Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 35

ஜெயனும், வதனியும் பிறந்தநாள்
விழாவிற்கு சென்ற போது
நஸாருடைய வீட்டில் அவனுடைய
மகன்கள் ஹசன், ஃபைசல் இருவரும் தங்களுடைய முன்பாக இருந்த ஒரே மாதிரியான இரண்டு கேக்குகளில் இருந்த மெழுகுவர்த்திகளை ஊதி கேக்குகளை வெட்டினர்.

தம்பிகளுக்கு உதவியாக நடுவில் நஸாருடைய மகள் அனிஷா நின்று கொண்டு தன்னுடைய தம்பிகளுக்கு கேக்கை வெட்ட உதவி செய்து கொண்டிருந்தாள்.

வொய்ன் சிவப்பில் ஏஞ்சல் ஃப்ராக் அணிந்து நின்றிருந்த மகளையும், இளநீலம் மற்றும் கருநீலமும் கலந்த சூட் கோட்டில் நின்றிருந்த மகன்களையும் கண்டு அவர்களின் உடைத்தேர்வு மிகவும் அழகாக இருப்பதாக சொல்லி மரியத்திடம் விரலால் "சூப்பர்" என சைகை காட்டினான் நஸார்.

கணவன் தன்னிடம் இவ்வளவு அன்பும் அனுசரணையும் காட்டுவதால் தான் தன்னால் தன்னுடைய புகுந்த வீட்டில் நிறைய சவால்களை எளிதாக கடந்து செல்ல முடிகிறது என்று நினைத்துக் கொண்ட மரியம் சிரிப்புடன் அவனிடம் தலையசைத்து விட்டு வந்திருந்த நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

இரட்டையரின் பிறந்த நாள் என்று அவர்களுடைய வீட்டிற்கு வதனியும் ஜெயனுமாகப் போய் மரியம், நஸார் இருவரிடமும் பேசி, தங்களுடைய பரிசை பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு, பிறந்தநாள் விழாவிற்கு வந்தவர்களை கவனித்து, அவர்கள் கொடுத்த பரிசுகளை வாங்கி அறையில் அடுக்கி வைத்து, அவர்களை சாப்பிட அனுப்பும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்னடா..... மேடம் ஒம்பக்கமே திரும்பாம அவுங்க பாட்டுக்கு வந்துட்டும், போயிட்டும் இருக்காங்க. என்னத்தயாவது குட்டைய கொழப்பி உட்டியா?" என்று ஜெயனின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி கேட்டவனிடம்,

"ஏன்டாலேய்..... அவனவன் வேலைய பாக்காம, அடுத்தவிய்ங்கள தான் பாத்துட்டே திரிவிங்களாடா? அஸிஸ்டெண்ட் மேனேஜர் அதான் என்னோட வீட்ல இருக்குற ஏஎம் அம்மா எங்க போனா என்ன? வந்தா ஒனக்கென்ன?"

"புள்ளைங்க பொறந்தநாள வீட்லயே வச்சு கொண்டாட பாயம்மா சம்மதம் தந்து நாலு பேர வீட்டுக்குள்ள வர உட்டுச்சேன்னு நெனச்சு சந்தோஷமா இருக்கேல்ல நீயி? அப்டியே இருந்துட்டுப் போ! இதுல ஊடயில என் பிரச்சனைய எதுக்கு எடுத்து தலையில போட்டுக்குற?" என்று புன்னகைத்தபடி நஸாரிடம் கேட்டவன் அந்த அறையில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்த பலூன்கள், தோரணங்கள், மெழுகுவர்த்தி, கேக்குகளின் வடிவம் பொறித்த ஸ்டிக்கர்கள் இவற்றையெல்லாம் மரியம் சொல்லியனுப்பி இருந்த ஒரு பெரிய டப்பாவில் அடுக்கி அதை அந்த அறையின் ஒரு கபோர்டில் ஒதுக்கி வைத்தான்.

இத்தனை அலங்கார பொருட்கள் வீணாக கிடப்பதைப் பார்த்தால் நஸாரின் அன்னை பாயம்மாவிற்கு நெஞ்சு வலி வந்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"நீ சொல்றதெல்லாம் சரிதான்டா மாப்ள; புள்ளைங்க மூணுக்கும் இப்ப நல்லா வெவரந்தெரியுதுடா; முன்ன மாதிரியெல்லாம் அதுங்கள ஏமாத்த முடியல..... பாவம்டா மரியம்; அதுங்க ஆசைக்கும், அம்மியோட கண்டிஷனுக்கும் நடுவால மாட்டிக்கிட்டு முழிக்கிறா! அப்பப்ப நான் வாயத் தொறந்தா எனக்கும் சேத்து வச்சு காச அள்ளி எறைக்குறான்; பணத்தோட அருமை தெரியாம திரியுறான்னு ஏச்சு விழுகுது! ஆனாலும் என் புள்ளைங்க மொகத்துக்காக அதையெல்லாம் சந்தோஷமா வாங்கிக்கலாம்டா மாப்ள!" என்று சொன்ன நண்பனை சிறுசிரிப்புடன் தோளில் தட்டிக் கொடுத்தவன்,

"இப்டித்தான்டா மச்சி கடைசி வரைக்கும் பாயம்மா கிட்ட
எருமைமாடு மாதிரியே இருந்துட்டுப் போயிடு! நம்மள பெத்தவங்களையும் கஷ்டப்படுத்திடக் கூடாது; கட்டிக்கிட்டவளையும் விட்டுக் குடுத்துடக் கூடாது...... இன்னுங்கொஞ்ச வருஷந்தான்; அதுக்கு மேல நாம போய் உங்க அம்மாவோட முட்டத் தேவயில்ல; இந்த குட்டி வானரங்க மூணையும் ஏவி உட்டா போதும்; அதுங்களே ஒனக்கு, மரியத்துக்கு, அவிய்ங்களுக்கு தேவையானது எல்லாத்தையும் சரியா கேட்டு வாங்கிக்கிடும்ங்க! ஒன்னோட வாப்பா இங்க வந்துட்டாருன்னாலே பாதி பிரச்சன சரியாகிடும்டா..... பாக்கலாம்!" என்றவனிடம்,

"என்னத்த பாக்கப் போற? போடா.... போயி எல்லாருக்கும் சாப்பாடு கரெக்டா நடக்குதான்னு பாரு; கொஞ்சம் உட்டா தலமேல ஏறி ஒக்காந்துக்குவான்!" என்று திட்டி விட்டு அவன் கொடுத்த பரிசை கிப்ட் பாக்ஸூடன் குலுக்கி உள்ளிருக்கும் சாமான்கள் என்னவாக இருக்கும் என்று யூகித்த படியே அங்கிருந்து நகர்ந்தான் நஸார்.

அந்த விழாவில் மரியத்தின் வேண்டுகோளுக்கினங்கி அங்கும் இங்குமாக நடந்து அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்த வதனியை பிடித்து இழுத்து தன்னருகே அமர வைத்துக் கொண்டார் நஸாரின் தாயார்.

".....ம்மா எனக்கு கொஞ்சம் வேல இருக்கு!" என்று சொன்னவளிடம்,

"வேல கெடக்குது நீ இரி! ஆனாலும்
இந்தப்பயல நம்பி நீ வீட்ல இருந்து ஓடியாந்துட்டியாம்மோ? இவேன் வெறும் எடுபுடி வேல பாக்குறவன்; நெரந்தரமா சம்பளம்னு ஒண்ணுமே கெடையாது இவனுக்கு..... இவனோட வேலைக்கு எப்பவும் ஆபத்து வந்துரக்கூடாதுன்னுதா எம்மொவன் கழுத்தப் புடிச்சு தொங்கிட்டு இரிக்கான்; நீ இவனயெல்லாம் நிக்கா பண்ணிக்காத!" என்று சொல்ல அவர்கள் சொன்னது போல் அவனை நிக்காஹ் பண்ணிக்கொள்ளும் உத்தேசமே இல்லை என்றாலும் பாயம்மாவிடம் ஆழ்ந்த குரலில் சில விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்து ஜெயனுக்காக வாதாடினாள் பர்வதவர்த்தினி.

"இவேன், இவேன்னு நீங்க பேசுறது ஜெயனைப் பத்தியாம்மா?" என்று அழுத்தக்குரலில் கேட்டவளிடம்,

"ஆமா... அந்த சைத்தானப் பத்தித் தான்!" என்று தெளிவாக உரைத்தார் அந்த வயதான பெண்மணி.

"அம்மா; முதல் விஷயம்! நான் ஜெயனை நம்பி எங்க வீட்ல இருந்து ஓடிவரல! அவர் என்னோட வீட்டு ஓனர்; நான் அவரோட வீட்ல குடியிருக்குறவ அவ்ளோதான் எங்க ரெண்டு பேரோட சம்பந்தம்! உங்க பையனோட ட்ராவல்ஸ்ல ஜெயன் ட்ரைவரா இருக்காரு; இருக்கட்டுமே; ட்ரைவர் வேலை ஒரு எடுபிடி வேலையா? அப்புறம் என்ன சொன்னீங்க? நிரந்தரமான சம்பளம் இல்லைன்னு உங்க பையன் கழுத்துல ஏறி தொங்கிட்டு இருக்காருன்னா? கண்டிப்பா இல்ல......!"

"ட்ரைவர் வேலைன்னு மட்டும் இல்லாம ஜெயனுக்கு வகை வகையா எத்தன வேலை தெரியும் தெரியுமா? ஜெயன் வேலைக்காக உங்க பையன் கிட்ட இருக்கலம்மா.... அவங்க ரெண்டு பேரோட ப்ரெண்ட்ஷிப்க்காக தான் இருக்காரு; புரிஞ்சதா? அவரப் பத்தி இனிமே ஒருவார்த்த தப்பா பேசக்கூடாது..... நல்ல காரியம் நடக்குறதுனால நான் மரியம், நஸார் ஸார் இவங்களயெல்லாம் இப்ப டிஸ்டர்ப் பண்ணல; இல்லன்னா எல்லாரையும் இங்க கூப்ட்டு உங்க முன்னால நிக்க வச்சுட்டே நான் பேச நெனச்சத பேசியிருப்பேன்!" என்று சொன்னபடி பெரிய மூச்சுடன் நின்றவளின் முன்பாக ஒரு சிறிய வாட்டர் பாட்டில் நீட்டப்பட்டது.

"நீ எங்க இங்க? எப்ப வந்த?" என்று கேட்டவளிடம்,

"நீ பாயம்மாவ சுருட்டி மடக்கி பாக்கெட்ல போடும் போதே வந்துட்டேன். தண்ணியக் குடி!" என்றான்.

"என்னடா.... ஒன்னைய ஏத்துக்கிட்டு பேசுறதுக்கு ஆளக் கூட்டியார்றியா?" என்று கேட்ட  அம்மாவிடம் சிரிப்புடன்,

"நம்புங்க பாயம்மா; சத்தியமா இந்தப் பாப்பா என்னைய ஏத்துக்கிட்டு பேசுவான்னு  எனக்குத் தெரியவே தெரியாது.... என்னைய பங்கம் பண்றதுக்கு ஒரு ஆளு கெடச்சுடுச்சுன்னு நெனச்சு நீங்க வழக்கம்போல உங்க வேலைய ஆரம்பிச்சுருக்கீங்க; ஆனா இது கொஞ்சம் வேற மாதிரி பேச்சாகிடுச்சு!" என்று சொன்னவனுக்கு அப்படி ஒரு உற்சாகம்.

கழுத்தை நொடித்துக் கொண்டு சென்ற அந்த வயதான பெண்மணியை பார்த்த இருவரும் லேசாக புன்னகைத்துக் கொண்டனர்.

"இவங்க எப்டி ஜெயன் உன்னை இப்டி தப்பு தப்பா பேசலாம்?" என்று ஆரம்பித்தவளிடம்,

"எம்மா........ விடும்மா! நஸாரோட அம்மா தான பேசுனாங்க? அவங்க எப்பவுமே அப்டித்தான்; என்னைய ரொம்ப கழுவி கழுவி தான் ஊத்துவாங்க! நீ இத ஃப்ரீயா உடு; நஸாரும் மரியமும் நம்ம இவங்க கிட்ட எதிர்ப்பேச்சு பேசிட்டு இருக்குறத பாத்தா வருத்தப்படப்போவுதுங்க!" என்று சொன்னவனிடம்,

"சாப்ட்டு கெளம்பலாமா? எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல!" என்று கேட்டாள் வதனி.

"வேலை கொஞ்சம் ஒதுங்கிடுச்சு! அவங்கிட்ட சொல்லிட்டு வர்றேன்; இப்பவே கெளம்பலாம்!" என்றவன் அவளை கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro