🌻 அழகி 29
அன்று வதனிக்கு இந்த ஊரில் அவளுடைய ஐந்தாவது மாத சம்பளம் க்ரெடிட் ஆகியிருந்தது. இந்த மாத சம்பளத்தில் கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ஜெயனுக்கும், முகில்ம்மாவிற்கும் செலவு செய்வதற்காக ஒதுக்கி வைத்திருந்தாள் வதனி.
"நீ காச ஒதுக்கி வச்சதெல்லாம் சரித்தான்; அத நா ஒன்னைய செலவு செய்ய உட்டாத்தான?" என்று கண்களைச் சுருக்கிய படியே அவன் பேசுவது போல ஒரு எண்ணம் தோன்ற லேசாக சிரித்துக் கொண்டாள்.
முகில்ம்மாவிற்காவது அவர்கள் விரும்பும் நிறத்தில் ஒரு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்து விடலாம்; அவனுக்குத்தான் என்ன வாங்குவதென்று எப்படி யோசித்துப் பார்த்தும் அவளுக்குத் தெரியவில்லை.
அவனை மறுப்பு சொல்லாமல் தன்னுடைய பரிசை வாங்க வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு
கன்சீலர், பவுண்டேஷன், மஸ்காரா என்ற பொருட்கள் அடங்கிய முழுமையான ஒரு மேக்கப் டப்பாவை தான் பரிசாக தர வேண்டும் என்று நினைத்து அதற்கும் சிரித்துக் கொண்டாள்.
ஜெயனுக்கு மேக்கப் எதற்காக வேண்டும் என்ற காரணத்தையும் ஒருநாள் அவளுடைய வீட்டில் இருந்த போது தான் தெரிந்து கொண்டாள்.
ஒரு ஞாயிறன்று காலையில் குளியலறையில் இருந்து அவள் வெளியே வந்த போது ஜெயன் அவளது அறையில் நின்று கொண்டிருந்தான். எப்போதும் வதனிக்கு குளிப்பதற்கு மட்டும் அரைமணி நேரமாவது ஆகும். அவள் குளியலறைக்குள் சென்றால் என்றால் நாற்பது நிமிடங்களுக்கு குறைவாக வெளியே தலைநீட்ட மாட்டாள்.
அவள் குளியலறைக்குள் செல்வதற்காகவே காதை தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்து, அவள் குளிக்க உள்ளே சென்றதும் அவளது ஹாலுக்குள் மெதுவான காலடித்தடங்களுடன் நுழைந்தான் ஜெயன்.
அன்று குளிப்பதற்கு சற்று சோம்பேறித்தனமாக இருந்ததால் பல் மட்டும் துலக்கி விட்டு முகத்தை துவாலையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்திருந்தாள் வதனி.
இவ்வளவு சீக்கிரத்தில்
திடீரென அவள் வெளியே வருவாள் என்று எதிர்பார்க்காதவன் போல
முகமெல்லாம் வியர்த்து திருடன் போல் அவளைப் பார்த்து முழித்த படி நின்றிருந்தான்.
"ஹே.... என்னாச்சுப்பா உனக்கு? ஏன் இப்டி முழிக்கிற?" என்று வதனி கேட்க ஜெயன் ஒருவிதமான உடல் நெளிப்புடன் அவனது உள்ளங்கையில் எடுத்து வைத்திருந்த பவுண்டேஷன் க்ரீமை அவளிடம் காட்டி விட்டு அசடுவழிந்தான்.
"உம்முகத்துக்கு போடுறதுக்காக இந்த க்ரீம எடுத்தியா?" என்று கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையாட்டினான்.
"ஐயோ கடவுளே..... நீ கொஞ்சம் டஸ்கி கலர் தான்; ஆனா அடுத்தவங்க மேக்கப் பாக்ஸ்ல இருந்து திருடி மேக்கப் போடுற அளவுக்கா போவ?" என்று அவனிடம் சிறுசிரிப்புடன் கேட்டாள் வதனி.
அவனது வெட்கம் அவளுடைய முகத்தில் அவ்வளவு சிரிப்பை வரவழைத்திருந்தது.
"அதில்ல வர்த்தினி.... நாந்தான் பொண்ணுங்களுக்கு பிடிக்குற மாதிரி வெள்ளையா இல்லையில்ல? அதான் இதுல கொஞ்சம் எடுத்துப்போடுவம்னு நெனச்சேன்! ஒன்னைய கேக்காம இத தொட்டது தப்புத்தான்; மன்னிச்சுக்க!" என்றான் குன்றலுடன்.
"உன் மன்னிப்பு எல்லாம் எனக்கு வேண்டாம்..... பொண்ணுங்களுக்கு வெள்ளையா இருக்குற பசங்கள தான் பிடிக்கும்னு உங்கிட்ட யாரு சொன்னா? கருப்பா இருக்கேன்னு நெனச்சு, இந்த மாதிரி கோமாளித்தனமெல்லாம் பண்ணாத ஜெயன்; வேணும்னா நான் வீட்ல இருக்குற பொருள வச்சு பேஸ்பேக் ரெடி பண்ணும் போது, உனக்கும் கொஞ்சம் தர்றேன்; ஆனா அதப் போட்டாலும் நீ அட்வர்டைஸ்மெண்ட்ல காட்டுற மாதிரி திடீர்னு அப்டியே வெள்ளையாகிட மாட்ட!" என்று சொன்னவளிடம்,
"அது எனக்கே தெரியும்!" என்று பல்லைக்கடித்த படி அவளிடம் சொல்லி விட்டுப் போனான்.
"உன்னோட ரூம ஏன் இப்டி அழுக்கா போட்டு வச்சுருக்க ஜெயன்? ஓடி ஓடி வேலை செய்யுறதெல்லாம் கரெக்ட்டு தான்.... ஆனா வீட்டையோ, நீ இருக்குற ரூமையோ கொஞ்சங்கூட சுத்தமாவே வச்சுக்க மாட்டேங்குற மாதிரி ஒரு ஐடியாவுல இருந்தா என்ன அர்த்தம்? திங்கட்கிழம தான சவாரிக்குப் போற? அப்ப இன்னிக்குப் பூரா நம்ம ரெண்டு பேருக்கும் ஹவுஸ் க்ளீனிங் டே தான்!" என்று சொல்பவளின் மூக்கை சுற்றி துணியை கட்டி விடுபவன் அவளுடன் முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது உற்சாகத்துடன் வேலை செய்து ஒரே நாளில் பழையதை ஒதுக்கி, பரணில் மூட்டை கட்டி வைக்க வேண்டிய சாமான்களை கட்டி வைத்து அமுதாம்மாவின் புடவையை கொண்டு அதை கவர் செய்து, தன்னுடைய அறை, அமுதாம்மாவின் அறை
கிச்சன் மற்றும் வெளியே உள்ள கொஞ்சம் காலி இடம் வரையில் அனைத்து பகுதிகளையும் கண்ணாடி போல பளபளவென ஆக்கி வைத்திருந்தான்.
"ஏன்டா டேய்! இப்படி கொஞ்சம் வீட்லயும் வேலை செய்யின்னு தானடா ஒங்கிட்ட நான் பல வருசமா கேட்டுக்கிட்டு இருக்கேன்; ஹூ.....ம்; அதெல்லாம் சொல்றவங்க சொன்னாத்தான் கேக்குறாய்ங்கப்பா!" என்று சலித்துக் கொண்ட முகிலமுதத்தின் பேச்சில் வதனி ஜெயனை ஒருமாதிரியாக பார்த்து வைத்தாள்.
இந்த மாதிரியான சிறு சிறு வாரல்களுடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவனுக்கும் இவளுக்கும் இடையில் வளர்ந்து கொண்டிருக்கும் அழகான உறவை இவள் நட்பு தான் என்று சாதிக்கிறாள்; அவன் காதல் தான் என்று சாதிக்கிறான்!
எதுவாக இருந்தாலும் வர்த்தினிக்கு ஜெயனுடைய பேச்சும், அவனுடைய சேட்டைகளும், முகில்ம்மாவின் அன்பும் மிகவும் பிடித்திருந்தது. அதை இழக்க அவள் ஒருபோதும் தயாராக இல்லை.
இந்த நான்கு மாதங்களில் முகிலமுதத்தின் காலில் ஏற்பட்ட ஃப்ராக்சர் சரியாகி அவர் இயல்பாக நடக்க ஆரம்பித்திருந்தார்.
திண்ணனை பார்க்க அவலாஞ்சிக்கு அழைத்துச் சென்று வந்ததில் இருந்து ஜெயன் வதனியுடைய நட்பு சற்றே இயல்பான பாதையில் சென்றது. மாதா மாதம் அவர்கள் அங்கு சென்று அந்தப் பெரியவருடன் சற்றுநேரம் உரையாடி விட்டு, அவரது குடிசையில் ஒருவேளை உணவருந்தி விட்டு வந்தனர்.
முன்பெல்லாம் அவனை மாடிக்கு வரவே வரக்கூடாது என்று தினமும் காலையில் சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது அவன் அவளுடைய வீட்டிற்குள் சென்று சேரில் அமர்ந்திருந்தாலும் அவனை ஒன்றும் சொல்வதில்லை.
காலை ஆறு மணியில் அவள் நிதானமாக வேலைக்கு கிளம்புவதற்கு நடுவிலும், இரவு உணவிற்காக அவளை கூட்டி வருகிறேன் என்ற சாக்கிலும் அவள் வீட்டில் இருந்த நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் மாடிக்குச் சென்று அவளிடம் எதையாவது பேசி விட்டு வருவான் ஜெயன்.
நாள் முழுவதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருப்பவனுக்கு வதனியுடன் இருக்கும் சில பல நிமிடங்கள் சிம்பொனி இசை போல அழகான சங்கீதத்தை மனதிற்குள் தோற்றுவிக்கும்; அது ஏன் எதற்காக என்ற ஆராய்ச்சியில் இருவருமே ஈடுபடவில்லை. ஒருவரது அண்மை இன்னொருத்தருக்கு பிடிக்கிறது, அதை அப்படியே ரகசியமாக வைத்துக் கொள்வோமே என்ற எண்ணம் தான் அவனுக்கு!
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro