🌻 அழகி 28
அப்பாவை இழந்த போது அமுதாம்மா கதறிய கதறல் இவளுடைய புலம்பலைப் போலவே தான் வலித்தது; இருந்தாலும் இதுவரை மரணத்தை வென்ற மனிதர் என்று எவருமே இல்லையே என்று நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த பொரியுடன் சிறிது எள்ளையும் கலந்து அவளுடைய கையில் வைத்திருந்த குவளையில் கொட்டினான்.
"வர்த்தினி! வெறும் சாதமுன்னா அத மீன் சாப்புடாது; அதுனால வீட்ல இருந்து கொண்டு வந்த பொரியோட சாதத்த கலந்து வச்சுருக்கேன். தண்ணிக்குள்ள இறங்கி இத மீனுக்கு சாப்புட போடு!" என்றான்.
"நான் வினுவுக்கும், அம்மாவுக்கும் தான் சாப்பாடு கொண்டு வந்தேன் ஜெயன்; அத எதுக்கு நான் மீனுக்கு கொண்டு போய் போடணும்? அதெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் என்ன செய்யணும்னு நீ எனக்கு ஒண்ணும் இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்க வேண்டாம்; இங்கருந்து போய்த் தொலங்குறேன்! உனக்குப் புரியுதா இல்லையா?" என்று என்றைக்கும் இல்லாத அளவிற்கு அதிகமான டெஸிபலில் அவனிடம் கத்தியவளிடம்,
"ம்ஹூம்! இது வேலைக்காகாது! ஒங்கிட்ட வாதம் பண்ணிட்டே நின்னுக்கிட்டு இருக்குறது எனக்கு எரிச்சலா இருக்கு! கையில வச்சு இருக்குறத கொஞ்சம் பத்திரமா புடிச்சுக்க!" என்றவன் அவளை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன்னுடைய தோளில் கிடத்திக் கொண்டு தண்ணீருக்குள் இறங்கியிருந்தான்.
"ஜெயன்; என்னை கீழ விடு......! நீ இப்ப என்னை எறக்கி விடலன்னா நான் கத்துவேன்!" என்றவளிடம்,
"வாய் வலிக்குற வரைக்கும் கத்து! ஒன்னைய காப்பாத்துறக்கு இங்க ஒரு பக்கியும் வராது! நான் தப்பானவன் இல்லங்குறது நம்ம பெரிசுக்கு தெரியும்! அதுனால அவரும் இங்க வந்து நிக்கப் போறதில்ல!" என்றவன் அவளுடைய திமிறலையும், முதுகில் மார்பில் அவள் அடித்த அடிகளையும் துளியும் கண்டு கொள்ளாமல் தண்ணீரில் மெல்ல நடந்து வந்து அவளை இடுப்பளவு நீரில் நிற்க வைத்திருந்தான்.
"நான் வெளிய போறேன்! என்னை விடுடா!" என்று அவனுடைய கைப்பிடிக்குள் சிக்கிய தன்னுடைய கையை விடுவிக்க முடியாமல் வலக்கையில் குவளையை வேறு பத்திரமாக வைத்திருந்தவளிடம்,
"ஷூ சத்தம் வரக்கூடாது... வாய மூடுறி! இப்ப எதுக்கு நீ சும்மா விடு விடுன்னு கத்திட்டு இருக்க? இப்ப ஒன்னைய என்ன செஞ்சுட்டேன் நானு?" என்று அழுத்தக்குரலில் அவன் பேச வதனி அதன் பின்னர் கத்தாமல் அமைதியாக கண்ணீர் உகுத்தபடி நின்றிருந்தாள்.
"ப்ளீ......ஸ் ஜெயன்! இந்த சாதத்த தண்ணிக்குள்ள போட்டா அம்மாவும், வினுவும் காணாமப் போயிருவாய்ங்க!" என்று கெஞ்சலாக அவனிடம் சொன்னவளிடம்,
"இதப் போடாம இருந்தா மறுபடியும் உயிரோட வந்துருவாங்களான்னு சொல்லு; வெளிய போயிடுவோம்!" என்று வாதம் செய்தான்.
"அம்மா வேணும் ஜெயன்!" என்று சிறுபிள்ளை போல் ஏங்கியவளிடம்,
"உன்னோட வருத்தம் எனக்கு புரியாம இல்லடாம்மா; ஆனா உன்னோட அம்மாவையும், வினோத்தையும் எங்க போயும் என்னால கூட்டிட்டு வர முடியாது! உனக்கு தெரியுந்தான?" என்று கேட்டவனை அணைத்துக் கொண்டு இன்னும் விம்மிக் கொண்டிருந்தாள்.
அவனது வாழ்நாளில் அவனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து கிடைத்த முதல் அணைப்பு! நியாயமாக அவளது இந்த அணைப்பு அவனது பிடரி முடியில் ஒரு சிலிர்ப்பை தந்திருக்க வேண்டும்...... ஆனால் பக்கத்தில் இருப்பவன் ஜெயன் என்ற ஸ்மரணையே இல்லாமல் அவனை பற்றிக் கொண்டு நிற்பவளிடம் என்ன எதிர்வினையை காட்ட முடியும் என்று நினைத்த ஜெயன் அவளது முதுகுப் பகுதியை மெதுவாக நீவி விட்டுக் கொண்டிருந்தான்.
"இங்க பாரு வர்த்தினி! இப்டி அழுறத விட்டுட்டு உங்க அம்மாவுக்காக, வினோத்துக்காக ப்ராத்தனை பண்ணும்மா! அவங்களோட ஒடம்பு மட்டுந்தான் இந்த பூமியில இருந்து காணாமப் போயிடுச்சு! மத்தபடி தெனமும் சாமி முன்னால நீ பாடுற பாட்டுல அவங்க இருப்பாங்க; உன் பழக்க வழக்கத்துல இருப்பாங்க; உன்னோட ஜீன்ல இருப்பாங்க! உனக்கு பிடிச்சாலும், இனிமே
அவருக்காக நான் இத தொடவே மாட்டேன்னு சாப்டாம உட்டியே அசைவ சாப்பாட்ட..... அந்த காதல்ல எப்பவும் வினோத் வாழ்ந்துட்டு தான் இருப்பாரும்மா!"
"இது உன்னோட மனசுக்கு பிடிச்ச ரெண்டு பேருக்காக பண்ற கடைசி மரியாத வர்த்தினி! இத நீ சரியா செய்யணும்னு நான் நெனைக்கிறேன்! நான் வெளிய நிக்குறேன்! நீ வா!" என்று அவளிடம் சொல்லி அவளை தண்ணீரில் விட்டு தான் மட்டுமாக கரையேறியவனை ஒரு முறை பார்த்தவள் தன்னுடைய நெஞ்சுப் பகுதியில் மண் குவளையை வைத்துக் கொண்டு எதையோ தன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
குவளையில் இருந்த சாதக்கலவையை நீருக்குள் போட்டவள், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தாள்.
"இட்ஸ் ஓகே! ஜெயன் சொன்ன மாதிரி நீங்க ரெண்டு பேரும் என்னோட ஏதாவது ஒரு வகையில கூட இருந்தீங்கன்னா சந்தோஷம் தான்! நான் இதெல்லாம் சரியா செஞ்சனான்னு தெரியல; பட் இங்க வந்து, திண்ணன் தாத்தாவ பாத்து, இப்ப இந்த தண்ணிக்குள்ள நிக்குற மொமண்ட்ல ஏதோ ரொம்ப நிறைவா ஃபீல் ஆகுது! லவ் யூ ம்மா; லவ் யூ வினு!" என்று சொன்னவள் ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியேறி கரைக்கு சென்றாள்.
அவள் திண்ணனின் வீட்டிற்குள் செல்வதற்குள் அவளை வழிமறித்தவன் அவளுடைய கையில் அவள் அணியும் ஒரு செட் ட்ரெஸ்ஸை கையில் திணித்து,
"பின்னால மறவு இருக்கு! இந்த ஈரத்துணிய அவுத்து மாத்திட்டு, அத அப்டியே காய வச்சுட்டு வா! போவும் போது எடுத்துக்கலாம்!" என்று சொன்னான்.
அவளது கேள்வியான பார்வையில், "வீட்ல பொட்டிக்குள்ள உன் துணியெல்லாம் போட்டு ஆஸ்ரமத்துக்கு கொண்டு போகப்போறேன்னு சொன்னேனே நியாபகம் இருக்கா? அப்ப துணிய ஒவ்வொன்னா பொட்டிக்குள்ள
அடுக்கும் போது ஒரு செட்ட தனியா எடுத்து ஒளிச்சு வச்சேன்! இப்ப கரெக்டா உபயோகப்படுது!" என்று அவளது பார்வைக்கு விளக்கமளித்தான்.
"இங்க தேவைப்படும்னு ட்ரெஸ்ஸ
எடுத்துட்டு வந்ததெல்லாம் சரி தான்.... பட் இந்த ரெட் கலர் டாப்புக்கு ப்ளாக் பாட்டம் எடுத்துட்டு வராம, மஞ்சள் கலர எடுத்துட்டு வந்துருக்க! எனிவேஸ்..... தேங்க்ஸ் ஃபார் த டைம்லி ஹெல்ப் மிஸ்டர் ஜனமேஜயன்!" என்று சொல்லி விட்டு அந்த வீட்டினுடைய பின்புறமாக சென்றவளின் பேச்சில்,
"துணிய கொண்டு வந்தது சரித்தான்ங்குறாளா? இல்ல கீழக்கு மேல மேட்ச் ஆகலன்னு திட்டுறாளான்னே தெரியலயே? ஏன் செவப்பு சட்டைக்கு மஞ்சள் பேண்ட்ட போட்டா ஆகாதாமா? ஏன்டா ஜெயனு..... கீழ மேல துப்பட்டாவுன்னு இருக்குற மூணு ட்ரெஸ்ஸூல ஒழுங்கா ஒரு செட்ட பாத்து கண்டுபுடிச்சு கூட எடுத்துட்டு வரத் தெரியலயேடா ஒனக்கு? நீயெல்லாம் என்னத்த நாளைக்கு ஒரு புள்ளைக்கு புருஷனாகி அவளுக்கு பொடவ, பொட்டு, லிப்ஸ்டிக், செருப்பு அப்புறமேல ஒரு புள்ளைக்கு அப்பனாகி அதுக்கு பலூன், ப்பீ ப்பீ, கொட்டு
இதெல்லாம் எப்டி வாங்கித் தரப் போறியோ தெரியல!" என்று புலம்பிக் கொண்டிருந்தவனிடம்,
"ஏலேய்.... பசிக்குதுன்னு கூவ கூவன்னு கத்திட்டு கெடந்த! இப்ப கஞ்சி குடிக்க வர்றியா இல்லையா?" என்று கேட்டார் திண்ணன்.
"அட இருய்யா! என் ஆளு இன்னும் சாப்புட வரல; மீனுல மூணு எனக்கு! ரெண்டுதா உனக்கு! நல்லா ருசியா இருக்குதுன்னு சொல்லிட்டு மீன்துண்ட நகட்டிப்புடாத!
என் ஆளு பங்கயும் சேத்து நானே சாப்புட்டுக்குவேன்!" என்று சொன்னவனை கேவலமாக முறைத்தவர்,
"புள்ள எங்கடா போச்சு?" என்று கேட்டார்.
"மொதல்ல ஓடைக்குப் போச்சு! அவிய்ங்க ஊருல எல்லாம் சாப்புடுற கரண்டியால தான் மோந்து ஊத்தி குளிப்பாய்ங்களாம். ஓடைய பாத்தவுடனே உள்ள எறங்கி ஒரு முங்கு போட்டுச்சு; இப்ப துணிய மாத்தப் போயிருக்குது!" என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.
"எப்டியோ..... இங்க வந்ததுனால அந்த ஆயி மனசு கொஞ்ச லேசாயிருக்குன்னா எனக்கு சந்தோஷந்தா; அதுக்கு தான இம்புட்டு மெனக்கெட்டு அத இங்கணக்குள்ள கூட்டிக்கிட்டு வந்துருக்க? புள்ள வாரப்ப வரட்டும்; நீ மொதல்ல வந்து கொட்டிக்க வாவே!" என்று அவனை உணவு உண்பதற்காக அழைத்தார் பெரியவர்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro