்க நாலஞ்சு ரூம்பு தான் புக் ஆகியிருக்குது போல..... அதான் இங்க சாப்ட நம்மள தவிர ஒருத்தரையும் காணும்!" என்று வதனியுடைய காதில் மெல்ல ரகசியம் பேசியதோடு
பேச்சை முடித்துக் கொண்டான் ஜெயன்.
"எலேய்..... இங்க வர்றவங்க ஊரச் சுத்திப் பாக்கத்தானடா இந்த ஊருக்கு வர்றாங்க..... அவங்க தங்குறதுக்கு மட்டுமா எதுக்குடா இத்தாம்பெரிசா எடம்? அதுவுமில்லாம கொட்டுற பனியில நீச்சக்கொளத்த வேற கட்டி வச்சுருக்கானுவ?" என்று ஆச்சரியமாக கேட்ட தன்னுடைய அன்னையிடம் மெல்லிய குரலில்,
"இங்கரு அமுதாம்மா..... அவிய்ங்க இங்க வந்து தங்குறதுக்கு நீயா காசு குடுக்குற? இந்த மாதிரி எடத்த வச்சுத்தான் இந்த ஊருல எங்கள மாதிரி பல பேருக்கு வாழ்க்கப்பாடே ஓடிக்கிட்டு இருக்கு.... நீ இப்டியெல்லாம் சந்தேகம் கேட்டு நம்ம பொழப்புக்கு நீயே வேட்டு வச்சுடுவ போலிருக்கு! அங்கிட்டு இங்கிட்டு சுத்தி பராக்கு பாரு; ஆனா இன்னொரு க்ளாஸூ ஜுஸூ கெடக்குமான்னெல்லாம் கேட்ராத சரியா?" என்று சொல்லி அவர்களை அதட்டினான்.
அச்சுதனின் குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடும் வேளையிலும் முதலில் அச்சுதனுடன் அமர்ந்திருந்தவன், சாப்பிட ஆரம்பிக்கும் வேளையில் எப்படி அவளுக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான் என்று வதனிக்கு தெரியவில்லை.
தனது இடப்புறமாக முதலில் அச்சுதனுடைய தங்கை அமர்ந்திருந்தாள். சட்டென அமர்ந்திருந்த அவனை பார்த்தவள் அவனைக் கண்டு திகைத்துப் போக அவன் புன்னகையுடன் அவளிடம்,
"என்ன பாக்குற? அப்டி இப்டி போக்கு காட்டுறாப்ல தான் இருக்கும், ஆனா உன்னைய விட்டு எங்கயும் போக மாட்டேன். சாப்டு!" என்று சொல்லி விட்டு சைவத்திற்கான மெனுவில் அவனது விருப்ப உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
"என்ன ஜெயன்....? நீங்களும் வெஜிடேரியனா? இல்ல நாங்க சாப்டலையின்னு நீங்க நான் வெஜ் எடுத்துக்கலையா?" என்று அவனிடம் கேட்டார் அச்சுதனின் அப்பா.
"இன்னிக்கு சாயந்தரம் ஒரு சவாரி இருக்கு ஸார்! மதியம் ஃபுல்லா சாப்பாடு எடுத்தா, அப்புறம் வண்டி எடுக்கயில தூக்கம் அசத்துற மாதிரியிருக்கும்.... அதான் லைட்டா சாப்ட்டுக்கலாம்னு!" என்று சொன்னவனின் பேச்சை அனைவரும் அப்படியே சரியென கேட்டுக் கொண்டனர்.
அவர்களை வெளியே அழைத்துச் சென்ற போது அவன் சில நேரங்களில் அவர்களிடம் எனக்கு
இப்போது உணவு வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொன்னதை பார்த்தவர்கள் தானே அவர்களும்?
"உங்களுக்கு என்ன பிடிக்குதோ அத நல்லா வாங்கி சாப்டுங்க!" என்று சொன்னதோடு அவனிடம் தங்கள் அன்பு உபசரிப்பை முடித்துக் கொண்டனர்.
"ஏன்டா... இன்னைக்கு சாயங்காலம் நீயி சவாரிக்கு கெளம்பணுமா? எங்கிட்ட சொல்லவேயில்ல?" என்று அவனிடம் கேட்ட முகிலமுதத்தை பார்த்து விட்டு அவனையும் முறைத்துக் கொண்டிருந்தாள் வதனி.
"இந்த வாரம் பூரா லோக்கல் தான்.... எப்டி உன் உயிர வாங்குறேன்னு மட்டும் பாரு தங்கம்!" என்று காலையில் தான் அவளிடம் சொல்லியிருந்தான்.
இதில் எது நிஜம்? எது பொய்? ஏதாவது ஒன்று பொய் என்றால் எதற்காக அந்த பொய்? என்று கண்களால் வினவியவளிடம் இருக்கையை சற்று நகர்த்திய படி அவளது அருகில் வந்தவன்,
"அவனுக்காக அசைவத்த உட்டேன்னு சொன்னல்ல? அதேயே நான் உனக்காக செய்யக்கூடாதா? பெரிசு வூட்டுல சாப்ட மீனு தான் என் வாழ்க்கையில நான் சாப்புட்ட கடைசி அசைவம்..... நீ அவனுக்காக சைவம்னா; நான் உனக்காக சைவம்! நாம கடிக்க சைவத்துல வாழைக்காயும், காலிஃப்ளவருமா இல்லாம போச்சு?" என்று சொன்னவனிடம் வதனியால் இங்கு வைத்து சண்டையிடக் கூட இயலாமல் போனது.
அவனுடைய அத்துமீறல்களினால் ஏற்பட்ட கோபம், அவனுடைய உரிமை உணர்வால் ஏற்பட்ட கோபம், அவனுடைய பேச்சால் ஏற்பட்ட கோபம்..... இப்போது அவனுடைய தியாகத்தால் ஏற்பட்ட கோபம் என அவளுடைய கோபத்தின் அளவு கோபுரத்தில் இருக்கும் விமானம் போல் உச்சியில் நின்றது.
அவனுடைய மனைவியிடம் ஏதாவது பேசி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும் போதெல்லாம் அவன் தன்னையும் ஜெயனையும் பற்றித் தான் பேசி சிரிக்கிறானோ என்று நினைத்து அச்சுதனுடைய முகத்தை உற்று உற்றுப் பார்த்தாள் வதனி.
மதிய உணவிற்குப் பின்னர் சற்று நேரம் அங்கிருந்த ஸோஃபாக்களில் சாப்பிட்ட களைப்பு தீர அமர்ந்திருந்து விட்டு கிளம்புகிறோம் என்று சொன்னவளிடம்,
"இன்னுங்கொஞ்ச நேரம் எங்க கூட இருந்துட்டுப் போங்க வதனி; இன்னும் ஒன் அவர்ல உங்கள ஜெயனோட அனுப்பிடுறோம்; அதுக்கு மேல உங்க டைமையும், அவரோட வேலையையும் நாங்க டிஸ்டர்ப் பண்ணல!" என்று கேட்டுக் கொண்டான் அச்சுதன்.
முதன்முறையாக ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டும், ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்தபடியும் கேலியும், கிண்டலும், கூச்சலும், ரொம்பவும் கூச்சல் போடாதீங்க; இது நம்ம வீடு இல்ல என்ற அதட்டலுமாக அந்த இடத்தின் சூழ்நிலை வதனிக்கு மிகவும் பிடித்திருந்தது.
"இப்டி கண்ணால ஏக்கமா பாத்துட்டே இருந்தா என்ன செய்ய முடியும்? முதல்ல ஒருத்தன கல்யாணம் பண்ணனும். அவன் மூலமா ஒரு குடும்பம் வரணும்; குடும்பத்துல சந்தோஷத்த தர பிள்ளைங்க வரணும்!"
"அவனோட குடும்பம் உன்னோட குடும்பம்னு ஆகணும். அவனோட சொந்தக்காரவுங்க எல்லாம் உன்னோட சொந்தக்காரவுங்க ஆகணும்; இதெல்லாம் நீ மனசு வச்சா தான் நடக்கும்! சும்மா வெறிக்க வெறிக்க பாத்துட்டே இருந்தா வந்துடுமா இந்த மாதிரி ஒரு குடும்பம்?" என்று கேட்டவனிடம் ரௌத்திரத்துடன்,
"இஷ்டத்துக்குப் பேசாம வாய மூடு..... உங்கிட்ட நான் எதையும் கேக்கவேயில்ல!" என்று அடிக்குரலில் சீறினாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro