🌻 அழகி 30
இப்போதெல்லாம் அமுதாம்மாவிடம் வந்து அவள் அழுவது மிக அரிதாகியிருந்தது.
அம்மா, வினோத் இவர்கள் இருவரையும் நினைத்து படுக்கையில் விழும் போது அழுவாளோ என்னவோ? தன்னுடைய பலவீனத்தை வெளியில் காட்டிக் கொள்ளாத அளவிற்கு தைரியம் பெற்றிருந்தாள் பர்வதவர்த்தினி.
சாயந்தர வேளைகளில் அவள் மறுநாள் காலையில் உடுத்த வேண்டிய புடவையையோ, டாப்ஸையோ அயர்ன் செய்து கொண்டிருந்தாள் என்றால் ஜெயன் அவளது துணியின் தரத்தை கைகளால் அளந்து, கண்களால் ஆராய்ச்சிப் பார்வை பார்த்த படியே நிற்பான்.
"உன்னோட ட்ரெஸ்ஸூ மட்டும் எப்டி எப்பவும் பளபளான்னே இருக்கு நானும் இப்பத்தா ஆயிர ரூபாய்க்கு மூணுன்னு ரோட்டுக்கடையில சட்ட வாங்குனேன் வர்த்தினி! ஒன்னோடது மாதிரியில்லாம, அதெல்லாம் போட்ட ரெண்டாவது தடவையில பல்ல இளிக்குது! என்ன செய்ய? உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் இத மாதிரி நல்ல துணிய ஒளிச்சு வச்சு விக்குறாய்ங்களோ என்னவோ புரிய மாட்டேங்குதும்மா!" என்று சொல்பவனின் பேச்சில் கோபமுற்று அவன் தலையில் கொட்டுபவள்,
"முட்ட தோச, நெய் ரோஸ்ட், பூரி உருளைக்கிழங்கு, லெமன் சாதம் இதெல்லாம் எங்க நல்லாயிருக்கும்னு தேடி தேடி நல்ல க்வாலிட்டியில இருக்கான்னு பார்த்து வாங்குறல்ல? அதுமாதிரி போடுற சட்டையில கொஞ்சம் க்வாலிட்டி பாத்தா என்ன? எழுநூறு, எண்ணூறு ரூபாய்ல ஒரு சட்டைய எடு ஜெயன்! அப்பதான் அதோட லைஃப் ரெண்டு வருஷத்துக்காவது நல்லா இருக்கும்! எங்களுக்கு மட்டும் ட்ரெஸ்ஸ ஒளிச்சு வச்சு விக்குறாங்க; ஆளப்பாரு..... இடியட்!" என்று அவனிடம் சொல்லி அன்றாட விஷயத்தில் கூட அவனுக்கு சில அறிவுரைகளும், பரிந்துரைகளும் கொடுப்பாள்.
இப்படி உரிமையாக அவள் அவனிடம் சண்டை போட வேண்டுமென்று தானே அவனும் சிறுபிள்ளைத்தனமாக எதையாவது அவளிடம் கேட்பது? ஜெயனுடைய அந்த சாகசத்தை ஏனோ வதனி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
முகிலமுதத்தால் தற்போது ஓரளவுக்கு வேலை செய்ய முடிந்ததால் காலை வேலை வதனிக்கும், ஜெயனுக்கும் இன்னும் எளிதாகிப் போனது.
"வதனிம்மா.... நீ இங்க வந்ததுல இருந்து தான் கண்ணு வீடு வீடாயிருக்கு; நீ வாரதுக்கு முன்னாலயும் ஜெயனு என்னைய நல்லாப் பாத்துக்குவாந்தான்; ஆனா ஒருவாரத்துல ஆறு நா வேலையின்னு ஓடிருவான்; ஏழாவது நா முழுசா தூங்கிக் கழிக்குறதுலயே போயிரும்! இப்ப எல்லாம் நேரத்துக்கு வேல, நேரத்துக்கு சாப்பாடு, நேரத்துக்கு தூக்கம்னு அவனோட செயல் எல்லாத்துலயும் ஒரு நிதானம் தெரியுது. அதுக்கு நீதான் தங்கமே காரணம்!" என்று அவள் தாடையைப் பிடித்து கொஞ்சியபடி சொன்ன முகிலமுதத்திடம்,
"இல்ல முகில்ம்மா.... அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல!" என்று அவர் பேச்சை மறுத்துக் கொண்டிருந்தாள் வதனி.
"நீ இல்லன்னு சொன்னாலும் நாஞ்சொல்றதுதா நெசம்!
ஒன்னியால தான் அந்தப்பய கிட்ட இவ்ள மாத்தம் தெரியுது..... எவ்ளோ முயற்சி பண்ணாலும் ஒன்னைய எங்களால வேற வீட்டுப் பொண்ணா பாக்க முடியல ராசாத்தி; உன் அம்மாட்ட கேக்குற மாதிரி வேளா வேளைக்கு ஒனக்கு
என்ன சாப்புட வேணுமின்னு கேளு. முகில்ம்மா ஒனக்கு அதெல்லாம் செஞ்சு தாரேன்! இப்போதைக்கு இது ஒன்னத்தா என்னால ஒனக்கு உரிமையா செஞ்சுதர முடியும்!" என்று சொன்னவர் இப்போதெல்லாம் பர்வதவர்த்தினியின் விருப்பப் பட்டியல் உணவுகளைத் தான் தன்னுடைய மகனுக்கும் சேர்த்து செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஜெயனுக்கு எப்போதும் உணவில் இது வேண்டும், அது வேண்டும் என்ற விருப்பத் தேர்வெல்லாம் இருந்ததில்லை. சாப்பிடும் உணவு உப்பு காரத்தில் சற்று தூக்கலான சுவையாக, அவனது வயிற்றுக்கு போதுமான அளவில் இருக்க வேண்டும்..... அவ்வளவுதான்! அவளுக்குப் பிடித்தம் என்றால் அது எனக்கும் பிடித்தம் தான் என்று இப்போதெல்லாம் அன்னையிடம் உரிமைச்சண்டை போடாமல் சற்று மாறியிருந்தான் அவன்!
அதுவும் இல்லாமல் அம்மா முடியாமல் படுத்திருந்த போது அவள் செலவு செய்த பணத்தை எல்லாம் இப்போது மூன்று வேளை சாப்பாடு மூலமாக அவளுக்கு திருப்பி தர முடிகிறது..... அதுவும் சந்தோஷந்தான் அவர்களுக்கு!
ஜெயனும், முகில்ம்மாவும் மறைமுகமாக நீ எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்று சொன்ன செய்தி தன்னுடைய மூளைக்கு எட்டாதது போல் பர்வதவர்த்தினி சில நேரங்களில் நடிக்கத்தான் வேண்டியிருந்தது. எதிர்காலம் பற்றிய பேச்சில் அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான நம்பிக்கையையும் தருவதற்கு அவள் தயாராக இல்லை.
முகிலமுதத்திற்கு கால்கள் சரியாகி விட்டதால் பழைய வழக்கம்போல
மாதத்தில் இரண்டு நாட்கள் அவர்களை ஊர்சுற்றலுக்கு அழைத்துச் சென்றான் ஜெயன். பல நேரங்களில் வதனியும் இந்த பிக்னிக்கில் அவர்களுடன் கொள்வாள்.
மலைகளில் அநேகம் பேருக்கு தெரிந்திராத நிறைய புதிய இடங்களுக்கு ஜெயன் அவர்களை கூட்டிச் செல்ல அப்படி மூவருமாக சேர்ந்து செல்வது வதனிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முகில்ம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே சில நேரம் கதை பேசிக் கொண்டு வருபவள் அவன் மட்டுமாக தனியாக அவளிடம் சிக்கும் நேரங்களில்,
"இங்க பாரு ஜெயன்.... உனக்கும் முகில்ம்மாவுக்கும் எங்கிட்ட இருந்து பணம்னு ஒண்ணு வாங்குற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா? வாடகை, சாப்பாடு, இந்த மாதிரி பிக்னிக்ஸ்க்கு ஆகுற செலவு இது எதுக்குமே காசு வாங்க மாட்டேன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்பாள்.
"நீ எங்களோட Distinguished Guest வர்த்தினி..... உங்கிட்ட போயி தங்குறதுக்கு, சாப்பாட்டுக்குன்னு பணம் கேட்டா அது நல்லாவா இருக்கு?" என்று வாதம் செய்பவனிடம்,
"ஓ.... அப்போ நான் உங்க வீட்ல இருக்குற வரையில எங்கிட்ட பணமே வாங்காம, என்னைய நீ அகதி மாதிரி தான் நடத்தப் போற இல்ல?" என்று அவளும் திரும்பி கேட்டு வைத்தாள்.
"யாரு இங்க உன்ன அகதி மாதிரி நடத்துறாங்க? இப்டி ஏதாவது ஒளறிக்கிட்டு இருந்தன்னா எனக்கு செமயா கோபம் வரும் பாத்துக்க..... நீ எங்களுக்கு பணமா, உடம்பு ஒழைப்பா எல்லாம் செஞ்சப்ப நாங்க அத வாங்கிக்கல? இப்ப நாங்க ஒனக்கு செய்யுறப்ப நீயும் இப்டி சத்தம்போடாம வாங்கிக்கணும் புரியுதா? இப்ப மட்டும் ஒம்பணத்த செலவு பண்ண வழியில்லாமயா இருக்கு?
அதான் மாச மாசம் நீ பெருசுக்கு காசு குடுக்குறியேம்மா....? பெறவென்ன.....?"
"ஆனா இந்த மாசத்தோட அத நிறுத்திக்கம்மா; நீ குடுத்த காசுல பெருசு நல்லா ஒக்காந்து சாப்புட்டு கதியா நிக்குது; மறுபடியும் தேனெடுக்க கிளம்பப் போறாப்லயாம்; அதுனால அடுத்த மாசத்துல இருந்து ஒனக்கு அந்தப் பணமும் மிச்சந்தான்...... ஆனா இப்ப எல்லாம் பணம் சம்பாதிக்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? அதுனால காச பத்திரமா சேத்து வை....!" என்று அவளிடம் ஒன்று கோபமாகவோ இல்லை விளையாட்டாகவோ எதையாவது பேசி அவள் ஆரம்பித்த பேச்சை அப்படியே முடித்து வைத்து விடுவான் ஜெயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro