🌻 அழகி 36
"டேய்.... என்னடா அதுக்குள்ள கெளம்புறேங்குற? ஏதாவது ப்ரச்சனயா? அம்மி ஏதாச்சு சொல்லுச்சா?" என்று கேட்டவனிடம்,
"அதெல்லாம் ஒண்ணுமில்லடா மாப்ள! வர்த்தினி ஏதோ சீக்கிரம் கெளம்பணுங்குது.... அதுக்கு தூக்கம் வருதா வேற வேல எதும் இருக்குதா என்னன்னு தெரியல. நாங்க கெளம்புறோம். நீ மரியம்ட்ட சொல்லிடு!" என்றான் ஜெயன்.
"ரொம்ப நன்றிடா மாப்ள! நீ கூட இருந்ததுனால அம்மி எதுவும் நசநசன்னு படுத்தாம, ஒரு வழியா புள்ளைங்க பொறந்தநாள நல்லா கொண்டாடி முடிச்சாச்சு.... ஆனா, அம்மி நெசமாவே ஒன்னைய, மரியத்த, என்னைய எதுவும் சொல்லலங்குற?" என்று கேட்ட தன்னுடைய நண்பனிடம்,
"சத்தியம் பண்ணாத்தேன் நம்புவியாடா மாப்ள? பாயம்மாவுக்கு இத்தன ஆளுங்கள வீட்ல பாத்ததுலயே மயக்கம் வந்துருக்கும்; கேக்கு, சாப்பாடு இதெல்லாம் பாத்து மூச்சே அடைச்சிருக்கும்! இதுக்கு மேல நம்மள திட்டுறதுக்கெல்லாம் எங்கடா அவங்க வாயத் தெறக்குறது? நீ ஒரு நாலஞ்சுநா மரியத்த பத்திரமா பாத்துக்க. மொத்த கோவத்தையும் உங்கம்மா அந்தப்புள்ள மேல எறிக்கிறாம....!" என்று சொன்னவனிடம் "சரிடா பாத்துக்குறேன்!" என்று சொல்லி தலையாட்டினான் நஸார்.
ஜெயன் கிளம்பும் போது பின்னாலேயே ஓடி வந்து அவன் கொடுத்த தங்களுடைய கிப்ட் பார்சலின் உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்ட ஹசன் மற்றும் ஃபைசலிடம் அம்மியும் அபுவும் சொல்லும் போது தான் அதைப் பிரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அனிஷாவிடமும் அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது உனக்கு ஒரு நல்ல போர்டு விளையாட்டு செட்டை வாங்கி வருகிறேன் என்று சொல்லவும் அந்தக் குழந்தையும் மகிழ்ந்து தலையாட்டி விட்டு சென்றாள்.
சதுரங்கம், லூடோ, சைனீஸ் செக்கர்ஸ், பிஸினஸ் என்ற வகையிலான அமர்ந்து அறிவை உபயோகித்து விளையாடும் விளையாட்டுகள் அனிஷாவின் விருப்பம். ஹசனுக்கும், ஃபைசலுக்கும் தங்கள் விளையாட்டுப் பொருளுடன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் குழந்தையை மறந்துவிட்டோமே என்று இங்கு வந்த பிறகு தான் ஜெயனுக்கு உரைத்தது. அதை அவளிடமே பேசி தெளிவும் படுத்திக் கொண்ட பின்பு தான் மரியத்தை கண்களால் தேடி அவளிடம் ஒரு தலையசைவுடன் அங்கிருந்து கிளம்பினான்.
"மரியம் உன்னை இவ்ளோ புரிஞ்சு வச்சுருக்காங்க; வார்த்தைக்கு வார்த்த ஜெயனுண்ணா, ஜெயனுண்ணாங்குறாங்க. நீ ஏன் அவங்கள பாக்குற நேரமெல்லாம் அவாய்ட் பண்ற?" என்று கேட்ட வதனியிடம்,
"அண்ணான்னு கூப்டுற புள்ளயோட வாழ்க்கையில என்னையால வீணா எந்தப் பிரச்சனையும் வராம இருக்கணும்ல அதுக்குத்தான்; நஸார்ட்ட சொல்லிட்டேன். நாம கெளம்பலாமா?" என்றவனிடம்,
"வீட்டுக்குத்தான போறோம்?" என்று பதட்டத்துடன் பதிலுக்கு கேள்வி கேட்டாள் வதனி.
"வீட்டுக்குத்தான் போகணுமா ஒனக்கு?" என்று கேட்டவனுடைய குரலில் கோப சாயல் எதுவுமில்லை என்று கண்டறிந்தவள் முதலில் இல்லையென தலையாட்டி, பின்பு ஆமென்று சொல்லி வைத்தாள்.
"என்ன தலைய எல்லாப்பக்கமும் ஆட்டுற? எங்க போகணும்னு தெளிவா சொல்லு; அங்க போகலாம்! எங்க போனாலும் நாம இன்னிக்கு பேசிட்டு தான் படுக்கப்போறோம்!" என்று சொன்னவனுடைய நின்றிருந்த பைக்கில் சென்று அமர்ந்து கொண்டவள்,
"அப்ப எங்கயுமே போக வேண்டாம்; இப்டியே ஒக்காந்துருக்கலாம்!" என்றாள். சாய்வாக நின்று கொண்டிருந்த பைக்கில் அவள் அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்து சிரித்தவன்,
"பாயம்மா கூட பேசி முடிச்சப்போ மூக்கு வெடச்சிக்கிட்டு கெளம்புவோம்ன; இப்ப வீட்டுக்குப் போவ பயந்துக்கிட்டு இப்டியே ஒக்காந்துருப்பமுங்குற? ஒன்னைய என்ன கணக்குல தான்டீ சேக்குறது? நவரு. மொதல்ல இங்கருந்து கெளம்புவோம். அப்புறமா வண்டியில ஒக்காந்து எங்க போவணும்னு யோசிச்சிக்கிட்டே வா!" என்று சொன்னவனிடம்,
"ஜெயன்..... நீ பிள்ளைங்களோட போட்டோ எடுத்தியா? ம்ஹூம்.... நீ ஒரு தடவைக்கு மேல ஹால் பக்கம் வரவேயில்லயே? ரூமுக்குள்ள, சாப்பாடு சர்வ் பண்ற இடத்துல தான நின்ன.... ஐயயோ போட்டோவுல கிப்ட்ட கூட நாந்தானடா குடுக்குற மாதிரியிருக்கு?" என்று திடீரென நியாபகம் வந்து அவனிடம் கேட்டவள் அவளுடைய மொபைலில் பிள்ளைகளுடன் எடுத்திருந்த நான்கைந்து படங்களை அவனிடம் காட்டி வருந்திக் கொண்டிருந்தாள்.
"புள்ளைங்களுக்கு வாங்கிட்டு வந்த பொருள நீ குடுத்தா என்ன? நாங்குடுத்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான் வர்த்தினி! போட்டோவுல ரொம்ப அழகாயிருக்க.... மூணு கொழந்தைங்களுக்கு அம்மான்னு ஒன்னைய யோசிக்க முடியல.... ஆனா பிள்ளைங்களோட நிக்குறப்ப உன்னோட சிரிப்பு ரொம்ப இயல்பாயிருக்கு!" என்று சொன்னவன் அந்தப் புகைப்படத்தை சிறிது நேரம் கண்களால் வருடிக் கொண்டிருந்தான்.
"டைமாச்சு ஜெயன்; வீட்டுக்குக் கெளம்பலாம்!" என்று கேட்டவளிடம் அவளது அலைபேசியை நீட்டியவன்,
"பாத்து ஜாக்கிரதையா ஒக்காரு! பொடவையில இருக்க!" என்று சொல்லி விட்டு அவனுடைய பைக்கை உயிர்ப்பித்தான்.
"ஒரு பீஸ் கேக் கூட சாப்டல; கிப்ட்ட உங்கையால குடுக்கல; ஒரு போட்டோ எடுத்துக்கல.... எதுக்கு தான்டா நீ இந்த பங்ஷனுக்கு வந்த?" என்று கேட்ட படி அவனுடைய பைக் பின்ஸீட்டில் அமர்ந்து முதுகைப் பற்றியவளிடம்,
"நஸாருக்காக, பிள்ளைங்களுக்காக, ஒனக்காக.... நீங்க மூணு பேரும் சந்தோஷமா இருந்தீங்கல்ல.... அதுபோதும்! நீ எனக்காக பாயம்மா கிட்ட பேசுனதுலயே எனக்கு ரெண்டுதடவ புல்கட்டு கட்டுன ஒரு திருப்தியாகிடுச்சு வர்த்தினி! நான் இன்னிக்கு சந்தோஷமாயிருக்கேன்!" என்றவனிடம் தயக்கமான குரலில்,
"அதில்ல ஜெயன்..... அவங்க உன்னையும் என்னையும் பத்தி கொஞ்சம் தப்பா பேசுனாங்க. அத தெளிவா எக்ஸ்ப்ளைன் பண்ணுவோம்னு தான் நான் அவங்க கிட்ட கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்! இதுல நீ சந்தோஷப்படுற அளவுக்கு ஒண்ணுமேயில்ல!" என்று சொன்னாள் வதனி.
அவள் பேச்சினால் ஏற்பட்ட கோபத்தை ஜெயன் தன்னுடைய பைக்கின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் காட்ட திடீர் வேகத்தினால் வதனி ஜெயனுடைய பைக்கின் கம்பிகளை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.
தப்பித்தவறிக் கூட அவன் மேல் கைபட்டு விடக்கூடாது என்பதில் எப்போதும் போல் இப்போதும் அவள் தெளிவாக இருக்க அவளது பிடிவாதத்தை நினைத்து ஜெயனின் இதழ்களில் ஒரு கசந்த முறுவல் தான் தோன்றியது.
வீட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்தியவன், "பத்து நிமிஷத்துல மொட்டை மாடிக்கு வா வர்த்தினி; நாம கண்டிப்பா பேசியாகணும்!" என்றான்.
"இல்ல நான்.... எனக்கு தூக்கம் வருது ஜெயன்! காலையில டீ டைம்ல நாம பேசலாமே?" என்று கேட்டவளிடம் அடங்காத ஆத்திரத்துடன்,
"நீ ஒரு முடிவு சொல்ற வரைக்கும் காலையில, மதியம், ராத்திரின்னு எல்லா நேரமும் நாம பேசிக்கிட்டே தான் இருக்கணும். படுத்தித் தொலையாத. பத்து நிமிஷத்துல ட்ரெஸ்ஸ மாத்திட்டு, மாடியில இருக்க. ஏறு மேல.....!" என்று படிகளைக் காட்டியவனை பார்த்து பயந்து மாடிப்படியில் ஏறினாள் பர்வதவர்த்தினி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro