🌻 அழகி 4
பர்வதவர்த்தினி தன்னுடைய குன்னூர் இடம்பெயர்தலை ஒருவழியாக ஏற்றுக் கொண்டிருந்தாள். ஜெயனுடைய வீடு அவள் ஒருத்திக்கு மட்டுமாக சற்று பெரிய வீடு தான்..... முன்பக்கம் ஒரு பெரிய பால்கனியுடன் கூடிய ஹால், ஹாலின் வலதுபுறமாக சமையலறை, இடதுபுறமாக ஒரு சிறிய பெட்ரூம், ஹாலின் பின்புறமாக மாஸ்டர் பெட்ரூமும், இரண்டு வாஷ்ரூம்களும் கூடிய மூன்று பேருக்கு தாராளமாக போதும் மாதிரியான வீட்டைப் பார்த்து பார்த்து அடுக்கி வைத்த நேரங்களில் எல்லாம் இந்த வீட்டில் தன்னுடைய அன்னை மனோகரியும், வினோத்தும் இங்கு வந்து நாங்கள் ஒரே குடும்பமாக இங்கு வாழ கொடுத்து வைக்கவில்லையே என்று அழுதாள்.
"வது..... நாம குன்னூருக்குப் போனப்புறம் ஒரு குட்டியான வீட்டுக்குப் போயிட்டு இருக்கணும்! உங்க அம்மாவோட கண்பார்வையிலயே நாம கொஞ்சம் டீஸன்ட்டா ரொமான்ஸ் எல்லாம் பண்ணனும்! நாம
சந்தோஷமா இருக்குறதப் பாத்து, அவங்களும் நிம்மதியா இருக்கணும்..... அப்புறம் நமக்கு பாப்பா எத்தன வேணும் வது?"
"ஒன்ன மாதிரி ஒரு பையன்; அப்புறம் ஒன்ன மாதிரி ஒரு பொண்ணு! என்னை மாதிரி ஒரு பையன்; அப்புறம் என்னைய மாதிரி ஒரு பொண்ணு! நாலு கிட்ஸ் போதும்னு நெனக்கிறேன்.... நீ என்ன நினைக்குற? நம்ம கவர்மெண்ட் நம்மள நாலு குழந்தைங்கல்லா பெத்துக்க அலவ் பண்ண மாட்டாங்க; ஸோ நீ என்ன பண்ற.....?"
"இந்த டாகீஸெல்லாம்
ஒரே டெலிவரியில அஞ்சாறு குட்டி போடுற மாதிரி எனக்கு உன்னை மாதிரி ரெண்டு, என்னை மாதிரி ரெண்டு பெத்துக் குடுத்துர்ற; அதுக்கப்புறம் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்..... என்ன வது?" என்று குறுஞ்சிரிப்புடன் கண்சிமிட்டி பேச்சை முடிப்பவனின் முகத்தைப் பார்த்து முறைத்து,
"அப்ப நான் என்ன உனக்கு நாயா வினு?" என்று கேட்டு அவனை செல்லமாக அடித்து அவனுடன் சண்டை போட்டது இப்போது
நினைவு வந்தது.
"இப்ப நீ இங்க வா வினு..... எங்கிட்ட
குழந்தைங்க வேணும்னு அப்ப கேட்ட மாதிரியே இப்பவும் கேளுடா!
ப்ராமிஸா சொல்றேன்; உன்னை இப்ப நான் அடிக்கவே மாட்டேன்! நீ எத்தன குழந்தை கேட்டாலும் பெத்துத் தர்றேன் வினு!" என்று தனக்கு தானே பேசியபடி தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் வடிப்பாள் வதனி.
முகிலமுதத்திடமும் அவ்வாறு தான் அவன் சொன்னது, மனோகரி சொன்னது என எதையாவது சொல்லி அழுவாள்! அவள் கீழே செல்வது அந்த வயதான பெண்மணியின் உதவிக்கு என்று போய், அந்த பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கரைந்து விட்டு வருவது வதனிக்கு வாடிக்கையாகி இருந்தது.
அவள் இங்கு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டது. ஜெயனுக்கும் அன்னையின் வாய்வழியாக அவளது கதை சொல்லப்பட்டது.
தன் மனங்கவர்ந்தவருடன் காதல் கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டு மனோகரிக்கு பர்வதவர்த்தினி பிறந்த பிறகு தான் தான் தன்னுடைய கணவருக்கு இரண்டாவது மனைவியென்றே தெரியும்.
"எனக்கு உம்மேல தான்டா மனோகரி உண்மையான காதல்!" என்று சத்தியம் செய்தவரை அருவருப்பாக பார்த்தவர் தான்! தன்னுடைய ஏமாளித்தனத்தை நொந்து கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு வதனியை நன்றாக கல்வி பயிலச் செய்து ஒழுக்கத்தை ஊட்டி ஊட்டி வளர்த்து விட்டார்.
பதினைந்து வயது குழந்தை என்று கூட பாராமல் அவளிடம் அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை "யாரை நம்பியும் மோசம் போயிடாத வதனிக்கண்ணு!" என்பது தான்.
வதனியும் பட்டப்படிப்பை படித்து முடித்து, பேங்க் வேலைக்கும் எழுதிப் போட்டு, ஒரு தனியார் பேங்கில் உதவி மேலாளராக ஆகும் வரையிலும் தன்னுடைய அன்னையின் சொல் மந்திரம் என்று கட்டுப்பட்டு விட்டாள்.
அவளது இருபத்து ஏழாவது வயதில் மனோகரி அவளுக்காக பார்த்த வரன் தான் வினோத்! அவனை தனியாக சந்திக்க வேண்டும் என்று கேட்டு, அவனிடம்
தன்னுடைய குடும்ப நிலையை எல்லாம் தெளிவாக சொல்லி விட்டு, அவனது பதிலுக்காக காத்திருந்த மனோகரியிடம்,
"எனக்கு உங்க சிச்சுவேஷன் புரியது ஆன்ட்டி! மிஸ் பர்வதவர்த்தினிக்கு நான் ஓகேன்னா நான் என் பேரெண்ட்ஸ்ட்ட பேசுறேன். அவங்கள நான் கன்வின்ஸ் பண்றேன்!" என்று சொன்னவனுடைய வேகம் அவ்வளவு சரியாகப்படவில்லை மனோகரிக்கு.
வினோத்துடைய தங்கைக்கும், வதனியின் தம்பி, தங்கைக்கும் திருமணம் நடந்து முடிவதற்காக
வினோத்தும், வதனியும் மூன்று வருடங்கள் காத்திருந்து விட்டு அவனுடைய அன்னை, தந்தையிடமும் வதனியின் தந்தையிடமும் "எங்கயாவது கண்காணாத எடத்துக்குப் போய்த்தொலைங்க!" என்ற சாபத்தை வாங்கிக் கொண்டு புதிய ஊரில், வேலையில் சேர்ந்தவுடன் தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என திருமணத்தேதி எல்லாம் குறித்துக் கொண்டு சந்தோஷமாக சென்னையில் இருந்து கிளம்பி வந்தனர்.
இரண்டு குடும்பங்களுக்கும் தாங்கள் எங்கு செல்லப்போகிறோம் என்று கூட வினோத்தும், வதனியும் சொல்லவில்லை. மனதில் அத்தனை கனவை சுமந்து கொண்டு ஆசை ஆசையாக இந்த ஊருக்கு வந்தவர்கள் பொசுக்கென்று ஒரே நொடியில் மரணித்து விட்டார்கள் என்றால், இந்தப்பெண் அவர்களுக்காக இத்தனை அழுகை அழுவது நியாயந்தான் என்று நினைத்து வருந்தினான் ஜனமேஜயன்.
அன்று மாலையும் அவன் வருவதற்குள் வீடு கூட்டி, பாத்திரம் கழுவி அடுப்பு மேடையை துடைத்து விட்டவள், "முகில்ம்மா.... நைட் டின்னருக்கு என்ன செஞ்சு கொண்டு வரட்டும்?" என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள்.
"என்னம்மா நீ? வந்ததுல இருந்து மூணுவேள சாப்பாட்டையும் நீயே செஞ்சு குடுத்துக்கிட்டு இருக்கியேமா? சரி.... ஜெயனுட்ட காய்கறி, மளிகைக்குன்னு ஏதாவது காசாவது வாங்கிக்கன்னு சொன்னா அதையும் வாங்கிக்க மாட்டேங்குற. நீ பேசுறத சும்மா ஒக்காந்து கேட்டுக்கிட்டு இருக்குறதுக்காமா இதெல்லாம் செய்யுற?" என்று கேட்டவரின் கன்னம் பற்றி அவருடைய கன்னத்தில் ஒருமுறை அழுந்த முத்தமிட்டவள்,
"சும்மா ஒக்காந்து கேட்டுக்கிட்டு இருக்குறதுக்கு எல்லாம் சாப்பாடு கிடையாது...... என்னை அன்பா, அக்கறையா கவனிச்சுக்குறதுக்காக தான் இந்த சாப்பாடு! சீக்கிரத்துல எழுந்திரிச்சு உங்க பேரன் பேத்தி பின்னால ஓட வேண்டாமா நீங்க? அதுக்காக தான் வதனீஸ் ஸ்பெஷல் சத்தான சாப்பாடு!" என்று சொன்னவள்,
"நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?" என்று முகிலிடம் மறுபடியும் கேட்டாள்.
"உனக்கு பிடிச்சதா ஏதாவது செய்டா வதனி! அப்புறம் ஜெயனு உங்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லிட்டு இருந்தான்!" என்று சொன்னவர்,
"அவன் வீட்டுக்கு வந்ததும் உன்னைய போன்ல கூப்ட சொல்றேன்; இல்ல..... காலையில ரெண்டு நிமிஷம் மேல வரச் சொல்றேன்!" என்றார்.
இந்தப் பாதுகாப்பு தான் வதனி அவரிடம் வேண்டுவது! அவள் கேட்காமலே முகில் அவளுக்கு வழங்குவது;
"எங்கிட்ட என்ன முகில்ம்மா பேசணுமாம் உங்க பையனுக்கு?ஒருதடவ இந்த மாதிரி தான் ஏதோ பேசணும்னு சொல்லிட்டு மேல வந்தாங்க. என்னன்னு கேட்டா நான் வைக்கிற குழம்பெல்லாம் உங்க பையனுக்கு ரொம்ப சப்புன்னு இருக்காம்! கரெக்டா இன்னும் ஒரே ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அதிகமா போட்டு சமைக்க முடியுமாம்மா? இல்லன்னா டெய்லி செம பசி எடுத்து சாப்புட ஒக்காருற நேரத்துல, மிளகாய்ப்பொடி சேர்க்குறத வேற ஒரு வேலையா பாத்துட்டு இருக்க வேண்டியதிருக்குன்னு சொல்றாங்க.....! உங்களுக்கு முடியல; சரி நீங்க சரியாகுற வரைக்கும் சமையல் பொறுப்ப நம்ம கவனிச்சுக்குவோம்னு நினைச்சா உப்பு கூடப் போடு, மிளகா கூடப் போடுன்னுக்கிட்டு!
என்ன பாத்தா எப்டி தெரியுது அவருக்கு?" என்று சண்டைக்கு வந்தவளிடம் உதடுபிதுக்கிய முகில்,
"நீ கேக்குற கேள்வியெல்லாம் அவங்கிட்டயே கேட்டுக்க! உங்க ரெண்டு பேரோட சண்டைக்குள்ள நான் வரவேயில்ல தாயி!" என்று சொல்லி கும்பிடு போட்டார்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro