🌻 அழகி 27
"ஸாரா..... நானா? ஆத்தி..... இது என்ன ஆயி கூத்து? எனக்கு நீயி இவ்ள மரியாதயெல்லாம் தரத் தேவயில்லத்தா!" என்று சொன்ன பெரியவரிடம் சிறு சிரிப்புடன்,
"அது எப்டிங்க.....? உங்க வயசுக்கு; நீங்க செய்ற வேலைக்கு; நீங்க வாழுற இந்த மாதிரியான எளிமையான வாழ்க்கைக்கு; இதுக்கே உங்களுக்கு நாங்க நிறைய மரியாத குடுக்கணும்னு எனக்குத் தோணுதே? உங்கள நான் ஸார்னு கூப்டுறது உங்களுக்கு ஒருமாதிரியா இருந்ததுன்னா,
நான் வேணும்னா உங்கள தாத்தான்னு கூப்பிடட்டுமா?" என்று அவரிடம் கேட்டாள் வதனி.
அவள் பேசிய அனைத்தையும் கையைக் கட்டிக் கொண்டு ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன். இந்தப் பெரியவர் அவனைப் பொறுத்தவரை அவனுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்....
ஊரை விட்டு, அவரது ஜனங்களை விட்டு வந்து தனியாக இருந்தாலும் எனக்கு நான் ராஜா என்பது போல இவரது வாழ்க்கை முறை அவனுக்கு எப்போதும் ஆச்சரியத்தை அளிக்கும்! யாருமே இல்லாமல் தனியாக இருந்தாலும் வாழ்வில் குமுறி குமுறி அழத் தேவையில்லை என்று அவளுக்கு அவன் திரும்ப திரும்ப பாடமெல்லாம் எடுத்துக் கொண்டிருக்க முடியாது; திண்ணனின் இந்த வாழ்க்கையையே அவள் பாடமாக எடுத்து புரிந்து கொள்ள வேண்டியது தான் என்று நினைத்து தான் வதனியை இங்கு அழைத்து வந்திருந்தான்.
"ஒனக்கு எப்டி கூப்டணும்னு தோணுதோ அப்டி கூப்டுத்தா! ஆமா..... நீ யாரு தாயி? நீ யாருன்னு இவங்கிட்ட கேட்டதுக்கு வாயவே தொறக்க மாட்டேங்குறான்? இந்தப்பயல நீயி கட்டிக்கிட போறியா ஆயி?" என்று அவளைப் பற்றி ஆர்வமாக விசாரித்தவரிடம் வேகமான தலையசைப்புடன்,
"ம்ஹூம்! இல்ல தாத்தா! ஜெயனுக்கு நீங்க எப்டியோ அப்டித்தான் நானும்; அவரோட நிறைய நண்பர்கள்ல நானும் ஒருத்தி; இப்ப அவரோட வீட்ல வாடகைக்கு இருக்கேன்.... அவ்ளோதான்!" என்றாள் தோள்குலுக்கிய படி.
"ஆமா! அட்வான்ஸ் குடுக்கணும்னே மறந்து போயிட்டு, என் வீட்டுக்குள்ள வாடகைக்கு வந்து ஒக்காந்து இருக்கா ஹெட்லைட்டு...... என்னைய இவ பெருசுட்ட கட்டிக்கிட போறவன்னு சொல்ல வேணாம்.... அப்டி நெனைக்குறது ரொம்பவே பேராசை; நல்லா பழக்கமான பையன்னாவது சொல்லலாமுல்ல...... அத உட்டுட்டு என் வீட்ல வாடகைக்கு இருக்குறவளாம்! போடீங்கு; நீயும் உன் வாடகையும்!" என்று பொசுபொசுவென்று அவள் பேசிய பேச்சால் புறப்பட்ட கோபத்தில் தன்னருகே கிடந்த பனை ஓலை விசிறியை கையில் எடுத்து தரையில் நொட்டு நொட்டென்று தட்டிக் கொண்டிருந்தான் ஜெயன்.
"எலேய்.... நெடுஞ்சாங்கெடையா இப்டி வாசல அடைச்சிக்கிட்டு கெடந்தேன்னா நாங்க எப்டி வீட்டுக்குள்ள நடமாடுறது? பெப்பரப்பேன்னு படுத்துக் கெடக்குறதுமில்லாம இப்டி
அட்டுனக்கால் வேற போட்டு ஆட்டிக்கிட்டு இருக்க.....!"
என்று கேட்டவரிடம்,
"ம்ம்ம்..... வண்டிய ஓட்டிட்டு வந்து
எனக்கு முதுகு வலிக்குது; படுத்துருக்கேன். என் கால நானே தான ஆட்டிக்கிட்டு கெடக்கேன்; காசு குடுத்து ஒன்னைய ஆட்டி உடச் சொல்லலையில்ல? செவனேன்னு இரு நீயி!" என்று சொன்னவன் தான் படுத்திருந்த இடத்தில் இருந்து சற்றும் அசைவதாக தெரியவில்லை.
"இவேஇப்புடித்தான் ஆயி; செல்லக்கிறுக்கன்..... நீ ஒக்காருத்தா; நான் போயி நீங்க சாப்புட ஒல வச்சுட்டு வாரேன்!" என்றவரிடம்,
"ஐயோ நீங்க இருங்க தாத்தா! இன்னிக்கு நம்ம சாப்புட நான் சமைக்குறேன்!" என்று சொன்ன வதனி அவரிடம்,
"உங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லன்னு ஜெயன் வர்ற வழியில எங்கிட்ட சொன்னாரு. உங்களால இப்ப தேன் எடுக்குற வேலைய செய்ய முடியாதாமே? உங்களுக்கு ஒடம்பு சரியாகுற வரையில கொஞ்ச நாளைக்கு
உங்கள நாங்க ரெண்டு பேரும் கவனிச்சுக்கிடட்டுமா தாத்தா? நான் கவனிச்சுப் பாத்துக்குறதுக்குன்னு எனக்கு இப்போ ஒருத்தர் கூட இல்ல!" என்று சொன்னவள் தன்னை மீறிய வேதனையில் முகம் சுணங்கி அவர் முன் கண்கலங்கி விட்டாள்.
"ஐய சாமி.... என்னத்தா இது? கண்ணெல்லாம் கலங்கிக்கிட்டு? என்னிய இதுநா வரையில ஸாருன்னோ தாத்தான்னோ எந்த தொரசாணியும் கூப்டதில்லாயி; ஒத்தையில கெடக்குறவன நேரம் கெடைக்குறப்ப ஒரு எட்டு பாத்துட்டு பாத்துட்டு போறது இந்தா தரையில கெடக்குறவன் மட்டுந்தா..... இப்ப நீயி வந்துருக்க; சொனையில ஊறுற தண்ணி கணக்கா குளுகுளுன்னு பேசுற! நீ நல்லாயிருப்பத்தா; ஒனக்கு ஒரு கொறையும் வராது! என்னிய பாத்துக்கணும், எனக்கு செலவு பண்ணனும்னு நெனச்சா தாரளமா செய்யித்தா! செய்யி!" என்று சொன்னவரை கைகூப்பி வணங்கியவள் ஜெயனிடம் கேட்டு அவன் வைத்திருந்த பணத்தை வாங்கி திண்ணனிடம் கொடுத்தாள்.
திண்ணனும், ஜெயனும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் அரிசிச் சோறும், ரசமும், தேங்காய் துவையலும், மீன் பொரியலும் செய்து விட்டு வந்து வியர்வையை துடைத்துக் கொண்டு அமர்ந்தாள்.
"ஒங்கைமணம் எட்டூரூக்கு மணக்குதேத்தா? இப்டி வாசன வந்துச்சுன்னா கரடியெல்லாம் நம்மளோட கூட்டாவுல்ல சாப்புட வந்து ஒக்காந்துக்குடும்?" என்று கேட்டவரை கண்களில் பயத்துடன் பார்த்தாள்.
"இந்த கொமரனுக்கு அப்பதையில இருந்து வயிறு காரு காருங்குதாம்; வாத்தா சாப்டுவம்!" என்று சொன்னவர் தன்னுடைய களிமண் தட்டை எடுத்து வந்து ஜெயனுடைய முன்னால் வைத்தார்.
செய்து வைத்த சமையலை நடுவீட்டில் கொண்டு வந்து வைத்தவள் மூன்று பிடி சாதத்தை உருண்டையாக உருட்டி ஒரு மண் குவளையில் வைத்துக் கொண்டாள்.
"நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்டுங்க தாத்தா! நான் இதோ வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு குடிசையிலிருந்து வெளியேறியவளின் பின்னாலேயே அவனும் சென்றான்.
"எ.....லே! பசிக்குதுன்ன?" என்று கூப்பிட்டவரிடம்,
"நீ சாப்டு பெரிசு! நா அப்புறமா வர்றேன்!" என்று சொல்லி விட்டு விறுவிறுவென நடந்தான்.
"ம்மா.... வினு! எனக்கு இந்த சாஸ்திரம் சம்பிராதயமெல்லாம் தெரியல. பட் இன்னிக்கு சாப்ட ஒக்கார்றதுக்கு முன்னால எனக்கு
உங்க நியாபகம் வந்துடுச்சு
இது உங்க ரெண்டு பேருக்காகவும் தான்..... சாப்டுங்க!" என்று தன்னுடைய கையில் வைத்திருந்த மண் குவளையை வானத்திற்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தவளிடம் பின்னால் இருந்து,
"வர்த்தினி! தண்ணிக்குள்ள எறங்கு!" என்றான் ஜெயன் அழுத்தமான குரலில்.
"ஏய்.... நீ எதுக்கு இங்க வந்த? ஒன்னைய நான் கூப்டேனா? நீ உள்ள தாத்தா கூட போய் சாப்டு..... என்னை இங்கயாவது இடைஞ்சல் இல்லாம கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு; போ!" என்றவள் தண்ணீர்க் கரையில் கண்ணீருடன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்.
"ம்மா.... வினு.... இன்னிக்கு உங்களுக்கு நான் செய்ய வேண்டிய சடங்க எல்லாம் ஒழுங்கா செஞ்சிருந்தா நீங்க ரெண்டு பேரும் என்னைய விட்டுட்டு வானத்துக்குப் போயிடுவீங்களா? அப்ப நான் உங்களுக்கு எதையும் செய்ய மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் எங்கூடவே இருக்கணும். கனவுலயாவது எங்கூட வந்து பேசிட்டே இருக்கணும்; இருப்பீங்க தான?" என்று கேட்டவளை வலி நிறைந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜெயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro