🌻 அழகி 40
"ஏன்டா இப்டி பண்ற? ஏன் இப்டி பண்ற? நாலு மாசமா நமக்குள்ள இருந்த நட்பு எவ்ளோ அழகாயிருந்தது.....? உனக்காக நான் செஞ்ச எந்த விஷயமும் எனக்கு அப்போ தப்பா படல; ஆனா இப்ப நீ ஏன் நகம் வெட்டாம இருக்கன்னு கேக்குறதுக்கு கூட எனக்கு அவ்வளவு யோசனையா இருக்கு!"
"வர்த்தினி, ஏஎம் அம்மா, ஹெட்லைட்டுன்னு நீ கூப்டுற வார்த்தைக்குள்ள அவனோட வதுங்குற வார்த்தையெல்லாம் அமுங்கிப் போய்டுச்சுடா......!"
"வினோத்தோட நியாபகத்த நீ எங்கிட்ட இருந்து மறக்க வைக்க பாக்குற ஜெயன்! எனக்குப் பயமாயிருக்கு; தயவுசெஞ்சு எங்கிட்ட இருந்து முடிஞ்சளவுக்கு ஒதுங்கியிரு..... போதும் நீ என்னைய படுத்துனது எல்லாம்!" என்று சொன்ன படி கைவிரல்கள் நடுங்கியவளை புன்னகைத்த படி உரிமையோடு அணைத்துக் கொண்டான் ஜனமேஜயன்.
"வினோத்தோட நியாபகத்த மறக்க வைக்க பாக்குற.....!" என்ற அவளது வார்த்தைகள் காய்ச்சிய சீனிப்பாகு போல் இனிப்பான பிசுபிசுப்புடன் அவன் காதில் விழுந்து இறங்கியது.
"எனக்குப் பயமாயிருக்கு!" என்று சொன்ன அவளது பயம் எங்கே நான் உன் பக்கமாக சாய்ந்து விடுவேனோ என்ற வார்த்தைகளுக்கான சுருக்கமான வடிவம் தான் என்று அறியாதவனா அவன்?
"என்னை விடு.....! எப்ப பாத்தாலும் ஸ்டாண்ட்ல வைக்கிற மொபைல் மாதிரி என்னைய ஒரு ஸப்போர்ட் குடுத்து உன் மேல சாய்ச்சு வச்சுக்குற?" என்று சொன்னவளிடம்,
"பார்றா வர்த்தினி மேடம்க்கு காமெடியெல்லாம் வருது? என்னைய அடிச்சுட்டு, நீங்க தான் மேடம் ஆட்டம் கண்டு போய் நிக்குறீங்க? அதுனால தான் நான் உங்களுக்கு மொபைல் ஸ்டாண்ட் மாதிரி வேல பாக்க வேண்டியதிருக்கு!" என்று சொல்லி சிரித்தவனை உனக்கு இப்போது சிரிப்பு வேறா என்று கேட்பது போல் பார்த்தாள் வதனி.
"நான் பாவம் இல்லையா? என்னால உங்கூட போராட முடியல.
சொல்லி அழக் கூட ஆள் இல்லாம இவ்ளோ பெரிய பிரச்சனைய மனசுக்குள்ள வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்? நீ எம்மேல கொஞ்சம் இரக்கப்பட மாட்டியா ஜெயன்?" என்று அவன் மார்பில் இருந்து தலையை தூக்கி கேட்டவளுடைய தலையை தன்னுடைய மார்பிலேயே சாய்த்தவன் அவளை ஒருவிதமான பார்வை பார்த்தான்.
"நாந்தான் உன்னோட பேவரைட் கடங்காரனாச்சே? நான் எப்டி உனக்கு பாவம் பாப்பேன்? நான் எப்டி ஒம்மேல எரக்கப்படுவேன்? அதெல்லாம் செய்யவே மாட்டேன் வர்த்தினி!" என்று அவள் காதருகே மென்குரலில் பேசினான்.
"நீ கொஞ்சம் கொஞ்சமா எம்பக்கத்துல வர்றது எனக்கு எவ்ளோ சந்தோஷமாயிருக்கு தெரியுமா? ஒரு அளவுக்கு மேல துக்கத்த புடிச்சுட்டே நிக்க முடியாதும்மா; நம்மளயே அறியாம, நம்மளோட உணர்ச்சியெல்லாம் மேல எந்திரிச்சு தான் வரும்! இதுல ஒண்ணும் தப்பில்ல வர்த்தினி!" என்று சொன்னவன் அவளுடைய தலைமுடிக்குள் தன் விரல்களை விட்டு கோதிக் கொண்டிருந்தான்.
"அச்சுதனோட லன்ஞ்ச்க்கு போறோமா இல்லையா?" என்று கேட்டவளை லேசாக இறுக்கி அணைத்து பின் விடுவித்தவன்,
"அமுதாம்மா ஒன்னைய கீழ கூப்டாங்க. முறுக்கு சுட்டுட்டு இருக்காங்க. சூடா சாப்ட்டு ருசி எப்டியிருக்குன்னு பாத்து சொல்லுவியாம்; அப்டியே நான் சொன்ன வேலையவும் எனக்காக பாத்து குடுத்துடுவியாம்..... நான் அதுக்குள்ள குளிச்சுட்டு வந்துடுவனாம்; அப்புறம் மூணு பேருமா சாப்ட கெளம்புவமாம்; சரியா?" என்று கேட்டவனிடம் சரியென தலையாட்டியவள் ஒருவித அவசரத்தோடு அங்கிருந்து கீழிறங்கி சென்றாள்.
இவனது கைப்பிடிக்குள் நிற்பதை விட இவன் சொன்ன வேலைகளேயே செய்து விடலாம் என்று நினைத்தாளோ என்னவோ கீழே ஓடி விட்டாள்!
"எப்பப் பாரு எங்கிட்ட ஓடிப் பிடிச்சு வெளையாண்டுக்கிட்டு இரு; ஒன்னைய நெதம் ஒருவாட்டியாவது கண்ணுல பாத்து நெரப்பிக்கலையின்னா அன்னிக்குப் பூரா தூக்கம் வர மாட்டேங்குதுடீ! போர்வைய போத்திக்கிட்டு ராத்திரி பூரா
உருண்டு உருண்டு அதுலயே விடிஞ்சிடுது போ!" என்று அவளுடைய ஹாலில் அவளுடன் பேசுவது போல தனியாக புலம்பிக் கொண்டிருந்தவன் தனியாக பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து சிரித்துக் கொண்டு கீழிறங்கினான்.
அச்சுதன் குடும்பத்தினரை பார்க்க மூவரும் முகிலமுதம் செய்த முறுக்கு மற்றும் கடலை உருண்டைகளை எடுத்துக கொண்டு சென்றனர்.
"வதனிம்மா.... இந்த ரிஸாட்டு, ரிஸாட்டுங்குறாங்களே? இதுக்கு இப்பத்தான் மொத தடவயா என்னிய இந்தப்பய கூட்டிக்கிட்டு வாரான் தெரியுமா? அன்னிக்கும் அப்புடித்தான்..... நஸாருப்பய அவேன் புள்ளைங்க பொறந்தநாளுக்கு நானும் வாரேன்டான்னு கேட்டுக்கிட்டு இருக்கேன்....!"
"நீயெல்லாம் அங்க எதுக்கு வந்துக்கிட்டு அமுதாம்மா.....? வேணாமுன்னு சொல்லிட்டு உட்டுட்டுப் போயிட்டான்! இப்பக்கூட உன்னோட வேலை பாக்குற ஸாரு வந்து கூப்டதால தான் வெளிய கூட்டிக்கிட்டு வர்றான்; இல்லையின்னா இன்னிக்கும் என்னைய வீட்ல போட்டுட்டு உங்கூட ஜாலியா பைக்குல போயிருப்பான்!" என்று ஜெயன் மேல் குற்றப்புகார் கொடுத்தார் முகிலமுதம்.
"ஆமா.... அவேன் வீடு ஒன்னைய கூட்டிட்டுப் போற அளவுக்கு பரந்து விரிஞ்சியிருக்கு பாரு? ஏன் அமுதாம்மா அந்த பாயம்மா கொணந்தெரிஞ்சும் இப்டியெல்லாம் பேசுற? அப்டி ஒன்னைய உட்டுட்டு நான் எங்க இவளோட ஜோடி போட்டுக்கிட்டு ஊரு சுத்துனேன்?" என்று தன் அன்னையிடம் கேட்ட ஜெயனுடைய உரையாடல் ஏதோ புதிதாக திருமணம் முடித்த மகனுடைய பேச்சு போலவும்
முகில்ம்மாவின் பேச்சு மாமியார் காய்ச்சல் போலவும் தோன்றியது.
அவள் பக்கம் பேசுவதைப் போல இருந்தாலும் முகில்ம்மாவும் தன்னை அவனுடன் இணைத்து விடுவதில் தீவிரமாக தான் இருக்கிறார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.
"ஜெயன்.... இனிமே நீங்க சவாரி இல்லாம சும்மாயிருக்குற நாள்ல வீட்டுக்கு கார் கொண்டு வந்தீங்கன்னா, முதல்ல முகில்ம்மா எங்க போகணும்னு நினைக்குறாங்கன்னு கேட்டு அங்க அவங்கள கூட்டிட்டுப் போங்க!" என்று சொன்னதுடன் தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைத்து பின்சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
ஜெயனும் முகிலமுதமும் அதற்குப் பிறகும் ஏதேதோ பேசிய படி ரிஸாட்டை சென்றடைந்தனர்.
அச்சதன் முகில் மற்றும் வதனியை தான் தன்னுடைய உறவினர்கள் அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தான். ஜெயனுக்கெல்லாம் போனவுடனே அவர்கள் அனைவரிடத்திலும் பயங்கரமான வரவேற்பு தான்!
ஆங்கிலத்தில் உரையாடும் போது தெரியாத அச்சுதனின் மொழிப்பற்று அவன் ஜெயன் வீட்டிற்கு வந்த போதும், இங்கும் நன்றாகவே தெரிந்தது வதனிக்கு.
"நீங்க வதனி மேடமோட பேமிலி ப்ரெண்டா ஜனா?" என்று கேட்ட அச்சுதனுடைய தங்கையிடம்,
"இல்லங்க.... நானும் வதனியும் ஹவுஸ் ஓனர் டெனன்ட் தான்; எங்களுக்குள்ள ப்ரெண்ட்ஷிப்போ, வேற எந்த ரிலேஷன்ஷிப்போ கிடையாது. வதனி மேடம் அவங்க வொர்க்ஸ்பாட்ல எப்டியோ, அப்டித்தான் வீட்லயும்..... தேவையில்லாத பேச்சு, அரட்டை அதையெல்லாம் அவங்க கிட்ட எதிர்பார்க்க முடியாது!" என்று சொன்னவனிடம்,
"எ......தே? நீயி....? பேச்சு அரட்டையெல்லாம் எதிர்பார்க்க மாட்ட? அப்போ பேசு பேசுன்னு சொல்லி நாம பிக்னிக் போற நேரமெல்லாம் உன் காது வலிக்குற அளவுக்கு நான் பேசுனது ஒண்ணும் உங்காதுலயே விழலையா? இப்ப எதுக்கு நம்மள அவங்க கிட்ட ரொம்ப தெரியாத மாதிரி பேசிட்டு இருக்கான் இவன்?" என்று யோசனை செய்து கொண்டிருந்தாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro