🌻 அழகி 26
"யாருமேயில்லல்ல.... அப்புறம் எதுக்கு சும்மா கேள்வி கேக்குற? இப்டி தனியா எங்கூட பயமில்லாம வந்து மாட்டிக்கிட்ட நீ! நான் உன்னைய இங்க கடத்திட்டு வந்துருக்கேன் தெரியுதா.....?
உஹாஹாஹா!" என்று சிரித்தவன் கஷ்டப்பட்டு சிரித்ததால் இறுமல் வேறு எடுத்து செறுமிக் கொண்டான்.
"ஓகே ஜெயன்..... எனக்கு ஒண்ணும் பிரச்சனையுமில்ல! இங்க இருக்குற வரைக்கும் நான் எனக்கு மெடிக்கல் லீவ் சொல்லிக்குறேன்; பட் உனக்கு நாய்னா கொஞ்சம் பயம் தான? இந்த மாதிரி எடத்துல வெறும் நாயில்ல; ஓநாய், கழுதைப்புலின்னு நாய் பேமிலி எல்லாம் மொத்தமா வரும் தெரியுமா?" என்று வாயில் அடக்கிய சிரிப்புடன் கேட்டவளை தீக்கதிர் போல் முறைத்தவன் அடுத்த நிமிடமே அந்த கோபத்தை விட்டு விட்டு அவளிடம்,
"இங்க பாருங்க மேடம்; நீங்க என்னையப் பாத்து பயப்படலன்னா கூடப் பரவாயில்ல; என் வீக்னெஸ வெளிய சொல்லி என்னைய இப்டி மொக்க பண்ணாம இருங்க; உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!" என்று பரிதாபமாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"அப்போ மரியாதயா சொல்லு..., இங்க யாரு இருக்காங்க?" என்று கேள்வியை மூன்றாவது தடவையாக கேட்டவளிடம் ஒரு அவசரமான மூச்சுடன்,
"ரொம்ப தேவையிருக்குங்குற மாதிரி யாராவதுன்னு நீ எங்கிட்ட கேட்ட பாத்தியா.....? அந்த மாதிரியான ஒரு பெருசு தான் இந்த வீட்ல இருக்குற பெருசு! மலையில தேனு எடுக்குறவர் வர்த்தினி! வயது எழுபதுக்கு மேல இருக்குன்னு வையேன்.... ஆனா பாக்குறதுக்கு ஐம்பது வயசு ஆளு மாதிரித்தான் தெரிவாப்ல; தேன எடுக்கப் போனார்னா இவரோட வேகத்துக்கும் லாவகத்துக்கும் ஈடா எளவட்டங்க கூட வேல செய்ய மாட்டானுக....!"
"நீ டார்ஸான் பாத்துருக்கியா? அந்த கொரங்குப்பய மவன் எப்டி காட்டுல அனாயாசமா தவ்விக்கிட்டு திரிவானோ, அத மாதிரித் தான் இந்த பெருசு மலையில தவ்வி தேன எடுத்துக்கிட்டு திரியும்!
இவரப் பாக்க தான் ஒன்னைய இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்தேன்!"
"அவலாஞ்சி பக்கத்துல சவாரி வந்தேன்னா இந்த ஆளப் பாக்காம போவ மாட்டேன் நானு; இப்ப சமீபத்துல இவருக்கு கொடல் இறங்கிருச்சுன்னு சொல்லி ஒரு ஆப்பரேஷன் பண்ணியிருக்காங்க.
அதுவும் எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரியும்! ஆப்பரேஷன் பண்ணுனதால பெரிசு கொஞ்ச நாளைக்கு மலை ஏறுற வேலையெல்லாம் செய்யக்கூடாது. எந்த வேலையும் செய்யாம சும்மா வீட்ல ஒக்காந்து இருன்னு சொல்றது இவர மாதிரி ஆளுக்கு ரொம்ப கஷ்டமான வேலை; மூணுவேல சாப்பாட்டுக்கு இவருக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல..... ஆனா வெளிய வாங்குற மருந்துமாத்திர, ஸ்கேனு லொட்டு லொசுக்குன்னு செலவு ஆஸ்பத்திரிக்கு வர போக ஆட்டோவுக்கு இப்டி கொஞ்சம் காசு தேவைப்படும்னு நெனைக்குறேன்.
நீ செய்யப்போற உதவிய இவருக்கு செஞ்சன்னா கொஞ்சம் உபயோகமா இருக்கும்மா!" என்று சொன்னவனிடம் சரியென்று சொல்வது போல் தலையாட்டினாள் வதனி.
"இவ்ளோ வயசு ஆனவர்னு சொல்ற..... ஆனாலும் இந்த எடத்துல தனியா இருக்காரே ஜெயன்? நான் என்ன சொல்றேன்னா இவர் நம்ம கிட்ட இருந்து ஹெல்ப் வாங்கிக்கிட்டா அதுவே பெரிய விஷயம்னு நெனக்குறேன்!" என்று சொன்னவளிடம்,
"ம்ப்ச்! அதெல்லாம் நம்மட்ட வாங்கிப்பாரு; நீ கவலப்படாத..... இந்தப் பெரிசு வூட்ட தெறந்து போட்டுட்டு எங்க போயிருச்சுன்னு தான் தெரியல....! ஒருவேள கஞ்சிக்கு தொட்டுக்க மீனக் கண்டா புடிக்க போயிருக்காரோ என்னவோ.... நீ இங்கயே இரு; நான் போயிட்டு பாத்துட்டு வரேன்!" என்று சொன்னவன் அவளை அந்த சிறிய இடத்தில் அமர வைத்து விட்டு வெளியே சென்றான்.
ஒரு மனிதன் நீட்டி நிமிர்ந்து படுத்தால் அந்த வீட்டின் மொத்த
இடமும் நிறைந்து விடும் என்கிற அளவுக்கு அளவில் மிக சிறியதாக இருந்தது அந்த குடிசை.
சிமினி விளக்கு, சொளவு, வயர்கூடை இந்த சாமான்களெல்லாம் வைத்திருந்த பகுதி ஹால் என்றால், களிமண் கொண்டு பூசப்பட்டு, நாலு பாத்திரங்களுடன் ஒரு புகைபோக்கியும் வைக்கப்பட்டிருந்த இடம் சமையலறையாக இருக்க வேண்டும் என்று அவளாக அனுமானம் செய்து கொண்டாள்.
பகலிலேயே இந்த வீடு இப்படி இருக்கிறதே; இரவிலும் இந்த வீட்டில் தூங்கும் ஒரு பெரியவர் இந்த ஊர்க் குளிரை எவ்வாறு தாங்கிக் கொள்வார் என்று நினைத்த அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"என்ன பெருசு..... வூட்ட தொறந்த போட்டுட்டு இங்க தான் வந்து ஒக்காந்து இருக்கியா நீயி? என்னத்த தண்ணிக்குள்ள கைய உட்டு ஆய்ஞ்சுக்கிட்டு கெடக்க? மீனு ஏதாச்சு அம்புட்டுச்சா இல்ல சும்மாத்தா தொழாவிக்கிட்டு இருக்கியா? நா ஜெயனு வந்துருக்கேன்யா! காது கேக்குதா? ம்க்கும்.... உங்கிட்ட போயி காது கேக்குதான்னு கேக்குறேன் பாரு.......! யாரு நீயி? ஒத்தவேழம்! ஓவீட்டுக்கு நா ஒரு விருந்தாடிய கூட்டுக்கிட்டு வந்துருக்கேன்! எழுந்திரிச்சு வா போவம்" என்று சொன்னவனிடம்,
"வாலே.... டைவரு கொமரா! எப்டிலேயிருக்க..... ரொம்ப நாளா இந்தப்பக்கமா வரக்காணும்?
ஒங்கூட நீ கூட்டியாந்த புள்ளைய எனக்கு புடிச்சிருக்குவே; ஒம்பட பக்கத்துல சோடி போட்டுக்கிட்டு நின்னுச்சுன்னா ரொம்ப வாகாத்தே இருக்குது.... நீ கட்டிக்கிட போற புள்ளயா? இங்கணக்குள்ள எதுக்குவே கூட்டிட்டு வந்த?" என்று கேட்டு அவர் பேச்சில் திகைத்துப் போய் நின்றிருந்தவனை தன் காவி ஏறிப் போன பற்களின் சிரிப்புடன் புருவம் தூக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தார் திண்ணன்.
"நீ அங்கணக்குள்ள வரயிலயே வண்டிச்சத்தத்த கேட்டுட்டேன். நீயும் அந்தப்புள்ளையும் நடந்து வாரதையும் பாத்துட்டேன்.
இங்கண வண்டிய எடுத்துக்குனு யாரு வருவா? ரேன்ஜர் யாராச்சு இந்தப் பக்கமா வரயில எப்பவாச்சு நிறுத்தி இங்க வந்துட்டுப் போவாங்க..... மத்தபடி நம்ம கூட புழங்குறதெல்லாம் யானையும், மானும், சிறுத்தப்புலியுந்தேன்.....!" என்று அவனிடம் சொன்னார் பெரியவர்.
"ஒன்னையெல்லாம் அதுங்க சங்க புடிச்சு கடிச்சு வைக்காம, இப்டி நடுக்காட்டுல கொட்டா போட உட்டுட்டு அதுக இன்னும் வேடிக்க பாத்துட்டு இருக்குதுங்க பாரு! கவருமெண்ட்டு ஒனக்கு வீடு கட்டிக் குடுத்தா அங்கயும் போயிருக்க மாட்ட; நடுக்காட்டுல வந்து ஒக்காந்துருக்குறன்னு
ஆபிசரு வந்து வெரட்டி உட்டா, நாலு நாளு எங்கிட்டாவது சுத்திட்டு, மறுபடியும் இங்க வந்து பட்டறயப் போட்ருவ! நீ தேடி தேடி வார அளவுக்கு இங்கணக்குள்ள என்ன தான் அதிசயம் இருக்குதோ தெரியல...... போ!" என்றவன் அவருடைய கையிலிருந்த ஒரு மண் சட்டியில் நான்கைந்து மீன்களைப் பார்த்து விட்டு எரிச்சலடைந்த படி உச்சுக் கொட்டினான்.
"இன்னுங்கொஞ்ச மீனப் புடிச்சா இந்த ஓடத் தண்ணி என்ன ஒங்கிட்ட காசு கேக்குதாக்கும்?" என்று சலித்துக் கொண்டவனிடம்,
"போதுமுடா! மூணு பேரு கஞ்சி குடிக்கத்தே அஞ்சு மீனு இருக்குதுல்ல.... இது காங்காதா ஒனக்கு?" என்று கேட்டு அவனைத் திட்டினார்.
வீட்டிற்குள் அவளை உபசரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தவரிடம்
புன்முறுவலுடன்,
"ஹலோ ஸார்! வணக்கம்!" என்று சொல்லி கரம் குவித்து நின்றவளை பார்த்து ஆச்சரியமான ஆச்சரியம் பெரியவருக்கு!
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro